Kattangal 17

கட்டங்கள் – 17

மணி காலை 5:30

     சூரிய பகவான் அருளால் வானம் அதன் கருமை நிறத்தை இழந்து நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது.

        நித்யா  வழக்கம் போல் பால்கனியில்  யோகாவில் மூழ்கிருக்க, மதுசூதனன் அவள் செய்யும்  சேட்டைகளால் தூக்கம் கலைந்து அவளை பார்த்து கொண்டிருந்தான்.  மதுசூதனனும் வழக்கமாக முழிக்கும் நேரம் தான். ஆனால் தனக்கு பின் தூங்கி, தனக்கு முன் முழிக்கும் நித்யா அவனுக்கு போட்டியாகத் தான் தெரிந்தாள்.

                 “இவளிடம் காலையில் வம்பு வளர்க்கலாம்” , என்ற  எண்ணம் தோன்ற, அவன் நித்யாவின் அருகே சென்று, “எனக்கும் யோகா சொல்லி தரலாமே..”, என்று புருவம்  உயர்த்தி  புன்னகையோடு  கேட்டான் மதுசூதனன்.  பதில் ஏதும் கூறாமல்,  தன் விரல்களால்  10 நிமிடம் என் கைகாட்டி, தியானத்தில் ஆழ்ந்தாள் நித்யா.

            அவளை ஆழமாக பார்த்து கொண்டிருந்தான் மதுசூதனன். மதுசூதனன் நினைப்பது நித்யாவிற்கே  தெரியவில்லை. நம்மால் கணிக்க முடியுமா..?

      கண்களை திறந்த நித்யா மதுசூதனனை பார்த்தாள்.  அவனும் அவளை சளைக்காமல் பார்க்க,  “மனுசன், எப்பவும் காலையில் full form ல இருப்பாரு  போல….”, என்று எண்ணிக் கொண்டே, “பொதுவா யோகா  செய்யும் பொழுது பேசுறதில்லை..” என்று நிறுத்தினாள் நித்யா.    “ஆகா.. அது அல்லவோ.. பொற்காலம்..!!” , என்று மதுசூதனன் கூற, அவனை முறைத்து பார்த்தபடி, “யோகா சொல்லி தரனுமுன்னா நிறைய செலவாகும்..”, என்று கறாராக கூறினாள் நித்யா.

             “பணம் நமக்கு ஒரு விஷயமே இல்லையே.. எவ்வளவு நாளும் கொடுக்கலாம்…”, என்று உதட்டில் நமட்டு சிரிப்போடு மதுசூதனன் கூற, “உங்க பணம் யாருக்கு வேணும்.. குருதட்சணையா எனக்கு பணம் வேண்டாம்.. நான் குரு அப்படிங்கிற மரியாதையை நீங்க எனக்கு கொடுக்கணும்…”, என்று அவனை பார்த்து கண் சிமிட்டி கூறினாள் நித்யா.

        அவன் அவளை கூர்மையாக பார்க்க, “பார்த்தீங்களா… அப்படியே உங்க முகத்தில் கொஞ்சம் கொஞ்சமா கோபம் ஜாஸ்த்தி ஆகுது… சரி விடுங்க.. உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. உங்களுக்கு யோகாவும் வேண்டாம்..”, என்று உதட்டோர புன்னகையோடு  கூறிக் கொண்டு சமையல் அறைக்கு செல்ல  தயாரானாள் நித்யா.

            கதவருகே சென்ற நித்யா, மதுசூதனனை திரும்பி பார்த்து, “காபி வேணுமா..?”, என்று கண்ணடித்து கேட்டாள். அவன் பதில் கூறுமுன், ” நித்யா எஸ்கேப்…” , என்று தன் மனதிற்குள்  கூறிவிட்டு சமயலறை நோக்கி ஓடினாள்.

               நேற்றைய சம்பவம் மதுசூதனன் மனதில் நிழலாய் தோன்ற அவன் முகத்தில் மெல்லிய  புன்னகை தோன்றியது.

      ஜாக்கிங் செல்ல தயாராகி  படி இறங்கி  கீழே  வந்தான் மதுசூதனன்.  “உண்மையிலே நித்யாவிற்கு  சமைக்க தெரியுமா..?”, என்ற எண்ணம் தோன்ற, சமையலறை பக்கம் சென்றான்   மதுசூதனன்.

