யாழோவியம்
அத்தியாயம் -7
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா
திலோவும் தியாகுவும் வாசற் படியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் காஃபி குடித்து முடித்ததின் அடையாளமாக, அருகில் காலியான காஃபி கோப்பைகள் இருந்தன.
தியாகு பேசப் பேச, அதைக் கேட்டபடியே பூங்கொத்திற்கு தேவையான ‘மெஸ் நெட்’ துணியை திலோ வெட்டிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டு வளாகத்திற்குள் ஆட்சியர் வாகனம் நுழைந்தது. அதைக் கண்ட திலோ, “மாறன் வந்துட்டான்” என்று முகம் மலர்ந்தார்.
கார் நின்றதும் இறங்கி வாசலைப் பார்த்தவன், அப்படியே சென்று ‘அக்கடா’ என்று அம்மா-அப்பாவுடன் அமர்ந்து கொண்டான்.
“இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்டிங்களா-ம்மா?” என மாறன் கேட்டதும், “ம்ம்” என்ற திலோ, சோர்வாக அமர்ந்திருந்தவன் தலைவருடி, “லுக்கிங் டயர்ட்” என்றார்.
“ஆமாம்மா” என்று சொல்லும் பொழுதே, “சார்! இதை வண்டியிலே விட்டுட்டு வந்துட்டிங்க” என, காலையில் வாங்கிய புடவைப் பையை, காசி கொடுத்துச் சென்றார்.
அமைதியாக வாங்கிக் கொண்ட மாறனைப் பார்த்து, “சாரீ-யா?” என்று திலோ ஆச்சரியமாகக் கேட்டார்.
“ம்ம்ம்! சாரீதான். கோ-ஆப்டெக்ஸ் ஷோ ரூம் ஓப்பனிங்-க்கு போயிருந்தேன். அங்கே வாங்கினது”
“சாரீ நான் அவ்வளவா உடுத்தறதில்லயே மாறன்! அப்புறம் எதுக்கு வாங்கின?”
‘என்ன பதில் சொல்ல?’ என்று திண்டாடினான். பின், “சும்மாதான்” என்று மழுப்பி எழுந்தவனின் கையைப் பிடித்து, “சாரீ யாருக்கு-ன்னு சொல்லவேயிலேயே?” என்று திலோ கேட்டார்
மீண்டும் அமர்ந்து, “ம்மா! ஃபர்ஸ்ட் பர்ச்சேஸ் பண்ணச் சொன்னாங்க. ஸோ வாங்கினேன். அவ்வளவுதான்” என்று சமாளித்தான்.
“ஓஹ்! பட், இதை என்ன பண்ணப் போற?” என்று அடுத்த கேள்வி கேட்டதும், ‘இதற்கு மேல் எப்படிச் சமாளிக்க?’ என்று தெரியாமல், மாட்டிக் கொண்டது போல் மாறன் இருந்தான்.
மகனின் முகமாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்த தியாகு, “ஏன் திலோ, அவனோட பியூச்சர் வொய்ப்-க்கு கிஃப்ட் பண்ணிக்கலாமே?” என யோசனை சொன்னதும், “தட்ஸ் குட்” என்று திலோ வரவேற்றார்.
ஒருமுறை அப்பாவின் பார்வையைச் சந்தித்தான். பின், “சரிம்மா! நான் உள்ளே போறேன்” என்றவன், மறக்காமல் கோ-ஆப்டெக்ஸ் பையை எடுத்துக் கொண்டுச் சென்றான்.
போகும் மகனைப் பார்த்துக் கொண்டிருந்த தியாகுவிடம், “அவனை ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?” என்று திலோ கேட்டார்.
“ஹி இஸ் இன் லவ்” என்று உறுதியாகச் சொன்னதும், “எப்படிச் சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்டார்.
“நாமதான் பொண்ணு பார்க்கப் போறோம்னா, பேக்-அ இங்கே வச்சிட்டுப் போயிருப்பான். பியூச்சர் வொய்ப் யாருன்னு அவன் டிசைட் பண்ணிட்டான். அந்தப் பொண்ணுகிட்ட காட்டத்தான், சாரீ-ய எடுத்திட்டுப் போறான்” என்று தன் மகனை கணித்துச் சொன்னார்.
“கிரேட் தியாகு!” என்று கணவரின் காவல்துறை மூளையைச் சிலாகித்துப் பேசினார்.
