VVO2

VVO2

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 2

 

நந்தாவின் வீட்டில், அவனது தாய் காமாட்சிக்கு மகனது திருமண விசயம் தெரிந்திருக்கவில்லை.

 

பெரியவர்கள் இன்றி, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு, வேறொரு ஊரில் தனிக்குடித்தனம் சென்ற மகனைப் பற்றி அறியாமல், வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தியிருந்தார் காமாட்சி.

 

மூத்தவன் ராஜேஷ், ஐடிஐயில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

 

ஐடிஐயில் படிக்க கிராமத்திலிருந்து தினசரி சென்று வருகிறான். தாயின் கட்டளைக்கிணங்க அவ்வப்போது நந்தாவை அவனது கட்டிட நிறுவனத்தில் சென்று சந்திப்பான்.

 

நந்தா, அவனது நிறுவனத்தின் கீழ் நடைபெறும் கட்டிடங்களில் இரவுப் பணி நடைபெற்றால் அன்றைய தினங்களில் அங்கேயே தங்கிக் கொள்வான்.

 

அதுபோல அவன் வீட்டிற்கு வராத நாள்களில், வீட்டில் ஏதேனும் உணவுப் பொருள்கள் செய்தால் அதை ராஜேஷிடம் கொடுத்து நந்தாவிடம் கொடுக்கச் சொல்வார் காமாட்சி.

 

நந்தா வராத நாள்களில், ஏதேனும் அவசரத் தேவைக்காக பணம் தேவைப்பட்டாலும், நேரில் சென்று வாங்கி வருமாறு ராஜேசை அனுப்பிவிடுவார்.

 

நந்தா தற்போது வெளியூறுக்கு மாறிய பிறகு, வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வீட்டிற்கு சென்று வந்திருந்தான்.

 

பணத் தேவைகள் இல்லாததாலும், வீட்டில் எதுவும் புதுமையாகச் செய்யாததாலும், நந்தாவை காமாட்சி தேடவில்லை.

 

இரண்டு நாள்கள் கடந்தும் நந்தாவைப் பற்றிய விசயம் எதுவும் அறியாமல் இருந்தது குடும்பம்.

///////

 

அதிதீயின் தந்தை, தீனதயாளன் தன் தாயைக் கொண்டு பிறந்திருந்த மகளுக்கு தாயின் பெயரான அங்கையர்கண்ணியை வைக்க எண்ணியிருந்தார் ஆரம்பத்தில்.

 

கௌசல்யாவோ, “அத்தை பேரை வச்சா, அந்தப் புள்ளைய நான் எப்டி பேரு சொல்லிக் கூப்பிடறது”, என்கவே

 

தாயின் பெயரான அங்கையர்கண்ணி, தந்தையின் பெயரான திருநாவுக்கரசு மற்றும் தனது பெயர், என மூவர் பெயர்களின் முதல் எழுத்துக்களின் தொகுப்பான அதிதீ எனும் பெயரை மகளுக்கு வைத்திருந்தார்.

 

எப்பொழுதும் பெயரை சுருக்கி அழைக்கமாட்டார்.  அதிதீ என்றே அழைப்பார்.

 

எந்தளவிற்கு மகளைச் சிறுவயதில் கொண்டாடினாரோ, அதற்கு மாறாக பெண் பெரியவளான பிறகு தூற்றியிருந்தார்.

 

மகளைப் பற்றி அவதூறான வார்த்தைகளைக் கணவன் பேசுவதைக் கேட்டு, அதைத் தடுக்க முனைந்தபோது தோல்வியையே தழுவியிருந்தார் கௌசல்யா.

 

அதிதீ எண்ணியதுபோலவே அவளின் தாய் கௌசல்யாவிற்கு வசவுகளும், அடியும் சராமாரியாகக் கிடைத்திருந்தது.

 

மூத்த மகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும், இன்னும் கௌசல்யா தனது இயல்பை மாற்றிக் கொள்ளவே இல்லை.

