YNM- 5

5

கொலைவெறி

சுசீந்திரனால் பரியை குறித்து எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை. அவனை பற்றி தம்முடைய ஆட்களை வைத்து அவர் விசாரிக்க சொல்லியிருந்தார். ஆனால் அதனாலும் அவருக்கு பெரிதாக  உபயோகமில்லை.  அவர் எதிர்ப்பார்த்தளவுக்கு எந்தவித தவறான தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனால் அவனின் நடவடிக்கையில் பார்க்கும் போது அவருக்கு சந்தேகம் வலுத்து கொண்டே போனது.

அதுவும் மகிழினியை அவன் பார்க்கும் பார்வையே சரியில்லையென்று தோன்றியது. அதை எப்படி தன் தமையனிடம் சொல்வது என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார். அதுவும் அவர்களின் அண்ணன் தம்பி உறவுக்குள் எந்தவித விரிசல்களும் வருவதை சுசீந்திரன் விரும்பவில்லை.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அதுதான் அவரின் முக்கிய கவலையும் கூட. பரியை சௌந்தரியாவிற்கு பேசி இருக்கும் போது அவன் இப்படி மகிழினையை நோட்டம்விட்டால் அது தமையனின் மகளின் வாழ்விற்கு பிரச்சனை என்பதோடு அல்லாமல் தனக்கும் தமையனுக்குமான உறவையும் சேர்த்தே பாதித்துவிடும் என்று அஞ்சி கொண்டிருந்தார்.

ஆனால் இது குறித்தெல்லாம் பரிக்கு கொஞ்சமும் அக்கறையில்லை. அவனின் எண்ணமும் பார்வையும் முழுவதுமாக மகிழினி மீதுதான்!  சமீர் அவனை பலமுறை எச்சிரிக்கை செய்தும் அவன் அடங்கியப்பாடில்லை.

சமீருக்கே தன் நண்பனின் செயல்பாடுகள் இயல்பை விடவும் ரொம்பவும் வித்தியாசமாக இருப்பதாக தோன்றியது. அதுவும் அவனுக்கு திருமணம் பேசி முடித்த சௌந்தரியாவிடம் ஆசையாக அவன் பார்த்து பேசுவதாக கூட தெரியவில்லை. ஆனால் அதேநேரம் அவனே சௌந்தர்யாவிடம் இயல்பாக பேசி சிரிப்பதும் கூட உண்டு. இருப்பினும் அவன் உணர்ச்சி ததும்ப காதலோடு பார்ப்பதெல்லாம் மகிழினியை  மட்டும்தான்.

அலுவலகத்தில் கூட பெண்களை அவன் பின்னே சுற்றவிட்டுத்தான் பரிக்கு பழக்கம். அந்த வகையில் அவன் தன் இயல்பு தன்மையிலிருந்து  மகிழினி விஷயத்தில் ரொம்பவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறான் என்றே தோன்றியது சமீருக்கு.

அது மட்டுமல்லாது அவர்கள் வீடு முழுக்கவும் கல்யாண கலை கட்டி தொடங்கியிருந்தது. குலதெய்வம் கோவிலில் பத்திரிக்கை வைத்து வழிப்பாடு. உறவினர்களின் வருகை. பந்தக்கால் நடப்பட்டு மாப்பிள்ளை பெண்ணிற்கு நலங்கு என்று எல்லாமே அத்தனை கோலாகலமாக கலாட்டாவாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஆனால் பரி இது எதிலும் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை என்பதை அவன் முகமே காட்டி கொடுத்தது. திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷம். மணமகன் மணமகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் ரொம்பவும் சிறப்பான அழகிய நாட்கள்.

ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையை கொஞ்சமும் அனுபவிக்காத நண்பனை கண்டு கோபம் கொள்வதா அல்லது பரிதாபம் கொள்வதா என்று சமீருக்கு புரியவில்லை. இது குறித்து நேரடியாக நண்பனிடம் கேட்டுவிட வேண்டுமென்று முடிவோடு,

அன்று இரவு  தனியாக அறையின் வாசலில் சிந்தனையில் அமர்ந்திருந்த பரியிடம் சென்றான்.

“டே மச்சி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சமீர் சொல்ல,

“நாளைக்கு கிளம்பிடாலாம் மச்சி… நீ டென்ஷனாகாம போய் தூங்கு” என்றான்.

