YNM- 1

YNM- 1

மோகினி பிசாசு!

‘ஹே எத்தன சந்தோஷம்
தினமும் கொட்டுது உன்மேல..
நீ மனசு வச்சிப்புட்டா
ரசிக்க முடியும் உன்னால…

ரிப்பறிரப்பாரே..
ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே..
ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே..
ரிப்பப்ப ரபபப்பா..’

நெடுஞ்சாலையில் அதிவேகமாய் சென்று கொண்டிருக்கும் அந்த டஸ்டர் காரின் ஒளிப்பெருக்கியில் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது அந்த பாடல். உள்ளே வாலில்லாத குரங்குகள் போல ஐந்து பேர் கொண்ட குழு!

நம் நாயகனையும் சேர்த்து…

இளமை ஊஞ்சாலடும் வயது. இருபத்து நாலு முடிந்து இருபத்து ஐந்து தொடங்கியிருந்தது. எதை பற்றியும் கவலை இல்லாமல் வாழ்க்கையை அனுபவிப்பவதாக சொல்லி கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களின் கூட்டத்தில் சேர்த்தி அவன்!

படிப்பு முடித்து உடனே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஆன்ஸைட் என்று வெளிநாடுகள் எல்லாம் சுற்றி வந்துவிட்டான்.

சம்பாதித்த பணத்தை எப்படியெல்லாம் வீணாக செலவழிப்பது என்று அவனைதான் கேட்க வேண்டும். இந்த உலகின் அனைத்து சந்தோஷங்களையும் இளமையிலேயே அனுபவித்து பார்த்துவிட வேண்டுமென்பதே அவன் எண்ணம்!

அவன்தான் பரிமேலழகன்! பரி என்கிற பரிமேலழகன்!

ஒழுக்கம் என்றால் என்ன விலையென்று கேட்பான்.  அவன் அப்பா கலிவரதன் ஒரு கிரிமினல் லாயர். மனைவி தாமரை கணவனுக்கு அடங்கிய வீட்டையே வலம் வரும் உலகமறியா பெண்மணி!

கலிவரதனின் வசிப்பிடம் சென்னைதான். ஆனால் தாமரைக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி. பெரும் அரசியல் செல்வாக்கு படைத்த குடும்பத்தில் பிறந்தவர்.

தாமரையின் தந்தை மாடசாமி சிறந்த மேடை பேச்சாளர். பேறு பெற்ற அரசியல்வாதி. அதோடு அவர் கொஞ்சம் அதீத தமிழ் பற்றுடையவர். அதன் தாக்கம் மகன், மகள், பேரன், பெயர்த்திகளின் பெயர்களில் நன்றாக தெரியும்.

மாடசாமிக்கு இரண்டு மகன் ஒரு மகள். அதில் பெரியவர் விமலன். சின்னவர் சுசீந்திரன். கடைக்குட்டிதான் பரியின் அம்மா தாமரை.

மாடசாமி இறந்த பிறகு வந்த சொத்து பிரச்சனையில் பரியின் தந்தை கலிவரதனோடு விமலன் மற்றும் சுசீந்திரன் சகோதரர்களிடம் பெரும் மனாஸ்தபாம் உண்டானதில் கிட்டதட்ட பதினைந்து வருடம் மேலாக அந்த ஊர்பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை

எந்த சமாதான பேச்சுக்களும்  கலிவரதனிடம் எடுப்படவில்லை.

அவ்வப்போது தாமரை மட்டும் ஏதாவது குடும்ப விழாவிற்கு…

அதுவும் கலிவரதன் மனம் வைத்தால் வந்து போவார். அப்போதும் அண்ணன்களிடம் பேச கூடாது. வீட்டிற்கு போக கூடாது என்று கண்டிப்போடு சொல்லித்தான் அனுப்புவார்.

இருப்பினும் கணவனுக்கு தெரியாமல்  சில கொடுக்கல் வாங்கல்கள் அந்த பாசமலர்களுக்கு இடையில் இருந்து கொண்டுதான் இருந்தது. சகோதரர்களுக்கும் தங்கை மேல் கொள்ளை பாசம்.

