Aadhiye andhamaai 22

Aadhiye andhamaai 22

பாவத்தின் விளைவு

“இனிமேதான் உனக்கு பைத்தியம் பிடிக்கனுமா?”

செல்வியிடம் இப்படி கேட்டது மாணிக்கம்தான்.

 அந்த குரலை கேட்டு திரும்பியவளுக்கு உடலெல்லாம் நடுக்கமுற ஆரம்பித்தது. 

அதிர்ச்சியும் பயமும் ஒரு சேர அவளை ஆட்கொள்ள அந்த நொடியே அங்கிருந்து போக முயற்சி செய்தவளை மாணிக்கம் வம்படியாய் வழிமறித்து நின்றான்.

இதை சற்றும் அவள் எதிர்பார்க்காத நிலையில் அவன் மீண்டும் மீண்டும்  தொடர்ச்சியாய்  வழிமறிக்க அச்சத்தில் அவள் உள்ளம் படபடக்க தேகத்தில் வியர்வை துளிகள் ஆறாய் பெருக்கெடுத்தன. 

மனமெல்லாம் நடந்த அந்த பழைய மோசமான நினைவுகளை கண்முன்னே நிறுத்த, அவள் பயந்த நிலையில்

“வழி விடுங்க” என்று நடுக்கத்தோடு உரைத்தாள்.

ஆனால் அவனோ தன் நிலையிலிருந்து மாறாமல் அங்கேயே நின்று அவளை போகவிடாமல் தடுக்க,

 “இப்போ வழி விட போறீங்ககளா இல்லையா?!” என்று கோபம் பொங்க கேட்டாள். 

“வழி விடமாட்டேன்…  என்னடி பண்ணுவ?” என்று சொல்லியவனை  அவள் அதிர்ச்சியோடு ஏறிட்டு பார்க்க,

அவனோ விழிகள் சிவந்த நிலையில் போதையின் மயக்கத்தில் இருந்தான்.  அவளுக்கு பதட்டம் அதிகரித்தது.

அவனிடம் பேசுவது வீண் என்றுணர்ந்தவள் அவன் அசந்த நேரமாய் பார்த்து அந்த இடத்தை விட்டு விரைந்துவிட யத்தனித்தாள்.  

ஆனால் மாணிக்கம் அவளை போகவிடாமல் அவளின் ஒற்றை கரத்தை அழுத்தமாய் பிடித்து நிறுத்த, அவளின் கைவளையல்கள் துண்டு துண்டாய் நொறுங்கி கீழே விழ,

சிலவற்றை அவள் கைகளில் குத்தி காயப்படுத்தியது. அந்த வலியை விடவும் அவனின் பிடி அவளுக்கு ரொம்பவும் எரிச்சல் மூட்ட,

“என்ன பன்றீங்க? நான் இப்போ உங்க தம்பி பொண்டாட்டி” என்று பல்லைகடித்து கொண்டு உரைத்தவள் தன்  கரத்தை மீட்க போராடினாள்.

அவன் எகத்தாளமான சிரிப்போடு,

“என் தம்பி ஏதோ பாவம் பாத்து உன்னை கட்டிக்கிட்டான்… இல்லாட்டி போன நீயெல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளா வர தகுதியே இல்லாதவ” என்று சொல்ல அவள் அந்த  வார்த்தைகளை கேட்டு கேட்டு சலித்திருந்தாள். 

“உங்களுக்கு என்ன சொல்லனும்னாலும் அவர் கிட்ட சொல்லுங்க… இப்போ என் கையை விடுங்க” என்றவள் 

இந்நேரத்தில் இங்கு வந்து தனியாக மாட்டிக் கொண்டோமே என தன்னை தானே நொந்து கொண்டாள். 

அவளின் இன்னொரு கைகளால் அவன் பிடியை விலக்க முயற்சி செய்ய அவளின் இன்னொரு கையினையும் தன் மறு கையால் பற்றிக் கொண்டான். 

அவளின் தவிப்பை கண்ட ஈஸ்வரன் கட்டுண்ட போதும் துள்ளி துள்ளி குதித்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி கொண்டிருக்க

அவள் கோபத்தோடு, “நீங்க இப்படி நடந்துக்கிறது மட்டும் அவருக்கு தெரிஞ்சிது” என்று மிரட்டினாள். 

