YNM- Final

YNM- Final

10

தேன்நிலவு

மூன்று மாதத்திற்கு பிறகு… சென்னை விமான நிலையத்தில்!

விமானத்தில் ஏறுவதற்கு வேண்டிய நேரம் மற்றும் வேறு சில விவரங்களை சேகரித்து கொண்டு பரி நடந்து வரவும், “பரி” என்ற சமீரின் அழைப்பு அவன் காதில் விழுந்தது.

அவனை பார்ததும் கோபநிலையை எட்டிய பரி, “மவனே! என் கண் முன்னாடியே வராதன்னு உன் கிட்ட சொன்னேன் இல்ல” என்று முறைக்க,

“டே… என் நிலைமையை புரிஞ்சிக்கோ மச்சான்… உன் மாமனாருக்கு உன் மேல சந்தேகம் வந்து என்னை வீடு தேடி வந்துட்டார்… ஏற்கனவே அந்த மனுஷன் பார்க்கவே படுபயங்கரமா இருப்பாரு… இதுல என்னை மிரட்டினா நான் என்னடா ஆவேன்… நான் அவ்வளவெல்லாம் ஒர்த்தான பீஸ் இல்ல மச்ச்சான்… எங்க வீட்டுக்கு நான் நாலாவது பையன் வேற” என்று அவன் சொல்லி முடிக்கும் போது கொல்லென்று சிரித்த பரி,

“இன்னும் அந்த டயலாக்கை விடுலயா டா நீ?!” என்று சிரித்து கொண்டே கேட்டான்.

பரி மேலும் “சரி போனா போகுது… அந்த மேட்டரை விட்டு தொலை” என்று முடிக்க சமீர்,

“அப்போ சமாதானமாயிட்ட” என்று  நண்பனின் தோளில் தட்டி,

“எப்படியோ உன் காண்டாமிருக மாமனுங்கலையே காண்டாகிட்டு நீ ஜாலியா ஹனிமூன் ட்ரிப் போக போற… உங்க வீட்டு ஜாய் எங்க வீட்டு ஜாய் இல்ல… ஹம்ம் என்ஜாய்தான் போ” என்று சிரித்து கொண்டே வாழ்த்தினான்.

“ஏன் டா… கிளம்பும் போது போயும் போயும் அவனுங்களை போய் ஞாபகப்படுத்திற… மூணு மாசமா என்னை ஒன்னும் இல்லாம பண்ணிட்டானுங்க… இதுல அந்த உருப்படாத டாக்டர் வேற நானும் மகிழினியும் சேரவே கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லி தொலைச்சிட்டான்… ஐயோ! மரணமா இருந்துச்சு” என்று பரி ரொம்பவும் வருத்தப்பட்டு சொல்லி கொண்டிருக்க,

“இவ்வளவு சோகமா மச்சான் உன் வாழ்க்கையில” என்று சமீர் ரொம்பவும் வருத்தப்பட்டான்.

“என்னடா பீலிங்… எனக்குதான்டா பீலிங்கு… எல்லாத்துக்கும் நீதானே டா காரணம் பக்கி… இதுல பீலிங் வேற… பாய் பிரெண்டுன்னா ரம்ஜான் பக்ரிதுக்கு பிரியாணி கொடுப்பான்… நீ என்னடான்னா என்னையே பிரியாணி போட்டியே டா” என்று  அவனை கடுப்பாக பார்க்க,

“என்னடா திரும்பி முதல இருந்தா” என்று சமீர் அவனை அதிர்ச்சியாக பார்த்தான்.

“அப்போ ஒழுங்கா கிளம்பிடு” என்று இவ்வாறாக இருவரும் பேசி கொண்டே மகிழினி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வர,

“சரி டா மச்சான்… ஹாப்பி ஜர்னி… ஹாப்பி ஜர்னி சிஸ்டர்” என்று சொல்லிவிட்டு சொல்ல, “சரிங்க அண்ணா ” என்று அவளும் சிரித்த முகமாக தலையாட்டினாள்.

