வானம் காணா வானவில்-12

வானம் காணா வானவில்-12

அத்தியாயம்-12

கோவிலில் நடைபெற்ற நிகழ்வு, சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடத்தால் முழுகச் செய்திருந்தது.

சங்கடம், சந்தனத்துடன் கலந்த மிளகாய்த் தூளைப் பூசியது போன்ற எரிச்சலை இருவரின் உள்ளத்திலும் தந்திருந்தது.

எதிர்பாரா நிகழ்வால் குடும்பமும் ஸ்தம்பித்திருந்தது.

அழகம்மாள், விசாலினி-அரவிந்த் திருமண நிகழ்வில் உண்டான எதிர்பாரா முடிவால்… மீண்டும் தங்களது அறைக்குள் முடங்கியிருந்தார்.

வந்திருந்த உறவினர்கள் அன்று மாலையே சென்றிருக்க, விசாலினியின் தமக்கைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

விசாலினி, திருமணம் நடந்த நாளில்… கோயிலில் நடந்த எதிர்பாரா சில விடயங்களுக்குப் பின்… வீடு திரும்பியவள்… தனதறைக்குள் நுழைந்து தாளிட்ட பிறகு, இன்று வரை அவளறையை விட்டு வெளி வரவேயில்லை.

விசாலினியின் அன்றைய நடவடிக்கையால், அனைவரும் பதறி அறையை திறக்குமாறு கூற மறுத்திருந்தாள்.

மீண்டும், மீண்டும் வந்து அவளின் அறைக் கதவினைத் திறக்குமாறு அனைவரும் வற்புறுத்தவே,

“நடந்த விசயத்துக்கு நான் எதுவும் செய்துக்குவேன்னு பயப்படாதீங்க…!

சாகறளவு… எந்தத் தப்பையும் இங்க யாரும் பண்ணல…!

“…………………………….”

எனக்கு கல்யாணம்…!

அதனால எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்திருந்து ஆசிர்வாதம் பண்ணுங்கனு…! ஊரக் கூட்டி வச்சு…! மனசெல்லாம் சந்தோசத்தோட… நினச்ச வாழ்க்கைய வாழப் போறோம்னு இருந்தா….

ஊர்,பேரு தெரியாத எவனோ ஒருத்தன்… எல்லாத்துக்கும் முன்னாலங்கறத விட… மனசுக்கு புடிச்சவனுக்கு முன்னாடி வச்சு தாலிகட்டறான்…!

… ‘விசாலினியின் விசும்பல் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டது’

ஒரு முடிச்சுனாலும்…! யாரோ முன்ன பின்ன தெரியாதவன்னு என்னால ஈஸியா எடுத்துக்க முடியல…

‘இடையிடையே தேம்பலும், விசும்பலுமாக பேசினாள், விசாலினி’

அந்த சம்பவத்த சாதாரணமா எடுத்துக்கற அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படலயோனு தோணுது!

அத நினைச்சுப் பாத்தாலே உடம்பும், மனசும் நடுங்கி, கூசிப் போகுது…!

எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு…!

அது சரியாகனும்னு தான் தனியா இருக்கேன்!

இரண்டு நாளுக்கு… என்னைய யாரு தொந்திரவு பண்ணாதீங்க…!”, என கூறியவள், அதன்பின் அறையை விட்டு வெளியே வரவில்லை.

கிருபாகரன் மனதளவில் மிகவும் தளர்ந்து போயிருந்தார்.

திருமணத்தன்றும், அதனையடுத்து வந்த நாட்களிலும், அரவிந்தனை நேரில் காணாமல் தவிர்த்துவிட்டாள், விசாலினி.

அலைபேசியை அணைத்து வைத்திருந்தாள்.  உணவிற்காகக் கூட தனதறையை விட்டு வெளியில் வருவதில்லை.

தனது தந்தை, கிருபாகரனை மட்டும் தனது அறைக்குள் வந்து செல்ல அனுமதித்திருந்தாள்.

முதல் நாள் அவரின் மடியில் தலைவைத்து அழுத மகளை, தேற்ற இயலாமல், கம்பீரம் தொலைத்திருந்தார்.

பாரம் குறைந்தபின் சற்று தெளிந்திருந்தாள், விசாலினி.

அடுத்த வந்த நாட்களில் இயல்பாக இருந்தாலும், வெளியில் வரத் தயங்கினாள், விசாலினி.

கிருபாகரனும் மூன்று வேளை ஆகாரத்துடன், மகளின் அறைக்குள் சென்று… சற்று நேரம் மகளுடன் பேசிவிட்டு… அவள் உண்டு முடித்ததும் அறையை விட்டு வெளிவருவார்.