ஆனால் இந்த ஆறு மாதத்தில் நிலைமையே வேறானது. தாமரையின் சகோதரர்களோடு கலிவரதன் இன்று ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டார்.

அதற்கு காரணம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு முடிந்து திரும்பும் கலிவரதனை அங்கேயே கொலை செய்ய சிலர் திட்டமிட, இந்த விஷயம் அறிய வந்த சுசீந்திரன் எப்படியோ தங்கை கணவனின் உயிரை காப்பாற்றிவிட்டார்.

பிறகு கலிவரதன் சமாதான புறாவை பறக்கிவிட்டு ஊருக்கு பலமுறை சென்று வந்தார். ஆனால் இப்போதுதான் முதல் முறை தன் தாய் ஊருக்கு செல்கிறான் பரிமேளழகன் என்கிற பரி!

பரி (குதிரை) போல அவனும் வேகமும் துருதுருப்பும் உடையவன். அவன்தான் அந்த காரை தற்போது இயக்கி கொண்டிருந்தான்.

பிரௌன் ஷார்ட்ஸ் அதற்கு பொருத்தமாக கருப்பு நிற டீஷர்ட் அணிந்து கொண்டிருக்க, அந்த உடையில் அவனை பார்க்கும் போதே அவன் தேகத்தின் உடற்கட்டுக்கள் அவனை கம்பீரமாக மிளரச் செய்தது.

அளவான மீசை. அலைபாயும் கேசம் ஹீரோ கெத்தில் ஒரு குறையுமில்லை. ஆனால் இந்த அறிமுகத்தோடு சேர்த்து ஒரு டிஸ்கிளைமர் போட்டேயாக வேண்டும். (புகைப்பழக்கமும் மதுபழக்கமும் உடல்நலத்திற்கு கேடு)

பரி தம் நண்பர்களோடு சேர்ந்து குதூகலத்தோடு பீர் சிகரெட் என்று படுஜோராக தன் பயணத்தை மேற்கொண்டிருந்தான். இதெல்லாம் பரிக்கு ஸ்டைல் என்று நினைப்பு. சில பிரபலமான நடிகர்கள் தொடங்கி அவன் தந்தை வரை எல்லோரிடமும் இந்த பழக்கத்தை பார்த்து தானும் பழக்கப்படுத்தி கொண்டான்.

அவன் கார் சென்னை செக் போஸ்டையெல்லாம் அசால்ட்டாக கடந்து வந்துவிட்டாலும் இப்போது சேலம் மாவட்டத்தின் நுழைவாயிலின் சாலையோரத்தில் நின்றிருந்த  காவலதிகாரியிடம் சிக்கி தொலைத்துவிட்டான். ஆனால் அதுக்கெல்லாம் அசறுபவன் அல்ல பரி!

எப்படியோ பேசி சமாளித்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை பரி நீட்டும் போது அந்த இடத்தை ஓர் உயர்ரக கார் கடந்து சென்று முன்னே நின்றது. முன்புறத்தில் ஒரு கட்சிக்கொடி படுசீற்றமாக பறந்து இப்போது சற்று தணிந்து அமைதி பெற்றிருந்தது.

வெள்ளை வேட்டி  சட்டையோடு பெருத்த மீசை பருத்த உடலோடு கம்பீரமாக நடந்து வந்தவர்  பரியை நெருங்கி, “ஏன் மாப்பிள்ளை… ஏன் இங்க நிற்குறீங்க?” என்று பதட்டமாக கேட்கவும் அவரை குழப்பமாக ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தான் பரி. அவனுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

அதற்குள் அந்த வெள்ளை வேட்டி மனிதர் பரி சொல்லாமலே நிலைமையை புரிந்து  காவலாளிகளை படுதீவிரமாக  முறைத்து, “என்ன… என் மாப்பிள்ளைகிட்ட என்ன உங்களுக்கு?” என்று கேட்க,

“அய்யய்யோ! இல்லைங்க ஐயா… தம்பி குடிச்சிட்டு வண்டி ஓட்டின்னு வந்திருக்காப்ல… அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தோம்” என்றதும் அவர் பரியிடம் தன் பார்வையை ஒரு மாதிரியாக திருப்பினார்.