“கிளம்பறது ஒருபக்கம் இருக்கட்டும்… நீ உன் மனசுல என்னதாண்டா நினைச்சிட்டு இருக்க?” என்றவன் நண்பனிடம் காட்டமாக வினவ,

“என்ன?” என்று பரி புருவத்தை நெறித்தான்.

“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா நீ முதலயே உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி இருக்கணும்… அதை விட்டுட்டு இங்க வந்து கல்யாண பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்டா” என்று சமீர் கோபமாக சொல்ல,

“கொஞ்சம் பொறுமையா பேசுடா” என்று பரி அவனை அடக்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

அதன் பின் பரி வேகமாக சமீரை அறைக்குள் இழுத்துவந்து கதவையடைத்தான். இத்தனை நாள் இல்லாமல் இன்று பரி முகத்தில் கலவரம் குடிகொண்டிருந்ததை பார்க்க சமீருக்கு வியப்பாக இருந்தது.

அறைக்குள் அவர்களின் நண்பர்கள் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.

“என்ன பேசணும் உனக்கு… இப்ப சொல்லு” என்று பரி கேட்க,

அவனின் முகபாவனைகளை ஆழ்ந்து பார்த்த சமீர் எள்ளிநகையாடி,

“நீயா மச்சி பயப்படுற… அப்பட்டமா பொண்ணோட தங்கச்சியை எல்லோர் முன்னாடியும் சைட் அடிச்சிட்டு… அதுவும் அவங்க ரவுடி அப்பன் முன்னாடியே” என்று கேட்டு மேலும் சிரித்தான்.

“எனக்கு அவளை பிடிச்சிருக்கு… நான் அவளை பார்த்தேன்… எப்படி பார்த்தாலும் அவளும் எனக்கு மாமன் பொண்ணுதானே” என்றான்.

“சரிதான்டா… அப்போ அவளை கட்டிக்கிறேன்னு எல்லோர் முன்னாடியும் சொல்லிட வேண்டியதுதானே!”

“எதுக்கு அவசரம்? அவ இப்பதான் காலேஜ் சேர போற… படிச்சி முடிக்கட்டும்… அப்புறம் பேசிக்கலாம்… ஆனா எப்படி பார்த்தாலும் நான்தான் அவளை கட்டுவேன் எனக்கு அவதான் பொண்டாட்டி… நான் அந்த விஷயத்துல முடிவா இருக்கேன்” என்று பரி தீர்க்கமாக சொல்ல,

“அப்போ இந்த கல்யாணம்?” என்று சமீர் குழப்பமுற கேட்டான்.

“அது நடக்காது” என்று அலட்சியமாக உரைத்தான் பரி.

“அந்த பொண்ணு பாவம் இல்லையா மச்சி?” இரக்கத்தோடு கேட்ட நண்பனை பார்த்து சூட்சமமாக சிரித்தான் பரி.

“யார் பாவம்… பாவம் இல்லன்னு நாளைக்கு காலையில தெரிஞ்சிரும்… நீ கம்னு படுத்து தூங்கு” பரி சொல்ல சமீர் மெளனமாக நண்பனை பார்த்தான்.

பரி அதற்கு மேல் அந்த விவாதத்தை வளர்க்க விரும்பாமல் தன் பேசியை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியே செல்ல,

“எங்கடா போற?” என்று சமீர் கேட்கவும், “ஃபோன்ல சிக்னல் கிடைக்கல ஒரு முக்கியமான கால் பேசிட்டு வந்திடுறேன்… நீ படு” என்றான்.

சமீர் யோசனையோடு தலையணையில் படுத்து கொண்டாலும் அவன் விழிகளை அத்தனை சீக்கிரத்தில் உறக்கம் தழுவவில்லை. நண்பன் வருகைக்காக காத்திருந்து வெகுநேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன் பின் தன்னையறியாமல்  உறக்கநிலைக்கு சென்றுவிட்டான்.

ஆனால் அவன் நிம்மதியான தூக்கத்தில் கல்லை போட்டது போல சுசீந்திரன் அவர்ஆட்களோடு வந்து இவனை குண்டுக்கட்டாக தூக்கி போய் பின்னே இருந்த தோப்பில் பெரிய குழியாக வெட்டி மண்ணை அள்ளி போட்டு மூட, அவனுக்கு மூச்சு முட்டியது.

“வேண்டாம்… வேண்டாம்… என்னை விட்டிருங்க…  மச்சி என்னை காப்பத்துடா” என்று ஊரையே கூட்டுமளவுக்கு பயங்கரமாக கத்தினான் சமீர்.

