Karisalkattupenne9

கரிசல் காட்டுப் பெண்ணே 9

 

‘பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு…’

ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்க, உறக்கம் கலையாமல் ஸ்ரீராம் தலையணைக் கொண்டு காதுகளை அழுத்தி மூடியபடி தூக்கத்தை தொடர முயன்றான்.

‘கற்பூர நாயகியே கனகவல்லி
காளி, மகமாயி கருமாரியம்மா…
பொற்கோயில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி, தெய்வானை அம்மா ஆஆஆ’

பாடல் தொடர்ந்து ஒலிக்க, கடுப்பானவன் “ஆ…” என்று கத்தியபடி வேகமாக எழுந்தமர்ந்து அலைபேசியில் மணிபார்க்க, இவனுக்குள் இன்னும் கொதிப்பு கூடியது.

‘டேய், எவன்டா அது நாலரை மணிக்கெல்லாம் ரேடியோ போட்டது?’ தூக்கம் கலைந்த கோபத்தில் வெளியே வந்து பார்க்க, தெருவில் அப்போதே மக்கள் நடமாடிக் கொண்டிருக்க, நொந்து தான் போனான்.

‘இந்த ஊருக்கு வந்து எனக்கு எது போச்சோ இல்லையோ, என் தூக்கம் முதல்ல போச்சு, நான் எட்டு மணிக்கு முன்ன படுக்கையை விட்டு எழுறவனே இல்லடா, இப்படி நாலு மணிக்கே எழ வைக்கிறீங்களே நான் பாவம் டா’ என்ற புலம்பலோடு கீழே வந்தான்.

தங்கள் வீட்டு வாசல்களில் பெண்கள் வரிசையாக வண்ணக் கோலங்கள் போடுவதும், செம்மண் இடுவதும், மஞ்சள், குங்குமம் வைப்பதுமாக இருக்க, ஆண்கள் மாவிலை, வேப்பிலை தோரணங்களை வாயிலில் கட்டிக்கொண்டு இருந்தனர். விடியற்காலை பொழுதில் இருந்தே அங்கே திருவிழா கொண்டாட்டம் தொடங்கி இருந்தது. ஸ்ரீராம் அனைத்தையும் சற்று வியப்புடனே கவனித்தபடி நடந்து வந்தான்.

தன் வீட்டு வாசலில் சற்று பின்னால் நகர்ந்து, தான் முடித்திருந்த கோலத்தை ஆராய்ச்சியாக பார்த்த சீதாமஹாலட்சுமி திருப்தியாக புறங்கையால் நெற்றியைத் துடைத்துக் கொள்ள, கைகளில் படிந்திருந்த வண்ண சாயம் நெற்றியிலும் பூசிக் கொண்டு நின்றிருந்தவளிடம் இருந்து பார்வையை விலக்கி வாசலைப் பார்க்க, நான்கு பெரிய அகல் விளக்குகளைச் சுற்றி, ஆறு தாமரை பூக்கள் மலர்ந்திருக்க, அதன்மீது கொடிகள் சுற்றி வளைத்து இருப்பதைப் போல அழகான பெரிய கோலம் வரையப்பட்டு இருந்தது.

அந்த கோலத்தில் பயன்படுத்தி இருந்த வண்ணக் கலவையை மெச்சலாக பார்த்திருந்தான் ஸ்ரீராம். அத்தனை நேர்த்தியுடனும் அழகுடனும் தனித்து காட்சி அளித்தது அக்கோலம்.

“கோலம் சூப்பர் பாப்பு” என்றவன் குரலில் திரும்பியவள் பதற்றமாக, “யாருக்காவது கேட்டுட போகுது, பாப்பு சொல்லாத ப்ளீஸ்” அவனிடம் முகம் சுருக்கி சிறு குரலாய் கெஞ்ச, அதை ரசித்தவன் இதழ் மடித்த சிரிப்போடு கண் சிமிட்டினான்.

