Nan Un Adimayadi–Epi 17

அத்தியாயம் 17

பிஃப்டி கேஜி தாஜ்மஹால்

எனக்கே எனக்கா

பிளைட்டில் வந்த நந்தவனம்

எனக்கே எனக்கா!!!!!!!! (முத்துக்காளை)

 

“காளை டேய்! வெளிய வாடா!”

“ஆமா வாடா! கல்யாணத்தப் பண்ணிட்டு வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சிக்கிட்டா விட்டுருவோமா? வாடா வெளிய!”

இன்றோடு காளைக்கும் மங்கைக்கும் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.

தாலி கட்டிய மறுகணமே அடித்து ஊத்திய பெருமழைக்கு ஊர் மக்கள் எல்லாம் துண்டைக் காணோம் துணியை காணோம் என வீட்டைப் பார்க்க ஓடி இருந்தனர். காளையும் மங்கையும் மட்டும் அசையாமல் அந்த இடத்திலேயே நின்றிருந்தனர். அவர்களை நெருங்கிய காமாட்சி,

“வாத்தா! நம்ம வீட்டுக்குப் போகலாம்” என சொல்லி மங்கையின் கைப்பிடித்துக் கொண்டார்.

சட்டென காமாட்சியை இறுக்கி அணைத்துக் கொண்டு தேம்பினாள் மங்கை. அவள் முதுகை நீவி விட்டவர்,

“என் வீட்டு மகாலெட்சுமி அழலாமா? தோ, ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நிக்கறானே, அவன தான் இனி நீ கதற கதற அழ விடனும்! வாத்தா வீட்டுக்குப் போகலாம்! இப்பவே வெட வெடன்னு நடுங்கற” என்றவர் அவளை தன்னோடு கூட்டிக் கொண்டார். ராஜி இவர்களோடு வர, அவள் கணவன் எப்படியோ சமாளிங்கப்பா என்பது போல தங்கள் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

அஜயை நெருங்கிய மச்சக்காளை,

“ச..சம்பந்தி! நடந்தது நடந்துப் போச்சு! இனிமே நடக்க வேண்டியத பார்ப்போம்! வீட்டுக்கு வாங்க” என தயங்கி தயங்கி அழைத்தார்.

காமாட்சியின் அணைப்பில் இருந்த மகளை ஏறிட்டுப் பார்த்தவாறே,

“இல்ல, பரவாயில்ல! எனக்கு..” தொண்டையை செருமிக் கொண்டவர்,

“எனக்கு இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி ஒரு டெர்ம்க்கு வர கொஞ்சம் டைம் குடுங்க! அப்புறம் நானே இங்க வரேன். இப்போ..ஹ்ம்ம் நான் வந்தாலும், தேவை இல்லாத சங்கடங்கள் வரும். இந்தக் கல்யாணம் நிலைச்சு நின்னா, நாளை பின்ன ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்க்க வேண்டிய நிலைமைல இருக்கோம். இப்போ நான் இருக்கற மனநிலைல கண்டிப்பா உங்களலாம் மரியாதைக் குறைவா எதாவது பேசி வச்சிடுவேன்! அதனால நான் விலகிப் போறதுதான் பெட்டர்!” என நாசுக்காக மறுத்து விட்டார்.

அவர் பேசியதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் மங்கை. தகப்பனைப் பார்த்து வருகிறேன் என்பது போல தலையசைத்தவள், தாயைத் திரும்பியும் பார்க்கவில்லை. மங்கையர்க்கரசி மகளைப் பார்த்தாலும் அவள் அருகில் போகவில்லை.

அஜயின் அருகில் வந்த காளை,

“டீச்சரப்பா!” என பேச வர,

“வேய்ட்” என்றவர் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டு போய் டாக்சியில் அமர்த்தி விட்டு வந்தார்.

“அரசி, பேக்ல துண்டு இருக்கு! தலையைத் துவட்டிக்கம்மா! இதோ வந்துடறேன்” என அவர் பேசியது அந்த மழை சத்தத்திலும் காளைக்கு கேட்டது.

