இது என்ன மாயம் 18

இது என்ன மாயம் 18

பகுதி 18

பேசினாலும் குற்றம்

பேசவில்லை என்றாலும் குற்றமென்று

குற்றம் சுமத்தும்உன்னை

குற்றவாளி கூண்டில் ஏற்றி

என் இதய சிறையில் அடைக்கவே

காத்திருக்கிறேனடா…….

சஞ்சீவ், உன்னிடம் தான் சொல்கிறேன் என்று அழுத்தமாய் சொல்லவும், பிரஜீ “ஓ… அப்படியா, நான் கூட, இந்த ஷெல்ப்கிட்ட தான் பேசுறீங்கன்னு நினைச்சேன்” எனத் தன் பின்னே இருந்த ஷெல்பைக் காட்டினாள்.

அவனோ, அவளிடம் மேலும் சண்டைக் கோழியாய் எதிர்க்கொத்து கொத்தாமல், அவள் முகத்தை பார்த்து, “சரி… சாரி” எனச் சொன்னான்.

அவளோ “சரி… போயிட்டு வாங்க” என்று சாதாரணமாகச் சொன்னாள். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சென்று விட்டான். ஆனால் பிரஜீக்கு, பாவம் அவன் இடது கையால் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டானே என்று அவ்வப்போது உறுத்தி, அவளை வருத்த தான் செய்தது.

பின் மாலை வீட்டிற்கு வந்த பின்னும், பிரஜி அவனோடு அவ்வளவாக பேசவில்லை. இரவு உணவிற்கு பின், அவள் படுக்கை அறைக்கு சென்றாள் தான், ஆனால் கட்டிலில் படுக்காமல் கீழே தரையில் போர்வையை விரித்து கொண்டிருந்தாள். அவள் தூங்க செல்லவும், இவனும் பின்னேயே சென்றவன், அவள் கீழே படுக்கையை விரிப்பதை பார்த்து, அவள் அருகில் சென்று, தன்மையாய் அல்லாமல், “அதான் சாரி சொல்லிட்டேன்ல பிரஜி” என்று கூறினான். ஏதோ இவன் மன்னிப்பு கேட்டு விட்டால், உடனே மன்னித்து விட வேண்டும் என்ற தோரணை அதில் இருந்தது.

அவளோ, இவன் எதற்கு மன்னிப்பு கேட்டான் என்று காலையில் இருந்து கணக்கு போட்டு பார்த்திருந்தவள் ஆயிற்றே, அதனால் அவள் பேசாமல் தன் வேலையைச் செய்தாள். ‘இவனாக வந்து மன்னிப்பு கேட்டான் தான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இரவில் அவனுக்காக, அவ்வளவு பார்த்து பார்த்து செய்தேனே, அதற்கு வாயை திறந்து, ஒரு நன்றி… வேண்டாம் வேண்டாம் ஒரு அன்பான பார்வை, “நீ தேச்சு விட்டதுல என் தலைவலியே ஓடிருச்சு” என்று ஒரு நேச வார்த்தை, இம்ஹும் அது கூட வேண்டாம், “நீ தான் தைலம் தேய்த்து விட்டியா பிரஜி?” என்று ஒரு விசாரிப்பு கூட இல்லை’ என்று பல காரணங்களை பிரஜி எண்ணி, ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

அது என்னவென்றால், நாம் இவனுக்கு தைலம் தேய்த்து விட்டது, அதை தொடர்ந்து நடந்தது நினைவுக்கு வரவும் தான், அந்த நன்றி உணர்ச்சியினால் தான், சட்டென்று தன்னிடம் வாய் வார்த்தையாக மன்னிப்பு கேட்கிறான். ஆனால் அவன் தான் சொன்னதை எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்கவில்லை என்று உணர்ந்தே இருந்தாள்.

மேலும் அவன் தன் தந்தையை போய், எப்படி பேசலாம், அவர் நினைத்தால், ஒன்றென்ன? தனக்காக பத்து கூட வாங்கி தருவார். அப்படிப்பட்டவரை, முன் பின் தெரியாதவரை எப்படி, இவன் இழுத்து பேசலாம் என்று ரோஷம் மிகுந்து மௌனமாக இருந்தாள்.

