இது என்ன மாயம் 17

இது என்ன மாயம் 17

பகுதி 17

என் காதலை உன்னில்

தேடி தேடி களைகிறேன்

ஆனாலும் என்ன விந்தை?

அந்தக் களைப்பையும் போக்குகிறதே…….

உன் மீது நான் கொண்ட காதல்

 

சமையல் கட்டில் இருந்த பிரஜி, வெளியே சிறு குழந்தையின் பேச்சு சத்தம் கேட்கவும், அடுப்பை அணைத்து விட்டு, வெளியே வந்து பார்த்தாள். அங்கு ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை, சந்தோஷமாய் சஞ்சீவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது.

அதே சமயம், குழந்தையும் பிரஜீயைப் பார்த்து விட்டு, நெற்றி சுளிப்போடு யோசித்து, ‘பின் நாம யாரை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று தன் கழுத்தை வளைத்து, எட்டி சஞ்சீவின் முகத்தைப் பார்த்தது. பார்த்த மாத்திரத்தில், சட்டென்று அவனை விடுத்து, “சித்தப்பா…” என அபயக் குரலில் கூவப் போக, ஆனால் நல்ல வேலையாக, சங்கீதா பிரஜீயின் வீட்டு வாசலில் நின்று “ஏய் … சந்துக் குட்டி” என அவள் கூவினாள்.

அந்தக் குழந்தை குரல் வந்த திக்கில், திரும்பி தன் அத்தையைப் பார்த்து “அத்தே….” என ஓடி அவள் கால்களை கட்டிக் கொண்டது. சங்கீதாவும் தன்னை கட்டிக் கொண்ட குழந்தையை தூக்கி கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். பின் “என்ன செல்லம் நீங்க வர்றதா சொல்லவே இல்ல, யார் கூட வந்த சந்தூ” எனச் சந்தோஷமாக கேட்டாள்.

“நா ஆஆ சித்தப்பா கூட வண்டேன்” என அவள் பதில் அளிக்கும் போதே, படிகளில் சபரியும், செல்வியும், ஒன்றரை வயதான தங்கள் மகன் சாஸ்வத்தை தூக்கிக் கொண்டு வந்தனர்.சங்கீதா “ஹே… சபரி…. செல்வி…. வா வா” என்று வரவேற்றுக் கொண்டே, ஸ்ரீராமை மறந்து தன் வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

பின் அவர்களும் தங்கள் பைகளை வைத்து விட்டு, சங்கீதா கொண்டு வந்து கொடுத்த நீரை பருகினர். செல்வி உறங்கி விட்ட தன் மகனை படுக்க வைக்க, படுக்கை அறைக்குள் செல்ல, சபரி தான் “சங்கீ எங்க ஸ்ரீராம காணோம்?” என்று வினவ,

பின் தான் சங்கீதாவுக்கு தன் மகனின் நினைவே வந்தது. அதற்குள் சந்தோஷி “தம்பி அங்க இருக்கான் சித்தப்பா” என சொல்லி விட்டு, வெளியே செல்ல, அவனோ “ஏன் சங்கீ, குழந்தைய வளர்க்குற, அந்த ஒரு வேலை தான் உருப்படியா செய்றன்னு மச்சான் சொன்னாரு, இப்ப அவனையும் பக்கத்து வீட்டுல கொடுத்துட்டியா?” எனச் செல்லமாக திட்ட ஆரம்பிக்க,

“ஏய் அப்படி எல்லாம் இல்ல, நான் இப்ப தான் குளிக்கப் போனேன், அதான் அவன அங்க விட்டுட்டு போனேன், அவன வாங்க தான் அங்க போனேன், அங்க என்னடான்னா சந்தோஷி நிக்குறா அவங்க வீட்ல”

சபரி “அவ தான் நாங்க கார்ல இருந்து திங்க்ஸ்ஸ எடுக்கிறதுக்குள்ள, நான் தான் ஃபர்ஸ்ட் அத்தைய பார்க்க போறேன்னு, மேல ஓடி வந்துட்டா”

“ஓ…. அதான் இவ மட்டும் வந்து பக்கத்து வீட்டுக்கு மாறி போயிட்டா போல”

“இம்… எல்லாம் ஒரே மாதிரி வீடா இருக்குல, அதான் குழம்பிருப்பா, ஸ்ரீராம் வேறு அங்க இருக்கவும் அப்படியே போயிருப்பா போல” என சந்தோஷிக்கு சபரி ஆதரவாய் பேசினான்.

