Yaaro avan 17

Yaaro avan 17

யாரோ அவன்? 17

வெண்ணிலாவின் நிர்சலனமான முகத்தை கவனித்த வெற்றி, ‘கொலை செய்தவளால் இத்தனை நிம்மதியாக தூங்க முடியுமா என்ன?’
என்று தன்னிடமே கேட்டு கொண்டான்.

அதுவும் வழியில் இரவு உணவுக்காக இருவரும் ஓட்டலில் சாப்பிட சென்ற போது நடந்ததை நினைத்து வெற்றிக்கு சிரிக்க தான் தோன்றியது.

ஆனால், அப்போது நிஜமாகவே அவனுக்கு பற்றி கொண்டு தான் எரிந்தது. பின்னே, எத்தனை பெரிய குற்றச்சாட்டை அவள் மீது சுமத்தி, அதை நிரூபிக்க அவளை இவ்வளவு தூரம் இழுத்து வந்திருக்கிறான்,
அந்த கவலை சிறிதும் இல்லாமல் நிலா உணவை வேளுத்து வாங்கி கொண்டிருந்தாள்.

வெற்றிக்கு இருந்த மனக் குழப்பத்தில், ஒவ்வொரு வாய் சப்பாத்தியும் தொண்டையில் சிக்கி கொள்வதைப் போல சாப்பிட்டு கொண்டிருந்தான்.

நிலா தட்டில் நான்கு, ஐந்து என்று சப்பாத்திகள் காலியாக, இவன் கண்கள் விரிந்தன.

“ஏய், நீ என்ன ராட்சசியா டீ, இந்த நிலைமயில உனக்கு பசிக்க கூட செய்யுமா?!” என்று பொறுக்க முடியாமல் அவன் கேட்டு விட,

வெண்ணிலா, “எனக்கு உண்மையாவே ரொம்ப பசி வெற்றி.
சுவாதிக்கு உடம்பு சுகமில்லாததால, ரெண்டு நாளா என்னால சரியா சாப்பிட முடியல. அதோட உன்கூட ஆர்கியூ பண்ணது வேற!” என்று காரணங்களை அடுக்கினாள்.

“…!”

“பில்லை நானே கொடுத்தறேன், நீ ஒண்ணும் கவல பட தேவையில்ல” என்று மீண்டும் சாப்பிடுவதில் குறியாக இருந்தாளே பார்க்கலாம்.
அதனை நினைத்து, உறங்குபவளை பார்த்து இப்போது சிரித்து கொண்டிருந்தான் அவன்.

வெண்ணிலா அந்த கொலையை செய்திருக்க மாட்டாள் என்பதில் வெற்றிக்கு இப்போது நம்பிக்கை வந்திருந்தது.

அதிசயதக்க விதமாய் அந்த நம்பிக்கை அவனுக்குள் ஒருவித நிம்மதியையும் கொடுத்தது.

‘ராட்சசி! உன் பின்னாடி சுத்தி என் ஒரு மாசம் வீணா போச்சு டி!’ என்று உதட்டுக்குள் முணுமுணுத்து விட்டு, தன் ஆள்காட்டி விரலால் அவள் மூக்கின் நுனியை செல்ல சீண்டலாய் நெட்டி விட்டான்.

தூக்க கலக்கத்தில் அவள் முகம் சுருங்க, தன் மூக்கை தேய்த்து கொடுத்து கொண்டாள்.

அதை ரசனையோடு பார்த்திருந்த வெற்றியின் மன இறுக்கமும் மெல்ல தளர, இருக்கையில் தலை சாய்த்து கண் மூடினான்.

தன் மீது ஏதோ பாரத்தை உணர்ந்து உறக்கம் கலைந்து விழித்தாள் வெண்ணிலா.

வெற்றி அவள் தோள்மீது தலை சாய்த்து உறங்கி போயிருந்தான்.

அவன் முகம் மிகவும் களைத்து காணப்பட்டது.

அவன் அலையான கேசத்தை ஆதரவாக வருடி கொடுக்க, ஏனோ அவள் கைகள் பரபரத்தன.

‘வேணா நிலா, உன் காதலுக்காக உன் பின்னாடி கிறுக்கு தனமா திரிஞ்ச வெற்றி, இவன் கிடையாது. அவனோட காதலும் உண்மை கிடையாது’

அவள் உள் மனம் எச்சரிக்க, அவளுக்குள் இனம் தெரியாத வெறுமை பரவியது.

