வானம் காணா வானவில்-2

வானம் காணா வானவில்-2

அத்தியாயம்-2

நீலா அமைதியாக அந்த அறையில் இருக்க, அவரின் இருபுறத்திலும் சஞ்சய் மற்றும் மிருணா நின்றபடி காலை ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதை தீவிரமாக மறுத்த நீலா, தங்களின் அறையின் வாசலில் உணர்ந்த அரவத்தில் திரும்பினார்.

அரவிந்த் மூவரையும் பார்த்தபடியே உள்ளே வந்தான்.

எதுவும் புரியாத நிலையில், ஆனால் சூழல் புரிந்ததால்

“அம்மா, சின்னபுள்ளை மாதிரி இது என்ன அடம்”, அரவிந்த்

“எனக்கு பசிக்கல, பசிச்சா நானே சாப்பிடுவேன், என்னை யாரும் தொந்தரவு பண்ணவேண்டாம்”, நீலா

“நேத்து காலைல சாப்பிட்டது, இன்னிக்கு காலைல வர தண்ணீ கூட குடிக்கல, இப்டி இருந்தா என்ன பண்ண?”,சஞ்சய்

“வேற ஐட்டம் எதாவது வேணுமாம்மா?”, தலையை வேண்டாமென அசைத்த தாயைக் கவனித்தவன், தன் தம்பியை நோக்கி, “அப்பாவுக்கு எப்டி இருக்கு?”, அரவிந்த்

“அப்பாவுக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சு, இன்னிக்கு மார்னிங் டென் கு மும்பைல இருந்து வர சீஃப் டாக்டர் வந்து ரிபோர்ட்ஸ் பாத்துட்டு என்ன செய்யலாம்னு சொல்லுவாங்க, அதுவர அப்ஜர்வேசன்ல இருக்கணும்னு ஐசியூ ல வச்சிருக்காங்க”,சஞ்சய்

“அம்மா நீங்க எதாவது கொஞ்சமாவாவது சாப்பிடுங்க”, கெஞ்சலான குரலில் கூறினான் அரவிந்த்

“இல்ல அரவிந்தா, எனக்கு பசியில்ல… நீ சாப்டியா?”,நீலா

“இல்லமா, நேத்து டாக்டர் பேசினதில இருந்து பசியில்ல…”, தனது தாயின் சைகாலஜி தெரிந்தவன் பேசினான்.

“நீங்களும் சாப்டாம இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் முடியலனா நாங்க என்ன பண்ணுவோம், எங்களுக்காக சாப்பிடுங்கம்மா”, என தாயிடம் கூறிவிட்டு தம்பியை நோக்கித் திரும்பியவன்

“சஞ்சய் தட்ட தா” என கைகளில் வாங்கி, தட்டில் இருந்த காலை ஆகாரத்தை எடுத்து தாயின் வாயருகில் கொண்டு செல்ல, அதை மறுத்த நீலா தட்டை தனது கைகளில் கொண்டு வர முயற்சிக்க

“நம்ம ரெண்டு பேரும் இப்ப சாப்பிடலாம்மா”, என்றபடி அவன் முதல் கவளத்தை தனது வாயில் வைத்ததாக பெயர் பண்ணிவிட்டு, இரண்டாவது முறையாக தட்டிலிருந்து எடுத்த உணவை தாயின் வாயில் வைத்தான்.

மகனின் பிடிவாதம் அறிந்த நீலா மகன் ஊட்டுவதை மறுக்காமல் உண்டார். அதன்பின் கைகழுவி வந்தவன், “நான் டாக்டர பாத்து பேசிட்டு வரேன், நீங்க ரிலாக்ஸா இருங்கம்மா. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.

டாக்டர் இப்ப எங்க இருப்பார்?”, என சஞ்சயை நோக்கி அரவிந்த் கேட்க

“ரிசப்சன்ல கேளு ப்ரோ சொல்வாங்க”, சஞ்சய்

அதற்குமேல் அங்கு நிற்காமல் நேராக ரிசப்சன் வந்தவன்,

டாக்டரை பெயரைக் கூறி பார்க்க வேண்டும் என்று ரிசப்சனில் கூற,

“டாக்டர் ரவுண்ட்ஸ் முடிச்சு வர நேரம் தான், அவர் ரூமுக்கு வந்தவுடனே நானே உங்கள கூப்பிடறேன், அதுவரை அங்க உட்காருங்க சார்”, என ரிசப்சனில் இருந்தவள் வெளிநோயாளிகள் அமரும் இடத்தை காட்டி கூற

வெளி நோயாளிகளை பார்க்கும் அறையின் முன் இடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தான், அரவிந்த்.