வாரம் ஒன்று… வருடமாகக் கழிந்திருந்தது.

வந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பி… வீடு பேரமைதியைத் தத்தெடுத்திருந்தது.

—————–

 

எதிர்பாராமல் நடந்த நிகழ்வானாலும், எதிர்தரப்பினர்

“இது கடவுள் போட்ட முடிச்சு… அதனால கட்டுன தாலிய கழட்டக் கூடாது”, எனக் கூற

அரவிந்தன், ஒற்றை முடிச்சிற்குப் பிறகு விசாலினியை தன்னை நோக்கி இழுத்து, ஒற்றை முடிச்சிட்டவனை விசாலினியை விட்டு பிடித்துத் தள்ளியிருந்தான்.

அதுவரை ஜே ஜே என இருந்த இடம் அமைதியை அரவணைத்திருந்தது.

வேடிக்கை… மனிதனை வாயடைக்கச் செய்திருக்க,

விடயம் ஓரளவு அருகில் பகிரப்பட, பெரியவர்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.

கோவில் குருக்கள்… சம்பந்தப்பட்டவர்களது சாதூர்யமான முடிவு! என நடந்த விடயங்களில் தலையிடாமல், தாங்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

அழகம்மாள், விசாலினியை இழுத்துச் சென்று… கழுத்தில் கிடந்த ஒற்றை முடிச்சிட்ட தாலியுடன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை தனது பேத்தியின் கழுத்திலிருந்து கழட்டி, கோவில் உண்டியலில் போடச் சொன்னார்.

அதற்குள் அங்கு வந்திருந்த, ஒற்றை முடிச்சிட்டவரின் குடும்பத்து உறுப்பினர்,

“இப்டி கழட்டி போட்டு, எங்க வீட்டுப் பையனுக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா நீங்க தான் அதுக்குப் பொறுப்பெடுத்துக்கணும்”, என முழங்க…

அங்கு திருதிருவென விழித்தபடி நின்றவளின் கழுத்தில் இருந்த மஞ்சள் சரடை,

“பொடிசி கொஞ்சம் குனி”, என்று கூறி அழகம்மாளே பேத்தியின் கழுத்தில் இருந்த தாலியை கையில் எடுத்து கோவில் உண்டியலில் போட்டிருந்தார்.

அதற்குள் பதறி கூடியிருந்த, விசாலினியின் கழட்டிய தாலிக்கு சொந்தக்காரனின் குடும்பத்தார்…

வாயிற்கு வந்தபடி அழகம்மாளிடம் சாட, அவரும் விடாமல் பேசி… தாலிக்கு உண்டான தொகையை தாங்கள் தந்துவிடுவதாகக் கூறினார்.

மகனை அழைத்து தொகையை வாங்கி உரியவர்களிடம் கொடுத்தவர், ‘உங்க புள்ள புத்தியில்லாம நடந்துகிட்டதுக்கு… நீங்க தான் எங்களுக்கு நஷ்ட ஈடு தரணும்.  ஆனா இங்க கோவில்ல வச்சு வம்பு வழக்க நாங்க பிரியப்படல,

என் பேத்தியின் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதா இருக்கட்டும்னு… இந்த பணத்தை கொடுக்கிறேன்.

வாங்கிக்கிட்டு மேற்கொண்டு நடக்கிறத பாருங்க…

தேவையில்லாம… எல்லாரும் மேல மேல பேசினா… நாங்க போலீஸ்கு போற மாதிரி ஆகிரும்!”, என தைரியமாகப் பேசியவர்… அனைவரையும் கோவிலிலிருந்து வீட்டிற்கு கிளம்பச் சொல்லியிருந்தார்.

அழகம்மாள் தனது கிராமத்து உறவினர்களுடன், தங்கள் சார்பில் பிடித்திருந்த வேனில் கருணாகரன், கிருபாகரன் குடும்பம் மற்றும் விசாலினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வந்தவுடன் அறைக்குள் சென்ற விசாலினியின் மனநலம் கருதி யாரும் முதலில் ஒன்றும் கூறவில்லை.

நீலவேணி, சந்திரபோஸ், அரவிந்த், சஞ்சய், மிருணா அனைவரும் அவர்களது வண்டியில் நேராக விசாலினியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

 

“வேணி… ரெண்டு மூனு மாசம் கழிச்சி இதப் பத்தி மேற்கொண்டு பேசுவோம்.

எல்லாரு மனசும் முதல்ல சமாதானம் ஆகட்டும்.