“சீதாம்மா, என் வீட்டு வாசல்லையும் ஒரு கோலத்தை இழுத்து விடேன், நல்ல நாள்ல கோலம் போட வீட்டு மனுசி இருந்திருந்தா நான் ஏன் மா உன்கிட்ட கேக்க போறேன்” என்று புலம்பலோடு பெருமூச்செறிந்தார் வையாபுரி.

“சரிண்ணா வரேன்” என்று கோலமாவை எடுத்து வந்து அவரின் வீட்டு வாசலில் புள்ளி வைத்து கம்பிகளை இழுக்க தொடங்கினாள் சீதா.

சிறு குழந்தையின் ஆர்வத்தோடு அவள் கையின் லாவகத்தை பார்த்தபடி எதிரில் அமர்ந்து விட்டான் ஸ்ரீராம்.

வரிசை புள்ளிகளில் தொடங்கி, குறுக்கும் நெடுக்குமான கோடுகளை இணைத்து இறுதியில் தேர் வடிவிலான கோலமாக முடித்துவிட்டு நிமிர்ந்தாள்.

“சும்மா சொல்ல கூடாது, உன் கைல நிறைய வித்தை வச்சிருக்க பாப்பு” என்று பாராட்டலோடு அவன் சீண்ட, “பாப்பு சொன்ன, தொலைச்சுடுவேன் உன்ன” என அமர்த்தலான அவள் மிரட்டலில் இவன் சிரித்து விட,

“வானம் வெளுத்துடுச்சு, நான் கிளம்புறேன் அண்ணா” வையாபுரியிடம் சொல்லிவிட்டு ஸ்ரீராமை முறைத்தபடி சீதா அங்கிருந்து அகன்று விட்டாள்.

“நீ என்ன சீண்டினாலும் அந்த புள்ள சிக்காது தம்பீ, யார்கிட்டையும் வீண் பேச்சு பேசாது, அமைதியான பொண்ணுபா அது” என்ற அறிவுறுத்தலோடு வையாபுரி நீட்டிய தேநீரை வாங்கி கொண்டவன், புன்னகையுடனே ஆமோதித்து தலையசைத்தான்.

திருவிழாவின் முதல் நாள் கோலாகலமாக விடிந்திருந்தது. ஒலிபெருக்கியில் ஒலித்த பக்தி பாடல்கள், திரையிசை பாடல்கள் தெருக்களை அதிரச் செய்து கொண்டிருந்தன.

வழக்கம்போல கட்டிடத்திற்கு தண்ணீர் இறைத்து விட்டு, உற்சாகமாகவே குளியலை முடித்தவன் திருவிழாவிற்கு என வெள்ளை டீ சர்ட், கிரே ஜீன்ஸ் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

“காலையில ரெடி ஆகிட்ட போல ஸ்ரீராம், குட் பாய், வா வா போலாம்” சக்திவேல் அவன் கைபிடித்து இழுக்க,

“உன் அக்காவுக்கும் சேர்த்து நீயே வாய வளர்த்து வச்சு இருக்கடா, இப்ப எங்க போகணும்?” சின்னவன் தலையைப் பிடித்து மாவாட்டியபடி கேட்க,

“மாயிலை, வேப்பிலை பறிச்சிட்டு வர சொன்னாங்க அம்மா, நீ வரயா? இல்லையா?” தன் தலையை விடுவித்துக் கொண்டு குறையாத தெனாவெட்டோடு சக்திவேல் கேட்க, “சரி வா டா” என்று தன் வண்டியை உயிர்பித்தான்.

தன் வேலைகளுக்கும் அங்கே சுற்றுவதற்கும் கார் தோதாக அமையாததால், அங்கேயே செகண்ட்ஹேண்ட் பைக் ஒன்றை வாங்கி இருந்தான். அந்த பைக் சவாரிக்காக தான் சக்திவேல் எதற்கெடுத்தாலும் ஸ்ரீராமை தொங்கி கொண்டு இருப்பது.