அடுத்து வந்த பதினைந்து நிமிடங்களில், “சஞ்சய் சார், டாக்டர் வந்துட்டாங்க, உங்கள உள்ள வரச் சொன்னாங்க, நீங்க உள்ள போங்க”, என ரிசப்சன் பெண் கூற,

அரவிந்த் ரிசப்சன் பெண் கூறிய அறைக்குள் சென்றான்.

“அடடே நீயா அரவிந்த், சஞ்சய் வந்ததா ரிசப்சன்ல சொன்னவுடனே கொஞ்சம் கன்ஃபீயூஸ் ஆனேன், நேத்தே எல்லா விசயமும் பேசியும் காலைல என்னை பாக்கணும்னு சொன்னவுடனே என்னவோனு தான் உள்ள அனுப்பச் சொன்னேன்.

நாலு நாள் கழிச்சு தான் உன்ன எதிர்பார்த்தேன் இங்க, அதுக்குள்ள என் கண் முன்ன வந்து நிக்கற, உக்காரு”

“அப்பாவுக்கு முதல்ல என்னனு சொல்லுங்க அங்கிள், அப்றமா நான் உக்காரதா இல்லையானு முடிவு பண்றேன்”

“வயசு ஆகுதுல்ல அரவிந்த், இன்னும் சின்னவங்களா?, வயசுக்குரிய சில உடல் உபாதைகள் இருக்கு, அதவிட உன்னைப் பற்றின கவலை அதிகமா ரெண்டு பேருக்குமே இருக்கு…

சஞ்சய் மாதிரி நீயும் குடும்பமா ஆகிட்டா அவங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வாய்ப்பிருக்கு, கவலை, அதனால வர மன அழுத்தம் தான் உங்க அப்பாவுக்கு ஹை பீப்பி கண்டினியூ ஆகுது,

சர்ஜரிக்கு ஃபிட்னஸ் பாக்கணும், அதான் எல்லா டெஸ்டும் பண்ணிட்டு இருக்கோம், அவரு கூடுதல் நாள் வாழறது உன் கைல தான் இருக்கு அரவிந்த்.

இன்னும் பொறுப்புகளை அவங்க மேல திணிக்காம, நீங்க ரெண்டுபேரும் பாத்துக்கங்க, உங்க அம்மாவும் அதே நிலைல தான் இருக்காங்க.  இருந்தாலும், அவங்கள விட இவருடைய ஹெல்த் ரொம்ப வீக்கா இருக்கு”

“என்ன அங்கிள், என் குடும்ப வாழ்க்கைக்கும், அப்பா, அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்? அப்டி சொல்ல சொன்னாங்களா வீட்ல?”, என விரக்தியோடு கேட்டான், அரவிந்த்

“நிச்சயமா அப்டி இல்ல அரவிந்த், உண்மையான நிலை என்னனா, உடம்பில அவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற வியாதிய விட மனவியாதி தான்…

ஸ்ட்ரெஸ் தான் எல்லா நோயிக்கும் ஆரம்பம்.  அதுதான் இப்ப உங்க அப்பா, அம்மா இரண்டு பேருக்குமே வந்திருக்கு. இப்பவும் கொஞ்ச நாளா ரெகுலர் செக்கப் வரவே இல்ல. நானாதான் த்ரீ டேஸ் முன்ன கால் பண்ணேன் உங்க அம்மாவுக்கு”

“இன்னும் அப்பாவுக்கு என்னனு சொல்லவே இல்லையே அங்கிள்”

“காரியக்காரன் தான் நீ.

ஹை பிரஷர் கண்டினியூ ஆகிட்டே இருந்தது, செக் பண்ணிப் பார்த்தப்ப சில இடங்கள்ல பிளாக் இருக்றது தெரிஞ்சது.

