Kadhal epilogue

Kadhal epilogue

மூன்று வருடங்களுக்கு பிறகு……..

சித்தார்த் மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்த தோற்றத்திலிருந்து சற்று மாற்றலாகி இருக்க இப்போது அவன் இன்ஸ்பெக்டர் அல்ல சென்னையின் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்.

தனபாலனின் கைதுக்குப் பின் பல குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வாங்கி கொடுத்து அனைவர் மத்தியிலும் சிறந்த பாராட்டுக்களைப் பெற்றவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதிப்பே இந்த பதவி உயர்வு.

ஆனால் அவனுக்கு மட்டும் தான் தெரியும் இந்த உழைப்புக்கு பின்னால் இருப்பது மேக்னா மீதான நினைவுகள் என்பது.

அவள் அவனை விட்டு சென்று மூன்று வருடங்கள் கடந்து இருப்பினும் அவனால் அவள் இப்போது உயிருடன் இல்லை என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை.

இந்த மூன்று வருடங்களில் அவன் உள்மனதுக்குள் மேக்னா இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்று ஒரு நம்பிக்கை இருந்து கொண்டே தான் வந்தது.

இந்த நாட்கள் நகர்வில் எத்தனையோ விடயங்கள் மாறி இருந்தாலும் அவன் காதலில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் இருக்கவில்லை.

கார்த்திக் தன் படிப்பை முடித்துவிட்டு ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருக்க கண்ணன் காலேஜில் நான்காம் வருடத்தில் இணைந்து இருந்தான்.

தன் அண்ணனை போல் ஒரு வெற்றிகரமான காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்பதே அவனது லட்சியமாக இருந்தது.

மறுபுறம் நர்மதா ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள்.

மேக்னா அவளை விட்டு சென்றதன் பின்னர் யசோதா அவளை தன் மகளாக நினைத்து தங்களுடனை வைத்துக் கொண்டார்.

சித்தார்த்தின் குடும்பத்தில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க ஜெஸ்ஸி இப்போது ஒரு வயது குழந்தையின் அன்னையாக மாறி இருந்தாள்.

ஒரு குழந்தைக்கு அன்னையாக இருந்தாலும் தன் போலீஸ் வேலையிலும் தன் கவனத்தை அவள் செலுத்தாமல் இல்லை.

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான முன்னேற்றங்களும் மாற்றங்களும் நிகழ்ந்திருக்க சித்தார்த்தின் மனதுக்குள் மட்டும் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை.

யசோதா பலமுறை அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தியும் அவன் நாசூக்காக அவற்றையெல்லாம் தவிர்த்து வந்தான்.

தன் மகனின் மனதுக்குள் இருக்கும் வேதனை அந்த அன்னைக்கு புரிந்தாலும் இல்லாத ஒரு பெண்ணிற்காக அவன் இத்தனை வருடங்களாக தவியாய் தவிப்பது அவருக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக தயாராகி வந்த சித்தார்த் தன் அறையில் மாட்டப்பட்டிருந்த மேக்னாவின் புகைப்படத்தின் முன்னால் சென்று நின்று கொண்டான்.

மூன்று வருடங்களிற்கு முன்னர் ஜெஸ்ஸியின் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படம் அது.

அது தான் அவளை இறுதியாக அவன் சந்தித்த தருணமும் கூட.

இள லாவண்டர் நிற சேலையில் இயல்பாக தன்னருகே நின்ற யாரிடமோ பேசி சிரித்தபடி நின்று கொண்டிருந்த போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

மேக்னாவின் ஞாபகார்த்தமாக அதை ஜெஸ்ஸியிடம் இருந்து வாங்கி வந்தவன் தனது அறைக்குள்ளேயே அந்த புகைப்படத்தை பெரிது படுத்தி மாட்டி வைத்திருந்தான்.

மேக்னா மீதான ஞாபகங்கள் வரும் போதெல்லாம் அந்த புகைப்படத்தின் முன்னால் வந்து நின்று பேசிக் கொண்டு நிற்பவனுக்கு அது ஒன்று தான் ஆறுதல்.

இப்போதும் அந்த புகைப்படத்தின் முன்னால் வந்து நின்றவன் அதை ஆசையாக வருடிக்கொடுத்து விட்டு தன் அறைக்குள் இருந்து வெளியேறி சென்றான்.

நேராக பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்குவதற்காக கண்மூடப் போனவன் மேக்னாவின் புகைப்படத்திற்கு மாலை இடப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு
“அம்மா!” அவர்கள் ஒட்டுமொத்த வீடே அதிரும் படி சத்தமிட்டு கத்தினான்.

