காலம் யாவும் அன்பே 30
தலை பாராமாக அழுத்தியது வாகீஸ்வரனுக்கு. தலைக்குள் ஒரு பெரிய பாறாங்கல் வைத்திருப்பது போல கனத்தது.
கண் திறந்ததும், அவனுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பது தெளிவாகப் புரிந்தது. அத்தோடு நடந்த அனைத்தும் ஒரு புள்ளி கூட மறக்காமல் நினைவில் நின்றது.
‘ஆனால் தன்னோடு கை கோர்த்து வந்த இயல் எங்கே!’
அவன் இப்போது முதல் ஆள் அவனது ரதி. இயல் என்ற பேர் கொண்ட அவனது ரதி. உடலின் ஒவ்வொரு செல்லும் அவளை காணத் துடித்தது.
ஆகாஷும் வந்தனாவும் அவசரமாக உள்ளே நுழைய, அவன் கண்விழித்தும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது.
“ஹெட்! என்ன ஆச்சு, எப்படி இருக்கு உடம்புக்கு?” அருகில் வந்தான் ஆகாஷ்.
“ தலை ரொம்ப பெய்ன்னா இருக்கு ஆகாஷ்.. அதெல்லாம் விடு, இயல் எங்க? நான் உடனே பார்க்கணும்..!?” அவனைப் பிடித்து உலுக்கினான் வாகீ.
“இயல் இன்னும் மயக்கத்துல இருந்து எந்திரிக்கல ஹெட் , அவ உடம்பு வீக்கா இருக்கு” வந்தனா வருந்திக் கூற..
அவளின் வார்த்தை அவனை ஏதோ செய்தது. இயலைக் காண தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் கட்டிலிலிருந்து எழுந்தான். தடுமாறி விழப் போனவனை தாங்கிப் பிடித்து மீண்டும் அமர வைத்தான் ஆகாஷ்.
“ ஹெட்! நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. இயல் எழுந்ததும் உங்களுக்கு சொல்றேன். பக்கத்து ரூம்ல தான் இருக்கா..” அவனைப் பேசி அமர வைத்தான்.
வாகீயும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட, வர்மா மற்றும் பாகீரதி என்ன ஆனார்கள் என்று யோசித்தான்.
வர்மா மீண்டும் அந்த மாயக் கதவிற்குள் சென்ற பிறகு என்ன நடந்தது என்று அவனால் யோசிக்க முடியவில்லை.
ஒரு வேளை இயல் இன்னும் மயக்கத்தில் இருப்பதால், அவளுக்கு அங்கு என்ன நடந்தது என்று தெரிய வாய்ப்பிருக்கிறதோ என அவன் மூளை சிந்திக்க,
அவள் முதலில் கண் விழிக்கட்டும் ,மெலிந்த தேகம் வேறு! தனக்கே இத்தனை சோர்வு இருக்கும்போது அவளுக்கும் நிச்சயம் இருக்கும் என்று அவளது உடல் நலனில் அக்கரைப் பட்டான்.
இயலைப் பார்த்தது முதல் அவனுக்கு இருந்த ஈர்ப்பின் காரணம் இப்போது புரிந்தது.
அவள் என் மனைவி, இப்போதும் எப்போதும்! அதுவே அவனுக்கு மனம் நிறைவாக இருந்தது. ‘ நான் வர்மா வா!???’ இப்போது அவனுக்குள் இந்தக் கேள்வி எழ,
‘ அப்போது வர்மாவும் ரதியும் ஒரு வேலை இறந்து விட்டார்களா! நாங்கள் அவர்களின் மறுபிறப்பா?? அல்லது சேனா எடுத்து வைத்த உயிரணுக்களின் மூலம் உருவானவர்களா?!’ இது அவனுக்கு குடைச்சலைக் கொடுக்கும் கேள்விகள்.
மெத்தையில் படுத்தவாறே, என்ன நடந்திருக்கும் , என்னென்ன சாத்தியம், என யோசித்துப் பார்த்தான். ஒன்றும் மனதிற்கு ஆறுதல் தரும் பதிலாக இல்லை. இதற்கு விடை தெரிந்த ஒரே ஒருவர் அந்த சித்தர் தான்.
ஆம்! அவர் தான் அஷ்ட சேனா. இப்போது அவரை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டான் வாகீசன்.
