மேக்னா சொன்ன வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் சித்தார்த் இன்னமும் அதிர்ச்சியாகிய நிலையிலேயே நின்றான்.

“நீ..நீ என்ன சொல்லுற மேக்னா? இது எல்லாம் உண்மையா? ஆனால் நீ உன்னோட டைரியில் அந்த தனபாலன் தான் கொலையை செய்ததாக எழுதியிருந்தாயே! இப்போ இப்படி சொல்லுற? இதில் எது உண்மை?” சித்தார்த் அவள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் அவளைப் பார்த்து வினவ

அவனைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்து கொண்டவள்
“அந்த டைரியில் இருந்தது எல்லாம் உண்மை ஆனால் இறுதியாக இருந்த விஷயம் அதில் ஒரு சிறிய மாற்றம் இருக்கு இன்ஸ்பெக்டர் சார்” என்று கூறவும்

அவனோ
“மாற்றமா?” அவளை குழப்பமாக பார்த்துக் கொண்டே கேட்டான்.

“ஆமா இன்ஸ்பெக்டர் சார்! மாற்றம் தான் நான் உங்க கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன் அது என்னன்னு சொல்லுறேன் அதற்கு முன்னாடி நீங்க ஒரேயொரு விடயத்தை மட்டும் என் கிட்ட சொல்லுங்க என் டைரியைப் படிக்கும்போது உங்களுக்கு அந்த சுதர்சனின் நடவடிக்கைகளில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியலையா?”

“என்ன வித்தியாசம்? அவன் பணத்தை தந்து விட்டு உன்னை எதுவும் செய்யாமல் விட்டதா?”

“ஆமா! அதேதான் இந்த வழக்கிற்கான விசாரணை கோர்ட்டில் நடக்கும் போது அந்த தனபாலன் நான் பண்ணுன தப்பெல்லாம் எல்லோருக்கும் முன்னிலையில் சத்தம் போட்டு சொன்னான் ஆனால் அந்த சுதர்சன் நான் அவனை கடத்தியது பற்றியோ பணம் வாங்கியதைப் பற்றியோ எதுவும் சொல்லவே இல்லை அதை நீங்கள் கவனித்தீர்களா?” மேக்னா அவனை கேள்வியாக நோக்க சித்தார்த் அவளைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தான்.

“அந்த சுதர்சன் இந்த விடயத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்ததற்கு காரணம் அது எல்லாமே அந்த தனபாலனோட திட்டம்! அதனால்தான் அவன் அதைப் பற்றி வாயே திறக்கலை!”

“என்ன அது தனபாலனோட திட்டமா? மேக்னா நீ என்ன சொல்லுற?” அவள் கூறியதை எல்லாம் கேட்டு சித்தார்த் மேலும் குழம்பி போய் நின்றான்.

“நான் எல்லாவற்றையும் சொல்லுறேன் இன்ஸ்பெக்டர் சார் அதுக்கு அப்புறமும் உங்க மனதில் என் மேலே இப்போ இருக்கும் அதே அபிப்பிராயம் இருக்கான்னு பாருங்க” என்றவள் தன் மனதிற்குள் அவனிடம் இத்தனை நாளாக சொல்ல காத்திருந்த விடயங்களை எல்லாம் சொல்ல தொடங்கினாள்.

மேக்னா நர்மதாவை ஆசிரமத்தில் சேர்த்து சிறிது நாட்கள் கடந்து இருந்த நிலையில் தனபாலனைக் கொல்வதற்காக திட்டம் போட்டிருந்த நாளுக்கு முதல் நாள் வழக்கம் போல தனது வேலைக்கு சென்றவள் தனபாலன் அவரது அலுவலகத்தில் இல்லாததை பார்த்து விட்டு அவர் எங்கே இருப்பார் என்று சுற்றிலும் தேடத் தொடங்கினாள்.