“என்ன ஆச்சு சித்தார்த்? எதற்கு காலங்காத்தாலேயே இப்படி சத்தம் போடுற?” தன் காதை தேய்த்து விட்டபடியே அவன் முன்னால் வந்த யசோதாவின் கையை பிடித்து பூஜை அறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றவன்

“என்னம்மா இது?” அவளது புகைப்படத்தை சுட்டிக்காட்டியபடியே கேட்டான்.

“என்னடா? காலையில் நான் தான் பூஜை பண்ணி மாலை போட்டேன் அதில் என்ன இருக்கு?”

“எத்தனை தடவை அம்மா உங்களுக்கு சொல்லுறது? மேக்னா சாகல! அவ உயிரோடு தான் இருக்கா!” அவளது புகைப்படத்தில் போடப்பட்டு இருந்த மாலையை கழட்டி கீழே போட்டவன்

“இன்னொரு தடவை இப்படி பண்ணிடாதீங்க ம்மா!” கோபமாக அவரைப்பார்த்து கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி சென்றான்.

“கடவுளே! இந்த பையன் எப்போது உண்மையை ஏற்றுக் கொள்ள போகிறான்? கடவுளே தயவு செய்து அந்த பொண்ணு இறந்துவிட்டாள் என்ற உண்மையை இவனுக்கு எப்படியாவது புரிய வைத்து விடுப்பா! இல்லை என்றால் அந்த பொண்ணை திரும்பி வர வைங்க நானே என் பையன் வாழ்க்கையை அழிச்சுட்டேன்னு தினமும் எனக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கு என் பையனோட சந்தோஷத்தை திருப்பிக் கொடுத்துடுப்பா” யசோதா தன் கண்கள் கலங்க மனமுருகி வேண்டிக் கொண்டிருக்க மறுபுறம் சித்தார்த் தன் வண்டியில் ஏறி அமர்ந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தான்.

“அண்ணா ஒரு நிமிஷம்!” நர்மதாவின் குரல் கேட்டு தன் கோபத்தை காட்டி கொள்ளாமல் புன்னகைத்தபடி அவளை திரும்பி பார்த்தவன்

“சொல்லுமா என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“அண்ணா! நான் சயின்ஸ் காம்படிஷனில் செலக்ட் ஆகி இருக்கேன்ணா!”

“வாவ்! சூப்பர் டா கங்கிராஜூலேஷன்ஸ்” நர்மதாவின் கை பற்றி குலுக்கி சித்தார்த் தன் வாழ்த்தை தெரிவிக்க

புன்னகையுடன் அவனை பார்த்தவள்
“தாங்க்ஸ் அண்ணா! இன்னும் நான்கு நாட்களுக்கு அப்புறம் அடுத்த ஸ்டேஜ் காம்படிஷனும், இப்போ செலக்ட் ஆனதற்கு பங்ஷனும் குன்னூரில் இருக்குண்ணா ஸ்கூலில் பேரண்ட்ஸ் கூட வர சொல்லி சொன்னாங்க” தயங்கியபடியே கூறவும்

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவன்
“இவ்வளவு தானா? இதற்கு எதற்காக இந்தளவிற்கு தயக்கம்? இன்னும் நான்கு நாட்களுக்கு அப்புறம் நாம எல்லோரும் ஒண்ணா குன்னூருக்கு போவோம் சரியா?” என்று கூற

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா!” துள்ளி குதித்தபடியே அவனது கையைப் பிடித்துக் குலுக்கியவள் அதே சந்தோஷ மனநிலையுடன் வீட்டிற்குள் ஓடிச் சென்றாள்.

முகம் நிறைந்த சந்தோஷத்துடன் செல்லும் நர்மதாவை பார்த்து புன்னகைத்த படியே தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்ல அவன் நினைவுகளோ மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நோக்கி பின் நோக்கி நகர்ந்தது.

************************************************

மூன்று வருடங்களுக்கு முன்பு…..

மேக்னா சித்தார்த்தின் கைகளிலேயே தன் கண்களை மூடி மூர்ச்சையாகி இருக்க நொடியும் தாமதிக்காமல் அவளை தன் கைகளில் அள்ளி ஏந்தி கொண்டவன் அவசர அவசரமாக படியிலிருந்து இறங்கி செல்ல சரியாக அந்த நேரம் பார்த்து ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது.

மேக்னாவை ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு சித்தார்த்தும் அவளுடன் ஏறப் போக யசோதாவோ அவன் கைகளை பற்றி பிடித்து அவனை போக விடாமல் தடுத்து நிறுத்தினார்.