 

மூத்தவள் ப்ரீத்தி எத்தனையோ முறை தாயிடம் கூறிவிட்டாள்.  “ம்மா என்னிக்குமே அப்பா பண்றது அதிகப்படினு உனக்குத் தோணாதாம்மா. எதுக்கு இப்டி கொத்தடிமை மாதிரி, அடிச்சாலும், திட்டுனாலும் அமைதியா இருக்க.  புழுகூட அதுக்குப் பிடிக்கலைனா எதிர்ப்பை காட்டுது.  நீ மட்டும் இப்டியே ஏன் இருக்க? எங்களுக்காகன்னு சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்காதம்மா!”, என பலமுறை கூறிவிட்டாள்

 

பணிக்குச் செல்லத் துவங்கியபின், “ம்மா இவரை விட்டுட்டு நாம மூனு பேரும் தனிய எங்கனா போயிருவோம்மா”, என்றழைத்த மூத்த மகளை அசட்டுச் சிரிப்போடு கடந்திருந்தார் கௌசல்யா.

 

“இப்டி சிரிச்சே மழுப்பு.  உன்னால நானும் மழுங்கிக்கிட்டே வரேன்.  நீ மாறவே மாட்டியாம்மா?”, ப்ரீத்தி

 

அதற்கும் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக்கிவிட்டு அகன்றுவிட்டாரே அன்றி எதுவும் கூறவில்லை.

 

இத்தனை அடி வாங்கியும், பெண் சென்றது உண்மையில் தனக்குத் தெரியாது என்பதைக்கூட கணவரிடம் கூற விழையவில்லை.

 

கூறினாலும், அவர் நம்ப மாட்டார்.  நம்பினாலும் இன்னும் ஒருவாரத்திற்கு அவரின் நடவடிக்கைகள் மாறாது என்பதை அறிந்திருந்தார்.  அதனால் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

கணவரின் அநாவசியப் பேச்சுகள், மற்றும் செயல்களினாலேயே பெண் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறாள் என்கிற எண்ணமே, அவரை பேசாமல் அமைதியாக இருக்கச் செய்திருந்தது.

 

“உனக்குத் தெரியாம எப்டிடீ அவ இப்டி ஒரு காரியத்தைப் பண்ணா? சொல்லுடி. வாயத் தொறந்து சொல்லுடீ”, எனக் கேட்டே இடுப்பில் இருந்த பெல்ட்டை உருவி அடித்திருந்தார்.

 

வலி பொறுக்க முடியாத நிலையிலும், கொடுத்ததை வாங்கிக் கொண்டு, கண்ணிலிருந்து வழியும் நீரைத் தொடைக்கும் எண்ணமின்றி நின்றிருந்தார் கௌசல்யா.

 

“எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு! ச..யன்! ச..யன்..!  உன்னையெல்லாம் எந்தலையில கட்டிட்டு உங்கப்பன் எஸ்கேப்பாகிட்டான்! இப்ப நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்! உன்னால என் ஆவியும், ஜீவனும் போகுது”, என்றவர்

 

“இத்தனை அடி அடிக்கிறேனே,  வாயத்திறந்து பேசுறாளா பாரேன்!”, என தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். 

 

“உடம்பு முழுக்கத் திமிருடீ! நல்லா சொகுசா வீடு, வசதி, நேரத்துக்கு கொட்டிக்க வகை தொகையா சாப்பாடுனு எல்லாம் கொடுத்ததும், மயக்கத்திலயே இருக்க!  அதுனால அந்த ஓடுகாலி போனதுகூடத் தெரியாம ஓவர் கனவுல இருந்திருக்க!”, என அவருக்கு வாயில் வந்த வார்த்தைகளைக்கொண்டு ஓயாது திட்டியவாறே இருந்தார்.

 

ஹாலில் அங்குமிங்கும் நடந்தபடியே நின்றிருந்தவரைத் திட்டிக் கொண்டே அடித்ததில் ஓய்ந்துபோய் சற்றுநேரம் அங்கிருந்த சோபாவில் சென்றமர்ந்திருந்தார்.

