வானம் காணா வானவில்-9

அத்தியாயம்-9

அரவிந்தன், தனது ஆசைக்காக பொறியியலும் (கட்டிடவியல்),  தந்தையின் தொழில்களை பேணிக்காக்க முதுகலையில் மேனேஜ்மென்ட்டும் படித்திருந்தான். இதைப் பயன்படுத்தி, ‘கைண்ட் சர்வீஸ் மெயின்டனன்ஸ்’ எனும் இன்டர்நேசனல் நிறுவனத்தை துவங்கி, ஹோட்டல்ஸ், அப்பார்ட்மென்ட்ஸ், லாட்ஜஸ் இன்னும் பிற சேவைகளுக்கு என தனித்தனியாக நபர்களை நியமித்திருந்தான்.

அன்னுவல் மெயிட்டனன்ஸ் என ஒப்பந்தம் செய்து, அவற்றின் மூலம் ஒப்பந்தங்களுக்கு உட்பட்ட கட்டிடங்களில் உண்டாகும் சிறுசிறு குறைகளை அவ்வப்போது சரிசெய்து கொடுப்பதை தனது நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டு செய்து வந்தான்.

கட்டிட கட்டுமானர்கள், பிளம்பர்கள், எலக்ட்டீரியன்கள், ஆர்க்கிடெக்ட்கள், கார்பென்டர்கள், வெல்டர்கள் மற்றும் பணியாளர்கள் என கட்டிட வேலை சார்ந்த நபர்களும், பொறியாளர்கள், சைட் இன்சார்ஜ், அலுவலக மேனேஜர், அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அக்கவுண்டன்டட் என அலவலகம் சார்ந்த பணியாளர்களுமாக இந்தியாவில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு தனது நிறுவனத்தை சில நாடுகளில் நடத்தி வருகிறான்.

சவுதி அரேபியா, கனடா, அமெரிக்கா, இலண்டன், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தனது கிளைகளைத் துவங்கி வெற்றியும் கண்டிருந்தான்.

தாய், தந்தையரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த மூன்று மாதங்களாக சென்னையில் இருந்தான். தற்போது தனது நிறுவனத்தின் நிர்வாகத்தை நேரில் காணும் பொருட்டு கிளம்பியிருந்தான்.

தாய், தந்தை இருவரிடமும் கூறிக் கொண்டு கிளம்பியவனை,

“இனி இங்கதான் இருப்பனு நினச்சேன், அதுக்குள்ள பழையபடி கிளம்பிட்டியே அரவிந்த்”, நீலா தனது மகனிடம் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க,

“அம்மா, சீக்கிரமா வந்திருவேன். இங்கயும் வேல இருக்கே.  அதனால நீங்க வர்ரி பண்ணாம இருங்க. நான் எவ்வளவு சீக்கிரம் வேல முடியுதோ அவ்ளோ சீக்கிரம் சென்னை வந்திருவேன்”, என்றபடி தாயிடம் விடை பெற்றவன், தந்தையிடமும் கூறிக் கொண்டு கிளம்பினான்.

கார் டிரைவருடன் கிளம்பியவனை வீட்டில் இருந்த அனைவரும் வந்து வழியனுப்ப,

இதுவரை உணரா ஒரு நிலையை அரவிந்தன் மனம் உணர்ந்தது.  எப்பொழுதும், அலுவலக நிர்வாகம் சார்ந்த சிந்தனை தவிர, வேறு சிந்தனை இல்லாமல் கிளம்புபவன், இந்த முறை விசாலினியின் நினைவால் அவனின் முகம் புன்னகை பூசிக்கொண்டது.

‘கிளம்பும் போதே நினைவாலயே நிப்பாட்ற ஒல்லிக் குச்சி உடம்புக்காரி’, என நினைத்தவன்

எந்த விகடங்களும் தன் முன்னே நடவாத போது, தன்னவளின் நினைவால் முகத்தில் நாட்டியமாடிய புன்னகையை தனக்குள் கட்டுப்படுத்தியவாறு கிளம்பினான், அரவிந்தன்.

‘நினைவாலே சிலை செய்து உனக்காக (மனதினுள்ளே) வைத்தேன், திருக்கோவிலே ஓடி வா’, எனும் வரிகளை தன்னவளுக்காக மாற்றிப் பாடியவனுக்கு, அந்தப் பாடல் கண்முன் வந்து போனது.

சிறுவயதில் தன் தாயுடன் கேட்ட பாடலாதலால் இதுவரை அந்த வார்த்தைகள் பசுமரத்து ஆணி போல மனதில் பதிந்து போயிருந்தது.

காலம் என்ன தனக்காக வைத்திருக்கிறதோ தெரியாது.  ஆனால் என் மனம் முழுவதும் அவளின் நினைவுகளால் நிரப்பியிருக்கிறேன் என தனக்குள் நினைத்தவாறு பயணத்தை மேற்கொண்டிருந்தான், அரவிந்தன்.

மீனம்பாக்கம் சென்று காரிலிருந்து இறங்கியவன், வழக்கத்திற்கு மாறாக அதிகமான நெரிசலை அன்று உணர்ந்தான். இருப்பினும் தனது ஃபிளைட்டிற்கான நேரம் இன்னும் அதிகம் இருப்பதால் நிதானமாகவே கடந்து சென்றான்.

எப்பொழுதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லும் பழக்கம் இல்லாத அரவிந்த், இன்றும் தனது பாதையை மட்டும் நோக்கிச் செல்ல, ஊடுருவிச் செல்லும் அளவிற்கு கூட்டம் அவனை இம்சை செய்தது.