“சமீர் சமீர் சமீர்” என்று அவனை போட்டு நாலைந்து கரங்கள் ஒரே மொத்தமாக உலுக்கி எடுக்க, மிரள மிரள விழித்தெழுந்து எல்லோரையும் குழப்பமாக பார்த்தான்.

சமீர் தெளிவற்ற நிலையில் பரியை பார்த்து, “என்னை காப்பத்த வந்துட்டியா மச்சி?” என்று கேட்க,

“இல்ல… உன்னை கொல்ல வந்திருக்கேன்… இவன் மண்டையிலேயே எதையாச்சும் போடுங்கடா… நல்லா தூங்கிட்டிருந்தா காது கிட்ட வந்து கத்தி எழுப்பிவிட்டான்” என்று பரி ஆவேசமாக பேச, அப்போதே கொஞ்சம் தெளிவு நிலைக்கு வந்தான் சமீர்.

அப்போது அவனை சுற்றி நின்றிருந்த நண்பர்கள் எல்லாம் கொலைவெறியோடு அவனை பார்த்து கொண்டு நின்றனர்.

“சாரி டா… கனவு”என்று சமீர் அசடு வழிய ஒரு புன்னகையை உதிர்க்க,

“இவனை போடுங்கடா” என்று எல்லோரும் சேர்ந்து தலையணையால் சமீரரை மூச்சு திணற திணற அடித்தனர்.

அப்போது அவர்கள் அறை வாசலில் வந்து நின்ற தாமரை, “பரி” என்று படபடப்போடு அழைக்க, அவர்கள் எல்லோரும் தாமரையை திரும்பி நோக்கினர்.

“இருங்க டா அம்மா கூப்பிடுறாங்க… போய் பேசிட்டு வந்திடுறேன்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு பரி தன் தாயின் அருகில் சென்றான். அவர் முகத்தில் அத்தனை படபடப்பு!

அவனை தனியாக அழைத்து சென்ற தாமரை மகனிடம் எப்படி அந்த விஷயத்தை சொல்வது என்று புரியாமல் திணறி திணறி பின் மெல்ல சொல்லி முடித்தார். அதோடு அவர் கண்ணீர் விட்டு அழ, பரி அவர் தோளை தடவி சமாதானம் செய்ய, அவ்வப்போது அவர் மகனின் முகத்தை பார்த்து நடுக்கத்தோடு ஏதோ சொல்லி வேதனையுற்று அஞ்சி கொண்டிருந்தார்.

அங்கே வந்த சமீருக்கு அவர்கள் பேச்சுவார்த்தை வெறும் ஊமை படமாகத்தான் தெரிந்தது. ஒரு வழியாக பரி தன் அம்மாவை சமாதானப்படுத்தி கீழே அனுப்பி வைத்தவன் அங்கே ஒதுங்கி நின்றிருந்த சமீரை பார்த்து,

“போய் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணுங்க… கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் செல்ல போக சமீர் நண்பனின் சட்டையை பிடித்து கொண்டான்.

“என்னடா பண்ண?” என்றவன் ஆக்ரோஷமாக கேட்க,

“நான் ஒன்னும் பண்ணல மச்சான்” என்றான் பரி சாதாரணமாக!

“பொய் சொல்லாதே… நீதான் ஏதோ பண்ணி இருக்க… என்னடா நடந்துச்சு?” என்றவன் மீண்டும் அழுத்தி கேட்க, தன் நண்பனை அறைக்குள் இழுத்து கொண்டு வந்து நிறுத்தி கதவை மூடினான் பரி.

“டே! என்ன நடக்குதுன்னு கேட்கிறேன் இல்ல… சொல்லுடா” என்று சமீர் அழுத்தமாக கேட்க,

“கல்யாண பொண்ணு ஓடி போச்சு… விடிஞ்சதுல இருந்து காணோமா? தேடிட்டு இருக்காங்க” என்றான் பரி.

சமீர் உட்பட எல்லோரும் அதிர்ச்சி நிலையில் உறைந்து நிற்க, பரி மட்டும் கொஞ்சமும் அதிர்ச்சி இல்லாமல் தன் துணிகளை பெட்டிக்குள் எடுத்து வைத்தான்.

அதோடு அவன் தன் நண்பர்களை பார்த்து, “இந்த பிரச்சனை பெருசாகி வெடிக்கிறதுகுள்ள எதாச்சும் காரணம் சொல்லி நம்ம முதல்ல கிளம்பிடணும்” என்று தெளிவாக உரைத்தான்.

