Thithikuthey 5 & 6

 ஐந்து

கௌரவம்

இந்த ஐந்தெழுத்து வார்த்தைக்காக புதைக்கப்படும் உண்மைகள் எத்தனை… மறக்கப்படும் நியாயங்கள் எத்தனை? பஞ்ச மகா பாதகத்தை கூட நியாயப்படுத்தி பேசுவது எதற்காக?

இந்த ஐந்தெழுத்து வார்த்தைக்காக!

காதலித்து திருமணம் செய்தவர்களை கொலை செய்துவிட்டால் இவர்களது கௌரவம் மீண்டுவிடுமா? நடந்தது தான் மறைந்துவிடுமா? அப்படி அந்த கௌரவத்தை காப்பாற்றி மட்டும் இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? இறந்த பின் எடுத்து செல்ல முடியுமா? கை பிடி சாம்பலில் முடிகிற வாழ்க்கைக்கு இவர்கள் பூசும் வண்ணங்கள் தான் எத்தனை?

சக்திவேலுக்கு மனம் கொதித்தது… நடந்தது அநியாயம் என்று தெரிந்தும் பேசமுடியாத சூழ்நிலையில் என்னை நிறுத்தி விட்டாயே ஆண்டவா என்று கடவுளை நொந்து கொண்டிருந்தான்… இப்போதும் அவர்களது சட்டையை பிடித்து கேள்வி கேட்க முடியும் தான்… ஆனால் எந்த அடிப்படையில் கேட்பது? எந்த ஆதாரத்தை வைத்து கொண்டு கேட்பது?

சொல்லிவைத்தது போல அனைவரும் ஒன்றை போலவே பேசி நடந்த அநியாயத்தை மூடி மறைப்பவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? இரண்டு கொலைக்கு சமூகமே துணை போகிறது என்றால் அவர்களது மனதில் சாதி எந்த அளவிற்கு புரையோடி போயிருக்க வேண்டும்?

ஒரு நாள் கூட திருமணம் முடிந்து வாழாமல் இறந்து போன அந்த காதல் உள்ளங்களை நினைத்து மனம் கலங்கினான்… திருமணம் முடித்தவுடன் எங்காவது சென்றிருந்தாலாவது தப்பித்திருக்க கூடுமோ? பெற்றவர்களின் ஆசி வேண்டும் என்று அவர்களுக்காக வந்த தவற்றின் விலை… இன்று இரு உயிர்கள்!

கனமான மனதுடனே கல்லூரி டிரிப்புக்காக போக… சித்ரா, நந்தினியோடு வளர்மதியும் வரவில்லை… என்ன காரணமோ? ஒரு வேளை இறப்பு வீட்டில் இருக்கக்கூடும் என்று நினைத்து கொண்டான்… சித்ராவின் வீட்டை தாண்டும் போது மனம் கனக்க… ஒரு நிமிடம் வேனை மெதுவாக செலுத்தினான்.

முன் வாசலில் அமர்ந்து சித்ராவின் தந்தை முத்துவேல் அழுது கொண்டிருக்க… வீட்டினுள் இருந்து பெண்கள் கதறுவது காதில் விழுந்தது… ச்சே என்ன மனிதர்கள் இவர்கள்… செய்வதையும் செய்துவிட்டு… இப்படியும் நடிக்க முடியுமா?

அடுத்த ஒரு வாரம் அது போலவே கழிய… அன்று வேலுச்சாமியின் தோப்புக்கு தேங்காய் லோடு ஏற்ற சென்றிருந்தான்… அவருக்கு பதிலாக நந்தினி காய் கணக்கை பார்த்து கொண்டிருக்க… சக்திவேலுடைய மினிலாரி தோப்புக்குள் நுழைவதை வெறுமையான பார்வையோடு பார்த்தாள்.

அவனது வாகனம் நிற்பதை கண்டவுடனேயே காய் அடுக்குபவர்கள் மினி லாரியில் தேங்காய்களை ஏற்ற ஆரம்பித்து இருந்தனர்… வேலுச்சாமி இல்லாததால் நந்தினியிடம்.

“எந்த குடோனுக்கு?”

“திருச்சி காந்தி மார்கெட்டாம்… என்று கூறி முகவரியை சீட்டில் எழுதி கொடுத்து விட்டு…படிக்க தெரியும் தான?” என்று கேட்க… அவளுக்கு பதிலை கூறாமல் கைபேசியை எடுத்து கொண்டு நகர்ந்தான்.

“அண்ணா… சக்திவேல் பேசறேன்… கரூருக்கு எதாச்சும் லோடு இருக்கா?” அந்த புறத்தில் சாதகமாக பதில் வர.

“திருச்சி வர்றதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகிடும்ண்ணா…

“…

“சரிங்கண்ணா… என்று பேசிவிட்டு வைத்தான்… திரும்பி நந்தினியை பார்த்தவன்.