அவன் அலட்சியமாக நின்று கொண்டிருந்தான்.

“குடிச்சிருக்கீங்களா மாப்பிள்ளை?” என்று தாழ்வாக அவன் காதோரம் வினவ,

“ஏன்… நீங்கெல்லாம் குடிக்க மாட்டீங்களா?” என்று எகத்தாளமாக அவரை பார்த்து கேட்டான் பரி!

அந்த மனிதர் முகத்தில் அத்தனை கடுப்பு!

‘வரதன் மாமாவோட ஜெராக்ஸா இருப்பான் போல’ என்று மனதில் தோன்றிய எண்ணத்தை மறைத்து கொண்டு

அங்கிருந்த காவலாளிகளிடம் அவர் கண்ஜாடையால் ஏதோ சொல்ல அவர்கள் பயபக்தியோடு, “நீங்க போகலாம் சார்” என்றனர் பரியிடம்!

அவர் உடனே பரியின் புறம் திரும்பி, “உங்க வண்டியை ஓட்ட நான் நம்ம டிரைவரை அனுப்புறேன் மாப்பிள்ளை” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“அதெல்லாம் வேண்டாம்… ஐ கேன் மேனேஜ்” என்றான் அலட்சிய தொனியில்!

“அப்படின்னா சரிங்க மாப்பிள்ளை… நீங்க என் வண்டியை ஃபாலோ பண்ணி வந்திருங்க” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தார்.

பரி அந்த காவலர்களை பார்த்து ஐநூறு ரூபாயை மீண்டும் நீட்டி, “வைச்சுக்கோங்க” என்க,

“அய்யோ வேண்டாம்… சுசி ஐயா கொன்னுடுவாரு” என்று மிரண்டு ஒதுங்கினர்.

பரி அவர்களை யோசனையாக பார்த்துவிட்டு மீண்டும் தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு, “இவர்தான் சின்ன மாமாவோ?” என்று தனக்குள்ளேயே கேட்டு கொண்டிருக்கும் போதே,

“யாருடா அந்த வெள்ளை வேட்டி? பயங்கரமா இருக்காரு?”  என்று அவன் நண்பர் குழுவில் ஒருவன் கேட்க,

“என் மாமா” என்று சொல்லி கொண்டே காரை எடுத்தவன் வேகமெடுத்து தன் மாமா சொல்வதை கேட்க கூடாதென்றே அவர் காரை முந்தியடித்தான்.

சுசீந்திரனுக்கு அவன் செயல் எரிச்சலை வரவழைத்தாலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலைமை!

பரியின் கார் ஊருக்குள் நுழைந்து அந்த பிரமாண்டமான வீட்டு வாயிலில் வந்து நின்றது.

உள்ளே ஓரே போல இரண்டு வீடுகள் அருகருகே இருந்தது. என்னதான் விமலனும் சுசியும் ஒற்றுமையாக இருந்தாலும் ஓரகத்திகள் அப்படி இருக்க வேண்டுமே!

பெரியவர் விமலனின் மனைவி மஞ்சுளாவும் சின்னவர் சுசீந்திரனின் மனைவி வஸந்தியும் எதிரும் புதிரும். ஆதலால்தான் இருவருக்கும் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனி வீடு. தனித்தனி சமையல்.

ஆனாலும் சகோதரர்களுக்கிடையில் இன்று வரை எந்தவித பிரிவினையும் இல்லை.

அதேநேரம் விமலன் சுசீந்திரன் ஒற்றுமையை பற்றி அந்த ஊரறிந்தது. அண்ணன் தம்பி என்றால் அப்படி இருக்க வேண்டுமென்பார்கள். அரசியல் அடிதடி மற்றும் சாதி கலவரம் செய்வது. இதுதான் அவர்களின் முக்கிய வேலையே.