 

அமர்ந்ததும் உண்டான நிதானத்தில், நிஜம் உரைத்திட, எழுந்து கோபத்தோடு ஓடி வந்து மீண்டும் கௌசல்யாவை அடித்தார்.

 

நின்ற நிலையில் அசையாமல் எவ்வளவு நேரம் நின்றாரோ கௌசல்யாவிற்கே தெரியவில்லை.

 

பழைய படத்தில் வரும் வில்லனை நினைவுறுத்தும் வகையில் தலையில் முடியும் இல்லாமல் ரவுத்திர முகத்தோடு இருந்தவரை எந்த சலனமும் இன்றிப் பார்த்திருந்தார்.

 

நாக்கைத் துறுத்தியபடி ஓடி வந்து தன்னை அடிப்பதும், சென்றமர்ந்து மூர்க்கத்தனமாய் இடைவிடாது பேசும் கணவனது பேச்சுக்களை காதில் வாங்கினாலும் மௌனத்தையே பதிலாக்கியிருந்தார்.

 

“பொம்பிளைப் புள்ளைய ஒழுங்கா வளக்கத் துப்பில்லை. நீயெல்லாம் ஒரு பொம்பிளை! உனக்கு ரோசமே இல்லையாடீ!  இவ்வளவு கேக்கறேனே!  கொஞ்சமாது ரோசத்தோடு பதில் பேசுறீயா?  சோத்துல போடற உப்பு பத்தலை போலடீ உனக்கு! உப்பளத்தையே கரைச்சு வாயில ஊத்துனாலும் சொரணை வருமா? அப்பவும் வராது.  ச்சீய் த்தூத்…”, என கௌசல்யாவின் முகத்திலேயே எச்சிலை காறி உமிழ்ந்திருந்தார்.

 

அதுவரை எந்த ரியாக்சனும் இல்லாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தவர், முகத்தில் வழிந்ததை கழுவ எண்ணி நகர

 

“ஏய் எங்கடீ போற? இவ்வளவு நேரம் அசையாமஅஅஅ ஒரே இடத்தில நின்னவளுக்கு, எங்க எச்சில் பட்டதும் சுத்தம் போயிருச்சோ!”, என்ற எள்ளலோடு அருகில் வந்தவர், சென்றவரை மறைக்க நினைக்க, அதையும் மீறி கௌசல்யா செல்ல எத்தனிக்க, மனைவியின் கையைப் பிடித்து மடக்கியிருந்தார்.

 

“என்ன நினைச்சிட்டுருக்க உம்மனசுல.  அத மொதச் சொல்லு!”, என்று கையைப் பிடித்து முறுக்கினார்.

 

வேதனையில் கௌசல்யாவும் கத்தியபடியே, கையை கணவரிடமிருந்து இழுக்க முயல, விடாமல் மீண்டும் தீனதயாளன் பிடியை அழுத்த, வேதனையில் சுருண்டு கீழே விழுந்திருந்தார் கௌசல்யா.

 

கீழே விழுந்து வலியில் துடித்தார் கௌசல்யா. ஜந்துவைப் பார்ப்பதுபோன்ற பார்வையை வீசியவாறே, தனது காலால் நான்கு எட்டு ஓங்கி, ஓங்கி மிதித்தவரின் ஆக்ரோசம் தீர்ந்தபாடில்லை.

 

கௌசல்யாவின் குடும்பம் பெரியது.  எட்டுப் பெண்களும், நான்கு ஆண்களுமாக பிறந்து வளர்ந்தவர்.  குடும்ப சூழல் காரணமாக வயதில் சற்று மூத்தவரான தீனதயாளனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.

 

தீனதயாளன் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், உடன் பிறந்த தங்கைகளின் திருமணத்திற்குப் பிறகே திருமணம் செய்யும் நிலை.

