OVOV 43

OVOV 43

(மெக்சிகன் கிரிமினல் சிண்டிகேட், நாட்டின் போதைப்பொருள் விற்பனையாளர்களில் மிகவும் ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது. 1990 களின்  மெக்சிகன் இராணுவத்தின் கமாண்டோக்கள் தங்கள் பணிகளை விட்டு வெளியேறி வளைகுடா கார்டெலின் அமலாக்கப் பிரிவாக பணியாற்றத் தொடங்கினர். போதைப்பொருள் கடத்தல்,தலை துண்டித்தல், சித்திரவதை,assination, பாதுகாப்பு மோசடிகள், படுகொலைகள், மிரட்டி பணம் பறித்தல், கடத்தல்,பாலியல் அடிமைத்தனம் இவர்கள் பணம் ஈட்டும் வழிகள். )

இடம்-ஹோட்டல் tulip inn

மற்றவர்கள் கவனத்தை கவராத வண்ணம் பழ சாலட் நிரம்பிய கிண்ணத்தை எடுத்து கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த பால்கனி நாற்காலியில் அமர்ந்தாள் ப்ரீத்தி யாருக்கோ காத்திருப்பது போல்.

ப்ரீத்தியின் எதிர்பார்ப்பை பொய்யாகாத வண்ணம் வந்து சேர்ந்தனர் அந்த மூவர் அர்ஜுன் குடும்பத்தில் மற்ற யாரும் அறியாவண்ணம்.வந்த மூவரில் ஒருவன் கையில் போர்க்/முள் கரண்டி தயாராய் இருந்தது. அதை வைத்து ப்ரீத்தியின் கழுத்தை குத்தவும் அவன் தயங்க மாட்டான் என்பது அவன் அந்த போர்க்கை பிடித்து இருந்த வைகையிலே தெரிந்தது.

மூவரும் ப்ரீத்தி முன் வந்து நிற்க,”சோ நீங்க தான் எல்லோரும் தேடும் ஸுல்பா கரெக்ட்டா?”என்றாள் ப்ரீத்தி ஆங்கிலத்தில் அந்த மூவரில் ஒருவரை பார்த்து.

அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.போர்க் பிடித்து இருந்தவன் கரம் அதில் அழுத்தம் கொடுக்க,மற்ற மூவரும் வேண்டாம் என்பது போல் தலை அசைத்தனர்.

மற்ற இருவரும் அவனை தடுத்தும் அவனின் கோபம் கட்டுக்குள் வரவில்லை.ஏற்கனவே கோபத்தில் இருந்த அவன், ப்ரீத்தி கேட்ட,”சோ நீங்க தான்,எல்லோரும் தேடும் ஸுல்பாவா ?”என்ற கேள்வியை கேட்ட உடன் வெகு வேகமாய், அழுத்தம் கொடுத்தவனாய் கையில் இருந்த முள் கரண்டியை/fork ப்ரீத்தி கழுத்தை நோக்கி கீழ் இருந்து விசையுடன் கழுத்தை குறி வைத்து எடுத்து செல்ல,கடைசி நொடியில் அவன் கையை மூவரில் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.

“விடுங்க….இவ நமக்கு ஆபத்தானவ…இவ உயிரோடு இருந்தால் இத்தனை நாள் நாம் செய்து வந்த அனைத்து நல்லதிற்கும்  அர்த்தம் இல்லாமல் போய்விடும்…. இங்கே யாரும் இல்லை, சிசிடிவி கேமரா எதுவும்  இல்லை.மேஜர் ரத்த நாளத்தை சிதைத்து இங்கிருந்து இவளை தூக்கி கீழே போட்டால்,உயிர் போய்டும்…நாம தான் செய்தோம் யாருக்கும் சந்தேகம் வரவே வராது.இது அந்த காபோஸ் செய்ததாய் தான் மாறிவிடும். விடுங்க …சொல்றேன் இல்லை ?”என்று அவன் ஆங்கிலத்தில் சீறி கொண்டு இருந்தான்.

அவனை தூர இழுத்து நிறுத்திய இன்னொருவர்,”அர்ஜுனை பத்தி கொஞ்சம் யோசி…அவன் இவளை உயிராய் நினைத்து இருக்கான்…இவளுக்கு ஒன்று என்றால் தாங்கவே மாட்டான். நம்ம வீட்டுக்கு மருமகளாக வர போகும் பெண். பேசி புரிய வைப்போம்….நம் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தால்,நம்மை பற்றி வெளியே சொல்ல மாட்டா….நீ பொறுமையா இரு…” என்றார் அவர்.

“நாம என்ன போதை மருந்து கூட்டத்தை போல் யார் எப்படி போனால் என்ன என்று கொன்று குவித்து,பணம் உருவாக்கும் பிணங்களின் மீது வாழ்பவர்களா…?இவங்க எந்த தப்பும் செய்யாதவங்க….நம்மை கண்டு பிடித்தாங்க என்பதற்காக மட்டும் இவங்களை கொல்ல முயன்றால், நாம் இத்தனை நாள் எதை எதிர்த்து கொண்டு இருந்தோமோ அதற்கு அர்த்தம் இல்லாதது  ஆகி விடும்…..ஒரு அப்பாவி பெண்ணை கொன்றால் தான் நாம் தப்பிக்க முடியும் என்றால் அப்படி ஒரு வாழ்க்கையே எனக்கு வேண்டாம்.”என்றார் இன்னொருவர்.

