தூறல் போடும் நேரம் – 7

தூறல் போடும் நேரம் – 7

பகுதி – 7

பரப்பிய சாமான்களை எடுத்து வைப்பதற்கு ஆயத்தம் ஆயினர் மூத்த பெண்கள். ‘ஏன் பரப்ப வேண்டும்? இப்போது ஏன் எடுத்து வைக்க வேண்டும்?’ என்ற நியாயமானக் கேள்வி ராதாவிற்கு எழுந்தது. அதைக் கேட்கவும் செய்தாள்.

“இல்ல ராதா… இதெல்லாம் ரொம்ப நாளா… இல்ல ரொம்ப வருஷமா உள்ளேயே இருந்தது. இந்த சந்தடி சாக்குல எங்க பெரிம்மா பளபளன்னு ப்ளான் போட்டு, எல்லாரையும் தேய்க்க வச்சு, எல்லா சாமானையும் புதுசா ஆக்கிடுச்சு.”

மேலும் “இப்போ கல்யாணம்னா… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பார்க்கனும்னு மறுநாள் வரை வச்சிருப்போம். இது அறுபதாம் கல்யாணம் தானே, அதான் சாஸ்திரத்துக்கு பரப்பி எடுத்து வைக்குறாங்க. அது போக நாளைக்கு அனுவலுக்கு(விஷேசத்திற்கு) எல்லோரும் வருவாங்க, இங்க தா பந்தி போடுவாங்க” எனக் காரண காரியத்தையும் கூறினாள்.

அதற்குள் “ஏய்… உடையா… அந்த கணக்கு நோட்ட மாமன்ட்ட இருந்து வாங்கி வா டி…” எனப் பண்ட பாத்திரங்களின் எண்ணிக்கையைக் குறித்து வைத்திருக்கும் கையேடை வாங்கி வர சொன்னார் ஒரு பெண்மணி.

வீட்டிற்கு மருமகள் புதிதாய் கொண்டு வரும் வெள்ளி சாமான்களில் இருந்து பித்தளை சாமான் வரை அனைத்தையும் ரகவாரியாக எண்ணிக் குறித்து வைத்து கொள்வார்கள். ஏற்கனவே வீட்டில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையோடு அதனையும் சேர்த்து குறித்து வைத்து கொள்வார்கள்.

அதனால் தான் பரப்பிய பண்ட பாத்திரங்களின் எண்ணிக்கையைச் சரி பார்க்க, அதைக் கொண்டு வர சொன்னார்.

மேலும் பரப்பிய சாமான்களை எடுத்து, சாமான் அறைக்கு கொண்டு சென்றனர். மேலும் பேஷன்கள், போகாணிகள், சொம்புகள், வட்டிகள், கின்னிகள் என ரக வாரியாக, தனி தனியாக சேந்திகளிலும், பரண் மீதும் அடுக்கத் தொடங்கியிருந்தது ஒரு குழு.

அதனால் ராதாவும் அங்கு செல்ல, “அம்மா… ராதா… இங்க வாமா… அடுப்பாங்கரைல கூட்டு, காய், குழம்புலா இருக்கு. கிட்ட இருந்து, அதலாம் கொஞ்சம் சூடு பண்ணி வை மா. அடுத்து எல்லோரும் சாப்பிட வந்திருவாங்க” என அவளுக்கு தனியே ஒரு வேலையைக் கொடுத்தார் உமையம்மை.

அது அவளுக்கு புரியாமல் இல்லை. ‘இவர்கள் பண்ட பாத்திரங்களையும், நகைகளையும் எடுத்து விடுவேன் என்று இங்கு என்னைத் துரத்தி விடுகிறார்களோ?’

எனினும் தோள்களைக் குலுக்கி கொண்டு, ‘நமக்கென்ன’ என்பது போல், அவளுக்கு இட்ட வேலையைச் செய்ய அடுப்பாங்கரைக்குச் சென்றாள்.

அவளின் ஐயம் மெய் தான் என்பது போல், உமையம்மையின் மனதில் ‘சாமான் அறையின் கணக்கு முன்னுக்கு பின் முரணானால், முதலில் அயலாரை தான் சந்தேகிக்கத் தோன்றும், பின் தான் வீட்டில் உள்ளோரை பார்க்கும். இதுவே வேற்று மனிதர்கள் இல்லாத பட்சத்தில், உறவினர் மீது உடனடியாய் குற்றம் சாட்டாது, மீண்டும் நிதானமாய் சரிப் பார்க்கப் படும்.’ என எண்ணி தான் அவளை அங்கிருந்து அனுப்பினார்.

