தூறல் போடும் நேரம் – 2

தூறல் போடும் நேரம் – 2

பகுதி 2

அந்த வீதியில் சற்று பார்வையாய், வண்ணமயமாய், கலைநயத்தோடு அமைந்த வீட்டின்  படிகளில் ஏறி உள்ளே சென்றவன், தனது முதுகு சுமையான பையை இறக்கி வைத்தான். பின் முற்றத்தில் இருந்த வாளி நீரில் கைக்கால்களை அலம்பியவன், “அம்மா…” எனக் குரல் கொடுத்தான்.

“இதோ வாரேன்” எனக் கையில் ஒரு துவாலையுடன் வந்தார் உமையம்மை. அதை வாங்கி முகத்தைத் துடைத்தவாறே “எப்படிம்மா இருக்க? நல்லா இருக்கியா மா” என வினவியவன், தாயை தலை முதல் கால் வரை வாஞ்சையாய் பார்த்தவாறே, கழுத்தோடு கட்டிக் கொண்டு அவர் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

அந்த ஒற்றை முத்தத்தில், தமையனின் அன்பையும், அவனின் மனதையும் உணர்ந்தவர் போல், “நான் நல்லா இருக்கேன் தம்பி, நீ எப்படிய்யா இருக்க. உன்ன நினைச்சு தான் எனக்கு இங்க ஒரே கவலை மனசுல எதையும் வச்சுக்காதய்யா… எல்லாத்தையும் கனவா நினைச்சு மறந்திரு சாமி” எனப் பூடகமாய் கூறினார்.

அவனுக்கு தெரியும், தன் தாயிடம் விஷயத்தை யார் கூறியிருப்பார்கள் என்றும், அதே சமயம் தன் தாய், தந்தை வரை இதைக் கொண்டு சென்றிருக்க மாட்டார்கள் என்று சர்வ நிச்சயமாய் தெரியும். அதனால் ஒரு பெருமூச்சோடு சரி என்பது போல் தலையை மட்டும் மேலும் கீழுமாய் ஆட்டி வைத்தான்.

“உதயா தான் என்ட்ட விசயத்த சொல்லுச்சு. நான் உங்கப்பாட்ட கூட சொல்லல, கேட்டாக்க ரொம்ப சங்கடப்படுவாரு” என அவன் எண்ணியதைப் போன்று அவர் விளக்கம் சொல்லும் போதே “ஏய் அரசு… எப்பய்யா வந்த? ஒரு சத்தத்தையும் காணோம். கமுக்கமா வந்து நிக்கீய்ய” என உமையம்மை வயதையொத்த பெண்மணி, அவனை நெருங்கி வந்த படி வினவினார்.

“பெரிம்மா எப்படி இருக்கீங்க, பெரியப்பச்சி எங்க?” அவனே முகத்தை லேசாய் சாய்த்து யோசித்து “புது மாப்பிள்ள தோட்டத்துக்கு போயிருக்காங்களோ” எனப் புன்னகையுடன் வினவ, “போய்யா… நீ வேற கேலிப் பேசிக்கிட்டு…” என உமையம்மையின் ஓர்படியான வள்ளியம்மை அந்த வயதிலும் லேசாய் வெட்கப்பட்டார்.

“டேய்… எப்ப வந்த” என மகிழ்ச்சிகரமான குரலோடு விசாரித்தப்படி வந்தான் வள்ளியம்மையின் மைந்தன் சுந்தரம்.

“இப்ப தா ண்ணா வந்தேன்” எனப் பதில் அளித்தப்படி அண்ணன்தம்பி இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு நகர, “வெரசா வாய்யா உண்டுட்டு போவ… அய்யாக்காளை அவன விட்டுட்டு நீ சோலிய பாரு. ராவானதும் அண்ணந்தம்பி குலாவிக்கிங்கடே” என வள்ளியம்மை உரைத்தார்.

பின் மூத்தப் பெண்கள் இருவரும் மதியத்திற்கு தேவையான உணவு தயாரிப்பில் ஈடுபட, ஊரில் இருந்து வந்தவனும் உண்டு விட்டு, வெளியே இருந்து வந்த இரு தந்தைகளோடும் சிறிது நேரம் உரையாடி விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுக்க தனதறைக்கு சென்றான்.