காளையிடம் வந்தவர், மழை நீர் முகத்தில் அடித்தாலும் அதை வழித்து விட்டுக் கொண்டே, பத்து நிமிடங்கள் பேசினார். கிளம்பும் முன்னே,

“அவளுக்கு நான் ஒன்னும் செய்யல! கல்யாணமாச்சும் சீரும் சிறப்புமா செஞ்சு அவ இழந்தத மீட்டுக் குடுக்கனும்னு நெனைச்சேன். அவ விரும்பன பையன் தான் சரி வரல, அவள விரும்பற பையனாச்சும் அவளுக்கு எல்லாமுமா இருப்பான்னு அந்த வாத்தியார் தம்பியையே மாப்பிள்ளையாப் பார்த்து வச்சேன்! ஆனா ஒரு அப்பாவா இதுலயும் நான் கோட்டை விட்டுட்டேன்! ஒரு காலத்துல அவள நான் ஒதுக்கி வச்சேன், இப்போ நீங்க கிளம்புங்கப்பான்னு என்னை அவ ஒதுக்கி வச்சிட்டா! ஆனாலும் அப்படியே விட்ற மாட்டேன் காளை! பரிதாபப்பட்டு உன்னைக் கட்டிக்கிட்டாளோ, இல்ல ஊர் பேச்சுக்கு பயந்து உன்னைக் கட்டிக்கிட்டாளோ தெரியாது! இப்போ ரொம்ப இமோஷனலா இருக்கா! அவ கொஞ்சம் செட்டில் டவுன் ஆக டைம் குடுத்துட்டுப் போறேன்! மீண்டும் வருவேன்! அப்போ என் மக எடுக்கற முடிவுதான் இறுதி முடிவு. உன்னை வேணான்னு மட்டும் சொன்னா, நீ பண்ணி வச்ச காரியத்துக்கு தாலி செண்டிமெண்ட்லாம் பாக்க மாட்டேன்! கையோட கூட்டிட்டுப் போயிடுவேன்! அத மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ!” என மிரட்டியவர் டாக்சியில் ஏறிக் கொண்டார்.

டாக்சி கண்ணை விட்டு மறையும் வரை அதையேப் பார்த்தப்படி நின்றிருந்தான் காளை.

“போகலாம்டா மவனே” என அவன் அருகே வந்தார் மச்சக்காளை.

அப்பாவும் மகனும் வீட்டை நெருங்கும் போது, மழையில் நனையாதவாறு வீட்டு தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்றிருந்தாள் மங்கை. அவசரமாக அவள் அருகே ஓடினான் காளை.

“டீச்சர்! ஏன் வெளிய நிக்கறீங்க?”

அவள் அமைதியாக கைக்கட்டி நின்றிருந்தாளே தவிர வாய் திறந்து பேசவில்லை.

அப்போது தான் ஆரத்தி தட்டோடு வெளியே வந்தார் காமாட்சி.

“டீச்சர் பக்கத்துல போய் நில்லு!” என மகனை முறைத்தவாறே சொன்னார் அவர்.

இருவருக்கும் நடுவில் வாழைமரம் ஒன்று நட்டு வைக்கலாம் எனும் அளவில் கேப் விட்டு நின்றவர்களை ஆலம் சுற்றி வீட்டுக்குள் விட்டார் காமாட்சி.

“சுடுதண்ணி விளாவி வச்சிருக்கேன்! முதல்ல குளிச்சிட்டு வா தவா” என மங்கையிடம் மட்டும் பேசிய ராஜி, காளையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

வீட்டுப் பெண்கள் இருவரும் தன்னை அந்நியப்படுத்தினாலும் மங்கையை நன்றாக கவனித்துக் கொள்வதே போதும் என கிணற்றடிக்குப் போனான் காளை. மங்கை குளித்து வருவதற்காக அங்கேயே காத்திருந்தான் அவன். பாத்ரூமில் இருந்து வந்தவள், கிணற்றருகே நின்றிருந்த காளையைக் காணாதது போல எட்டி நடைப்போட்டாள்.