சங்கீ “இரு ஸ்ரீய தூக்கிட்டு வரேன், உங்களப் பார்க்கவும் அவன மறந்துட்டேன்” என்று வெளியே செல்ல போக, இதைக் கேட்ட செல்வியோ “அடிப்பாவி, இரு இரு அண்ணா வரட்டும் சொல்லி தரேன்” அவள் போகமால் முறைக்க, “நீ முத போ, போய் அவன தூக்கிட்டு வா” என்று சிரிப்போடு அனுப்பி வைத்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த பத்து நிமிடம், அந்தப் பக்கம் நம் சஞ்சீவின் வீட்டில், என்ன நடந்தது என்று பார்ப்போம். சஞ்சீவ் தன்னைக் கட்டிப்பிடித்த குழந்தையின் நினைவில் இருந்தவன், பிரஜீயிடம் “குழந்தை அழகா இருக்குல, எவ்ளோ அழகா எட்டிப் பார்த்துச்சு” என அதன் செய்கையில் லயித்து போய் சொன்னான்.

பிரஜீயோ, உள்ளே போன இரண்டு நிமிடத்தில் மீண்டும் வெளியே வந்து, அவர்கள் வீட்டில் இருந்த ஸ்ரீராமை, வாசலில் இருந்து பார்த்த சந்தோஷியைப் பார்த்து வருமாறு, செய்கையில் அழைத்தாள்.

பிரஜீயைப் பார்த்தவன், திரும்பி சந்தோஷியைப் பார்த்து, “இங்க வா பாப்பா” என அழைத்தான். சந்தோஷியோ இருவரையும் நம்பலாமா? என யோசித்து, வேண்டாம் தம்பியை கேட்போம் என்று “ஸ்ரீ… குட்டி…” எனக் கை நீட்டினாள்.

பிரஜீயோ, சந்தோஷி அருகில் சென்று அவளைத் தூக்கினாள். அவளும் அமைதியாய் பிரஜீயை ஆராய்ந்து பார்த்தாள். “இது உங்க பாப்பாவா? உங்க பேர் என்ன செல்லம்?” என அவளிடம் வினவினாள்.

அவளோ “சண்டோஷி” என சிறிது மழலை மொழியில் சொல்ல, அதன் அழகில் மயங்கி “ஓ… சந்தோஷியா?” என கேட்க,

“இம்ம்…” எனச் சொன்ன குழந்தையோடு, பிரஜி சஞ்சீவ் அருகில் அமர்ந்தாள். சஞ்சீவோ “இது யாரு உங்க தம்பியா?” என ஸ்ரீயைக் காட்டி கேட்க, பிரஜீயின் மடியில் இருந்த சந்தோஷி, தவழ்ந்துக் கொண்டிருந்த ஸ்ரீராமின் கையைப் பிடித்து, “இம்ம்… சங்கீ அட்ட தம்பி” என்று பதில் உரைத்தாள்.

இரு குழந்தைகளின் அழகிலும், செய்கையிலும், அந்த இரு காதல் உள்ளங்களும் லயித்து, தங்கள் துன்பங்களை மறந்து, அந்தக் குழந்தைகளைக் கொஞ்சி கொண்டிருந்தனர்.

சங்கீ “சாரி பிரஜி ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேனா… ஏய் நீயும் இங்க தான் இருக்கியா?” எனக் கேட்டுக் கொண்டே வாசலில் தயங்கி நின்றாள்.