மேலும் வெளியிலேயே தரையில் படுத்திருக்கலாம் தான், ஆனால் இவன், தான் பேசியது தவறு என்று உணர வேண்டாமா? அதற்கு அவன் அறையிலேயே, அவன் கண் முன்னே கீழே படுத்தால் தான் உணர்வான் என்று எண்ணினாள்.

அவனோ அவளின் மௌனத்தினாலும், தன் வார்த்தையைக் கேட்காதவள் போல தரையில் விரித்து, படுக்க போகவும், கோபத்தில், அவள் முழங்கையை பற்றி, “ஏய்…” எனக் கோபமாக ஆரம்பித்து, பின் அவள் பூ போன்ற முகம் வாடியிருப்பதை பார்த்தவன், “இம்ச்… ப்ளீஸ்… சாரி பிரஜி, மேல வந்து… கட்டில்ல வந்து படு” என்றான் மெதுவாய்.

அவளோ “இல்ல சஞ்சீவ் நீங்களே படுங்க… நீங்க நேத்து சொன்ன மாதிரியே, நான் இங்கயே கீழ படுத்துக்கிறேன்” என்றாள்.

கையை விடாமலே, சஞ்சீவ் “நான்… தான்… சா…” என திரும்பவும் பல்லவியை ஆரம்பிக்க, அவளோ “நான் மனிச்சுட்டேன் சஞ்சீவ், ஆனா அங்க வேணாம்” என்றாள்.

“அப்போ, நீ மன்னிக்கலன்னு தான் அர்த்தம், உனக்கு கோபம் உங்கப்பாவ பேசிட்டேன்னு” என்று சரியாக கணித்தான்.

ஆனால் அவளோ “அப்படில்லாம் இல்ல” என்று மழுப்பினாள்.

“அப்போ மேல வந்து படு, வா” என்று அவள் கையை இழுத்து அழைத்தான்.

அவளோ, தன் கையை அவன் கையில் இருந்து விடுவித்துக் கொண்டு “ப்ளீஸ்… சஞ்சீவ், எனக்கு… அங்க… கட்டில்ல… படுத்தா, நீங்க சொன்னது ஞாபகம் வரும், அப்புறம்… எங்கப்பா ஞாபகத்துக்கு வருவார், அப்படியே… அம்மா… அண்ணா….” என முடிப்பதற்குள், அவளுக்கு தொண்டை அடைக்க, கண்ணில் கண்ணீர் நான் வரவா? என்று கேட்டுக் கொண்டு முட்டி நின்றது.

பிரஜி ரோசப்பட்டாலும், அவள் சொன்னது உண்மையே, இத்தனை நாளும் அவர்கள் வீட்டினரை சற்று மறந்திருந்தவள், இவன், இன்று அவளின் தந்தையை இழுத்து விட்டு போக, அவர்களின் நினைவு, வற்றாத சுனை போல, பொங்கி பொங்கி அவள் மனதுள் வழிந்தது.

அவள் சொன்ன விதம், சஞ்சீவின் மனதைக் குடைய “பாவம், தனக்காவது, சண்டைப் போட்டாலும், தாயும் தந்தையும் பேசினார்கள், ஆனால் இவளுக்கு???” என்றெண்ணியவன், மீண்டும் அவள் தலையை மட்டும், தன்னோடு அணைத்து, தடவி ஆறுதல் அளித்தான். பின்னர், “சரி, அழுகாம, எதையும் நினைக்காம படு பிரஜி” என்று சொல்லிவிட்டு விலகி சென்று, விளக்கை அணைத்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.