‘அந்த வெற்றி இனி எப்போதும் வரவே மாட்டான்’ என்ற நிஜம் அவளை சுடுவதாய்.

அவளின் கனிந்த முகம் இறுக, சட்டென தன் தோளை விலக்கி கொள்ள, அவன் தலை கீழே சரிய வெற்றியும் தூக்கம் கலைந்து நிமிர்ந்தான்.

இன்றைய விடியற்காலை தரிசனம் அவனுக்கு வெண்ணிலாவின் சிடுசிடுத்த முகமாக தான் இருந்தது.
நேராக அமர்ந்து முகத்தை கைகளால் அழுத்தி துடைத்து கொண்டு நேரத்தை பார்த்தான்.

ஐந்து மணி காட்டியது. காரை விட்டு இறங்கி யாரிடமோ தீவிரமாக ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான்.

‘வேறு யார் அவன் வக்கீலாக தான் இருக்கும்!’ வெண்ணிலா அவனை மனதிற்குள் நொடிந்து கொண்டாள்.

வேறொரு வகையில் வெற்றியை நினைத்து அவள் மனதில் சிறு நிம்மதியும் தோன்றியது.

‘தன் தனிமையை பயன்படுத்தி தன்னை ஏய்க்க தான் வெற்றி இப்படியெல்லாம் செய்கிறானோ!’ என்ற அவளின் இத்தனை நாள் சந்தேகம் பொய்த்து போனதில் அவள் மனம் சற்று ஆறுதல் கொண்டது.

‘ஏதோ தன்னை கொலைக்காரி என்ற அவன் தவறான கணிப்பின் விளைவு அது!’

தான் மனதில் முதல் முதலாய் வரித்து கொண்டவன், கேவளமானவன் இல்லை என்ற நிம்மதி அவளுக்குள் பரவியது. அவன் தனக்கு போலியான காதலை தந்த போதும் கூட!

ஏன் இத்தனை முரண்பாடான எண்ணங்கள் தன்னுள் எழுகின்றன என்பதை கூட அறிய இயலாமல், அந்த பேதை தவித்து போனாள்.

வெற்றி பேசி முடித்து காரை செலுத்தலானான்.

வழியில் ஒரு ஓட்டலில் இறங்கி இருவரும் முகம் கழுவி தயாராகி, காலை தேநீர் பருகிவிட்டு பயணத்தை தொடர்ந்தனர்.

இருவரின் நடுவே எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.

வெற்றி அடுத்தென்ன என்ற யோசனையில், கேள்விகள் முட்டும் தன் மனதை அமைதிபடுத்த முயற்சித்து கொண்டிருந்தான்.

அவன் தன்னை எங்கே அழைத்து செல்கிறான் என்று தெரியாமல், ஏனோ நிலாவிற்குள் சிறு பயம் துளிர்த்தது.
படபடக்கும் தன் இதயத்தை சமன் செய்யும் முயற்சியில் இருந்தாள் அவள்.

நாற்பது நிமிட பயணத்திற்கு பின், ஒரு பங்களாவின் முன் கார் நின்றது.

வெண்ணிலா, சிறு கலக்கத்தோடு இறங்கி அவனுடன் நடந்தாள்.

அவர்கள் வெளி கேட்டை தாண்டி வாசலை எட்டும் முன்பே, சூரிய நாராயணன் எதிர் வந்து இருவரையும் தனது அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்.

அவர்களை அமர வைத்து, வெற்றியிடம் தலையசைத்து விட்டு வெளியே நடந்தார்.

ஒரு வேலையாள் வந்து அவர்களுக்கு தேநீர் பரிமாறிவிட்டு சென்றான்.

வெண்ணிலா, அங்கு அசௌகர்யமாக உணர்ந்தாள்.

அவசியமற்ற எதிலோ தான் சிக்கி கொண்டது போன்ற உணர்வு அவளை சங்கடபடுத்தியது.

சொல்ல தெரியாத ஏதோ ஒருவித பயம் அவளை அரிக்க தொடங்கியது.

அவள் வெளுத்த முகத்தை கவனித்த வெற்றிக்கு அவளின் மனநிலை ஓரளவு புரிய தான் செய்தது.
அவளிடம் குற்றமில்லை என்று உறுதியாக தெரியும் வரை அவன் எதுவும் பேச விரும்பவில்லை.
அவனின் மௌனம் அவளை ஆதரவற்றளாக உணர செய்திருந்தது.