இப்ப அரவிந்த வீட்டுக்கு கூட்டிட்டு கிளம்புங்க”, என்ற அழகம்மாளின் பேச்சினை மதித்து அப்போதே அனைவரும் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.

———————————–

கடந்து போன நாட்கள் கவலைகளை குத்தகைக்கு எடுத்திருந்தது.

அரவிந்தன் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டினுள் முடங்கியிருந்தான்.

சஞ்சய், சந்திரபோஸ் இருவரும் வியாபாரம், தொழிலில் கவனம் செலுத்தியிருந்தனர்.

சந்திரபோஸ், கருணாகரன் இருவரும் கோவிலில் நடந்த நிகழ்வினை, அறியாமல் நடந்த எதேச்சையான நிகழ்வா என அறிய விழைந்தனர்.

அரவிந்தன், அழகம்மாளை அழைத்து ஓரிரு முறை அலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தான்.

பாட்டியும், பேரனும் பொதுவான விடயங்கள் பேசியதாக பெயர் செய்து, தத்தமது மனபாரங்களைக் குறைத்திருந்தனர்.

அழகம்மாளின் மூலம் தனது பொம்மாவின் செயல்களை அரவிந்தன் அறிந்திருந்தான்.

எத்துணை நாட்கள் அவளுக்கு தேவைப்பட்டாலும் எடுத்துக் கொள்ளட்டும்.   வெளியே வரும்போது தெளிவாக வரட்டும் என்ற எண்ணத்தோடு மிகவும் பொறுமையோடு காத்திருந்தான், அரவிந்தன்.

தன்னவளை நேரில் காணும், தனது அவாவிற்கு அணையிட்டிருந்தான்.

ஏதோ ஒரு வகையில் காயம் உண்டான தன்னவளின் மனதினை, நேரில் சென்று மேலும் காயப்படுத்த பிரியப்படவில்லை.

ஆனாலும், தன்னவளின் அலைபேசிக்கு அழைப்பதையும் இன்று வரை நிறுத்தவில்லை.

பெண், அவளின் அலைபேசிக்கு… வேலை நிறுத்தம் செய்திருந்தாள்.

விசாலினியின் அணைக்கப்பட்ட அலைபேசி, யாருடைய அழைப்பையும் ஏற்க இன்று வரை அவள் மனதால் தயாராகவில்லை என்பதை அரவிந்தனின் உள்ளம் அவனோடு மௌனமாகப் பேசி பகிர்ந்திருந்தது.

மேலும், வாரம் ஒன்று கடந்திருக்க, தாயிடம் கூறிவிட்டு… பாட்டிக்கு அழைத்திருந்தான்.

“பாட்டி…! இன்னிக்கு மதியம் சாப்பாடு… மாமா கொண்டு போயி அவளுக்கு குடுக்க வேணாம்!

நான் வர லேட்டானாலும் மாமாட்ட வயிட் பண்ணச் சொல்லுங்க…! ஒரு வேலய முடிச்சிட்டு… நானும் வந்து அவகூட சாப்பிட்டுக்கறேன்!”, என தகவலை தெரிவித்து விட்டு, பாட்டியின் சம்மதத்தைப் பெறாமலேயே அலைபேசியை வைத்திருந்தான், அரவிந்தன்.

 

அழகம்மாளுக்கு, அரவிந்தன் எனும் கந்தர்வனின் மேல் கொண்ட அதீத நம்பிக்கையில், இதுவரை நடந்தவற்றை புறந்தள்ளி புத்துணர்வு பெற்றிருந்தார்.

எதுவானாலும் தன் பேரன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியம், அவரைத் தைரியம் கொள்ளச் செய்திருந்தது.

பேத்தியை முறையாக ஒப்படைத்து விட்டால் போதும் என்பதைத் தவிர வேற எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தார், அழகம்மாள்.

பொடிசியின் சேட்டைகள் பெரும் சேதாரத்தை மனதளவில் தந்தாலும், யாரும் அவளைப் பொருட்படுத்தவில்லை.

எல்லாம் அரவிந்தன் எனும் மாயாவியால் மாறும் என்று இறுமாந்திருந்தனர்.

 

திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் அனைவரையும் அப்படி யோசிக்கத் தூண்டியிருந்தது.

கண்களால் பேசி, இருவரும் காதல் வளர்த்த நிமிடங்களை அனைவரும் காணாதது போல… கண்டு மகிழ்ந்திருந்தனர்.

அவனின் அருகாமையில் பெண் குழைவதும், அவன் மனம் இழைவதுமாக இருந்த காட்சிகள், அனைவரையும் தங்களது பருவ வயதை… திரும்பிப் பார்த்து… ஏங்கச் செய்திருந்தது.