அரசியல்வாதிகள், சினிமா துறையைச் சார்ந்த யாரேனும் வந்தால் மட்டுமே இது போன்ற கூட்டங்கள் இருக்கும் என்பதை உணர்ந்தவன் ‘இவனுகளுக்கும் வேலயில்ல. இவங்க தொண்டர்படைகளுக்கும் வேலயில்ல’,என எண்ணியபடியே செல்ல

“ஹாய், அர்வி”, என்ற பெண் குரலில் திரும்பியவனை பார்த்து ‘ஹை’ சொன்னவளை சத்தியமாக அரவிந்தனின் நினைவில் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல், பார்வை இருந்தும் இல்லாதவன் போல் விழிக்க

“நீ அரவிந்த் போஸ் தான, நான் உங்கூட யூஜி படிச்ச ஸ்ருதி”, ‘ஓஹ் அந்த சகிலா ஆண்டி ஊர்ஸா’ என எண்ணியவன் தனது மனத்திரையில் அவளின் பழைய டேட்டாவை கொண்டு வந்திருந்தான்.  ஆனால் அவளின் அசரவைக்கும் அலங்காரத் தன்மை வேறு எதுவோ மனதில் சொல்ல

“ஏய், இங்க என்ன பண்ணற, நீ கேரளா தான!”,என மெதுவான குரலில் கேட்டவனை

“என்ன உனக்கு நிசமாவே தெரியலயா அர்வி?”, குரலில் ஏக்கம் டன் கணக்காய் தெரிய

“தெரியாம என்ன? நல்லா இருக்கியா, இப்போ எங்கே போகணும்”, என அரவிந்தனும் பேச

ஆச்சர்யம் எதுவும் இல்லாமல், அரவிந்தன் இயல்பாகப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாத, தற்போதைய தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் கொண்டாடப்படும் “மதன்தாரா” அரவிந்தனை மயக்க தயாராகி இருந்தாள்.

“நான் இங்க தமிழ் இண்டஸ்டீரிஸ், தெலுகு, மலையாளம் எல்லாத்துலயும் ஆக்ட் பண்ணிட்டு இருக்குறேன் என மதன் பெருமையாகக் கூற

“ஈஸ் இட், நான் மூவி எல்லாம் பாக்கறதில்ல!”,என்ற அரவிந்தனின் பகிர்தலில் மதன்தாராவின் முகம் பஞ்சர் போன டயர் போல சுறுங்கியிருந்தது.

இருந்தாலும் சினிமா உலகின் பாலினம் சாரா வரவேற்பு முறையினை அரவிந்தனிடம் ஒரு ஹக் மூலம் தெரிவித்து, மதன்தாரா அவனை விடுவிக்க பிரியம் இல்லாமல் விடுவித்திருந்தாள். அதற்குள் பல டிஜிடல் கேமிராக்கள் மதன்தாராவுடன் இருந்தவனையும் சேர்த்து படம் எடுத்திருந்தது.

‘இன்னும் கொஞ்ச நாளைக்கு இத வச்சி ஓட்டிருவானுங்க’ என அங்கொரு குரல் கேட்க, அதைக் கண்டும் காணாமல் சென்று  கொண்டிருந்த சிலர், அரவிந்தனுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே எனும் ஏக்கத்துடன் பலர் என அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.

அடுத்தடுத்த வேலைகள் இருக்கவே, அவசரமாக அவளிடம் இருந்து விடைபெற்றவனை, ‘இன்னும் அப்டியே இருக்கியேடா, உன்னய பாத்தாலே நான் ஒரு மாதிரியா ஆகிறேன். நீ மட்டும் இன்னும் மாற மாட்டிங்கற, நான் உன்ன மாத்தி காட்டறேன்! இல்லனா உன்ன கட்டறேன்!’,என எண்ணியபடி தன்னுடன் வரும் எடுபிடிகளுடன் பின் தங்கினாள், மதன்தாரா.

அரவிந்தன் தனது அடுத்த கட்ட ஃபார்மல் வேலைகளில் ஈடுபட்டு, இறுதியாக பிளைட்டில் வந்தமர்ந்திருந்தான். அமர்ந்தவன் கண்களை மூடி அமர்ந்து விட, சற்று நேரத்தில்

“அன் எக்ஸ்பெக்டட், அர்வி”, என்ற சந்தோசக் குரலைக் கேட்டவன்

“ம்”, அதற்கு மேல் எலிப்பொறிக்குள் சிக்கிய எலி போல எங்கும் எதிலும் கவனம் செல்ல முடியாமல் அவளிடமிருந்து எப்போது விடுபடலாம் என்ற எண்ணமே மேலோங்க தன் மீதே அவனுக்கு கழிவிரக்கம் உண்டாகி இருந்தது. அரவிந்தனின் காதல் நினைவுகளால், உற்சாகமாக செலவளிக்க எண்ணி இருந்த, அடுத்து வந்த இரண்டரை மணி பயண நேரத்தையும், அவனிடம் கேட்காமலேயே அபகரித்து சுவாஹா செய்திருந்தாள், மதன்தாரா.

தன்னைப் பற்றி அவள் முன்பே அறிந்திருந்தாலும், திரும்பவும் கேட்க அரவிந்தன் அவனைப் பற்றிக் கூறினான். தனது வியாபாரங்கள், தொழில்களையும், அதன் இலாபங்களையும் பற்றி பேசியவள் அடுத்து எப்போது சந்திக்கலாம் எனக்கேட்க

“உன் நம்பர் கொடு, ஃப்ரீயா இருந்தா நானே கூப்பிடறேன்”, என்றிருந்தான் அரவிந்தன்.

அரவிந்தனுடன் கோந்து போல மதன்தாரா ஒட்ட முயற்சிக்க, இயன்றவரையில் அவளின் முயற்சிகளை முறியடித்து சிங்கப்பூர் வந்திறங்கினான், அரவிந்தன்.