சிறிது நேரம் கட்டிலில் அமர்ந்தவன், உறங்கலாம் என்று தான் எண்ணினான். ஆனால் குளித்து விட்டு பின் நன்றாக சுகமாய் உறங்கலாம் என முடிவெடுத்தான். ‘நம் வீட்டில் உறங்கி எவ்வளவு நாட்களாயிற்று?’ என எண்ணி, கீழே வெளிப்புறமாய் இருக்கும் குளியலறையில் குளிக்க சென்றான்.

குளித்து விட்டு வந்தவனை எதிர் கொண்ட வள்ளியம்மை “என்ன அரசு குளிச்சியா… ஏய்யா நாளும் கிழமையுமா இப்படியா இருப்ப? அந்த தாடிய எடுத்தா தான் என்ன? ஏதோ விசனமா இருக்கவன் மாதிரில இருக்கு” எனக் கூறினார்.

அதற்கு அவன் ஒரு பதில் புன்னகை வழங்க, “சரி சரி போ… வெறும் உடம்பா நிக்காத. போய் புதுத்துணி போட்டுக்கோ” அதற்கும் அவன் புன்னகைத்து விட்டு நகர, உமையம்மை வந்து “எதுவும் பழசு இருந்தா கொடு தம்பி, துவைச்சு காய வைக்குறேன்”

“இதோ கொண்டு வரேன் மா” என மேலே தனதறைக்கு சென்றவன், கொண்டு வந்த பையில் இருந்த ஒன்றிரண்டு பழைய துணிகளையும், அன்று காலை அணிந்து வந்த சட்டையையும், கால்சட்டையையும் எடுத்து அதனோடு சேர்த்து கீழே போட, அவன் கால்சட்டையில் இருந்த அவனது கைப்பை [பர்ஸ்] எகிறி போய், கட்டிலின் அடியில் விழுந்து விட்டது.

ஒரு உச்சோடு, கட்டிலின் அடியில் குனிந்து அதை எடுக்கப் போன சமயம் தான், ராதா வந்து கட்டிலில் அமர்ந்தாள். அவளும் முகத்தைத் துடைத்து கொண்டே, இரண்டு நாள் வழமையால் கால்கள் தானாக கட்டிலுக்கு சென்று விட, அந்த அறையின் மாற்றங்களை அவளின் துவாலை மறைத்ததினால், அதாவது அவன் கும்மலாய் போட்ட துணிமணிகளைப் பாராது அமர்ந்து விட்டாள்.

திடீரென ஒரு பெண்ணின் கால்கள், அதுவும் அவனது அறையில்… அதுவும் இவ்வளவு நேரம் இல்லாமல்… குனியவும் கட்டிலுக்கு அடியில் தெரியவும், திடுக்கிட்டு எழுந்தாலும்… அவள் ஒரு பெண் என்பதைக் கண்டு ஆசுவாசப்படவுமே, உடை உடுத்தாத தன் நிலை உணர்ந்து கோபம் கொப்பளிக்கக் கத்தினான். இல்லை அவளை மிரட்டினான்.

அவனின் மிரட்டலில் அவள் பயந்தாளோ இல்லையோ மொத்தக் குடும்பமுமே என்னானதோ ஏதானதோ என ஓடி வந்திருந்தார்கள்.

முதலில் ஆஜாரானது நம் உதயாவின் கணவன் அழகேசன் தான். எனவே “என்ன மாப்பிள்ள என்னாச்சு?” எனக் கேட்டான்.

அவனும் அவர்களை எதிர்பார்க்காததால், சட்டென கட்டில் மீதிருந்த ஒரு போர்வையை எடுத்து தன் மீது போட்டுக் கொள்ள, அதுவரை அவன் வெற்றுடம்பாய் இருந்தது யாருக்கும் புலப்படவில்லை, ஆனால் அவன் எதையோ போர்த்தவும் தான், அவன் மேல்துணி இல்லாமல் இருப்பது உரைத்தது.