அவரை இப்போதே காண வேண்டும்! பார்த்து தன் மூளையை அரிக்கும் கேள்விகளுக்கு விளக்கம் கேட்க வேண்டும் என நினைக்க,
வந்தனா உள்ளே வந்தாள். அவனுக்கு ஒரு தட்டில் உணவு எடுத்து வந்து கொடுக்க,
“ தேங்க்ஸ் வந்தனா.. சாப்பிட்டா கொஞ்சம் ஹெல்தியா இருக்கும், எழுந்து நடக்க முடியும். கரெக்டான நேரத்துக்கு கொண்டு வந்த…” நன்றியுடன் பார்க்க,
“ சமையல் கார ஆன்ட்டிகிட்ட சொல்லி உங்களுக்கு ஏத்த மாதிரி செய்ய சொன்னோம் ஹெட்..”
தட்டை கையில் வாங்கிக் கொண்டு உன்ன ஆரம்பித்தான். சூப், கரைத்த கூழ் என வலிமை உண்டு செய்யும் உணவுகளாக இருக்கவும், வேகமாக உண்டான்.
சாப்பிட்டு விட்டு சற்று தெம்பு வந்ததும், எழுந்து நடக்கலாம் , இயலைப் பார்த்து விட்டு , அந்த சித்தரைச் சென்று தேட வேண்டும் என நினைத்தவன், வந்தனாவின் பேச்சில் ஒரு கலக்கம் தோன்ற,
“ சமையல் செய்றவங்களுக்கு எங்களுக்கு எதனால இப்படி ஆச்சுன்னு தெரியுமா? நாம கோயிலுக்குள்ள போன அந்த சுரங்கம் பத்தி எதுவும் சொல்லலையே??” என சந்தேகமாக அவளைப் பார்க்க,
“ இல்ல இல்ல ஹெட், நீங்களும் இயலும் இந்த ஊர் ஆத்துல ரொம்ப நேரம் போட்டி போட்டு மூழ்கி இருந்தீங்கன்னு சொல்லி ஏதோ சமாளிச்சுட்டான் ஆகாஷ்.” நடந்ததைக் கூற,
அவளின் பதில் சற்று நிம்மதியளிக்க,
நிம்மதியாக அந்தக் கூழை குடித்து முடித்து, அந்தத் தெம்பில் மெல்ல எழுந்தான்.
“ஹெட், கஷ்டப் படாதீங்க, இன்னிக்கு புல்லா ரெஸ்ட் எடுங்க” வந்தனா அவனைத் தடுக்க,
“இல்ல வந்தனா… படுத்தே இருந்தா அப்புறம் லேசினஸ் வரும். கொஞ்சம் நடந்தா பெட்டர்” என சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
நேராக இயல் இருக்கும் அறைக்குச் செல்ல,
அவள் போட்ட படி கிடந்தாள். கொஞ்சமும் அசைவில்லை அவளிடம். மூச்சு மட்டும் சீராக இருந்தது.
நீருக்குள் சென்ற போது தனக்காக அவளும் உள்ளே குதித்து வந்து தன் கரம் பிடித்து வந்தது இப்போது நினைவிற்கு வந்து அவன் மனதை நெகிழ்த்தியது.
அன்று கிளம்பும் முன் காதலை சொல்லாமல் ஈகோவோடு நின்றதும் பிறகு தனக்காக அவள் வந்ததும் அவளது காதலை சொல்லாமல் சொல்லியது.
எப்படி காதல் இல்லாமல் போகும்! இன்று வந்த பந்தமா இது! காலம் காலமாக இருவருக்குள்ளும் இருப்பது!
வர்மா ரதியின் வாழ்வை நேரில் கண்ட பிறகும் இயல் மேல் இருக்கும் காதலை எப்படி ஒளித்து வைக்க முடியும்?
லேசான காதல் புன்னகை முகத்தில் தோன்ற, அவள் அருகே வந்து அமர்ந்தான்.
அவளது கரத்தை எடுத்து அவனது கைக்குள் வைத்துக் கொண்டான்.
வெளியில் நின்றபடி இதைக் கண்ட வந்தனாவும் ஆகாஷும் ஆச்சரியமடைந்தனர்.
இத்தனை மாற்றம் தங்களின் ‘ஹெட்’ டிடம் பார்க்கும்போது , ‘அப்படி என்ன தான் நடந்தது நீருக்குள்?’ என்று புரியாமல் நின்றனர்.
வாகீ அவளின் அந்த அமைதியான முகத்தைப் பார்த்த படி அமர்ந்திருக்க, வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
ஆகாஷ் உடனே ஓடிச்சென்று பார்க்க, பின்னால் வாகீ யும் மெல்ல எழுந்து வந்தான்.
அங்கே நின்று கொண்டிருந்தவர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த சித்தர். அஷ்டசேனா.
ஆகாஷ் , ‘இவர் எதுக்கு இங்க வந்தார்!?’ என சொல்லிக்கொண்டே வாசல் கதவைத் திறக்க,
வேகமாக அவனை முந்திக்கொண்டு சென்றான் வாகீ.