“ஏய் சும்மா நிறுத்துடி… அவனைதான் நீ எப்பவோ எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டியே… அப்படி என்னடி உன்கிட்ட இருக்குன்னு அவன் மதிமயங்கி கிடக்கிறான்… அதுவும் அவனை நீ அப்படியே ஒரு பொம்மை மாதிரி இல்ல மாத்தி வைச்சிருக்க” என்க, 

அவள் சீற்றமானாள். 

“அவர் ஒண்ணும் சுயபுத்தி இல்லாம மதிமயங்கி கிடக்கிறவர் கிடையாது…  முதல்ல கை விடுங்க… அப்புறம் நான் கத்தி கூச்சல் போடுவேன்” என்றவள் எச்சரிக்கை விடுத்தாள். 

அவன் சற்றும் அசராமல்,

“கத்தி கூச்சல் போடு… எனக்கென்ன பயமா? உன்னை மாறி கிறுக்கச்சி சொல்றதை எவன்டி நம்புவான்… ஏதோ பையத்தியம் முத்தி கத்துதுன்னு நினைப்பாங்க… அதுவும் புருஷன் இல்லாத நேரத்தில தனியா நீ இங்க ஏன் வந்தன்னு கேட்பாங்க… அப்புறம் நீதான் அவமானப்பட்டு போவ” என்றவன் உரைக்க அவளின் கோபம் தன் எல்லையை மீறி கொண்டிருந்தது.

அவன் மேலும் வன்மமாய் அவளை பார்த்து புன்னகையித்து, “அன்னைக்கு மட்டும் நீ என்கிட்ட இருந்து தப்பிக்காம இருந்திருந்தா” என்று அந்த மோசமான சம்பவத்தை அவன் ஞாபகப்படுத்த அவளுக்கு பதட்டம் அதிகரித்தது.

அவனோ அவள் கரத்தை பற்றி கொண்டபடி அவளை நெருங்க முயற்சி செய்ய, அவள் அருவருப்பாய் முகத்தை சுளித்தாள். 

“நீ இந்த தடவ என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது செல்லவி” என்று தன்  கேவளமான எண்ணத்தை அவன் வெளிப்படுத்த,

அவனின் வார்த்தை அவளை  கலவரப்படுத்தியது. 

இந்த தடவை தன்னை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்று அவள் புரிந்த கொண்ட  போது அவளின் மனோதைரியம் பன்மடங்கு பெருகியது. தன்னை தானே காத்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தவள் அவனின் இரும்பு பிடியை அசாத்திய பலம் கொண்டு உதறி தள்ளினாள். 

இம்முறை மாணிக்கத்தின் உறுதியான உடல் பலமும், கெட்ட எண்ணமும் செல்வியின் மனோபலம் முன் தோற்று போனது. அவன் தூரமாய் சென்று விழ, அவனை திரும்பியும் பார்க்காமல் அந்த நொடியே வீட்டிற்குள் சென்றவள் கதவை மூடி தாளிட்டாள்.

இரவெல்லாம் உறக்கமின்றி சுவற்றில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தவளுக்கு விடிந்ததை கூட உணரமுடியவில்லை.

 செந்நிற துகள்களை தூவியபடி சூரியன் வானில் உதிக்க,  புலம்பி கொண்டே வெளியே எழுந்து வந்தாள் கண்ணம்மா.

“விடிஞ்சது கூட தெரியாம அப்படி என்னதான் தூக்கமோ… வாசல் தெளிச்சி யாரு கோலம் போடாவா… எல்லாம் அக்கா இல்லாத திமிரு அவளுக்கு…

 இந்த கூறுகெட்ட மனுஷன் வேற எங்க போனாருன்னு தெரியல… இராத்திரியெல்லாம் ஆளையே காணோம்… வீட்டில ஆளில்லன்னா போதும்… சாரயத்தை குடிச்சிட்டு அப்படியே மல்லாந்திடுறது… வரட்டும் அந்த மனுஷனுக்கு இருக்கு” என்றபடி வாசல் பெருக்க விளக்குமாறை எடுத்தவள் அப்படியே கிணற்றடிக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.

அங்கே அவள் பார்த்த காட்சி அவள் இதய துடிப்பை ஒருநொடி நிறுத்திவிட்டது.