தியாகு சத்தமாகச் சிரித்தும், “வாங்க யாருன்னு கேட்போம்” என்று திலோ ஆர்வத்துடன் சொன்னதற்கு, “நோ! நோ! அவனே சொல்லுவான். நம்ம ஓகே சொன்னா போதும்” என தியாகு மறுத்துவிட்டர்.
“அதுகூட சரிதான்” என்றவர், “ட்ரெயினிங் டைம்-ல மீட் பண்ணியிருப்பான்னு நினைக்கிறேன்” என்று ஆர்வத்துடன் சொன்னார்.
“தெரியலயே திலோ! அவன் பேட்ஜ்-ஜா இல்லை வேற பேட்ஜ்-ஜா? ஐஏஎஸ்-ஆ இருக்குமோ இல்லை, ஐபிஎஸ்-ஆ?? எதுவும் தெரியலை “
“நீங்கதான கேட்க வேண்டாம்னு சொல்லிட்டீங்க. இனிமே அவன்தான் சொல்லணும். எப்போ சொல்வானோ?!”
-இப்படியே கணவனும் மனைவியும் மகனின் எதிர்கால வாழ்க்கைத் துணை பற்றி, வெகு நேரம் பேசிவிட்டே வீட்டிற்குள் சென்றார்கள்.
யாழ்மாறன் அறை…
உள்ளே வந்தவன் புடவையை வைத்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்தான்.
‘கண்டிப்பா அப்பா கெஸ் பண்ணியிருப்பாரு’ என்று வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டான்.
தன் வாழ்க்கைத்துணை பற்றிப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது தெரியுமென்பதால், ‘இவள் என் எதிர்காலம்’ என சுடரைக் கைகாட்டினால் … என்ன சொல்வார்கள்? எப்படி அவர்களைச் சரிசெய்ய? சம்மதிக்க வைக்க? என யோசித்து மனம் பாரமானது.
வழக்கின் விசாரணையுடன் இதுவும் சேர்ந்து கொண்டு, அவனுக்கு மனச் சோர்வைத் தந்தது. ‘நேத்தும் அவகிட்ட பேசலை. ப்ச் இன்னைக்கும் பேசற நிலையில இல்லை’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
பின் லேசாகத் தலையை உலுக்கி எழுந்து சென்றவன், பல கோணங்களில் புடவையைப் புகைப்படம் எடுத்து, ‘நாளை பேசுகிறேன்’ என்ற தகவலோடு சுடருக்கு அனுப்பினான்.
ராஜா வீடு, அடுத்த நாள் மதியநேரம்
ராஜா வீட்டிற்கு சுடர் வந்திருந்தாள். இருவரும் சேர்ந்து சமையல் செய்து சாப்பிடலாம் என திட்டமிட்டிருந்தார்கள். சமையல் செய்வதற்கான வேலையில் ராஜா இறங்கியிருந்தான். வரவேற்பறையில் டிவி பார்த்துக் கொண்டே, சுடர் வெங்காயம் உரித்தாள்.
சமையலறையிலிருந்து வெளியே வந்தவன், “ம்ம்! இப்போ டேஸ்ட் எப்படி இருக்கு-ன்னு சொல்லு??” என சமைத்ததைக் கொஞ்சம் கொடுத்து, இதோடு மூன்றாவது முறையாகக் கேட்டான்.
சுவைத்துப் பார்த்தவள், “இன்னும் அப்படியேதான் இருக்கு” என்றாள்.
“இதுக்குமேல என்ன பண்ண-ன்னு தெரியலை?”
“அதுக்குத்தான் அம்மாவைக் கூப்பிட்டு வந்திருக்கலாம்” என்று சம்பந்தமே இல்லாமல் பேசினாள்.
அமைதியாக நின்றான். அவளும் அதற்கடுத்து எதுவும் கேட்கவில்லை.
உடனே சமையல் அறை செல்லப்போனவன் கையைப் பிடித்துக் கொண்டு, “ஏன் ராஜாண்ணா அம்மா-கூட பேச மாட்டிக்கிற?” என்று நேரடியாகக் கேட்டாள்.