ஒரு தோழனாய் ஆறுதல் சொன்னானே ஒழிய, தொட்டுத் தாலி கட்டியவன் போல், “அழுகாத பிரஜி, அத்தையும் மாமாவும் சீக்கிரம் நம்மல, ஏத்துக்குவாங்க” என்று இவ்வாறு சொல்லவில்லை. சஞ்சீவ் எப்போதுமே, “நாம்” என்ற வார்த்தையை அவளோடு இணைத்து பார்த்ததில்லை. இதுவரை அவளை நினைக்கும், போதெல்லாம் “அவள்” என்று தணித்தே தான் எண்ணுவான், தன்னுடன் சேர்த்து எண்ண மாட்டான்.

நாட்களும் அப்படியே விரைந்தது, இருவரும் தேவைக்கு அதிகமாக பேசவில்லை. பிரஜீயும் அமைதியாக சாதரணமாக இருந்தாள், அவனிடம் உருகவுமில்லை, ஒரு வேளை தாய் தந்தையின் நினைவோ என்னவோ?

இவ்வாறே ஒரு வாரம், கடந்திருந்த நிலையில், அன்று ஞாயிறன்று, பிரஜி சிறிது இலகுவாக, தன் வேலைகளைத் தொடர்ந்தாள். பத்து மணியளவில், ஒரு டீயோடு, வரவேற்பறையில் அமர்ந்து, அதை சுவைத்து, ரசித்து அமைதியாய் குடித்துக் கொண்டிருந்தாள். அப்போது, பக்கத்துவீட்டு வரவேற்பறையில் இருந்து, “ஏய்… மில்க் பாட்டில், என் டெடிய அழுக்காக்குனது நீ தான” என சங்கீதா கத்த,

“நா…லா… இல்ல… மாமா டா…” என சந்தோஷி, சங்கீதாவின் கணவன் சஞ்சயை இழுத்தாள்.

சங்கீ, அப்போது தான், குளித்து விட்டு, வந்த கணவனைப் பார்த்து முறைத்து, “நீங்க தான் என் டெடிய இப்படி அழுக்காக்குனீங்களா?” என தன் பிங்க் நிற டெடியில், கருப்பு மை ஒட்டியிருந்ததை, அவனிடம் காண்பித்தாள்.

ஜெய்யோ “ஹே……. நானா… நா என்ன மையா போட்டுட்டு இருக்கேன்” என்று அவன் நியாயம் கேட்க, “அப்போ….” என சங்கீ திரும்ப, வாயை ஒரு கையால் மூடி சிரித்துக் கொண்டிருந்த சந்தோஷியை பார்த்து, “இந்த குட்டிப் பிசாசு வேல தானா?” என்று அவளை துரத்த, அவளோ “மாமா… என்ன காப்பாட்டு” என அவனை நோக்கி ஓடினாள்.

ஜெய்யும் அவளைத் தூக்கி கொள்ள, சங்கீ அடிக்க செல்ல, இவள் அடிக்க வரும் பக்கமெல்லாம், ஜெய் சந்தோஷியை மறைத்து, அவனே மாறி மாறி நிற்க, சந்தோஷிக்கு சிரிப்பு தாங்கவில்லை. சங்கீ கடைசியில் தோற்று போய், சிறுகுழந்தையாய் முகத்தை தூக்கி வைத்து, “பாருங்க சஞ்சய், என் டாலிய இப்படி கரி பூசிட்டா” என அழாத குறையாய் சொன்னாள்.

அவனோ”ஏய்… விடு கீத், அவ குழந்த தான, அத குளிப்பாட்டுனா சரியாகிடும், உன்ன மாதிரியே, அதுவும் குளிக்காமலே இருக்கு” என்று சொல்ல, அவளோ டெரராகி “உங்கள…….” என அவனைத் துரத்த, அவனோ சந்தோஷியை இறக்கி விட்டு ஓட, சந்தோஷியோ தனக்கு திரும்பவும் டெடி கிடைத்த சந்தோசத்தில், அவர்களை மறந்து, அதனோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