“டே” என்று சமீர் எதோ கேட்க எத்தனிக்க, “ப்ளீஸ் மச்சான்… எது கேட்கிறாத இருந்தாலும் நம்ம வண்டில புறப்பட்ட பிறகு கேளு… இப்ப வேண்டாம்” என்று முடித்துவிட்டான் பரி!

அவர்கள் யாராலும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மெளனமாக தங்கள் பொருட்கள் துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் குழப்பம் படர்ந்திருந்தது.

அதேநேரம் விமலன் வீடே களேபரமாக இருந்தது. சுசீந்திரனும் விமலனும் கொலை வெறியோடு நின்றிருந்தனர். சௌந்தர்யாவின் தமையன் அமுதனும் இளமாறனும் அவர்களின் ஆட்களோடு ஆளுக்கொரு  காரில் புறப்பட்டனர்.

விமலானோ மனைவி என்றும் பாராமல் மஞ்சுளாவை வெறியோடு தாக்க, சுசீந்திரன்தான் இடையில் புகுந்து தமையனை தடுத்தார்.

“அண்ணியை அடிச்சு என்ன ண்ணே ஆக போகுது… புள்ளை இப்படி பண்ணும்னு நம்ம மட்டும் எதிர்ப்பார்த்தோமா? அதுவும் இத்தனை ஆளுங்க இருந்தும் ஏமாத்திட்டு போயிருக்காளே” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,

விமலன் வெறியோடு, “எவ்வளவு நெஞ்சழுத்தம் அவளுக்கு… சொந்தக்காரன் மாமன் மச்சான் அங்காளி பாங்களின்னு எல்லாம் வீட்டில கல்யாணத்துக்காக கூடி இருக்காங்களே தம்பி… இப்படி பண்ணிட்டாளே டா… கடைசி வரைக்கும் கமுக்கமா இருந்துட்டு இப்படி கழுத்தை அறுத்துட்டாளே! அவ கிடைச்சா அப்படியே கண்டம் துண்டா வெட்ட சொல்லுங்கடா” என்று வெறியோடு புலம்பி  கொண்டிருந்தார் விமலன்!

சுசீந்திரனுக்கும் அதே அளவு கோபமும் வெறியும் இருந்தது. அண்ணன் மகள் திருமணம் என்று ஒரு வாரமாக ஊரையே அழைத்து சாப்பாடு போட்டு ஒரு திருவிழா போலத்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் அவள் இப்படி செய்துவிட்டு போவாள் என்று அவரும் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் சுசீந்திரன் நிதானமான பேர்வழி. எப்படி இந்த பிரச்சனையை சமாளிப்பது என்று நின்று நிதானமாக யோசித்து கொண்டிருந்தார்.

அதுவும் ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான்.  யாரும் இவர்கள் முன்பு ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். ஆனால் முதுகுக்கு பின்னாடி சென்று நிச்சயம் அசிங்கப்படுத்திவிடுவார்கள். அந்தளவுக்கு அந்த ஊரையே சாதி பெயரை சொல்லி அண்ணன் தம்பிகள் இருவரும் ஆட்டிவைத்திருந்தார்கள். அதுவும் அந்த ஊரில் சாதி மாறி திருமணம் நடந்தால் நிச்சயம் அங்கே ஒரு கொலை நடக்கும்.

அப்படியான அவர்கள் வீட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சும்மா விடுவார்களா?

ஆனால் எல்லாவற்றையும் விட அந்த சகோதரர்களின் பெரிய பிரச்சனை அவர்களின் தங்கை கணவன் கலிவரதன்தான். இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிந்தால் செத்தான்டா சேகர்!

‘என் கௌரவம் போச்சு’ ‘என் மானம் போச்சு’ என்று பேசியே கொன்றுவிடுவார். அவர்களின் நல்ல நேரம். கலிவரதன் அப்போது அங்கே இல்லை. ஒரு வழக்கு விஷயமாக அவசரமாக சென்னை சென்றிருந்தார். நிச்சயம் அன்று மாலை அவர் திரும்பிவிடுவார். அதற்குள்ளாக சௌந்தர்யாவை கண்டுப்பிடித்து ஆக வேண்டுமென்ற நெருக்கடியில் இருந்தனர்  அந்த சகோதரர்கள் இருவரும்!