“ஆமா… என்ன கேட்ட நீ?” அவளை திரும்ப கேட்க சொல்ல.

“ம்ம்ம் படிக்க தெரியுமான்னு கேட்டேன்… அதே போலவே கேட்க அவளை கடுப்பாக பார்த்தவன்.

“இல்லம்மா மகாராணி… நாங்கல்லாம் படிக்க தெரியாத காட்டானுங்கதான்… நீங்க படிச்ச அறிவாளிங்களை வெச்சே வேலை வாங்கிக்கங்க… என்று அவளிடம் கொதித்து விட்டு.

“டேய் சின்னா… ஏத்துன காய இறக்கு… எனக்கு வேற வேலை இருக்கு… என்று கூறிவிட்டு நடையை கட்டினான்! அவன் போவதை பார்த்தவுடன் நந்தினிக்கு பதட்டம் சூழ்ந்தது… தந்தைக்கு தெரிந்தால் தன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவாறே என்று பயந்து கொண்டு.

“சின்னா இறக்காத… நான் பேசிக்கறேன்… அவசரமாக கூறிவிட்டு சக்திவேலை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.

“சக்தி… ப்ளீஸ் நில்லு… அவனுடைய உயரத்திற்கு வேக நடையிட்டவனை பிடிக்கவே முடியாமல் நந்தினி சற்று சப்தமாக கத்த… திரும்பி வந்தவன்.

“ஏன்… உனக்கெல்லாம் மரியாதையா பேசவே தெரியாதா? எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டியா?”

“எனக்கு சட்டுன்னு வர மாட்டேங்குது… சாரி… நான் ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்…

“என்னைக்கு தான்மா நீ ஒழுங்கா பேசியிருக்க?”

“சரி… ஒரு தடவை சாரி கேட்டேன்னு ஓவரா அட்வைஸ் பண்ண ஆரம்பிக்காத…என்று மீண்டும் கடுப்படித்தவளை முறைத்தான்.

“நான் ஒன்னு சொல்லட்டா… நீங்கல்லாம் மனசளவுல பெரிய ஜமீன்ங்கற நினைப்புலையே இருக்கீங்க… அதான் எங்களை மாதிரி ஆளுங்களை கண்டா அந்த கேப்பிடலிஸ்ட் புத்தி தானா வந்துடுதும்மா… இந்த பூஷ்வாத்தனம் உங்க ரத்தத்துல ஊறின விஷயம்… அது மாறாது… அவனது கருத்தை கேட்ட நந்தினி புருவத்தை உயர்த்தி

“என்ன கம்யுனிசம் பேசறீங்களா? நீங்க என்ன கம்யுனிஸ்டா?” ஆச்சரியமாக கேட்க.

“உண்மைய எடுத்து சொல்ல கம்யுனிஸ்டா தான் இருக்கனும்ன்னு அவசியம் இல்ல… ஆணித்தரமாக சொல்வதை கேட்டவளுக்கு அவனை வியப்பாக மட்டுமே பார்க்க முடிந்தது… மெளனமாக அவள் இருக்க.

“சரி சரி அதை விடும்மா… என்ன… மூணு பேரோட படிப்பும் அவ்வளவுதானா? அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பேசியாச்சாமே?”

சக்தி ஒரு மாதிரியான குரலில் அவளிடம் கேட்க… சட்டென்று அவளது கண்களில் கண்ணீர் குளம் கட்டியது… எவ்வளவு கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்திருந்தாலும் அதற்கான மரியாதை இவ்வளவுதானா என்கிற நினைவு அவளது சுயமரியாதையை பதம் பார்க்க.

“அது சம்பந்தமா உன் கிட்ட… சாரி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…மெலிதான குரலில் அவனிடம் கேட்க

“ம்ம்ம் சொல்லும்மா… ஏன்… உன் கல்யாணம் இன்னும் முடிவாகலையா?” அவன் கேட்டவுடன் கோபமாக நிமிர்ந்தாள்.

“அந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்டே நடக்காது… அந்த பேச்சை விடுங்க… உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்… தப்பா நினைக்க கூடாது… பலமான பீடிகையுடன் ஆரம்பித்தவளை கேள்வியாக பார்த்தான்.

“அது நீ சொல்ற விஷயத்தை பொறுத்ததும்மா…

“சித்ரா உங்களை லவ் பண்றா… நேரடியாக கூறிவிட்டு அவனது கண்களை பார்க்க… ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமலிருந்தவன் அடுத்த நிமிடம் லூசாப்பா நீயி என்பதை போல ஒரு லுக்கை விட்டான.

“அதுக்கென்ன?”

“என்ன சக்தி… நான் கதையா சொல்றேன்… அவ உங்களை லவ் பண்றா… இந்த கல்யாணத்துல இருந்து எப்படியாவது அவளை காப்பாத்துங்க… நீங்களே கல்யாணம் பண்ணிக்கங்க…

“ஏம்மா அந்த பொண்ணும் வெஷத்தை குடிக்கவா?” உள்ளே கனன்று கொண்டு கோபத்தை ரொம்பவும் வெளிகாட்டி கொள்ளவில்லையென்றாலும் அவனால் ஒன்றும் தெரியாதது போல காட்டி கொள்ள முடியவில்லை.