அப்போதுதான் அவள் கண்களில் அந்த அலுவலக கட்டடத்தில் இருந்து சற்று தள்ளி இருந்த தோட்டத்தில் தனபாலனும், சுதர்சனும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது பட்டது.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டவள் அவர்கள் இருவரும் கவனிக்காத வண்ணம் அங்கிருந்த புதர் மறைவில் சென்று அமர்ந்து கொண்டு அவர்கள் பேசுவதை கேட்கலானாள்.

“என்ன தனபாலன் தொழிலுக்காக மேக்னா தன்னுடைய தங்கையையே ஊரைவிட்டு கடத்திட்டா போல இருக்கு அவளை பார்த்தால் சாதாரண பொண்ணு மாதிரி இல்லையே?! உனக்கு அவளைப் பார்த்து பயமாக இல்லையா?” சுதர்சனின் கேள்விக்கு வாய்விட்டு சிரித்த தனபாலன்

“அவளை பார்த்து எனக்கு பயமா? நல்ல காமெடி அவ ஒன்னும் சாதாரணமான பொண்ணு இல்லை தான் அதனால் தான் நான் அவளை என்னோடு வேலைக்கு வைத்து இருக்கேன் அவள் பார்க்கத்தான் அமைதி ஆனா ரொம்ப புத்திசாலி அந்த புத்திசாலித்தனம் தான் நம்ம வேலைக்கு மூலதனம் அந்த ராணி அவ ஆசிரமத்தில் இருந்து குழந்தைகளை எல்லாம் எனக்கு தராமல் காப்பாற்றேன்னு ஊரைவிட்டே ஓடினால் இல்லையா? அதற்கு பழி வாங்க தான் அவளோட மகள் மாதிரி இருந்த இந்த மேக்னாவை நான் என்கிட்ட சிக்க வைத்தேன்

தன் கிட்ட இருக்கும் பசங்க எல்லாரையும் காப்பாற்றிட்டேன்னு அந்த ராணி நிம்மதியாக இருப்பா ஆனால் அவளுக்கு தெரியாது அவ பொண்ணு இப்போ என் கிட்ட சிக்கி இருக்கும் விஷயம் அவ முன்னாடி இவளை நிறுத்தி உன் பொண்ணு இப்போ என் கையில்ன்னு சொல்லி அவ துடிதுடித்து போறதை நான் பாக்கணும் அதற்காகத்தான் இது எல்லாம்!” என்று கூற அதைக் கேட்ட மேக்னாவோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

‘என்னை சுற்றி இவர்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்களா? இது எனக்கு தெரியவே இல்லையே!’ தன்னை சுற்றி இத்தனை காலமாக சூழப்பட்ட இந்த சூழ்ச்சி வலையைப் பற்றி அறியாமல் போன தன் அறியாமையை எண்ணி தலையில் கை வைத்துக் கொண்டவள் அவர்கள் இன்னமும் பேச அதையும் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினாள்.

“அது எல்லாம் சரி தான் தனபாலன் ஆனா அவளுக்கு எதற்காக ஒரு அம்மா அப்பாவை செட் பண்ணி வைத்த? நான் அப்போவே இதைப் பற்றி கேட்டேன் நீ சொல்லவே இல்லை”

“அவளை என்கிட்டே வர வைக்கத் தான் நான் இதெல்லாம் பண்ணேன் அந்த வயதானவர்களை அவள் போற இடத்திற்கு போய் நடிக்க வைத்ததே பணத்திற்காக அவ என்னை தேடி வருவா அதை வைத்து அவளை என் வலையில் சிக்க வைக்கலாம்னு ஆனால் உன் நேரம் நீ மாட்டிக்கிட்ட! அவ எப்படி உன்னை கடத்துனான்னு கூட என்னால் கண்டு பிடிக்க முடியாமல் போச்சு அப்போது தான் அவ புத்திசாலித்தனம் எனக்கு தெரிய வந்தது அது தான் நான் அவ மேல் எந்த கம்ப்ளெயிண்ட்டும் கொடுக்க வேண்டாம்னு உன் கிட்ட சொன்னேன்