“அம்மா!” சித்தார்த் அதிர்ச்சியாக தன் அன்னையைத் திரும்பி பார்க்க

கண்கள் கலங்க அவனைப் பார்த்து தன் இருகரம் கூப்பியவர்
“நீ எங்க கூடவே வா சித்தார்த்! எனக்கு ரொம்ப பயமாக இருக்கு உனக்கு எதுவும் நடந்திடுமோன்னு என் மனசு கிடந்து அடிக்குது! தயவு செய்து என் கூடவே வா சித்தார்த்” அவரின் கெஞ்சலான பார்வையில் அதற்கு மேல் அவரை மறுத்துப் பேச முடியாது என்பதை உணர்ந்தவன் மேக்னாவை மாத்திரம் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தான்.

ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்ற அடுத்த நொடியே ஜெஸ்ஸி தன் காரை எடுத்துக் கொண்டு வர அதில் சித்தார்த், நர்மதா மற்றும் யசோதா ஏறிக்கொண்டனர்.

மறுபுறம் இன்னொரு காரில் வில்லியம்ஸும், தாமோதரனும், ஜார்ஜும் ஏறிக்கொள்ள எட்வர்ட் காரை எடுத்துக்கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தவாறே ஜெஸ்ஸி தன் காரை செலுத்திக் கொண்டிருக்கையில் திடீரென்று அவர்கள் சென்ற வழியில் டிராபிக் ஜாமாகி போனது.

“ஓஹ்! காட்!” கோபமாக தன் கார் ஸ்டியரிங்கில் அவள் குத்திக் கொள்ள கோபத்துடனும், பதட்டத்துடனும் சித்தார்த் அவசரமாக தன் காரில் இருந்து இறங்கி அந்த வழியை சரி செய்து விட்டு மீண்டும் காரில் அமர்ந்து கொண்டான்.

அதற்கிடையில் மேக்னா சென்ற ஆம்புலன்ஸ் வண்டி அவர்களை விட்டு நீண்ட தூரம் கடந்து சென்றிருந்தது.

இருந்தாலும் தன்னால் முடிந்த மட்டும் ஜெஸ்ஸி வேகமாக தன் காரை செலுத்திக் கொண்டு செல்கையில் அவர்கள் கண்களில் பட்டது தூரத்தில் தெரிந்த புகை மூட்டம் தான்.

அதைப் பார்த்து சித்தார்த்தின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ளவே தன் காரில் இருந்து அவசரமாக இறங்கியவன் அந்தக் கூட்டத்தை நோக்கி செல்ல அங்கே மேக்னாவை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த ஆம்புலன்ஸ் அந்த வீதியால் வந்து கொண்டிருந்த ஒரு டிராக்டர் ஒன்றில் மோதி எரிந்து சாம்பலாகி கருகிக் கொண்டிருந்தது.

அந்த காட்சியை பார்த்ததுமே சித்தார்த்துக்கு மனமும் மூளையும் வேலைநிறுத்தம் செய்ய மற்றவர்களும் அதைப் பார்த்து அதிர்ச்சியாகி போய் நின்றனர்.

இரு வாகனங்களும் ஒன்றாக கருகி அந்த இடமே எரிமலை போன்று உஷ்ணமாகி இருக்க சுற்றி நின்றவர்கள் அந்த நெருப்பை அணைக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டு நின்றனர்.

சிறிது நேரத்தில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த எட்வர்ட் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வயதான நபரின் அருகில் சென்று
“ஐயா! பெரியவரே! என்ன ஆச்சு?” என்று கேட்க

அவரோ
“இரண்டு வாகனமும் ரொம்ப வேகமா வந்து அடிச்சுக்கிட்டு உள்ளுக்குள் எல்லாமே கருகிப் போச்சு போல! யாருமே பிழைக்கல! எலும்பாவது கிடைக்குமான்னு தெரியல!” என்று கூறினார்.

அதைக் கேட்ட சித்தார்த் தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி
“மேக்னா!” சத்தமிட்டு கத்தியபடியே முழங்காலிட்டு அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தான்.

தன் மகன் அழுவதை பார்த்து தாளாமல் யசோதா அவனருகில் வந்து அவனது கையைப் பிடித்துக் கொள்ள போக அவரை பார்த்து வேண்டாம் என்று கைகாட்டி நிறுத்தியவன்
“கடைசி வரைக்கும் நான் ஆசைப்பட்ட மாதிரி அவ கூட சேர முடியாம போச்சே ம்மா!” என்று கூற அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு அவர் தன் வாயை இறுக மூடியபடியே அழத் தொடங்கினார்.

தன் ஒட்டுமொத்த காதலும் தன் முன்னால் கருகிப் போனதை பார்த்து தாளாமல் சித்தார்த் அங்கிருந்து எழுந்து நடந்து செல்ல
“சித்தார்த்! நில்லு” என்று அழைத்தவாறே ஜெஸ்ஸி அவனைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்றாள்.