‘அப்பாடா’ என்ற பெருமூச்சுடன் தனது இருப்பிடம் நோக்கிக் கிளம்பினான் அரவிந்தன்.  தனது வழக்கமான இருப்பிடம் நோக்கிச் சென்று இறங்கியவன் தன்னை ரெப்ஃரெஷ் செய்து வந்து, பசிக்கு என கிடைத்ததை உண்டு அறைக்கு வந்தான்.

தனது நிர்வாக அலுவலக மேலாளரை அலைபேசியில் அழைத்து, அடுத்த நாள் காலையில் நடக்க இருக்கும் பணிகளை பற்றி கேட்டறிந்தான். பணியாளர்களின் நிறை, குறைகள் பற்றிய கருத்து கேட்பு நிகழ்வு ஒன்றினையும் ஏற்பாடு செய்ய பணித்தான்.

இறுதியாகத் தொடங்கப்பட்டிருந்த கிளையாதலால், அந்நாட்டில் இருக்கும் அசௌகரியங்களை பணியாளர்களுக்கு அகற்ற வேண்டி, அந்த சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்திருந்தான்.

கடந்த மூன்று மாதங்களாக இயங்கி வரும் பணியாளர்களின் குறைகள் சரிசெய்தால் மட்டுமே அடுத்த, தனது முயற்சியை அவனால் மேற்கொள்ள இயலும் என்பதால், முதலில் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினான்.

சந்திப்பில் கேட்க வேண்டிய கேள்விகள் மற்றும் பணியாளர்களின் கேள்விகளாக இருக்க எதிர்பார்க்கப்பட்டவற்றிற்குரிய சரியான பதில்கள் என எல்லாவற்றையும் தனது லேப்பில் பதிவு செய்து முடித்தவன் நேரம் பார்த்தான்.

இந்திய நேரம் சரியாக ஒன்பது.  ஒன்பது மணிக்கு மேல் கோடி கொடுத்தாலும் யாருக்கும் இல்லை என கடந்த இரண்டரை மாதங்களில் மனதால் ஒப்பந்தம் செய்திருந்தான். தன்னவளுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வேறு எந்த வேலையையும் இந்த அரவிந்த் செய்ய மாட்டான் என எண்ணிபடியே ஷாலினிக்கு அழைக்காமல் நேரடியாக பாட்டியை அழைத்தான்.

“ஹலோ, யாரது?”

“பாட்டி நான் அரவிந்த் பேசறேன்.  இங்க நான் பத்திரமா வந்து சேந்துட்டேன்.  அத உங்ககிட்ட சொல்லத்தான் கூப்பிட்டேன்”, மனம் உறுத்தியது, ‘எம்பூட்டு பொய்டா இன்னும் சொல்லப் போற!’

“சந்தோசம் பா. சாப்டியா?”, வாஞ்சையாக கேட்ட குரலில் தனது தாயை உணர்ந்திருந்தான்.

“இல்ல பாட்டி, ஷாலு பேச மாட்டிங்கறா. அதான் எனக்கு பசியே இல்ல!”

“அதல்லாம் பேசுவா, முதல்ல நீ சாப்புடு, அப்றம் வந்து அவகிட்ட பேசு!”

“சரி பாட்டி”,என்று அழைப்பை துண்டித்தவன், அடுத்து விசாலினிக்கு அழைக்க அழைப்பு ஆதரவு தராமல் அனாதையாகி இருக்க, உறங்கிக் கொண்டிருந்தாள், பெண்.

மீண்டும் அரைமணித் தியாலத்தில் பாட்டிக்கே அழைக்க, பாட்டி தள்ளாத வயதில், தள்ளாடி நடந்தபடியே பேத்தியின் அறைக்குச் சென்று காண, நீண்ட நாளுக்குப் பின் நித்திரா தேவியின் மடியில் சரணடைந்திருந்தவளைக் கண்டு பேரனுக்கு ‘என்ன சொல்வது!’ என யோசிக்கையில், எதிர்முனையில் இருந்தவன் கணித்துக் கேட்டான்.

“தூங்கிட்டாளா பாட்டீ”

“ஆமாயா. கொஞ்ச நாளா தூக்கமில்லாம இருந்தா. இன்னிக்கு நீ நேருல வந்து போனதுல பழையபடி ரொம்ப நாளுக்குபின்ன இன்னிக்கு தான் தூங்குறா. இல்லனா இராக் கோழி மாதிரி எழுந்து நடமாடிட்டே இருக்கும்!”, என தனது பேரனிடம் தன்னையும் அறியாமல் பேத்தியை பற்றி பேசியிருந்தார், அழகம்மாள்.

“தூங்கட்டும் பாட்டீ, நான் நாளைக்கு பேசிக்கறேன், நீங்க சாப்டீங்களா?”

“ஆச்சுபா”

“அப்ப நீங்களும் போயி நிம்மதியா தூங்குங்க, நான் நாளைக்குப் பேசறேன்”, என்றவன் படுத்தபடியே விசாலினியின் நினைவில் இருந்தவன், எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை.

———————–

அரவிந்த் சென்னையை விட்டுச் சென்ற இரண்டாவது நாள், மதிய உணவு வேளைக்கு பின் மகன் சஞ்சய் உதவியுடன் விசாலினியின் வீட்டிற்கு வந்திருந்தார், சந்திரபோஸ்.

விசாலினியைத் தவிர மற்றவர்கள் வீட்டில் இருக்க, எதிர்பாரா சந்திரபோஸின் வரவினால் அழகம்மாளே சற்றி திணறியிருந்தார்.

வந்தவர் அழகம்மாளிடம் மன்னிப்பை கோரினார்.

“எதுக்குப்பா பெரிய வார்த்தை எல்லாம், உக்காருங்க”

கற்பகத்திடம் வழமைபோல பணிகளைச் செய்ய பணித்தவர், “என்னப்பா திடீர்னு, என்ன விசயமா வந்திருக்கீங்க?”, என நேராக ‘விசயத்துக்கு வா’ என சொல்லாமல் இழுத்து வந்திருந்தார்.

