YALOVIYAM 13.2


யாழோவியம்


அத்தியாயம் – 13

லிங்கம் வீடு

லதா… தான் வளர்த்த பையன் குடும்பத்தை இழந்து நிற்பதற்கு காரணம், தன் கணவர்தான் என்பது அவரை புரட்டிப் போட்டிருந்தது. ‘என்ன மனிதர் இவர்?’ என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தது.

அதுவரை கணவரிடம் பேசாதிருந்தவர், இந்த விடயம் தெரிந்ததும் கணவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தார்.

‘ராஜா-க்கு ஏன் இப்படிப் பண்ணீங்க?’ ‘இப்படிப் பண்றதுக்கு எப்படி மனசு வந்துச்சி?’ ‘இவ்வளவு பண்ணிட்டு, எப்படி குற்றவுணர்ச்சியே இல்லாம இருக்க முடிஞ்சிச்சி?’ என்று கேட்டு கேட்டு லிங்கத்திடம் திட்டுகளும், அடிகளும் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

சுடர்…  தியாகு விபத்து வழக்கு விசாரணை செல்லும் விதத்தைப் பார்த்தவளுக்கு, மாறனை எதிர்கொள்ளவும், அவனிடம் பேசவும் ஒருமாதிரி இருந்தது. ஆதலால்தான் அவன் அழைப்புகளை ஏற்காமல் இருக்கிறாள்.

ராஜாவிடமாவது இதைப் பற்றிச் சொல்லலாம் என்றால், குடும்பத்தை இழந்து அவன் நிற்பதற்கு காரணம் லிங்கம் என்பது, அவனிடமும் அவளைப் பேசவிடாமல் கட்டிப்போட்டது

‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் சுவரையே வெறித்துப் பார்த்திருந்தவள், “சுடர்” என்ற லதாவின் அழைப்பு கேட்டு விழியசைத்தாள்.

அவள் அருகே வந்து லதா அமர்ந்ததும், “ம்மா! என்ன?” என்றதும், “எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. பேசாம ராஜா வீட்டுக்குப் போயிடலாமா?” என ஏக்கமும் தயக்கமும் நிறைந்த குரலில் கேட்டார்.

உடனே, “எப்படிப் போக? இன்னைக்கு ராஜாண்ணா இப்படி இருக்கிறதுக்கு காரணம், இந்த வீட்ல இருக்கிற ஒருத்தர். அப்புறம் எப்படி-ம்மா அவங்க முகத்தில முழிக்க முடியும்?” என்று கேட்டு, சுடர் கவலைப்பட்டாள்.

சற்று நொடிகள் இருவருமே பேசாமல் இருந்தனர்.

எதையோ யோசித்த லதா, “ஏன் சுடர், உங்கப்பா பண்ணதுக்குத்தான் என்கூட பேசாம இருந்தானா? அப்படின்னா உன்கிட்ட மட்டும் பேசினானே? அது ஏன்?” என்று குழப்பம், வலி நிறைந்த குரலில் கேட்டார்.

‘அதானே! ஏன்?’ என சுடர் யோசிக்கையில், ‘ஆனா இப்போதான இதெல்லாம் தெரிய வருது. ராஜாண்ணா முதலருந்தே அம்மாகூட பேசாம இருந்தாங்களே?  அது ஏன்?’ என்ற கேள்வி வந்ததும், தலை விண்விண்ணென்று வலித்தது.

“எனக்கு மனசே சரியில்லை சுடர். ராஜாவைப் பார்க்கணும் போல இருக்கு. அவன்கூட பேசணும்” என்று லதா புலம்பி அழுதார்.

அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளுமே, மாறன்-ராஜா இருவரின் அன்பிற்குரியவர்கள் இழப்பிற்குக் காரணம் தன் அப்பா என்ற உண்மையில் அவர்களிடம் ‘எப்படிப் பேச?’ என்று உழன்று கொண்டிருந்தாள்.

அதுமட்டுமல்லாமல், ‘ஊழல்வாதியின் மகள்’ என்ற அடையாளத்தோடு வெளி உலகத்தை எதிர்கொள்ள வேண்டியதை நினைத்ததும் கண்கள் கலங்கியது.