இருவரின் அன்னியோன்யமான, நாகரிகமான நடவடிக்கைகள் பார்ப்பவர்களைப் பித்தம் கொள்ளச் செய்திருந்தது.

இருவரின் நடவடிக்கைகள்…! பருவ வயது நிரம்பிய திருமணத்திற்கு காத்திருப்பவர்களை, ஏங்கச் செய்து… இது போல ஒரு வாழ்க்கைத் துணைக்காக தவமிருக்கச் சொல்லியது.

பெற்றோரும், பெரியவர்களும் இருவரின் ஒருமித்த மனதைக் கண்டு பூரித்திருந்தனர்.

———————

 

நண்பகல் 12.50

தனது தந்தை சரியாக 1.00 மணியிலிருந்து 1.15 மணிக்குள் அறைக்குள் வருவதற்கு ஏதுவாக தனதறையின் கதவு தாழ்ப்பாளை ஓசைப்படாமல் மெதுவாக திறந்து வைத்துவிட்டு, படுக்கையில் படுத்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். நேரம் கடந்திருக்க அவளறியாமல் புத்தகத்துடன் உறங்கியிருந்தாள், விசாலினி.

பணிகளை முடித்துக் கொண்டு விசாலினியின் வீட்டிற்கு தாமதமாக வந்தவனை,

அனைவரும் வரவேற்று அமர வைத்தனர்.

மணி இரண்டரைக்கும் மேலாகியிருந்ததால்,அமர பிரியப்படாதவன், நின்றவாறு அனைவருக்கும் இன்முகமாக பதிலளித்திருந்தான்.

மதினிமார்கள் இருவரும் அரவிந்தனை கிண்டல் செய்து சுண்டலாக்கி இருந்தனர்.

அழகம்மாள் உண்ணுமாறு கூற… மறுத்தவன், இருவருக்கும் வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு தன்னவளின் திறந்திருந்த அறைக்குள் ஓசைப்படாமல் வந்திருந்தான், அரவிந்தன்.

எடுத்து வந்திருந்த உணவை அருகில் இருந்த மேசையில் வைத்தான்.

அரவிந்தனின் வருகையை உணராமல் உறங்கியவளை

“ஷாலுமா…”, என மெதுவாக அழைத்திருந்தான், அரவிந்தன்.

முதலில் உறக்கத்திலிருந்தவள், பிறகு இரண்டொரு முறை காதில் விழுந்த ஷாலுமா! என்ற தந்தையின் அழைப்பை போலிருந்த தன்னவனின் அழைப்பைக் கேட்டு அரைத் தூக்கத்தால் என்பதை விட பசி மயக்கத்தால்,

“போங்க… டாடீ… எனக்கு பசியில தூக்கமே வந்திருச்சு… எனக்கு ஒண்ணும் வேணாம்! நீங்களே என் சாப்பாட சாப்டுட்டுப் போங்க…”, என அரவிந்தனைப் பார்க்கமாலேயே கோபமாகப் பேசியிருந்தாள், ஷாலினி.

படுக்கையின் நடுவே குப்புறப்படுத்திருந்த ஷாலினியை சுற்றி, ஆறேழு புத்தகங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இரைந்து கிடந்ததைக் கண்டான்.

கண்டவன் காண்டாகி இருந்தான்.

‘இவளையே நினைச்சுட்டு பைத்தியம் மாதிரி ஒருத்தன் அங்க இருக்க… இதுபாட்டுக்கு மைண்ட் ஸ்விங்கல இருந்து ஜம்ப் ஆக புத்திசாலித் தனமா புத்தகம் படிச்சிருக்கே!”, என மனதால் தன்னவளை நினைத்து ஒரு பக்கம் சந்தோசமும், மறுபுறம் செல்லக் கோபமுமாக மாறியிருந்தான், அரவிந்தன்.

தாளிடாத கதவைத் திறந்து கொண்டு யாரும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்

அவளைச் சுற்றியிருந்த புத்தங்களை உணவிற்கு துணை வைத்துவிட்டு,

தன்னவளுடன் படுக்கையில் படுத்து, அவளை பின்புறமாக அணைத்து இருந்தான்.

அணைப்பினை உணரும் நிலையில் இல்லாதவள், எந்த மறுப்பும் இல்லாமல் இருக்க,

காதில் செய்தி கூறினான்.