                                “அம்மா…” , என்று பேச்சியம்மா நித்யாவை  அழைக்க, “நான் உங்களுக்கு பொண்ணு மாதிரி…., என்னை நித்யான்னு கூப்பிடுங்க”, என்று  அரிசியை எடுத்தவாறே  நித்யா கூற, “சரி நித்யாம்மா.. “, என்று  அவள் கொடுத்த அரிசியை சுத்தம் செய்தவாறே  சிரித்து  தலை அசைத்து கூறினார் பேச்சியம்மாள்.

               “இவள்  தன் பேச்சால் அனைவரையும் மயக்கி விடுவாள்.”, என்ற  எண்ணம்   அவன் மனதில்  தோன்ற மதுசூதனன்   தலை அசைத்து, “ஆனால்,  என்னிடம்  அந்த வேலை நடக்காது”, என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்.

    “நித்யாம்மா.., நீங்க  என்னை விட நல்ல  சமைக்கிறீங்க… “, என்று பேச்சியம்மா  கூற, “இவர்கள்  என்னை இப்படி  தான் அழைப்பார்கள், இவர்கள் அழைக்கும் முறையை மாற்ற முடியாது “, என்ற எண்ணம் தோன்ற, அதை விடுத்து, “அப்படிலாம்  இல்லை…. ஏதோ எனக்கு தெரிந்ததை சமைக்கிறேன்.. உங்கள்  சமையலும் ருசியாக இருந்தது… “, என்று பேச்சியம்மாளை பாராட்டினாள்  நித்யா.

      பேச்சியம்மாள்  பதில் ஏதும் கூறாமல் வெக்கப்பட்டு சிரித்தாள்.

        “என்ன ப்ரோ…? ஜாக்கிங் கிளம்பலை.. “, என்று முகிலனின் குரல் கேட்க, “போலாம் வா… “, என்று கூறிக் கொண்டே இருவரும் ஜாக்கிங் சென்றனர்.

       நித்யா சமையலறையில்  மும்முரமாக  வீடு அமைதியாகிவிட்டது.

           சமையல் தெரிந்த  நித்யாவிற்கு பெரும் பிரச்சனை இருக்காது என்ற நம்பிக்கையில் நாம் வெண்பாவை தேடி செல்வோம்.

          காலையில் ஜிம் சென்று திரும்பிய முரளி, அவன் அறைக்குள் நுழைந்தான். வெண்பாவை அறையில் காணவில்லை. குளியறைக்குள் இருக்கிறாளோ என்று தேடினான் அவள் அங்குமில்லை.  தன் அறையில் இருந்து வெளியே வந்த முரளி, வெண்பாவை  தேடினான். ஒரு அறையில் அசோக் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, மற்றொரு அறை  காலியாக இருந்தது. சுந்தரம் தன் தோளில் துண்டோடு ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி  செய்தித்தாளை வாசித்து கொண்டிருந்தார்.

                  ஹாலில் நின்று கொண்டு  சமையலறையை  தன் கண்களால் துழாவினான்  முரளி.  அங்கு அமுதவள்ளி  சமையல் வேலையை செய்து கொண்டிருக்க ,  சித்ரா பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். சித்ராவை  தன் கண்களால் அழைத்தான் முரளி. “என்ன?” , என்று சித்ரா பாத்திரத்தை கையில் வைத்தபடியே   தன் கண்களால் வினவ, “அண்ணி எங்க..?”, என்று தன் உதடுகளை அசைத்து தன் கைகளை கேள்வியாக எழுப்பினான்.

                    அவனருகே வந்த சித்ரா, ” வெங்காயம், தக்காளி நறுக்கி தரேன்னு  உங்க ரூம்க்கு தான் கத்தி எடுத்துட்டு போனாங்க… “, என்று சித்ரா கூற, இரு கண்களையும் பெரிதாக உருட்டி முழித்து தலை அசைத்தான் முரளி. “இவன் ஏன் இப்படி திருதிருவென்று முழிக்கிறான் ?” , என்ற யோசனையோடு தன் வேலையை தொடர்ந்தாள் சித்ரா.

           பயந்த முகத்தோடு அறைக்குள் செல்ல, அங்கே ஓரமாக எலி கடித்து வைத்தாற்போல் காட்சி அளித்த வெங்காயம் அவனை பரிதாபமாக பார்த்தது.