“டீச்சர், நில்லுங்க!”

அவளது குட்டி வாளியைப் பிடித்தப்படி அப்படியே நின்றாள் அவள்.

“வந்து..டீச்சர்!” என தயங்கியவன், பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டு,

“உங்க அப்பா மறுபடி திரும்பி வருவாரு டீச்சர்! அப்போ அவர் கூடவே கெளம்பி போயிடுங்க! இங்க நடந்ததெல்லாம் கெட்ட கனவா மறந்துட்டு, உங்க வாழ்க்கையைப் பாருங்க டீச்சர்! நான் செஞ்ச தப்புக்கு நீங்க சிலுவை சுமக்க வேண்டாம் டீச்சர்! ஹ்ம்ம். அது.. வந்து..வேற, உங்களுக்குப் பொருத்தமா ஒருத்தர..வந்து கல்யாணம்..!” என அவன் சொல்லி கூட முடிக்கவில்லை, அவள் கையில் வைத்திருந்த குட்டி வாளி அவனை நோக்கிப் பறந்து வந்தது.

அவள் அப்படித் தூக்கி அடிப்பாள் என அவன் கனவா கண்டான் காளை! விலகுவதற்குள் வாளி அவன் நெஞ்சில் அடித்துக் கீழே உருண்டது. அதில் இருந்த ஷாம்பு, ஷவர் க்ரீம், லொட்டு லொசுக்கு எல்லாம் மூலைக்கு ஒன்றாய் உருண்டு ஓடின!

சத்தம் கேட்டு ஓடி வந்த காமாட்சியும், ராஜியும் எதிலும் தலையிடாமல் தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தார்கள். சமாதானப் படுத்த ஓரடி எடுத்து வைத்த மச்சக்காளை, மனைவியின் முறைப்பில் பெட்டிப் பாம்பாய் அடங்கினார்.

தன் நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டே பாவமாய் மங்கையைப் பார்த்தான் முத்துக்காளை.

“உன் மனசுல பெரிய தியாகின்னு நெனைப்பா? உன் பொண்டாட்டிய இன்னொருத்தனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் பார்க்கற! தாலி கட்டி இன்னும் ரெண்டு மணி நேரம் கூட ஆகல! அதுக்குள்ள அத கலட்ட யோசனை சொல்லற! எனக்கு பொறுத்தமானவன் நீ இல்லன்னு இப்போத்தான் உனக்கு தெரியுதா? எலிசு எலிசுனு இளிச்சிட்டு வந்தப்போ தெரியலையா? தண்ணி அடிச்சிட்டு கையைப் புடிச்சுட்டேன், தண்ணி அடிச்சுட்டு கட்டிப் புடிச்சுட்டேன்னு சொல்லறியே! இத்தனை வருஷமா நீ தண்ணி அடிக்கவே இல்லையா? அப்போ என்னைக் கட்டிக்கிட்ட மாதிரி இன்னும் எத்தனை பேரை இத்தனை வருஷத்துல கட்டிப்புடிச்சிருக்க?” என ஆவேசமாக கேட்டாள் மங்கை.

“சீச்சீ டீச்சர்! அந்த மாதிரிலாம் எதுவும் நான் செஞ்சது இல்ல”

“அப்போ தண்ணி மேல பழிய போடாத! என்னைப் புடிச்சுப் போய் கட்டிப்புடிச்ச, அதனால கட்டி வச்சிட்டாங்க! எங்கம்மா அப்பா, உங்கம்மா அப்பா சாட்சியாவும் ஊருல அத்தனை பேர் சாட்சியாவும் கல்யாணம் நடந்துருச்சு. இனிமே நான் தான் உனக்கு பொண்டாட்டி! நீதான் எனக்கு புருஷன். அப்பா கூட போயிடு ஆட்டுக்குட்டிக் கூட போயிடுன்னு ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வரக் கூடாது! பார்க்க மார்டன்னா இருந்தாலும் எனக்குள்ளயும் ‘ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா’ன்னு பாடற ஒரு சராசரி செண்டிமெண்டல் தமிழச்சித்தான் பாய் போட்டு படுத்திருக்கா! இதுக்கும் மேல ஒரு வார்த்தை இன்னொரு கல்யாணம், இன்னொரு புருஷன்னு உன் வாயில இருந்து வந்துச்சு, அவ்ளோதான்!” ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவள், தன் முன்னே விழுந்து கிடந்த வாளியை ஓங்கி ஒரு எத்து விட்டுவிட்டு தனது ரூமுக்குள் புகுந்துக் கொண்டாள்.