இவர்கள் தங்களுக்குள் விவாதித்து கொண்டிருக்க,ப்ரீத்தியோ தனக்குள்,’அடப்பாவி ஜஸ்ட் மிஸ்ஸு…. கொலை செய்வதை இத்தனை சர்வ சாதாரணமாய் சொல்றானே …..சிசி டிவி இல்லையாம் போர்க்கில் குத்தி,இத்தனையாவது மாடியில் இருந்து தூக்கி போட நான் என்ன பொம்மையாடா …?நல்லா வருவீங்கடா…. ரஞ்சித் கிட்டேயும்,அர்ஜுன் கிட்டேயும் உங்களை காட்டி கொடுத்திருக்கணும்…சரி ஏதோ நாட்டிற்கு நல்லது செய்யறீங்களேன்னு பார்த்தா எனக்கே ஆப்பை திருப்பறீங்களேடா… ‘என்று மனம் அடித்து கொள்ள,

ப்ரீத்தி மூளையோ,’சும்மா இருக்கும் எரிமலையை எல்லாம் நொண்டி விட்டால் போர்க் என்ன பாஸுகா/bazuka, கிரனேட்/grenade, ராக்கெட் லாஞ்சர்/rocket launcher கூட தான் வரும்….இப்போ இந்த துப்பறியும் சாம்பு,கணேஷ்- வசந்த், விவேக்-ரூபலா வேலையெல்லாம் நீ செய்யலை என்று எவன் அழுதா? வந்தோமா …வேலை பார்த்தோமா,அழகான பஞ்சாபி பையன் அர்ஜுனை சைட் அடிச்சோமோன்னு இல்லாம ஒரே நாளைக்குள் போதை மருந்து,பாம்,சேப் ஹவுஸுக்கு கடத்தல் இதெல்லாம் தேவையா?’என்று அடித்து கொள்ள கண் முன் ஊசலாடிய தன் உயிரை கண்டு, உறைந்து போய் அமர்ந்திருந்தாள் ப்ரீத்தி.

வெளியே எதையும் காட்டிகொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஆயிரம் ரேஸ் குதிரைகள் ஓட ஆரம்பித்து இருந்தன.

‘ப்ரீத்தி செல்லம் ….நம்ம பேஸ் மென்ட் வீக் விஷயம் எல்லாம் வெளியே காட்டிக்க கூடாது…அப்படியே சும்மா கெத்தா இருப்பதை மெயின்டெய்ன் செய்துக்கோ….ஸ்டெடி, ஸ்டெடி …’என்று பெரு மூச்சு எடுத்து தன்னையே சமாளித்து கொண்டவள்,ஐஸ் நிரம்பிய அந்த பழ சாலட் தான் ரொம்ப முக்கியம் என்று அதை சுவைக்க ஆரம்பித்தாள்.

ப்ரீத்தி உள்ளுக்குள் பதறி கொண்டிருந்தாலும்,எதிராளிக்கு தன் பலவீனத்தை காட்டவிரும்பாதவளாய்,அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் உளவியல் அளவில் அவர்களை ஜெயிக்க முயன்று கொண்டிருந்தாள்.

‘ப்ரீத்தி ….சரியா செய்யறே…எந்த சூழ்நிலையிலும் மனத்துணிவையோ, திடத்தையோ கை விடாதே….எந்த நொடியும் உன் பயமோ,பதட்டமோ வெளியே தெரிய கூடாது. முகத்தில் உணர்ச்சி எதையும் காட்டாதே. புலி வாலை பிடித்து விட்டாய்….இனி அந்த புலியை எப்படி எலியாக்குவது என்று யோசி….நெல்சன் மண்டேலா சொன்னதை நினைத்து பாரு “தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, ஆனால் அதன் மீதான வெற்றி. துணிச்சலான மனிதர் பயப்படாதவர் அல்ல, ஆனால் அந்த பயத்தை வெல்பவர்”.சோ பயப்படுவதால் ஒன்றும் ஆக போவதில்லை.துணிந்து நில். ஒரு நொடி இந்த ஆபத்தை எதிர்த்து துணிந்து நின்று விடு ப்ரீத்தி’ என்று தனக்குள் வைராக்கியத்தை கொண்டு வந்தவள், நிமிர்ந்து அமர்ந்தாள்.

அவளின் இந்த நிமிர்வே போர்க் எடுத்தவனை சற்று தேக்கியது. ஏற்கனவே யாஷ்வி விஷயத்தில் அவளின் துணிவு,தெளிவான சிந்தனை,அணுகுமுறை அவனை கவர்ந்திருந்தது.ப்ரீத்தி என்னும் பெண்ணை எதிராய்  பார்ப்பதை விட,அவர்களின் சாணக்கியனாய் பார்த்தால் நல்லது என்று புரிய அவன் கை தானாய் கீழ் இறங்கியது.

போர்க் எடுத்தவன் கையை கீழே இறக்க,அந்த இருவரில் அவனை தடுத்தவர் ப்ரீத்தி புறம் தன் கவனத்தை மீண்டும் திருப்பினார்.

“உனக்கு எப்படி தெரியும்…இவங்க தான் ஸுல்பா என்று?” என்றார் அவர் ப்ரீத்தியிடம்.

“நீங்க தான் சொன்னீங்க.”என்றாள் ப்ரீத்தி.

மூவரும் அதிர்வது வெளிப்படையாக தெரிந்தது.

“நான் எப்போ உன்னிடம் சொன்னேன்?”என்றார் அந்த முதலாமவர்.

“இதோ இப்போ தான்… எனக்கு எப்படி ‘இவங்க தான் ஸுல்பா என்பது எப்படி தெரிந்தது என்று கேட்டு நீங்களே உங்களை காட்டி கொடுத்துடீங்க…எங்க ஊரில் பார்த்திபன், பார்த்திபன் என்ற நடிகர் ஒருவர் இருக்கார்.இதை அவர் ‘போட்டு வாங்கறது’, ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’ என்பார்.அவர் கேட்கும் கேள்வியில் வடிவேலு என்பவர் அவராக எல்லா உண்மையையும் உளறி வைப்பார்…அதே போல் தான் இப்போ நீங்க, நான் சந்தேகமாய் ‘நீங்க தான் ஸுல்பாவா?’ என்று கேட்டதற்கு ,’எனக்கு எப்படி தெரியும்?’என்று உங்க கேள்வியின் மூலமாகவே பதில் சொல்லிடீங்க. சிம்பிள்.”என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்டு அவர்கள் மூவரும் உறைந்து போய் நின்றார்கள்.

அவர்கள் நின்ற நிலை ப்ரீத்தியின் மனக்கண்ணில் வடிவேலு வாய்ஸில் அந்த ஸீன் ஒட்டி காட்டியது.’நீ குத்துமதிப்பாய் தான் கேட்டியா?நானா தான் உளறிட்டேனா?’என்ற டயலாக் மனதில் ஓட ,வந்த சிரிப்பை முயன்று அடக்கினாள் ப்ரீத்தி.