“மகி போலாமா” என்று பரி கேட்கவும் மகிழினியும் அவனோடு நடந்தாள். அதுவும் அவள் பார்க்க முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்திலிருந்தாள்.

அந்த வெள்ளை நிற ஸ்கர்ட், ஹீல், கூலர்ஸ் என்று அவள் நிறத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அந்த உடை வெகுஅழகாகவே பொருந்தியிருந்தது.

அந்த சுற்றுலா பயணத்திற்காக பரி இதை போல பல  வகையான நவீன ரக ஆடைகளை அவளுக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தந்திருந்தான்.

முதலில் வேண்டாமென்று சொன்னாலும் பின் அவனின் விருப்பத்திற்காக அணிந்து கொண்டாள். பின்னர் அவளுக்கே அது பிடிக்கவும் செய்தது.

பரி முதல் முதலாக ஆசை மனைவியோடு போகும் அந்த பயணத்தை அத்தனை தெளிவாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினான்.

சுவட்ஸர்லேந்து செல்ல ஆயுத்தமாக இருந்த அந்த விமானத்தில் அவர்கள் ஏறி இருவரும் அமர்ந்த பின்னர் அத்தனை காதலோடு அவள் கரம் கோர்த்து கொண்டான் அவளவன்! கனவு போல இருந்தது அவனுக்கு!

இனி வாழ்க்கையே இல்லை. அவ்வளவுதான். எல்லாம் முடிந்து போனது என்று இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை கொல்ல வேண்டும் என்று அத்தனை வெறியிலிருந்த அவளின் தமையன் தந்தைமார்களிடம் தன் உயிரை மீட்டடெடுத்த நவீன சாவித்திரிதான் அவள்!

அதன் பின் அந்த மோகினி அவனின் செல்ல தேவதையாகி போனாள். அவனின் உலகமே அவளாக, அவள் மட்டும்தான் எல்லாம் என்றளவுக்கு அவனின் ஏனைய சந்தோஷமெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டது.

எதையும் அலட்சியமாக மதித்தவனுக்கு அந்த மரணத்தருவாய் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை புரியவைத்தது. அவள் மூலமாக!

முதல் முறை அவளாக அணைக்கும் போது திருப்பி அணைக்க கூட முடியாமல் சக்தி மொத்தமும் வடிந்த நிலையிலிருந்த அந்த கணம்… அவளுடன் நீண்ட நெடிய ஒரு வாழ்க்கையை திகட்ட திகட்ட வாழ வேண்டுமென்று ஆசை அவனுக்குள் உச்சத்தை தொட்டதே!

நடக்குமா நடக்காதா என்பதெல்லாம் தாண்டி அவள் அழகின் மீதிருந்த மயக்கமெல்லாம் முற்றிலும் காதலாக உருமாறி அவனின் உயிருக்குள்ளும் உணர்வுக்குள்ளாகவும் அவள் ஆழமாக இறங்கிய தருணம் அது.

மண்டியிட்டு அணைத்து கொண்டு அவனருகில் அமர்ந்தவள், “மாமா” என்று அழுது கொண்டே உதட்டின் வழியே நிற்காமல் வழிந்து கொண்டிருந்த அவன் குருதியை துடைக்க, அவன் விழிகள் சொருக மயக்கநிலைக்கு சென்று கொண்டிருந்தான்.

மகிழினியின் மாமா என்று விளிப்புதான் அவனை உயிர்ப்போடு வைத்து கொண்டிருந்தது. இருந்தும் அவனின் சர்வநாடியும் மூச்செல்லாம் அடங்கி போனது போல அவன் அவள் மீது சாய்ந்து கிடக்க, அவள் பதறி கொண்டு அவன் கன்னங்களை கையிலேந்தி, “மாமா என்னை பாருங்க மாமா… மாமா” என்று அவள் அழுகையோடு அழைக்க, அவன் தம் விழிகளை திறந்து மெலிதாக புன்னகைத்து தான் இன்னும் இருக்கிறேன் என்பது போல் அவளை பார்த்து தலையசைத்தான்.