கைநிறைய மா, வேம்பு கிளைகளோடு இருவரும் வீடு திரும்ப, அவற்றைப் பெற்றுக்கொண்ட மரகதம், “ரெண்டு பேரும் கை கழுவிட்டு வந்து சாப்பிடுங்க” என்று அழைத்தவர், வாழை இலை விரித்து, சுட சுட தோசையும், வெங்காய சட்னி, வேர்க்கடலை சட்னி பரிமாற, இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

“இதையெல்லாம் சீக்கிரம் கட்டி முடிச்சிட்டு கிளம்பு சீதா, வெய்யில் ஏறத்துக்குள்ள அம்மனுக்கு பொங்கல் வச்சிட்டு வந்திடலாம்” மரகதம் சொல்ல,
சீதா, தனிதனி மாவிலைகளைக் கோர்த்து தோரணமாய் கட்டி, வேப்பிலை துணுக்குகளை கிள்ளி மாலையாய் தொடுத்தாள்.

அவள் தொடுத்த மாவிலை, வேப்பிலை தோரணங்களை சக்திவேலும், ஸ்ரீராமும் வாயிலில் கட்டிவிட்டதும், மரகதம் பொங்கல் கூடையை தலையில் தூக்கிக் கொள்ள, சீதா அர்ச்சனை பொருட்களை தாம்பாளத்தில் எடுத்துக்கொள்ள அனைவருடன் கோயிலுக்கு கிளம்பினர்.

கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவில்,‌ கிராமத்தின் மேற்கு எல்லையில், கழனிகாடுகளுக்கு மத்தியில் திருவிழாவிற்குரிய அலங்காரங்களோடு அமைந்திருந்தது எல்லையம்மன் கோயில்.

கோயிலை சுற்றி உள்ள கரம்புகள் சுத்தம்‌ செய்யப்பட்டு, அதில் கல்லடுக்கி அடுப்பு மூட்டி பெண்கள் பலர் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். மரகதமும் சீதாவும் அங்கே பொங்கல் வைத்து முடித்து கோயிலுக்குள் வந்தனர்.

கோயில் முழுவதும் மக்கள் நிறைந்திருக்க, நேரத்தோடு அங்கே வந்த பரமேஸ்வரன், கௌதமி உடன் ஸ்ரீராமும் சேர்ந்து தங்களின் பூஜையை முறைபடி செய்து முதல் மரியாதையை ஏற்றுக் கொண்டனர். எல்லையம்மன் கோயில் நிலம், பெரிய குடும்பத்தின் முன்னோர்கள் நன்கொடையாக வழங்கியது என்பதால் அவர்களுக்கு வழிவழியாக செய்யபடும் முதல் மரியாதை இது. புது வீடு நல்ல முறையில் கட்டி முடிய வேண்டும் என அவர்கள் உளமார வேண்டிக் கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து சங்கரன் குடும்பமாக தங்கள் பூஜையை செய்ய,
மகளின் திருமணம் தடையின்றி நடைப்பெற வேண்டும் என மனதார வேண்டி கொண்டு, பிரகாரம் சுற்றி விட்டு வெளியே வர, மதியம் ஆகி இருந்தது.

“இன்ஜினியரே, எப்படி இருக்கு நம்மூரு திருவிழா?” மாரி, ஸ்ரீராமின் தோள்தட்டி கேட்க, “ம்ம் நல்லாயிருக்கு மாரி” என்று இவனும் அவனுடன் சேர்ந்துக் கொண்டான்.

“இன்னைக்கு சாயங்காலம் தான் பா திருவிழா களைகட்டும், கோயில் தெரு முழுக்க கடைங்க வந்து சேர்ந்திடும். கால்வைக்க கூட இடமில்லாம சுத்துபத்து ஜனங்க கூட்டம் கூடிடும், ஆறு மணிக்கு மேல கரகம் ஊரை சுத்தி வரும்போது அதுகூட மாவிளக்கை ஏத்தி வச்சு பொண்ணுங்க சேர்ந்து வரும் பாரேன் அப்படி இருக்கும்” என்று சிலாகித்து சொல்ல, ஸ்ரீராமிற்கும் ஆர்வம் கூடியது.