சங்கீயோ அவனைத் துரத்த, அவன் குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள, இவளும் நுழைந்து அவனைப் பிடித்து, மொத்தப் போகும் சமயத்தில் ஜெய் ஷவரை திருக்கி விட்டான். அவளோ எதிர்பாராமல் நனைந்ததில், அதிர்ந்து பின் அவனிடம் “என்ன சஞ்சய், இப்படி பண்ணிட்டீங்க” எனச் செல்லமாக கோபிக்க,

“தெரியலையா… உன்ன குளிப்பாட்டுறேன்” என்று கண்ணை சிமிட்டி, அவனும் அவளோடு நனைய

“அச்சோ… டிரஸ் எல்லாம் நனையுது, தள்ளி போங்க” எனத் தள்ளினாள். ஆனாலும் அவன் விடாமல், “ம்…” என்று இன்னும் நெருங்கினான். பத்து நிமிடம் கழித்து, சிரிப்போடு வெளியே வந்து, சங்கீக்கு மாற்றுடை எடுத்து கொடுத்து விட்டு, வரவேற்பறையில் சந்தோஷியைத் தேடினான்.

அவளோ தன் மாமன் சொன்னதை செய்துக் கொண்டிருத்தாள். ஆம், சங்கீயின் டாலியை சமையலறை சிங்க்கில் வைத்து, தண்ணீரை திருக்கி விட்டு குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.

இன்னும் சந்தோஷி, தன் அத்தை சங்கீதாவின் பொருளை எடுத்து, தன் பொருளாக்கி கொள்வதை நிறுத்தவில்லை, சங்கீயும் அவளிடம் சரிக்கு சரியாய் சண்டைப் போடுவதை நிறுத்தவில்லை. எனினும், சந்தோஷி தன் அத்தையை விட்டுக் கொடுக்க மாட்டாள், சங்கீயும் தன் பொருளை அவளுக்கு கொடுத்து விடுவாள். அவர்களுக்குள் அப்படி ஒரு அடிதடி பாசம்.

மறுவாரம் ஞாயிறன்று பிரஜீயின் வீட்டில், சந்தோஷி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆம், பிரஜி சந்தோஷிக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். சபரியும், செல்வியும், சந்தோஷியை சங்கீ வீட்டில், விடுமுறைக்கு விட்டு செல்லவே வந்திருந்தனர். அவர்கள் இரண்டு நாளில் சென்று விட, நான்கரை வயதான சந்தோஷி, அங்கு சங்கீயோடு சண்டையிடுவதும், ஸ்ரீ முழித்திருந்தால், அவனோடு விளையாடுவதும், அவ்வப்போது பிரஜி வீட்டிற்கும் சென்று தன் மழலை மொழியில் கதை பேசிவிட்டு வருவதுமாக, தன் எல்கேஜி விடுமுறையைக் கழித்தாள்.

சங்கீ, பிரஜீயிடம் தங்கள் குடும்பம் பற்றி முக்கியமாக, தானும் சந்தோஷியும் வாயாடி, விளையாடும் அழகைக் கூறியிருந்தாள். மேலும் சந்தோஷியின் மழலை மொழியும், அவளின் செய்கையும் பிரஜீக்கு பிடித்து போக, அவளே குழந்தையை அழைத்து வைத்துக் கொள்வாள். அப்படிப் பழகியதில் சங்கீ அவளிடம் ஒரு உதவியை நாடினாள். ஜெய் ஞாயிறு என்றாலும், அன்றும் தன் அலுவலகம் சென்று விடுவான், அவன் இப்போது தான் புதிதாக தன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் கிளையை இங்கு தொடங்கியதால், ஞாயிறன்றும் செல்வான். ஆனால் என்ன, மற்ற நாட்களை விட, சிறிது தாமதமாக பத்து மணிக்கு சென்று இரண்டு மணிக்கு வந்துவிடுவான்.

அது போல் அன்றும் சென்று விட, ஸ்ரீ ராமிற்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போக, சங்கீ அருகில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனைக்கு முன் அனுமதி பெற்று செல்ல, அதனால் சந்தோஷியை பிரஜீயின் வீட்டில் விட்டுவிட்டு சென்றாள். மதிய பொழுதை நெருங்கி விட்டதால், அவளுக்கு பிடித்த பருப்பு சாதமும், உருளைக்கிழங்கு வருவலும், கொடுத்து விட்டு சாப்பிட மட்டும், வைத்து விடுமாறு கூறி, முன்னக்கூடியே நன்றியும் தெரிவித்து விட்டு சென்றாள்.