முதலில் பாதி சாப்பாட்டில் எழுந்து வந்த உதயாவுக்கு தான் சட்டென உரைத்தது. அதனால் “டேய்… அண்ணா… ஏண்டா ஏன்…” என சிரிக்க தொடங்க, சற்று முன் பதறியடித்து அவளுக்கு முன்னே வந்த மூத்த பெண்டிர் இருவரும் அவனைப் பார்த்து, மெல்ல மெல்ல புன்னகைப் பூத்து, குலுங்கி சிரித்தனர்.

“ஏ மாப்பிள்ள… முத அந்த சால்ல கீழ போடுய்யா…” என அழகேசன் விவரம் சொல்லவும் தான், அவசரத்தில் போர்வை என நினைத்து, ராதா ஓய்வாய் கட்டிலில் அமரும் போது, கழற்றி போட்ட அவளின் சுடிதார் துப்பட்டாவை எடுத்து தன் மீது போட்ட தவறு அவனுக்கு தெரிய வர, அதைக் கீழே நழுவ விட்டு, கட்டில் மீதிருந்த தன் பையை கையிலெடுத்து தன்னை மறைத்தப்படியே, “இல்லம்மா போர்வைன்னு…” அதற்கு மேல் அவனுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை.

ஏனெனில், ஒரு நிமிடத்திற்கு மேலாகியும்… எல்லோரும் சிரிப்பை நிறுத்திய பின்னும்… இன்னும் விடாமல் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்த உதயாவினால் தான். ஆனால் இதற்கெல்லாம் காரணம் இவள் தான் என மீண்டும் சினந்து, “ம்மா… யார்மா இவ?” என ஏக கடுப்பில் பொரிந்தான்.

பாவம், அதுவரை சிரிக்காமல், நடந்தவற்றை எல்லாம் பார்த்தும் சிரிக்க முடியாமல், அவளை மீறி சிரிப்பு வந்தும், அதைப் பெரும்பாடு பட்டு கீழ் அதரங்களைக் கடித்து அடக்கி வைத்து அமைதியாய் நின்றிருந்தாள். அப்படிப்பட்டவளிடம் போய் இவன் எகிற, “ஐயோ நான் மறந்தே போயிட்டேன். ராதாவுக்கு உன் ரூம்ம கொடுத்தது நியபகமில்லாம இருந்துட்டேன்” எனப் பதில் தந்தார் உமையம்மை.

“ஏன் அரசு இதுக்கா இவ்ளோ வெளம் எடுத்து கத்துன? இது உனக்கே அறமா? மாப்ள… தெக்கால இருக்க ரூமுக்கு அரச கூட்டி வாங்க. அது துடைச்சு சுத்தமா தான் இருக்கு”

“ம்ச்… பெரிம்மா… என் ரூம்மு…” என அவன் முடிக்கக் கூட இல்லை, “நீ வா மாப்ள, வேற ரூமுக்கு போலாம்” என அவன் கையைப் பிடித்து அழைத்து போனான் அழகேசன். தரதரவென இழுத்து போகாத ஒரு குறை தான்.

“அயித்தான்… டிரஸ்ஸு இருக்கு…” என இழுத்தவனை, “அதெல்லாம் மாமியார் பார்த்துப்பாங்க, நீ வா” என மீண்டும் அவன் இழுத்து சென்றான்.

“நல்லவேள மாமாங்க ரெண்டு பேரும் இங்க இல்ல. இன்னிக்கு மாமனவண்டி பட்டைய கிளப்பும் பாரு” எனக் கீழ் குரலில் அழகேசன், அவனுக்கு அவனே சொன்னானோ அல்ல மற்றவனுக்கு சொன்னானோ என்பது கேள்விக்குறியே.

எல்லோரும் சென்ற பின், வலக்கையை மடியில் ஊன்றி, ஆள்காட்டி மற்றும் கட்டைவிரலாலும் தலைக்கு முட்டுக் கொடுத்தப்படி, மீண்டும் கட்டிலில் ஓய்வாய் அமர்ந்தவளிடம் சிரித்து கொண்டே வந்தாள் உதயா.

நிமிர்ந்தவள், “ஏய் உனக்கு அறிவே இருக்காதா? இப்படியா சிரிச்சு வைப்ப. பாவம் உங்கண்ணன்”

“நீ முத… நிஜமா சொல்லு, உனக்கு சிரிப்பே வரல அதப் பார்த்து” என அவளையே திருப்பி கேட்டாள் உதயா.

