YNM- 7
YNM- 7
7
திருமணம்
இத்தனை வேகமாக ஒரு திருமணம் தனக்கு ஏற்பாடாகுமென்று மகிழினி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று கூட அவள் கனவிலும் கூட யோசித்து பார்த்ததில்லை. வேண்டாமென்று சமிஞ்சை செய்தும் பரி சம்மதம் சொன்னது ஒருபுறம் அவளுக்கு அதிர்ச்சியென்றால் அவளிடம் வார்த்தைக்கு கூட யாரும் சம்மதம் கேட்கவில்லை என்பது இன்னொருபுறம் பெருத்த வேதனையாகவும் வலியாகவும் இருந்தது.
சுசீந்திரனின் மனநிலையிலும் ஒரு வகையில் அப்படிதான். அவருக்கு பரியை கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருக்கும் ஒரே மகளுக்கு அவனை போன்ற ஒருவனை மருமகனாக ஏற்க அவர் துளியளவும் விரும்பவில்லை எனினும் அண்ணன் சொன்ன வார்த்தையை தட்ட முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி கொண்டார்.
ஆனால் தன் மனைவி வசந்தா நிச்சயம் இதற்கு ஒத்து கொள்ளவே மாட்டார் என்று எதிர்ப்பார்த்தார். எப்படியாவது அவரை வைத்து இந்த திருமணம் நடக்காமல் செய்த விடலாம் என்ற அவர் எண்ணத்தில் லாரி லாரியாக மண்ணள்ளி போட்டுவிட்டார் வசந்தா!
திருமணதிற்கு சந்தோஷமாக சம்மதம் சொல்லிவிட்டார். பரியின் படிப்பு அழகை பார்த்து தன் ஓரகத்திக்கு இப்படி ஒரு மருமகனா என்று ஏற்கனவே வசந்தாவிற்குள் பொறாமை தீ பற்றி கொண்டு எரிந்தது. இப்போது அந்த அதிர்ஷ்ட காற்று அவர் திசையில் அடிக்கும் போது வேண்டாமென்றா சொல்லுவார்.
அதுவும் சுசீந்திரன் மகளை அடிக்க கை ஓங்கும் போது பரி வந்து மகிழினிக்கு ஆதரவாக பேசியது வசந்தாவிற்கு பரி மீதான நன்மதிப்பை கூட்டியிருந்தது. இதை விட ஒரு மருமகனிடம் வேறு என்ன எதிர்ப்பார்ப்பு இருந்துவிட முடியும் ஒரு மாமியாருக்கு!
ஆனால் சுசீந்திரன் நம்பமுடியாமல் மனைவியிடம் திரும்ப திரும்ப, “உண்மையிலேயே இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா வசந்தா?!” என்றவர் கேட்க,
“ம்ம்கும்… இவங்கெல்லாம் நம்ம சம்மதத்தை கேட்டுதான் எல்லாம் செய்றாங்களாக்கும்” என்று வசந்தா நொடித்து கொண்டார்.
“இல்ல… உனக்கு அண்ணன் சொன்னதுல சம்மதம் இல்லன்னா” என்றவர் மனைவியை அவர் தூண்டிவிட, “எனக்கு சம்மதம்தான்… நீங்க கல்யாண வேலையை பாருங்க” என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.
“அப்போ மகிழினிக்கு” என்று சுசி இழுக்க, “நான் அவ கிட்ட பேசிக்கிறேன் நீங்க ஆகுற வேலையை பாருங்க” என்று சொல்லிவிட்டார். இனி இந்த கல்யாணத்தை தடுப்பது யாராலும் முடியாது.
இன்னொருபுறம் மகிழினியும் இந்த திருமணத்தை நிறுத்த தன்னால் இயன்ற முயற்சியை செய்து பார்த்தாள். “ம்மா… எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று இறைஞ்சிய மகளிடம்,
“நீ இப்ப இந்த கல்யாணத்தை பண்ணிக்கலன்னு வை… உன் பெரியப்பா மவ ஓடி போனதை காரணம் காட்டி உங்க அப்பன் அவசர அவசரமா எவனாச்சும் ரௌடி பயலா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருவாரு… அதனால ஒழுங்கா இந்த கல்யாணத்துக்கு கம்னு ஒத்துக்கோ” என்று வசந்தா மகளை உருட்டி மிரட்டி சம்மதிக்க வைத்துவிட்டார்.