                       வெண்பா கண் கலங்கி  மூச்சு திணறியபடி கட்டில் அடியில் இருந்து வெளியே வந்தாள்.

          “வெண்பா.. அங்க என்ன பண்ணிட்டு இருந்த..? நான் உள்ள வந்த அப்ப சத்தம் கொடுத்திருக்கலாமே..”, என்று முரளி  அவள் எழும்புவதற்கு உதவி செய்தபடியே  வினவ, “நான் கூப்பிட்டதை நீங்க கவனிக்கவேயில்லை… “, என்று தன் முகத்தை துண்டால் துடைத்த படி சோகமாக   கூறினாள் வெண்பா.

                 “சரி விடு… அங்க என்ன பண்ணிட்டு இருந்த..?”, என்று முரளி மீண்டும் வினவ, தன் கையிலிருந்த வெங்காயத்தை சோகமாக காட்டினாள் வெண்பா.

      வெண்பாவையும் , அந்த வெங்காயத்தையும் அவன் புரியாமல் பார்க்க, “இந்த வெங்காயம் நான் சொன்னதையே கேட்க மாட்டேங்குது… நான் இப்படி கட் பண்ணா.. அப்படி ஓடுது.. அப்படி கட் பண்ணா  இப்படி ஓடுது… அப்படியே இந்த வெங்காயம் கட்டிலுக்கு கீழே உருண்டு ஓடிருச்சு.. கண்ணெல்லாம் எரியுது..”,  என்று தன் கைகளை அங்கும்  இங்கும் அசைத்து வெண்பா சோகமாக கூற, அவளை கூர்மையாக பார்த்து கொண்டிருந்தான் முரளி.

“என்ன அப்படி பாக்கற..? இந்த வேலை கூட செய்ய தெரியலியான்னு பாக்கறியா..? நான் இந்த வேலை எல்லாம் செய்றதை சினிமால மட்டும் தான் பார்த்திருக்கிறேன்  முரளி… எங்க வீட்ல நான்   சமையலறை  பக்கம் கூட போனதேயில்லை “, என்று வெண்பா பரிதாபமாக கூறினாள் வெண்பா.

                       “முரளி மட்டும் தான் நீ சொல்றதை கேட்பான்… வெங்காயமெல்லாம் கேட்காது..”, என்று முரளி கண்ணடித்து கூற, அவனை முறைத்து பார்த்தாள் வெண்பா.

           “சரி வா.. நான் சொல்லி தரேன்,… “, என்று முரளி கையில் கத்தியோடு  வெங்காயத்தோடும் கீழே அமர்ந்து வெண்பாவிற்கு பொறுமையாக கற்றுக் கொடுத்தான் . வெண்பா ஆர்வமாக கற்றுக் கொண்டு முரளி அளவிற்கு நேர்த்தியாக இல்லையென்றாலும் சுமாராக வெங்காயத்தையும், தக்காளியையும் துண்டுகளாக நறுக்கி முடித்தாள் வெண்பா. “எப்படி இருக்கு..?” , என்று வெண்பா கண்களால் வினவ,  அவளை மெச்சுதலாக பார்த்தான் முரளி.

          முரளியின்  பாராட்டில்,  வெண்பாவின் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி  தோன்ற, “எனக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்திருக்கும் இவளை நான் என்றென்றும் மகிழ்ச்சியாக  வைத்திருக்க  வேண்டும்..”, என்று எண்ணிக் கொண்டான் முரளி.

                     இவர்கள் அறையில் நடக்கும் அனைத்தும் ஹாலில் அமர்ந்திருக்கும் சுந்தரத்தின் கண்களுக்கு தப்பவில்லை.

          வெண்பா சமயலறைக்குள் சென்று தான் நறுக்கிய காய்கறிகளை சித்ராவின் கையில் கொடுத்தாள்.

               “சித்ரா,  இன்னக்கி வீட்ல பூஜை இருக்கு. உங்க அண்ணியை தயாராகி வர சொல்லு…” , என்று  அமுதவள்ளி சித்ராவிடம் கூற, “சரி  அத்தை”, என்று தலை அசைத்து வேகமாக அவள் அறைக்குள் சென்றாள்  வெண்பா.