அப்படியே அவனை தன் தோள் மீது சாய்த்து அவள் அணைத்து கொண்டாள். எப்போது அந்தளவுக்கு அவன் மீது காதல் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

அவன் இல்லாமல் போய்விட்டால்  என்று சிந்தித்த தருணம்தான் உயிரின் ஆழம் வரை அவனை அவளுக்குள் உணர்த்தியது.

இந்த நிலைமையில் சுசீந்திரன்  அதிர்ச்சியில் அத்தனை நேரம் உறைந்துபடி நின்றிருந்தார். ஆனால் இப்போது அவர் கொஞ்சம் சுதாரித்து கொண்டு,

“மகிம்மா அவனை நம்பாதே… துரோகி… நம்ம குடும்பத்தை எல்லோர் முன்னாடியும் சந்தி சிரிக்க வைச்சுட்டான்… ப்ளேன் பண்ணி இவன்தான் நம்ம சௌந்தர்யாவை ஓடி போக வைச்சுருக்கான்” என்றவர் ஆக்ரோஷமாக உரைக்க,

மகிழினி மௌனமாக பரியின் முகத்தை பார்த்தாள். சற்று முன்புதான் இந்த விஷயம் தன் அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று அவள் பயந்து கொண்டிருந்தாள். ஆனால் அது இப்படி உடனடியாக நடக்குமென்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

சுசீந்திரன் எரிச்சலோடு, “நீ முதல அவனை விட்டு எழுந்து வா மகி” என்று அதட்டினார்.

அவள் பட்டென, “மாட்டேன்” என்று மறுப்பாக தலையசைக்க விமலன் வெறியோடு, “மகி எழுந்திரு… அவனை கொன்னாத்தான் என் ஆத்திரம் அடங்கும்” என்று ஆவேசமாகி அருகிலிருந்த ஆட்களின் கையிலிருந்த அரிவாளை வாங்க மகிழினிக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது.

“வேணாம் பெரியப்பா… ப்ளீஸ் பெரியப்பா… அவர் செஞ்சது தப்புதான்… எனக்காக அவரை விட்டிருங்க பெரியப்பா” என்று பரியை மறைத்து கொண்டு அவள் முன்னே வந்து கை கூப்பி அவள் கெஞ்சி கொண்டிருக்க, யார் முகத்திலும் துளி கூட இரக்கமில்லை.

பரிக்கு மகிழினி தனக்காக அவர்களிடம் கெஞ்சுவதையும் அழுவதையும் வலியோடு உணர முடிந்ததே தவிர, அவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

சுசீந்திரன் கோபம் பொங்க, “மகி விலகு… அவன் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டான்… எல்லாமே அவன் திட்டம்… சௌந்தர்யாவை ஓடி போக வைச்சது… உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது… எல்லாமே அவன் திட்டம்தான்… என்னையும் அண்ணனையம் முட்டாளாக்கினது இல்லாம எங்களை அசிங்கப்படுத்தி கேவலப்படுத்திருக்கான்… அவனை கண்டம்துண்டாமா வெட்டினாத்தான் எங்க ஆத்திரம் அடங்கும்” என்று வெறியோட சொல்ல,

மகிழினிக்கு அவரின் பேச்சை கேட்டு உள்ளம் கொதிகலனாக மாற

தன் தந்தையை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள், “சரி… அவரை வெட்டிட்டு என்னை என்ன ப்பா பண்ணி போறீங்க?” என்று கேட்டாள்.

“மகி நான் சொல்றது உனக்கு புரியல… அவன் உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்றேன்” என்று சுசீந்திரன் மீண்டும் தெளிவுப்படுத்தினார்.