அவன் இப்படி கேட்கவும் அவளால் மனதின் ஆதங்கத்தை அடக்க முடியவில்லை… இயலாமையும் ஆற்றாமையும் கண்களில் நீரை வரவழைக்க… சட்டென்று கண்களில் இருந்து கண்ணீர் உருண்டு விழுந்தது… கண்களில் நீரை பார்த்தவுடன் அவனுக்கும் ஏதோ தவறு செய்கிறார் போல தோன்ற.

“இங்க நின்னு பேசாதம்மா… நல்லா இருக்காது… நான் கிளம்பறேன்… என்று கூறிவிட்டு அங்கு நிற்காமல் தேங்காய் லோடு ஏற்றியமினி லாரியை கிளப்பி கொண்டு போனான்… சக்தியின் வார்த்தைகள் அவளது இதயத்தை தைத்து இருந்தன.

*******

“எனக்கு கல்யாணம் வேணாம் வேணாம் வேணாம்… தலைவிரி கோலமாக கத்தி கொண்டிருந்தாள் நந்தினி… தன் தாயிடம்!

“சொன்னா புரிஞ்சுக்கோ கண்ணு… அப்பாரு முடிவு பண்ணிட்டாங்க… இன்னைக்கு சாயங்காலம் மாப்பிள்ளை வீட்ல வராங்க… இன்னைக்கு காலேஜுக்கு போக வேண்டாம்… வேணி பாசத்தோடு கூறினாலும் குரலில் இருந்த உறுதி மீறி பேசி விடாதே என்றது… ஏதாவது அசம்பாவிதமாகி விட்டால் தனக்கு இருப்பது ஒரே பெண்ணல்லவா என்ற கவலை அவள் அன்னைக்கு!

“அம்மா… எத்தனை முறை உன்கிட்ட சொல்லியிருக்கேன்… எனக்கு படிச்சு ஐஏஎஸ் பாஸ் பண்ணனும்மா… கலக்டராகனும்… ப்ளீஸ் மா… என்னோட லட்சியத்தை இப்படி குழி தோண்டி புதைக்காதீங்கம்மா… கண்ணில் நீர் வழிய கெஞ்சினாள்.

“பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்டி… புள்ளைய இப்படியா வளர்த்து வைப்பாங்க… எங்க காலத்துல எல்லாம் இப்படி எதிர்த்து பேசுனா வாய கோனூசியால தச்சு போடுவாங்க… தச்சு… நந்தினியின் அப்பத்தா இதுதான் சாக்கென்று மருமகளையும் சேர்த்து திட்ட.

“ஏய் கிழவி… இப்போ நீ உன் வாய மூட போறியா இல்லையா? நானே நொந்து போயிருக்கேன்… இதுல நீ வேற… அப்பத்தாவை கடிகடியென்று கடித்து வைக்க.

“ஆமான்டி… இப்போ உங்க அப்பன் வருவான்… அவன் கிட்டவும் இதே மாதிரி பேசு… அப்பத்தா தனது மகனை இழுக்க

“இது ஒன்னு தான் உங்களுக்கெல்லாம் தெரியும்…அப்பத்தாவை பார்த்துகோபமாக கூறிவிட்டு தனது அன்னையிடம் திரும்பி.

“சரிம்மா… மாப்பிள்ளை வீட்ல இருந்து ஈவினிங் தானே வருவாங்க… அதுக்குள்ளே நான் வந்துடறேன்… டிசி சர்டிபிகேட்காச்சும் எழுதி கொடுத்துட்டு வரேன்ம்மா… ப்ளீஸ்… அவள் கெஞ்சுவதை பார்த்த செல்விக்கு மனம் கனத்தது… அவரும் இது போன்ற அடக்குமுறைகளை தான்டி வந்தவர் தானே.

“சரிம்மா… அன்னைக்கு மாதிரி லேட் பண்ணிடாம காலேஜ் விட்டவுடனே வந்துரு… எதாச்சும் தப்பாச்சுன்னா உங்க அப்பா என்னை வெட்டி போட்டுருவாங்க நந்தினி… பயத்தோடு வழியனுப்பி வைத்த தாயை வெறுமையாக பார்த்தாள் நந்தினி.

ஒன்றும் பேசாமல் வேனில் ஏறியவள்… தனது தோழிகளும் இல்லாததால் வானத்தை வெறித்து கொண்டு வந்தாள்… தன் கண் முன் தனது எதிர்காலம் மிரட்டியது.