“இல்லையே! அன்னைக்கு ஜூஸ் வேணுமா-ன்னு கேட்டதுக்கு பதில் சொன்னேன். அப்புறம் காஃபி…” என்கையிலே ‘போதும் நிறுத்து’ என்று கைகாட்டி, “அவங்க கேட்டாங்க… நீ பதில் சொன்ன. நீயா ‘இது வேணும்-ம்மா’-ன்னு ஏன் கேட்கலை?” என்று கேட்டாள்.
மீண்டும் அமைதியாக இருந்தான்.
அவன் முகத்தைப் பார்த்தவள், “எதையாவது மறைக்கிறியா ராஜாண்ணா?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.
“மறைக்கிறேன்னா? அப்படி இல்லை சுடர்”
“நடந்ததையே நினைச்சி இப்படி இருக்கியா? இல்லை வேற எதுவுமா? எதுனாலும் சொல்லு. ஏன்னா அன்னைக்கு ரூம்-ல…” என்று பேசும் போதே, சுடரின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.
“ப்ச், யாரு இந்த நேரத்தில?” என்று எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தவள், திரையில் ‘மாறா’ என்ற பெயரைப் பார்த்ததும், “இவன் ஏன் இந்நேரத்தில கால் பண்றான்?” என தனக்குள்ளே கேட்டாள்.
அவளின் கேள்விக்கு, “என்னைக் காப்பாத்த” என்று ராஜா கேலியாகச் சிரித்துச் சொன்னதும், சுடர் முறைத்துப் பார்த்தாள்.
இன்னும் கைப்பேசி அழைப்பு ஓசை வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், “அட்டன் பண்ணி டிசி-கிட்ட பேசு. என்கிட்ட அப்புறமா கேள்வி கேட்கலாம்” என எழுந்து சமயலறைக்குள் சென்றான்.
ராஜா போனதும் அழைப்பை ஏற்று, “என்ன-ன்னு சொல்லு?” என சீற்றத்துடன் தொடங்கியதும், “ரெண்டு நாள் கழிச்சி ஃபோன் பண்றேன். இப்படித்தான் ஆரம்பிப்பியா?” என்று சட்டென்று கேட்டான்.
“சொல்லு மாறா” என்று குரலை இறக்கியதும், “ம்ம்ம்! பெட்டர்” என்றவன், “என்ன பண்ற?” என்று கேட்டான்.
“ராஜாண்ணா வீட்டுக்கு வந்திருக்கேன்! இன்னைக்கு எனக்காக ஸ்பெஷலா அவங்க குக் பண்றாங்க” என்று ‘ஸ்பெஷலில்’ ஒரு அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.
“நான் கேட்டது புரியலையா? இல்லை, உங்க ரெண்டு பேர் பாசத்தைப் பார்த்து ஜெலஸ் ஆவேன்னு நினைச்சி இதை சொல்றியா? அன்னைக்கு உங்க சைல்ட்ஹூட் போட்டோஸ் அனுப்பினதும் இதுக்குத்தானா?” என்று படபடத்தான்.
‘கண்டுபிடிச்சிட்டான்’ என்று என்று தனக்குள் சொல்லிச் சிரிக்கும் பொழுதே, “ஒழுங்கா என்ன பண்ற-ன்னு சொல்லு சுடர்?” என்றான்.
அதே சிரிப்புடன், “வெங்காயம் உரிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று உண்மையைச் சொன்னாள்.
“என்னமோ உன் அண்ணன் உனக்காக சமைக்கிறதா சொன்ன? அவன் உன்னை வேலை வாங்கிட்டு இருக்கானா?” என்று ராஜாவை வம்பிழுத்தான்.
அப்படியே சிரிப்பு குறைந்து போனவள், “போதும்! எதுக்கு ஃபோன் பண்ண சொல்லு?” என்று குரல் இறங்கிப் போய் கேட்டாள்.
“அதை அப்புறம் சொல்றேன்” என்றவன், “நேத்து ஒரு சாரீ போட்டோ அனுப்பினே-னே பார்த்தியா? எப்படி இருக்கு?” என்று ஆசையாகக் கேட்டான்.
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “என்ன புதுசா சாரீ?” என்று கேட்டாள்.
“கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம் ஓப்பனிங் போனேன். அங்க வாங்கினது” என்றவன், “இப்ப சொல்லு! பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
“சாரீ ஃபுல்லா ஸ்ட்ரைப்ஸ் டிசைன்-க்கு பதிலா குட்டி குட்டி பூ இருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று புடவையில் ‘எது பிடிக்கவில்லை?’ என்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“ஓ! உனக்கு ஃபுளோரல் டிசைன்தான் பிடிக்குமா?”