அந்தக் கேள்விக்கு விடையாக அவளுக்கு சிரிப்பைத் தந்த ராதா, தோழியின் முகத்தைப் பார்க்க… இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மீண்டும் நகைக்கத் தொடங்கினர்.

“ஏய்… பாவம் உதி…”

“சும்மா இரு… உனக்கு ஒன்னும் தெரியாது. அவனுக்கு நல்லா வேணும்” என அவள் ‘எப்பொழுதும் ஒரு அண்ணனுக்கு அவனின் தங்கை தான் எதிரி’ என்ற கோட்பாட்டினை சிறிதளவும் பொய்பிக்காமல் செயல்படுத்தி கொண்டிருந்தாள்.

ஆனால் இவர்கள் இருவரும் பேச்சின் ஊடே சிரித்து சிரித்து பேச, தன்னை எண்ணி தான் சிரிக்கிறார்கள் என்ற கோபத் தணல் மனதில் எழ, பளிங்கு மாளிகையில், பால் போன்ற வெண் தரை என எண்ணி நீர் தடாகத்தில், விழுந்தவனைக் கண்டு நகைத்த திரௌபதியை, வஞ்சனையோடு பார்த்த துரியோதனனாய், அவர்களின் அறையை… இல்லை அவனின் ஆசை அறையை நிராசையோடு கண்டு, எதிர் சாரியில் கடந்து கீழே இறங்கினான்.

ராதா, அவன் தங்கையின் தோழி எனவும், மும்பை மாநகரத்தில் வேலை செய்பவள் என்றும், அவர்களின் வீட்டு விசேஷத்திற்காக வந்திருக்கிறாள் என விவரம் கூறினார் உமையம்மை.

மேலும், “உந்தங்கச்சி தா அவள பக்கத்துல வச்சுக்கோனும்னு அடம் பண்ணவ. அவ சொல்லி செய்யலன்னா, பெறவு எது சொன்னாலும் மலுக்கிக்குவா. இப்போ தா கல்யாணம் முடிஞ்சு, முத முத வந்து தங்கிருக்கா… அதா ஏன் அவள விசனப்படுத்தனும்னு நாந்தாய்யா விட்டுட்டேன்” என வள்ளியம்மை மீதியை முடித்து வைத்தார்.

“சரி பெரிம்மா… பராவாயில்ல…” என இரு தாய்மார்களுக்கு நடுவில் அமர்ந்தவன், அவர்களைப் போல, தாழ்வாரத்தில் கால் நீட்டியபடி “சரி, உமையா, அயித்தான், சின்னத்தா, ஆயா, ஐயாலாம் எப்போ வருவாங்க பெரிம்மா?” என விசாரித்தான்.

“ம்ம்… வருவாங்கய்யா. நாளன்னிக்கு தா எல்லாம் கிளம்புறாகலாம்”

“என்ன உமையாவுமா லேட்டா வர்றா?”

“ஆமா அரசு, அவட்ட என்னடி நீயும் இப்படி முத நாள் வரேன்னு சொல்றன்னு கேட்டா, பிள்ளைகளுக்கு பள்ளிக்கோடம் இருக்குதுங்குறா. சேரி… ஒ வசதின்னுட்டேன்”

“ம்ம்… ஆமா ஸ்கூல் இருக்குதுல்ல பெரிம்மா. அப்புறம் எப்படி லீவ் போட்டு வருவா”

“ம்க்கும் பொல்லாத ஸ்கூலு… இந்த எலுகேஜிக்கே இம்புட்டு அலப்பறையா… நீங்களாம் படிக்கலையா? நீயெல்லாம் இந்த கா கிளாஸ், அர கிளாஸுக்குலாம் பள்ளிக்கோடமே போ மாட்ட. உங்கய்யா(உங்க தாத்தா) தான் நீ பள்ளிக்கோடம் முடிச்சு வர வரைக்கும் வெளியவே அந்த அண்ணாச்சியோட உக்கார்ந்திருப்பார். ”

உமையம்மையும், “ஆமா, பாவம் மாமா. வாச்சுமன் அண்ணாச்சி மாதிரி, உனக்காக வாச்சுமன் போல காவக்காத்துட்டு இருப்பார். அப்புறம் ஒன்னாப்புல இருந்து தான் ஒழுங்கா போன” என இரு தாய்மார்களும் அவனின் பால பருவத்திற்கே சென்று விட்டனர்.