“ஏன்டி ராஜி! அந்த உதை உன் தம்பிக்கு விழுந்துருக்க வேண்டியதோ!”

“சேச்சே! அப்படிலாம் இல்லத்தா! உதைக்கனும்னா நேராவே உதைப்பா! அந்த தில்லு அவளுக்கு இருக்கு!” என காளை முன்பே அவனை கலாய்த்தவாறு உள்ளே சென்று மறைந்தார்கள் இருவரும்.

அப்பொழுது ரூமில் போய் அடைந்தவள் தான் தவமங்கை. அதன் பிறகு அத்தியாவசிய தேவைகளுக்குத் தவிர அந்த ரூமை விட்டு அவள் வெளியே வரவேயில்லை.

மங்கை கொஞ்சம் மனது தேறியதும் வந்துப் பார்ப்பதாக சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் ராஜேஸ்வரி. கிளம்பும் போது கூட தம்பியிடம் ஒற்றை வார்த்தைப் பேசவில்லை அவள். காமாட்சியும் மகனிடம் பேசுவதை விட்டிருந்தார்.

ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டிக் கொண்டிருந்த தன் ஆத்தாவின் அருகே வந்து அமர்ந்தான் காளை. அவர் ஆட்ட மாவைத் தள்ளிக் கொடுத்தவன்,

“ஆத்தா” என அழைத்தான்.

காமாட்சியிடம் எந்த பதிலும் இல்லை. அவர் பாட்டுக்கு தன் வேலையைத் தொடர்ந்தார்.

“பேச மாட்டியாத்தா?”

“நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை மடியில போட்டுக் கொஞ்சுவாங்களா? நீயாடா இப்படி? டீச்சர் கிட்ட இருந்து தள்ளி நில்லு, தள்ளி நில்லுன்னு எத்தனை தடவைத் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்! பொம்பளப் புள்ள பாவத்தக் கொட்டிக்கிட்டீயேடா! அந்தப் பொண்ணுக்கு எப்படிலாம் புருஷன் வேணும், எப்படிலாம் வாழனும்னு எவ்வளோ ஆசை இருந்துருக்கும்! உன்னால எல்லாம் மண்ணா போச்சுடா! உன்னைக் காப்பாத்தனும்னு உன்னைக் கட்டிக்கிட்டா! அந்த தாலிக்கு உண்மையா இருப்பேன்னும் சொல்லுறா! சொக்கத் தங்கம்டா டீச்சரு! கடவுள் உன் கையில பொக்கிஷத்தைக் குடுத்துருக்காரு! அன்னிக்குப் பேசன மாதிரி இன்னொரு கல்யாணம் அப்படி இப்படின்னு சொல்லி அந்த பொக்கிஷத்தைப் பொசுக்கிறாதே! நான் அம்புட்டுத்தான் சொல்லுவேன்! என்னிக்கி அவ உன்னை மனசார ஏத்துக்கறாளோ அன்னிக்கு நானும் மனசார உன்னை என் மவன்னு கொஞ்சிக்கறேன்! அது வரைக்கும் தள்ளி நில்லு, தேவைக்கு மட்டும் பேசு!” என படபடத்தவர் மாவை வழித்து அள்ளிக் கொண்டு அடுப்பறைக்கு சென்று விட்டார்.

அந்த நேரம் தான் வெளியில் இருந்து கூட்டமாக சத்தம் கேட்க வீட்டுன் முன்னே விரைந்தான் காளை.

“என்னங்கடா சத்தம் ஓவரா கேட்குது? வாய ஒடைக்கனுமா?”