“நீலவேணி மேல எந்த தப்பும் இல்ல, அவ உங்க சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னா, ஆனா நாங்க தான் அவள வேண்டாம்னு சொன்னோம்”

“நீங்க வேணாம்னு சொன்னீங்க சரி, ஆனா அவ எங்கள விட்டுக் கொடுக்கலாமா தம்பி”

“இல்ல அத்தம்மா, எல்லா விசயமும் நான் சொன்னாதான் உங்களுக்குப் புரியும், அவ எங்கப்பாக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாத்தவும், அவங்கம்மாவ பத்தி யாரும் எதுவும் பேசிறக் கூடாதுனும் தான் இன்னிக்கு வர ஊமயா தனக்குள்ள எல்லாத்தையும் வச்சி மருகி மருகி அழறா”

“என்னப்பா என்னன்னமோ சொல்லுறீங்க!”, என்ற அழகம்மாளிடம், கருணாகரனுடன் கிளம்பி தான் வேலூர் வந்தது முதல் கூற ஆரம்பித்தார், சந்திரபோஸ்.

சந்திரபோஸை வரவேற்க வந்த கிருபாகரனும் அங்கு ஹாலில் அமர்ந்திட, சஞ்சயும் உடன் அமர்ந்தபடியே சந்திரபோஸ் கூறுவதைக் கேட்டிருந்தனர்.

——————————————

சந்திரபோஸ், தனது தந்தை போஸ் அவர்களின் வற்புறுத்தலின் பேரில், தனது நண்பர்களுடன் வேலூர் வந்திருந்தார்.  அதாவது, அங்கு வியாபாரம் துவங்கலாம் என இருப்பதாக கூறி, வேலூரின் தற்போதைய நிலவரம் அறிந்து வர மகனைப் பணித்திருந்தார், போஸ்.

சிறுவயது முதல் நல்ல ஆகாரமும், போதிய வளமும் இருந்த காரணத்தினால் காண்பவர்கள் யாரும் சிறுபையனாக எண்ணமுடியாத அளவிற்கு உருவத்தால் பெரியவனாக தோற்றமளித்திருந்தார், சந்திரபோஸ்.

கல்வியிலும் சிறந்து விளங்கியதால் சின்ன வகுப்புகள் படிக்கும் போது டபுள் புரொமோசன் இரண்டு முறை தந்திருக்க பதினேழு வயதில் கல்லூரியில் படிக்க வந்திருந்தார், சந்திரபோஸ்.  இளைஞனுக்கு உண்டான தனது தோற்றத்தால் தந்தையின் மதராஸ் வியாபாரங்களை சில நேரங்களில் பாத்திருந்த அனுபவம் இருந்தது.  அதனை உத்தேசித்து புது தொழில் தொடங்க ஏதுவாக சூழல், இடம் அமையுமா என பார்த்து வர தந்தை போஸ் பணிக்க, சந்திரபோஸும் கருணாகரனுடன் வேலூர் வந்திருந்தார்.

வந்த இடத்தில் கருணாகரன் வீட்டில் பார்த்த நீலவேணியை எங்கோ பார்த்தது போல இருக்க, வந்திருந்த நாட்களில் அதுபற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தார், சந்திரபோஸ்.

நீலவேணியை அணுகி பேச சந்திரு எண்ண, ஆனால் வேணி அதற்கு இடம் கொடுக்காத நிலையில், பேப்பரில் ‘உங்களிடம் தனியே பேச வேண்டும்’, என ஹிந்தி + இங்கிலீஸ் = ஹிங்கிலீஸில் எழுதிக் கொடுத்தார்.

அதோடு நிற்காமல் அடுத்த கட்ட பேச்சுக்களும் பெரும்பாலும் ஹிந்தியில் இருக்க கீழே கிடந்த தவறிய பேப்பர்களும், நீலாவின் பாட்டியின் உபயத்தால் ‘இதுல என்ன எழுதிருக்குனு பாரு’, என நீலாவின் கைகளுக்கே வர, சந்துருவிற்கு எந்த சுணக்கமும் இல்லாமல் வேலை நடந்தது.

முதலில் சந்திரபோஸின் வார்த்தைகளை வேணி ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை.  சந்திரபோஸ் மதராஸ் திரும்பியிருக்க, அங்கு தனது தந்தையிடம் விடயத்தைப் பகிர்ந்து கொண்டார்.  அதாவது தனது வீட்டில் ஹாலில் மாட்டியிருக்கும் நீலம் அத்தையைப் போன்ற தோற்றமுடைய பெண்ணை, வேலூரில் தனது நண்பனின் வீட்டில் சந்தித்ததாகக் கூறினார்.

மகிழ்ந்து போன போஸ், உடனே தனது பணபலத்தால் வேலூரில் இடம் வாங்கி, அங்கு பத்திரப் பதிவுகளுக்குப் பின் விடுதி ஒன்றைக் கட்டி, அதனை மருத்துவமனைக்கு தனியொரு நபராக வந்து துன்புறும் பெண்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் தரத்துடன் கூடிய விடுதியாக இருக்கும்படி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அப்போது, வேணி அங்குள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.  கருணா மற்றும் கிருபா இருவரும் சென்னையில் பயின்று கொண்டிருந்தனர்.  சந்திரபோஸ் மற்றும் போஸ் இருவரும் கல்லூரிக்கே நேரில் சென்று பார்க்க, போஸ் ‘அது தன் தங்கை மகளே தான்’ என மகிழ்ந்திருந்தார்.