“ஷாலு… எனக்குப் பசிக்குதுடீ… ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”, எனக் கிசுகிசுப்பாகக் கேட்ட குரல் மூளைக்குச் சென்று அருகில் இருந்த அணைப்பு, குரலை உணர்ந்து படுக்கையிலிருந்து திரும்ப எத்தனித்தவளை, அரவிந்தனின் இறுக்கிய அணைப்பு திரும்பவிடாமல் தடுத்திருந்தது.

அருகாமையில் இருந்தவனை உணர்ந்தவள், உடல் முழுவதும் சிலிர்த்திருந்தது.

பேச நா எழாமல்… எதிர்பாரா அணைப்பால் நாவு ஒட்டிக் கொண்டு சண்டையிட, உடலும் பசியால் துவண்டிருக்க… அமைதியாக அரவிந்தனின் அணைப்பை ஏற்றிருந்தாள், விசாலினி.

அனைத்தையும் உணர்ந்திருந்தாலும், எதுவும் அறியாதது போல

“வாடீ… சாப்பிடலாம்…! பசில எனக்கு மயக்கமே வருது”, என்றபடியே எழாமல் அவளை அணைத்திருந்தவனை

“வாடீ… வாடீனு கூப்பிட்டா மட்டும் போதுமா… எழ விடாம இப்டி புடிச்சு அமுக்குனா… எப்டி நான் எந்திரிப்பேன் …!”, என பாவமாகக் கேட்டாள் விசா.

விசாவின் நியாமான கேள்வியில் சிரித்தபடியே தனது கைச் சிறையிலிருந்து விடுவித்தவன், தன்னவளை விட்டு படுக்கையில் இருந்து எழுந்திருந்தான், அரவிந்தன்.

தன்னவள் எழ  உதவி செய்ய முன்வந்தவனை, தனது முறைப்பால் தள்ளி நிறுத்தியிருந்தாள்.

தூக்கத்தில் இருந்து எழுந்தவளுக்கு, பசியைத் தவிர அனைத்தும் மறந்திருக்க…

கை கழுவி வந்து, மேசையில் இருந்த தட்டை எடுத்து, உணவில் இருவரும் கவனம் செலுத்தினர்.

உண்டு முடிக்கும்வரை எதுவும் பேசாமல் உண்டவர்கள், கையை கழுவி வந்தனர்.

வயிறு நிறைந்திருந்தது!

நடப்பு சற்றே நினைவில் நிழலாடியது!

மனதின் கனம்… கூட துவங்கியிருந்தது!

விசாலினியின் மனதை… வீரியம் குறைந்த… மறைந்த நாட்களின் விடயங்கள் ஆக்ரமித்திருந்தது!.

காதல் ததும்பிய உள்ளத்தில், களவு போன நிம்மதியை… வந்தவனிடம் தேட பெண்ணுக்கு ஆவல் உந்தித் தள்ளியது.

நாணம் தடைபோட ஏக்கம் எழுந்தது.

நாணம் தடுக்க, தனியறையில் தன்னவனுடன் தனித்திருக்கும் முதல் தனிமை தந்த தடுமாற்றத்தில் இதயம் தடுமாற நின்றிருந்தாள், பெண்.

தன்னவளின் அருகாமை தந்த இனிமை மகிழ்ச்சியைக் கூட்டியிருக்க, சித்தம்… பித்தம் கொள்ள ஆரம்பித்திருந்தது.

பித்தம் தணிக்க, அருகிலிருந்தவளை அணைத்து நெற்றியில் இதமாக முத்தமிட்டு இருந்தான்.

எதையும் தடுக்க இயலாமல், உள்ளம் உயரே பறக்க, மனதின் கனப்பு[i] குறைந்து தன்னை மறந்திருந்தாள், விசாலினி.

தன்னவளை தனது மடியால் லாவகமாகத் தாங்கிக் கொண்டான், அரவிந்தன்.

கைகளால் அணைத்தபடியே,

“ஷாலு… போன் கூட அட்டெண்ட் பண்ணாம என்னைய ரொம்ப படுத்துறுயேடீ!”, என ஏக்கமாகக் கேட்டான்.

“…”, தன் மனக்குமுறலை கொட்ட முடியாமல் அவனின் அணைப்பில் குளிர்ந்திருந்தாள்.

“இன்னும் ரெண்டு மாசத்துக்கு பின்ன மேரேஜ் செய்யலாம் அப்டினு பாட்டி சொல்லிருக்காங்க… அதுவர எங்கூட பேசுடீ!  இல்லனா அப்புறம் உன்னயக் கடத்துற மாதிரி என்னை எதுவும் பண்ண வைக்காத… சொல்லிட்டேன்!  அப்புறம் சேதாரத்துக்கு இந்த அத்தான் பொறுப்பாக மாட்டான்!”, என சன்னமாகச் சிரித்தபடியே கூறியிருந்தான்.