“ப்ளீஸ் ஜெஸ்ஸி எதுவும் பேச வேண்டாம் எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்!’ அவளை தன்னோடு வரவேண்டாம் என்பது போல கைகாட்டி அவளை தடுத்து நிறுத்தியவன் தன் கால் போன போக்கில் நடந்து சென்று தன் வீட்டை வந்து சேர்ந்தான்.

தன் காதல் கைகூடி வரும் நேரத்தில் இப்படி மொத்தமாக ஒன்றும் இல்லாமல் போன தன் நிலையை எண்ணி நிம்மதி இழந்து போனவன் அதில் இருந்து முழுதாக வெளிவர முடியாமல் தவித்துப் போனான்.

அந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கடந்து இருந்து நிலையில் எல்லோரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி இருக்க சித்தார்த் மாத்திரம் மனதளவில் இன்னமும் பின் தங்கி போய் இருந்தான்.

ஒவ்வொரு நாளும் அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று வருபவன் மனதிற்குள் மேக்னா இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே தான் இருந்தது.

அந்த நம்பிக்கைக்கான காரணம் அந்த இடத்தில் நடந்த விபத்தைப் பற்றி விசாரித்த காவல் அதிகாரிகளை சந்தித்து பேசிய போது அவர் சொன்ன விடயங்கள்.

அந்த இடத்தில் இறந்து போன நான்கு நபர்களின் தடயங்களே அவர்களுக்கு கிடைத்திருந்தது.

அதுவும் நான்கு வகையான எச்சங்களும் ஆண்களுக்கு உரியது.

அந்த ஒரு விடயம் தனக்கு தெரிந்த காரணத்தினால் தான் இன்று வரை சித்தார்த் மேக்னா இறந்ததை ஏற்றுக் கொள்ள முனையவில்லை.

அவனுக்கு தெரிந்த இந்த ஒரு விடயம் அவனது வீட்டினருக்கோ ஏன் ஜெஸ்ஸிக்கு கூட தெரியாது.

தன் பழைய நினைவுகளில் லயித்த படியே தன் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தவன் அதன் பிறகு தன் வேலைகளில் மூழ்கி போனான்.

அன்றிலிருந்து சரியாக நான்கு நாட்களுக்கு பிறகு சித்தார்த் அவனது பெற்றோர்களுடன் சேர்ந்து நர்மதாவுடன் குன்னூர் நோக்கி புறப்பட்டு சென்றான்.

இந்த ஒரு வார காலத்தில் அவனுக்கு மேக்னா மீதான ஞாபகங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்க அந்த நினைவுகளும் அவனுக்கு சுகமான அவஸ்தையாகத் தான் இருந்தது.

இங்கே சித்தார்த் மனதிற்குள் நிறைந்த சுகமான அவஸ்தைகளோடு கண்களை மூடி தன் பிரயாணத்தை மேற்கொண்டிருக்க

மறுபுறம் குன்னூர் உயர் நிலைப் பள்ளியில்….

“ஸ்டூடண்ஸ் எல்லோரும் லைனா நில்லுங்க இன்னைக்கு நம்ம ஸ்கூலில் பெரிய பங்ஷன் நடக்கப் போகுது ஷோ எல்லோரும் நல்ல பிள்ளைகளாக இருக்கணும் சரியா?”

“ஓகே மேம்”

“வெரி குட் இப்போ எல்லோரும் கிளாசுக்கு போங்க” அவளது கட்டளைக்கு அடிபணிந்து அந்த இடத்தில் நின்று
கொண்டிருந்த எல்லா மாணவர்களும் வரிசையாக அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

“மாயா மேடம்” ஒரு சிறு பிள்ளையொன்று அவள் கையை பிடித்து இழுத்தபடியே அழைக்கவும் புன்னகையுடன் அந்த பிள்ளையை திரும்பி பார்த்தாள் அவள்.

தோற்றத்தில் அச்சு அசலாக மேக்னாவைப் போல இருந்தவள் மூன்று வருடங்களுக்கு முன்னர் மேக்னா இருந்ததை விடவும் சற்று கொழுத்து, வெண்மையேறி இருந்தாள்.

அத்தோடு அவள் கண்களில் மேக்னாவிடம் மாத்திரம் இருக்கும் அந்த மிரட்டலான பாவனை இல்லாமல் இல்லை.