இருந்தும், “ம்மா! அழாதீங்க. அழுது இனிமே ஒன்னும் ஆகப்போறதில்லை” என கண்ணீரைத் துடைத்து, நிறைய பேசி அவரைச் சமாதானப்படுத்தினாள்.

மேலும், “இப்படியே அழுதுகிட்டே இருக்காதீங்க. கொஞ்ச நேரம் இங்க படுங்க” என்று எழுந்ததும், லதா கட்டிலில் படுத்துக்கொண்டார்.

சுடர், அம்மா பக்கத்தில் அமர்ந்ததும், “இனிமே ராஜா நம்மகூட பேசவே மாட்டானா? நினைச்சாலே ஒருமாதிரி இருக்கு” என்று வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டே இருந்தார்.

சுடர் ஆறுதல் சொல்லும் நிலைமையில் இல்லை. ஆதலால் அமைதியாக அம்மாவின் தோளைத் தட்டி மட்டும் கொடுத்தாள். அதுவே ஆறுதல் போல இருந்ததோ? என்னவோ? லதா கண்ணயர்ந்தார்.

சுடரும் கண்மூடிக் கொண்டாள். வெகுநேரத்திற்குப் பின், கைப்பேசி சத்தம் கேட்டு இமை திறந்தாள். திரையில் புதிய எண்ணைக் கண்டதும், அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றாள்.

“நான் மாறன் அம்மா பேசறேன்” – திலோ.

இதை எதிர்பார்க்கவே இல்லை என்பதால், “ம்ன்” என்ற சத்தத்தில் கேள்வி எழுப்பியிருந்தாள்.

“நான் மாறன் அம்மா திலோ பேசறேன்” என அழுத்தமாகச் சொன்னதற்கும், “ம்ம்!” என்றாள்.

“நீங்க…?” என திலோ சந்தேகமாய் கேட்டதும், “ம்ம், ஓவியச்சுடர்தான்” என உறுதிப்படுத்தினாள்.

“ஓகே! இன்னைக்கு நாம மீட் பண்ண முடியுமா?”  – திலோ.

யோசித்தாள். மாறனை எதிர்கொள்ளவே கூச்சமாக இருந்தது. இதில் இவரை எப்படி எதிர்கொள்ள என்று நினைத்தவள், “ஏன்? எதுக்கு?” என்று கேட்டாள்.

“பேசணும்” – திலோ.

‘இவர் என்னிடம் என்ன பேச வேண்டும்?’ என்ற கேள்வி வந்தாலும், “அம்மா கொஞ்சம் டிப்ரஷ்-டா பீல் பண்றாங்க. ஸோ, முடியாது” என்று மறுத்து பதில் சொன்னாள்.

“கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே?” – திலோ.

இதை எப்படியாவது தவிர்த்துவிட எண்ணி, “உங்களுக்குத் தெரியுமா-ன்னு எனக்குத் தெரியலை. எனக்கு ஒரு அட்டாக் நடந்துச்சு. கைல காயம் பட்டிருந்தது. அது இன்னும் சரியாகலை. ஸோ, என்னால ட்ரைவ் பண்ண முடியது” என்றாள்.

“ட்ரைவர் யார்கூடவாது வரலாமே?” – திலோ.

“இங்க பாருங்க. நீங்களும் நானும் பப்ளிக் பிளேஸ்-ல மீட் பண்ணா, மாறா-க்கு ப்ராபளம் வர சான்ஸ் இருக்கு. நான் அவனுக்காகவும் யோசிச்சித்தான் பேசறேன். புரிஞ்சிக்கோங்க”

“நான் அவனுக்காகத்தான் பேசவே போறேன்” என்றதும், சுடர் முகம் மாறியது. ‘என்ன செய்ய?’ என்று குழம்பி மௌனம் காட்டினாள்.

கடைசியில், “இட்ஸ் எ ரெக்வெஸ்ட். ப்ளீஸ்” என்று கெஞ்சியதும், ‘ஐயோ’ என்று கண்மூடித் திறந்தவள், அதற்கு மேல் மறுக்க முடியாமல், “ஓகே. சென்னை செங்கல்பட்டு ரோட்-ல மீட் பண்ணலாம்” என்றாள்.

“தேங்க்ஸ்” என்று திலோ சொன்னதும், சுடர் அழைப்பைத் துண்டித்தாள்.