ஆனால் மகிழினிக்கு இதில் முழு மனதாக சம்மதமில்லை. பரியை தமக்கையின் கணவனாக பாவித்துவிட்டு எப்படி அவனுடன் வாழ்க்கை நடத்த முடியும். உள்ளுக்குள் அவள் மனம் ஊமையாக ஒரு போரட்டத்தை நடத்தி கொண்டுதான் இருந்தது. ஆனால் விதியை யாராலும் மாற்றியமைக்க முடியாது. பரியோடுதான் அவள் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டதே!
விமலன் வீட்டில் மஞ்சுளா யார் முகத்திலும் விழிக்க முடியாமல் அவமானத்தில் கூனிகுருகி போனார். மகள் இப்படி செய்வாள் என்று அவர் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. இன்னொருபுறம் சௌந்தர்யாவின் அண்ணன்கள் இரண்டு பேரும் உடன் பிறந்த தங்கை என்றும் யோசிக்காமல் அவளை வெறி கொண்டு தேடி கொண்டிருந்தனர். அவளை கண்டுப்பிடித்த மறுநொடியே கண்டம்துண்டமாக வெட்ட!
இந்த களேபரத்திளும் எந்தவித இடையுறும் இல்லாமல் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பரிக்கு வானத்தில் பறக்கும் உணர்வுதான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் அவன் முகத்தில் மாப்பிள்ளை கலையே வந்திருந்தது. இதில் பரிதாபத்துக்குரிய ஜீவன் சமீர்தான். அவன் ஊருக்கு போகும் திட்டம் மீண்டும் முறியடிக்கப்பட்டது.
‘நம்ம இங்க இருந்து போகறதுக்குள்ள நிச்சயம் ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடக்க போகுது… அவ்வ்வ்வ்’ என்று மனதிற்குள் அஞ்சி நடுங்கி கொண்டிருந்தான்.
அடுத்த நாள் கல்யாணம் என்ற நிலையில் எல்லோரும் உறங்கிவிட இரவு இந்த யோசனையோடு பின்னிருந்த தோப்பை வெறித்து பார்த்து கொண்டிருந்த சமீரிடம், “ஏன் மச்சான்? இப்படி இஞ்சி தின்ன தேவாங்கு மாறி மூஞ்சை வைச்சிருக்க… பார்க்க சகிக்கல… எது நடந்தாலும் என்னை மாதிரி எப்பவும் ஹாப்பியா இருந்து பழகு மச்சி!” என்று சொல்லியபடி நண்பன் தோளில் கை போட்டான் பரி.
“ஏன்டா நீ ஹாப்பியா இருக்க மாட்ட… பழம் நழுவி நேரா பாலில விழும்னு கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா உனக்கு இங்க வாயிலேயே விழ போகுதே” என்று சமீர் சொல்ல,
“அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும் மச்சி!” என்று பரி ஆனந்தமாகவும் பெருமிதமாகவும் உரைத்தான்.
“நீ உண்மையிலேயே மச்சக்காரன்தான்… ஆனா அந்த பொண்ணோட நிலைமையை நினைச்சாதான்?” என்று சமீர் மகிழினிக்காக வருத்தப்பட்டான்.
“அடிங்க! எனகென்னடா குறைச்சல்? என்னை கட்டிக்க அவதான் குடுத்து வைச்சிருக்கணும்” என்று பரி கோபம் கலந்த கர்வத்தோடு சொல்ல சமீர் அடக்க முடியாமல் பயங்கரமாக சிரித்துவிட்டான்.
“இப்ப என்ன சொல்லிட்டாங்ன்னு நீ இப்படி சிரிக்குற?“ என்று பரி கடுப்பாக கேட்க,
“நீ சொன்னது உண்மைன்னா உன்னை கட்டிக்க மாட்டேன்னு ஏன் டா… அந்த மோகினியோட அக்கா ஓடி போகணும்” என்று சமீர் கேட்டுவிட்டான்.
