சேரன் தலைவி-2 உதவிக்கரம்

சேரன் தலைவி-2 உதவிக்கரம்

 

இளஞ்சூடான காலை வெயில் அந்த அடர்ந்த மலைக் காட்டில் முழுமையாக விழ முயன்றுத் தோற்றது.சுற்றிலும் பலவிதமான பட்சிகளின் உதயராகம் இனிமையை வாரி வழங்கியது.பலாமரத்தில் அமர்ந்த வானரங்கள் பழத்திற்காக போட்டி போட்டன.எங்கோ தூரத்தில் அருவி விழும் ஓசை ஹோவென கேட்டது.  துள்ளி ஓடும் ஓடை கரையின் அருகில் கம்பீரமாக காட்சியளித்தது  சேர நாட்டின் ஈடில்லா இளவரசன் நார்முடி சேரலின் அரண்மனை.சுற்றிலும் கட்டுக் காவல் நிரம்பி இருந்தது.வேல் பிடித்த வீரர்கள் கோட்டையைப் பாதுகாத்தனர்.

அரண்மனையின் பின்கட்டில் கலைநயத்தோடு மிளிர்ந்தது அந்தப்புரம்.அங்கே வேலைப்பாடான கட்டில் கவலையோடு அமர்ந்திருந்தாள் மாங்களாம்பிகை.இளயவரம்பனின் மூத்த மகள்.இளங்கோவின் தமக்கை.

தமக்கை என்பதை விட அவனுக்கு அவளை தாய் என்றே கூறிவிடலாம்.அவர்களின் தாய் பதுமன் தேவியை விட மங்களாம்பிகையே தம்பியை சீராட்டி பாராட்டி வளர்த்தது.இருவருக்கும் இடையே பத்து வயது வித்தியாசம் இருந்ததும் ஒரு காரணம்.

இப்போதும் கூட அவனை நினைத்தே அவள் கவலையோடு அமர்ந்திருந்தது.சுற்றுப்புற நினைவின்றி அமர்ந்திருந்தவள்,

“அக்கா!எதைப் பற்றி இவ்வளவு ஆழ்ந்த யோசனை?”என்ற கம்பீரக் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

அங்கே அந்தப்புர அறையை சிறியதாக்கிக் கொண்டு நின்றிருந்தான் சேர நாட்டின் மாவீரன் நார்முடி சேரல்.நெருங்கியவர்களுக்கு இளங்கோ.

காலில் வீரக்கழலும், இடது காலில் வீரக் கண்டையும்,இரும்பை நிகர்த்த இடையில் அரையணியும், நீண்ட தோளில் வாகுவலயமும், திண்ணென்ற மார்பில் பவளவடமும்,பகைவரை ஒரே அடியில் வீழ்த்திடும் கைகளில் வீரவளை மற்றும் கடகமும்,தலையில் இளவரசனுக்குரிய பொற்கிரிடம் என கோடி சூரிய பிரகாசத்தோடு இருந்தான் அவன்.

தம்பியின் கம்பீரத்தில் எப்போதும் போல பெருமிதம் கொண்டாள் மங்களாம்பிகை.சேர நாட்டில் மட்டுமல்லாது  மூவேந்தரை மிஞ்சும் அஞ்சா சிங்கம் தன் இளவல் என்பதில் அவளுக்கு எப்போதுமே அடங்கா கர்வமுண்டு.

அவனுக்கும் தமக்கை என்றால் அடங்கா பாசம்.அவள் மனதை அவனை விட அறிந்தவர் வேறிலர்.தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தமக்கை சோழன் கிள்ளியை மணந்து சோழ நாடு சென்ற பின் அவன் நொந்தே போனான்.நெடுநாட்களுக்கு பின் இப்போது தான் பிறந்த நாடு வந்திருக்கிறாள் அவள்.நேராக தாய் தந்தையைக் கூட பாராமல் இளவலின் காவல் ஊரான குன்ற நாட்டிற்கு வந்து விட்டிருந்தாள்.வந்து வாரம் ஒன்றானாலும் இளங்கோ நாடு காவலில் ஆழ்ந்து அரண்மனைக்கு வருவதே அரிதாகிவிட்டது.இப்பொழுது வந்து என்ன என்று கேட்கும் தம்பியிடம் பேச விரும்பாமல் கோபத்தோடு முகத்தை திருப்பிக் கொண்டாள் அவனின் ஆருயிர் தமக்கை.