“யெஸ்” என்றவள், “அப்புறம் பார்டர் கலர் இது இல்லாம, ஆங்… ம்ம்ம்” என்று யோசித்தவள், “ஆலிவ் கிரீன் இருந்தா பெட்டரா இருந்திருக்கும்” என்றாள்.
“ஓகே”
“ஈவன்! சாரீ கலர் கூட இது இல்லாம மஸ்டர்டு கலர் இருந்திருக்கலாம்” என்று, அவளது பிடிக்காததன் பட்டியல் நீண்டு கொண்டே போனது.
‘இதுக்கு சாரீ பிடிக்கலைன்னு சொல்லியிருக்கலாம்’ என்று மாறனுக்குச் சலிப்புத் தட்டும் போதே, “அப்புறம் முந்தி கூட…” என்று சுடர் தொடர்ந்தும், எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு, “ஒன்னு பண்ணேன் சுடர்” என்று சாதாரணமாகச் சொன்னான்.
“சொல்லு! என்ன பண்ணனும்?”
“கார் எடுத்துக்கோ! டீ-நகர்-ல இருக்கிற ஏதாவது ஒரு சாரீ ஷாப்-க்கு போ. நீ இப்போ என்கிட்ட சொன்னதை, சேல்ஸ்மேன்-கிட்ட சொல்லு. கரெக்ட் சாரீ எடுத்துப் போட்டதும், பில் பண்ணி வாங்கிக்கோ. என்னை விட்டுரு”
“ஏன் மாறா?!”
“பின்ன என்ன?! சும்மா குறை சொல்லிக்கிட்டே இருக்க??” என்று கொதித்துப் போய் கேட்டான்.
“சரிப்பா! சாரீ ரொம்ப நல்லா இருக்கு” என்றவள், “இப்போ உன் டர்ன்! நான் அனுப்பின போட்டோ பத்திச் சொல்லு?” என்று கேட்டாள்.
‘விடமாட்டாளே’ என்று நினைத்தவன், “சைல்ட்ஹூட் போட்டோஸ் நல்லா இருந்தது! குட்டியா… க்யூட்டா… ஐ லைக்டு இட்” என்றான்.
உள்ளுக்குள் எழுந்த பூரிப்புடன், “சின்ன வயசில என்னையும் ராஜாண்ணா-வைப் பார்த்து, எல்லோரும் இப்படித்தான் சொல்லுவாங்க” என்று அண்ணன்-தங்கை பெருமை பேசினாள்.
உடனே, “அய்யயே! நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட!! நான் க்யூட்-ன்னு சொன்னது உன்னை மட்டும்தான். என் மச்சானை இல்லை” என, அவளைச் சீண்டினான்.
பூரிபெல்லாம் பொய்த்துப் போன முகத்துடன், “ரெண்டு நாள் பேசாதுக்கும் சேர்த்து வச்சி பேசறியா?” என்று கேட்டாள்.
“இல்லை! இன்னும் ரெண்டு நாள் பேச மாட்டேன். அதுக்கும் சேர்த்துப் பேசறேன். அன்ட் அதைச் சொல்றதுக்குத்தான் ஃபோன் பண்ணேன்”
“ஏன்? எதுக்கு?”
“சென்னை போறேன்”
“ஹே! எங்க ஊருக்கு வர்ற!” என உற்சாகமாகச் சொன்னதும், “ம்ம் அப்படியும் சொல்லலாம்” என்று அவள் குரலின் துள்ளல் உணர்ந்தும், அதை உணர்த்தாத குரலில் சொன்னான்.
“மாறா! வாட் அபௌட் மீட்டிங்?” என கொண்டாட்டக் குரலில் கேட்டதும், “நல்லா திட்டிடப் போறேன். இது அபிஷியல் ட்ரிப். வேற வேலையும் இருக்கு” என்று மறுத்துவிட்டான்.
மேலும் அவனே, “சுடர்! உன்கிட்ட ஒரு முக்கியான விஷயம் கேட்கணும்னு நினைச்சேன்” என்று கருத்தாகக் கேட்டதும், “ம்ம்ம் கேளு” என்றாள்.