அதிர்ச்சியிலிருந்து மீண்டவள் தலையில் அடித்து கொண்டு கதற ஆரம்பிக்க, அக்கம் பக்கத்தினர் எல்லாம் அவள் ஓப்பாரியை கேட்டு அங்கே ஓடிவந்தனர். 

 எல்லோருமே மாணிக்கத்தின் உயிரற்ற உடலை மாட்டு கொட்டகையில் அருகில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாக,

அவனின் தலையின் பின்புறம்  கூர்மையான கல்லில் மோதி  உடல் இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்தது. 

செல்வியும் கூட்டத்தோடு கூட்டமாய் அந்த காட்சியை பார்த்தாள். தான் தள்ளிவிட்ட வேகத்தில்தான் அவன் அந்த கல்லில் மோதி இருக்க கூடும் என்றளவுக்கு அவளுக்கு புரிந்து போனது. 

ஆனால் அதற்காக அவள் மனம் வருத்தப்படவோ கலங்கவோ இல்லை. நடந்த நிகழ்விற்கான நியாயம் அவளுக்கும் மட்டுமே புரியும். 

இந்த தண்டனை அவனுக்கு தேவைதான் என்று உள்ளூர எண்ணி கொண்டவளுக்கு அவன் மரணித்திருந்த காட்சி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

அதே சமயத்தில் மனோரஞ்சிதத்தின் வீட்டிற்கு சென்ற சங்கரனும் சண்முகவேலனும் அங்கே பிரச்சனை தலைக்கு மேல் போயிருக்க அதை தீர்க்க முடியாமல் ரஞ்சிதத்தையும் அவளின் இருமகன்களையும் அழைத்து கொண்டு  வீடு வந்து சேர்ந்னர்.  

அங்கே அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. மாணிக்கத்தின் மரணம்  அந்த குடும்பத்தினரை மட்டுமல்லாது அந்த ஊர்மக்களையும் கூட திக்குமுக்காடச் செய்திருந்தது.  

அவர்களில் பலரும் செல்வி மருமகளாய் வந்த பின்புதான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று புரளி பேச, கனகவல்லி தன் பங்குக்கு துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் எல்லாம் அவ்விதமே சொல்லி அந்த செய்தியை காட்டுதீயாய் பரப்பினாள். 

சிவசங்கரனுக்கோ கனகவல்லியின் இந்த அவதூறான பேச்சுக்கள் கோபத்தை ஏற்படுத்திய போதும் அவன் வேறொரு குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததினால்  அந்த பேச்சுக்களுக்கு அவன் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

மாணிக்கத்தின் இறப்பில் ஏற்பட்ட சோகம் அந்த வீட்டில் உள்ள எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது. அதிலும் சிவசங்கரன் மனதளவில் ரொம்பவும் கலங்கி போயிருந்தான்.

 வேதனை நிரம்பிய முகத்தோடு, “அண்ணனுக்கு ஏன் இப்படி ஆகனும்?” என்றவன் செல்வியிடம் சொல்லி கண்ணீர் வடிக்க அவள் பதிலுரைக்க முடியாமல் நின்றிருந்தாள்.

“மனசு தாங்கல… சாகிற வயசா அவருக்கு?” என்றவன் புலம்ப,

அவன் அப்படி வேதனையோடு காண முடியாமல் அவள் மெல்ல அவன் தலைமூடியை வருடி கொடுத்து,

“நடக்கிறதெல்லாம் நம்ம கையிலயாங்க இருக்கு… இப்படியே வருத்தப்பட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல… மனசை தேத்திக்கோங்க” என்று அவள் சமாதானம் உரைத்தாள். 

ஆனால் அவனோ தன் கவலை விலகாத நிலையில் அவள் மீது சாய்ந்தபடி மேலும் மேலும் கண்ணீர் வடிக்க, அவளுக்கு அவனின் அழுகையை பார்த்து என்ன சொல்வதென்றே புரியவில்லை.

சொந்த தம்பி மனைவி என்றும் பாராமல் தவறாய் நடந்து கொண்ட அப்படி ஒரு ஈனபிறவிக்காக தன் கணவனின் கண்ணீர் வீணாவது அவளுக்கு வேதனையாயிருந்து.  

“இப்படியே அழுதிட்டிருந்தா எப்படிதான்” என்றவள் சொல்லி அவன் கண்ணீரை துடைத்துவிட,

அப்போதுதான் அவள் கையில்  கன்றி போயிருந்த காயத்தையும் சில கண்ணாடி கீறல்களையும் கவனித்தான். 