“ஆமாடேய்! ஒவ்வொருத்தன் வாயையும் நல்லி எலும்பு போட்டு உடைச்சு விடு டேய்!”

“என்னங்கடா நக்கலா? பஞ்சாயத்துல பரிகாசம் பண்ணி பரிசத்தப் போட வச்சு, இப்போ பந்தி எங்கன்னு வந்து நிக்கறீங்களோ?” கடுப்பாக கேட்டான் காளை.

“பஞ்சாயத்துல பண்ணியோ, பந்தல் போட்டு பண்ணியோ, கல்யாணம் பண்ணது பண்ணதுதான்! ஒனக்கு பக்கோடாக்கு நாங்க வழி பண்ணிருக்கோம்! எங்களுக்கு கறி விருந்துக்கு நீ வழி பண்ணு” என பக்கோடா பாண்டியன் கேட்டான்.

“அட பக்கோடாக்கு பொறந்தவனே! அங்க டீவீ போட்டு என் வாழ்க்கையை திருப்பி வுட்டுட்டு என்ன தைரியத்துல என் கிட்டயே கறி சோறு கேப்ப!” என அவன் சட்டைக் காலரை பிடித்திருந்தான் காளை.

“விட்ரா மச்சான்! புது மாப்புள்ளை சண்டை கிண்டை போட்டு படக் கூடாத எடத்துல அடி கிடி பட்டுற போது!” என அவனை விலக்கி விட்டான் கூட்டத்தில் இருந்த செவல.

“ஊரு வழக்கப்படி எங்களுக்கு கறி விருந்து ஒன்னு வச்சு விடு டேய்! பூரா பயலும் கல்யாணம் ஆனா ஊரைக் கூட்டி விருந்து வச்சு ஜமாய்ச்சுப் புடுவானுங்க! நீ ஏற்கனவே பஞ்சாயத்துல ஊரைக் கூட்டிட்டே, இப்போ விருந்த வச்சி விட்ருடா!” என கூட்டத்தில் இருந்தவர்கள் காளையுடன் மல்லுக் கட்டிக் கொண்டு நின்றார்கள்.

அந்த ஊரில் காது குத்தாகட்டும், கருமாதியாகட்டும், பூப்புனித நீராட்டு விழாவாகட்டும், எல்லாவற்றுக்கும் கறி விருந்து போடுவது எழுதப்படாத சட்டமாகும். கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். விருந்து போடுவது மட்டும் அல்லாது சரக்கடிக்கவும் சன்மானம் கொடுக்க வேண்டும். அப்படி இருக்கும் போது, நம் மாங்காய் தோப்பு ஓனரை விட்டு விடுவார்களா மக்கள்!

சத்தம் இன்னும் அடங்காமல் இருக்கவும் வெளியே வந்த காமாட்சி,

“நாளைக்கு குழந்தையம்மனுக்கு பொங்க வச்சி கும்புட்டுட்டு, ஞாயித்துக் கெழமை ஊருக்குப் பொதுவா ஒரு விருந்து வச்சிடறோம்! இப்போ போய்ட்டு விருந்துக்கு வந்துடுங்க” என கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வைத்தார்.

“எதுக்குத்தா இந்த வீணாப் போனவனுங்களுக்கு விருந்து வைக்கனும்? அதெல்லாம் ஒன்னும் வேணா”

அவன் முகத்தைப் பார்த்துப் பேசாமல் வேறு புறம் திரும்பி,

“நாப்பது பேர் சாப்பிட்டாலும் அதுல நாலு பேராச்சும் நல்ல மனசோட நல்லா இருங்கன்னு வாழ்த்துவாங்க! அந்த வாழ்த்தாச்சும் அந்தப் புள்ளைக்கு ஆசீர்வாதமா இருந்துட்டுப் போகட்டும்” என சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

மச்சக்காளை வீட்டுக்கு வந்ததும் அப்பாவையும் மகனையும் டவுனுக்கு அனுப்பி வைத்தார் காமாட்சி. அன்று இரவு மங்கைக்கு உணவு கொடுத்தவர் அவள் கையில் ஒரு பையையும் திணித்தார்.