மூத்தவளின் கோபம் இளங்கோவின் முகத்தில் இளநகையை வரவழைத்தது.மெதுவாக சென்று அவளருகில் அமர்ந்தவன்,

“அக்கையார் இளங்கோவின் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார் போலிருக்கிறது…எதற்காகவோ தெரியவில்லை…?!”என்றான் ஏதுமறியாதவன் போல்.

“கோபப்படாமல் உன் புகழ் பாட சொல்கிறாயா?”

“எவரும் என்னை புகழ வேண்டுமென்று எதிர்பார்பவன் நானில்லை என்பது தங்களுக்கு நன்றாகத் தெரியும்… எனக்கு வேண்டியது சேர நாட்டின் பாதுகாப்பு.. மக்களின் மகிழ்ச்சி..அவ்வளவு தான்”

“இதை இதைத்தான் நான் கூற வருவது…நாடு நாட்டு மக்கள் என்று நீ உன்னைப் பற்றி எண்ணுவதே இல்லை… உனக்கென்று ஒரு வாழ்வு உண்டென்பதை சிறிதேனும் நினைத்துப் பார்கிறாயா?”

“என்னைப் பற்றி நினைக்க என்ன இருக்கிறது?! வீரனுக்கு நாடே முக்கியம்”

“வெறும் வீரனாக மட்டுமில்லாமல் ஒரு ஆண்மகனாக உன்னை எண்ணிப் பார்… மனிதனுக்கு புறம் மட்டுமல்ல அகமும் தேவையான ஒன்று…அதை மறந்து விடாதே”

“மறுபடியும் அதே பேச்சை ஆரம்பித்து விட்டாயா”

“தம்பி! நான் சொல்வதை கேள்…நீ இம்மென்றால் எத்தனையோ இளவரசிகள் உனக்கு மாலையிட காத்திருக்கிறார்கள்”

“அக்கா! நீங்கள் நினைக்கும் இளவரசிகள் எல்லாம் மூடுபல்லக்கில் செல்லும் பயந்தாங்கொள்ளிகள்… அவர்கள் யாரும் எனக்கு சரிவர மாட்டார்கள்”

“பின் எப்படிப்பட்ட பெண்தான் வேண்டும் என்கிறாய்? அதையாவது கூறு”

“நான் விரும்பும் பெண் சாதாரண பெண்ணாக இருக்க மாட்டாள்…எதை கண்டும் பயப்படாத அஞ்சா நெஞ்சம் கொண்ட வீராங்கனையாக அவள் இருக்க வேண்டும்.எது வந்தாலும் அதை எதிர்த்து போராடும் போராளியாக இருக்க வேண்டும்.என்னைப் போலவே சேர நாடே அவள் உயிராக இருக்க வேண்டும்.அப்படிப்பட்டவளே இந்த நார்முடி சேரலின் இதயராணி!”

தம்பியின் வர்ணனையில் திகைத்து தன் கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு விட்டாள் தமக்கை.அவன் கூறும் விதமான பெண்ணை எங்கிருந்து தேடுவது.சேர நாட்டு பெண்கள் வீரமிக்கவரே.ஆனால் இளங்கோவின் கனவு பெண் சாதாரணமாக கிடைக்காத அபூர்வ வகையைச் சேர்ந்திருந்தாள்.ஒருவேளை அப்படிப்பட்ட பெண் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?தம்பி இப்படியே இருந்துவிடுவானோ என்று கவலையுற்றாள் அவள்.அதைப்பற்றி மேலும் வாதிடாமல் மவுனியானாள்.

??????????????