“இத்தனை வருடமாய் யாருக்கும் சந்தேகம் வரவேயில்லை. உனக்கு மட்டும் எப்படி சந்தேகம் வந்தது?” என்றார் முதலில் பேசியவர்.

“அர்ஜுன்,மற்றவங்க எல்லாம் உங்க குடும்பம்.எமோஷனல் அட்டாச்மென்ட் அவங்களுக்கு உண்டு. அவங்க உங்க எல்லோரையும் பாசம்,அன்பு என்ற கண்ணாடி அணிந்து தான் பார்ப்பாங்க.சோ அவங்க எண்ணம்,ஜுட்ஜ்மெண்ட் எல்லாம் clouded..நான் வெளியாள்உங்களுடன் எனக்கு அப்படி ஒரு அட்டச்மெண்ட், எமோஷனலா எதுவும் இல்லை…அப்படி ஒரு லிங்க் இருந்தால் தான்,’இவங்க இப்படி செய்ய மாட்டாங்க’ என்ற எண்ணம் வரும். சோ இந்த பாசம் என்ற மிகவும் சக்தி வாய்ந்த மாயை,தளை எனக்கு உங்களுடன் இல்லை .நீங்க எவ்வளவு தான் மறைக்க பார்த்தாலும் சில விஷயம் மறைக்க முடியாது தான்” என்றாள் ப்ரீத்தி.

‘சிங்ஜி வேஷம் கட்டினீங்க சரி….  ஆனா மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்துடீங்களே மை லார்ட்’என்று மனதிற்குள் சொல்லி கொண்ட ப்ரீத்தி,

“இவங்க ஸுல்பா இல்லை என்பதை நிரூபிக்க நிறைய வேலை செய்து இருக்கீங்க.ஆனா விக்கிபீடியாவில் இருக்கும் போட்டோஸ் மறந்துடீங்களே…அதில் வீரேந்தர் அங்கிள் அருகே இருக்கும் நிஜ ஆள் உயரம், அங்கிள் மார்பு அளவுக்கும் கம்மி. ஆனா இவங்க வீரேந்தர் அங்கிள் கழுத்து வரை உயரம் இருக்காங்க. ரெண்டாவது கிளு ஹிருத்திக் ரோஷன் கொடுத்தார்.”என்றார் ப்ரீத்தி.

“எந்த ஹிருத்திக் ரோஷன்?”என்றார் அந்த பெண்.

அவர் சந்தேகத்துடன் மற்ற இருவரையும் பார்க்க,அப்படி ஒரு நபர் தங்களுக்கு தெரியாது என்றுஅவர்கள் தங்கள் தோளை குலுக்கினார்கள்.

“ஹிருத்திக் ரோஷன் …. ஹிந்தி பட ஹீரோ….க்ரிஷ்,ஜோத அக்பர் படத்தில் எல்லாம் நடித்து இருக்காரே அந்த நடிகர்…” என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்டு அவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க,”ஹிர்த்திக் ஸ்பெஷாலிட்டி அவர் நடிப்பு, டான்ஸ்,அவர் சிக்ஸ் பேக் மட்டும் இல்லை, அவருக்கு  கையில் ஆறாவதாக ஒரு விரல் அதிகமாய் இருக்கும்.அதே விரல் இதோ இவங்க கையில் இவங்க பாசமாய், ரசமலாய்  நேற்றே கொடுக்கும் போது கவனித்தேன்.

‘அய்… பல வருஷத்திற்கு பிறகு எங்க ஹிர்த்திக் மாதிரி இவங்க விரலிலும் ஆறாவதாக ஒரு விரல் இருக்கே’ என்று சந்தோச பட்டேன். எனக்கு அப்போ வேறு எதுவும் தோன்றவில்லை.

ஆனால் இன்று அர்ஜுன் அப்லோட் செய்திருந்த பழைய போட்டோ ஒன்றில் கூட இப்போ இவங்க யாராய் இருக்காங்களோ அவங்களுக்கு கையில் அந்த எக்ஸ்ட்ரா விரல்  இல்லவே இல்லை.உயரம்,ஆறாவது விரல் இதை எல்லாவற்றையும் விட,எப்படி அந்த காபோஸ் தன் கொலைகளை எல்லாம் விபத்து என்று மாற்றி ஒரு மாயை,ஒரு இல்லுசன் உருவாக்கி இருக்கானோ அதையே ஏன் நீங்க செய்திருக்க கூடாது என்று யோசித்தேன்.

சோ காபோஸ் இருப்பதை இல்லாததாய் காட்டியிருக்கான். நீங்க இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டி இருக்கீங்க. தட்ஸ் ஆல்.”  என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்டு அவர்கள் மூவரும் திகைத்து போனவர்களாய்  பிடித்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

‘ஒரு நபரை ஒருமுறை பார்த்ததற்கே உயரம்,ஆறாவது விரல் எல்லாம் நோட் செய்து இருக்கிறாள் என்றால் இவளின்  பார்வை எத்தனை ஆழமாக இருந்திருக்க வேண்டும்.கண்கள் இருக்கும் எல்லோரும் தான் பார்ப்பதாய் சொல்லி கொள்கிறோம்.அதில் எத்தனை பேரின் கண்கள் நிஜமாய் பார்க்கிறது.?எத்தனை பேருக்கு இந்த தெளிவு இருந்து விட போகிறது?’ என்ற எண்ணமே அவர்கள் மூவரின் எண்ணமாய் இருந்தது.

“ஆனா ஒண்ணு இதையே மத்த யாராவது முயன்று இருந்தா நிச்சயம் மாட்டி இருப்பாங்க….செய்தது நீங்க என்பதால், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட பட்ட மனிதர்,ஒரு ராணுவ மேஜர், பலருக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் இருப்பவர் என்பதால், உங்கள் அரண் இருந்ததால் யாருமே இத்தனை வருடமாய் இதை கண்டு பிடிக்கவே இல்லை என்பது தான் உண்மை. உங்களை சந்தேக பட கூட அவங்களுக்கு தோன்றி இருக்காது.அப்படி தானே தாத்தா?”என்றாள் ப்ரீத்தி புன்னைகையுடன்.