பிரஜி “உள்ளே வாங்க சங்கீதா…” என அழைத்து “அதெல்லாம் இல்ல…” எனக் கூற, சஞ்சீவ் சங்கீதாவை பார்த்து புன்னகைத்து விட்டு, எழுந்து உள்ளே சென்றான்.

பின் உள்ளே வந்த சங்கீதா, தன் மகனை தூக்கி கொண்டு, தன் சின்ன அண்ணனும், அண்ணியும் வந்திருப்பதாகக் கூறினாள். பிரஜி “ஓ! சந்தோஷி அவங்க பொண்ணா?” எனக் கேட்க, “இல்ல பிரஜி, இவ பெரிய அண்ணா பொண்ணு, இவ அவங்க சித்தப்பா கூட வந்திருக்கா”

“ஓ… அம்மாவ விட்டுட்டு இருந்துக்குவாளா?”

“நீ வேற, அவங்க அம்மாவ விட்டுட்டு கூட இருப்பா, ஆனா சித்தி சித்தப்பாவ விட்டுட்டு இருக்க மாட்டா, நான் பிறகு வந்து சொல்றேன் அந்தக் கதைய” என அவளும் ஸ்ரீராம் பொருட்களை எடுத்துக் கொண்டு, சந்தோஷியிடமும் அவனின் பொம்மைகளை எடுத்துக்க சொல்லி விட்டு, “அத்தைக்கு டாட்டா சொல்லிட்டு வா டா, நாம அப்புறம் வரலாம்” என சந்தோஷியிடம் கூற, அவளும் “பாய் ஆன்டி..” எனப் பிரஜீயை நோக்கி கை ஆட்டினாள்.

பிரஜி “இம்ம்… பை… அப்புறம் பார்க்கலாம்… பை…” என்று சந்தோஷிக்கு விடை கொடுத்தாள்.

பின் சங்கீதா பொறுப்பான குடும்ப பெண்ணாய் தன் அண்ணன் சபரியையும், அண்ணியும் உயிர் தோழியுமான செல்வியையும் கவனிக்க சென்று விட்டாள்.

இங்கு நம் பிரஜீயின் வீட்டில், அவர்களின் வீட்டு பொருட்கள் வர, அதை ஒதுங்க வைக்க என இரு குடும்பத்துக்கும் நேரம் சரியாக இருந்தது.

இரவு பிரஜி உணவுக்கு பின், எப்போதும் போல வரவேற்பறையில் ஓரமாய் தூங்க போவதற்காக போர்வையை விரிக்க போக, தன் அறையில் கப்போர்டை ஒதுங்க வைத்து, கைக் கழுவ வெளியே வந்தான். அவளைப் பார்த்து “பிரஜி…” என அழைத்தான். அவளோ தன் கணவனுக்கு ஏதோ தேவை போல, தன்னை அழைக்கிறான் என்று அவன் எள் எனும் முன் எண்ணையாக, போர்வையை அப்படியே போட்டு விட்டு, அவன் முன் வந்து “என்னங்க ? என்ன வேணும்?” என்று அன்பாகக் கேட்டாள்.

நேற்று இரவில் நிகழ்ந்த நிகழ்வின் தாக்கத்தில், சஞ்சீவுக்கு அவள் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி உருவாகியிருக்க, மேலும் தன் கையில் ஏற்பட்ட காயத்திற்கு, அவள் அன்பாக தன்னைக் கவனித்துக் கொண்டதும், அவனுள் ஒரு நன்றி உணர்ச்சி, அவளின் மேல் சுரந்தது. ஆக மொத்தம் நேற்றைய நிகழ்வு இருவருக்கும் என்பதை விட, அவனை சகஜமாக்கியது எனலாம். நம் பிரஜி தான், ஏற்கனவே அவன் மேல் காதலாய் தானே இருக்கிறாள்.

அந்த நன்றி உணர்ச்சியினால் “ஒன்னும் இல்ல, நீ இனிமே இங்க படுக்க வேணாம். அங்க உள்ள வந்து படு” என்றான். இந்த புதிய வீட்டில், இந்த வரவேற்பறையில் படுத்தால், நேற்று போல அவள் இன்றும், எங்கே கனவு கண்டு பயந்து விடுவாளோ என்ற காரணத்தாலும், அவன் அவளை அங்கு படுக்க வேண்டாம் என்றான்.