அப்பொழுது பள்ளிகளில், இப்போது இருப்பது போல் காவலர்கள், அட்டெண்டர்கள், பியூன்கள், ஆயாக்கள், ஹச் ஆர்கள் எல்லாம் இருக்க மாட்டார்கள்.

அந்த மணி அடிக்கும் அண்ணாச்சி தான், காவலர், அட்டெண்டர் பியூன் எல்லாம். குழந்தைகள் வாத்தியார்களுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, இந்த அண்ணாச்சிக்கு பயப்படுவார்கள்.

பின்னே, தாமதமாக வரும் குழந்தைகளை உருட்டி, மிரட்டி போதாக்குறைக்கு காதுகளில் ஓட்டைப் போட்டு விடுவார். குழந்தைகள் அதிகம் சேட்டைச் செய்தால், தாய்மார்களே கூட, அண்ணாச்சிக்கிட்ட சொல்லிடுவேன் என தான் மிரட்டுவார்கள்.

அதே போல் ஆயாக்களும் இப்போது போல் இல்லாமல், ஒன்றிரண்டு பேர் தான் இருப்பார்கள். அந்தப் பள்ளியின் தரத்தையும் தன்மையையும், குழந்தையின் நிறையையும், குறைகளையும் பாந்தமாய் பட்டியிலிடும் அந்த ஆயாக்கள் இந்தக் காலத்து ஹச் ஆர்களுக்கு சமம்.

இரண்டு மூன்று பிள்ளைகளுடன் தானும், அந்த ஒற்றை ஆயாவின் கைப் பிடித்து பள்ளி செல்லும் காட்சி அவனுக்கு கண் முன் விரிந்தது.

போருக்கு செல்லும் தளபதியாய், எல்லோரின் பைகளையும் தோளில் சுமந்தபடி ஆயா முன் செல்ல, நெஞ்சில் கலக்கத்துடன் வீரர்கள் போல், இவர்கள் எல்லோரும் ஆயா பின்னே, தங்கள் பிஞ்சு கைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஆயாவின் கணுக் கையில் வைத்து, பிடித்து செல்வார்கள்.

இவற்றையெல்லாம் எண்ணி, “முந்தி மாதிரி இல்ல பெரிம்மா… இப்போலாம் ரொம்ப மாறிருச்சு.” எனப் பெருமூச்சு விட்டான்.

“என்னய்யா மாறிருச்சு… அதே ஏ பி சி டியும், ஒன்னு ரெண்டு மூனு தான எலுகேஜில சொல்லி தராக… பெறவென்ன ப்ளேன் ஓட்டவா சொல்லி தராக. இப்போலாம் இதுக்கே அம்புட்டு காசாம்ல… ஏ உமையா அன்னிக்கு லெச்சுமி கூட சொல்லுச்சுல… நெம்ப காசு கேக்குறாகன்னு”

“ஆமாக்கா… இப்போலாம் அம்பதாயிரம், அறுபதாயிரம் கேக்குறாங்களாம்”

“சரி, அத விடுங்க… ஏம்மா, அம்மான், அயித்தலாம் எப்போ வர்றாங்க? ஆமா, அண்ணமிண்டி எங்க காணோம்? ஊருக்கு போயிட்டாங்களா?”

“ஆமா அரசு, அவுக ஊருக்கு பத்திரிக்க வைக்க கூட்டிட்டு போனதுக்கு, அவுக அப்பச்சியையும், ஆத்தாவையும் பார்த்துட்டு, நா இருந்துட்டு வர்றேன் மாமின்னு சொன்னா, வேணாமுன்னா சொல்லப்போறேன். அத விட்டுபுட்டு, மருக்கொளி பொண்ணு, கிளம்புற நேரம் பொக்குன்னு கண்ணுல தண்ணீ சிந்துறா. அடி ஆத்தீன்னு ஆகிப் போச்சு எனக்கு.