அங்கு தன் தள்ளாத வயதிலும் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று இருந்தார் அர்ஜுன் தாத்தா, இந்திய ராணுவ மேஜர் தரஞ்சீத் உபிந்தர் பாட்டியா.

இத்தனை வருடமாய் அர்ஜுன் வீட்டில் அவன் அத்தையாக, உபிந்தரின் ரெண்டாவது மகளாக, வீரேந்தர், யதுவீரின் ரெண்டாவது தங்கையாக இருந்த விர்து உண்மையில் ஸுல்பா. டெல்லியில் அன்யா உடன் இறந்து போனது உண்மையான விர்து.எல்லா உண்மையும் தெரிந்து இருந்தும் அர்ஜுன் தாத்தா அனைத்தையும் மறைத்து இருக்கார்.

ரெண்டாவது மகளான வன்சினி கூட,இந்த ஸுல்பா யார் என்ற விவரம் தெறிந்தும் வெளி சொல்லாமல், போதை மருந்து சாம்ராஜயத்தை உருவாக்கி இருந்த அந்த காபோஸ் எதிர்த்து போராடி உயிர் விட்டு இருக்கிறார்.

“சோ தாத்தா எப்படி ஸுல்பா, அர்ஜுன் அத்தை “விர்து” ஆனாங்க என்று நான் சொல்றேன்.நான் சொல்வது சரியா என்று சொல்லுங்க…. டெல்லியில் ஆசிட் அட்டாக் நடந்த, அர்ஜுன் அத்தை விர்து பிழைக்கவேயில்லை.அவங்க அங்கே அட்டாக் ஆன போது தான் இவங்க ஸுல்பாவுக்கும் அட்டாக் நடந்து இவர் முகமும் சிதைந்து இருக்கு.விர்து பிரைன் டெட் ஆகியிருக்காங்க அவங்க நடந்த அட்டாக்கில் இருந்து பிழைக்கவே இல்லை.

அவங்களை ஸுல்பா என்று அடையாளம் காட்ட,அவங்களுக்கு தான் டிரீட்மெண்ட் நடப்பதாக ஒரு மாயை கிரியேட் செய்து இருக்கீங்க.ஆனா அதை முழுவதும் நிறைவேற்றுவதற்கு முன் அங்கே மத கலவரம் என்ற பெயரில் அன்யா பாட்டியையும், உங்க மக விர்துவையும் ஸுல்பா என்று சந்தேகப்பட்டு கொன்றுட்டாங்க.

இது எல்லாம் நடப்பதற்கு முன்பே நீங்க  ஸுல்பாவை, விர்து ஆக்கி,வேறு ஹாஸ்பிடலில் டிரீட்மென்ட் கொடுத்து, இவங்க உடல் தேறியதும்,  இங்கே உங்க வீட்டில் ஒளித்து வைச்சிடீங்க.முழு பூசணிக்காயை வெறும் கையாலேயே மறைத்து இருக்கீங்க.

நீங்க ஆசிட் அட்டாக் ஆகி பல சர்ஜெரி செய்து பிழைக்க வைத்த விர்துவுடன் தான் திரும்பி இருப்பதாக தான் அனைவரும் நினைத்து இருக்கிறார்கள்.இவங்க அறையை விட்டு வெளியே வராததும்,இவங்க முகம் சிதைந்து இருப்பதும்,அதை இவங்க மறைத்தே இருப்பதும் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படுத்தவில்லை.

தவிர இவங்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாய் நம்ப வைத்து,உங்களை தவிர வேறு யாருமே இவங்களை நெருங்க முடியாத வண்ணம் இவங்களுக்கு காவலாய் நீங்க நின்று இருக்கீங்க.உணவு கொடுப்பது முதற்கொண்டு இவங்களுக்கு நீங்க தான் எல்லாத்தையும் செய்து கொண்டு இருக்கீங்க. இத்தனை வருடமாய் யாருமே இவங்க கிட்டே அந்த அளவிற்கு நெருங்கி பழக்கவேயில்லை.இவங்களை அப்படி ஐசோலேட் செய்து இருக்கீங்க.டவுட் வர சான்சே இல்லை. நான் சொன்னது எல்லாம் சரியா தாத்தா?”என்றாள் ப்ரீத்தி உபிந்தரிடம்.

சற்று நேரம் எதையும் பேசாத அவர்,”சரி தான் ப்ரீத்தி….என் மக விர்து நடந்த ஆசிட் அட்டாக் தாக்குதலில் முகம் சிதைந்து, ஏற்பட்ட காயங்களின் புண் ஆறாமல், Multiple organ dysfunction syndrome (MODS) ஏற்பட்டு  பல்வேறு உறுப்புக்கள் பழுதாகி,ரத்த தோற்று ஏற்பட்டு பிரைன் டெட் ஆகிட்டா….அப்போ தான்  தீவிரவாத எதிர்ப்பு  ட்ரைனிங் என்னிடம் எடுத்து கொண்ட தன்வி அப்பா,மெக்ஸிகோ மேஜர் அர்ஜான் இந்த ஸுல்பாவை வந்து அழைத்து செல்லும் படி கேட்டு கொண்டான். மெக்ஸிகோ போய் நான் தான் இவளை அழைத்து வந்தேன்.நாங்க இங்கே வருவதற்குள் அவன் குடும்பமே அழிக்க பட்டு விட்ட தகவல் எங்களை வந்து சேர்ந்தது.

இவளுக்கு ஆபத்து இருப்பது தெரிந்தது.இறந்து போன என் மகள் விர்துவை இவளாக்கி விட்டு,இந்த ஸுல்பாவை என் மகள் விர்து ஆக்கி விட்டோம்.இது மனைவி அன்யா ஏற்பாடு தான் .ஒரு மகளை தான் இழந்து விட்டோம் .இந்த மகளையும் இழக்க கூடாது என்று சொன்னவ அந்த மகளை பிரிய முடியாமல் அவளுடனே போய் சேர்ந்துட்டா….” என்றவரின் கண்களில் கண்ணீர் வழிந்தாலும் அவர் முகத்தில் கம்பீரமே இருந்தது.