ஆனால் பிரஜீயோ காலையில் இருந்து, மனம் நிறைய தெம்பாய், தெளிவாய், நேர்மறை எண்ணத்தோடே இருந்தவளுக்கு, அவன் அவ்வாறு கூறவும், மிகவும் மகிழ்ந்து போய் “நிஜமாவா” எனக் கண்களை விரித்து சிறு குழந்தையாய் கேட்டாள்.

அவனோ அமைதியாய் “ஆம்” என்பது போல தலையசைத்து விட்டு, கைக் கழுவ, குளியலறைக்கு சென்று விட்டான். கைக் கழுவி விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தவன், பிரஜீயை பார்த்து திடுக்கிட்டான்.

பின் அவள் அருகே சென்று “ஏய்… உன்ன உள்ள வந்து படுன்னு தான சொன்னேன். அதுக்காக பெட்ல படுக்க சொல்லல” என்றான் குதர்க்கமாய். ஆம், பிரஜி அவன் சொன்னதும், அன்று வந்து இறங்கிய, மாமனார் வாங்கி தந்து அனுப்பிய கட்டில் மெத்தையில், ஒரு ஓரத்தில் அவனுக்கு இடம் விட்டுப் படுத்திருந்தாள்.

படுக்கை அறைக்குள்ளே நுழையும் போதே, அவனின் மாற்றம் அவளுள் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ‘இவன் காரணம் சொல்லாத, உப்பு பெறாத கோபம் கரைந்து, இனி தங்கள் வாழ்க்கை மலர்ந்து விடும்’ என்று அவளாகவே எண்ணி, நம்பிக்கையோடு, ஆனால் அன்றே மலர்ந்து விடும் என்று எதிர்பார்ப்பில்லாமல் தான், ஒரு பக்கமாய் படுத்து இருந்தாள்.

அவன் இவ்வாறு கூறவும் தன் நம்பிக்கை ஆட்டம் காணவும், கோபத்தில் “அப்புறம், பெட்ல படுக்காம, எங்க படுப்பாங்களாம்?” எனக் கேட்டாள். சஞ்சீவ் “ஏன் கீழே படுக்க முடியாதோ” என அவன் கூற, அதற்கு அவள், விருட்டென்று இறங்கி தன் போர்வையை ஒரு குவியலாய் எடுத்துக் கொண்டு, வாயிலில் நின்றவனைக் கடக்க போக, அதுவரை அவள் செய்வதைப் பார்த்தவன், இறங்கி கீழே தான் படுக்கப் போகிறாள் என்று எண்ணினான். ஆனால் அவள் தன்னை நோக்கி வந்து, தன்னைக் கடந்து செல்ல போக, அவள் கையில் இருந்த போர்வையைப் பற்றி, அவளைத் தடுத்து நிறுத்தி, “ஏய் எங்க போற?” என்றான்.

அவளோ முகத்தை சுளித்து, “இம்ம்……” என இழுத்து, “இங்க வந்து, இப்படி கீழ படுக்குறதுக்கு, நான் அங்க போயே கீழ படுத்துக்குறேன்” என்று சொன்னாள்.

அவளோடு மல்லுக்கட்டும் நிலையில் அவன் இல்லாததால், “சரி, சரி வந்து பெட்லையே படு” என்று சலித்துக் கொண்டான். ஏனென்றால் காலையில் ஆரம்பித்த தலைவலி அப்படியே இருந்தது.

இடையில் பொருட்களை வைக்க ஆட்கள் வரவும், அவர்களுக்கு உதவும் போதும், டீ குடிக்கும் போதும் சிறிது நேரம் காணாமல், போய் போய் வந்தது. இப்போது நிரந்தரமாய் தங்கி விட்டது. மாத்திரை போடலாம் என்றால், ஏற்கனவே கையில் அடிப்பட்டதற்கு மருத்துவர் கொடுத்த மாத்திரையை உட்கொண்டதால், ஒரே சமயம் இரண்டு மாத்திரை உட்கொள்ள வேண்டாம் என்று எண்ணி தலைவலி மாத்திரையை அவன் எடுத்துக் கொள்ள வில்லை. படுத்தால் சரியாகி விடும் என்று எண்ணினான்.