தனது வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால் சிறு வயது முதல் மனதில் பதிந்து போன தனது லட்சியம்…? வாழ்வது ஒரு முறைதானே? அதையும் மற்றவர்களுக்காக… அவர்களது ஆசைகளுக்காக… அவர்களது கௌரவத்திற்காக என்றே வாழ்ந்தாக வேண்டுமா என்று மனம் வெதும்பியது.

இன்னும் வேறு யாரும் வேனில் ஏறாமல் செந்திலும் இல்லாததால் தன்னை கவனிக்க யாருமில்லை என்கிற நினைவில் தனது நிலையை நினைத்து… கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க… கைகள் துடைத்து கொண்டேயிருக்க… ஏதாவது அதிசயம் நடந்து விடாதா என்று மனம் ஏங்கியது!

கண்ணாடி வழியாக நந்தினியை பார்த்த சக்திவேலுக்கு மனம் பிசைந்தது… அவள் இந்தளவு கலங்கி அவன் பார்த்ததில்லை… தைரியம் மிகுந்தவள்… அவள் இந்தளவுக்கு கலங்கி போயிருக்கிறாள் என்றால்…? ? ?

ஐந்து நிமிடம் தாமதமானாலும் பரவாயில்லை என்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓரமாக நிறுத்தினான்… நிறுத்திவிட்டானே தவிர நந்தினியிடம் பேச தயக்கமாக இருந்தது… அன்று அவளே பேசியபோது முகத்தில் அறைந்தார் போல கூறிவிட்டு… மறுபடியும் எப்படி பேச்சை துவக்குவது என்று யோசித்தான்.

டிரைவர் சீட்டிலிருந்து எழுந்து அவளை நோக்கி வந்தான்… அவன் வருவதை பார்த்தவள் அவசரமாக கண்களை துடைத்தாள்… அவளை பார்த்து பேசும் விதமாக அமர்ந்து கொண்டு.

“என்னம்மா பிரச்சனை?” என்று நேரடியாக கேட்க

“ஒண்ணுமில்ல… உள்ளே சென்ற குரலிலேயே பதிலளித்தாள்.

“அப்புறம் ஏன் இந்த அழுகை…

சக்திவேல் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் உதடுகள் அழுகையில் துடிக்க அவனை பார்த்தாள்… ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் கட்டுப்படுத்த முடியாமல் போக… முகத்தை மூடி கொண்டு அழ ஆரம்பித்தாள்… அவனுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை… இது போன்ற சூழ்நிலைகள் அவனுக்கு பழக்கமில்லாதது.

“ஏன்மா என்னாச்சு?” சற்று ஆதரவாக அவன் கேட்க… கேவிக்கொண்டே அவனை பார்த்து.

“எனக்கு படிக்கணும்… ஐஏஎஸ் படிச்சு கலெக்டராகனும்…

“ஏன்… கல்யாணம் பேசிட்டாங்களா… அவன் புரிந்து கொண்டு கேட்க அவள் கேவிக்கொண்டே தலையாட்டினாள்.

“ஆமா…

அந்த பெண்ணை பார்த்து பரிதாபமாக இருந்தது சக்திவேலுக்கு… காலேஜ் டிரிப் அடிக்க ஆரம்பித்த எட்டு வருடங்களில் எத்தனை மாணவிகளை பார்த்திருப்பான்… படிக்கும் போது லட்சிய கனவுகளை சுமந்து கொண்டு படிக்க… அவர்களது வீட்டில் அந்த லட்சியங்களை அங்கீகரித்துஅதற்கு துணையாக இருப்பவர்கள் வெகு சொற்பம் என்று அவன் அறியாயததா? திருமணமாகும் வரை இந்த வலி இருக்கும்… காலம் போக போக மறைந்து விடும் என்று எண்ணி கொண்டான்… அதையே அவளுக்கும் கூறினான்.

“இதெல்லாம் சகஜம் தான்… கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியா போயிடும்… பெத்தவங்க பிள்ளைங்களுக்கு கெடுதல் நினைக்க மாட்டாங்க… என்று பொறுமையாக எடுத்து கூற

“அப்போ புனிதாக்கா? அவங்க ஏன் விஷத்தை குடிச்சாங்க?” சக்திவேலை பார்த்து அவள் கேட்க… புனிதாவையும் அவளது கணவனையும் நினைக்கும் போது சக்திவேலின் ரத்தம் கொதித்தது! கைகள் இறுக.

“அது அவங்க கௌரவத்தை காப்பாத்திக்கம்மா… அவனுக்கே ஒப்புதல் இல்லாத பதிலை அவளுக்கு அவன் தர.

“அப்போ கௌரவம்ன்னு வந்தா பெத்த பாசம் கண்ணுக்கு தெரியாது… அப்படிபட்டவங்க சொல்றதை நம்பி ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டனுமா?”