இன்னிக்கு நம்ம ஹாஸ்பிடல்கு மும்பைல இருந்து இண்டியாஸ் நம்பர் ஒன் கார்டியாலஜிஸ்ட் விசிட் பண்றார்.

பிளாக்ஸ் கண்டிசன் பாத்து, மெடிசன்ல கியூர் பண்ண முடியுமா அப்டிங்கறத அவர்கிட்ட ஒரு ஒப்பீனியன் வாங்கிட்டு ஃபர்தரா என்ன செய்யலாம்னு சொல்றேன் அரவிந்த்”

“சரி, வேற ஏதும் பெரிய பிராப்ளம்னா இப்பவே சொல்லுங்க அங்கிள், ஆன்ஜியோ தேவையிருந்தா கூட பண்ணிரலாம்.  அப்பாவ குணப்படுத்த என்ன செய்யனும்னாலும் எனக்கு ஓகே, உங்கள நம்பித்தான் இருக்கேன்”

“ஸ்யூர் அரவிந்த்”

———————-

மாலை வரை காத்திருந்தவர்களை அழைத்து, ஸ்ட்ரெஸ் எதுவுமில்லா சூழலில் இருவரையும் வைத்திருக்க பணித்த மருத்துவர்கள், சந்திரபோஸின் வயதை காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு மாத்திரைகள் மூலம் பிளாக்கை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார்கள்.

அடுத்து வரும் மூன்று மாதங்களில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் சந்திரபோஸிடம் இல்லாவிட்டால், அடுத்த முயற்சியாக என்ன செய்யலாம் என யோசிக்கலாம் என கூறிவிட்டனர்.

இரண்டு நாட்களில் வீடு திரும்பியிருந்தனர், சந்திரபோஸ் தம்பதியினர்.

அடுத்த வந்த நாட்களில் தங்களின் குடும்பத் தொழில்களை இருவரும் பார்த்துக் கொள்வது எனவும், தாயின் மேற்பார்வையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிய பிரபலமான பள்ளியை அரவிந்த் கவனித்துக் கொள்வது எனவும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

அடுத்து வந்த நாட்களில், திருமணப் பேச்சினை சந்திரபோஸ் மற்றும் நீலா எடுக்க, அதை இதுநாள் வரை மறுத்து வந்த அரவிந்த், “நீங்க பாருங்க, என் ரசனைக்கேத்த மாதிரி அமைஞ்சா எனக்கு எந்த அப்ஜக்சனும் இல்ல”, என்றுவிட்டான்.

 

சந்திரபோஸ் குடும்பம், அவரின் பள்ளி பருவ காலத்தில் வடமாநிலத்தில் இருந்து தொழில் நிமித்தமாக சென்னைக்கு புலம் பெயர்ந்திருந்தார்கள். ஆகையால் ஆரம்ப கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை சென்னையில் பயின்றார், சந்திரபோஸ்.

கல்லூரிக் கல்வியின் போது வேலூரைச் சேர்ந்த நீலாவை விரும்பித் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

அரவிந்த் கூறிய ரசனை என்பதன் பொருள் அறிந்த தாய், தந்தை இருவருக்கும், மகனின் ஒப்புதல் சந்தோசமளித்தாலும், சற்றே சங்கடமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பொருளாதார நிலையில் போஸ் குடும்பத்திற்கு இணையான பெரும்பாலான, தென்மாநில குடும்பங்களில் பணத்திற்காக போஸ் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ளப் பிரியப்பட்டாலும், மணப்பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் மகன் சரியென்று கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு என்பதை எண்ணி பெற்றோர் இருவரும் திகைத்திருந்தனர்.

ஆனாலும், இருவரும் தரகரை அழைத்து விடயத்தை கூறினர். முன்பணம் கொடுத்து தரகரை உற்சாகமாக வழியனுப்பியதோடு, தரகரின் நற்செய்திக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

————————————————-

விசாலினியின் விட்டேத்தியான செயல்களினால் உண்டாகும் குறையை சரிசெய்ய அழகம்மாள் முடிவு செய்திருந்தார்.  அதன் முதல் கட்டமாக மகனை அழைத்தவர்,

“கிருபா, உன் வீட்டுக்காரிய கூட்டிட்டு, உன் ரெண்டாவது பொண்ணு வீட்டுக்கு போயி ஆறு மாசம் போல தங்கிட்டு வா”

“என்னம்மா திடீர்னு ஆஸ்திரேலியா போகச் சொல்றீங்க, அது என்ன இங்க பக்கத்துலயா இருக்கு?”