ஏனெனில், உடனடியாய் குற்றம் சுமத்தினால், உறவு முறிந்து விடும் அல்லவா. அதுவும் விழா நடக்க இருக்கும் இந்த நேரத்தில், எதுவும் ரசாபாசமாகி விடக் கூடாது என எச்சரிக்கையாய் இருந்தார்.

ஆனால் நேரங்கடந்தும், அவளைத் தேடி உதயாவும் வரவில்லை. ‘ஏன் அங்கில்லாமல், நீ மட்டும் இங்கு வந்தாய்?’ என அவளை விசாரித்து, அவளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பரிந்து பேச அவளும் அருகில் இல்லாமல் போனது, அவளுக்கு மனதை சிறிது கனமாக்கியது.

மனதின் கனம், முகத்தில் இருளை இழுத்து வந்தது. இரவு உணவு பரிமாறும் போதும், சாப்பிட அமரும் போதும், இதழில் ஒட்டிய புன்னகையோடு, சிறிது சிரித்த முகமாய் ஒளி சிந்த காணப்பட்டாள்.

ஆனால் அது அகல்விளக்கின் ஒளிக்கும், குழல் விளக்கின்(ட்யுப்லைட்) ஒளிக்கும் உள்ள வித்தியாசம் போல், அவளது புன்னகை மினுக்கி மினுக்கி தெரிந்தது.

அறை முழுவதும் ஒளி சிந்தும் குழல் விளக்கைப் போல், அவள் இன்முகத்துடன் நன்றாக இருப்பது போல், பார்ப்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்தாலும், அவளின் வாட்டம் அவனுக்கு மட்டும் தெரிந்தது.

இது தான் காதாலா? இல்லை! நாம் யாரை உற்று கவனித்தாலும், அவரின் உடல்மொழி நமக்கு வசப்பட்டு விடும். ஆதலால், அவரின் ஒரு சிறு மாற்றம் கூட நமக்கு தெரிந்து விடும். அது போல் தான் அவனுக்கும், அவளின் செயற்கை முகம் காட்டிக் கொடுத்தது.

ஆயினும், அத்தனை உறவுகளின் மத்தியில் அவளிடம் என்னாயிற்று எனக் கேட்க இயலவில்லை. அதனால் மௌனத்தால் அவளைத் தொடர்ந்தான்.

ஆனால், அவனால் செய்ய முடியாததை, “ராதா கண்ணு…” என அழைத்தப்படி, அருணாச்சலம் வந்தார்.

“என்ன அங்கிள்?” எனப் புருவத்தைச் சுருக்கி, முகத்தாலும் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல கண்ணு, இன்னைக்கு குழாய் ரேடியோல… பாட்டுலாம், நீ கொடுத்து தான் சுந்தரம் போட்டானாம். அதான்… உன்ட்ட… அந்தப் பாட்டுலா… தருவியான்னு… ரேடியோ பெட்டில போட்டு கேட்க தான் கேக்குறேன்…” எனத் தயங்கி தயங்கி அவர் கேட்க, “அங்கிள்… அத நான் பென்ட்ரைவ்ல ஏற்றி கொடுத்தேன். அதெப்படி ரேடியோல…” என அவளும் எப்படி விளக்குவது எனத் தெரியாமல் திணறினாள்.

“இல்ல கண்ணு, இதுலயும் நீ சொன்ன அந்த பெண்டைவ்வ போட்டுக் கேக்கலாமா… இந்தா பாரு” எனத் தம்பியின் மைந்தன் புதிதாய் வாங்கி வந்த அந்த நவீன வானொலி பெட்டியை, அவளிடம் காண்பித்தார்.

அவளும் அந்த விரலி(பென்ட்ரைவ்)யை அதில் பொருத்த முடியுமா என்று சரி பார்த்து விட்டு, “ஓகே அங்கிள், நான் எல்லா பாட்டையும் ஏற்றி தர்றேன்” எனக் கூறி, அவரிடமிருந்து விடைபெறும் நோக்கோடு புன்னகைத்து நகர, “இரு மா… இன்னும் ஒன்னு கேட்டுக்குறேன். அதெப்படி மா, இந்த காலத்து பிள்ளையான உனக்கு, இந்த பாட்டுலா தெரியும்?” எனத் தன் சுருங்கிய கண்களை விரித்து வியந்தார்.