அதுற்கு அப்புறமா அவளை எப்படி என் கிட்ட வர வைக்கிறதுன்னு யோசிக்கும்போது தான் என் தம்பி எனக்கு அந்த சின்னப்பொண்ணு மூலமா ஒரு வழியை காண்பித்தான் எப்படியோ அவளை என் வலையில் சிக்க வைத்து விட்டேன் எனக்கு அது போதும்! ஆனால் அவளை நம்ப வைக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட அதிகமாக நடிக்க வேண்டியதாக போச்சு” தன் கையிலிருந்த மது கோப்பையை வாயில் கவிழ்த்து கொண்டு சிரித்தபடியே தனபாலன் கூற அவர் கூறியதை எல்லாம் கேட்டு மேக்னாவின் கண்கள் கோபத்தால் சிவந்து போனது.

இத்தனை காலமாக அம்மா, அப்பா என்று பார்த்துக் கொண்டு வந்தவர்களும் தனபாலனின் ஆட்கள் தான் என்று தெரிந்ததும் தன்னைத்தானே எண்ணி அவள் கோபம் கொண்டாள்.

தன்னை சுற்றி நடக்கும், நடந்த இத்தனை பெரிய விடயங்களை தெரியாமலே தான் இருக்கிறோம் என்று எண்ணி அவளுக்கு அவள் மேலேயே எல்லை இல்லாத கோபம் வந்தது.

அப்போதே அவர்களை எல்லாம் கொன்று போடும் அளவிற்கு கோபம் வந்தாலும் தன் கைகளையும் மனதையும் அடக்கி கொண்டவள் தன் அலுவலக அறைக்குள் வந்து தன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

இத்தனை பெரிய துரோகம் செய்த எல்லோரையும் மொத்தமாக பழிவாங்க வேண்டுமென்று நினைத்தவள்
“எனக்கு தெரியாமலேயே என்னை அவர்கள் வலையில் சிக்க வைத்திருக்கிறார்கள் இவர்களை எல்லாம் என்ன செய்வது? ஒருவரையும் விடக்கூடாது! விடவே கூடாது!” மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே அவள் கூறிக் கொள்ள அவளது கோபமோ எல்லை மீற ஆரம்பித்தது.

பொறுமையாக எதையும் கையாள வேண்டும் என்று தன்னைத்தானே கட்டுப்படுத்தி கொண்டவள் தனபாலன் கூறிய விடயங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தபடியே தன் வீட்டை வந்து சேர்ந்தாள்.

மேக்னாவை பார்த்ததும் வள்ளி மற்றும் நடராஜன் நர்மதா இல்லாமல் போனதற்காக கோபம் கொண்டது போலவே இருக்கவே அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே தன் கைகளைத் தட்டியவள்
“சபாஷ்! சபாஷ்! ரொம்ப நல்லா நடிக்கிறீங்க ரெண்டு பேரும் வளர்ப்பு பொண்ணு மேல ரொம்பதான் பாசம் போல!” கேலியாக அவர்களைப் பார்த்து வினவவே

கோபமாக முறைத்து கொண்டு அவள் முன்னால் வந்து நின்ற வள்ளி
“உனக்கு என்ன ஆச்சு மேக்னா? பைத்தியம் மாதிரி நடந்துகிட்டு இருக்க?” என்று கேட்கவும்

கோபமாக அவர் கழுத்தில் தன் கையை வைத்து அழுத்தியவள்
“ஆமா நான் பைத்தியம் தான்! இத்தனை நாட்களாக உங்களைப் போய் அம்மா அப்பா என்று நம்பி ஏமாந்து இருக்கேனே! நான் பைத்தியம் தான்! நீங்க இரண்டு பேரும் அந்த தனபாலனுக்கு கீழே வேலை பாக்குற ஆட்கள் என்று இவ்வளவு காலமா தெரியாமல் இருந்தேனே நான் பைத்தியம் தான்! பைத்தியம் தான்!” என்று சத்தமிட்ட படியே இன்னமும் அவர் கழுத்தை அழுத்த அவசரமாக அவளருகில் ஓடி வந்து அவளது கைகளை விலக்கி விட்ட நடராஜன் வள்ளியை தன் புறமாக இழுத்து கொண்டார்.

