Sempunal 10
Sempunal 10
செம்புனல் – 10
அன்று முழுவதும் சபரியும் தரணியும் நரனை சுற்றி நடந்து கொண்டே இருந்தனர். இரண்டு நாட்களாய் இவர்கள் இருவருமே அவனுக்குக் காவல். அவனுக்குக் கேட்காதபடித் தள்ளிச் சென்று பேசினார்கள். இரவில் அதிகம் உறங்கவில்லை. அவன் சங்கிலியை அவிழ்க்கவேயில்லை.
நரனுக்குப் புரிந்ததெல்லாம் அவர்கள் ஏதோ சிக்கலில் இருக்கிறார்கள் என்பதே. அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்தான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களும் சிரித்ததுதான் அவனைக் குழப்பியது.
காட்டின் கறுமைக் கூடிவந்த நேரம் அவன் சங்கிலியைப் பிடித்து சபரி முன்னே நடக்க நரனும் அமைதியாய்ப் பின் தொடர்ந்தான். தரணி அவனுக்குப் பின்னால் நடந்தான். காட்டிற்குள் வந்ததிலிருந்து இப்படிப் பலமுறை இடம் மாற்றியதால் நரனுக்கு இதுவும் அப்படி ஒரு இடமாற்றலாய்ப் பட்டது.
முன்பெப்போதையும் விட நீண்ட தூரம் நடந்தபோது எதற்காகக் காட்டிற்குள் இவ்வளவு தூரம் செல்கிறார்களென்ற பயம். நடக்க நடக்கக் கண்கள் கூசின. குடிசைகள் கண்ணில் படும்வரை தன்னைத் திருப்பி அழைத்து வருகிறார்களென்ற எண்ணம் சிறிதும் இல்லை.
காட்டிற்குள் குறிப்பிட்ட சிலரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஊரைப் பார்த்ததும் முகம் தெளிந்தது. ஊருக்குள் கூட்டி வருகிறார்கள் என்றால் அதில் எந்தப் பிரச்சனையும் இல்லையா? தெளிந்த முகம் மீண்டும் இருண்டது.
“இவன எங்கக் கட்டி வெக்குறது?”
“அன்னைக்குக் கட்டுன மரம் தான் தரணி. ஆத்மன் அப்படிதான் சொல்லி அனுப்புனான்”
‘நான் இங்க இருந்தா என்ன எப்படிக் கண்டுப்புடிப்பாங்க? காட்டுக்குள்ளயே போயிட்டா என்ன காணும்னுத் தேடிட்டே இருப்பாங்கல்ல? காட்டுக்குள்ள இருந்தா யாருக்குத் தெரியப் போகுது? அதுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டாங்க… அதும் ஊருக்கு இவ்வளோ பக்கத்துல… யாரும் தேடி வரலையா? அப்பா… அவரெங்கத் தேடப் போறாரு? அம்மா கூடவா மறந்துட்டாங்க? அவ்வளோ சீக்கிரமா? இவனுங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரலையா? வராம எப்படிப் போச்சு? எப்படி சமாளிச்சானுங்க? ஒருவேள அன்னைக்குப் பேசிக்கிட்ட மாதிரி அந்தப் பொண்ண எனக்குக் கட்டி வெக்கப் போறானுங்களா?’
அவன் நடையின் வேகம் குறைந்திருந்தது. சபரியின் வேகத்திற்கு அவன் வராததால் சங்கிலியைப் பிடித்து இழுத்தான். தடுமாறி விழப் போனவன் சுதாரிக்க சபரி முன்பைவிட வேகமாக நடந்தான். நரன் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தான்.
நரன் காலிலிருந்து சங்கிலியைக் கழட்டிக் கைகள் இரண்டையும் சேர்த்துப் பிணைத்து அன்று கட்டி வைத்திருந்த மரத்தைச் சுற்றி சங்கிலியைக் கட்டிப் பூட்டினான். காலையிலிருந்து சிரிப்பது போல் சபரியும் தரணியும் அவனைப் பார்த்து சிரித்தார்கள். சங்கிலியை வெறிக் கொண்டு ஆட்டினான்.