“…”, அரவிந்தனின் வாய்மொழியைக் கேட்டபடி தனது தாய்மொழியைப் பேச… வார்த்தைகளை மறந்திருந்தாள்.

“சொல்லு ஷாலு… ஒண்ணும் பேசாம இப்டியே இருந்தா… நான் என்னனு எடுத்துக்கறது?”, என அதே தொணியில் கேட்டவனிடம்

“உங்களப் பாக்கவே எனக்கு கஷ்டமா இருந்தது.  அப்புறம் என்னத்த நான் பேச…  அதனால தான் போனை ஆஃப் பண்ணி வச்சிருந்தேன்”, என மெதுவான குரலில் கூறினாள், விசாலினி.

“எதையும் போட்டு மனசக் குழப்பாத, எல்லாம் பெரியவங்க பாத்துப்பாங்க… இப்ப என்ன செய்யலாம்னு மட்டும் சொல்லு!”, ஜாலி மூடில் அரவிந்தன் ஜொள்ளின் பேச்சு வந்திருக்க

“கல்யாணத்துக்கு முன்ன உங்கள எப்டி பாட்டி என் ரூமுக்குள்ள விட்டாங்க?”, என்ற தனது சந்தேகத்தை தெளிவாக்க தன்னைவனை நோக்கிக் கேட்டிருந்தாள், வாத்தியாரம்மா.

“நீயே… என்னைய இந்த ரூமுக்குள்ள விடாதீங்கனு போய் பாட்டிகிட்ட சொல்லுவ போலயே…!

அத்தானுக்கு ஆப்படிச்சிறாதடீ… அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ!  வாத்தியாரா இருந்து ஏகத்துக்கு கேள்வியா கேட்டு மனுசன ஓட விடற!

உனக்கு நான் வாத்தியாரா இருக்கேன்!

நான் சொல்லித் தருவேனாம்.  ஷாலு சமத்தா கேட்டு நடந்துப்பியாம்!

ஐடியா நல்லா இருக்காடீ ஷாலு!”, என்று கூறி சிரித்திருந்தான்.

“வந்ததுல இருந்து நானும் பாக்கறேன். எத்தன டீ… போடுறீங்க…!

மாஸ்டரா இருந்தவரு ஏன் வாத்தியா மாறுறீரு!”, என்று கூறி சிரித்தவள்,

“என்னைப் பாத்தா ஆப்படிக்கிறவ மாதிரியா இருக்கேன்…! அப்பிராணி போல இருக்கேன்.

அப்டியே நாங்க ஆப்படிச்சாலும்… நீங்க பயந்துருவீங்களாக்கும்!

உங்களப்பத்தி யாரு என்ன சொன்னாலும்… இந்த உலகம்… வேணா நம்பும்…!

ஆனா நான் நம்ப மாட்டேன்!”, என்று அரவிந்தனுக்கு ஆப்படித்திருந்தாள், விசாலினி.

அத்தோடு அரவிந்தனின் மடிக்கு விடை கொடுத்து எழுந்தவளை, எழவிடாமல் பிடித்திருந்தான்.

“என்ன மாஸ்டர்! இப்டி குரங்குப் பிடி புடிச்சா, குச்சியா இருக்குற எனக்கு எதாவது டேமேஜ் ஆகிறப் போறேன். அப்புறம் உங்களுக்குத் தான் கஷ்டம்”, என்றபடி மீண்டும் எழ முயற்சித்தாள், பெண்.

“மாஸ்டர் மச்சானாகி மாமாங்கம் ஆகிருச்சு…!

இன்னும் மாஸ்டரா நான் உனக்கு!

இப்ப கிளம்பி போனா அப்புறம் எத்தனை மாசம் என்னைய டீலுல விடுவனு யாருக்கும் தெரியாது!

இருக்கறவர மனசுக்கு பிடிச்சமாதிரி இருந்துட்டு கிளம்பிருவேன்.

அதுவர அமைதியா இரு!

டேமேஜ் ஆகிருவேன்னுலாம் எங்கிட்டயே பயமுறுத்தாத…!

தொடாதனு தள்ளி வச்சு… மேரேஜ் ஆன பின்ன என்னடீ செய்யறதா இருக்க?”, என்று லாஜிக்கை சிந்திக்க வைத்து, தன்னவளை சிவக்க வைத்திருந்தான், அரவிந்தன்.