 

முப்பத்து இரண்டு வயதிலேயே தலையில் இருந்த முடியெல்லாம் கொட்டியிருந்தது.

 

பார்த்த பெண்கள் அனைவரும், ‘மாப்பிள்ளைக்கு வழுக்கை’, என மறுத்திருந்தனர்.

 

வேறு வழியில்லாமல், ஒருவாராக மனதை திடப்படுத்திக் கொண்டே ஏழைக் குடும்பமாக இருந்தாலும், பார்க்க அழகாக இருந்த கௌசல்யாவை திருமணம் செய்யும் எண்ணத்திற்கு வந்திருந்தார் தீனதயாளன்.

 

கடந்து போன காலத்தில், யாரோ அவரை திருமணத்திற்கு மறுத்ததற்கு பெண் சமுதாயமே தன்னை  அவமதித்துவிட்டதாக புழுங்கியிருந்தார்.

 

திருமணம் தடைபட்டு தாமதமானதற்கும், அவமதித்தலுக்கும், மனைவியான கௌசல்யாவை அடித்தும், பேசியும், திட்டியும் தனக்குள் எழும் ஆவேசத்தை நினைக்கும்போதெல்லாம் தணித்துக் கொள்கிறார்.

 

திருமணம் முடிந்து கிளம்பியபோதே கௌசல்யாவின் தாய், “அம்மாடி, நம்ம குடும்ப நிலைமை தெரியும்.  அவங்க பெரிய இடத்து மாப்பிள்ளை.  முன்னப்பின்ன இருந்தாலும் அனுசரிச்சு நடந்துக்கோ.  சண்டை சச்சரவுனு வீட்டுக்கு வந்தா ஒரு வேளைக்கு அரை வயிறு கஞ்சிதான் என்னால ஊத்த முடியும்.  அத்தோடு வாழவெட்டினு பட்டம் வேற படிக்காமலேயே வந்து சேந்துரும்.  இருக்கற புள்ளைகளையும் அப்புறம் கரையேத்த முடியாது”, என்றவரை நிமிர்ந்து அப்பிராணியாகப் பார்த்த கௌசல்யாவிடம், “என்ன பாக்கற, அதான் நடக்கும். நீ வந்து உக்காந்துகிட்டா.. நம்ம வீட்டுப் புள்ளைங்க எல்லாம் அப்டி இப்டினு கதையக் கட்டி, அடுத்தடுத்து கரையேறவிடாம பண்ணிரும் உலகம். அதனால எப்டி நடந்துக்கணுமோ அப்டி பாத்துப் பதவிசா புத்திசாலித்தனமா நடந்துக்கோ!”, எனக்கூறி வழியனுப்பி வைத்திருந்தார்.

 

கௌசல்யாவும் என்றாவது, அவரது பிறந்த வீட்டில் நடக்கும் விசேசங்களில் மட்டும் சென்று தலையைக் காட்டிவிட்டு உடனே திரும்பி விடுவார்.

 

அதற்குமேல் அங்கு சென்று தங்க நினைத்தாலும், தீனதயாளன் அதற்கு சம்மதிக்கமாட்டார்.

 

இதை அறியாத கௌசல்யாவின் சகோதரிகளுக்கு, ஒவ்வொரு முறையும் கெளசல்யா அணிந்துவரும் வெவ்வேறான பட்டுப்புடவை மற்றும் ஆபரணங்களையும், கௌசல்யாவின் மலர்ந்த முகத்தையும் கண்டு பொறாமையில் வெந்திருந்தனர்.

 

அதை அவரின் தாயாரிடம் மற்ற சகோதரிகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்துவர்.