பார்வதி அம்மாள் பெரும்பாலும், வேணியை கல்லூரிக்கு அழைத்துச் சென்று விட்டு, பிறகு கூட்டி வரும் பணியை மேற்கொண்டிருந்தார்.  ஆதலால், போஸ் மற்றும் சந்துரு இருவரும், அந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் வேணியை நேரில் காண முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, மதிய உணவு இடைவேளைக்கு முன், விடப்படும் பிரேக்கில் சென்று இருவரும் காண, போஸின் வயதை மதித்து அவர் கேட்டவற்றிற்கு பதில் சொன்னாள், வேணி.

அது வரை விடயம் எதுவும் தெரியாமல் வளர்ந்தவளுக்கு, கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட மாணவர்களுக்கிடையேயான சச்சரவினை சரி செய்ய வந்திருந்த, போலீஸ் இவளிடம் விபரத்தைப் பகிர்ந்திருக்க, அதே சமயத்தில் போஸூம் தனது தங்கையின் புகைப்படத்துடன் வந்து நேரில் பேச குழப்பத்திற்கு ஆளாகியிருந்தாள் பெண்.

அதன்பின் அடிக்கடி வந்து தங்கையின் மகளை நேரில் பார்த்து பேசிவிட்டுச் சென்றார், போஸ். தங்கையின் மகளைக் கண்டதில் பேரானந்தம் உண்டாகியிருந்தது.

அதன்பின், போஸின் வழிகாட்டுதலால், முதுகலை படிக்க தனது வீட்டில் ஆர்வம் தெரிவித்தாள், வேணி. அதன்பின் போஸின் வழிகாட்டுதலின்  பேரில் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள் வேணி.

நண்பன் சந்துருவை நம்பி, தனது அக்கா வேணி சார்ந்த சில பணிகளை கருணாகரன்  சந்துருவிடம் ஒப்படைத்தார். அவர்களின் சூட்சுமங்கள் தெரியாமலேயே விடயங்கள் படிப்படியாக நடந்தேறியது.

முதுகலை முடிக்க ஆறு மாதத்திற்கு முன்பே, தனது மகனை திருமணம் செய்ய வற்புறுத்தினார், போஸ்.  ‘தன்னை வளர்த்தவர்களை அவமதிக்க ஒருநாளும் இடம் கொடுக்க மாட்டேன். விருப்பம் இருந்தால் எங்கள் வீட்டில் வந்து பொண்ணு கேளுங்கள்’ என்றாள், வேணி. வீட்டில் வந்து பெண் கேட்பதால் உண்டாகும் இடர்பாடுகளை, தங்கை மகளிடம் எடுத்துக் கூறினார், போஸ்.

அதாவது, தனது மகனுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை.  ஆகையால் ஏதேனும் போலீஸ் பிரச்சனை என்று வரும் நிலையில் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழல் வரும்.

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நீலத்தைப் பற்றி போலீஸில் எந்த புகாரும் கொடுக்காதபோது, வேணியின் வீட்டில் சென்று தனது தங்கையின் மகள் என்று வேணியை உரிமை கொண்டாட இயலாது.

எந்தக் குடும்பத்திலும் அப்பொழுது கலப்பு மணங்களை ஆதரித்திராத காலம். வேணியை தனது மகனுக்கு பெண் கேட்கும் பட்சத்தில், எதிர்பாராமல் உண்டாகும் இடர்பாடுகளால் பிரச்சனை வந்தால், முடிவில் தனது தங்கையைப் பற்றி கூற வேண்டிய நிலை வரும்.

மேலும், இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவரும் காலத்தில், தமிழ்நாட்டுப் பொண்ணை இந்தி பேசும் ஒருவன் மணமுடிக்க கேட்டான் என அன்றைய அரசியல்வாதிகள் திரித்து பிரச்சனையை பெரிது செய்து விடுவார்கள் என்று கூறினார்.

தனது தாயின் புகைப்படத்தைக் காட்டிப் பேசலாம் என வேணி கூற

தனது தங்கையின் கடந்து போன வாழ்க்கையை பற்றி போஸ் தனது வருங்கால மருமகளிடம் பகிர்ந்து கொண்டார்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்,

போஸ், மாதுரி தம்பதிகளுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவு ஆகியிருந்தது.  தனது வியாபாரத்தை, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தனியொருவராக மதராஸில் ஆரம்பித்து, ஸ்திரப்படுத்திருந்தார், போஸ்.

தாய், தந்தை , தங்கை, மூவரும் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்க, இவர் மட்டும் தனது மனைவியுடன் தனது வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

போஸின் தங்கை, நீலம் தீட்சித் திருமணமாகி தனது கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்தமைக்கு சாட்சியாக, அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.  அவளுக்கு ரூபா தீட்சித் எனப் பெயரிட்டனர்.  ரூபா அசப்பில் தனது தாயைக் கொண்டிருந்தாள்.

ரூபாவிற்கு ஒன்னேகால் வயது இருக்கும் போது, அவர்களின் மகிழ்வான வாழ்வில், இடர் உண்டாகி அவளது கணவருக்கு திடீரென கால்களில் நடமாட்டம் இல்லாமல் போனது.  அதை தனது தமையனுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தாள், நீலம்.

அதையறிந்த போஸ், மதராஸ் அருகில் இருக்கும் வேலூர் எனுமிடத்தில் வைத்தியம் நல்லபடியாக பார்ப்பதாக கேட்டறிந்து, தங்கையின் குடும்பத்தை மதராஸிற்கு அழைத்து வந்தார்.

மதராஸில் இருந்து சுமார் 90 கிமீ தொலைவில் இருக்கும், வேலூருக்கு தங்கையுடன் அவளது கணவர் மற்றும் குழந்தையையும் அழைத்து வந்தார். தனது விடாத முயற்சியால் ஒரு வாரத்திற்கு பின், தங்கையின் கணவனை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.