மகிழினி அவரை முறைத்து பார்த்து, “எனக்கு நல்லா வாயில வந்திறோம் சொல்லிட்டேன்…  ஏமாற்றி  கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னா எப்படி… அவரு என்ன என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிகிட்டாரா… இல்ல உங்க யாருக்கும் தெரியாம என்னை கடத்திட்டு போய் கட்டாய தாலி கட்டிட்டாரா… சும்மா உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க…

மானம் போச்சு மரியாதை போச்சுன்னு மாமா கத்தினதுக்கு… கொஞ்சம் கூட யோசிக்காம மளிகை கடையில பருப்பை பொட்டலம் போட்டு கட்டி கொடுக்கிற மாதிரி என்னை இவருக்கு கட்டி கொடுத்துட்டு… இப்போ இவரு என்னை ஏமாத்திட்டாருன்னு சொல்றீங்களா… அப்பான்னு பார்க்கிறேன்… எதாச்சும் அசிங்கமா சொல்லிடுவேன்” என்று அவள் பேசிய பேச்சில் சுசீந்திரன் திக்குமுக்காடி போனார். எல்லோருமே வாயடைத்து அவளையே பார்த்தனர்.

அப்போது அமுதன் கோபத்தோடு, “சரிடி… உன் புருஷனை போனா போகுதுன்னு மன்னிச்சுவிட்டுடுறோம்… அவனை சௌந்தர்யா எங்க இருக்கானு சொல்ல சொல்லு” என்று தீவிரமாக கேட்க,

மகிழினி கணவனை சாய்த்தபடி அமர வைத்துவிட்டு எழுந்து நின்று, “சொல்ல முடியாது… என்னடா பண்ணுவ? வெட்டிடுவியா… வெட்டுடா பாப்போம்… என்னை தாண்டி என் புருஷனை வெட்டுடா பார்ப்போம்” என்று இடுப்பில் முந்தானையை சொருகி கொண்டு அவள் நின்ற தோரணையில் அவன் முகம் இருளடர்ந்து போனது.

“என்னடா நிற்கிற…. வெட்டுடா” என்று அவள் மீண்டும் கூச்சலிட சுசீந்திரன் மகளை பேச்சற்று பார்த்து கொண்டிருந்தார்.

விமிலன் கோபமாக, “மகி” என்று கத்தினார்.

அவர் புறம் ஆவேசமாக திரும்பியவள், “எதுக்கு இப்ப கத்திறீங்க… கொஞ்சம் கூட என்னை பத்தி யோசிக்காம என்னை ஒரு வார்த்தைக்கு கூட கேட்காம உங்க கௌரவத்துக்கு காப்பாத்திக்க வேண்டி இவர் கூட எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு… இப்போ மனசாட்சியே இல்லாம என் தாலியை நீங்களே அறுக்க பார்கறீங்களே? மனுஷனா நீங்கெல்லாம்…

மிருகங்க கூட தான் பசிக்கு தன்னோட சொந்த குட்டியை திங்காது… ஆனா நீங்கெல்லாம் உங்க சாதி வெறிக்கு… ச்சே! இந்த குடும்பத்துல புறந்தேன்னு சொல்லிக்கவே நான் அசிங்க படுறேன்” என்று முகம் சுளித்தாள்.

விமலன் கொஞ்சமும் இறங்கி வராமல், “இப்படியெல்லாம் நீ பேசுன நாங்க அவனை விட்டிருவோமா… எங்க மானத்தையே வாங்கிட்டான்” என்று அவர் அரிவாளை ஓங்கி கொண்டு வர,

“பெரியப்பா” என்று அவர் கையை பிடித்து தள்ளினாள். எல்லோருக்குமே அதிர்ச்சி தாங்கவில்லை. அந்த வீட்டின் கடைக்குட்டி. எங்கிருந்து அவளுக்கு அந்தளவுக்கு தைரியம் வந்தது என்று நம்பாமல் பார்த்து கொண்டிருந்தனர்.