 

“எங்களுக்கு ஏனோதானோன்னு பேருக்கு மீசை வச்சவனை ஆம்பிளைனு நினைச்சு கட்டிக் குடுத்திருக்க!  அந்தப் புள்ளைக்கு மட்டும் நல்ல வசதியான வீடாப் பாத்துக் கட்டிக் குடுத்திருக்க! துணியிலயும், நகையிலயும் பொண்டாட்டிய குளிப்பாட்டுறாரு மனுசன்.  ஓரவஞ்சனை பண்ணிட்டம்மா.  நீதான் எங்களையும் பெத்தியா? இல்லை தத்தெடுத்து வளத்தியா?”, எனக்கேட்டு அந்த வயதான மூதாட்டியை இன்றும் சித்திரவதை செய்கின்றனர்.

 

கௌசல்யாவின் மனக்குமுறல்கள் அனைத்தும் அவரோடே வைத்துக் கொண்டிருந்தார்.

 

ஆகையினால் கௌசல்யாவின் நிலை யாருக்கும் தெரியாமலேயே போயிருந்தது.

 

ஒரு முறை கணவனின் அராஜகத்தனமான செயல்களைப் பற்றி தமக்கையிடம் கூறப்போன கௌசல்யாவிடம், “உங்கிட்ட காசு பணத்துக்கு வந்துருவேன்னு இப்டியெல்லாம் நல்ல மனுசனைப் பத்தி, இல்லாதது, பொல்லாததைப்  பேசாத கௌசி! நல்லவனைப் பத்தி இப்டி பொய்யா பேசினா நாக்கு அழுகிறும்டீ!”, என முகத்திலடித்தாற்போலக் கூறிவிட்டு நேரே தீனதயாளனிடமே சென்று அப்படியே கௌசல்யா கூறியதைவிட சற்று அதிகப்படியாகவே கூறிவிட்டு அகன்றிருந்தார்.

 

அன்று வீட்டிற்குத் திரும்பியது முதல் நடந்த விசயங்களைப் பற்றி எண்ணினால் கண்ணில் ரத்தக் கண்ணீரே கௌசல்யாவிற்கு வந்துவிடும்.  அத்தனை சித்தரவதையை அனுபவித்திருந்தார்.

 

அன்றிலிருந்து யாரிடமும் குடும்ப விசயத்தைப் பற்றிப் பேசுவதை விட்டிருந்தார் கௌசல்யா.

 

மனைவியை மட்டுமன்றி, தான் பெற்று வளர்த்த இரண்டு பெண்களையுமே, மிகவும் கண்டிப்போடு வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, எதையாவது பேசி வைப்பார் தீனதயாளன்.

 

அந்த நேரங்களில் எல்லாம் மடியில் படுத்து அழும் பெண் மக்களின் தலையைத் தடவிக் கொடுத்து, ஆறுதல் சொல்வாரேயன்றி, கணவரைப் பற்றியோ, அல்லது அவரைப் பற்றிய எந்த விமர்சனங்களையோ மகள்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை.

 

பெரியவளை விட, சின்னவள் நல்ல அழகு.  பதிமூன்று வயதில் பெரியவளாகி நின்றவளை, ஒரு வாரம் வீட்டில் வைத்திருந்துவிட்டு பள்ளிக்கு அனுப்பியிருந்தார் கௌசல்யா.

 

விட்டுப்போன பாடங்களைக் கேட்டு அனைத்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வீட்டிற்கு வர தாமதமாகியிருந்தது.

 

அன்று பள்ளியிலிருந்து சற்று தாமதமாக வீடு திரும்பிய மகளைப் பார்த்து, “எவனைப் பாக்க போயிட்டு இப்புட்டு லேட்டா வர்ற!”, எனக் கேட்ட தந்தையின் கேள்வி புரியாமல் திகைத்து நின்றிருந்தாள் அதிதீ.

 

இதைப்போல தாய் மற்றும் மகள்கள் மூவருமே, அவரிடம் பட்ட பாடுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

 

சாதாரண புடவை உடுத்தி வெளியில் சென்றாலும், “எவனை மயக்க இம்புட்டு டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டுப் போற”, என தன் மகள்களிடமே கேட்டு வைப்பார் தீனதயாளன்.