“அப்புறம்” என்று மேலே ஊக்கினான்.

“நாளைக்கு ஆத்தா அலங்காரத்தோட ஊர்வலம் வருவா, அப்போ கரகாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம்னு வீதியெல்லாம் கலகலக்கும், ராத்திரிக்கு வானவேடிக்கை சும்மா அதிரும்… மூணாம் நாளு மஞ்ச தண்ணீ நிராட்டுல ஒரு அமர்க்களம் படுத்திட்டு தான் திருவிழா முடியும்” என்று மாரி கெத்தாக சொன்னான்.

“சரி, நீங்களெல்லாம் எதுக்கு இப்படி வேலுகப்போட சுத்துறீங்க?” ஸ்ரீராம் கேட்க, “பக்கத்தூருல கொழுப்பெடுத்த சிலதுங்க, நம்மூரு திருவிழாவை கலைக்கணும்னு ஏதோ தகிடுதித்தம் பண்ணுங்க, அதான் நாங்க காவலுக்கு அங்கங்க நிக்கிறோம், எங்களை மீறி எந்த கொம்பன் வாரான்னு பார்த்துடலாம்” என்று மாரி சூளுரைக்க, ஸ்ரீராம் தலையசைத்து கொண்டான்.

மாலை நான்கு மணிக்கு எல்லாம் கோயில் தெரு முழுவதும் திருவிழா கடைகள், ரங்க ராட்டினம் என சேர மக்களும் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.

“ஏலே இப்ப சரியான நேரம்ல, நம்ம செவலைக்கு சாராயத்தை ஊத்தி, வெறியேத்தி விட்டு, கட்டவுத்து கூட்டத்து பக்கம் விரட்டி விடுல, எத்தனை பேரு குத்துபட்டு விழுறாங்கனு நாம வேடிக்கை பார்போம்” ஒருவன் திட்டத்தைச் சொல்ல, மற்றவர்கள் அவன் சொன்னது போலவே செய்ய தொடங்கினர்.

# # #

“அக்கா எப்படி?” கண்களில் கலர் கண்ணாடியைப் போட்டு காட்டி சக்திவேல் கேட்க, “ம்ம் சூப்பர் டா” என்றவள், எதிரே இருந்த வளையல் குவியலை அலசி, தனக்கும் அம்மாவுக்கும் என இரண்டு டசன் கண்ணாடி வளையல்களை தேர்ந்தெடுத்து தம்பியிடம் காட்டினாள்.

“ம்ம் நல்லாயிருக்கு க்கா, வேறென்ன வாங்கணும் உனக்கு?” சக்திவேல் கேட்க, அக்காவும் தம்பியும் திருவிழா கடைகளை இரண்டாம் முறையாக சுற்றி வந்தனர்.

“சக்தி, கலர் சாந்து வாங்கிக்கலாம் டா” என்ற சீதாவின் குரல் கேட்டு ஸ்ரீராம் திரும்பினான். வண்ண சாந்து குப்பியை வாங்கிக் கொண்டு, ஐஸ் விற்பவரிடம் இருவரும் வந்தனர்.

“அண்ணா எனக்கொரு பால் ஐஸ்” சீதா கேட்டு வாங்க, “எனக்கு சேமியா ஐஸ் தாங்கண்ணா” சக்திவேல் ஒன்றை வாங்கிக் கொண்டு, கூட்டத்தில் இருந்து ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று குச்சி ஐஸை ருசித்தனர்.

“ஐஸ் எனக்கில்லையா?” என ஸ்ரீராம் சிரித்தபடி அவர்கள் முன்புவர, “அதோ அங்க ஐஸ்கார் கிட்ட போய் காசு கொடுத்து வாங்கி சாப்பிடு” என்று சக்திவேல் நக்கலாக பதில் தந்தான்.