சாதிக்காக உயிரையும் எடுப்பார்கள். உயிரையும் கொடுப்பார்கள். தங்கள் சாதியை மட்டும் எக்காரணம் கொண்டு விட்டுத்தர மாட்டார்கள்.

ஆகையால் சாதி பிரச்சனை என்றால் அவர்களுக்கு பெரும்பாலும் வாய் பேசாது. அரிவாள்தான் பேசும். ஊரையே ரத்தகளரியாக்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

பரி வீட்டினுள் காரை நுழைக்க வாழை மர தோரணம் சீரியல் பல்பு அலங்காரம் எல்லாம் படுஜோராக இருந்தது.

“என்னடா மச்சி? வீட்டுல ஏதாச்சும் விசேஷமா?” என்றவன் நண்பன் சமீர் கேட்க,

“ஹ்ம்ம்… எனக்கு கல்யாணம்” என்று பரி அலட்சியமாக சொன்ன விதத்தில் அவன் நண்பர்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டனர்.

சில நொடிகள் தாமதித்து, “என்னடா சும்மா ஊரை சுத்தி பார்க்கலாம்னு எங்களை கூட்டிட்டு வந்துட்டு இப்போ உனக்கு கல்யாணங்கிற… நிஜமாவா டா?” என்றவர்கள் அதிர்ச்சி மாறாமல் கேட்க,

“ப்ச்… இப்போ எதுக்கு இந்த ஷாக் ரியாக்ஷன்? வாங்கடா வீட்டுக்குள்ள போகலாம்” என்று அழைத்துவிட்டு உள்ளே செல்ல, சுசீந்திரன் கார் பின்னோடு சீறி கொண்டு வந்து வாயிலிற்குள் நுழைந்தது.

சுசீந்திரன் வேகமாக இறங்கிவந்து, “மாப்பிள்ளை!” என்றழைக்க,

பரி கடுப்பாக திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தான்.

“இப்படியே உள்ளே போகாதீங்க மாப்பிள்ளை… ரூமுக்கு போய் குளிச்சி கிளிச்சி நல்லா” என்றவர் சொல்லி கொண்டே, “வீட்டில சொந்தகாரவங்க எல்லாம் இருக்காவுங்க” என்று தயக்கமாக இழுத்தார்.

அவன் சரியென்று கூட ஒரு வார்த்தை சொல்லாமல் திரும்பி நடக்க, சுசீந்திரன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!

அதேநேரம் பரியை பார்த்துவிட்டு தாமரை ஓடிவந்து மகனை அணைத்து கொண்டார்.

“என்ன ராசா? கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வந்திருக்கலாம்ல” என்று கேட்க, ஒரே மகனென்ற செல்லம் அவர் செய்கையில் நன்றாக தெரிந்தது.

“அதான் வந்துட்டேன் இல்ல” என்று சொன்னவன் தன் நண்பர்களை திரும்பி உள்ளே அழைக்க தாமரையும் முகமன் கூறி அவர்களை மரியாதையாக வரவேற்றார்.

“ம்மா… எங்க பிரைவஸியை டிஸ்டர்ப் பண்ணாத மாறி நானும் என் பிரெண்ட்ஸும் தங்க தனியா ஒரு ரூம் வேணுன்னு சொன்னேனே” என்றவன் அதிகாரமாக கேட்க,

“மாடில கடைசி ரூம்… உனக்காகவே மாமா  கிளீன் பண்ணி வைக்க சொல்லி இருக்காரு” என்றவர் முடிக்கும் போதே மாடி படிக்கெட்டை பார்த்தவன் விறுவிறுவென ஏறி கொண்டே,

“வாங்கடா” என்று நண்பர்களை அழைத்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான்.

வசதியாக விசாலமாக அவனும் அவன் நண்பர்களும் தங்க ஏற்றவாறு இருந்தது அந்த அறை. அதனை சுற்றும் முற்றும்
பரி பார்வையிட்டு கொண்டிருக்க,

“என்ன மச்சி? கல்யாணம்னு ஒரு வார்த்தை கூட சொல்லல… இன்விடேஷன் கொடுக்கல” என்று மீண்டும் அவன் நண்பன் ஒருவன் கேட்டான்.