கைப்பேசியை வைத்ததும், தூங்கிக் கொண்டிருந்த லாதவைப் பார்த்தாள். ‘அம்மாவிடம் சொல்லவா? வேண்டாமா?’ என மனதிற்குள் ஒரு போராட்டமே நடந்தது.

அழுது அழுது அயர்ந்து போய் தூங்குபவரைப் பார்த்தவள், ‘வேண்டாம்’ என முடிவெடுத்தாள். பின் வேலைக்காரர் ஒருவரை அழைத்து, ’அம்மா-வ பார்த்துக்கோங்க. வெளியே போறேன். கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். எந்திரிச்சா சொல்லிடுங்க’ என்று கூறிவிட்டு, திலோவைப் பார்க்க கிளம்பினாள்.

ராகினி கட்சி அலுவலகம்

முறைகேட்டில் தொடர்புடைய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைத் தகுதி நீக்கம் செய்யுமாறு கட்சித் தலைமையின் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவை ஆய்வு செய்த சபாநாயகர் அவர்களது பதவியைத் தகுதி நீக்கம் செய்வதாகவும், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்தச் செய்திதான் இன்று காலையிலிருந்து ஊடகங்களில் ‘பிரேக்கிங் நியூஸாக’ ஒளிபரப்பட்டது.

தலைமைச் செயலகம், முதலமைச்சர் அறை…

ராகினி!

நுழைவுத் தேர்வு முறைகேட்டின் இரண்டாவது முக்கிய குற்றவாளி! சுடரை தாக்குவதற்கு ஆள் அனுப்பியது, லிங்கத்துடன் சேர்ந்து தியாகு விபத்தை திட்டமிட்டது இவர்தான்!!

முதலமைச்சரைச் சந்தித்து, ராகினி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுக்க வந்திருந்தார்.

ராகினி முகம் கருத்திருந்தது. ஒரு அகங்காரம், அதிகாரம், அடங்கா தன்மை எதுவுமில்லை. முதல்வர்தான், எனினும் கட்சித் தலைவரும் அவரே என்பதால் ராகினியிடம் சில விடயங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

பேச்சு தொடர்கிறது…

“அரெஸ்ட் வேண்டாம். அது நல்லா இருக்காது. நீங்களே கோர்ட்-ல சரண்டர் ஆகிடுங்க” என்று தலைவர் சொன்னதும், “ம்ம்ம்” என்று அமைதியான குரலில் ஒத்துக் கொண்டார்.

“மேற்கொண்டு விசாரணை… ம்ம்” என யோசித்தவர், “எவிடென்ஸ் எல்லாம் கிளியரா இருக்கு. பெரிசா எதுவும் செய்ய முடியாது” என்று முடித்துவிட்டார்.

முகத்தில் கடுப்புடன், “ப்ச்! எல்லாத்துக்கும் அந்த கலெக்டர்தான் காரணம் தலைவரே!! இன்னும் அவன் மேல இருக்கிற கோபம் போகலை” என்று ராகினி பொருமினார்.

“ரூல்ஸ்-படியே போறான்னு கட்சி ஆளுங்களுக்கும் அவன் மேல ஒரு அதிருப்தி இருக்கு. பார்க்கலாம்… என்ன செய்யலாம்-னு?” என நிதானமாகப் பேசினார்.

“உடனே ஏதாவது செய்ங்க தலைவரே?” என அவன் மேலிருக்கும் ஆத்திரங்கள் போகாத நிலையில் பேசினார்.

“இந்த நேரத்தில நாம என்ன செஞ்சாலும், அது பழிவாங்கிற மாதிரி இருக்கும். கொஞ்ச நாள் போகட்டும். என்ன செய்யலாம்னு பார்க்கிறேன்” என்றதும், தன்னிலையை நொந்தபடியே ராகினி கிளம்பிச் சென்றார்.

அவர் சென்றதும், இப்படி ஒரு ஆட்சியர் இருப்பது ஆட்சிக்கு நல்லதில்லை என்று தோன்றியது. ஒன்று பணிமாற்றம் செய்ய வேண்டும். இல்லை, வாய்ப்பு வந்தால் அதைச் சரியாகப் பயன்படுத்தி, மக்களுக்கு அவன் மேலிருக்கும் நல்லெண்ணத்தைக் குலைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

மேலும் இந்த முறைகேட்டினால், ஆட்சியின் மேல் மக்களுக்கு இருக்கும் அதிருப்தி விலகி, இழந்த செல்வாக்கை எப்படி மீட்டெடுக்க வேண்டும்? என்று ஆட்சியின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்காக யோசிக்க ஆரம்பித்தார்.