சஞ்சீவ் வேறு வழியில்லாமல், அவள் அருகே சென்று படுத்தான். அந்தப் பக்கம் பிரஜீயோ, காற்றினால் துடிக்கும் விளக்கொளி போல, தன் நம்பிக்கையும் சற்று நேரத்தில் துடித்து, ஆட்டங்கண்டு, ஒளிரவும், நிம்மதியோடு துயில் கொள்ள ஆரம்பித்தாள். ஆனாலும் தன்னை மேலே படுக்க சொல்லிவிட்டு, அவன் எங்கே கீழே படுத்து விடுவானோ என பயங்கொண்டாள். ஆனால் அவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவும், ‘இம்… அதான இந்த இந்திரலோகத்து சுந்தரனாவது கீழே படுப்பதாவது’ என நொடித்துக் கொண்டே நினைத்தாள்.

இவள் மட்டும் மேலே படுக்க, தான் மட்டும் கீழே படுப்பதா என்ற மமதையில் இருப்பான். ரொம்ப பண்ணுகிறான், அன்று கூட அவனை மட்டம் தட்டியதாக எண்ணி அறைந்தானே, இருக்கட்டும் பிறகு மொத்தமாய் கவனித்துக் கொள்கிறேன், என்று எண்ணிக் கொண்டே உறக்கத்திற்கு சென்றாள்.

ஆனால் சஞ்சீவோ, இதைப் பற்றியெல்லாம் பெரிதாக எண்ணவில்லை. தான் வந்து படுக்கும் கட்டிலில், இவள் வந்து படுத்து இருக்கிறாள் அவ்வளவு தான், அதுவும் இல்லாமல் நேற்று வேறு பயந்திருக்கிறாள் அல்லவா என்று நினைத்தானே ஒழிய, அவள் தான் கீழே படுக்க மாட்டேன் என்றாளே, நாம் கீழே படுக்கலாமே, அதாவது அவளை தவிர்க்கலாமே! நாம் ஏன் கீழே படுக்காமல், இங்கு இவளுடன் படுத்திருக்கிறோம் என்று அவன் ஆராயவில்லை. ஆனால் ஆராய்ந்திருந்தால், சஞ்சீவின் இதய வாசலில், பிரஜி காலடி எடுத்து வைத்திருப்பதை சஞ்சீவ் உணர்ந்திருப்பானே!

ஆனாலும் அவனுள் ஒரு மாற்றம், தன்னருகே படுத்திருந்தவளைப் பார்த்தவன் ஒன்றை உணர்ந்தான். இதுவரை அவளை மனைவியாய் ஏன் சக தோழியாய் கூட அவன் நினைக்கவில்லை, தன் நண்பனைக் கொன்றவள் என்று வன்மையாய் தான் எண்ணினான்.

ஆனால் இன்று ஏனோ அவளை, அருகில், அதுவும் இந்த இரவில், இருட்டில், நெருக்கத்தில் பார்க்கவும் தான், இவள் என் மனைவி அதனால் என் அருகில் இருக்கிறாள், இவ்வளவு கடுமையாய் பேசியும், தனக்கு சோறூட்டி, பணிவிடை செய்கிறாள் என் அன்னையைப் போல என்று உணர்ந்தான்.

பின் அன்று அவளை அறைந்தது நினைவு வர, அவள் கன்னத்தைப் பார்க்க ஆவல் தூண்ட, படுத்தவாறே மெல்ல கையூன்றி, அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை, எட்டிப் பார்த்தான். ஆனால் அவள் கன்னம் தான் தெரியவில்லை, அதற்கு பதிலாக அவள் தளர்வாய் பின்னியிருந்த கூந்தல் தான் தெரிந்தது. அவள் நிலா போன்ற கன்னத்தை, அந்தக் கருமேகம் போன்று கருங்கூந்தல் மறைத்திருக்கிறது என்று எண்ணினான் சஞ்சீவ்.