“தெரியாம பேசாதே… அவளா ஓடி போகல… நான்தான் அவளை ஓடி போக வைச்சேன்… காதலிக்கிறது என்ன பெரிய கொலை குத்தமா? ஓவராத்தான் பண்றாங்க… அதான் என் மாமனுங்கள கடைசிவரைக்கும் நம்ப வைச்சு அவங்க கண்ணில எல்லாம் மண்ணை தூவி சௌண்ட்சை நானே அனுப்பி வைச்சேன்” என்று பரி ஆர்வக்கோளாறில் உளறிவிட்டான். சமீர் ஓரளவுக்கு இதை யூகித்ததுதான் என்றாலும் அதை அவன் வாயிலாக சொல்லவும், அவனுக்கு கதிகலங்கியது.
“என்னடா சொல்ற? இது மட்டும் அந்த காண்டமிருகம் பிரதர்ஸுக்கு தெரிஞ்சுது” என்று சமீர் அதிர்ச்சியானான்.
“அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்று பரி சொல்லி கொண்டிருக்க படிகெட்டில் ஏதோ ஆள் அரவம் கேட்டது. சமீர் பதறி கொண்டு அமைதியாக, பரி உடனடியாக எட்டி பார்த்தான்.
மகிழினி அதிர்ச்சியில் உறைந்து போய் படியில் நின்றிருந்தாள். பரியிடம் பேச வேண்டுமென்று யாருக்கும் தெரியாமல் வந்தவள் அவர்கள் இருவரும் பேசியதை கேட்டுவிட்டிருந்தாள். அவள் அதன் காரணமாக அதிர்ச்சியில் நிற்க,
“மகி” என்று பரி அழைப்பில் அவனை எரித்துவிடுமளவுக்கு கோபத்தோடு பார்த்துவிட்டு,
“அப்போ இதெல்லாம் உங்க வேலைதானா?” என்று கேட்டாள்.
“நான் சொல்றதை பொறுமையா கேளு மகி” என்று பரி அவளருகில் வரவும்,
“நீங்க ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம்… எங்க அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கு இந்த ஊர்ல எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா? எப்படியெல்லாம் நடிச்சு… ச்சே! நீங்க எங்க குடும்பத்தை அசிங்கப்படுதிட்டீங்க நாங்கதான் உங்க குடும்பத்தை அசிங்கப்படுதிட்டோம்னு டிராமா பண்றீங்களா?… இந்த விஷயத்தை நான் விட போறதில்ல… இப்பவே போய் எங்க அப்பாகிட்ட சொல்ல போறேன்” என்றவள் ஆவேசமாக பேசிவிட்டு விறுவிறுவென படியில் இறங்கி ஓடிவிட்டாள்.
சமீர் அவள் சொல்வதை கேட்டு, “அடப்பாவி! நான் அப்பவே ஊருக்கு போறேன்னு சொன்ன கேட்டியா? இப்ப நான் சொன்னதுதான் நடக்க போகுது… நீ மரமாகிறது இல்லாம என்னையும் சேர்த்து மரமாக்க பார்க்கிறியே… நியாயமாடா?” என்று மானாவாரியாக புலம்ப தொடங்க, “அடேச்சே! உன் புலம்பலை கொஞ்சம் நிறுத்துடா… முதல அவளை தடுக்கலாம்… அவ எதையாச்சும் சொல்லி தொலைச்சிர போறா” என்று சொல்லிவிட்டு பரி படிக்கெட்டில் இறங்க,
“நீ எப்படியோ போ… நான் ஊருக்கு போறேன்” என்று சொல்லி சமீர் அறைக்குள் சென்று தன் பேகில் பொருட்களை மீண்டும் நிரப்ப தொடங்கினான்.
பரி கீழே செல்ல மகிழினி தன் அப்பாவை தேடி கொண்டு போயிருந்தாள். அவளை அங்கே பார்க்க முடியாமல் போக அவன் அவளை தேடி கொண்டிருந்த சமயம், “என்னடா பண்ணிட்டு இருக்க? போய் நேரத்தோட படு… காலையில முகூர்த்தம்” என்று கலிவரதன் பரியை விரட்டிவிட்டார்.
பரி ஒன்றும் செய்ய முடியாமல் மீண்டும் மேலே வர சமீர் தன் பேகோடு கீழே இறங்கவும், “எங்கடா போற?” என்று கேட்டு நண்பனை போக விடாமல் தரதரவென மேலே இழுத்து கொண்டு அறைக்கு வந்து கதவை மூடிவிட்டான்.