“நல்ல வலுவான சங்கிலி… இந்த ஆட்டத்துக்கெல்லாம் ஒண்ணும் ஆகாது. தரணி நீ வீட்டுக்குப் போய்ப் படு. நான் இங்க இருக்கேன். மூட்டைய வெச்சுட்டுப் போ”
சரிதான். சங்கிலிக்கு ஒன்றும் ஆகவில்லை. இழுத்துப் பிடித்து ஆட்டியதில் மணிக்கட்டில் ஆங்காங்கே சிராய்த்துவிட்டது. எலும்பில் எடுத்த வலி விரல் நுனி வரை பரவியது. இதயம் வேகமாகத் துடித்தது. இரண்டு துடிப்புகளுக்கு நடுவே காட்டின் நிசப்தம் அமானுஷ்யமாய்த் தெரிந்தது. மர வேரில் அமர்ந்தான்.
சபரி அன்று தெய்வா இருந்த குடிசையின் வாசலில் நின்றிருந்தான். அதுவே நரனை கட்டி வைத்திருக்கும் இடத்தையொட்டிய முதல் குடிசை.
“அங்க நின்னு வேடிக்கப் பாக்குறியா? வர சொல்லுடா அவள வெளில”
சபரி அமைதியாகக் குடிசையை விட்டு நகர்ந்து மரத்திற்கு எதிரே இருந்த சிறிய பாறையில் அமர்ந்தான். தெய்வா அங்கிருந்து செல்வதற்கு முதல் நாள் கேட்டக் கேள்விகளும் அவள் திருமணமும் நினைவு வந்தன.
“கூப்புடுடா அவள… எதுக்குத் தலக் குனிஞ்சு உக்காந்திருக்க?”
“அவ இங்க இல்ல”
“வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டீங்களா? போய் அவளக் கூட்டிட்டு வா. நான் பேசணும்”
“என்ன பேசணும்?”
“எதுக்கு என்ன புடிச்சு இங்க கட்டி வெச்சிருக்க? அவுத்து விடுன்னு சொல்லணும்”
“அவ எங்கக் கட்டி வெச்சிருக்கா? இப்ப நாந்தானக் கட்டுனேன்?”
“நீ கட்டுனாலும் வேற யார் கட்டுனாலும் அவளாலதான? அவளுக்காகதான? அப்போ அவ சொன்னா விட்டுடுவீங்கல்ல? கூப்பிடுடா”
“யாரு சொன்னாலும் விடுறதா இல்ல. உன்ன விடணும்னா அன்னைக்கே சொல்லிருப்பாளே… ஆத்மன் சொன்னப்போ அமைதியாப் போனால்ல?”
“ஆத்மன்… என்ன கட்டி வெக்க சொன்னவன் பேரு ஆத்மன். காட்டுக்குள்ள என்ன பாத்துக்கிட்டானுங்களே… அவனுங்க வேணு, பூபதி. இப்ப உங்கூட இருந்தவன் பேரு தரணி. அன்னைக்குத் திடீர்னு வந்து என்ன அடிச்சானே… அவன் பேரு? உம்பேரென்ன?”
“அவன் சிவா. நான் சபரி”
“சிவா… சபரி… சரி அவளக் கூப்பிடு”
“இங்க இல்ல”
“குடிசையில இல்ல… அதான் சொன்னியே. வீட்டுக்குப் போய்க் கூட்டிட்டு வா”
“அவ வீட்டுலையும் இல்ல. புருஷன் வீட்டுல இருக்கா”
“அவ கல்யாணம் ஆனவளா?”
“ரெண்டு நாள் முன்னாடி ஆச்சு”
“டேய்…” எழுந்து சபரியின் அருகில் வர முயன்றான். நான்கடிக்கு மேல் எடுத்து வைக்க முடியாதபடி சங்கிலித் தடுத்தது.