அதை, தலை சாய்த்து ரசித்தப்படி “பிடிச்சதால தெரிஞ்சுக்கிட்டேன், அங்கிள்” என்றவளின் பதிலில், “பலே! பலே! உனக்கும் பிடிக்குமா” என்று சிறுவனாய் மனமகிழ்ந்தார்.

அவர் முகத்தில் தெரிந்த மகிழ்வு, அவளுக்கு முகத்தில் சிரிப்பையும், மனதில் மகிழ்வையும் தந்தது. சற்றே மனம் வாட்டத்தைத் துறந்து மலர்ந்ததைப் போல் உணர்ந்தாள்.

அந்த நல் மாற்றத்தோடு, மற்றவை மறந்து தன் அறைக்கு திரும்பியவள், சிறிது நேரம் அலைபேசியில் தன் விருப்பத்துக்கு உகந்தப் பாடலைக் கேட்கலானாள்.

அப்போது தான் “ஒய் சோ சேட் — ஏஞ்சல்” என குறுந்தகவல் வர, அதனைத் தொடர்ந்து அனுப்பியவனே “ராம்” எனத் தன் பெயரையும் குறிப்பிட்டு அடுத்த தகவலை அனுப்பியிருந்தான்.

அவளோ ‘ராம்?’ என ஐயத்தோடு, தனக்கு யாரேனும் அந்தப் பெயரில் தெரியுமா? என்று நினைவடுக்குகளைத் தட்டி பார்த்தாள்.

அவளின் சுற்று வட்டாரத்துக்குள், யாரும் ராம் என்ற பெயரோடு இல்லாமல் போக, அவன் அனுப்பிய முதல் குறுந்தகவலில் அவளின் கவனம் சென்றது.

‘ஒய் சோ சேட்’ என வாசித்து பார்த்தவள், நாம் வருத்தமாய் இருந்தது, இவனுக்கு எப்படி தெரியும்? அப்படியென்றால், நம்மை கவனித்தவனாக… நம் அருகில் தான் இருக்க வேண்டும் என்று கணித்தாள்.

நம் அருகில் என்றால் இங்கு உள்ளவர்கள் என எண்ணும் போதே, அவளுள் தோன்றிய உருவம் அரசு எனப்பட்டவன் தான்.

ஆம், எனப்பட்டவன் தான்… ஏனெனில் இன்று மதியம் சுந்தரத்தையும் அவ்வாறு அழைத்தார்களே என எண்ணியவள், ‘ஒரு வேளை இது அவர்களின் குடும்ப பெயரோ? சுந்தர அரசு… அது போல் இவனுக்கு ராம் அரசு… ஹும்… சுந்தர அரசு ஓகே, ஆனால் ராமரசு… ஹுஹும்… நன்றகாவே இல்லை’ என தன்னுள் வழக்காடிக் கொண்டிருந்தாள்.

மேலும், ‘குடும்ப பெயர் என்றால் அவர்களின் தந்தைகளுக்கும் அரசு என்று இருக்க வேண்டுமே?’ எதற்கு குழம்புவானேன் “யுவர் புஃல் நேம்?” என அவனிடமே தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்பினாள்.

‘நாம் யாரெனக் கேளாமல், முழு பெயரைக் கேட்கிறாளே? ஒரு வேளை, அவளின் நட்பு வட்டத்தில் யாரேனும் இந்தப் பெயரில் இருக்கிறார்களோ?’ என நினைத்தவனாய், “ராமசாமி” என தட்டச்சு செய்து தட்டி விட்டான்.

அந்தப் பக்கமிருந்து சட்டென ஒரு ஆச்சரியப்படும் எமோஜி பதிலாய் வர, பழகி போன அவனுக்கோ “அதான் ராம்னு ஸ்வீட்டா சொன்னேன்” என அனுப்பினான்.

“அப்போ ராமசாமி ஸ்வீட்டா இல்லையா?” அவனே தான் அரசு எனப்பட்டவனே தான் என முடிவு செய்தாள்.

“ஹுஹும்…”

“ஓ! அப்படியென்றால் உதயாவுக்கும் ஏதோ பெயர் இருக்க வேண்டும் சரியா?” அவன் தான் என உறுதிப்படுத்தக் கேட்டாலும், இந்த ஐயம் அவளுக்கு இருந்தது.