பத்து நிமிட இடைவெளியில், சூரிய நாராயணன் வேறு ஒரு நபருடன் உள்ளே நுழைந்தார்.

அவருடன் வந்த ஆனந்தன் முதலில் வெற்றிக்கு பவ்வியமாக சலாம் வைத்தான்.

“சொல்லுங்க சார், என்னாண்ட வேறென்ன தெரியணும் உங்களுக்கு!” என்று அந்த லாட்ஜின் வேலையாள் கேட்க,

“இவங்கள உனக்கு அடையாளம் தெரியுதா? நல்லா யோசிச்சு சொல்லு!” என்று வெற்றி, வெண்ணிலாவை கைகாட்டினான்.

அவளிடம் திரும்பிய ஆனந்தனின் பார்வை விரிய, வெண்ணிலாவின் தொண்டை குழிக்குள் ஏதோ அடைத்து கொண்டது போலானது.

வெண்ணிலாவின் முகத்தில் அவன் பார்வை படிய, ஆனந்தன் நெற்றி சுருங்க யோசித்து பதில் சொல்ல எடுத்து கொண்ட பதினைந்து வினாடிகளில், வெற்றியின் இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போலானது.

“இல்ல சார், இவங்கள நான்  முன்ன  எங்கேயும் பார்த்த ஞாபகம் இல்ல” என்று அவன் சொன்ன பிறகு தான் வெண்ணிலாவின் படபடப்பு சற்று அடங்கியது.

செய்யாத குற்றத்தின் பழி தன் மேல் விழுந்திடுமோ! என்ற தேவையற்ற அவள் பயமும் விலகியது.

“சுந்தர் கொலை செய்யப்பட்ட அன்னைக்கு, நீ இவங்கள லாட்ஜில பாக்கலயா?” வெற்றி சந்தேகமாக கேள்வி எழுப்ப, நிலா அவனை தீ பார்வை பார்த்தாள்.

ஆனந்தன் இளித்தபடி தலையை சொரிந்து கொண்டே, “அது வந்து சார், அப்ப ஈவினிங் டைம் கஸ்டமர் வர நேரம்… அதான்…”

“உனக்கு ஒரு பொண்ணு பணம் கொடுத்ததா சொன்ன இல்ல, அவங்களுக்கும் இவங்களுக்கும் ஏதாவது ஒத்துமை தெரியுதா?”
வெற்றி வேந்தனின் அடுத்தடுத்த கேள்விகள் அவனை தோண்டி துருவின.

நிலா மீது அவனின் தவறான கணிப்பினால் இந்த வழக்கை மறுபடி முதலில் இருந்து விசாரிக்க வேண்டிய
நிர்பந்தம் அவனுக்கு.

ஆனால், அதற்கான அவகாசம் தான் அவர்களிடம் இல்லை.

உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க அவனுக்கு இப்போது வேறு ஏதாவது தகவல் தேவையாக இருந்தது.

“இல்ல சார், அந்த பொண்ணு, வேற மாதிரி இருந்துச்சு சார்.”

“அவங்ககிட்ட வேற ஏதாவது, வித்தியாசமான அடையாளம் கவனிச்சியா? நல்லா யோசிச்சு சொல்லு!”

“பொம்பளகிட்ட என்ன வித்தியாசத்த சார் கவனிச்சிகறது? நேரா பாத்தா கரெக்டா காட்டுவேன் சார்.”

யாரென்றே தெரியாத அந்த பெண்ணை எங்கே என்று தேடுவான்!

வெற்றி தலையை அழுத்த பிடித்தபடி சோர்ந்து தலை கவிழ்ந்தான்.

சூரிய நாராயணன், “இவன் சொல்றதை நம்பறது சுத்த வேஸ்ட் விக்டர், அந்த பொண்ண ஸ்கெட்ச் பண்ண அடையாளம் சொல்றதுக்கு இவனை அழைச்சிட்டு போனா, எல்லாத்தையும் சொதப்பி விட்டுட்டான்! தமன்னாவையும் நயன்தாராவையும் வரைஞ்சு வச்சிருக்கான்! சுத்த அரை கிறுக்கன்” என்று அவர் கடுப்பாக கூற,

“நா என்னத்த பண்ணட்டும் சார்! அந்த பொண்ணு கண்ணு, மூக்கு எப்டி இருந்துச்சுன்னு கேட்டாங்க, எனக்கு சொல்ல தெரியல. போட்டோ ஏதாவது காட்டினா கூட இந்த பொண்ணு தான்னு சொல்லிக்குவேன்” ஆனந்தன் ரோசமாக பதில் தந்தான்.