“அன்னைக்கு ஒரு யூடுயூப் சேனலுக்கு நியூஸ் எடிட் பண்றேன்னு சொன்னே-ல. அது மதி நியூஸ் சேனலா?” என்று தோராயமாக, அவனுக்குத் தோன்றியதால் கேட்டான்
“ஆமா! ஏன் கேட்கிற? நீயும் பார்த்தியா?”
“ம்ம் பார்த்தேன். பட் கேர்ஃபுல்லா பண்ணு. அந்தப் பையனையும் கேர்ஃபுல்லா இருக்கச் சொல்லு. சரியா?”
“சரி! சரி!” என்றவள், “காலேஜ் ஜூனியர் மாறா. ஹெல்ப் கேட்டான். அதான் செஞ்சி கொடுத்தேன்” என்று விளக்கமும் கொடுத்தாள்.
“வேற ஹெல்ப்-பே கிடைக்கலையா? இதெல்லாம் ரெப்புயூடட்(reputed) சேனலுக்கு பண்ணியிருந்தா, உனக்கு நல்ல நேம் கிடைச்சிருக்குமே?”
“பரவால்ல!” என்றவள், “அவனுக்கு வேற ஒரு ஹெல்ப் தேவைப்படுது. அதை நீ செஞ்சி கொடுக்கிறியா?” என்று கேட்டாள்
“நானா? நானெப்படி?” என திகைப்புடன் கேட்டதும், “ம்ம்! நீதான கலெக்டர்?” என்று திடமாகச் சொன்னாள்.
“அந்தப் பையன் வேற டிஸ்ட்ரிக்ட். அதான் கேட்டேன்?” என தன் தயக்கத்தின் காரணம் சொன்னான்.
“எந்த டிஸ்ட்ரிக்ட்-ல இருந்தாலும், இந்த ஹெல்ப் பண்ணலாம்”
“சரி! என்ன ஹெல்ப்-ன்னு சொல்லு?” என்று பொறுப்புடன் கேட்டான்.
“மதி சேனலுக்கு சப்ஸ்கிரைப்பரே இல்லை. ஸோ சப்ஸ்கிரைப் பண்ணிட்டு, அப்படியே பக்கத்தில இருக்கிற பெல் ஐகான் கிளிக் பண்ணிடேன்” என்று அவனது பொறுப்புணர்வை பொசுக்கென்று கலாய்த்துவிட்டாள்.
அமைதியாக இருந்தானா? இல்லை, பொறுமையாக இருந்தானா? என்று தெரியவில்லை. ஆனால் பதில் சொல்லாமல் இருந்தான்.
“திட்டணும்னு தோணுதா மாறா?” என சுடர் எடுத்துக் கொடுத்ததும், “இல்லை அடிக்கணும்னே தோணுது” என்று கடுகடுவென பேசினான்.
அவன் நிலையை நினைத்து, கலகலவென்று சத்தமாகச் சிரித்தாள். சற்று நொடிகள் கைப்பேசி வழியே வரும் காதலி சிரிப்பை ரசித்தான்.
என்ன நினைத்தானோ, “இப்படியே சந்தோஷமா இரு. அப்படியே கொஞ்சம் கேர்ஃபுல்லா-வும் இரு” என அன்பு, அக்கறை கலந்த குரலில் சொன்னான்.
“இதென்ன வித்தியாசமா பேசற?”
“தோணுச்சு” என்று மட்டும் சொன்னான். வெட்டவெளியில் தெரியும் மொத்த வானம் போல், அந்த ஒற்றைச் சொல்லில் அவனது ஒட்டுமொத்த காதலும் தெரிந்தது.
அந்தக் காதலை அருகிலிருந்து உணர நினைத்தவள், “மாறா! அன்னைக்கே பார்க்கணும்னு சொன்னேன். நீ கண்டுக்கவே இல்லை. சரி மீட் பண்ணத்தான் மாட்ட. டெய்லி பேசவாது செய்யலாம்-ல” என்று காதல் கோரிக்கை மனு ஒன்றை அளித்தாள்.
மனு பரிசீலனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது போன்றதொரு அமைதி அவனிடம்!
“ப்ரொபோஸ் பண்ணப்போ நீ சொன்னதை மறந்திட்டு கேட்கிறேனோ மாறா?”
“அதெல்லாம் ப்ரோபோஸ-லா சுடர்?” என்று கேட்டான், பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் பேசியது நினைவில் வந்ததால்!