“நான் என்ன உங்களை மாதிரி சின்ன பாப்பாவா, குச்சி ஐஸ் சாப்பிட?” ஸ்ரீராம் வழக்கம்போல சக்திவேலுடன் பேச்சு வளர்க்க, “சின்ன பாப்பாங்க மட்டும் தான் குச்சி ஐஸ் சாப்பிடணும்னு சட்டம் இருக்கா என்ன?” சின்னவன் சளைக்காமல் பதிலுக்கு பதில் பேசினான்.

“சின்னா, கப் ஐஸ் கூட இங்க கிடைக்கும், அதை சாப்பிடுவ தானே?” சீதா வெகுளியாக அவனிடம் கேட்க,

“தேங்க்ஸ் பாப்பு, ஆனா, இங்க விக்கற கப் ஐஸ் எதுவும் தரமானது இல்ல மா” என்று நயமாக மறுக்க,

“இருக்கலாம் சின்னா, ஆனா எங்களுக்கு எல்லாம் இதான் ஐஸ்கிரீம்”
என்றவள் தன்னுடைய ஐஸை உண்டு முடித்து குச்சியை வீசிவிட்டு, தம்பியிடம் திரும்பி, “எல்லாத்தையும் வாங்கி ஆச்சு இல்ல, பொழுது சாயறத்துக்குள்ள வீட்டுக்கு வந்திடணும்னு அம்மா சொன்னாங்க” சீதா நினைவுபடுத்த, “ரங்க ராட்டினம் மட்டும் சுத்திட்டு போயிடலாம் க்கா” என்று சக்திவேல் கெஞ்சினான்.

“சரி நீ சீக்கிரம் போய் விளையாடிட்டு வா, நான் இங்கேயே இருக்கேன்” என்று சீதா சம்மதம் தர, சக்திவேல் துள்ளி குதித்து கொண்டு ஓடினான்.

அதே நேரத்தில் சோளக்காட்டிலிருந்து கொம்பு சீவிய செவலைக்காளை கோயில் தெருவை நோக்கி மூர்க்கமாக சீறி பாய்ந்தோடி வந்தது.

அப்போது வெளிச்சம் மங்காத மாலை நேரம் என்பதால், மக்களை நோக்கி சீறிவரும் காளையை பார்த்துவிட்ட சிலர் கூச்சலிட்டனர்.

“ஏலேய்… காளை சீறி வருது பாருங்க டோய்…”

“எவன் டா அது காளையை அவுத்து விட்டது?”

“டேய், இளவட்டங்களா காளை மாட்ட புடிச்சு கட்டுங்கடா…”

“முரட்டு காளை சீறி வருது… ஒத்தி நில்லுங்க… எல்லாரும் ஒத்தி நில்லுங்க…”

கூச்சலும் அலறலுமாக மக்கள் பயந்து ஒதுங்கி ஒண்டி கொள்ள, மாரியும் இன்னும் சிலரும் தாம்பு கயிறும் கொம்புகளுடன் காளை மாட்டைப் பிடிக்க விரட்டி வந்தனர். எதற்கும் மசியாமல் தறிக்கெட்டு சீறி வந்த காளையோ அதன் பாதையில் இருந்த பொருட்களை, மனிதர்களை எல்லாம் துவம்சம் செய்தபடி சீறிக்கொண்டு ஓடியது.

ஒலிபெருக்கியின் பாடல் சத்தத்தில் இந்த கூச்சல்‌ குழப்பங்கள் ஒதுங்கி நின்றிருந்த சீதா, ஸ்ரீராமிற்கு கேட்காமல் போனது பரிதாபமே!

“ரங்க ராட்டினம் சுத்த நீ போகலையா பாப்பு?” ஸ்ரீராம் விடாமல் சீதாவை கேலி பேச,

“அது சின்ன பசங்க சுத்தறது, பெரிய ராட்டினம் இருந்தா நானும் சுத்தி இருப்பேன்” இவளும் வீம்பாக பதில் தந்தாள்.

“எனக்கொரு சந்தேகம் சீதா, நீ எப்ப பெரிய பொண்ணா வளருவ?”