முடிவு செய்தாலும், உறுதிப்படுத்திக் கொள்வது தான் என்றும் சரியானது.

“ம்ம்ம்… ஆமாம், அவள் பெயர் உடையாள், அதை உதயான்னு கொஞ்சம் மாற்றிக் கொண்டாள்.” அவர்களின் குடும்பத்தில், குழந்தை பிறந்தால், தாய் தந்தையரின் பெயரை அப்படியே குழந்தைக்கு சூட்டி விடுவார்கள்.

உறுதியானவுடன், “ஓ… சரி, குட் நைட்” அலைபேசியாடலை முடித்து கொள்ள முடிவு செய்தாள்.

“நான் கேட்ட கேள்வி?” அவன் முடிக்க விரும்பவில்லை.

என்ன கேட்டாய் எனக் கேளாமல், ஞாபகத்தில் இருந்த அவன் கேள்விக்கு “அப்படி ஒன்றும் இல்லை” எனப் பதில் தந்தாள்.

“பொய்” உண்மையை அறிய நினைத்தான்.

விடமாட்டான் போல “பெரிதாய் ஒன்றுமில்லை. உங்கள் குடும்ப உறவுகளைப் பார்க்கவும், இது போல் நமக்கு இல்லையே எனத் தோன்றியது” அவளின் சோகத்திற்கு, சிறிது உண்மையைக் கலப்படம் செய்தாள்.

“ஏன் உனக்கு குடும்பம் இல்லையா?” அவளைப் பற்றி அறியும் ஆவல்.

“குடும்பம் இல்லாமலா நான் பிறந்திருப்பேன்?” பட்டுத் தெரித்தார் போன்று பதில். அவன் அடுத்த ஆராய்ச்சிக் கேள்வி கேட்பதற்குள், “எனக்கு தூக்கம் வந்துவிட்டது. குட் நைட்” என முடித்து கொண்டாள்.

பதிலாய், ஒரு ஆச்சரியமான எமோஜி மற்றும் தூங்கும் ஸ்மைலி போட்டு அனுப்பினான் அவன்.

மறுநாள், எல்லோரும் அதிகாலையிலே எழுந்து குளித்து, ஆண்கள் ஒரு புறம் பெண்கள் ஒரு புறம் என வள்ளியம்மை மற்றும் அருணாச்சலத்தின் அறுபதாம் கல்யாணத்திற்கு தயாராகி கொண்டிருந்தனர். அவர்கள் ஊரில் இருக்கும் சிவன் கோவிலில் தான், கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூத்த பெண்கள் பட்டுச்சேலை சரசரக்க, சிரித்த முகமாய் இதமாய் கிளம்பியிருந்தனர். இளசுகளோ பட்டுச்சேலையோடு பெண்களையே திரும்பி பார்க்க வைக்கும் வேலைப்பாடு மிகுந்த ரவிக்கையோடு ரசனையான ஒப்பனையோடு அழகாய் மிளிர்ந்தனர்.

ஆண்களும் பட்டு வேஷ்டி சட்டையோடு இருக்க, அந்தோ பரிதாபம், பெண்களைப் போல் வேலைப்பாடு இல்லாமல், பெருசுகளும் இளசுகளும் ஒரே கெட்டப்பில், மேல் சட்டை மட்டும் வேறு வேறு வர்ணத்தில் உடுத்தி கிளம்பியிருந்தனர்.

ஒரு வழியாய் எல்லோரும் கிளம்பி, இந்த விஷேசத்தின் காரணமாய் பணியமர்த்தப்பட்ட சிவப்பி மற்றும் ராமாயி குழுவிடம் வீட்டினை ஒப்படைத்தனர்.

கோவிலுக்கு செல்வதற்கு, இரண்டு வேன் மற்றும் ஒரு டாடா சுமோவை அமர்த்தியிருந்தனர். எல்லோரும் வேனில் ஏற,  அது சென்ற பின், மணமக்கள் மற்றும் உமையம்மை, ராதா, உதயா – அழகேசன், ராம் என மீதம் இருந்த இவர்கள் ஏற சுமோ தயாராய் காத்திருந்தது.

வள்ளியம்மை காரில் ஏறிய நொடி, ராதா மயக்கமுற்று சரிந்தாள்.

தூறல் வரும்…

error: Content is protected !!