ஓர் இரவு ஓர் பகல் பிரயாணம் செய்து வெய்யோன் மறையும் சமயத்திற்கு குன்ற நாட்டின் எல்லையில் இருந்தாள் வண்டார்குழலி.குதிரை மட்டுமல்லாது அவளும் களைத்திருந்தாள்.ஆகவே சிறிதே இளைப்பாற எண்ணியவள் அருகிருந்த அழகிய வனத்தில் மரம் ஒன்றிற்கு குதிரையை கட்டி அகன்ற மர வேரில் அமர்ந்தாள்.

களைப்பில் கண்சொருக லேசான நித்திரையில் ஆழ்ந்தாள்.ஆனால் அவள் புலங்கள் கூர்மையாகவே இருந்தன.அதனாலையே சிறிது நேரத்தில் மனிதரின் கால்கள் பட்டுபடாமல் காய்ந்த சருகுகளின் மேல் வைக்கும் ஓசையில் அவள் எச்சரிக்கை அடைந்தாள்.மூடிய இமைகளை திறவாமலே இடையில்  இருந்த வாளை இறுக பற்றியது அவள் கரம்.

நேரம் செல்ல செல்ல காலடி ஓசை மிக அருகே கேட்டது.அருகில் நிழலாடியதில் அவர்கள் மிக அருகே இருப்பதை உணர்ந்தும் கண்களை திறவாமல் உறங்குபவள் போல் கிடந்தாள்.ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாள் என்று எண்ணி முகமூடி அணிந்த அந்த நால்வரும் அலட்சியமாக அருகில் வந்தது தான் தாமதம் பெண் வேங்கையாக பாய்ந்து எழுந்து வாளை சுழற்றியபடி அவர்கள் தாக்கத் தொடங்கிவிட்டாள்.

கேவலம் பெண்தானே என்று அலட்சியமாக எண்ணியவர்கள் நாற்புறமும் சிதறி விழுந்தனர்.ஆனால் உடனேயே சட்சட்டென எழுந்தவர்கள் மீண்டும் தாக்கத் தொடங்கினர்.குழலியும் சலிக்காமல் தன் முழு பலத்தோடு போரிட்டாள்.

இந்த மயிற்கூச்செறியும் சண்டையை இரண்டு கூர்கண்கள் தூரத்தில் இருந்து பார்த்து  மின்னின.இதுவரை எங்கும் கண்டறியா காட்சியை கண்டதில் அந்த கண்களுக்கு சொந்தமானவரின் உள்ளம் உவகையில் துள்ளியது.அதற்குள் எதிரில் கண்ட காட்சி இதயத் துடிப்பை அதிகரிக்க செய்வதாக இருந்தது.

வலுச்சண்டைக்கு வந்த நால்வரில் இருவரை மேலுலகம் அனுப்பி இருந்தாள் குழலி.மீதமிருந்த இருவரோடு அவள் வாட்சண்டையில் மும்மரமாக இருந்த போது அதில் ஒருவன் மட்டும் சிறிதே பின்னடைந்தவன் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த குறுவாளை குழலியின் முதுகில் பாய்ச்ச ஓங்கினான்.

ஆனால் சண்டையை இதுவரை கூர்மையாக கவனித்த வந்த உருவம் தன் குறுவாளை அவனை நோக்கி வீசிவிட்டது.

ஹா…!”என்ற அலறலோடு குழலியைத் தாக்க முயன்றவன் பொத்தென பூமியில் விழுந்து எமனுலகு சென்றான்.

தனக்கு பின்னால் நடந்து முடிந்ததை ஓரளவு ஊகித்த குழலி ஒரே வீச்சில் தன் எதிரில் நின்ற பாதகனை ஒழித்தவள் பின் திரும்பி  கீழே இருந்தவனை விரிந்த கண்களோடு ஏறிட்டாள்.அவன் மார்பில் பாய்ந்திருந்த குறுவாள் அவள் திகைப்பை அதிகப்படுத்தியது.தன்னை காப்பாற்றியது யார் என சுற்றும் முற்றும் அவள் தேடிய போது சிறிது தூரத்தில் இருந்து ஒரு நெடிய மனிதன் இவளை நோக்கி வந்தான்.