‘ஃபோட்டோ’ என்றதும் வெற்றியின் மூளையில் மினுக்கென வெளிச்சம் தோன்றி மறைந்தது.

“ஒரு நிமிசம்!” என்றவன் வேகமாக சென்று காருக்குள் இருந்த தன் மடி கணினியை எடுத்து வந்தான்.

மற்ற மூவரும் அவனை புரியாமல் பார்த்திருக்க,

சுந்தரின் மடிக்கணினியில் இருந்து முன்பு பென்டிரைவில் சேகரித்த தகவல்களை இப்போது அலசலானான்.

முன்பு எத்தனை முறை ஆராய்ந்தும் அதில் உருப்படியான எதுவும் கிடைக்கவில்லை.

நிறைய அழகு பெண்களின் நிழற்படங்கள் இருந்த தொகுப்பினை திறந்து, “ஆனந்தா, இந்த ஃபோட்டோஸ்ல அந்த பொண்ணோட ஃபோட்டோவும் இருக்கான்னு பொறுமையா பாத்து சொல்லு” என்ற வெற்றி அவனை அருகழைத்து அந்த நிழற்படங்களை திரையிட்டான்.

ஆனந்தன் ஒவ்வொரு புகைப்படத்தையும் உற்று உற்று பார்த்து, “இல்ல சார்! இது இல்ல சார்! இதுவும் இல்ல சார்…!” என்று சொல்லி கொண்டிருக்க, வெற்றி நிதானமாக ஒவ்வொரு படமாய் நகர்த்தி கொண்டே வந்தான்.

கிட்டத்தட்ட அதில் நூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தன.

நேரம் கடந்து கொண்டே போக, ஆனந்தனிடம், ‘இது இல்ல சார்…!’ தவிர வேறு வார்த்தை வருவதாக தெரியவில்லை.

வெண்ணிலாவும், சூரிய நாராயணனும் நம்பிக்கை இழந்து விட்டிருந்தனர்.

வெற்றியின் பொறுமையும் நம்பிக்கையும் கூட கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது.

“சார்ர்ர்…! இந்த பொண்ணு தான் சார் அது!”

ஆனந்தனின் கரகர குரல் மற்ற மூவரையும் உயிர்ப்பித்து திரையில் கண் பதிக்க செய்தது.

அந்த நிழற்படத்தில் பேரழகான ஓர் இளம்பெண் புன்னகைத்து கொண்டிருந்தாள்.

அவள் முக தோற்றத்தில் வடநாட்டு சாயல் கலந்திருந்தது.

அதை தவிர வேறெந்த தகவலையும் அந்த பெண்ணை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

வெற்றி கேள்வியாக சூரிய நாராயணனை பார்க்க, அவர் தெரியாதென உதட்டை பிதுக்கினார்.

வெற்றியின் பார்வை சங்கடமாக வெண்ணிலாவிடம் திரும்ப, அந்த நிழற்படத்தை பார்த்திருந்த அவள் இதழில் ஒரு கசப்பான புன்னகை தோன்றி மறைவதை கண்ணுற்றான்.

சூரிய நாராயணனிடம் வெற்றி ஜாடையாக தலையசைக்க, அவர் ஆனந்தனை வெளியே தள்ளி கொண்டு போனார். அவன் இரு கைகளையும் நிறைத்து அனுப்பிவிட்டு திரும்பினார்.

“நிலா, இந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியும் தான?” என்ற வெற்றியின் ஆவலான கேள்விக்கு, நிலாவின் பதில் மௌனமாக இருந்தது.

“ப்ளீஸ் நிலா, உனக்கு தெரிஞ்ச ஏதாவது சின்ன விசயமா இருந்தா கூட சொல்லு! அது எங்களுக்கு பெரிய உதவியா இருக்கும்!” கிட்டத்தட்ட வெற்றி அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

“இவளோட பேரு ஷிவானி! இவள கல்யாணம் பண்ணிகிற ஆசையில தான் சுந்தர் எங்க விமலாவ!” வெண்ணிலா உதட்டை கடித்து கொண்டு வார்த்தைகளை அடக்கி கொள்ள முயற்சித்தாள்.