“நீ இங்க இருக்கற வர இந்த பொடிசி , அவ இழுப்புக்கு உன்ன இழுத்து காரியத்தை கெடுத்துருவா. ஏன் எதுக்குனு கேக்காம சட்டுபுட்டுனு கிளம்பற வழிய பாரு, நான் உன் பொண்ண பத்திரமா பாத்துக்கறேன்”

“என்னம்மா சொல்றீங்க, கற்பகம் என்ன சொன்னா இதுக்கு?”

“அவ என்ன சொல்லப் போறா, எல்லாம் முடிவு பண்ணியாச்சு, நீ கிளம்பற வேலய கவனி”

மனமே இல்லாமல் மகளிடம் விடயத்தை கூறினார், கிருபாகரன்.  சலனமே இல்லாமல் ‘சரிப்பா’ என்ற மகளைப் பார்த்து மனதில் வருத்தம் உண்டானாலும் , அதைக் காட்டிக் கொள்ளாமல் மனைவியுடன் கிளம்பிவிட்டார்.

அழகம்மாள் தனது கணவர் சதாசிவத்துடன் சென்னைக்கு வந்திருந்தார்.  அதிகம் யாருடனும் பேசாத சதாசிவத்துடன் விசாலினியும் அதிகம் பேசுவதில்லை. மனைவியைத் தவிர தனது தேவைக்காக யாரையும் அணுகமாட்டார் சதாசிவம்.

அழகம்மாள், பேத்தியிடம் எதுவும் விதண்டாவாதம் செய்யாமல் வரும் வரன்களை விசாலினியிடம் காட்டுவதும், அதை பேத்தி மறுப்பதும் வழக்கமாகியிருந்தது.

என்ன காரணத்தைக் கூறி பேத்தி வரன்களை வேண்டாம் என்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்கவே அழகம்மாளுக்கு பத்து நாட்கள் ஆகியிருந்தது.

மற்ற பேத்திகளை விட சற்று அதிகமாகவே வளர்ந்திருந்த விசாலினி சற்று உயரம் குறைவான மணமகன்களை மறுத்திருந்தாள்.

பேத்தியின் மறுப்பை உணர்ந்த அழகம்மாள், தரகரிடம் கூறி குறைந்த பட்ச உயரமாக ஐந்தடி பத்தங்குலம் இருக்கும் மணமகன் ஜாதகங்களை மட்டுமே கொண்டு வரச் சொல்லியிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பத்து ஜாதகங்களுடன் வந்து கொண்டிருந்த தரகர், அழகம்மாளின் டெர்ம் அண்ட் கண்டிசன்ஸிற்குப் பிறகு அலைபேசியில் அழைத்தாலும் வரத் தாமதமாகியது.

 

விசாலினிக்கு பகல் பொழுது பள்ளியில் நேரம் போவது தெரியாமல் சென்றுவிடும்.  பள்ளி சார்ந்த பணிகளை அங்கேயே முடித்துவிட்டு வரும் பழக்கத்தினால், வீட்டில் பள்ளி சார்ந்த பணிகளைத் தொடரும் வேலை இல்லாமல் போனது.

தந்தையுடன் நேரம் செலவழிப்பது, இருவருமாக வெளியில் சென்று வருவது என இருந்தவளுக்கு பொழுது போகவில்லை. பள்ளி முடிந்தவுடன் வெளியில் சென்று தனது தேவைக்கான சில பொருட்கள் வாங்க வேண்டியிருப்பதால் வீடு திரும்பத் தாமதமாகும் என பாட்டியிடம் காலையிலேயே கூறியிருந்தாள், விசாலினி.

பள்ளி வேலை முடிந்து வேளச்சேரியில் இருக்கும் பிரபலமான மாலான “ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி” சென்றவள் அவளுக்கு வேண்டிய பொருளை வாங்கிய நேரத்தை விட, விண்டோ ஷாப்பிங் செய்தபடியே ஒரு மணி நேரத்தை கடத்தியிருந்தாள்.