இரவில் ஆண்கள் அம்மருத்துவமனையில் தங்க அனுமதி இல்லை.  நோயாளியின் உதவிக்கு பெண்கள் மட்டுமே அம் மருத்துவமனையில் இரவில் தங்கிக் கொள்ளலாம்.  ஆகையால் பஸ் நிறுத்துமிடங்களில் போஸ் இரவில் தங்கிக் கொள்வார்.  பகலில் தங்கைக்கு உதவியாக குழந்தையை வைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருப்பார்.

வந்து பத்து நாட்களில் அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டு, வெளியில் தங்கிக் கொள்ளுமாறும், எந்த நாட்களில் எல்லாம் வந்து மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற முன் அனுமதியிட்ட அட்டையின் வழியை பின்பற்றி, அந்த நாட்களில் நோயாளியை நேரில் வந்து காண்பிக்குமாறு, மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

டிஸ்சார்ஸ் ஆன பின்பு,வெளியில் தங்க ஏதுவான இடம் தேடி போஸ் அலைய, எதுவும் பாதுகாப்பில்லாமல் இருப்பது போல் தோன்றியது.  இருப்பினும் தான் இருக்கும் தைரியத்தில் ஒரு சுமாரான சிறிய அளவிலான தங்கும் விடுதியில் தங்கை, தங்கையின் கணவர், மற்றும் குழந்தையுடன் போஸூம் உதவிக்கு இருந்தார்.

உடனடியாக எந்த முன்னேற்றமும் தங்கையின் கணவருக்கு வரும் வாய்ப்புகள் இல்லாமல் போக, தனது வியாபாரங்களை ஒரு மாதத்திற்கு மேல் கவனிக்காமல் விட்டதை எண்ணி, தங்கையிடம் ‘நீலம், நான் ஒரு முறை மதராஸ் போயிட்டு, உன் அண்ணியை பார்த்து விட்டு வருகிறேன். கொஞ்சம் மருத்துவ செலவிற்கு பணமும் தேவைப்படுவதால் வரும் போது எடுத்து வரலாம் என நினைக்கிறேன்’, என்றவர் மதராஸிற்கு கிளம்பிவிட்டார்.

மதராஸ் செல்லுமுன், தனது தங்கையின் பாதுகாப்பு கருதி அங்குள்ள தனக்கு நம்பிக்கையானவர்களிடம் தனது தங்கையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றிருந்தார்.  ஒரு வாரம் சென்றிருக்க, மீண்டும் நீலத்தின் கணவரை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் கூற கணவனை அங்கு சேர்த்திருந்தாள், நீலம்.

மதராஸ் சென்ற அண்ணனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு தினசரி ஏமாற்றமாகவே இருக்க, நோயாளி கணவனை கவனித்துக் கொண்டு, குழந்தையையும் வைத்து சமாளிக்க முடியாமல் திணறினாள், பெண்.

இதற்கிடையில் ஒரு நாள், தனது குழந்தையைக் காணவில்லை என இவர்கள் தங்கியிருந்த விடுதி அருகில், தன் அண்ணனின் நம்பிக்கைக்கு பாத்திரமான நபரை அணுகி வினவ, அதுவே நீலத்தை கடைசியாக சந்தித்தது, என போஸிடம் கூறியிருந்தார், அந்த நபர்.

மதராஸில் இருந்து வந்த போஸ், தனது தங்கையை காணாமல் தேட எங்கும் அவளைக் காணவில்லை. அதன் பின் மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த தங்கையின் கணவரைக் கண்டு சந்தோசம் மீண்டிருந்தது, போஸிற்கு.  ஆனால் நீலம் பற்றி அவருக்கும் ஒன்றுமே தெரியவில்லை எனவும் கூற போஸ் குழம்பியிருந்தார். குழந்தையை தேடி வந்தவள் எங்கு சென்றிருப்பாள் என மதராஸ் சென்று பார்க்க கிளம்பினார். அங்கும் வராத தனது தங்கையைத் தேடி வேலூருக்கே திரும்பியிருந்தார், போஸ்.

மருத்துவமனை அருகில் இருந்தவர்களை விசாரிக்க, குதிரை வண்டியில் கடைசியாக நீலம் ஏறிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.  குதிரை வண்டி வைத்திருந்தவர்களிடம் விசாரித்ததில் யாரோ ஒருவனுடன் வேலூர் கண்டோண்ட்மென்டில் இறக்கிவிட்டதாகக் கூற, அதற்கு மேல் தங்கையை பற்றி விசாரிக்க பிடிக்காமல் மதராஸ் திரும்பியிருந்தார், போஸ்.

அதற்கு முன் தங்கை கணவரை அவரின் உறவினர்களை உத்திரப்பிரதேசத்தில் இருந்து வரவழைத்து ஒப்படைத்து விட்டு மதராஸ் வந்தவருக்கு, தனது தங்கையைப் பற்றித் தெரிந்திருந்தாலும் போலீஸில் புகார் கொடுக்க மனம் இடங்கொடுக்கவில்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமாதலால், வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு சரியான நியாயம் கிடைக்குமாறு, போலீஸ் துறையில் பணிகள் நடக்குமா என்ற ஐயம் ஒரு புறம், தனது தங்கைக்கு ஏதேனும் அவப்பெயர் நேரிடும் படியான எதயும் செய்யும் மனதிடம் இல்லாமல் இருந்துவிட்டார். போஸ்.

ஆனால் தான் தனக்கு நம்பிக்கையானவர்களைக் கொண்டு அவர்களின் உதவியுடன் தங்கையை தேடியபடியே இருந்தார்.

அதற்கிடையே தனது வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பின் மூன்று ஆண்டுகள் சென்றிருந்தது. தனது மகன் சந்திரபோஸ் பிறக்க போஸின் வறண்ட மனநிலையில் சற்றே மகிழ்ச்சியும் வந்திருந்தது.