ஆனா நீங்க நினைத்த படி காபோஸ் அன்யா பாட்டி,விர்து இறப்பிற்கு பிறகும்,சந்தேக பட்டு இருக்கான் இல்லையா?எப்படி மாட்டினீங்க?”என்றாள் ப்ரீத்தி.

“இங்கியிருந்து தன்வி டெல்லிக்கு அதுவும் ஹாஸ்பிடல் ஒன்றிற்கு பணம் அனுப்பி இருப்பது எப்படியோ அந்த பேங்க் மானேஜர் மூலம் காபோஸ் போயிருக்கு. நாங்க இல்லாத சமயத்தை பயன்படுத்தி,எதுக்கு அங்கே பணம் அனுப்பி இருக்கா என்று கேட்டு அவளை டார்ச்சேர் செய்து கொன்றிருக்கான்.அங்கே தான் கொஞ்சம் மாட்டிட்டோம்…ஆனா என் மக தன் உயிரை கொடுத்து இந்த இன்னொரு மக உயிரை காப்பாற்றி இருக்கா.அவ மரணத்திற்கு பிறகு தான் அவன் எங்களை டார்கெட் செய்வது குறைந்தது.”என்றார் உபிந்தர்

“ஆனா இப்படி ஒன்றிற்கு மூன்று பெண்களை அதுவும் மனைவி, ரெண்டு மகள்களை இழந்து நிக்கறீங்களே தாத்தா.நாட்டிற்காக நீங்க இழந்தது கொஞ்சம் இல்லை.”என்றாள் ப்ரீத்தி கைகள் தானாக கூப்பி.

“அப்போ வன்சினி ஆன்ட்டி மரணம் விபத்து இல்லை,கொலை என்று உங்களுக்கு தெரிந்து இருக்கிறது.”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன்.

“ஹ்ம்ம் அப்போ இவளுக்கு கொஞ்சம் உடல் நலம் இல்லை என்று  ஹாஸ்பிடல் போய்ட்டேன்…இல்லையென்றால் நாங்க ரெண்டு பேருமே வீட்டில் தான் இருந்திருப்போம்.என் ரெண்டாவது மகளை கொல்ல வந்த,முதல் மகளையும், மனைவியையும் கொன்ற  அந்த xxx, என் கையால் வெறி தீர கொன்றிருப்பேன்….”என்றார் உபிந்தர் முகத்தில் ரௌத்திரத்துடன்.

“இதை உங்க குடும்பத்தாரிடமாவது சொல்லி இருக்கலாம் தானே?” என்றாள் ப்ரீத்தி அந்த பெரியவரின் தியாகத்தை நினைத்து கண்கள் கலங்கியவளாக.

“எதுக்கு இன்னொரு வன்சினி விபத்தால் இறக்கவா?நீயே தானே சொன்னே ப்ரீத்தி..இந்த நாட்டிற்காக நானும் இந்த குடும்பமும் மூன்று உயிர்களை ஏற்கனவே பலி கொடுத்து விட்டது…இத்தகு மேலும் யார் உயிரும் போக கூடாது என்று தான் இவர்களை இருட்டில் வைத்திருக்கிறேன். எது நடப்பதாக இருந்தாலும் அது எங்களுடன் முடிந்து விடட்டும் என்று.

பார்த்தாய் தானே….நீ அவன் போதை மருந்து ஷிப்மென்ட் பிடித்து கொடுத்தவுடன், ஒட்டுமொத்த குடும்பத்தை கொல்ல,ஒரு ஹோச்பிடலுக்கே பாம் வைக்க துணிந்து விட்டான்?தான் மாட்ட கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் வெறி பிடித்த மிருகம் அவன்….இது, இது தான் நடக்க கூடாது என்று நாங்க பயந்தது….இப்படி நேரிடையாக அவனுடன் மோதினால் ஒட்டுமொத்தமாய் அழித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பான்….மெக்ஸிகோவில் ஒரு கிராமத்தையே அழிப்பது எல்லாம் சர்வ சாதாரணம்.அதில் ஊறி போனவன் வேறு எப்படி இருப்பான்.?”என்றார் உபிந்தர் கவலையுடன்.

எத்தனை இழப்புகள் வந்தாலும்,எத்தனை அடிகள் விழுந்தாலும் தைரியமாய் நின்ற அந்த ராணுவ வீரரின் மன துணிவு ப்ரீத்தியை அசைத்து பார்த்தது.

‘இப்படி ஒரு நிலை வந்தால் தன்னால் இப்படி உறுதியோடு நாட்டிற்க்காக என்று அனைத்தையும் தாங்கி நிற்க முடியுமா?’என்ற கேள்வி மனதில் எழ ப்ரீத்திக்கு தான் செய்வது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது.

தன் மகள் இறந்து விட்டாள் என்பதை மறைத்து,உயிரோடு இருக்கும் ஸுல்பாவை காக்க தன் உயிரையும் கொடுத்து இருக்கும் ரெண்டு வீர பெண்மணிகள் அன்யா,வன்சினி தியாகத்திற்கு எதை ஈடாக சொல்ல முடியும்?

“ஹ்ம்ம் புரியுது…யார் என்றே தெரியாத ஒருவனுடன் போரிடும் போர் இது…உங்க பக்கம் ஏற்க்கனவே அவன் ஏற்படுத்திய இழப்புகள் அதிகம் தான்…. இவனை எல்லாம் நேரிடையாக எதிர்க்க முடியாது என்று நீங்கள் உருவாக்கிய அல்டெர்னட்/alternate மாயை தான் “விஜிலாண்டி” என்பவன் சரியா?

விர்து அத்தை இவங்க தான் என்று நம்ப வைத்தது போல் ‘விஜிலாண்டி’ என்று நீங்கள் ஏற்படுத்தி இருக்கும் பிம்பமும் போலி தானே டாக்டர் யோஜித்?விஜிலாண்டி என்பவன் தனி ஒருவன் கிடையாது.என் கெஸ் சரியா?”என்றாள் ப்ரீத்தி

டாக்டர் யோஜித் என்று ஊரே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அவன் கோபம் எல்லை கடக்க,அவன் கரத்தில் இருந்த போர்க் ஆடியது.