 

சுடிதார் இன்னபிற இன்றைய நவீன காலத்தில் விற்பனைக்கு வரும் அனைத்து உடைகளையும் வாங்கியே தரமாட்டார்.

 

‘பாவடை, தாவணி போடுங்க.  என்னமோ வெளியூறு ஆட்டக்காரிக கணக்கா படத்துல போட்டு வரவுக மாதிரி என்ன உடுப்பு இது!’ என அதையும் விட்டு வைக்காமல் பேசியிருந்தார்.

 

வெளியில் செல்லும்போதும் சேலை, வீட்டில் இருந்தாலும் வேலை என்கிற நிலையில்தான் பெண்கள் வளர்ந்திருந்தனர்.

 

இரவு உடை அதாவது நைட்டியோ, நைட் ட்ரெஸ் என்பதையோ விளம்பரங்களில் பார்த்ததோடு சரி. அதுவும் தீனதயாளன் வீட்டில் இல்லாத நேரங்களில் மட்டுமே. ஆனால் உடுத்தியதில்லை.  ஆசையாக இருந்தாலும் தந்தையின் பேச்சை இதுவரை மீறாதவளாகவே வளர்ந்திருந்தாள் அதிதீ.

 

அத்தகைய பெண், வீட்டை விட்டுச் சென்றது கௌசல்யா எதிர்பார்த்தது தான் என்றாலும், மூன்று ஆண்டுகளாகவே எந்த முடிவிற்கும் வராமல், புதியதாக வரனைப் பார்த்து வீட்டில் இருந்த யாருக்கும் தெரியாமல் பேசி முடித்த கணவனின் செய்கையை எண்ணிய வருத்தம் மட்டுமே தற்போது எஞ்சி இருந்தது.

 

தீனதயாளன் மறைத்திருந்த விசயம் அறியாத தரகர், எதேச்சையாக கௌசல்யாவைப் பார்த்து கூறிட, அதன் மூலமாக வீட்டிலிருந்த அதிதீக்கும் தெரிய வந்திருந்தது.

 

தரகர், தீனதயாளன் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து வரனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்த தகவலை கௌசல்யாவிடம் அப்படியே கூறியிருந்தார்.

 

அதன்பிறகே, நந்தாவிற்கு விசயத்தைத் தெரிவித்து, அவசரத் திருமணம் எனும் முடிவிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள் அதிதீ.

 

நீண்ட நேரம் மனைவியைத் துன்புறுத்தி, அதில் அலுத்து, ஒருவாராக அமைதியாகியிருந்தார் தீனதயாளன்.

 

இது அடுத்தடுத்து வந்த நாள்களிலும் தொடர்ந்தது.  ஆனால் நாள்கள் செல்லச் செல்ல அதன் வீரியம் குறைந்தாற்போல உணர்ந்தார், கௌசல்யா.

////////////////

 

இரண்டு நாள்கள் மட்டுமே திருமணத்திற்கு விடுப்பு எடுத்திருந்தான் நந்தா.

 

திருமணத்தைப் பற்றி அலுவலக நண்பர்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

 

திருமணமான மூன்றாவது நாள் பணிக்கு கிளம்பியிருந்தான்.

 

கிளம்பியவனிடம், “தனியால்லாம் இருந்து பழக்கமில்லைடா நந்தா.  அதனால ஈவினிங் சீக்கிரமா வீட்டுக்கு வந்திரு!  இங்க பகல்லயே தனியா இருக்க பயமா இருக்கு எனக்கு!” என்றிருந்தாள் அதீதி.

 

அதற்கு, “உன்னைப் பாத்துத்தான் மத்ததெல்லாம் பயப்படும்.  நீ பயப்படறேங்கறதே அதுங்களுக்கெல்லாம் தெரியாது அதீ.  அதனால மனசைப் போட்டு குழப்பிக்காம ஃபீரியா இரு”

 

“அந்த தூப்பாக்குழிய நல்லா அடைச்சிட்டல்ல!”, சந்தேகமாகக் கேட்டாள்.