சந்திரபோஸ் இரண்டாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் அவர்களின் வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் வர, பிரித்துப் படித்தவர் அதற்கு மேல் அவரால் அந்த கடிதத்தின் வார்த்தைகளைப் படிக்க முடியாமல் அப்படியே கிழித்து எறிந்து விட்டார்.

கடிதத்தில் இருந்ததை வேணியிடம் கூறும் முன், ‘உன்னை வளர்த்தவர்களே ஆனாலும், உனக்கு நியாயம் கிடைக்க என் தங்கையின் பழைய கதையை யாருடனும் நீ பகிர்ந்து கொள்ளக் கூடாது. இதை யாரிடமும் கூறமாட்டேன் என உன்னைப் பெற்றவளின் மீது சத்தியம் செய்’ என சத்தியம் வாங்கிக் கொண்டு கூற ஆறம்பித்திருந்தார், போஸ்.

அதாவது சுருக்கமான செய்தி என்னவெனில், ‘தனது கணவரை மருத்துவமனையில் அனுமதித்த போது, குழந்தை காணாமல் போயிருக்க அதைச் தேடி அலைந்திருந்தேன்’. எங்கு தேடியும் குழந்தையைக் காணவில்லை. குழந்தை காணாமல் போனதில் அதை தனது கணவரிடம் கூட தெரிவிக்க தோன்றாமல் அப்படியே தெருக்களின் வழியே விசாரித்தபடியே தேடினாள், நீலம்.

அப்போது குதிரை வண்டிகள் நிற்கும் இடத்தில், குழந்தை பற்றி விசாரிக்க, குழந்தை வேண்டுமெனில் ‘என்னுடன் குதிரை வண்டியில் வா’, என ஒருவன் அழைக்க, அவனுடன் கிளம்பியதாகவும் எழுதியிருந்தாள். ‘பயணம் குதிரை வண்டியில் இருந்து புகைவண்டிக்கு மாறியும், எனது குழந்தையை கண்ணில் காட்டவில்லை.  கடைசியில் என்னை புதைகுழியில் தள்ளிவிட்டான். குழந்தையுடன் இவன் வருகிறான் என்று கூறியே ஒரு நாளைக்கு பத்து பேர்களுக்கும் மேல், தினசரி என்னைக் காண வந்து போகிறார்கள். எனது விருப்பம் இல்லாமலே என்னை களவாடியும் செல்கிறார்கள். என் குழந்தை உன்னிடம் கிடைத்தால் தயவு செய்து அவளை உன் பொறுப்பில், வளர்த்து உன் பிள்ளைகளில் யாருக்கேனும் மணமுடித்து உன் அருகாமையிலேயே வைத்துப் பார்த்துக் கொள், என்னைத் தேடாதே. என் உயிர் போய் பல வருடம் ஆகிவிட்டது. இது வெறும் உடல். உடல் வேண்டி வரும் பருந்துகள் தின்று இரையாகிய உடலை இனித் தேடாதே. எனக்கும் ஏதோ வியாதி என்று அவ்வப்போது மருந்து மாத்திரை தந்து படுக்கையில் இருக்கிறேன். மரணம் எனக்கு விரைவில் வர இறைவனை வேண்டிக் கொள்.

ஆரம்பத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் கடிதம் எழுதினேன்.  ஆனால் வருடங்கள் ஆகியும் என்னை அழைத்துப் போக நீ வராததால், கடைசி முயற்சியாக இதை எழுதுகிறேன்.

இது கிடைத்தால் என்னைப் பற்றிய உண்மையை நீ அறிவாய். இல்லையெனில் அறியப்படாத ரகசியங்களுடன் என வாழ்வு நிறைவுறும்’ எனும் தனது தாயின் இறுதிக் கடிதச் செய்தியை மாமன் கூறக் கேட்டவள், கதறியிருந்தாள் வேணி.

தாயைப் பற்றிய தேடலில், ‘எவருடனோ போனதாக சொல்லப்பட்ட தாயிக்கு களங்கம் தரும் செய்தியை’யே தன்னால் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதை யாருடனும் பகிர்ந்து கொள்ளும் மனதிடம் வேணிக்கும் இல்லை.  போஸ் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இல்லை.

அதன்பின் எதையும் மறுக்காமல் போஸ் கூறியபடி, தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு கடிதம் எழுதினாள், வேணி. அதைப் போஸ்ட் செய்துவிட்டு தனியே அழ,

அதைப் பார்த்த போஸ்,

“நீ இப்ப சந்துருவ கல்யாணம் பண்ணிக்கோ, இன்னும் ஆறு ஏழு மாசம் ஆகிட்டா அவனுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிறும், அதுக்குப்பின்ன உங்க அம்மா, அப்பா, பாட்டி, தம்பிகள போயி பாக்கலாம்” என்று கூற

வேணியின் முகத்தில் சற்று மலர்ச்சி வந்திருந்தது.  அதன்பின் ஏழு மாதங்கள் கடந்து வேலூருக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றமே. அதற்குள் பார்வதி அம்மாளின் விருப்பத்திற்கு இணங்க குடும்பமே நாமக்கல்லுக்கு இடம் பெயர்ந்திருந்து. இடையில் தொழில் விடயமாக வந்திருந்தபோது நீலவேணியை வளர்த்த குடும்பத்தைக் கவனிக்க தவறிய சந்திரபோஸ் மிகவும் வருந்தினார்.  போஸும் மிகவும் வருந்தினார். அவர்களது குடும்பத்தை பற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோதும் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

தனக்குள் நத்தை போல சுருண்டு போனவளை, என்ன செய்தும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாமல் போனது. திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் குடும்பமே கவலை கொண்டிருந்தது.

போஸ் தனது மருமகளின் கல்வித் தகுதியை எண்ணி, அவளுக்கு தன்னால் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த நினைத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக் கூடம் ஒன்றை ஆரம்பித்து, நீலவேணியை அதற்கு பொறுப்பாளராக்கியிருந்தார், போஸ்.