ஏதோ அன்று தான் பார்ப்பவன் போல, அதற்கும் ‘எப்பா… எவ்ளோ நீளமான முடி இவளுக்கு’ என்று எண்ணியவன், மேற்கொண்டு தன் எண்ணம் போகும் சீர் சரியில்லை, என்றெண்ணி, தன்னுள்ளே இருக்கும் காதல் நாயகனை அடக்கி, படுத்துக் கொண்டான்.

நடுஜாமத்தில், திடீரென ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு முழித்தாள் பிரஜி. ‘ஐயோ… பயமா இருக்கே’ என இருட்டைப் பார்த்து எண்ணி கண்களை மூட, மீண்டும் முனங்கல் ஒலி கேட்க, ‘ஐயய்யோ… பேய், பிசாசு இங்க இருந்திருக்குமோ, இதுக்கு முன்னாடி’ என நடுஜாம இருட்டில் தோன்றும் பிரத்யேக பயத்தில் வியர்க்க, காதைக் கூர்மையாக்கினாள்.

சத்தம் அவள் பின்னால் இருந்து தான் ஒலித்தது. ‘ஐயோ நமக்கு பின்னாடி இருந்து தான் கேட்குது’ என்று மெல்ல அசைந்து, மனதுள் ‘ஸ்ரீராம ஜெயம்’ சொல்லிக்கொண்டே, கண்களை மூடிக் கொண்டே, மறுப்பக்கம் திரும்பினாள். பின் மெல்ல, ஒற்றைக் கண்ணை மட்டும், திறந்து பார்த்தால் ஒரே இருட்டாக இருந்தது. பின் கண்கள் இருட்டிற்கு பழக்கப்பட, சஞ்சீவின் வரி வடிவம் புலப்பட்டது.

அவளை பார்த்தவாறு, ஒருக்களித்து படுத்திருந்தான். மேலும், சத்தம் அவனிடம் இருந்து தான் வருகிறது என்று உணர்ந்ததனால், மெல்ல பயம் போய் கொஞ்சம் தைரியமாய் உணர்ந்தாள். மெல்ல கட்டிலை விட்டு இறங்கி, மின்விளக்கை போட்டாள். சஞ்சீவ் தான் “ம்மா….” என மெல்ல முனங்கிக் கொண்டு இருக்க, அவன் நெற்றியில் கை வைத்தாள்.

அன்று வீட்டின் பொருட்களை, அங்கும் இங்கும் வைப்பதற்கு, வேலையாட்களுக்கு, அடிப்பட்ட கையோடு இவனும் உதவினான். அந்த கையின் வலி, அவன் உடம்பில் சூடேற்ற, இப்போது தலைவலியும் சேர்ந்துக் கொள்ள, வலி தாளாமல் தூக்கத்திலேயே முனங்கினான்.

பிரஜி அவன் நெற்றியில் கை வைத்து பார்க்க, லேசாக சூடாக இருக்கவும், காய்ச்சல் மாத்திரை இல்லையே என்று எண்ணியவள், அவனை மெல்ல எழுப்பி, அவனுக்கு என்ன செய்கிறது என்று விசாரித்தாள்.

அவனோ “தலை வலிக்குது….. அப்படியே கையும்” என்றான். அவளோ விரைந்து சென்று, தன் கைப்பையில் எப்போதும் வைத்திருக்கும் தலைவலி தைலத்தை எடுத்து வந்து, அவன் அருகில் அமர்ந்து, அவன் நெற்றியில் இதமாய், பதமாய், தன் தளிர் விரல்களால் தடவி விட்டாள். பிரஜீயின் இந்த செய்கை, சஞ்சீவுக்கு தன் அன்னையை தூக்கத்திலேயே ஞாபகப்படுத்தியது. சரஸும் இப்படி தான், தலைவலிக்கிறது என்று அவன் சொன்னால், தலைக்கு தைலம் தேய்த்து விடுவார். இவ்வளவு வளர்ந்த பின்னும், இவனும் தன் தாயின் மடியில் படுத்து, அவரை தைலம் தேய்த்து விட சொல்வான்.