“டாக்டர் சார் …அந்த போர்க்கை விட இந்த கத்தி ரொம்ப ஷார்ப்…வேணுமா?” என்று தன் கையில் இருந்த கத்தியை நீட்ட, மற்ற மூவரும் திகைத்தார்கள்.

‘என்னை கொல்ல  போர்க் எல்லாம் போதாது என்கிறாளா இல்லை முள் கரண்டியை வைத்து ஒன்றும் கழட்ட முடியாது என்னிடம் கத்தியே இருக்கிறது என்று யோஜித்தை மிரட்டுகிறாளா என்பது புரியாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

“ஆமா ப்ரீத்தி….உன் கெஸ் சரி தான்….ஆனா இது உனக்கு எப்படி?” என்றார் உபிந்தர்.

“டாக்டர் சார் தான் சொன்னார்.என்னிடம் இல்லை அந்த ரிப்போர்ட்டர் திலீப் இடம் இவர் பேசிய அந்த ஆடியோவை தான் போட்டு காட்டினார்களே. அது தான் இவரை போட்டு கொடுத்தது.”என்றாள் ப்ரீத்தி.

“குரலை வைத்து கண்டு பிடித்தேன் என்று ரீல் விட போகிறாயா என்ன? அது வாய்ஸ் ஸ்க்ராம்ப்ளேர்…சான்ஸ் இல்லை.”என்றான் யோஜித்.

“உங்க வாய்ஸ் இல்லை டாக்டர் சார்… உங்க வாய்ஸ்சில் நீங்க சொன்ன மேட்டர் தான்…நீங்க தான் படம் பார்த்து கதை சொல்லு என்று வாட்ஸாப்ப் படம் எல்லாம் மூன்று குழு,மரண லிங்க், என்று மிக துல்லியமாய் அனுப்பி வைத்து இருந்தீர்களே… அதுவே தான் நீங்க உருவாக்கி இருக்கும்  மாயையை காட்டி கொடுத்தது.நீங்க அனுப்பிய போட்டோ,லிங்க் படி பார்த்தால் ஒரே ஆள் இத்தனையையும் செய்வது என்பது  நடக்க சான்ஸ் ஸிரோ பெர்ஸன்ட் கூட இல்லை.

இடம் வேறு,நேரம் வேறு,ஆள் வேறு என்று ஒரு சில லிங்க் இருந்தாலும் நீங்க ஒருத்தர் மட்டுமே இதை எல்லாமே செய்திருக்க முடியாது. ரஞ்சித் கிட்டே சில விவரங்கள் கேட்டு இருந்தேன்.அவன் போலீஸ் ரெகார்டஸ் எல்லாம் ஆன்லைன்னில் செக் செய்ய தந்தான்.

நீங்க செய்ததாய் சொல்லும் மரணங்கள் நடந்த தேதி,உங்க முகநூல் போட்டோ எல்லாம் செக் செய்தேன்…சில மரணம் நடக்கும் போது நீங்க பஞ்சாப்பில் இல்லவே இல்லை… சில மரணங்களின் போது டாக்டர் சார் நீங்க ஸ்கூல் படிக்கும் பையன்…நீங்க இதற்குள் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இது எல்லாத்தையும் தாத்தா,ஸுல்பா உதவியுடன் ஆரம்பித்து இருக்கார் என்று புரிந்து போனது.

எப்படி அந்த காபோஸ் போதை மருந்து சாம்ராஜ்யம் அமைத்து இருக்கானோ அதே போல் அவனால் பாதிக்கபட்ட குடும்பங்களை வைத்து, நீங்க இதை எல்லாம் செய்துட்டு இருக்கீங்க….சட்டத்தை பொது மக்களே கையில் எடுத்து இருக்காங்க….”என்றாள் ப்ரீத்தி.

“நீ சொல்வது எல்லாம் கதை போல் இருக்கிறது.”என்றான் அவன் ப்ரீத்தி பேச்சை பொய் என்று நிரூபிக்கும் வேகம் அவன் பேச்சில்.

“கதை போல் தெரியலாம்….அப்படி தான் நீங்களும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்…என்ன ஒண்ணு தார்மீக கோபம் எல்லோருக்கும் பொது டாக்டர் சார்…  ஒரு குடும்பத்தில் ஒருவர் போதை மருந்தால் பாதிக்கபடுகிறார் என்றால் அந்த நபரின் குடும்பத்திற்கோ, நண்பர்களுக்கோ,உறவுக்கோ நிச்சயம் யார் இவர்களுக்கு போதை மருந்து சப்லை செய்வது என்று தெரிந்து இருக்கும்.

அந்த ஒரு ஆள் பற்றிய துப்பு கிடைத்த உடன் அவர்களின் அந்த  ஏரியா தலைவன் யார் என்று கண்டு பிடித்து,அவனிடம் இருந்து அவனுக்கு யார் எல்லாம் லிங்க் என்று அப்படியே சங்கிலி தொடர் போல் கண்டுபிடித்து கொண்டு இருக்கிறீர்கள்.

அந்த காபோஸ் பற்றிய தகவல்,அவன் பேங்க் அக்கௌன்ட், அவனுக்கு எங்கெங்கு லிங்க் இருக்கு என்று தகவல் கொடுப்பது நீங்க ஸுல்பா.

வேலையை விட்டு விலகி இருந்தாலும் இந்த போதை எதிராக நடக்கும் யுத்தத்தில் இன்னும் நீங்களும் உங்களுடன் பொது மக்கள்,டாக்டர் யோஜித் போன்றோர் invisible வார் நடத்தி கொண்டு இருக்கிறீர்கள்.

ராணுவ வீரரும்,போலீஸ் அதிகாரிகளும் ரிட்டையர் ஆனாலும் கடைசி மூச்சு உள்ளவரை ராணுவ வீரர்,போலீஸ் அதிகாரி தான் இல்லையா?” என்றாள் ப்ரீத்தி.

“நான் தான் என்று எப்படி கண்டு பிடித்தே ப்ரீத்தி?”என்றான் யோஜித்.