“ஏன்டா ஏன்?” என்று சமீர் அவனை கடுப்பாக முறைக்க, “எதுவா இருந்தாலும் இரண்டு பேரும் ஒண்ணா சமாளிப்போம்” என்றான் பரி!
“செய்றதெல்லாம் நீ… ஆனா சமாளிக்க உனக்கு நான் வேணுமா… சத்தியமா… நீ நல்லாவே இருக்க மாட்டடா… மோகினி மோகினின்னு நீ அந்த பொண்ணு பின்னாடி திரிஞ்சிக்கிட்டு இருக்கும் போதே நினைச்சேன்… அவதான் உனக்கு ஆப்படிக்க போறான்னு” என்று சொல்ல பரிக்கு உண்மையிலேயே திக் திக்கென்றுதான் இருந்தது.
இருவருமே அந்த இரவு முழுக்க நடுநடுங்கி கொண்டு அமர்ந்திருந்தனர். அப்படியே அமர்ந்து கொண்டே அவர்கள் உறங்கியும் போக கதவு தட்டும் ஓசை கேட்டு, “ஐயோ! காண்டாமிருகம்!” என்று தூக்கத்திலிருந்து எழுந்து கத்திவிட்டான் சமீர்!
பரியும் பதட்டத்தோடு எழுந்து கொண்டு கதவை திறக்க தாமரை நின்றிருந்தார்.
“என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க… கிளம்ப வேண்டாம்” என்றார். பரி பேந்த பேந்த விழித்தான். சமீருக்கு ஒன்றும் புரியவில்லை.
திருமணத்திற்காக வழியேற பேனர்கள் போஸ்டர்கள் கலர் கலர் மின்விளக்குகள் வைத்து கொடி கம்பங்கள் நடப்பட்டு அசத்தலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய விஸ்தரமான திடலில் பிரமாதமாக பூ அலங்காரங்களோடு திரள் திரளாக பலூன்களெல்லாம் பறக்கவிடப்பட்டு ஆடம்பரமாக அந்த திருமண விழா அரங்கேறியது. பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் என்று எல்லோரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க நேரடியாக வந்திருந்தனர். வாசலில் விலையுர்ந்த கார்கள் அணிவகுத்து நின்றன.
அந்த ஊரே அங்கேதான் திரண்டிருந்தது. உறவினர்கள் நண்பர்கள் கூட்டமென்று எல்லோருக்கும் சிறப்பான வரவேற்போடு விருந்து உபாசாரங்களும் பிரமாதப்படுத்தப்பட்டிருந்தன.
அங்கே பெண் மாறியது குறித்து யாரும் நேரடியாக கேள்வி எழுப்பவில்லை. எனினும் அரசல்புரசலாக அந்த பேச்சுக்கள் உறவினர்களுகிடையில் ரகசியமாக நடந்து கொண்டு இருந்தாலும் திருமண ஏற்பாடுகள் எந்தவித தங்குதடையுமின்றி செவ்வனே நடந்து கொண்டுதானிருந்தது.
சிவப்பு நிற கூரை புடவையில் அழகு மிளிர கூந்தலில் வண்ண மலர்களான ஜடைமுழாங்காலை தொட்டு தழுவி கொண்டிருக்க தோளில் பூ மாலைகள் அணிந்து பெண்ணவள் நடந்து வந்து மணமேடையில் பரியின் அருகில் வந்து அமர்ந்தாள். பரி அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
மனதிலிருந்த பயம் விலகி மீண்டும் காதல் உணர்வு பொங்கி கொண்டிருந்தது. பரியும் அவள் அழகிற்கு கொஞ்சமும் குறையவில்லை. வேட்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக கம்பீரத்தோடும் மிடுக்கோடும் அமர்ந்திருந்த பரியை பார்த்த பெண்களின் கண்களெல்லாம் அவன் மீதுதான். எனினும் அவனவள் அவனை ஒரு முறை கூட திரும்பி பார்க்கவில்லை.
புரோகிதர் மந்திரம் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க பெண்ணவளின் கழுத்தில் மங்கலநாண் பூட்ட சிறப்பாக அவர்கள் திருமணம் முடிந்தது. அவளை தோளோடு அணைத்து திருமண சடங்கின் நிறைவாக அவள் நெற்றியில் அவன் திலகம் வைக்கும் போதே அவள் விழிகள் அவனை நேர்கொண்டு நிமிர்ந்து பார்த்தது. எரித்துவிடுமளவுக்கு கோபம் மின்னியது அவள் பார்வையில்.