இன்னும் அவர்கள் குடும்ப பெண்கள் ஆண்களின் ஆதிக்கதிற்கு கீழ்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் மகிழினியின் செயலில் மொத்தமாக அதிர்ச்சியில் நின்ற சுசீந்திரன் மகளை பார்த்து, “பெரியப்பாகிட்ட எப்படி நடந்துக்குற” என்று காட்டமாக கேட்டார்.

அவள் முறைப்போடு, “நான்தான் பெரியப்பா அண்ணனுங்கன்னு இவங்க மேல எல்லாம் பாசத்தை வைச்சி தொலைச்சிருக்கேன்… நீங்க யாரும் என் மேல பாசம் வைக்கல இல்ல” என்று அவள் கண்களில் நீர் வழிய கேட்க அங்கே கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது.

அவள் பின் சீற்றமாக, “உங்க எல்லோரோட உடம்புல ஓடுற அதே வெறிபிடிச்ச ரத்தம் என் உடம்பலையும் ஓடுது இல்ல… அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்திடுவேனா? ” என்று  தீவிரமாக சொல்ல,

“மகி நீ ரொம்ப ஓவரா பேசுற” என்று மகளை சுசீந்திரன் அடக்க பார்த்தார்.

“கரெக்டாதானே ப்பா சொன்னேன்… உங்க உடம்புல ஓடுற இரத்தம்தானே என் உடம்புலயும் ஓடுது” என்று நிறுத்தியவள், “ஓடுதுதானே?!”  குத்தும் பார்வையோடு தன் தந்தையை பார்த்து கேட்டாள்.

சுசீந்திரன் அவளின் அந்த வார்த்தையில் உடைந்து  தன் கரத்திலிருந்த அரிவாளை தூக்கி போட்டுவிட்டு தன் தமையனிடம் கண்ணசைத்து ஏதோ சொல்ல, அவர்கள் எல்லோரும் வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

மகிழினி அதன் பின் துவண்டு போய் பரியின் அருகில் அமர அவன் அவளிடம், “ப்பா சின்ன பொண்ணுன்னு பார்த்தா என்ன பேச்சு பேசறடி நீ… கட்டையை தூக்கிட்டு காட்டு பூனையை துரத்திட்டு வந்த அந்த மோகினியை இன்னைக்குத்தான் நான் திரும்பவும் பார்த்தேன்” என்றவன் அந்த நிலையிலும் முறுவலோடு சொல்ல, “போங்க மாமா” என்று வெட்கப்பட்டவள்,

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா” என்று அவன் கழுத்தை கட்டி கொண்டாள்.

‘நான் கிட்ட வரும் போதெல்லாம் தள்ளி தள்ளி விட்டுட்டு… இப்ப வந்து கட்டி கட்டி பிடிக்கிறாளே… இவளை என்ன பண்றது?’ என்றவன் அந்த சூழ்நிலையை அனுபவிக்க முடியாத தவிப்பில் பொறுமியதை இப்போது  நினைத்தாலும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

அதன் பின் பரி மருத்துவமனையில் சேர்கப்பட்டான். அவன் உடல் நிலை  கவலைக்கிடம்தான். அந்தளவுக்கு அவனை அடித்து விலா எலும்பை உடைத்திருந்தார்கள்.

சென்னையில் கலிவரதன் முன்னிலையில் எதுவும் செய்ய முடியாதென்றுதான் அவர்களை திட்டமிட்டு ஊருக்கு வரவழைத்ததே! அவனிடம் எப்படியாவது உயிர் பயத்தை காட்டி சௌந்தர்யாவின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தார்கள்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பரி எதற்கும் அசர்வதாக இல்லை. அதன் பின் அவர்களின் மொத்த கோபமும் அவன் மீது பாய்ந்ததில் பரிக்கு கொஞ்சம் சேதாரம் அதிகம்தான். யார் செய்த புண்ணியமோ அந்த நேரம் பார்த்து மகிழினி அங்கே வந்ததால் அவன் தலை தப்பியது.