“சொல்லுங்க மேடம் தாரணி! கிளாசுக்கு போகாமல் இங்கே என்ன பண்ணுறீங்க?”
அந்த குழந்தையின் உயரத்திற்கு ஏற்றாற் போல முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு அவள் கேட்கவே

அவளை பார்த்து புன்னகையுடன் தன் கையில் இருந்த சாக்லேட்டை நீட்டிய அந்த பிள்ளை
“இன்னைக்கு என்னோட பிறந்த நாள் மேடம்” என்று கூற

“அப்படியா? தாரணி குட்டிக்கு இந்த மாயாவோட ஹார்ட் விஸ்! ஹேப்பி பர்த்டே! அப்புறம் இந்த சாக்லேட்டை நீங்களே சாப்பிடுங்க ஓகே வா?” அந்த பிள்ளையின் கன்னத்தில் முத்தமிட்டாவாறே அவள் கூற அந்த பிள்ளையும் புன்னகையுடன் தன் வகுப்பிற்குள் ஓடிச் சென்று மறைந்தது.

முகம் கொள்ளாப் புன்னகையுடன் அந்த பிள்ளைகளை எல்லாம் பார்த்து கொண்டு நின்றவள் மனமோ அவளது சிறுபராயத்தை நோக்கி செல்ல போக தன் சிந்தனைக்கு தற்காலிகமாக தடை போட்டவள் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்து சென்றாள்.

“டேய்! சித்தார்த்! கிளாசுக்கு வாடா!” அவளை தாண்டி சென்ற இரு பிள்ளைகள் சத்தமிட்டு கத்தியபடியே ஓடிச் செல்ல அந்த பெயரைக் கேட்ட அடுத்த நொடியே அவள் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.

அந்த கண்ணீர் துளிகளே அடையாளம் சொன்னது அவள் மேக்னாவாகத் தான் இருப்பாள் என்று.

ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை அவள் நிதானப்படுத்தி கொண்டாலும் அவள் நினைவுகளோ மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நோக்கி அவளை இழுத்து சென்றது.

*******************************************************

சித்தார்த் அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்க அவள் மூடிய விழிகளுக்குள் அவனது விம்பமே படையெடுத்து வந்து கொண்டிருந்தது.

தன் உயிர் தன்னை விட்டு போகும் அந்த தறுவாயிலும் தன் உயிராக அவன் கலந்திருக்கிறான் என்ற உண்மை அறிந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

தான் செய்த தவறுகளுக்கு இது தக்க தண்டனை என்று அவள் நினைத்திருந்தாலும் அவள் ஆழ் மனதோ சித்தார்த்தோடு இணைந்து வாழ இன்னொரு சந்தர்ப்பம் தனக்கு கிடைத்து விடாதா என்று ஏக்கம் கொள்ள ஆரம்பித்தது.

யார் யாருக்கு எதை எப்போது வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் அந்த கடவுள் ஒருவனிடமே உண்டு.

அவன் எடுத்த முடிவு மேக்னாவிற்கோ, சித்தார்த்திற்கோ அந்த தருணத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆழ் மனதிற்குள் சஞ்சரித்த அந்த ஆசைகளின் தாக்கத்தில் மெல்ல தன் விழிகளைத் திறந்து கொண்ட மேக்னா தான் இருக்கும் இடத்தை சுற்றிலும் திரும்பி நோட்டம் விட்டாள்.

அந்த கடவுள் ஒருவரைக் காப்பாற்ற நினைத்து விட்டால் எந்தவித அதிசயத்தையும் இலகுவாக நிகழ்த்தி விடுவார் அதுவே ஒருவனின் உயிரை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த தடையுமின்றி அந்த காரியத்தை முடித்து விடுவார்.

இங்கும் அவ்வாறே அவர் மேக்னா விற்கு கொடுத்த கால எல்லை முடியவில்லை போலும் அதனால் என்னவோ அவள் சென்று கொண்டிருந்த அந்த வாகனம் திடீரென தன் பாதையை மாற்றி பல முறை சுற்றி நிற்க அந்த சுழற்சியில் அவள் வெளியே தூக்கி வீசப்பட்டாள்.

முட்புதர்கள் நிறைந்த அந்த பகுதிக்குள் தூக்கி வீசப்பட்டவள் வலி தாளாமல் சத்தமிட்டு கத்த அவளது நேரம் வாகனங்கள் இரண்டும் பெரும் சத்தத்துடன் வெடித்து அவள் சத்தத்தை மங்கிப் போகச் செய்தது.

உடலில் இருந்து குருதி வழிந்தோடாமல் தன் கையால் அந்த இடத்தை இறுக்கமாக பிடித்தபடியே தடுமாறி நடந்து சென்றவள் இறுதியாக வந்து சேர்ந்த இடம் பழங்குடி மக்கள் வாழும் ஒரு காட்டுப்பகுதி.