சந்தோஷி சமத்தாய், பிரஜீயின் வீட்டில் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டும், ஆனால் அவளிடம் வந்து “ஆ…” வாங்கிக் கொண்டும் சென்றாள். கடைசியில் கொஞ்சம் சாதம் இருக்க, அதற்கு மேல் சந்தோஷி வேண்டாம் என்று மறுக்க, பிரஜி “சந்தோஷி பாப்பா நல்ல பாப்பா ல, ஆ… வாங்கிக்க டா” எனச் சொல்ல,

சந்தோஷியோ வாயில் சாதத்தை வைத்து உதப்பிக் கொண்டு, தலையை இடமும் வலமுமாக ஆட்டி, “வேண்டாம்” என்று மறுக்க, “அப்போ சந்தோஷி பேட் கேர்ளா?” அவளோ, வாயில் சாதத்தோடு “னா… குத் கால் சந்தோஷி பாப்பா” என்றாள்.

பிரஜி “நீ இப்போ சாப்பிடலேன்னா, பூச்சாண்டி வந்து உன்ன தூக்கிட்டு போய்டும்” என்று பயமுறுத்தி பார்த்தாள். அதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பது போல, “பூசாண்டி நைட் தா வரும், இப்ப லா… வராது…..”

“இம்ஹும் வரும், நீ சாப்பிடலேன்னா வந்து உன்ன தூக்கிட்டு போய்டும்”

அதற்கும் “தூக்கிட்டு போடுமா… நிஜமாவா…” என்று சிறிது பயந்து கேட்டாள்.

“இம்ம்… நிஜமா இப்ப வரும் பாரு” என்று பிரஜி, கண்ணை உருட்டி காட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காலையில் வெளியே சென்ற சஞ்சீவ் சரியாக வர, அவனைப் பார்த்த சந்தோஷி, வாயில் சாதத்தோடு, கன்னத்தை உப்பிக் கொண்டு, இரண்டு கையையும் வாயில் வைத்து மூடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் சைகையில், பிரஜீயும் சிரித்து விட, சஞ்சீவ் தன்னை பார்த்து சிரிக்கும் அவர்களைப் பார்த்துக் கொண்டே, குளியலறைக்கு சென்றான். அவன் சென்றதும், சந்தோஷி தன் கைகளை வாயில் இருந்து எடுத்து விட்டு, “அப்போ மாமா டா… பூசாண்டியா?” என வினவினாள்.

பிரஜீயோ “ஆமா, பூச்சாண்டிக்கு எல்லாம் பெரிய பூச்சாண்டி” என்று அவளும் சிரிப்போடு, கண்ணை பெரிதாக்கி அவளிடம் சொன்னாள்.

“அப்போ இடா… பூசாண்டியா” என நிஜமாகவே சந்தேகமாகக் கேட்க, அவள் ஆம் என்று தலையசைத்தாள். பிரஜி அன்று நடந்த வாக்கு வாதத்திற்கு பிறகு, அவனிடம் தேவைக்கு அதிகமாக பேசாமல், இன்னும் அமைதியாக தான் இருந்தாள். அவளுக்கு பொழுது போவதற்கும், பேச்சு துணைக்கும், தோழமையாய் பழகுவதற்கும், சங்கீயும், சந்தோஷியும் கிடைத்து விட, சஞ்சீவை அவள் கண்டுக் கொள்ளவே இல்லை.

அதனால் நம் சஞ்சீவ், சிறிது கடுப்பாகவே இருந்தான். குளியிலறையில் இருந்து, வெளியே வந்தவன், தன் அறைக்குள் செல்லும் போது, அவள் சிரிப்பதைப் பார்த்து மேலும் கடுப்பானான். “என்னிடம் மட்டும் பேச முடியவில்லை, ஆனால் எல்லோரிடமும் பேச முடிகிறது… ஹும்…” என முகம் கடுகடுக்க எண்ணினான்.