“உள்ள சீலை இருக்குத்தா! காளை வாங்கிட்டு வந்தான். நாளைக்கு கோயிலுக்கு கட்டிக்கத்தா! நம்ம குடும்பத்துல கல்யாணம் நடந்தா குழந்தையம்மனுக்கு பொங்கல் வைக்கறது வழக்கம். உன் கிட்ட இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் செய்ய சொல்லி வற்புறுத்தக் கூடாதுன்னுதான் இருந்தேன். எப்போ காளைதான் உன் புருஷன், அவன் கட்டனதுதான் தாலின்னு சொல்லிட்டியோ, செய்ய வேண்டியதை முறையோட செஞ்சிடலாம்னு தோணிருச்சு! ஏத்தா, நான் சொல்லுறது கோயில் குளத்து சடங்குகள மட்டும் தான்! மத்தது..அது வந்து..மத்த மத்த சடங்கெல்லாம் உன்னோட இஸ்டம்தான் ஆத்தா! இனி இது உன் வீடுத்தா! உன் இஸ்டம் போல இருக்கலாம்! எதுவும் செய்யலாம்! இந்த ஆத்தா ஒன்னுமே சொல்லமாட்டேன்! ஒதுங்கி ஒதுங்கி அந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சி இருக்காதத்தா!” என அவள் கையைப் பிடித்துக் கொண்டு கரகரப்பான குரலில் சொன்னார்.

சரியென தலையாட்டியவள், அந்தப் பையோடு தனதறைக்குப் போனாள். கதவை மூடியவள், அவசரமாக பையைப் பிரித்துப் பார்த்தாள். கட்டம் போட்ட கண்டாங்கி சேலை, மஞ்சளும் சிவப்பும் கலந்து கண்ணைப் பறித்தது. மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்க அதை வருடிக் கொடுத்தவள், தன் தோள் மேல் போட்டுப் பார்த்தாள். சேலையை கட்டில் மேல் வைத்து விட்டு, தனது பேகில் வைத்திருந்த இரண்டு பிளவுஸ்களை வெளியே எடுத்து சேலை மேல் வைத்துப் பார்த்தாள். அவளிடம் தற்போது இருப்பது அந்த இரண்டு பிளவுஸ்தான். அதில் கருப்பு பிளவுஸ் மேட்சாக இருக்க அதையே சேலையோடு சேர்த்து மேசைமேல் வைத்தாள். பின் தனது போனை எடுத்து அந்த சேலையை ஒரு போட்டோ எடுத்து, பிரைவேட்டாக வைத்திருக்கும் தனது இண்ஸ்டாவில் பதிவேற்றம் செய்தாள் மங்கை.

அதற்கு முந்தைய போஸ்டில் போட்டிருந்த ஒவ்வொரு படங்களையும் பார்த்து ரசித்தவள், புன்னகையுடன் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையிலேயே எழுந்து குளித்து அழகாக சேலையுடுத்தி காமாட்சியைத் தேடி வந்தாள் மங்கை. அடுப்படியில் அவர் படையலுக்குப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருக்க, அவர் பின்னாலேயே ஆத்தா ஆத்தா என சுற்றிக் கொண்டிருந்தான் காளை.

“எட்டப் போடா!” என கத்திய காமாட்சி தேங்காயில் மஞ்சளைப் பூச ஆரம்பித்தார்.

அதை அவரிடம் இருந்து பறித்து தானே பூசியபடி,

“டீச்சர் என்னிக்கு ஸ்கூல் போக ஆரம்பிக்கிறாங்களாம்?” என கேட்டான்.

“என்னையக் கேட்டா? நானா தாலி கட்டுனேன் இதெல்லாம் கேட்டு வச்சிக்க!”

“சரிதான்” என திரும்பியவன் கண்டாங்கி சேலையில் அழகிய ஓவியமாய் நின்றிருந்த மங்கையைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றான்.

சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டவன்,

“கெளம்பலாம் ஆத்தா! நான் வெளிய இருக்கேன்” என சொல்லி வெளியேறிவிட்டான்.