“என்ன பாத்தா எப்படி இருக்கு? கொண்டு வந்து மரத்துலக் கட்டி வெச்சிருக்கீங்க? அதும் பைத்தியக்காரன் மாதிரி சங்கிலிப் போட்டு… அவளக் கல்யாணம் பண்ணிக் குடுத்திருக்கீங்க? அவ எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருப்பா… நான் இங்க கடந்து சாகணுமா? என் லைப் என்னாகுறது? விடுடா”
பக்கத்துக் குடிசைகளிலிருந்து இரண்டு மூன்று தலைகள் எட்டிப் பார்த்து உடனேயே உள்ளே இழுத்துக்கொள்ளப்பட்டன. மீண்டும் சங்கிலியை இழுத்ததில் எரிச்சலும் வலியும் அதிகமாயின. திரும்பிச் சென்று வேரில் அமர்ந்தான்.
“அவளுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? அவுத்து விடுங்கடா”
“ஒரு பொண்ண சாதாரணமாக் கட்டிக் குடுத்தாலே என்ன பிரச்சன வருமோ, போன எடத்துலப் பொண்ணு நல்லா இருக்கணும், திரும்பிப் பொறந்த வீட்டுக்கு வர மாதிரி எதுவும் நடந்துடக் கூடாதுன்னு பெத்தவங்க வேண்டிட்டுதான்டா இருப்பாங்க. நீ செஞ்சிருக்கக் காரியத்துக்கு அவ அங்க என்ன ஆவளோ என்ன கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்குறாளோன்னு அவங்கம்மா தெனம் தவிக்குறது அவங்கக் கண்ணுலத் தெரியுதுடா.
அதெல்லாம் கண்டிப்பா உனக்கு என்னைக்கும் புரியப் போறதில்ல. புரியுற வரைக்கும் உன்ன விட மாட்டோம்னு சொல்லுறதெல்லாம் வீண் பேச்சு. ஆயுசுக்கும் உன்ன விடுறதா இல்ல”
“அவ அங்கயே இருக்கா… இல்லத் திரும்பி வரா… அதப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்ல. நான் இங்க இருக்க மாட்டேன். நான் போகணும். அவப் பேரென்ன?”
சபரி எதுவும் பேசாமல் அவன் முகத்தை சில நொடிகள் பார்த்துவிட்டுத் தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறிப் பாறையருகில் மண்ணில் விரித்து அதன் மீது படுத்தான்.
“நான் கேக்குறேன்… லுக்கு விட்டுட்டு ஸ்டைலா படுக்குற? பேரென்னடா?”
சபரி எந்த பதிலும் சொல்லவில்லை. தெய்வா காயங்களுடன் ஊருக்குள் வந்த தினம் நினைவு வந்தது. யாரென்று கேட்டபோது தெளிவாக நரனின் பெயர் சொன்னது நினைவு வந்தது. நரன் இப்போது கேட்டக் கேள்விக் காதுக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது.
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தான். அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எதனால்? மனம் பதிலைத் தனக்குள் தேட முயன்றுப் பின் மேலே சென்று வான் வெளியில் நின்று பூலோகத்து மனிதர்களைப் பார்த்தது.
அடையாளம் காட்டப் பெண்ணிற்கு ஒரு பெயர்த் தேவையாயிருகிறது. தன் தேவையைத் தீர்த்துக்கொள்ள ஆணிற்கு அது அவசியப்படவில்லை.
அடையாளம் காட்டப்படுவதால் என்னாகிவிட்டது? அப்படியொரு அடையாளத்தையே பெருமையாய்ப் பேசித் திரிந்த மனிதர்களும், அதை அழித்து பெயர்க் காத்துக் கொண்ட மனிதர்களும் நடமாடிய பூமி எந்த சலனமுமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது.
ஏதோ சப்தம் கேட்டு எழுந்தமர்ந்த சபரி, நரன் சங்கிலியை இடம் வலமாகப் பிடித்து இழுப்பதைக் கண்டான்.
“என்ன மோர் கடையுற?”