“ஓஹ்! உண்மை தெரிந்தாச்சா? அப்போ இனி தேவையில்லாமல் இந்த அப்பா, பொண்ணு நாடகம் தேவை இல்லை” வெகு சாதாரணமாக நடராஜன் கூறவே மேக்னாவிற்கு கண்மண் தெரியாமல் கோபம் எல்லை மீற ஆரம்பித்தது.

இருப்பினும் இத்தனை நாட்களாக தன் சொந்த அன்னை, தந்தையைப் போல இவர்களை பார்த்தோமே என்ற எண்ணத்தில் துக்கம் நெஞ்சை அடைக்க கோபமாக தன்னறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

பாசனத்திற்காக ஏங்கிய தனக்கு அந்த கடவுள் ஏன் இப்படி ஒரு தண்டனையை கொடுக்க வேண்டும் என்று எண்ணி தனக்குள்ளேயே அவள் மருக ஆரம்பித்தாள்.

தன் மேல் அவர்கள் இத்தனை நாட்களாக காட்டிய பாசம், அக்கறை எல்லாமே பொய் என்று தெரிந்ததுமே அவள் முற்றிலும் நொறுங்கி போனவள் இத்தனை நாட்களாக தான் சந்தோஷமாக இருந்த தருணங்களை எல்லாம் யோசித்து பார்த்து அதற்கு பின்னால் அவர்களது நடிப்பே இருந்திருக்கிறது என்று எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

‘இவர்களை எல்லாம் விடவே கூடாது’ கோபமாக தன் முன்னால் இருந்த பொருட்களை எல்லாம் தள்ளி விட்டவள் சிறிது நேரத்தில் தன்னை மறந்து கண்ணயர்ந்தும் போனாள்.

காலையில் பறவைகளின் சத்தம் கேட்டு மெல்ல தன் கண்களை திறந்து கொண்டவள் தனபாலனைக் கொல்வதற்காக ஏற்கனவே போட்டிருந்த திட்டத்தின் படி செயல் பட வேண்டும் என்று எண்ணி கொண்டு தயாராகி வந்தாள்.

வள்ளி மற்றும் நடராஜன் அவளுடன் எதுவும் பேசாமல் இருக்கவே அதை எதையும் கவனித்தில் கொள்ளாதவள் தனபாலனைத் தேடிச் சென்றாள்.

அவரைத் தேடி சென்ற இடத்தில் அவர் தன் சகாக்களோடு பேசியதை எல்லாம் உண்மையாகவே தன் டைரியில் எழுதி இருந்தவள் ஒரு விடயத்தை மட்டும் தவிர்த்து இருந்தாள்.

அதாவது தனபாலன் தன் சகாக்களிடம் கூறியது போல அவள் குடும்பத்தினரைத் தான் அழிக்க திட்டம் தீட்டி இருந்தார் ஆனால் அதற்கு பின்னால் இருந்த உண்மை மேக்னாவிற்கு வள்ளி மற்றும் நடராஜன் பற்றிய உண்மைகள் தெரிந்து விட்டதால் தான் தனபாலன் அவர்களை கொல்ல சொல்லி ஆட்களை அனுப்பி இருந்தார்.

அதை அவள் அந்த டைரியில் எழுதி இருக்கவில்லை காரணம் சித்தார்த்திடமிருந்து உதவி கிடைக்காது போய் விடுமோ என்ற அச்சம்.