அவள் கேட்ட கேள்வி வெகு நியாயமாக இருக்க… அவனால் அதற்கு பதில் கூற முடியவில்லை… மெளனமாக இருந்தவனுக்கு அவனுடைய ஐந்து வயதில், தான் எரிவதை பற்றி கவலைப்படாமல்… என் பிள்ளையை காப்பாத்துங்க என்று தீயில் இருந்து மகனை எறிந்த தன் தாயின் நிழல் பிம்பம் அவன் கண் முன்னே வந்து போனது? இதில் யார் பாவப்பட்டவர்கள்?

“எது நடந்தாலும் நன்மைக்கேன்னு எடுத்துக்கம்மா… நீ கலெக்டராகனும்ன்னு விதி இருந்தா அதை யாராலும் மாத்த முடியாது… எதை நினைச்சும் கவலைப்படாத…

அவளுக்கு ஆதரவாக கூறிவிட்டு வேனை கிளப்ப சென்றான்… நந்தினிக்கு மனதின் பாரம் பெருமளவில் குறைந்தது போல இருந்தது!

 ஆறு

கல்லூரிக்கு சென்ற நந்தினிக்கு என்ன செய்வதென்று முதலில் புரியவில்லை… வளர்மதியும் சித்ராவும் இருந்தாலாவது அவர்களிடம் ஏதாவது யோசனை கேட்டிருப்பாள்.

தோழிகள் நிறைய பேர் இருந்தாலும் அவர்களை தவிர மிகவும் நெருக்கமான தோழிகள் யாரும் அவளுக்கு இருக்கவில்லை… மற்ற தோழிகளிடம் எல்லாம் மேலோட்டமாக மட்டுமே பழகி அவளுக்கு பழக்கம்… சிறுவயது முதல் இந்த மூவர் மட்டுமே ஒரு குழுவாக திரிவது என்பதால் இந்த குழப்பமான நேரத்தில் என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் விழித்தாள்.

தந்தை டிசிக்கு எழுதி கொடுக்க சொல்லியிருக்க… மூன்று மாதம் மட்டுமே மீதமிருந்த படிப்போ அவளது ஏக்கத்தை அதிகப்படுத்தியது… அதையும் அவளது தந்தையிடம் சொல்லி பார்த்திருந்தாள்.

“அப்பா மூணு மாசம் மட்டும் தாங்க்ப்பா இருக்கு… இந்த மூணு மாசம் மட்டும் வெயிட் பண்ணுங்கப்பா… இல்லைன்னா மூணு வருஷமா படிச்சது வீணா போய்டும்… ப்ளீஸ் பா… என்று கெஞ்ச.

“ஏம்மா… அங்க உன்னை வேலைக்கு அனுப்ப போறாங்களா? பொங்கி போடறதுக்கு இதுவே போதும்… பெரிய படிப்பு படிச்சவனெல்லாம் மாப்பிள்ளையோட மில்லுல அவர்கிட்ட கைகட்டி சம்பளம் வாங்கறான்… நீயென்ன இந்த பிசாத்து படிப்புக்கு இப்படி கூப்பாடு போடற… ஒரே வார்த்தையில் முடித்து விட்டு சென்று விட்டார்… ஆனால் தங்க பதக்க கனவில் இருந்த நந்தினிக்கு இது அதிர்ச்சியை கொடுத்திருந்தது!

“அட்டென்டன்ஸ் வேணும்னா போட சொல்லிடறேன் நந்தினி… மூணு மாசம் கழிச்சு எக்ஸாம் மட்டுமாச்சும் அட்டென்ட் பண்ணிடு… இப்போ போய் டிசி வேணும்ன்னு கேக்கறியே… உன்னை நாங்க கோல்ட் மெடல் வாங்குவன்னு எதிர்பார்த்துட்டு இருக்கோம்மா…

கல்லூரி முதல்வர் அவளது ஏக்கத்தை அதிகபடுத்த… டிசிக்கு அப்ளை செய்வதற்காக கல்லூரி ஆபீஸ் அறைக்கு வந்தவள்… தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்.

அவளது இப்போதைய முடிவில் தான் அவளது வாழ்க்கையே அடங்கியிருப்பதாகபட்டது… வளர்மதிக்கு நடப்பது கட்டாய திருமணமல்ல… முதலில் பேசி வைத்தது தான்… ஆனால் சித்ராவுக்கு தன்னை போலவே கட்டாய திருமணமென்பதால் அவளுடைய மனநிலையும் மிகவும் மோசமாகத்தான் இருக்கும்… அவளே அந்த சூழ்நிலையில் இருக்கும் போது தன்னுடைய குழப்பத்திற்கு என்ன முடிவு சொல்லிவிட கூடும்…? ? இருவரையும் அழைக்க பிரியப்படவில்லை அவள்.

சிறிது நேரம் யோசித்தவள்… அந்த ஆபீஸ் போனிலிருந்து சக்தியின் எண்ணிற்கு அழைத்தாள்… தான் செய்வது சரியா இல்லை தவறா என்றும் அவளுக்கு புரியவில்லை.