பிரஜி மேலும், அவன் அடிப்பட்ட கையை எடுத்து தன் மடியில் வைத்து, தன் விரல்களால் தடவி விட்டாள். மனதினுள்ளே ‘அவருக்கு சரியாகிடனும் கடவுளே, வலிக்க கூடாது’ என்று ஜபித்தப்படி, தன்னால் ஆன மட்டும் ஆறுதலாய் இருந்தாள். அவனின் ஆழ்மனம் அதை உணர்ந்ததோ என்னவோ? அல்லது அவனின் அன்னை ஞாபகம் வந்து விட்டதாலா தெரியவில்லை, தன் கை அவள் மடியில் இருக்கவும், சஞ்சீவ் அப்படியே திரும்பி ஒருக்களித்து அவளின் வலது கால் மடியில் படுத்து, தன் கையை இன்னொரு கால் மடியில் வைத்தான்.

சஞ்சீவ் திடீரென தன் மடியில் படுப்பான் என்று எதிர்பாராததால், சிலிர்த்தவள், அப்படியே இருக்க “ம்மா… தேச்சு விடுமா…” என்று கண்ணைத் திறக்காமலே சொன்ன கணவனின் குரலில் கலைந்தாள்.

தன் அன்னையை நினைத்து தான், அவன் இவ்வாறு படுத்துக் கொண்டான் என்று எண்ணி நொடிக்காமல்,’ஐயோ… ரொம்ப வலிக்கிறது போல’ என்றே இரக்கங்கொண்டாள்.

மேலும் அரைமணி நேரம் அவன் தலையை மெதுவாய் பிடித்து விட்டவள், அவன் ஆழ்ந்து உறங்கவும், அவன் தலையை நகர்த்தி, கையையும் பத்திரமாக கீழே வைத்து விட்டு, இவள் படுக்கப் போனாள். அதற்குள் சஞ்சீவ் தூக்கத்திலேயே, சிறு பிள்ளையாய் அவள் கழுத்தில் தன் வலக் கையை மாலையாய் போட, அவளும் ஒருக்களித்து அவனை பார்த்தவாறே, அவன் கையை தன் கையால் தடவிக் கொடுத்துக் கொண்டே படுத்து விட்டாள்.

பொழுது பொல பொலவென புலர்ந்தது. மெல்ல கண்விழித்த சஞ்சீவ், பிரஜீயின் முகத்தைப் பார்த்து சிறிது திடுக்கிட்டான். பின் தான் “ஓ… நாம தான படுக்கச் சொன்னோம்” என்று எண்ணி, எழப் போக மீண்டும் அதிர்ந்தான். ஏனெனில் தன் கை அவளின் கழுத்தில் இருக்க, மேலும் அவள் கைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்க….. மெல்ல மெல்ல கோபம் மூள, விருட்டென கையை எடுத்தான். அப்படி இழுத்ததில் கைவேறு வலிக்க, அதில் விழித்த பிரஜீயைப் பார்த்து, கோபம் ஏற, “ஏய்… என்னடி இது? இதுக்கு தான் உன்ன இங்க படுக்கக் கூடாதுனு சொன்னேன்” என்று பொரிய ஆரம்பிக்க,

“என்ன… என்ன இது? நீங்க தான் என் மேல கைய போட்டீங்க, நான் ஒன்னும் போடல, என் கை என்ட்ட தான இருந்துச்சு” என்று குறும்பாகக் கூறி “ஏன்????? நான் ஏன் படுக்க கூடாது? இது எங்க மாமனார் வாங்கி கொடுத்த கட்டில், எனக்கும் உரிமை இருக்கு படுக்க” என்று அவளும் சூடாக பதில் தர,