லிங்கத்தின் கட்சி அலுவலகத்தில்…

லிங்கம்!

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்!

முதிர்ந்த அரசியல்வாதி என அறியப்பட்டவர். இன்று… நுழைவுத் தேர்வு முறைகேட்டின் ஆரம்பப்புள்ளி, முக்கியப்புள்ளி, முதலாவது குற்றவாளி என்று அறியப்படுகிறவர்

ராகினியுடன் பேசிய ஆண்குரலுக்குச் சொந்தக்காரர்! ஆட்சி மாற்றம் நடந்து, கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட ராகினி, லிங்கம் செய்த ஊழலை வெளிக்கொண்டு வராமல், முறைகேட்டை அப்படியே தொடர்ந்தார்.

அதனால்தான் எதிர்கட்சியாக இருந்தாலும், ‘இதிலிருந்து தப்பிவிட வேண்டும்’ என்ற எண்ணத்தில், லிங்கம் இத்தனை நாள் ராகினியுடன் பேசி, திட்டங்கள் தீட்டி வந்தார். ஆனால் அவை எதுவும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

தியாகு, ஜெகதீஷ் விபத்துகளைத் திட்டமிட்டது லிங்கம்தான். இந்த ஊழல் தொடர்பாக நடந்த கொலைகளில் 90%, லிங்கம் சொன்னதன் பேரிலே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அது அவருக்கு ஒரு கொடூர பிம்பத்தை பொது மக்களிடம் உருவாக்கியிருக்கிறது.

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இவரது அரசியல் பாதை ஆரம்பித்த இடத்திலிருந்து, முறைகேட்டில் முடிந்தவரையிலான கதையை ஒளிபரப்பி வருகின்றனர்.

கைதிற்காக காவல்துறையிடம் இருந்து சம்மன் வந்திருந்ததால், அகங்கார, அதிகார, அடக்கமுடியாத ஆண்குரலுக்குச் சொந்தக்காரர், இப்பொழுது அயர்ந்து போய் இருந்தார்.

சென்ற தேர்தலில் லிங்கத்தின் கட்சி தோல்வியைத் தழுவியிருந்தாலும், அவர் வெற்றியே பெற்றிருந்தார். அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பற்றிக் கட்சித் தலைவருடன் பேச, கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

தலைவரின் முடிவிற்கு லிங்கம் ஒத்துக் கொள்ளாமல் இருந்தார். கட்சியில் அவர் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், எடுக்கும் முடிவு கட்சியைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற கவனத்துடன் தலைவர் பேசி வருகிறார்.

பேச்சு தொடர்கிறது…

“லிங்கம் புரிஞ்சிக்கோங்க! நீங்களே ராஜினாமா பண்ணிடுங்க. தகுதி நீக்கம் பண்ணா, உங்க ஆதரவாளர்களுக்கு கட்சி மேல அதிருப்தி வரும்” என்று கட்சி நலனிற்காகத் தலைவர் கேட்டார்.

மேலும், “இந்த கேஸ முதலருந்தே ராகவன் பாலோவ் பண்றாரு. இதைப் பத்தி ஏற்கனவே என்கிட்ட பேசிட்டாரு. எவிடென்சும் பக்காவா இருக்குதாம். என்ன விசாரணை கேட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது” என்று லிங்கத்திற்கு அவரின் இன்றைய நிலையைப் புரிய வைக்கப் பார்த்தார்.

ராகவன் பெயரைக் கேட்டதும், “சரி விடுங்க! அப்படியே அரெஸ்ட் ஆகிட்டுப் போறேன்” என்று லிங்கம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

“நல்லா இருக்காது லிங்கம். ஆப்போசிட் பார்ட்டி-ல தகுதி நீக்கம் நடந்திருக்கு. நம்மகிட்டயும் பப்ளிக் எதிர்பார்ப்பாங்க. எப்படியும் இடைத்தேர்தல் வரும். அதுல உங்க ஆதரவாளர்களும் கட்சிக்காக வேலை செய்யணும்.