அவன் உடை அவன் வீரன் என்று பறைசாற்றியது.முகத்தின் பாதியை கரிய நிற அணல் மறைத்திருந்தது.அகன்ற தோள்கள் அவன் திண்மையை காட்டியது.சாதாரண பெண்களை விட சிறிது உயரமான குழலியை விடவும் அவன் உயரமாக இருந்தான்.கூர்கண்கள் அவளையே உற்று நோக்கியபடி இருந்ததில் இதுவரை இல்லாமல்  ஏனோ அவளுக்கு தொல்லையாக இருந்தது.

ஆனால் அவனோ களைத்து சோர்ந்திருந்த போதும் மங்காத அவள் எழிலில் மெய் மறந்திருந்தான்.கயல் மீனங்களை விஞ்சும் அவள் விழிகளும்,செந்தாமரையை ஒத்த கன்னங்களும்,பவளத்தை தோற்றகடிக்கும் இதழ்களும்,இருந்தும் இராத சிற்றிடையும்,மென்மையாக தோன்றினும் வலிமை மிக்க அவளின் கைகளும்,காற்றின் சலசலப்பில் நடனமாடிய அவளின் கருங்கூந்தலும் அவனை வேறுலகிற்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தது.

ஆனால் ஊடுருவும் பார்வையை தாளமாட்டாத குழலி,

“ஐயா தக்க சமயத்தில் என் உயிரை காப்பாற்றினீர்… உமக்கு மிக்க நன்றி”என்று பட்டென தன் கைகளை குவித்தாள்.

அவள் நன்றி உரையில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்,

“நான் ஏனும் பெரிதாக செய்துவிட வில்லை.மூன்று பேரை சமாளித்தவளுக்கு அவன் ஒருவன் பெரிதல்ல…அது போகட்டும் பெண்ணே நீ யார்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?உன் பெயர் என்ன? இந்த காட்டிற்கு ஏன் வந்தாய்? அவர்கள் ஏன் உன்னை கொல்ல முயன்றனர்?”என்று கேள்விகளை அடுக்கினான்.

அவன் கேள்விக் கணையில்‌ திணறிய குழலி தன்னை பற்றி கூற விரும்பவில்லை ஆயினும் உயிர் காப்பாற்றியவன் என்பதால் முயன்று அவன் கேள்விகளை மனதில் ஓட்டியவள்,

“வீரரே!என் பெயர் வண்டார் குழலி…. நான் பூழி நாட்டவள்.இங்கே முக்கியமான ஒரு காரியத்திற்காக வந்திருக்கிறேன்.என்னை தாக்க முயன்றவர் யாரென்று நான் அறியவில்லை.என்னை எதற்காக கொல்ல முயன்றனர் என்பது தெரியவில்லை…ஆனால் சேர நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை என்பது மட்டும் திட்டமாக எனக்கு தெரிந்துவிட்டது”என்றாள் கோபத்தோடு.

வண்டார்குழலி என்ற பெயர் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.ஆனால் அவள் பேச்சில் அவனுக்கு ஏதோ நெருடியது.

“பெண்ணே!மாமன்னர் இமயவரம்பனின் ஆட்சியில் யாருக்கும் எந்த தொந்தரவும் நேரிடாது.யாரேயாயினும் நிர்பயமாக சுற்றி வரலாம்”

“இல்லை… உங்கள் மாமன்னர் ஆட்சியிலும் கொலை கொள்ளை பெண்களின் மானபங்கம் எல்லாம் சர்வசாதாரணமாக நடந்துக் கொண்டிருக்கிறது…ஆனால் அதை அவரும் அறியவில்லை…அவரின் ஆசை மகனும் அறியவில்லை…நான் குன்ற நாட்டிற்கு வந்ததே உங்கள் இளவரசர் நார்முடி சேரலுக்கு இதையெல்லாம் விளக்கமாக எடுத்துரைக்க.. இல்லையில்லை சண்டை போட வந்திருக்கிறேன்”என்று படபடத்தாள்.

“என்ன இளவரசரோடு சண்டை போடவா?!!!”என்று ஆச்சரியமாக கேட்டவனின் இதழ்கள் ரகசியப் புன்னகையில் மலர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!