“அப்போ உண்மையான கொலையாளி யார் மேக்னா?” பழைய நினைவுகளில் முகம் சிவக்க நின்றிருந்தவளைப் பார்த்து சித்தார்த் கேட்கவும்

அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்
“அந்த டைரியில் சொன்ன மாதிரியே தனபாலன் தான் முதலில் எங்க வீட்டிற்கு போய் அவங்களை கொலை பண்ணுணான் ஆனா அவங்க போட்ட சத்தத்தில் பயந்து போய் ஓடிட்டான் அதற்கு பிறகு தான் அந்த குடோனில் வந்து பேசிட்டு இருந்தான் நான் அவனோட அந்த குடோனுக்கு நெருப்பு வைத்து விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்க்கும் போது அவங்க பாதி உயிரோடு இருந்தாங்க என் கிட்ட காப்பாற்ற சொல்லி கெஞ்சுனாங்க ஆனா நான் அவங்களுக்கு உதவி செய்யல

இத்தனை நாட்களாக நான் அவங்களை என் பெற்ற அம்மா, அப்பா மாதிரி பார்த்தேன் ஆனா அவங்க என்னை நம்ப வைத்து ஏமாற்றிட்டாங்க அவங்க என் கண் முன்னால் தான் இறந்து போனாங்க நான் வீட்டுக்கு போய் இருந்த நேரமே அவங்களை ஹாஸ்பிடலில் சேர்த்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் ஆனால் நான் அதை பண்ணல என் கையால் கொலை செய்யாவிட்டாலும் அவங்க இறந்து போனதை ரசித்து பார்த்தேன் என் கையால் அவங்களை கொல்ல முடியலையேன்னு எனக்கு கோபம் வந்தது ஆனா அவங்களோட உயிர் போற அந்த தருணம் என் கோபத்தை எல்லாம் இல்லாமல் ஆக்கிடுச்சு அந்த ஒரே ஒரு குற்ற உணர்ச்சிக்காகவும், நான் இதற்கு முன் செய்த தவறுகளுக்காஆவும் தான் ஜெயிலுக்கு போனேனே தவிர வேறு எதற்காகவும் இல்லை

நான் என்ன சார் தப்பு பண்ணேன் அந்த தனபாலனுக்கு? எதற்காக அவன் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தரணும் ஆரம்பத்தில் என் பிரண்ட் பிரியாவை என் கிட்ட இருந்து பறிச்சான் அதற்கு அப்புறம் ராணிம்மா அதற்கு அப்புறம் வள்ளி அம்மா, நடராஜன் அப்பாவை அம்மா, அப்பான்னு நம்ப வைத்து என்னை மொத்தமாக அழிச்சுட்டான் பாசத்திற்கு ஏங்கிய என்னை இப்படி மொத்தமாக அழிச்சுட்டான் அந்த தனபாலன் அவனை கொலை பண்ணிட்டேன் என்ற திருப்தியோடு தான் ஜெயிலுக்கு போனேன்

அப்படி இருந்தும் அந்த தனபாலன் உயிருடன் இருக்குறதை கேள்வி பட்டு என்னால அங்கே இருக்க முடியல அவனை என் கையால் கொலை பண்ணணும்னு தான் இருந்தேன் ஆனா நீங்க அன்னைக்கு அந்த ஆளு வெளியே வர முடியாத படி தண்டனை வாங்கிக் கொடுத்தாச்சுன்னு சொன்னீங்க அந்த ஒரு விடயத்தினால் தான் நான் என் பழிவாங்கும் எண்ணத்தை தூக்கி போட்டேன் இப்போ சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சார் இப்போதும் உங்களுக்கு என் மேல் காதல் இருக்கா?” கேள்வியாக அவனை நோக்கினாள்.

பெருமூச்சு ஒன்றை விட்டபடியே அவள் முன்னால் அவளை நெருங்கி வந்து நின்றவன் காதோரம் விழுந்து கிடந்த அவள் முடிக்‌கற்றைகளை விலக்கி விட்ட படியே அவளைப் பார்த்து புன்னகைத்தவன்
“அந்த காதல் இப்போ இல்லை மேக்னா” என்று கூற அவளோ அதை ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே!”