அவரைக் கண்டு எப்படி அழைப்பது என்று ஒன்றும் புரியவில்லை. நண்பனாக ஒரு புறம் தெரிந்தாலும், இன்னொரு புறம் இந்த வாழ்வும் அவன் நினைவில் இருந்து அவனைக் குழப்பியது.
அவனது தவிப்பைப் புரிந்து கொண்ட சேனா.. அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்த தோட்டத்தில் சென்று அமர்ந்தார்.
“உன் மனசுல இப்போ இருக்கற கேள்விகள் எனக்குப் புரியாமல் இல்லை. எல்லாத்துக்கும் நான் பதில் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு வாக்குத் தரனும்.” சாந்தமாகப் பேசினார்.
“ நீங்க எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க எது சொன்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்.” வாகீ இப்போது தன்னை பாதி வர்மாவாகவே உணர ஆரம்பித்திருந்தான்.
வர்மாவின் ஆராய்ச்சி என்ன ஆனது! ரதியைத் தேடிச் சென்றவன் என்ன ஆனான் என்பது அவனுக்குத் தெரிந்தே ஆகவேண்டும்!
“சரி! உனக்கு இப்போது வர்மா அந்த மாயக்கதவுக்குள்ள போன பிறகு என்ன நடந்ததுன்னு சொல்றேன்..”
வாகீஸ்வரன் சேனா சொள்ளப்போவதைக் கேட்க, மிகவும் ஆர்வமாக இருந்தான்.
பிரமிட் கட்டி முடித்து , அங்கே சிவலிங்கம் தோன்றிய பின்னர் சேனா சொந்த ஊருக்குத் திரும்பி விட, எத்தனையோ ஆண்டுகள் கழித்து ஒரு நாள் , நண்பனைக் காண மனம் ஏங்கியது.
நான்காம் பரிமாணத்திலிருந்து அன்று வர்மா பேசியது போல என்றாவது ஒரு நாள் நடக்குமா என்று காத்திருக்க, அவருக்கு ஒரு வழி கிடைத்தது.
வர்மா முதன்முதலில் காலப்பயணம் செய்த அந்தச் சுரங்கக் கோயிலுக்குச் சென்றான். யார் கண்ணுக்கும் தெறியாத வண்ணம் மறைந்து அந்த சிவலிங்கம் இருக்கும் அந்த நீர் சூழ்ந்த இடத்திற்கு வர,
அங்கே ஈசன், நிர்மலமான அமைதியுடனும் , குளுமையுடனும் வீற்றிருக்க,
அந்த ஈசனிடம் தன் நண்பனைக் காண வழி கொடுக்குமாறு வேண்டிக்கொண்டார்.
பல முறை தானும் அந்த நீருக்கடியில் சென்று மாயக்கதவு தனக்குத் திறக்குமா என்று சொதித்துப்பார்த்திருக்க,
அவரிடம் அந்த ஸ்படிக லிங்கம் இல்லாதாதால் அவருக்கு அது புலப்படவே இல்லை.
ஒரு கட்டத்தில் விரத்தியடைந்து அவரது ஆத்திரம் முழுதும் அந்த நீரிடம் காட்ட, அது அடங்காத் கொதிப்புடைய நீராக மாறியது.
எப்போதும் ஆக்ரோஷமாக இருந்தது.
“அது வர்மாவைக் காணும் வரை அடங்காது.” என்று சொல்லிவிட்டு, அடுத்து அந்த பிரமிட் இருக்கும் இடத்திற்கு வர,
அங்கே இருந்த பழைய மக்கள் இப்போது நாகரீகத்தில் நன்றாக முன்னேறி இருந்தனர்.
சேனாவைக் கண்டதும் , அடையாளம் தெரிந்து கொண்டு உபசரிக்க,
சேனா வும் அதை ஏற்றுக் கொண்டு அந்த மாதம் திருவாதிரை நட்சத்திரம் வரும் வரை அங்கேயே இருக்க முடிவு செய்தார்.
அன்று தான் வர்மாவின் பிறந்தநாள்.
எந்த உலகில் அவன் இருந்தாலும் அன்று அவனை இந்தப் பிரமிட் மூலமாகத் தொடர்பு கொள்ள முடியும் என நினைத்துக் காத்திருந்தார்.
அங்கிருக்கும் மக்கள் இவரின் போக்கை கவனித்த படி இருக்க, அதில் ஒருவன் மட்டும் இவர் ஒரு நோக்கத்தோடு இங்கு வந்திருப்பதாகப் புரிந்துகொண்ட, அவருக்கு தெரியாமல் நோட்டம் விட்டான்.