“என்ன இன்னிக்கு திடீர்னு வீட்டுக்கு… என்னப் பாக்க வந்திருக்கீங்க!  எங்காது கிளம்பறீங்களா?”, என சரியானதை யூகித்து ஆனால் சோகமாகக் கேட்டிருந்தாள்.

“ஆஸ்திரேலியா கிளம்பறேன். அந்த ஆஃபீஸ் மட்டும் பென்டிங் வச்சுட்டு கல்யாணத்துக்குனு வந்தேன்.  இன்னும் ரெண்டு மாசம் இங்க சும்மா உக்காரதுக்கு அங்க போயிட்டு வரலாம்னு கிளம்பறேன்.”, என விடயம் பகிர்ந்தான்.

“அதான பாத்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடாதே, திடீர்னு ஏன் ஆடுதுன்னு”, என தன்னை கோபமாக தவிர்த்து எழுந்தவளை

“என்னைய பாத்து சோழியன்னு சொல்றியா?”, எனக் கேட்டான் அரவிந்தன்.

“காரணத்தோட தான்… இங்க வந்திருக்கீங்களானு தானே கேட்டேன்.  அது ஒரு குத்தமா?”, விசாலினி

“குத்தமெல்லாம் ஒரு முத்தா கொடுத்தா சரியாகிரும், ஒரு பூஸ்டோட நானும் சந்தோசமா கிளம்பிருவேன்!”, என சல்ஜாவிற்கு ஆயத்தமானான், அரவிந்தன்.

“அதுக்குள்ளயா கிளம்பறீங்க?”, என சோகமே வடிவாகக் கேட்டவளை விட்டுச் செல்ல மனமில்லாமல்

“வேற என்ன செய்யச் சொல்ற, கிட்ட வந்தா உருகுற… எட்டி இருந்தா முறுக்கிக்கற… உன்னய என்னால புரிஞ்சுக்கவே முடியல… ஷாலு”,என பெருமூச்சு விட்டான் அரவிந்தன்.

“…”, அமைதியாக தலைகுனிந்து அருகில் அமர்ந்திருந்தவளிடம்

“ஒரு காஃபி கொடுத்தா சந்தோசமா போவேன்”, என்றான் அரவிந்தன்.

“இப்ப தான சாப்டீங்க. அதுக்குள்ள காஃபீயா”, எனக் கேட்டபடியே அரவிந்தனின் முகம் பார்த்தவள், வில்லங்கமான அவனின் இதழ் முறுவலில் ஒன்றும் புரியாமல்… ஆனால் ஏதோ புரிய…

“நான் எந்த ஆட்டைக்கும் இப்ப வரல! பூஸ்டுக்கு அப்புறம் வந்த இந்த காஃபீ வேற போலயே!”, என்று ஷாலினி பின்வாங்க

“சரி நான் ஆடுறேன்! நீ ஆட்டைய மட்டும் கவனி!”, என்றவன் “எனக்கு காஃபீ பிடிக்கும், உனக்கு என்ன பிடிக்கும்”, என தன்னவளிடம் கேட்டான்.

“நீங்க கேக்கறதே எனக்கு புரியல… ‘க்கு’ வச்சு பேசும்போது நான் பதில் பேசமாட்டேன்”, என்று தனது வாயை மூடியிருந்தாள், விசா.

“போடீ மக்கு… க்கு வச்சு பேசி… உன்ன என்ன பண்ணிருவேன், நான்.

இப்போ உனக்கு விளக்கம் சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ…

ட்டீல பல வரைட்டி இருக்கும்.

ஆனா அதுல போதை பெரியளவுல இருக்காது.

மயக்கம் வராம மைல்டா… அது எனர்ஜெடிக்கா இருக்கும். அதனால அத அவசர நேரத்துல… ரெகுலரா யூஸ் பண்ணலாம்.

எப்டினா…”, என்றபடியே தன்னவளை அருகில் இழுத்து அவளின் நெற்றியில் ஒன்று, இதழில் ஒன்று என இதமாக, நிதானமாக தன் இதழொற்றி எடுத்தான்.

“இது ட்டீ… என்ன சரியா! இதுல பெரிய அளவுல கிக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது…, இருக்காது.  ஆனா நிறைய வெரைட்டி செஞ்சு…  குடிச்சு… எனர்ஜியா ஃபீல் பண்ணுவோம்.

நேரத்துக்கு தகுந்தமாதிரி, அவசரத்துக்கு இந்த ட்டீதான் நமக்கு எனர்ஜி!

அடுத்து இந்த காஃபீ மேட்டருக்கு வருவோமா!