“முதல் விஷயம் அந்த விசாரணை கைதிக்கு கொடுக்க பட்ட ஸ்லோ பாய்சன்.அது மருத்துவ அறிவு இல்லாதவங்க செய்ய முடியாது. துப்பாக்கி,கத்தி எடுத்து சொருகிட்டு போவதற்கு பதில் இதில் ஒரு சோஃபிஸ்டிகேஷன் இருந்தது. ரெண்டாவது அந்த சொர்ணாக்கா மரணத்தின் அப்போ நீங்க அவங்க ரூமிற்கு போகும் வீடியோ.

ரொம்ப க்ளாரிட்டி இல்லையென்றாலும் நீங்க அணிந்து இருந்த ஷூ, எங்கே கேமரா இருக்குன்னு உங்களுக்கு தெரிந்து இருக்கு. யாரும் உங்களை கண்டிப்பிக்க மாட்டாங்க என்று ஒரு தைரியம் ….வெளியே வரும் போது கிளவுஸ் கழட்டிட்டு வந்த உங்க கையில் இந்த வாட்ச்.39,000 ரூபாய் மதிப்பிலான corum கோல்டன் பிரிட்ஜ் வாட்ச்.

ஒட்டுமொத்த ஹாஸ்பிடலை மயங்க செய்யும் அளவிற்கு எந்த அளவு கிளோரோபார்ம் கொடுக்கணும் என்ற அறிவு, சொர்ணக்காவிற்கு கொடுக்கப்பட்ட போதை மருந்தின் அளவு, விர்து இவங்க தான் என்பதை நிரூபிக்க, இவங்களுக்கு மனநலம் சரியில்லை என்று நிரூபிக்க ,இவங்களை ஐசோலேட் செய்ய  நிச்சயம் தாத்தாவுக்கு ஒரு மருத்துவர் உதவி தேவை என்று தோன்றியது.

அர்ஜுன் குடும்பத்தோடு உங்க விக்கிபீடியா பேஜ் இருந்தது. அதில் உங்கள் தங்கை,மனைவிக்கு நடந்த கொடூரமும்,எப்படி கோர்ட்டில் அவங்களுக்கு நியாயம் கிடைக்காமல் போனதும் என்று எல்லாமும் இருந்தது.உங்க மனைவி  காஸ் சிலிண்டர் வெடித்து இறந்தாங்க என்பதும் போட்டு இருந்தது.”  என்றாள் ப்ரீத்தி வேதனையுடன்.

“நாட்டிற்காக என்று ராணுவத்தில் டாக்டராய் ஓடி ஓடி வீரர்களை காப்பாற்றி கொண்டு இருந்தேன்.இந்த நாட்டு மக்களை நம்பி இவர்களிடம் என் குடும்பத்தை ஒப்படைத்து விட்டு என் கடமையை துப்பாக்கி குண்டுகளுக்கும், கல் எறிதலுக்கும், பெட்ரோல் குண்டுகள், கன்னி வெடிகளுக்கும் நடுவே நான் செய்து கொண்டிருந்தேன்….

ஆனால் ஒரு ஸ்கூல் டீச்சர் என்ற பெயரில் வெறி பிடித்த மிருகம் ஒன்று என் தங்கையை போதை மருந்துக்கு அடிமை படுத்தி அவளை சிதைத்து இருந்தது.என் மனைவிக்கு குழந்தை தங்காமல் போய் மன அழுத்தத்தில் இருந்த அவளுக்கும் அதை பழக்கப்படுத்தி,ரெண்டு பேரையும்…..இதோ தாத்தா ஏதோ சரியில்லை என்று என்று என்னை அழைத்து சொல்ல, வந்து பார்த்தால் தங்கை ஓவெர்டோஸ்சால் இறந்ததை கூட தெரியாமல் அவனுங்க …..

நானும் பைத்தியம் மாதிரி நீதி,நேர்மை,போலீஸ்,கோர்ட் என்று அலைந்தேன்.சமூகமே இவங்க மானத்தை கப்பல் ஏற்றியது தான் மிச்சம்.அந்த நாய் பணம்,பதவி பின்னால் மறைந்து கொண்டு அப்படியே கதையை மாற்றிட்டான்….

பாதிக்கப்பட்டவங்களையே குற்றவாளியாய், ஒழுக்கம் கெட்டவர்களாய் தான் இந்த உலகம் பார்த்தது….நரகம் ப்ரீத்தி அது…அந்த மனஉளைச்சல் தாங்க முடியாமல் என் மனைவி தற்கொலை செய்துட்டா… அப்போ தான் தாத்தா அவனுங்களை சத்தம் போடாமல் கொன்று விட்டு வந்து சொன்னார்… இவர் போகும் வழி தான் சரியென்று புரிந்தது.என்னை மாதிரி வெளியே சொல்ல முடியாமல் எத்தனையோ மரணங்கள் ப்ரீத்தி….

எத்தனை பெண்கள்,குழந்தைகள் வாழ்வு சிதைந்து போய் இருக்கிறது.தினம் தினம் இந்த டாக்டர் பதவியில் இருந்து அந்த அவலங்களை பார்த்து கொண்டே தானே இருக்கிறேன். இதுவரை வயிற்று வலியால் இறந்து விட்டனர் என்று நான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எழுதிய மரணங்கள் எத்தனை தெரியுமா?எல்லாம் சின்ன குழந்தைகள்,இளம் பெண்கள்.” என்ற யோஜித் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெயின்’  1950 ஆம் ஆண்டு என்பது ‘பாட்ரிசியா ஹைஸ்மித்’ என்ற பெண்மனி எழுதிய உளவியல் த்ரில்லர் நாவல்.அதே கான்செப்ட் தான் கொஞ்சம் எலிவேட் செய்து இங்கே போதையால்,பாலியல் வன்கொடுமையால்  பாதிக்கப்பட்ட குடும்பங்களை வைத்து செயல்ப்படுத்தி இருக்கீங்க. அதானே?”என்றாள் ப்ரீத்தி.