 

“வேண்ணா போயி செக் பண்ணு.  அதுக்குள்ள நா வந்திருவேன்”, சிரித்தவனை

 

“என் நெலமை உனக்குச் சிரிப்பா இருக்கு. இப்டி அனிமல்ஸ் வாழற சூ(zoo)ல கொண்டு வந்து குடிவச்சிட்டு சிரிக்கறஅஅஅ”

 

“ஒரு தவளை, பாம்பு மட்டுந்தான அன்னிக்கு வந்திச்சி.  அத உங்க ஊருல சூனு சொல்லிவீயாக்கும்”

 

“எங்க வீட்டுக்கு அதெல்லாம் விருந்தாளியா வந்ததில்லை.  ஆனா அதுங்கல நீ ஹேண்டில் பண்ணதுதான் எனக்கு உம்மேல ஒரே டவுட்டா இருக்கு”, யோசனையோடு மேலேபார்த்துக் கூறியவளிடம்

 

“என்ன டவுட்டு”, எனக்கேட்டு தன்னோடு பெண்ணை அணைத்து அணைப்பை இறுக்கிக் கொண்டே கேட்க

 

“ம்.. நீ இதுக்குமுன்ன சூலதான் வேலை பாத்திருப்பியோனு” சிரிக்க,

 

“அடிப்பாவி”, என கையை ஓங்க

 

“என்னடா உண்மையச் சொன்னா அடிக்க வர”

 

“எது உண்மை?”

 

“நீ பேச்சை வளக்காத”, என்றவள் நந்தாவின் அணைப்பைவிட்டு வெளியே வந்து, அவனது கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்தவாறே, “கையோட என்முன்னால வந்து தூப்பாக்குழி அடைச்சிருக்கானு கன்ஃபார்ம் பண்ணிட்டு கிளம்பு”, என

 

“ஏய், டெய்லி அது வழியா தவளையும், பாம்பும் வரிசையா வருமா என்ன? நான் வீடு பாக்க வந்தப்போ தண்ணீ ஊத்தி கழுவிவிட்டோம்.  தண்ணீ போகலைனு அந்த அடைப்பை எடுத்ததை திரும்ப அடைக்காம விட்டுடேன்.  அன்னைக்கு பாம்பு இரையைத் தேடிட்டே அது பின்னாடியே வந்திருக்கு. இந்தத் தவளை அந்த ஓட்ட வழியா வீட்டுக்குள்ள வந்ததும், அதத் துரத்திட்டு பின்னாடியே மேப்புடியானும் வந்துட்டான்”, எனச் சிரித்தபடியே கூறினான்.

 

“நேத்தே பின்னாடி கிடந்த அடைசலை க்ளீன் பண்ணியாச்சு.  பக்கத்துல தண்ணி தேங்கியிருக்கறதால அதில இருந்த அடைசலுக்குள்ள வந்துருக்கும்.  இப்பத்தான் அடைசலே இல்லையே! அப்புறம் எப்டி வரும்?”, என கேள்வியோடு நோக்கியவனிடம்

 

“அதப்பத்தி எனக்கென்ன தெரியும்?”, என்றாள் அதிதீ.

 

“தெரிஞ்சுக்க!”

 

“ஒன்னுந் தேவையில்லை! நீ இருக்கும்போது வந்திச்சு! நீ பாத்து என்ன செய்யனுமோ அதச் செஞ்ச! பட் எனக்கு அவங்களை எல்லாம் தெரியாது! இனி வந்தா…! அதுக்குத்தான் அந்த வழி அடைச்சிருக்கானு பாக்க சொல்றேன்”

 

“என் வயிஃப்னு வந்தா சொல்லு! உன்னைப் பாத்து வணக்கம் வச்சிட்டு கிளம்பிரும்!”, சிரித்தவாறே நந்தா

 

“டேய்! லூசா நீயி!  நான் சீரியசா சொல்லிட்டுருக்கேன்.  நீ என்னன்னா ஜோக் பண்ணிட்டிருக்க! இப்ப வரப்போறீயா இல்லையா”, என அதிதீ கத்த

 

அதற்குமேல் இவளிடம் தனது பேச்சிற்கு மரியாதை இருக்காது என்று எண்ணியவன், அவர்களின் ஒற்றை அறையில் இருந்த தண்ணீர் செல்லும் தூப்பாக்குழியில், அன்றே அடைத்திருந்த துணியை, பெண்ணின் கண்முன் எடுத்துக் காண்பித்தான்.