“ம்ம் வளரும்போது வளருவோம்” என்று நொடித்தவள், “இதே திருவிழாவுல குச்சி ஐஸ் மண்ணுல தவறி விழுந்துடுச்சுன்னு தேம்பி தேம்பி அழுது புரண்டு அடம்பிடிச்ச சின்ன பையனை உனக்கு தெரியுமா சின்னா?” என்று அவனுக்கு பதில் பேசி இவள் சிரிக்க, ஸ்ரீராம் முகம் சட்டென மாறியது.

வேகமாக அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டவன், அதே வேகத்தில் தவறி விழ, பாதையின் பக்கவாட்டு மேட்டிலிருந்த கீழே கழனியில் இருவரும் உருண்டு விழுந்தனர்.

தங்களை நோக்கி சீறி வரும் காளை மாட்டை பார்த்து பதறிய ஸ்ரீராம், சீதாவோடு விலக முயன்று, தடுமாறிய அவளோடு சேர்ந்து உருண்டிருக்க, நான்கடி உயரம் இருந்த பள்ளத்தை பாய்ந்து குதித்து நிற்காமல் ஓடிய காளையைத் துரத்திக்கொண்டு இன்னும் சிலரும் அங்கே குதித்து ஓடினர்.

கல்லும் முள்ளும் கைகளிலும் உடலிலும் குத்தி கீரிய வலியை பொறுத்து எழுந்து கொண்டவன், சீதாவையும் தூக்கி நிறுத்த, அவன் கையை தட்டிவிட்டவள், அவன் கன்னத்தில் ஆத்திரமாக அறைந்து இருந்தாள்.

“ச்சீ நீ இவ்வளவு கேவலமா நடந்துப்பன்னு நான் நினைக்கல” உடல் நடுங்க அவனை ஏசிட,

“ஏம்மா, தம்பி உன் உசுர காப்பாத்தி இருக்கு, அதை புரிஞ்சிக்காம அவரையே போட்டு அடிக்கிறீயே!” அங்கிருந்தவர் சீதாவிடம் அங்கலாய்த்தார்.

“புத்தி கெட்ட பொண்ணா இருக்கியே, அந்த தம்பீ காப்பாத்தலனா காளைமாடு இந்நேரம் உன்ன குத்தி போட்டிருக்கும்” வேறொரு பெண்மணி‌ சொல்லவும், சீதாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவளின் பின்புறமுக காளை ஓடி வந்திருந்தால் சீதா காளையை கவனித்திருக்கவில்லை. திடீரென ஸ்ரீராம் தன்னை அணைக்க முயன்றதும் இருவரும் உருண்டு விழுந்ததையும் வைத்து அவனை தவறானவனாக எண்ணி, ஆத்திரத்தில் அவனை அடித்துவிட்டிருந்தாள்.

இத்தனைக்கும் ஸ்ரீராம் அசையாது நின்றிருந்தான். முதல் முறை ஒரு பெண் கையால் அறைபட்ட காயமும், சுற்றி நின்ற அத்தனை பேருக்கு முன்னே தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் ஜிரணிப்பது அவனுக்கு கடினமாகிப் போனது.

சக்திவேல் ஓடிவந்து அக்காவின் கையை ஆதரவாக பிடித்துக் கொள்ள,
நான்கு புறமும் கயிறு கட்டி செவலைக் காளையை மாரியுடன் மற்றவர்கள் சேர்ந்து இழுத்து கொண்டு சென்றனர்.

அந்த காளையை பார்த்தும் நடந்தது சீதாவிற்கு தெளிவாக புரிந்திட, சங்கடமாக ஸ்ரீராமை ஏறிட்டாள். சட்டையில் மண் படிந்த கரையும் ரத்த கீரலாக, கன்னத்தில் அறைப்பட்ட தடத்தோடு இறுகிய முகமாக நின்றிருந்தான் அவன்.