அதன்பின் படிப்படியாக மீண்டிருந்தார், நீலவேணி.  ஆனாலும் திருமணம் ஆகி இருபது ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்க, அதன்பின் மகன், மருமகளுடன் மும்பை சென்று அவர்களுக்கு குழந்தை பேற்றிற்காக மருத்துவம் பார்த்தார்.

அதன் பிறகே, அரவிந்த், சஞ்சய் இருவரும் பிறந்தார்கள்.  அவர்களின் வரவிற்கு பிறகே பழையபடி வேணி மாறியதாக சந்திரபோஸ் கூறி முடிக்க, அனைவரது கண்களிலும் கண்ணீர்.

“இத இப்பவும் சொல்லலனா, அவ பாட்டி மாதிரியே நீங்களும் அவள நம்பிக்கைத் துரோகின்னு நினைச்சுக்குவீங்கனு தான், நான் நேரில வந்தேன். எங்க எல்லாரையும் நீங்க மன்னிச்சுருங்க”, என்றபடி எழுந்திருந்தார், சந்திரபோஸ்.

முந்தானையை வாயில் வைத்து தனது அழுகையை அடக்கிய அழகம்மாள்,

“எங்க பொடிசி, அதான் உங்க மருமக அன்னிக்கே சொன்னா, உங்க பக்க நியாத்த மட்டுமே பேசுறீங்க, அத்தைகிட்ட கேட்டாதானே தெரியும், அவங்க பக்க நியாயம் என்னனு, இப்டி இருக்கும்னு நான் நினைக்கலயே”, என பொங்கி அழுதார்.

அனைவரது கண்களும் இரத்தம் போல் சிவந்திருக்க,

“எல்லாத்துக்கும் தண்ணீர் கொண்டு வா கற்பகம்”, என மருமகளை அழைத்தார் அழகம்மாள்.

தண்ணீர் குடித்து மனநிலையை சரிசெய்தவர்கள், நிதானமாக சற்று நேரம் அமர்ந்திருந்தனர்.

“மெதுவா பேரன் பேத்திக்கு கல்யாணம் பேசுவோம். எங்க வேணிக்கு நீங்க இங்க வந்து சொன்ன எதுவும் தெரிய வேணாம்”, என அழகம்மாள் கூற

“சரி அத்தம்மா, இப்ப நான் ஸ்கூல் போறதா சொல்லிட்டு இங்க வந்தேன். கிளம்பறேன்”, என்றபடி சந்திரபோஸ், சஞ்சய் இருவரும் கிளம்பியிருக்க

மனக்குமுறல்களும், போராட்டங்களுமாக ஆளுக்கொருபுறம் அமர்ந்திருந்தனர்.

மாலையில் வீடு திரும்பியவள், வீட்டின் மாறுதல்களைக் கண்டு யாரிடமும் எதுவும் பேசாமல் தனது லேப்பில் அமர்ந்து ஆன்லைன் நியூஸ் பார்த்தாள், விசாலினி. அடுத்தடுத்து தனது விருப்பங்களுக்கு ஏற்ப திரைகளை மாற்றியவாறு, வாசித்தாள், யோசித்தாள்.

அடுத்து எதேச்சையாக மாற்றிய திரையில் வந்த புகைப்படம் மற்றும் அதன் மேல் இருந்த செய்தியைக் கண்ட கண்கள், ‘வார்த்தைகளை வாசிக்க ஒரு நிமிசம்’ என தன்னிடம் அனுமதி கேட்க

திரையில் இருந்த புகைப்படம் மற்றும் அதில் இருந்த செய்தி இரண்டையும் பார்த்தவளுக்கு, முதலில் தோன்றிதெல்லாம் இது தான்.

‘அடப்பாவி’

அதன்பின் வாயைத் திறந்து குறைந்த வால்யூமில் அரவிந்தனை வார்த்தைகளால் வசைபாடியபடியே

“கொஞ்ச நாள் பேசல! அதுக்கு என்ன காண்டாக்க புது ஆளு தேடுவியாடா!!

பிஸினெஸ் பாக்கறாராம்!

பிஸிக்கல பாத்து ஏமாந்தவனெல்லாம் உங்க ஊருல பிஸினெஸ் மேனாடா!

எந்த ஊரு நியாயம்டா இது. ரெண்டு மூனு தடவ பேசலனா வேற ஒருத்தி பின்ன போவியாடா!

எங்க உன்ன விட்ருவனாக்கும். உன்ன நேருல வந்து பேஸ்கட்பால் ஆடறேன். யாரு கோல் போடறானு பாக்கறேன்.

பெரிய்ய்யய… அத்தானாம்.!

போடாஆ.. சைத்தான்…!

மதன்தாரா. மயக்க வாரானு பேர பாரு.

எங்கிட்டு இருந்து தான் கிளம்புங்களோ!

என் ஆவிய வாங்க வந்த மதனா! பதமா எங்கிட்ட இல்லனா நீ பங்சர் தாண்டி!

மாத்ருபூதம்ட்ட முதல்ல மச்சிய கூட்டிட்டு போயி, தாராவா அவ… அவள அவரு மனச விட்டு விரட்டணும்.

இனி என்னத்தவிர அவரு நினப்புல வேற யாரும் வராம இருக்க என்ன செய்யணும்னு கேக்கணும்!

மாத்ருபூதம் இப்ப உசிரோட இருக்காரா, இல்ல பூதமா ஆகிட்டாரான்னு தெரியலயே! ”,  என அரவிந்தனின் மேல் கொண்ட அதீத ஈர்ப்பினாள், புலம்பியவாறே அரவிந்தனுக்கு அழைத்திருந்தாள், விசாலினி.

அரவிந்தன் எடுக்கும் வரை விசாலினியின் அர்ச்சனைகள் தொடரும்.

————————

error: Content is protected !!