உங்க பெரியப்பச்சி வேற என்ன கடுகடுன்னு பார்க்க… பெறவு… சம்மந்தி வீட்டுல வந்து, அவுக எதிர்க்க அவுக பொண்ணு அழுதா என்ன நினைப்பாக? நா உங்கப்பச்சிய பார்த்து, மோட்டார் வண்டில சேதாரமாகாம தப்புன கோழியாட்டம் முழிக்க… ”

“அப்புறம் என்ன தான் ஆச்சு பெரிம்மா.” என அந்தச் சிறுகதை என்று சொன்னால் செல்லாது. எனவே அந்தச் சின்னஞ்சிறுகதையின் கரு தெரிந்தும், முடிவை நோக்கி, ஆர்வம் உந்தக் கேட்டான், அந்த வாலிப பாலகன்.

“பெறவு அவுக ஆத்தா தா, பொண்ணு இங்க இருக்க ப்ரியப்படுறா… அத சொல்ல தெரியாம தா, கலங்கிடுச்சுன்னு சொல்ல… ஆத்தாடீ எ வவுத்துல பால வாத்தீகன்னு சொல்லி ஒரு கும்பிடு போட்டுபுட்டு ஓடியாந்துட்டோம்” என அவர் படு கவனமாய் சொல்லி முடிக்க, எப்போதும் போல், “நீ மட்டும் எப்படி பெரிம்மா இப்படி அழகா கத சொல்ற” என்று அவர் கன்னத்தில் முத்தம் வைத்தவன், அவர் மடி மீதே வாகாய் படுத்து கொண்டான்.

அந்த முற்றத்தின் வழியே, இதையெல்லாம் மேல் இருந்து, இரு குமரி பெண்களும் பார்த்தனர். “இந்தா… வரேன்” என்று கீழிறங்கி சென்றாள் உதயா. ஆனால், ராதாவோ கீழிறங்காமல் அங்கு மேற்கொண்டு நடக்கப் போவதை, ஒரு புன்னகையோடு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

“ஏய்… எந்திரி… நான் படுக்கணும். ” எனத் தர்க்கம் செய்ய தயாரானாள் உதயா.

அவன் எழாமலே “ஏன்… நான் எந்திரிக்கணும். இந்தா… அம்மா மடி சும்மா தான இருக்கு, அங்க போய் படு. ”

“இல்ல நா பெரிம்மா மடில தான் படுக்கணும்”

“ஏண்டி… சிலுப்பட்ட சீமி… அய்யாக்காளை வந்தாலே போதும், எப்போ பாரு அவனோடவே ஒறண்ட இழுக்குறது… சீண்ட்ரம்”

“நீ இரு பெரிம்மா… சரி அந்தப் பக்கமா போய் படு. ”

“நீ போய் அப்படி படு… நான் ரெண்டு பேருக்கும் நடுவுல தா படுப்பேன். ”

“உனக்குலா இடம் கொடுத்ததே தப்பு. உன்ன தா கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்களா… போ… போய் உங்க வீட்டுக்கார் மடில போய் படு… போ… ”

“அது எங்களுக்கு தெரியும். உனக்கென்ன நா யார் மடிலையும் படுப்பேன். அது என் இஷ்டம்… ”

“சரி… ஓகே, அயித்தான்… அயித்தான்… கீழிறங்கி வாங்க கொஞ்சம்.”

“என்ன மாப்பு… ”

“ம்ம்… உங்க பொண்டாட்டிக்கு உங்க மடில படுக்கணுமாம். அதனால வேகமா கீழ வாங்க.”

அதே சமயம் மதிய உணவருந்த வீட்டுப் பெரியவர்கள் வெங்கடாசலமும், அருணாசலமும் வீட்டுக்கு வந்தனர்.

“டேய் அரசு… என்னடா… வந்ததும் வராததுமா அவட்ட ஒறண்ட இழுக்கிறவன்.” என அவனின் தந்தையான அருணாசலம் வினவ, சட்டென எழுந்தவன், “இல்லப்பா… சும்மா… பேசிட்டு இருந்தோம்.”