பின் அங்கிருந்த காஃபிடோரியம் சென்றவள், தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு, தந்தைக்கு அழைத்தாள்.

பத்து நிமிடங்கள் பேசியபடியே அங்கு அமர்ந்திருந்தவள், ஆர்டர் செய்தது வந்ததும் அலைபேசியை வைத்தாள்.

அருகில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி சுற்றிலும் ஒரு பார்வையை சுழற்றிவிட்டு அமர்ந்தவாறு எதிரே பார்த்தபடியே காபியை அருந்த ஆரம்பித்தாள்.

விசாலினியின் டேபிளில் இருந்து இரு டேபிள் தாண்டி வாயிலுக்கு நேராக இருந்த டேபிளுக்கு இடையில் இருந்து வெளிவந்து, தான் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி எதிரே சிரித்தவாறு ஓடிவந்த பெண் குழந்தையை ரசித்துப் பார்த்தபடியே காஃபியை அருந்தினாள்,விசாலினி.

பேலன்ஸ் இல்லாமல் விழப்போன குழந்தையை கண்டு, கையில் இருந்த கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு அவசரமாக எழுந்து சென்றாள்.  அதற்குள் விழுந்த குழந்தை அவளாக எழ முயற்சி செய்ய, அதற்குமுன் விசாலினியே குழந்தையை தூக்கிவிட்டாள்.

“தேங்க்ஸ் ஆண்ட்டி”, என தனது மழலைக் குரலில் கூற

“குட்டிமா நேம் என்ன?”, என்றபடி குழந்தையின் ஆடையை சரி செய்ய

“நீரு… நீரஜா…”,

“ஸ்வீட் நேம், யாருகூட வந்திருக்கீங்க?” என்று கேள்வி எழுப்பியபடி சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“டாடி கூட வந்தேன்”, என்பதை சிரித்தபடி மழலையில் கூறிய குழந்தையை கன்னத்தில் தொட்டு முத்தமிட்டவள்

“எங்க அவங்க இருக்காங்க?”,என்ற கேட்கும் போது குழந்தை கை காட்டிய திசையில் திரும்பும் முன், அருகில் வந்த அணுக்கத்தில் நிமிர்ந்தவள்,

“மெதுவா வராம எதுக்குடா ஓடி வந்த?” என்ற ஆடவனின் குரல் வந்த திசையில் சிரித்தபடியே திரும்பியவள்,

“ஒரு இடத்துல இருக்க மாட்டிங்கறா? தேங்ஸ்ங்க”,என்றபடியே விசாலினியைக் கண்டவன், சற்றே மலர்ந்து திரும்பியவளை நன்றியுடன் நோக்க, மலர்ந்த முகம் தன்னைக் கண்டவுடன் சற்று நேரத்தில் கூம்பிய முகபாவனையை உணர்ந்தவன், அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் குழந்தையை கையில் பிடித்தவாறு குழந்தையிடம் பேசியபடி அங்கிருந்து அகல

“பை ஆண்ட்டி”, என்ற குழந்தையின் விடைபெறலுக்கு பதில் சொல்லாமல்

சற்று நேரம், அங்கிருந்து குழந்தையுடன் அகன்றவனைப் பார்த்தபடியே அசையாமல் நின்றிருந்தாள் விசாலினி. அண்டம் சுழலுவதை நேரில் கண்டது போன்ற நிலையை உணர்ந்தாள். நிதானித்து, பிறகு அவசரமாக வீட்டிற்கு கிளம்பினாள், விசாலினி.

இரவு நேர உணவைத் தயாரிக்க பாட்டிக்கு உதவியவள், வெளியில் சாப்பிட்டதால் பசியில்லை என்றுவிட்டு விரைவில் தனது அறைக்குள் போக, பாலை குடிக்கச் செய்து உறங்க அனுமதித்தார், அழகம்மாள்.