அவள் தன்னை குற்றம் சுமத்தவும், பதிலுக்கு அவளை ஏதாவது சொல்ல வேண்டும் என்ற நோக்கில், “இது எங்கப்பா வாங்கி கொடுத்தது, என்னமோ உங்கப்பன் வாங்கி கொடுத்த மாதிரி பேசுற” என்று அவளைக் குத்த, மளுக்கென்று அவள் கண்ணில் கண்ணீர் நிறைந்தது. தன் தந்தையை மரியாதையில்லாமல் விளித்ததோடு, அவர் எதுவும் வாங்கி தரவில்லை, என்று குத்திக்காட்டுகிறான் என்று எண்ணி, தன் தந்தையை பேசுகிறானே என்று கண்ணீர் சுரந்தது.

சஞ்சீவே இதை எதிர்ப்பார்க்கவில்லை, சண்டைப் போடுவாள் என நினைத்தானே ஒழிய இப்படி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவள் அமைதியாய் கண்ணீரோடு எழுந்து சென்று விட்டாள்.

பின் தான் அவன், அவள் சொன்னதை நினைத்து பார்த்தான். ‘தான் எப்படி அவள் மேல் கையைப் போட்டோம்? ஒரு வேலை அவள் கன்னத்தை பார்த்து….. அப்படியே அந்த மயக்கத்தில்……. இல்லை இல்லை….. இடையில் தலை வலித்ததே, அப்போது யாரிடமோ “தலை வலிக்கிறது” என்று சொல்ல, யாரோ தைலம்……. இல்லை இல்லை….. அம்மா வந்து தைலம் தேய்த்தார்களே…’ என்று நேற்று இரவில் நிகழ்ந்ததை நினைவுக்கு கொண்டு வர, நன்றாக கண்ணைத் திறந்தவன், தைலம் வாசனையும், தைல டப்பாவும் அவன் தலையணை அருகில் இருக்க,

“ஓ… அப்போ இவளிடம் தான் சொல்லியிருக்கோமா? இவள் தான் விசாரித்து, தேய்த்து விட்டாளா…..ஸ்ஸ்… அச்சோ!” எனத் தன்னையே நொந்து தலையில் அடித்துக் கொண்டான்.

பிரஜி வழக்கம் போல எல்லா வேலைகளையும் செய்தாள். சஞ்சீவ் அவனாகவே சென்று, அவள் போட்டு வைத்த டீயை ஊற்றி குடித்தான். காலை உணவை, அவனே கேட்டு வாங்கி சாப்பிட்டான், அவள் பேசவும் இல்லை, அவனுக்கு ஊட்டி விடவும் இல்லை, அமைதியாக இருந்தாள்.

சஞ்சீவ் இடது கையால் ஸ்பூனில் சாப்பிடுவதைப் பார்த்தும் பார்க்காதது போல் தான் இருந்தாள். பின் சஞ்சீவ் இரு சக்கார வாகனத்தை கையால் ஓட்ட முடியாததால், பேருந்தில் செல்வதற்காக சீக்கிரம் அலுவலகம் கிளம்பினான். அவள் அமைதியாய், தன்னிடம் பேசாமல் இருப்பதை பார்த்தவன், கிளம்பும் முன் அவளிடம் சென்று, அவள் முன் நின்று, ஆனால் அவள் முகத்தை பார்க்காமல், அவள் பின்னே இருந்த சமையற்கட்டு ஷெல்பை பார்த்துக் கொண்டு “சாரி, தெரியாம பேசிட்டேன், காலைல ஏதோ தூக்க சடவுல பேசிட்டேன்” என்று கூற, அவளோ அமைதியாய் இருக்க, ‘இம்ச்சு…. இது ஒன்னு, கோபம் வந்துட்டா….. பேசவே மாட்டா’ எனச் சலித்துக் கொண்டே, “பிரஜி உன்ட்ட தான் பேசுறேன்” என்று அழுத்தமாய் கூறினான்.

 

மாயம் தொடரும்…………

error: Content is protected !!