“அம்மன் சிலை மாதிரி அழகா இருக்கத்தா!” என புன்னகைத்தவர் அவள் கையில் பூஜை சாமான்களைக் கொடுத்தார்.

இவர்கள் நால்வர் மட்டும் போய் பொங்கல் வைத்து அம்மனை வணங்கி விட்டு வந்தனர். அம்மன் சன்னிதியில் மனமுறுகி வேண்டிக் கொண்டான் காளை. பூசாரி குங்குமம் கொடுத்து மங்கையின் நெற்றியில் வைக்க சொல்ல, கை லேசாக நடுங்கினாலும் அவள் நெற்றியிலும் வகிட்டிலும் வைத்து விட்டான்.

மறுநாள் பள்ளிக்குக் கிளம்பி விட்டாள் மங்கை. எப்பொழுதும் கிளம்பி சாப்பிட்டு விட்டு வெளியேறி விடுவாள். அன்று எழுந்து குளித்து பூஜையறைக்குப் போய் விளக்கேற்றி விட்டு சீக்கிரமாகவே அடுப்படிக்கு வந்தாள்.

“என்னத்தா வேணும்?”

“நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன் ஆத்தா”

“அதெல்லாம் எதுக்கு? நானே பாத்துக்கறேன். நீ இப்படி உட்காரு” என காமாட்சி சொல்ல, அந்த இடத்தை விட்டு நகராமல் ஒன்றும் பேசாமல் காமாட்சியையேப் பார்த்தப்படி நின்றாள் மங்கை. அவள் முகத்தில் தெரிந்த பிடிவாதத்தைப் பார்த்து புன்னகை விரிய,

“சரி வா! தோசைய ஊத்து” என அவளுக்கு அஃபிசியலாக மருமகள் வேலையைக் கொடுத்தார் காமாட்சி.

புன்னகையோடு தோசை ஊற்ற ஆரம்பித்தாள் தவமங்கை. அழகாக நேர்த்தியாக வட்டம் வட்டமாக இருந்தது தோசை. காமாட்சிக்கு இந்த நாசுக்கெல்லாம் வராது. வட்டம், சதுரம், நீள் சதுரம் என வகை வகையாய் தோசை சுடுவார் அவர். அவள் தோசை சுடும் அழகை ஆசையாய் பார்த்திருந்தார் காமாட்சி. நேற்று மீதப்பட்டிருந்த மீன் குழம்பை தோசைக்கு தொட்டுக் கொள்ள சூடு பண்ணியவர், மங்கைக்கு மட்டும் சட்னி அரைத்து வைத்தார். எப்பொழுதும் போல காபி கலக்க அடுப்படிக்கு வந்த காளை, மாமியாரும் மருமகளும் மெல்லிய குரலில் பேசியபடி வேலை செய்வதைப் பார்த்து சத்தமில்லாமல் நழுவி விட்டான்.

அன்று காமாட்சியே காபி கலக்குவதைப் பார்த்தவள்,

“ஆத்தா எனக்கு காபி வேணாம் இன்னிக்கு!” என சொல்லி விட்டு பள்ளிக்குக் கிளம்ப தனதறைக்குப் போய் விட்டாள்.

அவசர அவசரமாக கிளம்பி வந்து சாப்பிட அமர்ந்த அவள் முன்னே ஒரு டம்ளரில் காபி வைக்கப்பட்டது. காபியையும் காபி வைத்தவனையும் மாறி மாறி பார்த்தவள், ஒன்றும் சொல்லாமல் காபியை பருக ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்து, காமாட்சியிடம் சொல்லி விட்டுக் கிளம்பியவள், சில நிமிடங்களில் உள்ளே வந்து காளையின் அருகே நின்றாள்.

“ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகல”

“தோ, நான் பார்க்கறேன் டீச்சர்!”

“எனக்கு டைம் ஆச்சு!” என கால் மாற்றி நின்றாள் மங்கை.

“நான்..ஹ்ம்ம்.. நான் விட்டுட்டு வரவா டீச்சர்?” தயங்கி தயங்கி கேட்டான்.