“வளர்ந்து ஏழு கழுத வயசாகப் போகுது, இன்னும் என்ன விவரம் கெட்ட விளையாட்டு. இதுல வீட்டு மாப்பிள்ளைய வேற இழுக்குறீங்க. ஏன் அவரையும் கெடுக்குறீங்க” என மேலே ஒரு பார்வை பார்க்க, அதுவரை அங்கு பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தவன், “ஆத்தீ நா இல்ல” என எதிர்பக்க சுவரோரமாய் அழகேசன் அழகாய் ஒட்டிக் கொள்ள, இவற்றையெல்லாம் விநோதமாய் ஒரு முறுவலோடு பார்த்து வியந்து கொண்டு இருந்தாள் ராதா.

“மற்றவங்க நம்மள பற்றி என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கிறதே இல்ல ரெண்டு பேரும்.” என மீண்டும் அவர்களைச் சாட, “சரி விடுப்பா… இன்னிக்கு தான் பிள்ளைங்க எல்லாம் ஒன்னு கூடிருங்குதுங்க. அவுகள ப்ரீயா… விடு. நீ வா சோறு உண்ணலாம்.” என வெங்கடாசலம் உள்ளே அழைத்து சென்றார்.

“ஏய்… எங்க அம்மாக்கள  காணோம்… என்று தன் இரு பக்கமும் அவர்களைத் தேட, ம்ம்… அப்பாரு திட்ட ஆரம்பிக்கும் போதே, அவங்க ரெண்டு பேரும் இடத்த காலி பண்ணிட்டாங்க. நீ தா சுரன கெட்டு இன்னும் உக்கார்ந்திருக்க” என விரிவாய் விளக்கமளித்தாள்.

“உனக்கு ரொம்ப குளிர் விட்டு போச்சு… அயித்தான் இருக்காருன்னு பார்க்குறேன். இல்ல…” எனக் குட்டுவதற்காக கையை மடக்கி அவள் தலை அருகே கொண்டு சென்றான்.

“நல்லா கொட்டு மாப்பிள்ள… எனக்கும் சேர்த்து ரெண்டு கொட்டு. ”

“சரி… டபுள் ஓகே அயித்தான்” எனச் சந்தோசமாய் கூறியபடி அவன் கொட்டுவதற்கு செல்ல, உதயாவோ ஓடியபடி, “கருவாயா உன்ன வச்சுக்குறேன்” எனச் சொல்லியபடி வெளியேறினாள்.

அழகேசனோ அருகில் ராதாவைப் பார்த்து அசடு வழிந்தபடி சிரித்துக் கொண்டே நகர போகையில், “மாப்பிள்ள…” என அருணாசலம் அழைக்க, “மாமா…” என அவனும் பதில் கொடுத்தப்படியே படிக்கட்டை நோக்கி வேகமாய் நடக்க, “உண்டுட்டீகளா” எனக் கேட்க, “ஹாஆ… ஆச்சு மாமா” என நின்றவன். ‘அப்பாடி தப்பிச்சோம்’ என எண்ணி நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“ஆமா நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க” என அழகேசனிடம் ராதா கேட்க, அவள் பக்கம் திரும்பியவன், ‘நீ இன்னும் இங்க தான் இருக்கியா, போகலையா உள்ள…’ என்ற அர்த்தம் பொதிந்த பார்வையோடு, “நீ இன்னும் ரெண்டு நாள் இங்க தான இருப்ப, பார்க்க பார்க்க புரிஞ்சுக்குவ” எனக் கெத்தாக சொல்லிக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கம்பீரமாய் சென்றான்.

மீண்டும் “மாப்பிள்ள” என்ற குரலில், பதறியடித்து கொண்டு “இதோ வந்துட்டேன் மாமா…” என ஓடினான்.

அங்கு கீழே “என்ன மாப்பிள்ள நீங்க? இப்படியா நீங்களும் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்குறது. இப்ப கூட உங்கள ஏதோ சொல்லி திட்டிட்டு போகுதே” என அவர் வெளி தாழ்வாரத்திற்கு நடந்து கொண்டே சொல்ல, அவருடன் நடந்தபடியே சென்றவன் “கருவாயான்னு” உடனடியாய் பதில் சொல்லும் முதல் பெஞ்ச் மாணவன் போல் சொல்லிய பின், சட்டென வாயை மூடி நிறுத்தியவன், அவர் அவனை நிதானமாய் பார்த்த பார்வையில்…

“அது இல்ல மாமா… நான் கொஞ்சம் கலரு தா…” என இழுக்கையிலே மீண்டும் ஒரு நிதானப் பார்வை அவர் பார்க்க, “இல்ல மாமா… செல்லமா அப்படி கூப்பிடுவா” எனச் சமாளித்தான்.