“தெனம் இப்படிக் கொஞ்சக் கொஞ்சமா அறுத்துட்டே இருந்தா ஒரு நாள் இந்த மரம் விழுந்துடும், நானும் தப்பிச்சிடுவேன்”
“அப்படின்னு யார் சொன்னா?”
“நீ எங்க இங்க்லீஷ் படமெல்லாம் பாத்திருக்கப் போற? ஒரு ஸ்பூன் வெச்சு ஓட்டப் போட்டுத் தப்பிச்சவனெல்லாம் இருக்கான் தெரியுமா?”
“அடேங்கப்பா… என்ன இன்னும் ஒரு இருபது வருஷத்துலத் தப்பிச்சிடுவியா? எங்க… மரத்துக்குப் பின்னாடிப் போய்ப் பாத்துட்டு வா… எவ்வளோ அறுத்திருக்க?”
நரனுக்குமே அந்த ஆசை இருந்தது. தன் உழைப்புக்கான பலனைப் பார்க்கும் ஆசை. மரத்திற்குப் பின் புறம் செல்ல சங்கிலி சுழன்றது. மரப்பட்டையில் ஆழமில்லாத கோடுகள் கீரப்பட்டிருந்தன. தான் சங்கிலியால் அறுத்த இடம் இதுவாயிருக்க முடியாதென்று மேலும் கீழும் இடமும் வலமும் தேடினான். இருட்டில் தனக்குதான் கண்கள் சரியாகத் தெரியவில்லையென்று கைகளால் துழாவினான்.
குனிந்தத் தலையுடன் கால்களை மண்ணில் தேய்த்தபடி நடந்து வந்தவனைப் பார்த்து “என்ன ஒரு ரெண்டடி ஆழம் வெட்டிருப்பியா?” என்றான் சபரி. நரன் அமைதியாய் வேரில் அமர்ந்தான்.
“கொஞ்சம் அந்த மரத்தப் பாருடா… உன்ன மாதிரி நாலு ஆள சேத்து நிக்க வெச்ச அளவு அகலமா இருக்கு. அதப் போய் இந்த சங்கிலியால… அந்த சங்கிலியத் தொட்டுப் பாரு. எவ்வளோ வழ வழன்னு இருக்கு… கொஞ்சமாவது யோசிக்குறியா?”
“நான் வேற ஐடியா யோசிப்பேன். எப்படியும் இங்கேந்துத் தப்பிச்சிடுவேன்”
“உன்னப் பாத்தாப் பாவமா இருக்கு. நான் வேணா ஒரு யோசன சொல்லவா?”
“என்ன?”
“இப்படியே மரத்தப் புடிச்சு மேல ஏறுனன்னு வை… அப்படியே உச்சாணிக் கொம்புக்குப் போயிடுவ… அப்பறம் அப்படியே சங்கிலிய மேல் பக்கமா உறுவிக் கீழ இறங்கிட்டா… தப்பிச்சுடலாம்”
நரன் தலையைப் பின்னுக்கு சாய்த்து அண்ணாந்து மரத்தின் உச்சியைப் பார்க்க முயன்றான். தெரியவில்லை.
“நானும் சொல்லுறேன்னு வாயப் பொளந்து பாக்குறான் பாரு. டேய்… வாழ்க்கையப் பத்தி எதாவது தெரியுமாடா உனக்கு? இத்தன நாள் என்னத்ததான் கிழிச்சியோ… நீயெல்லாம் வாழ்ந்ததே தெண்டம். தூங்கு. காலையில சுறுசுறுப்பா யோசிக்கலாம்”
சபரி மீண்டும் படுத்துவிட்டான். நரன் உறங்கவில்லை. இனி இவர்களிடம் விட்டுவிட சொல்வதால் எந்தப் பலனுமில்லை. தப்பித்தாக வேண்டும். வழிக் கண்டறிய வேண்டும். திட்டம் தீட்டினான்.