“ஹலோ… அவனது குரலை கேட்ட நந்தினி

“ச… சக்தி… சக்திண்ணா… நான் நந்தினி… பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் நந்தினி திணறி கொண்டிருக்க… மறுபுறமும் சிறிது மௌனமானது.

“சொல்லும்மா… ஏதாவது பிரச்சனையா?”

“இல்ல… எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு… ஒரு அட்வைஸ் வேணும்… அதான் கூப்பிட்டேன்…

“சொல்லும்மா… என்ன ஆச்சு?”

“அப்பா டிசிக்கு அப்ளை பண்ண சொல்லிட்டாங்க… ஆனா எங்கபிரின்சிபல்… அட்டென்டன்ஸ் போட்டுடறேன் எக்ஸாம் மட்டும் வந்து எழுதிடு இல்லைன்னா மூணு வருஷ படிப்பு வீணாகிடும்ன்னு சொல்றாங்க… அதான் என்ன செய்யறதுன்னு புரியல… மெளனமாக கேட்டவனுக்கு மனதின் ஓரத்தில் மகிழ்வாக இருந்தது… ஒரு ஜீவன் அவனிடம் யோசனை கேட்பது ஒன்றே அவனது மகிழ்வுக்கான காரணமாக போதுமானதாக இருந்தது.

“இப்போ என்ன நான் செய்யட்டும்?”

“டிசி அப்ளை பண்ண வேணாம்மா… உங்க அப்பா கேட்டா பண்ணிட்டேன்னு சொல்லிடலாம்… டைம் இருக்குல்ல… அந்த பையனை கன்வின்ஸ் பண்ணி எக்ஸாம் எழுதிடலாம் இல்லையா… அவளுக்கு அது சரியாக பட.

“சரிங்கண்ணா… ரொம்ப தேங்க்ஸ்… பயங்கர குழப்பத்துல இருந்தேன்…

“கவலைப்படாதம்மா… எது நடக்கணும்ன்னு இருக்கோ அது மட்டும் தான் நடக்க முடியும்… அதை மட்டும் நம்பு! இந்த வார்த்தைகளே அவளுக்கு இப்போதைக்கு போதுமானதாக இருந்தன… பேசிவிட்டு வைத்தவளுக்கு புதியதாக பலம் வந்தது போல இருந்தது!

*******

அன்று மாலை அவசராமாக கட்டிட பணிக்காக சிமென்ட் அவசரமாக தேவைப்பட செந்திலை மினி லாரியில் அந்த பணிக்கு அனுப்பி விட்டு… தான் மட்டும் காலேஜ் டிரிப்புக்கு வந்திருந்தான் சக்திவேல்… யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் வந்த நந்தினியை பார்த்து ஆச்சரியப்பட்டனர் உடன் இருந்த அவளது தோழிகள்.

எப்போதும் சோழியை குலுக்கி விசிறியது போல லொடலொடவென பேசிக்கொண்டே வருபவள் மெளனமாக வந்தால்… ஆனால் யாருக்கும் பதிலளிக்கும் மனநிலையில் இல்லை அவள்… அனைவரையும் இறக்கி விட்ட பின் வாங்கலை நோக்கி போய் கொண்டிருந்தது அந்த டெம்போ ட்ராவலர்.

“என்னம்மா ஆச்சு?” டிரைவர் சீட்டில் இருந்தபடியே சக்தி கேட்க

“நீங்க சொன்ன மாதிரி டிசிக்கு எழுதி கொடுக்கலை… சோகமாகவே கூற.

“அதுக்கு எதுக்கு கலெக்டர் மேடம் இப்படி சோகமா இருக்கீங்க?” புன்னகையோடு அவன் கேட்க… அவனா இவன் என்று வியப்பாக பார்த்தாள் நந்தினி… அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து பார்த்தால் அவனை நன்றாக பார்க்க முடியுமாதலால் அவனது சிரித்த முகம் அவளுக்கு வியப்பை தந்தது.

“ஏன்மா அப்படி பார்க்கற?” அதே புன்னகையோடு சக்திவேல் கேட்க.

“இல்ல… உங்களுக்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா?” அதே பார்வையோடு கேட்டாள்… ஒரு முறை அவளை திரும்பி பார்த்து புன்னகைத்த சக்திவேல்.

“கலெக்டர் மேடம் கல்யாணமாகி போக போறீங்க… அப்புறம் கலெக்டராவும் ஆகிட்டா நம்மளை எல்லாம் கண்ணு தெரியுமோ தெரியாதோ… எதுக்கும் இப்போவே ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கி வெச்சுக்கலாம்ன்னு யோசனைல இருந்தேன்… அதுல கொஞ்சம் சிரிப்பு வந்துடுச்சு… நீளமாக பேசியவனை இன்னும் ஆச்சரியமாக பார்த்தாள் நந்தினி!

“நீங்க இவ்வளவு பேசுவீங்களா?” வியப்பாக கேட்டவளை.