“ஹ்ம்ம்” ஒற்றை வார்த்தையில் சம்மதம் சொன்னவள், அவன் பைக் அருகே போய் நின்றுக் கொண்டாள்.

காளை வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவன் பின்னே அமர்ந்துக் கொண்டாள் மங்கை. அவனை ஒட்டவில்லை, உரசவில்லை. கம்பியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து வந்தாள். பள்ளியில் இறங்கியதும்,

“எனக்கு வேலை முடியற டைம் தெரியும்ல?” என கேட்டாள்.

ஆமென தலையாட்டினான்.

“தினம் என் பின்னால செக்கியூரிட்டி வேலை செய்யறவங்களுக்குத் தெரியாம இருக்குமா!” என முணுமுணுத்தவள்,

“மறக்காம வந்து ஏத்திக்குங்க” என சொல்லிவிட்டு விடுவிடுவென உள்ளே நுழைந்து விட்டாள். அவள் கண்ணுக்கு மறையும் வரை அங்கேயே நின்றிருந்தவன், பின்பு ஸ்கூட்டியை கவனிக்க வீட்டுக்குப் போனான்.

ஸ்டார்ட் செய்ததும் வண்டி எந்த தங்கு தடையுமின்றி ஸ்டார்ட் ஆனது.

“என்னடா இது! டீச்சர் ஸ்டார்ட் எடுக்கலன்னு சொன்னாங்களே!” என முனகியவன் ஆப் செய்து மீண்டும் ஸ்டார்ட் செய்தான். மறுபடியும் ஸ்டார்ட் ஆனது. தாடையைத் தடவிக் கொண்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போனான் காளை.

மறுநாள் ஸ்கூட்டி சாவியை காணோம் என வந்து நின்றவளை அழைத்துப் போய் அழைத்து வந்தான். அதற்கு மறுநாள் இன்னொரு காரணத்தோடு வந்து நின்றாள். பின் அதுவே வாடிக்கை ஆனது.

ஞாயிற்றுக் கிழமை காமாட்சி சொன்னது போல வீட்டின் முன் பந்தல் போட்டு கறி விருந்து போட்டார்கள். பெரிய தனக்காரரை நேரில் போய் அழைத்து, ஊரில் உள்ள எல்லோரையும் வரவழைத்து சாப்பாடு போட்டார்கள். ராஜேஸ்வரி தன் குடும்பத்தோடு வந்திருந்தாள்.

அன்று பஞ்சாயத்தில் சண்டைப் போட்டுக் கொண்டவர்களா இவர்கள் என மங்கை வியக்கும் அளவுக்கு எல்லோரும் கூட மாட நின்று ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து விழாவை சிறப்பாக நடத்தினார்கள். பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாழ்த்தி மொய் வைத்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள் அனைவரும்.

ஓடியாடி வேலை செய்ததில் அன்று அசந்துப் போய்விட்டான் காளை. கட்டிலில் வந்து விழுந்தவன், அடித்துப் போட்டது போல தூங்கி விட்டான். நடு இரவில் எப்பொழுதும் மங்கை பாத்ரூம் போகும் டைமில் எழுந்து பழகியவனுக்கு அன்றும் முழிப்புத் தட்ட, மெல்ல கண் திறந்தான். அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்துப் போனவனின் வாய் மட்டும்,

“முருகா காப்பாத்து!!!
கந்தா காப்பாத்து!!!!” என மெல்லிய குரலில் முணுமுணுத்தது.

(அடி பணிவான்……)

(இன்னிக்கு நான் பேஸ்புக் பக்கமே வரல..ஆன்லைன் கிளாஸ்க்கு என்னோட லேப், போன் எல்லாம் யூஸ் பண்ணிக்கறா என் குட்டி.. இப்போத்தான் டைப் பண்ணி முடிச்சேன். இனிதான் மூஞ்சுபுக் பக்கம் போவேன். என்னை தேடினவங்களுக்கு இனிமேத்தான் ஹார்ட் விடுவேன் டார்லீஸ்…)