“உன் குடும்பம் ஒருவனால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றால் உனக்காக, உங்களோடு சம்பந்தமே இல்லாத ஒருவர் குற்றவாளியை போட்டு தள்ளுவார்.அவரின் பிரச்சனைக்கு நீ அதை செய்யலாம்.இல்லை பண உதவி,தகவல் மட்டும் கொடுத்தாலும் போதும்.”என்றான் யோஜித்.

“சோ இந்தியன் தாத்தா ஒருவராய் களம் இறங்கி களை பறிப்பதற்கு பதில்,பாதிக்கப்பட்ட எல்லோருமே இந்தியன் தாத்தா ,ஜென்டில்மேன் கிச்சா ,நான் சிகப்பு மனிதன் ப்ரோபெஸ்ஸர் விஜய் வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்.சோ யாரோ எங்கோ சொதப்பி இருக்க வேண்டும்.அதை கண்டுபிடிக்க கூடாது என்று போலீஸ் கவனத்தை திசை திருப்ப,காபோஸ் போன்ற சமூக விரோதிகளுக்கு வார்னிங் கொடுக்க, இப்படி ஒரே ஒருவன்,ஒரு ஆள் மட்டுமே ‘விஜிலாண்டி ‘என்று மாயத்தை உருவாக்கி இருக்கீங்க.

ஆனா பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலர் தங்களின் குடும்பத்து நபர்கள் பாதிக்கப்பட்டதற்கு யார் காரணமோ அவங்களை எல்லாம் காட்டி கொடுத்துட்டு இருக்காங்க. ஸ்மார்ட் மூவ்…

ஆமா ஸுல்பா ஆன்ட்டி உங்களுக்கு தான் காபோஸ் யார் என்று தெரியுமாமே…ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட் வைத்து போட்டோ வரைந்து போலீஸ் இடம் சொல்லியிருக்கலாமே…. உங்களுக்கு காபோஸ் எப்படி தெரியும்?” என்றாள் ப்ரீத்தி வியப்பு நீங்காதவளாய்.

“மெக்ஸிகோவில் பாலியல் தொழில்,ப்ராஸ்டிடியூஷன் ரிங் அதை சார்ந்த மாபியா எல்லாம் ரொம்ப அதிகம் ப்ரீத்தி.வீடு புகுந்து சின்ன பொண்ணுங்களை கூடா தூக்கி போவாங்க.1990 ஆம் ஆண்டு மெக்ஸிகோ ராணுவத்தில் இருந்தவங்களே தங்கள் வேலையை ராஜினாமா செய்துட்டு “los zeta “என்ற கிரைம் சிண்டிகேட் உருவாக்கினாக…

பாலியல் தொழிலுக்காக குழந்தைகளை,பெண்களை கடத்தி விற்பது,துப்பாக்கிகளை தீவிரவாத குழுக்களுக்கு சப்லை செய்வது தான் இவங்க முக்கிய வருமானம்.அதில் பத்து வயதில் விற்கப்பட்ட என்னை காபோஸ் என்று இன்று அழைக்கப்படுபவன், முன்னர்  மெக்ஸிகோ அந்த “los zesta” உள்ளிட்ட பல குழுக்களோடு நட்பாய் இருந்தவன்.

வெற்றிகரமாக போலீஸ் ரெய்டு பற்றி தகவல் கொடுத்தான் என்று அவனுக்கு என்னை பரிசாய் அளித்தார்கள்.மூன்று வருடம் அவனிடம் தான் கைதியை ஒரு பாதாள அறைக்குள் கிடந்தேன்.சாவே மேல்,சாவே வந்து விடாதா என்று எத்தனையோ வருடம் அவன் கையில் சிக்கி கதறி இருக்கேன்.  அப்போ அவனுக்கு வயசு பதினைந்து தான்.

பணத்தாசை,பதவி வெறி, சதை வெறி  பிடித்த சைக்கோ. என்னை விட சின்ன குழந்தைங்க எல்லாம் அவன் வீட்டின் பின்புறம் புதைந்து இருக்கு. அவங்களை பொறுத்தவரை என்னை மாதிரி பெண்கள் எல்லாம் அவங்க வெறியை தீர்த்து கொள்ள இருக்கும் ஜடப்பொருள் அவ்வளவு தான். “என்றார் ஸுல்பா உணர்ச்சிகள் அற்ற குரலில்.

அந்த உணர்ச்சி அற்ற குரலே சொன்னது heinous crime/பாலியல் வன்கொடுமைகளுக்கு வரையறை நிர்ணயிக்க முடியாது என்பதை.

“மேஜர் அர்ஜான்,தன்வி ஆன்ட்டி அப்பா தான் உங்களை காக்க தாத்தாவை அழைத்ததாய் இப்போ சொன்னாரே.உங்களுக்கு அவரை எப்படி தெரியும்?”என்றாள் ப்ரீத்தி

“தன்வி அப்பாவுக்கு தொடர்பு இருப்பதாய் சொல்லப்பட்ட பெண் நான் தான்.ஆனால் தன்வி கோபித்து கொண்டு வந்ததை போல் எல்லாம் எதுவும் இல்லை.  மேஜர் அர்ஜான் என்னை காபோஸ் இடம் இருந்து மீட்டு இருந்தார். இன்னும் சொல்ல போனால் அவர் கொல்லப்பட காரணம் கூட நான் தான்.

காபோஸ் என்று தன்னை தானே அழைத்து கொண்டு இருப்பவனுக்கு என் மேல் ஒருவித obession உண்டு.நான்கு குழந்தைகள் பிறந்த பிறகும் கூட என்னை அவன் விட்டது இல்லை….அவன் பாலியல் அடிமையாய் பாதாள அறைக்குள் தான் இருந்தேன்.என்னை அர்ஜான் மீட்டதை அவனால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. பழி வாங்கவும்,கோடி கோடியாய் பணத்திற்கும் ஆசை பட்டு அவரை காட்டி கொடுத்தான் அவன்.” என்றார் ஸுல்பா

அவர் குரலில் இருந்த வெறுமை சொல்லாமல்  அளவிற்கு அவர் உடல் அளவிலும்,மனதளவிலும்  பாதிக்கப்பட்டுள்ளார் என்ற கொடூரத்தை.

பயணம் தொடரும்…

 

 

 

 

 

 

error: Content is protected !!