“நீ கரெக்டா தான் சொன்ன மேக்னா! அந்த காதல் இப்போ என் மனதில் இல்லவே இல்லை! அதை விட பன்மடங்கு அதிகமாக இப்போ காதல் வந்து இருக்கு”

“ஸார்!” மேக்னா அதிர்ச்சியாக அவனைப் பார்க்கவே அவனோ அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்தினான்.

“எத்தனை விதமான தடைகள் வந்தாலும் நீ இவ்வளவு தைரியமாக இருக்கியே! அதை பார்த்து தான் எனக்கு காதல் வேறு எதற்காகவும் இல்லை உன்னோட தைரியம் தான் என்னை உன் பக்கமாக ஈர்க்குது ஆரம்பத்தில் உன் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து நான் பயந்து போனது உண்மை ஆனால் நீ காண்பித்த அந்த முகம் உண்மை இல்லை பாசத்திற்கு ஏங்கிய இந்த முகம் தான் உண்மை நீ இதற்கு முன் பண்ண எல்லாத் தப்புகளையும் ஏற்று மன்னிக்க முடிந்த என்னால் இதையும் மன்னிக்க முடியாதா சொல்லு நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு உன் கண்ணைப் பார்த்தாலே எனக்கு புரியுது அதில் எவ்வளவு வலி, வேதனை, ஏக்கம் இன்னும் சொல்லப் போனால் இந்த அதிரடி தான் எனக்கு பிடித்தும் இருக்கு இப்போ சொல்லு உன் மனதில் என் மேல் காதல் இருக்கு தானே?”

“இன்ஸ்பெக்டர் சார்! இது சரி இல்லை! நீங்க என்ன சொன்னாலும் சரி நான் கொலைகாரி தானே!”

“நீ நான் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லு உனக்கு என் மேல் காதல் இருக்கா? இல்லையா?”

“இன்ஸ்பெக்டர் சார் நீங்க இதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் உங்க வீட்டில்!”

“எங்க வீட்டில் ஏற்றுக் கொள்வாங்களா? இல்லையா? அது தானே பிரச்சினை? சரி வா இப்போவே போய் எல்லோர் முன்னிலையிலும் நான் உன்னை விரும்புவதை சொல்லுறேன் அம்மா கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளுவாங்க அவங்க சம்மதம் கிடைக்கும் வரைக்கும் நான் காத்திருப்பேன் அதற்கு அப்புறம் அவங்க உன்னை ஏற்றுக் கொண்டாலாவது என்னை காதலிக்குறதை நீ ஏற்றுக் கொள்ளுவாயா?”

“என்னை பற்றி எல்லா உண்மைகளையும் சொல்லி சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சார் என்னை பற்றி எல்லா விடயங்களையும் தெரிந்ததற்க்கு அப்புறம் அவங்க சரின்னு சொன்னா அப்போ நான் என் பதிலை சொல்லுறேன் என்ன ஓகே வா?” மேக்னா அவனை கேள்வியாக நோக்கவும்

“டேய்! சித்!” என்றவாறே ஜெஸ்ஸி பதட்டத்துடன் அவர்களை நோக்கி ஓடி வரவும் சரியாக இருந்தது.

“ஹேய்! ஜெஸ்ஸி என்ன ஆச்சு? எதற்காக இவ்வளவு பதட்டமாக இருக்க?”

“சித்! அந்த… அந்த தனபாலன் ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டானாம்”

“என்ன?” சித்தார்த் அதிர்ச்சியாக மேக்னாவின் புறம் திரும்பி பார்க்க அவளது முகமோ வெளுத்து போய் இருந்தது.

“மேக்னா!” சித்தார்த் அவள் தோளில் கையை வைத்து அழுத்த

புன்னகை முகமாக அவனை திரும்பிப் பார்த்தவள்
“அவன் என் கையால் தான் சாகணும் போல இன்ஸ்பெக்டர் சார்” என்று கூற அவனோ அவளை கண்டிப்பது போல நோக்கினான்.