பாவம் அவன் தான் என்ன செய்வான்? அலுவலகம் விட்டால், வீடு என்று இருக்கிறான். சென்னை என்றாலாவது நண்பர்கள் இருப்பார்கள், ஆனால் இங்கு அப்படி யாரும் இல்லை. அலுவலகம் வேறு புதிது தான், ஆனாலும் வேலை சரியாக இருப்பதால் தெரியவில்லை. அன்னையிடம் அலைப்பேசியில் பேசுவான் தான், இருந்தும் தனிமையாய் உணர்ந்தான். முன்பு சிறு வயதில் அறியா பருவத்தில், அனுபவித்த அதே தனிமையான மனநிலையை போலவே, இன்றும் உணர்ந்தான்.

மேலும் பிரஜீயின் நிம்மதியைப் போக்கவென அவன், அவளோடு பேசாமல் அவளை துன்புறுத்தினான். ஆனால் இப்போது என்னவோ அவள் தன்னிடம் கோபித்துக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்து பேசி சந்தோஷமாக இருக்கிறாளே, ஆனால் தான் தான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று மேலும் அவள் மேல் கடுப்படைந்தான்.

‘இவளை அப்படி என்ன சொல்லிவிட்டோம்? ஏதோ தூக்க கலக்கத்தில், கோபத்தில் தெரியாத்தனமாய், அவள் அப்பாவை இழுத்து விட்டேன். அது குற்றமா? அதுவும் மன்னிப்பு கேட்ட பின்னும்….. இம்… இருக்கட்டும், இவளுக்கே… தப்பு செய்த இவளுக்கே… இவ்வளவு இருந்தால்??? இருக்கட்டும் இருக்கட்டும்… இவளை இன்னும் தண்டிக்க, எனக்கு சந்தர்ப்பம் அமையாமலா போய் விடும்’ என்று கடுமையாய் எண்ணினான். அந்த கடுப்பிலேயே இருந்தவன், அவள் சாப்பிட அழைத்தும், தான் சாப்பிட்டு விட்டதாய் பொய் சொன்னான்.

பிரஜீதாவும் ‘தப்பாய் பேசிய அவனுக்கே அவ்வளவு கோபம் இருந்தால், இருக்கட்டும்…’ என அவளும், சிறிது அவனை போலவே எண்ணி, தோளை குலுக்கி கொண்டு சென்று விட்டாள். ஆனால் அவன் மீது காதல் குறையவில்லை, அவளுக்கு. அந்தக் காதல் தந்த நம்பிக்கையினால் தான் தையிரமாய், ‘இம்… இரவு எப்படியும் இங்கு தானே சாப்பிடுவீர்கள் சஞ்சீவ்’ என எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாலும்,

‘இரவு உணவு செய்வதற்குள் மாலை லேசாக ஏதேனும் செய்வோம், பாவம் பசி தாங்க மாட்டான்’ என்று அவன் பொய் கூறியதைக் கண்டுக் கொண்டுப் பாசமாக தான் எண்ணினாள்.

இப்படிப் பட்டவளை துன்புறுத்த அவனுக்கும் சந்தர்ப்பம் அமைந்தது, ஆனால் அதற்கு முன் தான் அவஸ்த்தை படப் போகிறோம் என்று அவனுக்கு தெரியவில்லை. சஞ்சீவுக்கு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கவும், அவன் அவஸ்த்தை படப்போவதற்கும், இரண்டிற்கும் ஒரே ஆளை அனுப்பி வைத்தார் கடவுள். ஆம், அவன் தான் இப்போது பெங்களூர் நோக்கி, ரயிலில் சங்கீ, சஞ்சய் வீட்டிற்கு வந்துக் கொண்டிருக்கிறான்.

 

மாயம் தொடரும்…….

error: Content is protected !!