உடனே, “இல்லைதான்” என்றாள். அதன்பின், “இல்லை, ப்ரொபஸல்தான்” என்றாள். கடைசியில், “சரியா சொல்லத் தெரியலை மாறா” என்றாள்.
அவள் பேச்சை ரசித்தவன், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்று அவள் மனம் செரிமானம் செய்ய முடியாதளவு காதலைக் குரலில் காட்டினான்.
அவன் காட்டிய காதலை விட ஒரு சிட்டிகை அதிகமாகக் காதலைக் காட்டும் குரலில், “மாறா” என்றாள். பின், “பை” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தாள்.
கைப்பேசியை வைத்ததுமே முன்னே இருந்த மேசையில் தலை கவிழ்ந்து கொண்டாள். இன்றே, இந்த நிமிடமே அவனைப் பார்க்க வேண்டும் என மனம் அடம்பிடித்தது.
உடனே, இதேபோல் கல்லூரி காலத்தில் அவனைப் பார்க்க நினைத்துச் சுற்றியது நியாபகத்தில் வந்தது.
காதல் ஓவியம் அத்தியாயம்– 6
மாறனை முதன் முதலாக பார்த்த நாளிலிருந்து அன்று வரை ஒரு நாளில் ஒரு முறையாவது அவனைப் பார்த்து விடுவாள். பக்கத்தில் இல்லையென்றாலும் தூரத்திலாவது பார்க்க நேரிடும்.
ஆனால் அன்று அவனைப் பார்க்க முடியவில்லை. ஆஷிக்கிடம் கேட்கலாம் என்று நினைத்தாள். அவனையும் பார்க்க முடியவில்லை. ‘ஏன்? என்னாச்சு?’ என்று புரியாமல், தெரியாமல் கல்லூரியைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.
‘பார்க்க முடியவில்லை’ என்ற எண்ணமே ‘பார்த்தே ஆகவேண்டும்’ என்ற அடத்தைக் கொடுத்திருந்தது. கடைசியில் மாறனைப் பார்க்காத அந்த நாள், கொடிய- நெடிய நாளாகவே சுடருக்கு முடிந்திருந்தது.
யாழோவியம் அத்தியாயம் – 7 தொடர்கிறது…
பாண்டிச்சேரி நினைவிலிருந்து மீண்டவள், சற்று நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தாள். பின், முன்னறையில் யாரோ வந்திருப்பது தெரிந்ததும் எழுந்து சென்று பார்த்தாள்.
அது தினா என்றதும், “வாங்க. நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“நல்லா இருக்கேன் சுடர்! அண்ணே எங்க? இதைக் கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று கையிலிருந்த கோப்பைக் காட்டினான்.
“இது என்ன ஃபைல் தினா?” என்று சுடர் கேட்கையில், “கட்சி சம்பந்தமான ஃபைல்” என ராஜா வேகமாக வந்து சொன்னான்.
மேலும், “சுடர் கிச்சன் பார்த்துக்கோ. நான் பேசிட்டு வர்றேன்” என்று சொல்லி, அவளை அங்கிருந்து கிளப்பினான்.
அவள் சென்றதும், தினா கையிலிருந்த கோப்பை வாங்கி, “நைட்-தான வரச் சொன்னேன்?” என்று பரபரப்பாகக் கேட்டவன், “சரி நீ கிளம்பு! அப்புறமா பார்க்கலாம்” என்றான்.
“சரி-ண்ணே!” என்று தினா கிளம்பிச் சென்றதும், அரக்க பறக்க ராஜா உள்ளே வந்தான். படபடவென ஒரு அலமாரியைத் திறந்து, அந்தக் கோப்பை ஒரு இழுப்பறைக்குள் வைத்து அடைத்தான்.
அதுவரைப் பிடித்து வைத்திருந்த மூச்சை, அதன் பிறகே நிம்மதியாக விடமுடிந்தது. சற்றுநேரம் அலமாரியைப் பிடித்துக் கொண்டு கண்மூடி நின்று கொண்டான்.
அப்படி நின்றவனை சமயலறையிலிருந்து பார்த்த சுடர், ‘கட்சி பேபேர்ஸ்-னா ஏன் இப்படி மறைச்சி வைக்கணும். அது என்னவா இருக்கும்!?’ என்று சந்தேகத்தில், அதுவரை இருந்த சந்தோசம் வடிந்து, சங்கடம் குடிகொண்டது.