            “பூஜைக்கு எல்லாரும் வரணும்ன்னு தான் சொல்றேன்… அதுக்காக செய்த தப்பெல்லாம் மறந்தாச்சுன்னு அர்த்தம் இல்லை..”, என்று அமுதவள்ளி கூறியது காற்றில்  தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

        “வெண்பா.. அம்மாவுக்கு பயங்கர கடவுள் நம்பிக்கை வீட்ல ரெகுலரா பூஜை நடக்கும்…”, என்று முரளி தீவிரமாக கூற, “சரி” , என்று பவ்யமாக தலை அசைத்துக் கொண்டாள் வெண்பா.

          அனைவரும் பூஜை அறையில் நின்று கொண்டிருக்க, அமுதவள்ளி விளக்கேற்றி பூஜை செய்தார். அசோக்கை தவிர அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.  அனைவரும் பூஜையறை முன் அமர்ந்தனர். சித்ரா ஸ்லோகம் சொல்ல அனைவரும் இருகரம் கூப்பி அமைதியாக இறைவனை பிரார்த்தித்து கொண்டிருந்தனர்.

      சித்ரா ஸ்லோகம் கூறி முடிக்க, “வெண்பா , ஒரு பாட்டு பாடு..”, என்று வெண்பாவை பார்த்து முரளி கூறினான்.

     வெண்பா முரளியின் தாயைத்  தயக்கமாய் பார்க்க, “கடவுள்  முன்னாடி எல்லாரும் சமம்  தான். இதுல என் முகத்தை பார்த்து சம்மதம் கேட்க என்ன இருக்கு..? கேட்க வேண்டிய விஷயத்திற்கு கேட்கலை.. “, என்று அமுதவள்ளி முணுமுணுக்க , “அமுதா..” , என்று தன் மனைவியை அதட்டியவாறே,  “நீ பாடு மா.. “, என்று சுந்தரம் கூற,  தலை அசைத்து   இன்முகத்தோடு  பாட ஆரம்பித்தாள் வெண்பா.

            மனமுருகி அவள் பாடிய பாடல்,  வீடெங்கும் ஒலித்தது.

“ விளையாட இது நேரமா முருகா-என்

வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது

விளையாட இது நேரமா முருகா “

                           அவள் குரலில் அனைவரும் கட்டுண்டு பாடலோடு ஒன்ற, அசோக் தன் அறையிலிருந்து  வெளியே வந்து வெண்பாவை பார்த்து கொண்டிருந்தான்.

“ களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து

உளமார உனை நாடி உனை பாடி வரும்போது

விளையாட இது நேரமா முருகா

புரியாத புதிரோ நீ அறியாத கலையோ

பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ

விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து

விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது

விளையாட இது நேரமா முருகா “

      வெண்பா  பாடி முடித்த பின், முரளியின் தாய் கலங்கிய தன்  கண்களை துடைத்தவாறு, சமயலறைக்குள் சென்றார்.

          வெண்பா முரளியின் முகத்தை பார்க்க, முரளி அவளை தன் கண்களால் ஆரத் தழுவினான்.

           “அண்ணி..  செமயா பாடறீங்க.. எனக்கும் சொல்லி தருவீங்களா?”, என்று சித்ரா ஆர்வமாக வினவ, சம்மதமாக தலை அசைத்தாள் வெண்பா.

     “எல்லாம் கொஞ்ச நாள்ல சரி ஆகிரும்..”., சுந்தரம் சமாதானமாக கூற, வெண்பா மௌனமாக தலை அசைக்க, முரளி  குற்ற உணர்வோடு தன் தந்தையை பார்த்தான்.

          “ஒரு செயலை செய்யறதுக்கு  முன்னாடி யோசிக்கணும்..  செய்து முடித்த பிறகு வருத்தப்பட்டு பயனில்லை..”, என்று முரளியை பார்த்து கூறிவிட்டு ஹாலுக்கு சென்று சோபாவில் அமர்ந்தார்.

முரளி  அலுவலகத்திற்கு தயாராக அவர்கள் அறைக்குள் சென்று தன் வேலையை பார்க்க தொடங்கினான். வெண்பா  வீட்டோடு ஒன்றி போக  முயற்சி செய்து கொன்றிருந்தாள்.