அவர்களிடம் வந்த சங்கரன் ஸ்ரீராமின் முன் கைக்கூப்பினார். “கடவுள் மாதிரி வந்து என் பொண்ணோட உசுர காப்பாத்தி கொடுத்திருக்க ஸ்ரீராமா” என்று நெகிழ்ந்தவர், “அவசரபட்டுட்ட சீதாம்மா, ஸ்ரீராமன் கிட்ட மன்னிப்பு கேளு” என்று இடுங்கிய குரலில் மகளையும் கடிந்து கொண்டார்.

தயக்கமாக அவன் முன் வந்தவள், “நான்… காள வந்தது தெரியாம… புத்திகெட்டு போய்… அடி… அடிச்சிட்டேன்… மன்னிச்சிடு சின்னா” குற்றவுணர்வோடு அனைவரின் முன்பும் மன்னிப்பும் கேட்டு விட்டாள்.

“நீ மனசுல எதையும் வச்சுக்காத பா, மூணு பேரும் இங்கிருந்து கிளம்புங்க, நான் இங்க என்னாச்சுன்னு பார்க்கிறேன்” என்று ஸ்ரீராமின் தோளை தட்டி கொடுத்து விட்டு வேகமாக நடந்து சென்று விட்டார்.

பத்து பேர் அளவுக்கு பாதிக்கபட்டிருக்க, மூன்று பேருக்கு காயம்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு உள் காயங்கள் மட்டுமே பட்டிருக்க, யாரும் குத்துபடவில்லை என்பதே அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. சங்கரனும் மற்றவர்களும் அடிப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்து செல்லும் வேலையை கவனித்தனர்.

ஸ்ரீராம், சக்திவேல், சீதா அங்கேயே தனித்து நின்றிருந்தனர். ஒருவித சங்கடமான அமைதி அவர்களிடையே நிலவி இருக்க, துடுக்குதனமாக பேசும் சக்திவேல் கூட நிலைமையின் வீரியம் உணர்ந்து அமைதியாக நின்றிருந்தான்.

மனம் நைந்து கலங்கியவள், “சாரி சின்னா… எம்மேல தான் தப்பு…” அவனிடம் மன்றாட, ஸ்ரீராம் பதிலின்றி இறுக்கமாக நகர்ந்துவிட்டான்.

அக்காவும் தம்பியும் ஒருவரையொருவர் பார்த்து நிற்க, ஹாரன் சத்தத்தில் இருவரும் திரும்பினர். ஸ்ரீராம் அங்கே பைக்கோடு வந்து “ஏறுங்க போலாம்” என்றான் உணர்ச்சி தொலைத்த குரலில்.

சக்திவேல் மறுப்பின்றி அவன் பின்னால் அமர்ந்து கொள்ள, தயங்கியபடி சீதாவும் தம்பியின் பின்னோடு தொற்றிக் கொண்டாள்.

வானில் இருள் பரவி இருக்க, “அச்சோ ப்ளீஸ் அத்த, வேணாம் விடுங்க” ஸ்ரீராம் மறுப்பை காதில் வாங்காமல் மரகதம் அவன் மேல் சட்டையை கழற்ற செய்ய, அவன் முதுகில் பட்டிருந்த கீறல்களை சுத்தம் செய்து கௌதமி மருந்திட்டார்.

“ஆத்தாயி உன் கோயில் வாசலிலே, எம்ம புள்ளைங்க பட்ட துயரத்தை பார்க்கலையோ?
பொங்க வச்சு பூசை
கொடுத்தோமே அம்மா…
எங்க குலத்தை அழிக்க,
காளை வந்ததென்ன?
எங்க வீட்டு புள்ள,
கறந்த பசும் பாலு வெள்ள,
உடம்பெல்லாம் ரத்த காயம் தந்ததென்ன?
எந்த கொள்ளிக் கண்ணு பட்டுச்சோ?
எந்த பாவி கண்ணு பட்டுச்சோ?
பார்த்த கண்ணு பட்டு போக,
குத்தம் செஞ்ச குலம் அழிஞ்சு போக…”

என்று மரகதம் மனம் பொறுக்காமல் புலம்ப, “சாமி புண்ணியத்துல பசங்க உயிர் தப்பி வந்திருக்காங்கன்னு சந்தோசப்படு மரகதம், சீதாவுக்கும் காயம் பட்டிருக்கு பாரு போயி மருந்து போட்டு விடு… புள்ள பயந்திருக்கு பாரு” என்று கௌதமி அவரை மகளிடம் அனுப்பி வைத்தார்.