சேனா எதிர்ப்பார்த்தது போல அன்று திருவாதிரை நட்சத்திரம் வர, நள்ளிரவு நேரம் அந்தப் பிரமிடின் உச்சிசக்கு நேரே அது ஒளிரும்.
சரியான நேரம் சேனா அங்கே வந்து நின்றார். நட்சத்திரக் கூட்டணி மூன்றாம் பிரமிடின் உச்சிக்கு வரும் நேரம். பிரமிடின் உள்ளே சேனா செல்ல,
அவரை ஒளிந்திருந்து கவனித்த அந்தக் கயவன் , வாசல் இல்லாத பிரமிடுக்குள் சேனா சென்றதை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இதன் ரகசியத்தை எப்படியும் அறிய வேண்டுமென்று அவனுக்குள் முடிவெடுத்தான்.
சேனா, உள்ளே சென்றதும் , உச்சியில் இருந்த சிறு துவாரம் வழியாக நிலவொளி பட்டு, அங்கே வெளிச்சம் வர, திருவாதிரை நச்சத்திரத்தை அதன் வழியே கண்டு , நண்பனை அழைத்தார் சேனா.
“இந்திரா… உன் வரவு எப்போது என்று எனக்கு உணர்த்து, தங்கையின் நலன் பற்றி அறிய ஆவல் கொண்டுள்ளேன்” நட்சத்திரத்தின் மூலம் சேதி அனுப்பினார் .
உடனே அவரது இந்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது. வர்மாவின் பிம்பம் நட்ச்சத்திரத்தின் வழியே அந்த பிரமிடுக்குள் பிரவேசித்தது.
சேனா ஆனந்தம் அடைந்தார். ஆனால் அது வர்மாவின் நிஜ உருவம் அல்ல. வெறும் நிழல் மட்டுமே!
நிச்சயம் ஏதோ பிரச்சனை என்பதை அறிந்து கொண்டார் சேனா.
“ நண்பா!……” வர்மா கலக்கமான குரலில் அழைத்தான்.
“ இந்திரா… என்ன நடந்தது.. என்ன வேண்டும் சொல்!” சேனா பதற,
“ நண்பா! நான் மீண்டும் ரதியைக் காண மாயக் கதவிற்குள் சென்ற பிறகு.. அங்கே என் ரதி அடைபட்ட சிறைக் கைதி போல ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.
நான் சிவலிங்கத்துடன் சென்ற பிறகு, அவளை அங்கிருந்து மீட்டேன். ஆனால்…”
“ஆனால் என்ன…?”
“ அவளை என்னால் தொட முடியவில்லை. என்னோடு அழைத்துக் கொள்ள முடியவில்லை. அவளைக் காண முடிகிறதே தவிற, என்னால் அவளோடு பேசவோ, அவளால் என்னோடு பேசவோ, முடிவதில்லை. வெறும் பார்வை மட்டுமே! இதற்கு என்ன தீர்வு என்று புரியவில்லை. நீ தான் எங்களை மீட்க வேண்டும். செய்வாய நண்பா….” சொல்லிகொண்டிருக்கும் போதே வர்மாவின் உருவம் மறைந்து விட்டது.
சேனா மனம் தளராமல் இதற்கான வழியை தன்னுடைய குருவும், வர்மாவின் மூதாதையருமான பரஞ்சோதி சித்தரிடம் கேட்க, அன்றே அங்கிருந்து புறப்பட்டார்.
மீண்டும் அவர் பிரமிடின் வழியே வெளியே வருவதைப் பார்த்த அந்தக் கயவன், சேனா சென்ற பிறகு அந்த ரகசியத்தை பலரிடம் தெரிவிக்க, அப்போதிருந்த பெரிய பெரிய ராஜாக்கள் இதில் ஆர்வம் கொண்டனர்.
எல்லா வழிகளைக் கடை பிடித்தும் யாராலும் முதல் பிரமிட்டை தாண்டிச் செல்ல முடியவில்லை.
நாட்கள் மாதங்களாகி வருடங்களும் ஓடியது.
உலகம் முழுதும் ஆட்களை அனுப்பித் தேடியும் சேனாவைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
அப்போது ஒரு நாள் ஒரு மலை அடிவாரத்தில் அமர்ந்து பரஞ்சோதி சித்தரை நினைத்து வழிபட, சேனா விற்கு பரஞ்சோதி காட்சியளித்தார்.
சேனாவிற்கு வர்மா ரதியை மீட்டெடுக்கும் வழியையும் காட்டினார்.
சேனா மகிழ்ச்சியில் திளைத்தான்.