எந்த திசையில் எவ்வளவு தூரம் நடந்து வந்தாள் என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை ஆனால் அவளுக்கு மறு வாழ்வு கிடைத்தது அந்த இடத்தில் தான்.

தன் அன்னை, தந்தையுடன் செல்லும் போது நடந்த விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு மறு வாழ்வு எடுத்தவள் தன் இத்தனை வருட வாழ்க்கையில் செய்த பாவங்களை மறந்து, திருந்தி இப்போது மீண்டும் மறு வாழ்வு எடுத்திருந்தாள்.

மூன்று, நான்கு மாதங்களாக அந்த இடத்திலேயே அந்த மக்களின் கண்காணிப்பில் இருந்து வந்தவள் தன் உடல் நலம் முற்றாக சரியானதன் பின்னர் அவர்களிடம் இருந்து விடைபெற்று விட்டு வேறு இடத்தை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தாள்.

என்னதான் அவளுக்கு சித்தார்த் மீது காதல் இருந்தாலும் அவன் வீட்டினரின் மறுப்பை பார்த்திருந்தவள் அவனை மீண்டும் தேடிச் செல்ல முனையவில்லை.

தன் காதல் தன் மனதோடு போகட்டும் சித்தார்த் தன்னைப் போல தவறுகளை செய்த ஒரு பெண்ணோடு வாழக்கூடாது என்று முடிவெடுத்தவள் பழைய படி ராணி இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டாள்.

ராணி இருக்கும் இடத்திற்கு சென்று தான் இதுவரை செய்த பாவங்களை எல்லாம் அவள் சொல்லி அழவே அவளை ஆறுதல் படுத்தி சமாதானப்படுத்தியவர் அவளுக்காக இந்த வேலையை வாங்கி கொடுத்திருந்தார்.

மறுஜென்மம் எடுத்தது போன்று தனக்கு கிடைத்த இந்த வாழ்வை இதற்கு முன்னர் நடந்தது போன்று தொலைத்து விடக் கூடாது என்று தன்னைத் தானே உரமேற்றிக் கொண்டவள் அதை கடைப்பிடிக்கவும் செய்தாள்.

சித்தார்த்தின் ஞாபகங்கள் வரும் போதெல்லாம் அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பான் என்று தன்னைத் தானே அவள் தேற்றிக் கொள்வாள்.

அவள் தன் காதலை யாருக்கும் தெரியாமல் தனக்குள் பூட்டி வைத்திருப்பதாக நினைத்திருக்க அதை திறக்கும் சாவி கொண்ட காவல்காரனோ தன் முதல் அடியை அந்த இடத்தில் எடுத்து வைத்திருந்தான்.

“மேடம் காம்படிஷனுக்கு ஸ்டூடண்ஸ் எல்லோரும் வர ஆரம்பித்துட்டாங்க” அவளது அறையை கடந்து சென்ற சக ஆசிரியர் ஒருவர் கூறி விட்டு செல்ல

“இதோ வர்றேன்!” தன் முன்னால் இருந்த புத்தகங்களை எல்லாம் மூடி வைத்து விட்டு அவளும் தன் அறையில் இருந்து வெளியேறி சென்றாள்.

வெவ்வேறு ஊர்களிலிருந்து வெவ்வேறு வகையான மாணவர்கள் பல பேர் வந்து இருக்க அவர்களை எல்லாம் பார்த்து கொண்டே நடந்து சென்றவள் வாயில் புறமாக செல்கையில் தன் முன்னால் நின்ற நபரைக் கவனிக்காமல் அவர் மேல் மோதி நின்றாள்.

“ஐ யம் ஸாரி மேடம்!”

“ஐ யம் ரியலி சாரி சார்!” இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டபடியே நிமிர்ந்து பார்க்க இருவரது கண்களிலுமோ அதிர்ச்சியின் ரேகைகள்.

“மேக்னா!”

“இன்ஸ்பெக்டர் சார்!” அவளும், சித்தார்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்கையில்

“அக்கா!” நர்மதா அவளை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்.

அவள் தன் முன்னால் நிற்பவனை பார்த்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியாமல் நிற்க
“சித்தார்த் போகலாமா?” என்றவாறே அந்த இடத்திற்கு வந்த யசோதாவும் அவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றார்.

யசோதாவைப் பார்த்ததுமே அவள் அவசரமாக அங்கிருந்து செல்லப் போக அவசரமாக அவளது கைகளை யாரோ இறுக்கமாக பற்றிப் பிடித்தனர்.

சித்தார்த் தான் தன்னை இவ்வளவு உரிமையாக பிடிப்பான் என்று எண்ணத்தோடு திரும்பி பார்த்தவள் எண்ணத்தை பொய்யாக்குவது போல அவளது கைகளை பிடித்து கொண்டு நின்றார் யசோதா.