இப்ப எடுக்கிற முடிவு, கட்சியோட வெற்றியைப் பாதிக்காம இருக்கணும். கொஞ்சம் கட்சியைப் பத்தியும் யோசிங்க” என்று தலைவர், எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பேசினார்.

ஒரு அமைதி நிலவியது.

நிறைய யோசித்த லிங்கம், “எனக்கு ஒரே ஒரு கோரிக்கை இருக்கு. அதை செஞ்சீங்கன்னா, நான் ராஜினாமா செய்றேன்” என்று சமரசத்துக்கு வந்தார்.

“சொல்லுங்க என்ன?” – தலைவர்.

போன தடவையேஅடுத்த எலெக்க்ஷன்-ல ராஜா-க்கு சீட் கொடுக்கணும்னு’ முடிவு பண்ணியிருந்தோம்” என்று இடைவெளி விட்டார்.

‘ராஜாக்கு சீட் கொடுக்கச் சொல்வாரோ?’ என நினைத்த தலைவர், கட்சி வேலைகளில் ராஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி இல்லையென்பதால், ‘அதெப்படி கொடுக்க முடியும்?’ என்று உடன்படா மனநிலையுடன் இருந்தார்.

ஆழ்ந்து மூச்செடுத்த லிங்கம், “இடைத்தேர்தல்-ல ராஜா-க்கு எம்எல்ஏ சீட் கொடுக்கக் கூடாது” என அசையா விழிகளில் ஆத்திரங்கள் காட்டாறு போல் ஓடும் சீற்றத்துடன் சொன்னார்.

“ஏன் லிங்கம் இப்படி?” என்று தலைவர் கேட்டேவிட்டார்.

“இதான் என் கோரிக்கை” என்றவர், “முடிஞ்சா, அவன்கிட்ட இருக்கிற ஐடி விங் செக்ரட்டரி போஸ்ட்-டயும் வாங்கிடுங்க” என ராஜாவைப் பழிவாங்கத் துடிக்கும் குரலில் சொன்னார்.

‘ஏன் இந்த பழியுணர்வு?’ என்று தலைவர் யோசித்தாலும், ‘முன்ன மாதிரி கட்சி வேலை ஒழுங்கா செய்றது இல்லை. கட்சி ஆளுங்ககிட்டயும் பேசறதில்லை’ என்று ராஜாவின் குறைகளை மனதிற்குள் பட்டியலிட்டுப் பார்த்தார்.

ஏற்கனவே உடன்பாடில்லாத நிலையில் இருந்தவர், “சரி! நீங்க சொல்ற மாதிரியே அடுத்து வரப்போற எலெக்க்ஷன்-ல ராஜாக்கு சீட் கொடுக்கலை” என்று லிங்கத்தின் கோரிக்கையை ஏற்பது போல் பேசினார்.

மேலும், “ஆனா, செக்ரட்டரி போஸ்ட் பத்தின முடிவெல்லாம் நாம ரெண்டு பேரும் மட்டும் எடுக்க முடியாது” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதற்குமேல் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று புரிந்தது. மேலும் கட்சியில் ராஜாவின் முன்னேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டைப் போட்டுவிட்டு திருப்தி வந்திருந்தது. அதே மனநிலையில், “சரி ராஜினாமா பண்றேன்” என்று எழுந்து சென்றார்.

அவர் சென்றதும், கட்சிக்குப் பாதகமில்லாமல் முடிவெடுத்ததில் தலைவர் முகம் திருப்தி கண்டிருந்தது.

எனினும் லிங்கம்தான் ஜெகதீஷ் விபத்திற்குக் காரணம் என்று அவர் மேல் ராஜாவிற்கு கோபம் இருப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால், லிங்கத்திற்கு ஏன் ராஜாவின் மீது கோபம்? என்ற கேள்வி வந்தது.

இது கட்சியை எந்த விதத்திலாவது பாதிக்குமா? இப்படி ஒரு சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்தால் எப்படி மக்களைச் சந்திப்பது? என்று கட்சியின் அடுத்தடுத்த செயல்பாடுகள் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.

செங்கல்பட்டு – சென்னை சாலை…

இரண்டு கார்கள் நின்றன. அனல் காற்று வீசியது. சாலையின் ஓரத்தில் சுடர், திலோ நின்று கொண்டிருந்தனர்.