இருந்தாலும் அதற்கு பிறகுதான் நிறைய தரமான சம்பவங்கள் நடந்தன என்று சொல்ல வேண்டும். ‘வேலில போற ஓணானை எடுத்து எவனாவது வேட்டிக்குள்ள விட்டுப்பானா?’ ஆனால் அந்த காண்டாமிருகம் பிரதர்ஸ் பரியின் மீது கை வைத்து அந்த தவறைத்தான் செய்துவிட்டார்கள்.

பரி செய்த காரியத்தில் கலிவரதனக்கும் கோபம் ஏகபோகமாக வந்ததுதான்.  விட்டிருந்தால் அவரும் அவனை அடித்து தொங்கவிட்டிருப்பார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவன் அப்படிதான் அடி வாங்கி கிழிந்த கந்தல் துணியாக மருத்துவமனையில் கிடந்தான். தாமரைக்கு தன் பாசமலர்களா இப்படி செய்தார்கள் என்று நம்பவே முடியவில்லை. ஓரே மகனை அந்த நிலையில் பார்த்து நொந்தே போனார்.

கலிவரதனுக்கும் அதே நிலைதான்.   மகனை அவர் எவ்வளவோ கழுவி கழுவி ஊற்றியிருக்கலாம். ஆனால் ஒரு அடி கூட அடித்ததில்லை.

‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற பீஜியத்தோடு கலிவரதன் மச்சான்களை காய்ச்சி எடுத்துவிட்டார். அவர்கள் மீது என்னென்ன சட்டபிரிவு இருக்கிறதோ அது அனைத்திலும் வழக்கு பதிவு செய்தார்.

பாவம்! அந்த சகோதரர்களுக்கு அதன் பின் நீதிமன்ற வாசலை ஏறி இறங்குவதே முழு நேர வேலையாகி போனது.

முன்னே பின்னே செய்த பாவத்திற்கெல்லாம் சேர்த்து மொத்தமாக அனுபவித்து கொண்டிருந்தனர். மறுபுறம் அரசியல் செல்வக்கெல்லாம் அந்த வழக்கில் ஒன்றும் எடுப்படவில்லை.

சுசீந்திரனக்கு இதெல்லாம் விட பெரிய கொடுமை இத்தனை வருடம் கழித்து வசந்தா, “என் பொண்ணு வாழ்க்கையை அழிக்க பார்த்த இல்ல… உன் கூட செத்தாலும் வழ மாட்டேன்யா” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு தன் பிறந்தகம் சென்றுவிட்டார்.

பணம், பதவி, அவர் உயிராக காப்பாற்றும் சாதி என்று எது உடன் இருந்தாலும் குடும்பம் என்ற ஒன்று குலைந்து போகும்போது ஒரு மனிதன் மொத்தமாக வீழ்ந்து போகிறான். வாழ்க்கையின் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது சுசீந்திரனக்கு!

அருகிலேயே அண்ணன் வீடு இருந்தாலும் அது அவருக்கானது இல்லையே. தன் குடும்பம் பற்றி யோசிக்காமல் இருந்ததற்கான தண்டனையை அவர் சீரும் சிறப்பாக அனுபவித்து கொண்டிருந்தார்.

பரிக்கோ மருத்துவமனையில் ஆசை மனைவி அருகிலிருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம்தான் பெரிதாக இருந்தது.

அதுவும் இப்போதெல்லாம் அவள் இன்னும் அவனுடன் நெருக்கமாகி கொண்டேயிருந்தாள். காதல் இத்தனை அழகா என்று அவனை தினமும் வியப்பில் ஆழ்த்தி கொண்டிருந்தாள். தன்னவள் அருகில் இருந்தும் அந்த அருகாமையை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் அவஸ்தையிலிருந்தான்.