“சிரிக்க தெரியுமான்னு கேக்கற… பேச தெரியுமான்னு கேக்கற… இதெல்லாம் தெரியாமையா இருபத்தி ஒன்பது வருஷமா இருக்கேன்… என்னம்மா நீ?”

புன்னகையை கைவிடாத முகத்தோடு அவன் கூற… முதல் முறையாக அவனை ஒரு ஆணாக பார்க்க உந்தியது நந்தினியின் உள்ளம்… வசீகரமான அந்த புன்னகை அவனுக்கு அவ்வளவு அழகாக பொருந்தி போக… இவன் ஏன் சிரிப்பதே இல்லையென ஒரு நிமிடம் ஆராய தோன்றியது.

அவனது உயரத்தையும் உடற்கட்டையும் அந்த புன்னகை தவழும் முகத்தையும் கண்டவளுக்குள் மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு… அந்த உணர்வு அவளை சிலிர்க்க வைத்தது.

அவளாக சென்று எப்போதும் செந்தில் அமரும் இருக்கையில் அமர்ந்தாள்.

“என்ன கலெக்டரம்மா பேசவே மாட்டேங்கறீங்க… புன்னகை மன்னனாக அவன் கேட்க… அந்த வசிய புன்னகையில் தனது உள்ளம் பறிபோவதை அந்த நொடியில் உணர்ந்தாள் நந்தினி.

“நீங்க பேசறீங்க இல்லையா… அதான் நான் வாயடைச்சு போயிட்டேன்… என்று கூறிவிட்டு “சும்மா சும்மா இப்படி கிண்டல் பண்ணாதீங்க… வெட்கபுன்னகையோடு அவள் கூற.

“எப்படி?”

“கலெக்டர் கலெக்டருன்னு… ப்ளீஸ்… அவளை திரும்பி பார்த்த சக்திவேல்… புன்னகையோடு.

“நம்ம கிட்ட இருக்கவே கூடாத ஒன்னு இருக்கு… அது என்ன தெரியுமா?” அவளை கேட்க… இருக்கவே கூடாததா என்று யோசித்தாள்… தெரியவில்லை என்று தலையாட்ட

“நெகடிவ் தாட் தான்ம்மா… நாம இப்படி ஆகனும்ன்னு நாம முடிவு பண்ணிட்டா கற்பனைல அதுவாகவே ஆகிடனும்… ஜேம்ஸ் ஆலன்னு ஒரு author சொல்லியிருக்கார்The outer conditions of a person’s life will always be found to reflect their inner beliefs அதாவது எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிடறோம்… நீ கலெக்டராகனும்ன்னு நினைச்சுட்டே இரு… அதுக்கு உன்னோட புல் பொட்டேன்ஷியல போட்டு படி… கண்டிப்பா ஆகிடுவ…

நீளமாக அவன் கூறி முடிக்க… அவள் வியப்பாக பார்த்தாள்… ஒரு வேன் டிரைவருக்குள் இப்படி ஒரு எண்ணபோக்கா? நம்பவே முடியவில்லை.

“ஜேம்ஸ் ஆலன் யாரு?” தெரியாத விஷயத்தை கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லையே என்று எண்ணிக்கொண்டு அவள் கேட்க

“ம்ம்ம் அவர் ஒரு பிரிட்டிஷ் தத்துவஞானி… செல்ப் ஹெல்ப் மூவ்மென்டுக்கு முன்னோடி… As a man thinketh அவரோட பெஸ்ட் செல்லர் புக்மா… நல்ல புக் படிச்சு பாரு… பெரும்பாலும் சுயமுன்னேற்ற புக்ஸ் தான் அவர் எழுதினது எல்லாம்…

“எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுருக்கீங்க… என்ன படிச்சுருக்கீங்க?”

“ஏன்… அவளை கேள்வியாக திரும்பி பார்த்தான்!

“இல்ல சொல்லுங்க… சும்மா தெரிஞ்சுக்கத்தான்… படிக்க தெரியுமா இல்லையான்னு இன்னொரு முறை நான் கேட்டுட கூடாது இல்லையா…

“ம்ம்ம்… ஏதோ ஓரளவு படிச்சிருக்கேன்… விடும்மா… சரி உன்னோட ஆப்ஷனல் சப்ஜெக்ட்ஸ் என்ன? சொல்லு… எனக்கு கிடைக்கறதை குடுக்கறேன்… என் ப்ரென்ட் கூட சிவில் சர்விஸ் அட்டெம்ப்ட் பண்ணிருக்காப்ல… நழுவி கொண்டு பேச்சை மாற்றுவதை புரிந்து கொண்டவள் தலையாட்டி கொண்டாள்.

“அதுக்காகத்தான் நான் சென்னை போகணும்ன்னு நினைக்கறேன்… அங்க எம்எஸ்சி ஜாயின் பண்ணிட்டு கோச்சிங் சென்டர்ல சேரனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா… அவளால் முடிக்க முடியவில்லை.