‘இங்கேந்து எப்படியாவது ஊருக்குள்ள போயிடணும். ஊர் எல்லைக்குப் போயி லெப்ட் சைட் திரும்பி நேரா நடந்துட்டே இருந்தா ரொம்ப தூரத்துல பஸ் ஸ்டாப் வரும். யார் கண்ணுலயும் படாம பஸ் ஏறி முதல் ஸ்டாப்ல எறங்குனா அன்னைக்குத் தங்கிருந்த ஹோட்டல் வரும். பிரின்ஸ் லாட்ஜ். அங்கேந்து கால் பண்ணி சொல்லிட்டா வீட்டுக்குப் போயிடலாம். இங்கேந்து எப்படியாவது ஊருக்குள்ள போயிடணும். ஊர் எல்லைக்கு…’
மனம் ஜபிக்கத் துவங்கியது. கண்கள் தாமாக சொருக மரத்தில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தான்.
விடியும் முன்னே உறக்கம் கலைந்தது. தலைப் பக்கவாட்டில் சரிந்துக் கோனி அமர்ந்திருந்தான். நீண்ட நேரமாக அப்படியே இருந்திருக்க வேண்டும். இடுப்பும் கழுத்தும் வலியெடுத்தது. எழுந்து நின்றுக் கழுத்தை இறுக்கித் திருப்பி சொடக்கெடுத்தவன் இடுப்பை வளைத்தான்.
“காலங்காத்தால நீ கோனிக்கிட்டு நிக்குறதெல்லாம் பாக்கணும்னு என் தலையில எழுதிருக்கு. அதுக்குள்ள எந்திரிச்சுட்ட?”
சபரி எழுந்துத் துண்டை எடுத்து மண்ணை உதறித் தோளில் போட்டுக் கொண்டான். நரன் அவன் சொன்னதை கவனிக்கவில்லை. தெய்வா முன்பிருந்த குடிசையைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
‘இவ பேரென்ன? அன்னைக்கு என்ன வெட்ட சொன்னப்போ கூப்பிட்டானுங்களே… என்ன பேரு சொல்லி… எனக்குக் கேட்டுச்சே… கேட்டுச்சா? ஏதோ சொல்லி…’
“என்ன மரத்து மேல எப்படி ஏறலாம்னு யோசிக்குறியா? வா வா… இப்பவே குளிச்சுடு. இன்னும் கொஞ்ச நேரமாச்சுன்னா இங்க இருக்கப் பொண்ணுங்க எந்திரிச்சுக் குளிக்கப் போவாங்க”
“ஏன்… என்னையும் அவங்களோடவே கூட்டிட்டுப் போக வேண்டியதுதான? தனியாக் குளிக்க பயமா இருக்கு”
“வா என்ன பயமிருந்தாலும் போக்கிடுவோம்”
மூட்டையைப் பிரித்து அதிலிருந்து சோப்பையும் துண்டையும் எடுத்தான். இடுப்பில் வேட்டி முடிப்பிலிருந்த சாவியை எடுத்து சங்கிலியில் போட்டிருந்த பூட்டைத் திறந்தான். பூட்டையும் சாவியையும் அங்கேயே வைத்து அவன் பின் மண்டையை ஒரு கையிலும் சங்கிலியை மறு கையிலும் பிடித்து இழுத்துச் சென்றான்.
நரன் இதுவரை அந்தக் குடிசைகளை இரண்டு முறைக் கடந்து சென்றிருக்கிறான். காட்டுக்குள் போன அன்றும் இரவு திரும்பி வந்தபோதும். இரண்டு முறையும் அவற்றை கவனிக்கும் மனநிலையில் அவனில்லை. இப்போது நிதானமாகப் பார்த்தான்.
தெய்வா இருந்த குடிசையைத் தவிர இன்னும் ஐந்து குடிசைகளிருந்தன. அவளிருந்த குடிசைத் திறந்திருந்தது. உள்ளே யாருமிருப்பதாய்த் தெரியவில்லை. மற்ற ஐந்தின் வாசலிலும் கீத்துத் தட்டி வைத்து மூடப்பட்டிருந்தது.