” அம்மாடி மேக்னா! ஒரு தடவை உன்னை தனியாக போக விட்டுவிட்டு என் பையனை நான் ரொம்பவும் தவித்துப் போக வைத்து விட்டேன் இன்னொரு தடவை அந்த தப்பை நான் செய்ய மாட்டேன் நீ உயிரோடு இருக்குறதாக மூன்று வருஷமாக என் பிள்ளை சொன்னான் ஆனா நான் நம்பல ஆனா நான் இப்போ அவனோட காதலோட சக்தியை நம்புறேன் மறுபடியும் என் பையனை நடைப் பிணமாக ஆக்கிடாதேம்மா!” தன் இரு கரங்களையும் கூப்பி கெஞ்சுதலாக அவர் கேட்கவே

அவசரமாக அவரது கையை எடுத்து விட்டவள்
“ஆன்ட்டி! நீங்க என்னை வேற யாரோன்னு நினைத்து பேசுறீங்க என் பேரு மேக்னா இல்லை மாயா!” கலங்கி சிவந்த தன் கண்களை மறைத்தபடியே அங்கிருந்து செல்லப் போக சித்தார்த் அவள் முன்னால் வந்து நின்றான்.

அவனது பார்வையின் வீரியத்தில் அவள் தன் பார்வையை திருப்பிக் கொள்ள அவள் முகத்தை தன் புறமாக திருப்பியவன்
“வேறு ஊருக்கு வந்து வேறு ஒரு அடையாளத்தோடு நீ இருந்தால் நான் உன்னை கண்டு பிடிக்க மாட்டேனா? நீ எதை வேண்டுமானாலும் மாற்றலாம் ஆனால் ஒரு விடயம் மாறாது என்னோட மேக்னா மட்டும் என்னை அழைக்கும் ஒரே பெயர் தான் நீ சொன்ன அந்த ‘இன்ஸ்பெக்டர் சார்!'” என்று கூறவும் அவனது கூற்றில் அவள் கண்கள் மெச்சுதலாக அவனை நோக்கியது.

“நீ கடைசியாக என்னிடம் சொன்னது இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு மேக்னா! நீயும் என்னை விரும்புறதாக சொன்னது இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு! எனக்கு தெரியும் நிச்சயமாக நான் உன்னை திரும்பி பார்ப்பேன்னு! அதனால்தான் இந்த மூன்று வருஷமாக நீ சொன்ன அந்த வார்த்தைகளை நினைத்து கொண்டே என் வாழ்க்கையை கடத்திட்டு இருக்கேன் இதற்கு மேலும் நீ உன் மனதில் இருக்குறதை மறைக்க முடியாது மேக்னா!” சித்தார்த் பேசப் பேச அவள் மனதிற்குள் பூட்டி வைத்த அவன் மீதான காதல் மடை திறந்து பாய ஆரம்பித்தது.

“எனக்கு இந்த மூன்று வருஷம் ஒண்ணும் பெரிது இல்லை! இன்னும் எத்தனை வருஷம் வேணும்னாலும் காத்திருப்பேன் உன் பதிலுக்காக!” அவளை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன் அவளது கன்னத்தில் இலேசாக வருடிக் கொடுத்து விட்டு திரும்பி அந்த பள்ளியின் வெளிப்புறமாக நடந்து சென்றான்.

இத்தனை நாட்களாக அவனை நேரில் பார்க்காமல் அவள் பட்ட வேதனை அவளுக்கு மாத்திரமே தெரியும்.

தான் மறுவாழ்வு எடுத்ததே சித்தார்த்தின் இந்த காதலால் தான் என்று எண்ணிக் கொண்டவள் இனியும் அவனை விட்டு பிரிய கூடாது என்ற எண்ணத்தோடு
“இன்ஸ்பெக்டர் சார்!” என்று சத்தமிட்டு அழைத்தாள்.

அவளது அழைப்பில் சட்டென்று அந்த இடத்திலேயே நின்றவன் சிறு நேரத்தின் பின் அவளின் புறம் திரும்பாமலேயே மீண்டும் தன் நடையைத் தொடர ஆரம்பித்தான்.

“இன்ஸ்பெக்டர் சார் நானும் உங்களை விரும்புகிறேன்” மேக்னாவின் குரல் கேட்டு சித்தார்த் தன் நடையை நிறுத்தவே இல்லை.

அவனது அந்த விசித்திரமான நடவடிக்கையைப் பார்த்து குழப்பம் கொண்டவள் அவனது
‘ நீ கடைசியாக என்னிடம் சொன்ன வார்த்தைகள்’ என்ற வசனத்தை மீண்டும் தனக்குள் மீட்டிப் பார்த்து விட்டு
“சித்தார்த்!” என்று அழைத்தாள்.