பள்ளியிலிருந்து சற்று தாமதாமாக, வழமை போல இல்லாமல் சற்றே குழப்பமான முகத்துடன் வந்த பேத்தியை கவனித்திருந்தார், அழகம்மாள். கவனித்ததை காட்டிக் கொள்ளாமல், பாட்டி எதுவும் கேட்காமல் ஆனால், வற்புறுத்தி பாலை மட்டும் குடிக்கச் செய்து உறங்க அனுமதித்தார்.

 

மறக்க முடியாத, விரும்பாத அவனது மலர்ந்த முகம் மூடிய இமைகளுக்குள் வந்துபோக, தன்னைக் கண்டும் காணாதது போல சென்றதை எண்ணி மனம் சோர்ந்தது.

சதைப்பற்று இல்லாமல் இருந்தவன் தற்போது, ஆகிருதியாக ஆணழகனாக மிளிர்ந்தது மகிழ்வைத் தந்தாலும், திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பனாகி இருந்தவனை இரண்டு ஆண்டாக தன் மனக்கண் முன் கொண்டு வந்து, எண்ணிய தனது நிலையை அறவே வெறுத்தாள் பெண்.

யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாமல், மனதிற்குள் வைத்திருந்த மலர்ந்த மலர் போன்ற இனிய நினைவுகள் இன்று கருகியதாக எண்ணிக் குமைந்தாள் பெண்.

தனது பள்ளி இறுதிப் பருவத்தில் சந்திக்கும் போதே வாலிப வயதில் இருந்தவன், இதுவரை திருமணமாகாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம் என்பதை அறிவு உணர்ந்தாலும், மனம் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் முரண்டு செய்தது.

மனதைக் கடிவாளம் இட முடியாமல் மனதோடு மன்றாடியவள், ஏகாதசி இல்லாத நாளில் விழித்திருந்து, விடியலுக்காக காத்திருந்தாள்.

தான் நினைத்தது போல, அவன் தன்னை நினைக்கவில்லை என்பதைவிட, தான் அவனின் நினைவிலேயே இல்லை எனும் உண்மை அவளைத் தீயாய் சுட்டது.

எந்த விடயத்தையும் தந்தையுடன் மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்தவளுக்கு இந்த விடயத்தை இதுவரை தந்தையிடம் கொண்டு செல்லவில்லை என்பதை விட இனிமேலும் இதை யாரிடமும் பகிர இயலாது என்ற உண்மை அவளைத் தாக்கியது.

மனம் உலைக்களம் போல பல எண்ணங்களால் கொதிக்க, அதை அணைக்கும் வழி தெரியாமல் திண்டாடினாள்.  அடுத்த நாள் பள்ளியில் விடுப்பு எடுப்பதாக அலைபேசியில் தெரிவித்தவள் தனது அறையை விட்டே வெளிவரவில்லை.

அழகம்மாள் பேத்தியின் எதிர்பாரா செயலில் மிரண்டவர், மகனுக்கு அழைத்துக் கூறியிருந்தார்.  ஆகையால் பத்து மணியளவில் அழைத்த கிருபாகரன், மகளிடம் இயல்பாக பேச,

மகளின் கரகரப்பான குரலில், மகளின் குரலில் உண்டான மாறுபாட்டை உணர்ந்து என்ன விடயம் என விசாரிக்க, சற்று தலைவலி என சமாளித்தாள், விசாலினி.

இதுவரை தலைவலி எனக் கூறியிறாத மகளை அறிந்திருந்த கிருபாகரன், சற்று நேரத்தில் தாயிக்கு அழைத்திருந்தார்.

“ஷாலுக்கு தலைவலின்னு சொல்றா, கொஞ்சம் பாருங்கம்மா”

“அவளுக்கு தலைவலி மாதிரி தெரியலடா, ஏதோ நேத்து வெளியில போறேனு போயிட்டு வந்ததுல இருந்துதான் இப்டி இருக்கா, நீ பயப்பட ஒன்னும் இல்ல, நானிருக்கேன், பாத்துக்கறேன்”

“இது வர இப்டி இருந்தது இல்லமா, என்னனு பாருங்க”

“வைடா போன, இவன் வேற, உலகத்துல இல்லாத பாசக்கார அப்பன்”, என்றபடி அழைப்பைத் துண்டித்திருந்தார்.