ஓரளவு இப்போதுதான் உடல் தேறியிருந்தது. மகிழினியை அருகில் அமர்த்தி கொண்டு அன்றுதான் உல்லாசமாக பேசி கொண்டிருந்தான்.

“ஹாஸ்பெட்டில இருந்து டிஸ்சார்ஜ்ஜாகி முழுசா குணமானதும்” என்று சொல்லி அவளை அருகில் இழுக்க,

“அதெல்லாம் இன்னும் முழுசா குணமாகல” என்று சொல்லி கொண்டே உள்ளே வந்த மருத்துவரை பார்த்து பதறி கொண்டு மகிழினி எழுந்து நின்று கொண்டாள்.

“மிஸ்டர். பரி… இப்ப நீங்க இருக்கிற நிலைமை ஒரு த்ரீ மந்த்ஸுக்கு நோ… இட்ஸ் ஹைல்லி டேஞ்சரஸ்” என்று அவர் சொல்ல அவன் புரியாமல் பார்த்தான்.

“நீங்களும் உங்க மனைவியும் இன்னும் மூணு மாசத்துக்கு சேரவே கூடாது” என்று பெரிய வெடிகுண்டாக தூக்கி அவன் தலையில் போட, விதி வலியது.

‘அடப்பாவி டாக்டர்… நாங்க இன்னும் சேரவே இல்லையேயா’ என்று பரியின் மனக்குமறலை அந்த மருத்துவர் கேட்டால்தானே. அவர் ஸ்டிரிக்டாக சொல்லிவிட இதை கேட்ட தாமரை உடனடியாக மகிழினியின் அறையை தரைதளத்திற்கு மாற்றிவிட்டார்.

அதன் பிறகு மூன்று மாதத்திற்கு இரண்டு பேரும் ஒன்றாக நின்று பேசுவதற்கு கூட தாமரை அனுமதிக்கவில்லை. பாவம்! அந்த மூன்று மாதத்திற்கு பரிக்கு நரகம்தான். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஒரு அழகான ஹனிமூனிற்கு திட்டம் தீட்டினான்.

இவர்கள் யாருடைய தொல்லையும் இல்லாமல் பறந்து வெகுதூரம் சென்றுவிட…

திகட்ட திகட்ட தன் மனைவிக்காக மனதில் தேக்கி வைத்திருந்த காதலை காட்ட வேண்டுமென்றிருந்தான்.

அவன் திட்டமிடலுக்கு ஏற்றார் போலவே எல்லாமே நடந்தது. சுவட்சர்லேந்தில் இறங்கியதும் இமிக்ரேஷன் வேலைகளை பரி முடித்து கொண்டு வர, மகிழினி பின்னிருந்து யாரோ கண்களை மூடினர்.

“யாரு?” என்று அவள் திரும்பி பார்த்து ஆச்சர்யத்தோடு, “அக்கா” என்று அணைத்து கொள்ள,

“மகி” என்றவளும் பாசமாக தங்கையை இறுக்கமாக கண்ணீர் நிரம்பிய கண்களோடு அணைத்து கொண்டாள்.

சௌந்தர்யாவின் கணவன் சௌந்தரும் உடன் வந்திருந்தார். அவர்களை பார்த்து மகிழினியில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தம்.

பிரான்ஸிலிருந்தவர்களை மகிழினிக்காக வேண்டி அங்கே வர வைத்திருந்தான் பரி.

“நம்மெல்லாம் ஒண்ணா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்” என்று சொன்ன சௌந்தர்யாவிடம்,

“சாரி சௌண்ட்ஸ்… மீட்டிங் மட்டும்தான் ஒண்ணா… இங்க இருக்கிற வரைக்கும் நீங்க யாரோ நான் யாரோ… உங்க ஹனிமூனை நீங்க என்ஜாய் பண்ணுங்க… என் ஹனிமூனை நானும் என் டாலும் என்ஜாய் பண்றேன்” என்று சொல்ல மகிழினி, “என்ன மாமா?” என்று கணவன் தோளில் அடித்தாள்.