வெற்றிக்கு அவள் மன துயரம் நன்றாக புரிய அமைதியானான்.

“இந்த ஷிவானிய பத்தி வேற ஏதாவது டீடியல்ஸ் உங்களுக்கு தெரியுமா வெண்ணிலா?” சூரிய நாராயணனின் அடுத்த கேள்விக்கு அவள் இல்லையென்று தலையாட்டினாள்.

“ச்சே இன்னும் அஞ்சு நாளைக்குள்ள அந்த ஷிவானிய எங்கன்னு போய் தேடறது?” அவர் வெளிப்படையாகவே இயலாமையை வெளிபடுத்தினார்.

“கரண் குமாரோட ஆஃபிஸ்ல” என்ற வெண்ணிலாவின் நிதானமான பதிலில் இருவரும் விலுக்கென நிமிர்ந்தனர்.

“மாமாவோட ஆஃபிஸ்லயா?” வெற்றி கேள்வியாக இழுக்க,

“உங்க மாமாவும், சுந்தரும் பிஸ்னஸ் பார்னர்ஸ் தான, அந்த கம்பெனில மாடலா இருக்கும் போது தான் அவங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டதா, அப்பா ஒருதடவை சொல்லி இருந்தார்”

வெண்ணிலா வேண்டா வெறுப்பாக சொல்லி முடிக்க, வெற்றி இரு கைகளாலும் தன் முகத்தையும் தலையையும் அழுத்த கோதிக் கொண்டான்.

ஏதோ சிக்கலான பெரும் புதிருக்கான விடை கிடைத்து விட்ட உத்வேக உணர்வு அவனுக்குள் எழுந்தது.

“சூரியா சர், நாம இன்னைக்கே கரண் மாமாவ பார்க்கணும் சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க” என்று வெற்றி உத்தரவிட, அவரும் உற்சாகமாய் தலையசைத்தார்.

# # #

“உன்னோட உதவிய என்னால எப்பவுமே மறக்க முடியாது. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நிலா” வெற்றி உணர்ச்சி பெருக்கோடு நன்றி சொல்ல, வெண்ணிலா உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தாள்.

“அடி முட்டாள் மாதிரி நான் உன்ன சந்தேகபட்டு, உன் லைஃப்ல ரொம்ப குழப்பத்தை ஏற்படுத்திட்டேன். அது எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிடு நிலா.”

“…”

“உன்னோட கோபத்திலயும் நியாயம் இருக்கு நிலா. ஆனா, உன்ன சமாதானப்படுத்த இப்ப எனக்கு நேரமில்ல. என்னோட நிலமை உன்னால புரிஞ்சுக்க முடியும்னு நினக்கிறேன்” வெற்றி தவிப்போடு பேச, நிலா அந்த வாடகை காரின் கதவை திறந்து கொண்டு உள்ளே அமர்ந்து கொண்டாள்.

வெண்ணிலா திருச்சி திரும்பி செல்ல வெற்றியின் ஏற்பாடு இது.

“இனிமே என் லைஃப்ல எப்பவும் திரும்ப வந்துடாத!” பற்களை கடித்து கொண்டு அவனை எச்சரித்தவள், காரை எடுக்க சொல்லி ஓட்டுனரிடம் உத்தரவிட்டாள்.

கார் அவனை கடந்து செல்ல, வெற்றி அது போகும் வழியே பார்த்து கொண்டிருந்தான்.

“ரொம்ப ஃபீல் பண்ற போல, விக்டர்”
அருகிருந்த நாராயணன் போலியாய் அனுதாபம் தெரிவிக்க,

“இல்ல சர், நிலா ஏதோ நல்ல மூட்ல இருக்கா போல. அதான் இவ்வளோ நல்ல விதமா என்கிட்ட பேசிட்டு போறான்னு நினைக்கிறேன்” என்று சொல்லி புன்னகைத்தவன்,

“இதெல்லாம் பேச இப்ப நேரமில்ல, கிளம்புங்க சர்” என்று அந்த ஷிவானியின் தேடலில் மும்முரமானான்.

தேடல் நீளும்…

error: Content is protected !!