 

“இப்ப நம்புறியா?”

 

தலையை ஆட்டி ஆமோதித்தவளிடம் அதே துணியைக் கொண்டு அந்த சிறு தூப்பாக்குழியை மீண்டும் அடைத்தான்.

 

“அதை மீறி வந்திறாதே?”, என்றவாறே நந்தாவைப் பார்க்க

 

எழுந்தவன் தனது இருகைகளையையும் தட்டிக் கொண்டு அப்படியே கிளம்ப எத்தனிக்க, “இப்டியே கை கழுவாமயா போற?”, எனக் கேட்டு நந்தாவை நிறுத்தினாள்.

 

“கைல மண்ணு மாதிரி ஒட்டியிருந்தது.  அதைத்தான் தட்டிட்டேனே!”, என்றான் நந்தா.

 

“பரவாயில்லை.  போயி கைய அலம்பிட்டு கிளம்பு!”, என கட்டளையாகவே கூறினாள்

 

அதை அப்படியே செய்து வந்தவன், பெண்ணிடம் தலையை ஆட்டி விடைபெற்றுக் கிளம்ப நினைக்க, “சரி, பாத்துப் போயிட்டு வா!”, என கவலை தோய்ந்த குரலில் இயம்பினாள்.

 

புது மனைவியை விட்டுப் பிரிய நந்தாவிற்குமே விருப்பமில்லை.

 

ஆனால், வேறு வழியில்லை.

 

கிளம்பியே ஆக வேண்டிய கட்டாயம்.

 

தனியார் கட்டுமான நிறுவனம் அது.  இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக விடுப்பு என்றாலே சிரமம் என்பது நந்தாவிற்குமே புரிந்திருந்தது.

 

இதுபோன்ற விடுப்புகள், வேறு மாற்று நபர்களை அங்கு கொணர்ந்து சேர்க்கும்.

 

இருக்கும் ஒரே ஆதாரமும் இல்லாது போனால், இருவரது நிலை, இன்னும் கவலைக்கிடமாகும்.

 

ஆகையால் தன்னையே சமாதானம் செய்து கொண்டு கிளம்பினான்.

 

நந்தா கிளம்பியதும், கதவை அடைத்துவிட்டு, பாயை விரித்து துப்பாக்குழிக்கு எதிரே அமர்ந்து, தான் கையோடு கொண்டு வந்திருந்த தேர்வுக்கான கைடை எடுத்தாள்.

 

டேபிளில் அமர்ந்து சுகமாக படிக்க, எழுத என இருந்தவளுக்கு, ஒரே நிலையில் பத்து நிமிடம்கூட கீழே அமர முடியவில்லை.

 

கால்களை மாற்றி, மாற்றி என அமர்ந்து சமாளித்தவள், அரைமணித் தியாலத்திற்கு பிறகு எழுந்து அந்த சிறு இடத்திற்குள் நடந்தாள்.

 

பிறகு, குப்புறப்படுத்தவாறு புத்தகத்தைப் படித்தாள்.

 

அந்த நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க, யாராக இருக்கும் என்பது புரியாமல் திறக்கலாமா? வேண்டாமா என்கிற யோசனையோடு இருந்தாள்.

 

ஆனால் தட்டுவது நிற்கவேயில்லை.

 

பெண் என்ன செய்தாள்?

/////////////

Leave a Reply

error: Content is protected !!