ஆனாலும், பேத்தியின் முடக்கம் பாட்டியை யோசிக்கத் தூண்டியது.  பேத்தியின் அறைக்குள் சென்றவர்

“விசா, விசா…”

அறைக்குள் தூக்கம் வராமலேயே படுக்கையில் இருந்தவள், பாட்டியின் அழைப்பில் வேகமாக எழுந்து அமர,

“என்ன பாட்டி, ஏதும் வாங்கிட்டு வரணுமா?”

“இல்லமா, உன்ன பாக்கத்தான் வந்தேன். உடம்புக்கு என்ன செய்யுது?”

“தலைவலி, வேறொன்னுமில்ல”

“இங்க வா தலைய பிடிச்சு விடறேன்”, என்றபடி பேத்தியின் முகத்தை கூர்ந்து கவனித்தவர் “அழுதியா?”

“அழுதேனா… இல்லயே… ஏன் அப்டி கேக்குறீங்க பாட்டி?”

“மூக்கு எல்லாம் சிவந்து கிடக்கு, நேத்து வர ஜலதோசம் கூட இல்ல, இப்பதான் கொன்ன கொன்னனு பேசற, உங்க அப்பன் கிட்ட மட்டும் தான் எதுவும் சொல்லுவியா?

உனக்கு என்ன செஞ்சாலும் எங்கிட்ட சொல்லு. கிழவிக்கு என்ன முடியும்னு யோசிக்காத, உன் வயசெல்லாம் தாண்டி வந்தவதான் நான்.

என்ன பிரச்சனை, நேத்து வெளியில போன இடத்துல யாரப் பாத்த?”

பாயிண்டைப் பிடித்த பாட்டியை பார்த்தவள்,“யாரயும் பாக்கல பாட்டி”,குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க பேசியவளை பார்த்திருந்த அழகம்மாள்

“நெஞ்சு குறுகுறுக்கற அளவுக்கு நீ போன இடத்துல பாத்தவங்க யாருன்னு முதல்ல மறைக்காம சொல்லு”

“…”

“இது எப்படி எம்பது வயசாகுற கௌவிக்கு தெரியும்னு யோசிக்காத”

“…”

“உன் மனசுல யாரையும் நினைச்சியா?”

“…”,’என்ன சொல்வேன் திருமணமானவனை நினைத்தேன் என்றா’ என எண்ணியவள் எதுவும் பேசவில்லை.

“இல்ல உங்கப்பன உடனே வரச் சொல்லவா?”

“வேணாம் பாட்டி, எதுக்கு இதப்பத்தி அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு”

“அப்ப என்ன விசயம்னு எங்கிட்ட சொல்லு”

“ஒன்னுமில்ல பாட்டி,  எனக்குத் தெரிஞ்ச ஃபிரண்டு மாதிரி இருக்கவும் போயி பேசுனேன்.  அவ முகத்துல அடிச்ச மாதிரி நீ யாரு? உன்ன எனக்கு தெரியாதேனு சொல்லவும் அங்க இருந்தவங்கள்லாம் என்ன ஒரு மாதிரி பாத்தாங்க அதான் மனசு கஷ்டமா போச்சு, வேறோன்னுமில்லை”

“அதுக்கா ரூமுக்குள்ள அடஞ்சு கிடக்க, சரி வெளியில வந்து கலகலப்பா பேசிட்டு இரு”, என்றவர் தன்னை நம்பவில்லை என்பதை விசாலினி உணர்ந்தாலும், அமைதியாக ஹாலில் சென்று அமர்ந்தாள்.

 

மாலையில், விசாலினி பணிபுரியும் பள்ளியில் இருந்து விசாலினிக்கு அழைத்த முதல்வர், அடுத்த நாள் வேறு பள்ளியில் நடக்கவிருக்கும் போட்டிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுமாறும், அதனால் கண்டிப்பாக பள்ளிக்கு வந்துவிடுமாறும் பணித்தார்.

சரியென்று வைத்தவள், அடுத்த நாளின் பொழுதுகள் பற்றி யோசிக்காமல், முந்தைய நாளின் நழுவிய நிமிடங்களை எண்ணியபடியே தனது இதயத்தை ரணமாக்கியவாறு இருந்தாள்.

******************

error: Content is protected !!