“எந்த சூழ்நிலைல இருந்தாலும் படிப்பு வரும்மா… அது நம்ம மனசை பொறுத்ததுதான்… என்ன சூழ்நிலையோ அதுக்கேத்த மாதிரி உன்னை அடாப்ட் பண்ணிக்கோ… அவளை வசியம் செய்து கொண்டிருப்பதை அறியாமலேயே அவன் பேசிக்கொண்டு இருந்தான்.

பேசிகொண்டிருந்த அவனை மொத்தமாக ரசிக்க ஆரம்பித்து இருந்தாள் நந்தினி… சிரித்து கொண்டிருந்த விழிகள், அழுத்தமான உதடுகள், வாகனத்தை செலுத்தி கொண்டிருக்கும் அந்தவலிமையான கைகள்… அவன் கைகளில் தன் கை சிக்குண்டு கன்றியது நினைவுக்கு வர… நந்தினிக்கு குப்பென்று வியர்த்தது.

இந்த உணர்வுதான் சித்ராவுக்கும் வந்திருக்குமோ என்று யோசித்தாள்… உடனே அவசரமாக அழிக்கவும் செய்தாள்… இது போன்ற விஷயங்களில் அடுத்தவரை ஒப்புமைப்படுத்துதல் தவறு என்று புத்தி சொன்னது.

தனது இந்த எண்ணபோக்கு சரியா என்று அவளால் உணர முடியவில்லை… இது மறைந்து கலைந்து போகும் உணர்வுகளாக இருக்க கூடுமோ?... இருக்கலாம்… ஆனால் இந்த உணர்வை வெறும் ஈர்ப்பு என்று அவளால் வகைப்படுத்த இயலாதபோது சித்ரா சக்தியை காதலிப்பதை நினைத்து மனம் குற்ற உணர்ச்சியின் பால் வசப்பட்டது.

சட்டென்று சடன் ப்ரேக்கில் நின்ற வாகனத்தால் தன்னுணர்வு அடைய பெற்றவள்… நிமிர்ந்து என்னவென்று பார்க்க… சக்திவேல் யோசனையாக சாலையை பார்த்து கொண்டிருந்தான்… அதிர்ச்சியோடு!

சாலையில் போக்குவரத்து இல்லாததால் வேகமாக வந்த லாரியில் சட்டென்று திரும்பிய இரு சக்கர வாகனம் சிக்கியிருக்க… அதில் பயணம் செய்த மூவரும் தூக்கி எறியப்பட்டு கிடந்தனர்… நந்தினி அந்த காட்சியை பார்க்க முடியாமல் ஐயோவென கண்களை மூடி தன் முகத்தை மறைத்து கொள்ள… சக்திவேல் அவசரமாக தனது இருக்கையை விட்டு இறங்கினான்.

இடித்த அந்த லாரிகாரனும் இறங்கியிருக்க… இருவருமாக அந்த மூவருக்கும் சுவாசம் இருக்கிறதா என்று பார்த்தனர்… அங்கொன்றும் இங்கொன்றுமாக போன வாகனங்களில் இருந்து இறங்கி ஒவ்வொருவராக பார்க்க… அரசு பஸ்சும் நிற்க… கூட்டம் சேர ஆரம்பித்தது.

“யோவ்… கண்ணை என்ன பொடனில வெச்சுகிட்டா ஓட்டுன? இல்ல தண்ணில இருக்கியா?” சக்திவேல் கடுமையாக அவனை கேட்க.

“தம்பி… திடீர்ன்னு வந்து விழுந்துட்டாங்க… அவனுமே பயந்திருந்தான்.

“ஆமா அவங்களுக்கு வேண்டுதலாக்கும்?” பக்கத்தில் இருந்த பஸ் டிரைவரும் சேர்ந்து கொள்ள அந்த இடத்தில் பதட்டம் சூழ்ந்தது… லைசன்ஸ், ஆர்சி புத்தகம் என அனைத்தையும் பறிமுதல் செய்தவன்… அவசரமாக காவல் நிலையத்திற்கு அழைத்தான்… நடந்ததை கூறினான்.

“சார்… மூணு பேருக்கும் உயிர் இருக்கு… நாங்க எங்க வேன்லையே கொண்டுட்டு போறோம்… என்ன பார்மாலிட்டினாலும் நீங்க பார்த்துக்கங்க சார்… என்று கூறி வைத்து விட்டு அங்கிருந்தவர்களை அழைத்தான்… இரண்டு பெண்களையும் அந்த ஆணையும் அங்கிருந்தவர்கள் தூக்கி வேனில் வைக்க… உடன் அவர்களும் உதவிக்கு வர… நந்தினி இன்னும் இறக்கிவிடப்படாமல் இருப்பதை உணராமல் வேன் கரூர்அரசு மருத்துவமனையை நோக்கி பறந்தது.