“சென்ட்ரலில் இருந்து இப்போ தான் போன் வந்தது இப்போ ஒரு இருபது நிமிஷத்திற்கு ஆள் காணாமல் போய் இருக்கு சுதர்சனை இரண்டு தட்டு தட்டவும் மேக்னாவைத் தேடித் தான் வந்து இருக்கிறதாக சொல்லி இருக்கிறார் டிசிபி அங்கிள் வீட்டை சுற்றி செக்யூரிட்டி டைட் பண்ணிட்டாங்க ஆனாலும் நீ மேக்னாவை கொஞ்சம் கவனமாக பார்த்துக்கோ” ஜெஸ்ஸி சித்தார்த்திடம் தன் பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் இயல்பாக பேசுவது போல கூறிக் கொண்டிருக்கையில்

மேக்னா
“இன்ஸ்பெக்டர் சார்!” என்றவாறே சத்தமிட்ட படி அவன் மேல் சரிந்து விழுந்தாள்.

“மேக்னா!” பதட்டத்துடன் அவளை தன் கைகளில் தாங்கி கொண்டவன் சுற்றிலும் திரும்பிப் பார்க்க அங்கே தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் தனபாலன் நிற்பதை கண்டு கொண்டான்.

“ஜெஸ்ஸி! அந்த தனபாலனைப் பிடிக்க சொல்லு” சித்தார்த் போட்ட சத்தத்தில் தனபாலன் பயந்து தன் கையிலிருந்த துப்பாக்கியை போட்டு விட்டு ஓடப் போக அந்த இடத்தை சுற்றிலும் காவலுக்கு நின்ற அதிகாரிகள் அவரை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.

“மேக்னா! உனக்கு என்ன ஆச்சு?” தன் கைகளில் விழுந்து கிடந்தவளை தன் புறமாக சித்தார்த் திருப்பி பார்க்க அவள் நெஞ்சில் இருந்து குருதி வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ஒரு கணம் அவளை பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றவன் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு
“அய்யோ! மேக்னா! உ… உனக்கு எதுவும் ஆகாது மேக்னா! உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்” பதட்டத்துடன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொள்ள போக

தன் ஒரு கையால் அவனை வேண்டாம் என்று சொல்லி தடுத்து நிறுத்தியவள்
“இ..து என..க்கு கிடைக்க வேண்டிய தண்டனை தான் இன்ஸ்பெக்டர் சார்” தன் மறு கையால் குண்டடி பட்ட அந்த இடத்தை சுட்டிக் காட்டியபடியே கூறினாள்.

“இல்லை மேக்னா! அப்படி எல்லாம் எதுவும் இல்லை! நான் உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்”

“வேண்டாம் இன்ஸ்பெக்டர் சார்! எனக்கு இந்த தண்…டனை தான் மனதுக்கு திருப்தி…யாக இருக்கு இ…து வரைக்கும் நான் செய்த தவறு…களுக்கு எல்லாம் இந்த ஒ..ரு தண்டனை சரி..யாக போச்சு இப்..போ தா..ன் எனக்கு மனதார நிம்ம…தியாக இ…ருக்கு! அந்த தனபாலனைக் கொன்னுட்டு ஜெ…யிலுக்கு போய் இ…ந்த தண்டனையை தான் அனுபவி..க்க இருந்தேன் ஆனா இப்போ அவனை என் கை…யால் கொல்லாமலேயே சந்தோஷ..மாக போறேன்! இ…ன்ஸ்பெக்டர் சார்! எனக்கு ஒ..ரே ஒரு கடைசி ஆசை செய்து தரு..வீங்களா?”

“அய்யோ! அப்படி எல்லாம் சொல்லாதே மேக்னா!”

“ப்ளீஸ் ஸார்! எ..னக்..காக!”