அதேநேரம் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக ஒரு துளி நீர் அவள் விழிகளிலிருந்து நழுவ அவன் கரம் அவளை விடுவித்ததும் அவசரமாக தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்.
அவள் கண்ணீரை பார்த்த பரி கலக்கமுற்றான். அதற்கு பிறகு எந்த சடங்கிலும் அவனால் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை. அவளிடம் எப்படியாவது பேசி நடந்த விஷயங்களை குறித்து தெளிவுப்படுதிட வேண்டுமென்று யோசித்து கொண்டிருந்தான்.
ஒரு வழியாக திருமண சடங்குகள் முடித்து மணமக்கள் வீட்டுக்கு அழைத்துவரப்பட மகிழினி தன் அறைக்குள் புகுந்து முகத்தை தொங்கப்போட்டு கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தாள்.
பின்னோடு வந்த பரி கதவை மூடிவிட்டு உள்ளே வர, சத்தம் கேட்டு திரும்பிய மகிழினி, “இப்போ எதுக்கு நீங்க உள்ளே வரீங்க… ஒழுங்கா வெளிய போங்க” என்று கத்த,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மகி” என்றான் பரி நிதானமாக!
“நீங்க எதுவும் பேச வேண்டாம்… வெளியே போங்க” என்றவள் மீண்டும் கத்த,
“சரி எதுவும் பேசல… ஆனா வெளிய போக மாட்டேன்… என்னடி பண்ணுவ?” என்று விஷமமாக புன்னகைத்து கொண்டே அவளை நெருங்கி வந்திருந்தான்.
“நீங்க செஞ்சதெல்லாம் அப்பாகிட்ட நான் இப்பவே சொல்லிடுவேன்” என்று மிரட்டி கொண்டே அவள் எழுந்து கொள்ள,
“அப்பாகிட்ட சொல்றவ நேத்தே சொல்ல வேண்டியதுதானேடி” என்றவன் சொல்லி அவளை நெருங்கி வந்தான். அவள் பதட்டமாகி, “வேண்டாம்… போயிடுங்க” என்று சொல்லி குறுக்கே தன் கரங்களை நிறுத்தி அவனை நெருங்கவிடாமல் தடுத்து கொண்டிருந்தாள். அவள் அவனை தள்ளிவிட முடியாமல் அவதியுற்றவள் பயத்தில், “அம்ம்மாஆஆஆ” என்று கத்த,
“ஏ எ ஏ வாயை மூடுறி… வாயை மூடுறி” என்று அவன் மிரட்டியும் அவள் அவன் சொல்வதை காது கொடுத்து கூட கேட்காமல் தொடர்ச்சியாக கத்தினாள்.
“கத்தின மவளே கிஸ் பண்ணிடுவேன்” என்று சொல்லிக்கொண்டே அவளை படுக்கையில் சரித்துவிட்டு அவன் நெருங்க,
“உஹும்… கத்த மாட்டேன் கத்த மாட்டேன்” என்று தன் வாயில் கை வைத்து மூடி கொண்டாள். அவன் முகம் புன்னகையாக மாறியது. அதோடு அவளை அத்தனை நெருக்கமாக அதுவும் திருமண கோலத்தில் பார்த்து மொத்தமாக தன் வசம் இழந்திருந்தான். காதல் மட்டுமே இருந்த இடத்தில் இப்போது உரிமையும் சேர்ந்து கொண்டதே. அவளிடம் அத்து மீற தவித்தது அவனின் ஆண் மனம்.
துறுதுறுவென்று இருந்த அவளின் மயக்கும் விழிகளில் கட்டுண்டு அவன் கிறக்கமாக அவளையே விழிஎடுக்காமலும் விலகாமலும் பார்த்து கொண்டிருந்தான்.
அதற்குள் தடதடவென்று பலமாக கதவு தட்டும் ஓசை கேட்க, “எந்த இடியட் அது” என்று அவன் கடுப்பாகும் போது, “டே பரி” என்று சமீரின் குரல் கேட்டது. எரிச்சலின் மிகுதியில் அவளை விலகி சென்று அவன் கதவை திறக்க செல்ல அவள் மெல்ல எழுந்தமர்ந்து தப்பிய உணர்வில் மூச்சை இழுத்துவிட்டு கொண்டாள்.