அவளது அந்த ஒற்றை அழைப்பில் சித்தார்த் உடனேயே கண்கள் கலங்க அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவன் திரும்பியே அடுத்த நொடியே மேக்னா அவனை ஓடிச்சென்று அணைத்து கொண்டாள்.

அவளுடைய இத்தனை நாள் பிரிவை அந்த ஒற்றை அணைப்பே அவனுக்கு நன்றாக புரியச் செய்தது.

அவளை இன்னமும் தன்னோடு இறுக்கி அணைத்து கொள்ள அவன் மனதிற்குள் ஆசை எழுந்தாலும் தாங்கள் இருக்கும் இடம் கருதி
“மேக்னா இது ஸ்கூல்!” அவள் காதில் மெல்லிய குரலில் கூற அவளோ முகம் சிவக்க சட்டென்று அவனிடம் இருந்து விலகி நின்றாள்.

“மேக்னா!” காதலோடு அழைத்தவாறே அவள் முகத்தை நிமிர்த்தியவன்

“நீ என்னை இப்போ அழைத்தாயே! இந்த ஒரு அழைப்பு போதும் உன் காதலை நீ எனக்கு சொல்ல வேறு வார்த்தைகளே தேவையில்லை” என்று கூறவும் அவளோ வெட்கம் கலந்த புன்னகையுடன் அவனை பார்த்து கொண்டு நின்றாள்.

அவளது வெட்கத்தை பார்த்து சித்தார்த்தின் மனதிற்குள் எல்லையில்லா எண்ணங்கள் ஆர்ப்பரிக்க அதை சிறிது கட்டுப்படுத்திக் கொண்டவன் தன் பேச்சை வேறு புறமாக திருப்பினான்.

“அப்புறம் மேக்னா ஒரு சின்ன திருத்தம் நீ பர்ஸ்ட் என்னைக் கூப்பிட்டதும் நான் ஏன் திரும்பல தெரியுமா?”

“ஏன்?”

“ஏன்னா நான் இப்போ இன்ஸ்பெக்டர் இல்லைம்மா! அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்”

“சித்தார்த்! உங்களை!” செல்லமாக அவனது தோளில் தட்டியபடியே அவன் தோளில் அவள் சலுகையாக சாய்ந்து கொண்டாள்.

“எதனால நான் உங்களை விரும்ப ஆரம்பித்தேன்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் புரியல சித்தார்த்”

“நான் சொல்லவா?”

“என் மனதில் இருக்குறது எனக்கே தெரியலை நீங்க அதை சொல்லப் போறீங்களா?”

“ஆமா!”

“சரி சொல்லுங்க”

“முதலில் உன் பேரு என்ன சொல்லு?”

“என்ன இது சம்பந்தமில்லாத…”

“நோ கேள்வி பதில் மட்டும் தான் வேணும்”

“ஷப்பா! என் பேரு மேக்னா”

“கரெக்ட்! மேக்னான்னா காந்தம் மாதிரி இழுக்கும் இல்லையா? காந்தம் ஒத்த ஏற்றங்களை கவராது ஒவ்வாத ஏற்றங்களை தான் கவரும் அது தான் இந்த ரௌடி காந்தம் மேல இந்த போலீஸுக்கு ஈர்ப்பு ஆகிடுச்சு” அவள் கன்னத்தை பிடித்து ஆட்டியபடியே சித்தார்த் கூறவும்

அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவள்
“இன்ஸ்பெக்டர் சார் நீங்க இன்னும் அதே சிரிப்பு போலீஸ் தான்” என்று விட்டு அவனைத் தாண்டி அந்த இடத்தில் இருந்து ஓடிச் செல்ல அவனும் புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்றான்.

இப்போது மட்டுமல்ல இனி எப்போதும் சித்தார்த் மேக்னாவைப் பார்த்து மட்டுமல்ல அவளது ஒவ்வொரு செயல்களிலும் அவளை நோக்கி ஈர்க்கப்பட்டு கொண்டே இருப்பான்.

பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து அதைக் கடந்து வந்த மேக்னாவின் வாழ்விலும் சரி காதலுக்காக இத்தனை வருடங்களாக காத்திருந்த சித்தார்த்தின் வாழ்விலும் சரி இனி எப்போதும் சந்தோஷமே!

இனி வரப்போகும் நாட்கள் எல்லாம் சித்தார்த்தின் காதலின் ஈர்ப்பு விசையாகிப் போவாள் அவனது மேக்னா!

—————————————சுபம்————————————–

error: Content is protected !!