அப்போது அவளின் கண்ணாடி வளையல் சிதறல்களை மாணிக்கம் இறந்த இடத்தில் பார்த்ததை நினைவு கூர்ந்தவன் அவள் கைகளை பிடித்து,

“இந்த காயம் எப்படி ஆச்சு?” என்று கேட்க,

அவள் ரொம்பவும் யதார்த்தமாக, “வேலை செய்யும் போது  வளையல் உடைஞ்சி போயிருக்கும்” என்றாள். 

ஆனால் உள்ளூர பதட்டம் அவளை ஆட்கொண்டது. 

சங்கரன் அவளை ஏறஇறங்க பார்த்து,

“இது… வெறும் வளையல் உடைஞ்சிதானால பட்ட காயம் மாதிரி தெரியலியே?!” என்று கேட்கவும்

செல்வி தன் பயத்தையும் தடுமாற்றத்தையும் வெளிப்படுத்தாமல்,

“வேலை செய்யும் போது எனக்கே தெரியாம ஏதாச்சும் நடந்திருக்கும்… அதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கு” என்க, அவளை நம்பாமல் பார்த்தான். 

“சரி அது போகட்டும்… அண்ணன் விழுந்து அடிபட்டு கத்தினது கூடவா உன் காதில விழுல… அந்தளவுக்கா தூங்கிட்டிருந்த”

“என்னை ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க ? புருஷன் எங்க போனாருன்னு கவலைப்பபடாம தூங்கிட்டிருந்த உங்க மதனியை போய் கேளுங்க” என்றவள்  அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்ல 

அவளின் பேச்சும் நடக்கவடிக்கையும் அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. 

அந்த நொடி அவள் மீதான சந்தேகம் வலுக்க,

“நான் உன்னை கேட்டா நீ பதில் சொல்லு… அதை விட்டுட்டு நான் யாரை கேட்கனும்னு நீ சொல்லாதே” என்றபடி கோபமாய் முறைத்தான். 

” உங்களுக்கு இப்போ என்ன தெரியனும்.. இதுக்கெல்லாம் காரணம் நான்தானான்னு” என்றவள் அதே கோபத்தோடு குரலை உயர்த்தினாள்.

“நான் அந்த அர்த்தத்தில கேட்கலடி”

“நீங்க அந்த அர்த்தத்திலதான் கேட்டீங்க”

“இப்ப நான் என்ன கேட்டுட்டன்னு இவ்வளவு கோபப்படிற”

“பின்ன… இந்த குடும்பத்தில நடக்கிற எல்லா கெட்டதுக்கும் நான்தான் காரணம்…  ஊரே அப்படிதானே சொல்லுது… நீங்க சொன்னா என்னாயிட போது” என்றவள் அவன் பேச்சை திசை திருப்ப, “நான் போய் உன்னை அப்படி நினைப்பேனா?” என்றவன் கேட்க,

“நீங்களும் அப்படிதான் நினைக்கிறேன்… அதனாலதான் என்னை இப்படியெல்லாம் கேட்கிறீங்க” என்று அவள் முகத்தை மூடி விம்ம ஆரம்பித்தாள். 

  பெண்களின் அழுகை அவர்களின் ஆயுதம் என்பதில் சந்தேகமே இல்லை. செல்வி அதை சரியாகவே பயன்படுத்திக் கொண்டாள். சிவசங்கரனால் அதற்கு மேல் அவளிடம் ஒரு கேள்வியை கூட எழுப்ப முடியவில்லை. அவளின்  அழுகை அவனுக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியது.

அதன் பிறகாய் அவளை சமாதானப்படுத்த அவன் படாதபாடுபட வேண்டியதாய் போயிற்று. 

இந்த சம்பவத்தால் சண்முகவேலன் குடும்பம் சோகத்தில் மூழ்கியிருக்க

குடமுழக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தேக்கம் அடைந்திருந்தன. 

அதே நேரத்தில் ஊருக்குள் ஒரு விதமான நோய் பரவிக் கொண்டிருந்தது. சரியான விழிப்புணர்வு இல்லாததினால் பல உயிர்கள் பலியாகின. அதுவும் குழந்தைகளின் உயிர்கள். 

ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த சிவசங்கரன் வீட்டையும் அந்த நோய்பாதிக்கவே செய்தது. பட்ட காலில் படும். கெட்ட குடியே கெடும் என்று  பழமொழிக்கு ஏற்பவே சம்பவங்கள் நடைப்பெற்றன.  

முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது செல்விக்கு அவனின் இறப்பு குறித்தும் அவளின் மனஉணர்வு எச்சரித்தது. 

அதனால் செல்வி முருகனை காப்பாற்றுவதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளையும் மேற்கொண்டாள். ஆனால் கனகவல்லியும், கண்ணம்மாவும் அவளை  எதுவும் செய்யாமல் தடுத்துவிட  சூழ்நிலையும் சந்தர்ப்பமும் முருகனின் உயிரை பலி வாங்கியது.

உடனுக்குடனாய் இரண்டு மரணங்கள் அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்திருக்க,

ஒரே மாத இடைவெளியில் கணவனையும் மகனையும் இழந்துவிட்ட கண்ணம்மா அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாமல் பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். 

செல்விக்கும் முருகனின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கனகவல்லி மேலும் மேலும் அவளை காயப்படுத்தினாள். 

“உன் கண்ணு பட்டுதான்டி அந்த பிள்ளைக்கு அப்படியாயிடுச்சு… சரியான ராசி கெட்டவ… தரித்திரம்” என்க,

சங்கரன் சீற்றமாகி, “வேண்டாம் மதினி… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க” என்றவன் விரல் நீட்டி எச்சரிக்க

“என்னடா பண்ணுவ ?” என்று மல்லுக்கு நின்றான் வேல்முருகன். சிறிது நேரத்தில் அவர்களுக்கு இடையில்  வாக்குவாதம் முற்றி அந்த இடமே போர்களமாய் காட்சியளித்தது. 

சங்கரனிடம் பேச வேண்டாமென செல்வி சமிஞ்சை செய்ய கனகவல்லி அப்போது கணவனிடம், “இந்த தரித்திரம் பிடிச்சவ இருக்கிற வீட்டில நாம இருக்கவேண்டாம்… அப்புறம் நம்ம குழந்தைக்கும் ஏதாச்சும் வந்து தொலைஞ்சிரும்” என்று உரைக்க செல்வி தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தாள்.

சிவசங்கரன் தன் பொறுமையிழந்து, “வேண்டாம் மதினி… நீங்க உங்க பிள்ளைகளோட சந்தோஷமா இங்கயே இருங்க… நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போது சண்முகவேலன் வீட்டிற்குள் நுழைந்தார். 

அவர் வாசலில் நின்றபடி அவர்களின் உரையாடலை கேட்டிருக்க,  

“இந்த வீட்டை விட்டு யாராச்சும் வெளியே போகனும்னா என் பிணத்தை தாண்டிதான் போகனும்” என்று சொல்ல சங்கரனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.   

வேல்முருகன் தான் நினைத்ததை சாதித்து விட்டோம் என்ற உள்ளூர சந்தோஷபட்டு கொண்டிருந்த நிலையில் சண்முகவேலன் நடுவில் புகுந்து காரியத்தை கெடுத்துவிட அவர்களின் திட்டம் மொத்தமாய் தவிடுபொடியானது. 

சண்முகவேலனுக்கு வீட்டில் வரிசையாய் நிகழும் மரணங்களும் பிரச்சனைகளும் பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாம் பரமுவிற்கு இழைத்த அநீதியினால் ஏற்பட்ட பாவத்தின் விளைவாக இருக்குமோ என்ற எண்ணம் அவரை பயமுறுத்தியது.

ஆதிபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷகத்தை ஏற்பாடு செய்தால் இந்த பாவத்திற்கு விமோட்சனம் ஏற்படும் என்று எண்ணியவர் கோவில் குடமுழக்கு விழா தேதியை பல தடங்கல்களை கடந்து முடிவு செய்தார். 

முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு நடக்க போகும் இந்த ஆதிபரமேஸ்வரியின் குடமுழக்கு விழாவை பல ஊர் கிராம மக்களும் எதிர்பார்த்த காத்திருந்தனர். 

ஆனால் இவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாகிவிடும் என செல்வியின் அகம் முன்னமே அறிவுறுத்த,

 அந்த எண்ணத்தை அவள் யாரிடமும் வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதி காத்தாள்.

error: Content is protected !!