தாழ்வாரத்தில் இருந்த திண்டில் அமர்ந்தபடி, “என்னவோ போங்க… இப்போ இருக்க பொண்ணுங்களாம், ஆம்படையான்ன பெயர சொல்லி கூப்பிடுறதும், செல்ல பெயருங்குற பேருல திட்டுறதும் நல்லா இல்ல. இதுல மட்டு மரியாத இல்லாம வாடா போடான்னு வேற கூப்பிடுதுங்க. எல்லாம் கைல நாலு காசு பார்க்குற துமிரு.” என ஒரு சொற்பொழிவே ஆற்றி விட்டார்.

‘அய்யயோ இவ வாடா போடான்னு கூப்பிடுறது என்னிக்காவது தெரிஞ்சுச்சு… செத்தேன் நான்’ எனக் கவனமாய் மனதிற்குள்ளேயே புலம்பினான்.

அதற்குள் அங்கு வந்த பெரியவர், “என்ன மாப்பிள்ள நின்னுட்டே இருக்கீங்க, உக்காருங்க.” என தனது தம்பி அருகே அமர்ந்தவர், அவனுக்கு எதிர்பக்கமாய் கைக் காட்ட, அவனும் அந்தப் பக்க திண்டில் இருக்கட்டும் மாமா என அமர்ந்தான்.

அப்பொழுது விளையாட்டு மும்மரத்தில், அவர்களின் தந்தைகள் அமர்ந்திருப்பதை அங்கிருந்த தூண் மறைத்ததால், அவர்களைப் பாராமல் ஓடி வந்த உதயா, அவர்கள் அருகில் வந்ததும் சட்டென சடன் பிரேக் போட்டு நிற்க, அவள் பின்னேயே துரத்தி வந்தவனும், அவர்களைப் பாராமல், பொசுக்கென அவள் பின்னே மோதி நிற்க…

அவன் மோதிய வேகத்தில் முன் போய் விழுந்தவள், சரியாய் தன் கணவன் மடியில் போய் கவிழ்ந்தாள். இதை சற்றும் எதிர்பாரா மூவரும் ஸ்தம்பிக்க… இதே சூழலில், அவர்கள் வீட்டு பெரியவர்கள் மட்டும் இல்லையெனில் சூழ்நிலையே மாறியிருக்கும்.

உதயா அழகேசன் இருவருக்கும் ‘நம்தன நம்தன…’ என அவர்களின் பின்னே வெள்ளை தேவதைகள் பாடியிருப்பார்கள். இவனும் தங்கையை கேலி செய்து இருப்பான்.

ஆனால், இப்போதோ… “ஏ… லூசு, எந்திரி…” என அடிக்குரலில் அழகேசன் அவளை எழுப்பி விட்டான். தன் மாமனின் நிதானப் பார்வை தன் மீது விழுவதற்குள், “இந்தா… ஆயித்த உதயா வந்துட்டே இருக்கா…” என அவனும் உடன் எழுந்து அழையாத ஆயித்தையிடம், அவளை இழுத்து கொண்டு சென்று கொண்டிருந்தான்.

கடைசியில் அவரின் பார்வைக்கு மாட்டியதோ நம் அரசு தான். இருவரும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணி தான் அண்ணன் தங்கை இருவரும் வீட்டைச் சுற்றி உள்ள சுற்றுசுவருக்குள் இருக்கும் வெட்ட வெளியில் ஓடி விளையாடியதே! இவர்கள் விளையாட்டு மும்மரத்தில் நேரம் போனது தெரியாத காரணத்தால், மாட்டிக் கொண்டனர்… அல்ல மாட்டிக் கொண்டான்.

 

மீண்டும் தூறும்……

error: Content is protected !!