“ரொம்ப வலிக்குதா ஸ்ரீ?” என்று அவர் மகனிடம் கவலையாக கேட்க, “ப்ச் சின்ன காயம் தானம்மா, பெருசா வலி இல்ல” என்று சமாதானமாக சொல்ல, சங்கரனும் பரமேஸ்வரனும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

“யாருக்கு என்னாச்சு? ஏதும் பாதகமில்லையே?” கௌதமியும், மரகதமும் பதற்றமாக வினவ,

“நல்லவேளை யாருக்கும் எதுவும் ஆகல, சின்ன காயம் தான்,” பரமேஸ்வரன் நிம்மதியாக சொல்ல,

“வேணும்னே காளை மாட்டுக்கு சாராயத்தை ஊத்தி விரட்டி விட்டிருக்காங்க… போலீஸ்கிட்ட சொல்லியாச்சு, இனி அவங்க பார்த்துப்பாங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில கரகம் வந்திடும், பூசைக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று சங்கரன் துரிதப்படுத்தினார்.

“நீ எப்படி இருக்க ஸ்ரீ? ஹாஸ்பிடல் போலாமா டா?” பரமேஸ்வரன் கேட்க, “எனக்கு ஒண்ணும் இல்லப்பா, அம்மா காயத்துக்கு மருந்து போட்டிருக்காங்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்று சட்டையை மாட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

தன் அறைக்கு வந்து ஸ்ரீராம் படுத்துக் கொண்ட பின்னரும் ஸ்ரீராமின் மனது அமைதியடைவதாக இல்லை. சீதா அவனை தவறாக நினைத்து ஊராரின் முன்பு அறைந்துவிட்ட அவமானத்தில் இருந்து அவனால் வெளிவர இயலவில்லை. அவனுக்குள் அடங்காத கொதிப்பு ஒன்று கொதித்துக் கொண்டே இருந்தது.

மேள சத்தம் அவனை கலைக்க, எழுந்து வெளியே வந்து பார்த்தான். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த பூங்கரகத்தை தலையில் தாங்கியபடி ஒருவர் சாமியாடி வர, தங்கள் வீட்டு வாசலில் அவரின் பாதத்தில் மஞ்சள் நீரூற்றி குங்குமம் வைத்து வணங்கி பூங்கரகத்திற்கு தீபாராதனை காட்டி வணங்கி எழுந்தனர். ஒவ்வொரு வீடாய் பூஜை ஏற்று பூங்கரகம் கடக்கும் போதும் அவ்வீட்டு பெண்கள் தாம்பாளத்தில் ஏந்திய மாவிளக்கோடு கரகத்தை தொடர்ந்து நடந்தனர்.

ஒவ்வொரு வீடாக தீபங்கள் கூடிக்கொண்டே தொடர்ந்து வர மேளதாளத்துடன் பூங்கரகம் ஊர் முழுவதும் சுற்றிவர, இருளின் வெளியில் தீப கூட்டம் ஊர்வலம் வருவது அத்தனை அற்புத காட்சியாய் பார்வையை நிறைத்தது.

ஸ்ரீராம் அங்கிருந்தபடியே கைக்கூப்பி வணங்கி நிற்க, தீப ஒளியின் நடுவே சீதாவின் மஞ்சள் முகம் இவன் பார்வையில் பட, மீண்டும் இவன் மனம் இறுகிபோனது. தன் பார்வையை விலக்கி கொண்டு அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்து விட்டான்.

# # #

வருவாள்…