ஒரு காஃபீ குடிக்கணும்னு வாங்கினவுடனே… நமக்கு நல்ல மூட் கிரியேட் ஆகிரும்!  அத ஸ்மெல் பண்ணாலே அடுத்த லெவல் போயிருவோம்.  குடிச்சிட்டு வந்து… ஒரு வேலய ஆரம்பிச்சா… எந்த பிசிறும் இல்லாம… வேலய பக்காவா செய்யலாம்!

அளவா குடிச்சா, கொலஸ்டிரால் குறையும்!

எப்டினா நாம குடிக்கும் போதே கொலஸ்டிரால் பர்ன் ஆகி, படிப்படியா குறைய ஆரம்பிக்கும்.

ஹார்ட்டுக்கு ரொம்ப நல்லது!

இதுல இருக்குற கஃபேன் கொடுக்கிற போதை இருக்கே… அது அலாதி…!

இது அடுத்த லெவல் போக… நம்ம தூண்டும். நினைச்சாலே சந்தோசமா ஃபீல் ஆவோம். இன்னும் வேணும்னு தோணும்!

ஆனா அளவோட வச்சுட்டா… அம்சமா நம்மள கொண்டு போகும்.  இல்லனா அம்பேல் தான்!”, என்று தனது இரு கையை விரித்துக் கூறியவனை புரியாத பார்வை பார்த்து இருந்தாள், விசாலினி.

“முட்டாப் பயலே… காஃபீ, ட்டீ பத்தி தெரியாமயா நான் வளந்தேன்னு நீ நினைக்கிறது எனக்குப் புரியுது, ஷாலு!

இப்ப நான் எடுத்த பாடத்துக்கும், இனி நான் செய்யப்போற விசயத்துக்கும், என்ன சம்பந்தமுனு நீ கேக்க வரதும்… புரியுது!

இருந்தாலும் நான் என்ன ஃபீல் பண்றேங்கறத உங்கிட்ட சொல்லணும்ல… என்னைய பத்தியும் நீ தெரிஞ்சுக்கணும்ல… அதான்…!

அத்தான் இப்ப காஃபீ எப்டி இருக்கும்னு உனக்கு காட்டறேன்!”, என்று சிரித்தவன் தன்னவளை நோக்கி நெருங்கியிருந்தான்.

எதையும் மறுக்கத் தோன்றாமல், என்ன செய்யப் போகிறானோ என்ற எதிர்பார்ப்போடு நின்றிருந்தவளை, தனதருகில் நிறுத்தி, தன்னிரு கைகளால், தன்னவளின் பின்னந்தலையை அணைவாகப் பிடித்து தன்னை நோக்கி விசாலினியின் முகத்தைக் கொண்டு வந்தான்.

புரிந்தவள், நாணத்தால் முகம் சிவக்க… கண் மூடியிருந்தாள்.

கம்பீர அழுத்தமான தனதிதழால், மலரினும் மெல்லிய தனதவள் இதழ் தீண்டி, மென்மையாக முத்தமிட்டான்.

இதழ் கொண்டு இதழ்பிரித்து, நாவிரண்டும் சந்தித்து; நலம் பகிர்ந்து; நர்த்தனம் புரிந்து; நன்னீர் உறிஞ்சி; விடைபெற்றது.

நிதானமாக தான் விரும்பிய காஃபீயை பருகி…, இறுக தன்னவளை தன்னோடு ஒரு முறை அணைத்து, மனமில்லாமல் விடுவித்தான்.

விடுவித்தும், விடுபட முடியாமல், எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்க்க முடியாத நாணத்தால், நிலம் பார்த்து முகம் பார்க்க முடியாமல் நின்றிருந்தாள்.

“போயிட்டு திரும்பற வர இந்த காஃபீ போதும்னு நினைக்கிறேன்.  வேணும்னா குடிக்க கிளம்பி வந்திருவேன்”, என்றபடியே கிளம்பியிருந்தான் அரவிந்தன்.

அரவிந்தன், ஆஸ்திரேலியா கிளம்புவதாகக் கூறி அனைவரிடமும் விடைபெற்றிருந்தான்.

அனாகதச் சக்கரம், அனாதையானது போல மனம் துக்கத்தால் துவண்டு இருக்க, அவன் அருகிலிருந்தவரை இல்லாத உணர்வு தன்னை நெருங்கி… நொறுக்கியதை விரட்டத் தெரியாமல் தொய்ந்திருந்தாள், விசாலினி.

தன்னவனின் குரலைக் கேட்க, அலைபேசியை உயிர்ப்பித்து, உயிர் பிடித்திருந்தாள், விசாலினி.

—————————————————————————-

[i] பாரம், அழுத்தம்

error: Content is protected !!