இன்னும் விடியாததால் வேறெதுவும் தெளிவாகத் தெரியவில்லை. குடிசைகளைத் தாண்டி இன்னும் கொஞ்சம் தூரம் சென்றதும் ஆறு தென்பட்டது. ஆற்றின் அருகில் வந்ததும் நரனை அதில் பிடித்துத் தள்ளினான் சபரி.
“டேய்… எதுக்குடாத் தள்ளுற? எத்தன வாட்டி இதே ட்ரெஸ்ஸ நனச்சுக் காய வெச்சுப் போட்டுக்குறது? என்ன இங்க கூட்டிட்டு வந்து இன்னையோட நாலு நாள் ஆகுது… இல்லல்ல அஞ்சு நாளாயிடுச்சு? எத்தன நாள்டா ஆகுது? ஒரு துணி வாங்கிக் குடுக்க வக்கில்ல… காசெல்லாம் சேத்து வெச்சு என்னத்த…”
“எங்கக்கிட்டக் காசெல்லாம் அதிகம் கிடையாது. நாங்க எங்களுக்கே வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ தான் துணி எடுப்போம். இதுல உனக்குப் புதுத் துணி எடுத்துக் குடுத்து செலவுப் பண்ண முடியாது”
“அப்ப நீயும் ஒரே வேட்டியும் சட்டையும் போட்டுட்டுத் திரியுறியா?”
“எங்கிட்ட மூணு இருக்கு. மாத்தி மாத்திப் போட்டுப்பேன்”
“அவ்வளோ பழசா… இருந்தாலும் பரவாயில்ல. அதுல ஒண்ண எனக்குக் குடுக்குறது? இப்படி ஒன்ணயே போடுறதுக்கு…”
“குளிச்சுட்டு வா சீக்கிரம். சோப்பு கரையில வெச்சிருக்கேன். சோப்பே உனக்காக வாங்குனது தான்”
“எனக்காகவா? ஏன் நீயெல்லாம் இது வரைக்கும் மஞ்சத் தேச்சுக் குளிச்சியா?”
“உன் வாய் என்னைக்குதான் ஓயுதுன்னு நானும் பாக்குறேன்” என்ற சபரி சங்கிலியைப் பிடித்தபடியே தண்ணீருக்குள் இறங்கினான்.
குளித்து முடித்துக் கரையில் நின்றனர். ஆடைக் காய்ந்தப் பிறகு திரும்பி நடந்தனர். எதிரில் வந்த இரண்டு பெண்கள் ஒதுங்கிச் சென்றனர். வெளிச்சம் கூடியிருந்தது. நரன் அவர்கள் முகத்தைப் பார்த்தான். தலைக் குனிந்துச் சென்றதால் முழுவதும் பார்க்க முடியவில்லை.
குடிசைகளுக்குப் பின்னால் மரம், செடி எதுவுமில்லாத வெற்றிடமிருந்தது. ஆளுயரக் கழிகள் வரிசையாய் நடப்பட்டுக் கயிற்றால் கொடிக் கட்டியிருந்தனர். அத்தனையிலும் பெண்களின் ஆடைகள். கொஞ்சம் முன்னால் சென்றபோது ஆடைகளுக்கு நடுவேயிருந்த வெள்ளைத் துணிகள் தென்பட்டன. வெள்ளையென்று சொல்லிவிட முடியாதபடிப் பழுப்பேறிப் போயிருந்தன. துணி முழுவதும் காவி வண்ணக் கறைகள்.
நரன் திரும்பித் திரும்பி அவற்றைப் பார்த்தபடி நடந்தான். மேலும் மூன்று பெண்கள் எதிர்ப்பட்டனர். முன்னாலிருந்த கையில் மாற்றுடை இருந்தது. பின்னாலிருந்த அவர்கள் கையில் என்ன இருக்கிறதென்று அறியும் ஆவல். தாண்டிச் சென்ற பின் திரும்பிப் பார்த்தான். சுருட்டிப் பிடித்திருந்தத் துணியிலிருந்த ரத்தம் அவர்கள் விரல்களிலும் கோலம் வரைந்திருந்தது.