சௌந்தர் சிரித்து கொண்டே, “விடு சௌந்தர்யா… பாவம் சகலைக்கு இன்னும் பீன்ஸ் பொரியல் கூட கிடைக்கல” என்று கலாய்த்தார்.

“அடப்பாவிகளா! இது எப்போ தெரிஞ்சுது… விட்டா இதையும் பேஸ்புக்ல போட்டு டிரெண்ட்டாகி என் மானத்தை வாங்கிடுவீங்க போல” என்று சொல்லி சிரிக்க, அவர்களின் அந்த சந்திப்பு குதூகலமாக கழிந்தது.

ஆனால் அதற்கு பிறகு பரி சொன்னது போல தன் தேன்நிலவின் தனிமையை இனிமையாக மாற்றி கொண்டான்.

மகிழினியை அழைத்து கொண்டு சுவட்சர்லேந்தின் உயரமான பனிமலை பிரதேசமான டூபிரான்ட் பாயின்டுக்கு வந்து சேர்ந்தான்.

ஆல்ஃபஸ் மலையின் உச்சியில் வெண்மையாக பனிக்கட்டிகள் மாவு போல படர்ந்திருக்க, சிலுசிலுவென அந்த காற்று உடலை சிலிர்த்து விறைக்க செய்தது.

“ஐய்ய்ய்ய்யோ! செம செம செம மாமா” என்று மகிழின் அந்த அழகில் ரசித்து லயித்து வியப்போடு கரங்களை தம் கன்னங்களில் வைத்து பார்த்த அழகில் அவன் மயங்கியே போனான்.

அந்த  வெண்பனி குளிரில் அவள் முகம் செந்தாமரை நிறத்தில் மலர்ந்து அவனை போதை கொள்ள செய்தது.  அந்த இடத்தின் அழகை அவள் ரசிக்க அவனோ கிறக்கமாக அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

ஆங்காங்கே பைன் மரங்கள் பனித்தூவல்களை தாங்கி நின்றிருந்த அழகே அழகு!

அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க கண்கள் கோடி வேண்டும்.

‘புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது’ என்று பாடல் காட்சிகள்தான் கண்முன்னே வந்தது.

அந்த அழகினை விழிவிரித்து அவள் ரசித்து கொண்டே, “சூப்பரா இருக்கு இல்ல மாமா” என்று குளிர் பொறுக்கமால் தன் இரு கரங்களை கட்டி கொண்டவளை இழுத்து வன்மையாக அணைத்து கொண்டான்.

“என் டாலுக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்று கேட்டவன் அவளை மோகத்தோடு பார்க்க,

“ஹ்ம்ம்” என்று நாணத்தோடு வார்த்தைகளின்றி அவள் தலை தாழ்ந்து கொண்டாள்.

அந்த குளிரில் செர்ரி பழமாக சிவந்த அவள் கன்னத்தில் கதகதப்பாக ஒரு முத்தம் பதித்ததில் இன்னும் வெட்கத்தில் சிவந்தன அவள் முகம்.

அந்த சந்தர்ப்பத்திற்காக ஏங்கி காத்திருந்தவன் சில்லிட்டு போன அவள் இதழ்களில் மீது தம் இதழ்களை அழுத்தி பதித்து உஷ்ணமேற்றி கொண்டே அவளை இடையோடு காற்று கூட புகாமல் இறுக்கி அணைத்து கொண்டான்.

பனிக்கட்டிகளுக்கு இடையில் பெண்ணவள் தன்னவனின் ஸ்பரிசத்தின் தீண்டலில் உருகி கரைய,

ஆள் அரவமே இல்லாத அந்த ஆஃல்ப்ஸ்  பனிமலையின் உச்சியில் அவனை தடை செய்யாமல் அவனுக்குள் அழகாக தொலைந்து போனாள் அவனின் மோகினி!

******** நிறைவு********

error: Content is protected !!