“இப்ப அது ரொம்ப முக்கியமா? கம்னு படுங்கடா… லாங்க டிரைவ் பண்ணிட்டு வந்தது ரொம்ப டையர்டா இருக்கு” என்று படுக்கையில் சரிந்தான் பரி!

அப்படியே அவன் உறங்கியும் விட அவன் நண்பர்கள் அவனின் திருமண விஷயத்தை பற்றி தங்களுக்குள் அங்கலாய்த்துவிட்டு அவர்களும் உறங்கிவிட்டனர்.

அந்தி சாய்ந்தது. மெல்ல கண்விழித்த பரி அயர்ந்து உறங்கும் தம் நண்பர்களை தொந்தரவு செய்யாமல் குளியலறையில் புகுந்து அலுப்பு தீர ஒரு குளியலை போட்டு துண்டால் தலையை துவட்டி கொண்டே வெளியே வந்தான்.

வீட்டை சுற்றி உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் கூட்டம். பந்தியில் இரவு உணவு உண்ண பந்தலின் கீழே கூட்டமாக குழுமியிருந்தனர்.  சமையலும் அங்கேயே நடந்து கொண்டிருந்தது.

ட்ரேக் பனியன் அணிந்து கொண்டு அவன் மேலே நின்று கொண்டு அவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருக்க,

அவன் மாடியில் நின்று கொண்டிருப்பதை விசித்திரமாக சிலர் பார்த்தும் வைத்தனர். யாரையும் அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

கடைசியாக அவன் அந்த ஊருக்கு வரும் போது ஏழு வயதிருக்கும். உறவினர்கள் யாரையும் அவனுக்கு பெரிதாக நினைவில்லை. ஏன்? அவனின் சொந்த தாய்மாமன்களையே அவனுக்கு இன்று அடையாளம் தெரியவில்லை.

கலிவரதன் தன் மகனோடு தாமரையின் சொந்தங்கள் யார் தொடர்பும் இல்லாமல்தான் வைத்திருந்தான். ஆனால் இப்போது திடீரென்று மச்சான்கள் பாசம் பொங்கிவழிந்தது. அதுவும் அவர்கள் இவர் உயிரை காப்பாற்றியதினால்!

கலிவரதனுக்கு வேண்டாமென்றால் மொத்தமாக யாரும் வேண்டாம். வேண்டுமென்றால் அப்படியே ஓட்டி உறவாடுவர்.

பெரியவர் விமலனுக்கு மூன்று பிள்ளைகள். அமுதன், இளமாறன் கடைசியாக ஒரு மகள் சௌந்தர்யா. கலிவரதன் சௌந்தர்யாவை தன் மகன் பரிக்கு பெண் கேட்க, மாமனிடம் எப்படி முடியாதென்று சொல்ல முடியும். சம்மதிக்க வேண்டிய நிர்பந்தம். அதேநேரம் பரி படிப்பு முடித்து நல்ல வேலை, சம்பளமென்று இருந்ததால் மறுக்க அவர்களுக்கு காரணமுமில்லை.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் போது பரி கெனடாவில் இருந்தான். தாமரைதான் மகனிடம்  கைப்பேசியில் கெஞ்சி சம்மதம் வாங்கினர். அதுவும் தன் தாய் வீட்டினர் உறவை தொடர கடவுளாக கொடுத்த அரிய வாய்ப்பு இது. அதை அவர் நழுவ விட்டுவிடுவாரா என்ன?

அதேநேரம் பரியும் சுலபமாக சம்மதிக்கவில்லை. சௌந்தர்யா போட்டோ மற்றும் கைப்பேசி எண்ணெல்லாம் வாங்கி அவளிடம் தெளிவாக பேசிய பின்னே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான்.