பரி கதவை திறந்ததும் சமீர் மகிழினி உள்ளே இருப்பதை பார்த்து, “இருந்தாலும் நீ ரொம்பத்தான் ஃபாஸ்டு மச்சி” என்று கிண்டலாக சிரித்து கொண்டே தலையசைக்க,
“நீ இன்னும் ஊருக்கு கிளம்பலையா?” என்று பரி கடுப்பாக கேட்டான்.
“ஏன்டா கேட்க மாட்ட? ஒவ்வொரு தடவையும் போறவனை போக விடாம தடுத்துட்டு… இப்ப ஏன் கிளம்பலன்னா கேட்குற… எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்… உன்னை போய் பிரெண்டா நினைச்சேன் பாரு” என்று சமீர்அந்த நீண்ட நெடிய வசனத்தை பேசி முடிக்கும் போது பரி அவனை அலட்டி கொள்ளாமல் பார்த்து,
“ஓவரா பேசாதே டா… ஒழுங்கா உன் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டு கிளம்பு… இந்த தடவை உன்னை நான் சத்தியமா தடுக்க மாட்டேன்” என்று அவனை வாசல் வரை தள்ளி கொண்டு வந்து நிறுத்தினான்.
அங்கே அவர்கள் எதிர்ப்பாராதவிதமாக கலிவரதனுக்கும் மகிழினி உறவினர்களுக்கும் பெரிய வாக்குவாதாமே போய் கொண்டிருந்தது.
போதாகுறைக்கு வசந்தாவின் குரலும் வரதனின் குரலும்தான் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது.
“என்னடா நடக்குது இங்க?” என்று பரி அதிர்ச்சியாக கேட்க,
“பார்த்தா தெரியல… சண்டை” என்றான் சமீர்.
“எதுக்குடா?”
“சடங்கு நடத்திறதுலதான் சண்டை”
“என்ன சடங்கு?”
“முதல் இரவுதான்”
பரி அதிர்ச்சியோடு நண்பனை திரும்பி பார்த்தான்.
“உங்க அப்பா இப்பவே பொண்ணை அனுப்பி வையுங்க போகணும்னு சொல்றாரு… உன் மாமியாரு எல்லா சடங்கும் முடிச்சுதான் அனுப்பி வைப்பேன்னு சொல்றாங்க… ரொம்ப நேரமா இந்த பிரச்சனைதான் போயிட்டு இருக்கு… இன்னும் உன் காண்டாமிருகம் மாமானுங்க வேற இந்த பக்கம் வரல… அவனுங்களும் வந்தா என்ன நடக்குமோ? அதை பத்தி உன்கிட்ட சொல்லலாம்னு ஒரு நல்லெண்ணத்திலதான் நான் கதவை தட்டினா… நீ என்னடான்னா” என்று சமீர் நண்பனை பார்க்க, பரி அவன் குடும்ப சண்டையை பார்த்து தலையடித்து கொண்டான்.
சமீர் அவன் தோளை சமாதானமாக தட்டி, “நீ பிரியாணி சாப்பிடலாம்னு பார்த்த.. இங்க இவைங்க உனக்கு பீன்ஸ் பொரியல் கூட வைக்க மாட்டாங்க போலேயே… வாட் அ கொடுமை?” என்றான்.
பரி நண்பனை கடுப்பாக திரும்பி பார்க்க சமீர், “எனி வே ஆல் தி பெஸ்ட் மச்சி… நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட, அவனின் நண்பர்கள் பட்டாளமும் புறப்பட தயாராக இருந்தது.
“மவனே! கலாய்ச்சிட்டா போற… உன்னை சென்னைக்கு வந்து பார்த்துக்கிறேன்… இருடா” என்று பரி மிரட்டலாக உரைத்தான்.
“இந்த ஜுராசிக் பார்க்ல இருந்து நீ தப்பிச்சு வந்தா கண்டிப்பா பார்க்கலாம்டா” என்று சொல்லி கொண்டே சமீர் வாயிற் கதவை நோக்கி சென்று விட பரியால் அவனை அப்போதைக்கு முறைக்கத்தான் முடிந்தது.
இன்னொரு பக்கம் பிரச்சனை படுதீவிரமாகி கொண்டேயிருக்க பரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.