“சொல்லும்மா”

“நர்மதா…வை பத்திரமாக பா…ர்த்துக்கோங்க சார்” வலியால் துடித்துக் கொண்டே மேக்னா தன் இரத்தம் தோய்ந்த கரங்களை அவன் புறம் நீட்ட அவனோ கண்களை கண்ணீர் மறைக்க தன் கண்களை மூடி கொண்டு அவள் கையின் மேல் தன் கையை வைத்தான்.

அதற்குள் சித்தார்த்தின் வீட்டினரும், நர்மதாவும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

மேக்னாவை அந்த நிலையில் பார்த்ததுமே நர்மதா கதறி அழுத படி அவள் முன்னால் விழுந்து அழுது துடிக்க யசோதா அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

“இ…ன்ஸ்பெக்..டர் சார்! நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்”

“என்ன மேக்னா?” தன் கண்களை துடைத்து விட்டபடியே சித்தார்த் அவளைப் பார்த்து கேட்கவும்

சிறிது புன்னகைத்த படியே அவனது கன்னத்தில் தன் இரத்தக் கறை படிந்த கரத்தை வைத்து அழுத்தியவள்
“எனக்கும் உங்களைப் பிடிக்கும் இன்ஸ்பெக்டர் சார்! நானும் உங்களை விரும்புகிறேன் சி..த்..தா!” முழுமையாக அவன் பேரை சொல்லாமலே அவனை விட்டு விலகி சென்று இருந்தாள்.

“மேக்னா!” அந்த இடமே அதிர்ந்து போகும் படி சத்தமிட்டு அலறியவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கதறி அழத் தொடங்கினான்.

தான் செய்த தவறுகளுக்கு எல்லாம் தகுந்த தண்டனையாக அந்த மரணத்தை ஏற்றுக் கொண்டவள் கண்களில் அந்த இறுதி நொடியிலும் கூட அச்சம் தென்படவில்லை.

தான் நினைத்ததை சாதித்து விட்ட வெற்றி களிப்பே தென்பட்டது.

தன் காதலுக்கும், தான் செய்த தவறுகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டு இருந்தவள் அந்த இரண்டு குழப்பங்களுக்கும் தீர்வு கிடைத்த திருப்தியில் சந்தோஷமாக தன் கண்களை மூடி இருந்தாள்.

தன் காதலை அவனுக்கு தன் உயிர் போகும் நேரத்தில் வெளிப்படுத்தி விட்டு சித்தார்த்தின் காதலின் ஈர்ப்பு விசையாகிப் போன அவனது மேக்னா அவனை விட்டு வெகு தூரம் சென்று இருந்தாள்.

அவள் இதுவரை தன் வாழ்நாளில் பலவிதமான தவறான விடயங்களை செய்திருந்தாலும் அதற்கு எல்லாம் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கத் தான் செய்யதது.

ஆனால் அந்த நியாயம் எல்லாமே நிதர்சனத்தில் வெறும் பேச்சோடு முடிந்து போகிறது என்பது ஏற்றுக் கொள்ள பட வேண்டிய உண்மை.

மேக்னா தண்டனை அளித்தவர்கள் தவறானவர்களாக இருக்கலாம் அவள் அதற்காக தன் கையில் எடுத்த நடவடிக்கைகளும் தவறானதது தான்.

ஆனால் அதை அவள் உணர்ந்து திருந்தி இருந்தாலும் அவளது மனசாட்சி அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை தன் மனசாட்சியை திருப்தி படுத்த ஒரு வாய்ப்பாகவே அவள் இந்த தண்டனையை ஏற்றுக் கொண்டாள்.

தான் இதுவரை செய்த பாவங்களுக்கு தன் இரத்தத்தை சிந்தி பாவமோட்சம் பெற்றிருந்தாள் மேக்னா.

எத்தனையோ தடைகளைத் தாண்டி சித்தார்த்தின் காதலின் ஈர்ப்பு விசையாகிய மேக்னா அவன் காதலை தன்னோடு ஈர்த்து கொண்டு அங்கிருந்து விடைபெற்று சென்றிருந்தாள் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்………..