இன்னும் சௌந்தர்யாவை அவன் நேரில் பார்த்ததில்லை எனினும் வீடியோ கால் மூலமாக இருவரும்  பார்த்து பேசியிருக்கிறார்கள்.

அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் விரைவாக நடைப்பெற ஊரிலேயே நிச்சியதார்த்தம் திருமணம் யாவும் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வைப்பதாக முடிவானது.

அவன் கெனடாவிலிருந்து ஒரு வாரம் முன்னதாகதான் வந்திருந்தான். தாமரையும் கலிவரதனும் இரண்டு நாள் முன்னதாக ஊர் வந்து சேர்ந்துவிட அவன் தன் அலுவல் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்துசேர்ந்தான்.

ஆனால் அவனுக்கு திருமணம் என்றவாறு யாருக்கும் ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை. அவன் முகத்தில் திருமண பூரிப்பு கொஞ்சமும் இல்லை.

அறையிலிருந்து தன் பேசியை எடுத்த பரி சௌந்தர்யாவிற்கு பலமுறை அழைக்க, அவள் எடுக்கவில்லை. யோசனையோடு கீழே  இறங்கி வந்தவன் யார் கவனத்தையும் ஈர்க்காமல் பின்கட்டு வழியாக சென்று பெரிய தோப்பிற்குள் காலார நடக்க தொடங்கினான்.

மாமரம் புளியமரம் தென்னை மரங்கள் என்று சூழ அந்த இடமே இருள் கவ்வியிருந்தது. அந்த தோப்பும் கூட அண்ணன் தம்பிகளுக்கு சொந்தமான இடம்தான்.

பரி அந்த தோப்பிற்குள் நடந்து செல்வதை பார்த்த பெரியவர், “அய்யோ! தம்பி இந்த இருட்டில  தோப்பு பக்கம் போக கூடாது” என்று அஞ்சிய தோரணையில் சொல்ல,

“ஏன்?” என்று புருவங்களை சுருக்கினான்.

“காத்து கருப்பு அடிச்சிடும்… இங்க மோகினி நடமாட்டமெல்லாம் இருக்கு… ஆள் வேற வாட்டசாட்டமா இருக்கீங்க” என்றவர் அஞ்சிய தோரணையில் சொல்ல அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.

“எந்த மோகினியும் என்ன ஒண்ணும் பண்ணாது… நான் வேணா அதை ஏதாச்சும் பண்ணலாம்” என்று கேலி செய்து  நகைத்தபடி சொல்லிவிட்டு அவரை கடந்து உள்ளே நடந்தான்.

அந்த பெரியவர் ஏதோ புலம்பி கொண்டே சென்றுவிட கொஞ்ச தூரம் நடந்த பரி சிகரெட்டை பற்ற வைத்து புகைக்க ஆரம்பித்து கொண்டே ஒரு பெரிய மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான். காற்று பலமாக வீசியது.

அந்த கும்மிருட்டில் வெள்ளை உடையில் ஆக்ரோஷமாக ஒரு பெண் ஓடி வர, அவளின் கால் சலங்கை ஒலி அந்த இடம் முழுக்க அதிர்ந்தது.

“ஹே! உன்னை விட மாட்டேன்” என்று பெரும் கூச்சலிட்டு கொண்டு கையில் கம்போடு ஆவேசமாக ஓடி வந்து கொண்டிருந்த அந்த பெண் உருவத்தை பார்த்து அவனின் சர்வாங்கமும் ஆடியது.

இதய துடிப்பு கூட ஒரு நொடி நின்று போன உணர்வு!

‘ஒரு வேளை அந்த தாத்தாகிட்ட  நம்ம கிண்டலா சொன்னதை இந்த மோகினி பிசாசு கேட்டிருக்குமோ?!’ என்று அவன் அச்சத்தோடு எச்சிலை கூட்டி விழுங்க,

பேய் பிசாசு நம்பிக்கை எல்லாம் சுத்தமாக இல்லாத பரிக்கு ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று எண்ணம் தோன்ற, அரண்டு போய் நின்றுவிட்டான் பரி.

error: Content is protected !!