               அனைவரும் வேலையாக இருப்பதால், நாம் நித்யாவின் சமையலை ருசி பார்க்க, செல்வோம்.

         டைனிங் டேபிளில் தாளம் போட்டபடி முகிலன் அமர்ந்திருக்க,  அவனை ஆச்சர்யமாக பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்தான் மதுசூதனன். “என்ன ப்ரோ.. அப்படி பார்க்கிற… அண்ணி ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல…  உன் பருப்பே நேத்து வேகலை… நான் எல்லாம் எம்மாத்திரம்..”, என்று கண்ணடித்து முகிலன் கூற மதுசூதனன் அமைதியாக அவனை பார்த்தான்.

                   “நீங்க இரெண்டு பெரும் ரெடி ஆகிட்டீங்களா..? டிஃபனும் ரெடி”, என்று கூறியபடியே  சமயலறையில்  இருந்து   வெளியே வந்தாள் நித்யா.

             பேச்சியம்மாள்  பாத்திரங்களை மேஜை மீது அடுக்கி வைக்க, “நீங்க கிட்சன் வேலையை பாருங்க…  நான்   பரிமாறிக்கிறேன்..”, என்று பேச்சியம்மாளிடம்  கூறியபடியே   நித்யா பொங்கலை மதுசூதனனுக்கும்  முகிலனுக்கும் பரிமாறினாள்.

                “கார்ன் பிளக்ஸ் எங்க..? எவனாவது காலையில பொங்கல் சாப்பிடுவானா..? ஆபீஸ்ல தூக்கம் தான் வரும்.. “, என்று மதுசூதனன் முணுமுணுக்க,  மதுசூதனன் பேசியது கேட்கவில்லை என்றாலும் அவன்  முகத்தில் உள்ள கோபத்தை பார்த்து ஓடி வந்த பேச்சியம்மாள், “நான் கார்ன் பிளக்ஸ் எடுத்துட்டு வரட்டுமா..?”, என்று பதறியபடியே வினவினார்.

          “அதெல்லாம் வேண்டாம்…. “, என்று நித்யா மறுக்க, வேறு வழின்றி ச மையலறைக்கு சென்றார் பேச்சியம்மாள்.

                       “என்ன தைரியத்துல, இதெல்லாம் பண்ற..?”, என்று மதுசூதனன் நித்யாவிடம் கோபமகா கேட்டான்.

                 “வேலைகாரங்க முன்னாடி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற அளவுக்கு நீங்க மோசமானவர்  இல்லைங்கிற நம்பிக்கை….” என்று நித்யா நிதானமாக கூற, வேறு வழின்றி தன் தட்டில் உள்ள பொங்கலை உண்ண  ஆரம்பித்தான் மதுசூதனன்.

        “நம்ம ஊரு சாப்பாடு இருக்கும் பொழுது, எதுக்கு packed food சாப்பிடணும்”, என்று நித்யா தன்மையாக கூற, “அப்படி சொல்லுங்க அண்ணி.. பொங்கல், சட்னி, சாம்பார்.. செம டேஸ்ட்..”, என்று பொங்கலை ருசித்த படியே கூறினான் முகிலன்.

       “அம்மா.. அப்பா.. இந்த பொங்கல் சாப்பிட கூடாது..”, என்று மதுசூதனன் கடுப்பாக கூறினான். அவங்களுக்கு திணை பொங்கல் என்று நித்யா முகிலனுக்கு சட்னி வைத்த படியே கூற,  “நித்யா சாப்பாடு மணக்குது…”, என்று கூறியபடியே கோவிந்தனும், புஷ்பாவும் உணவருந்த அமர்ந்தனர்.  அனைவரும் ஒன்று கூடிய பின் தன் வார்த்தைக்கு மதிப்பேது  என்றெண்ணி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் மதுசூதனன். நித்யாவின் கைமணம் அவனை வாயடைக்க செய்தது என்றும் கூறலாம்.

                          “நீயும் சாப்பிடும்மா….. ஆஃபிஸுக்கு நேரம் ஆகுது..   மதுசூதனன் கூட சேர்ந்தே போய்டலாம்..”,  என்று  புஷ்பா கூற, மதுசூதனன் நித்யாவை ஆழமாக பார்த்தான். “இவள் வந்த பின், என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது..”, என்று தன் மனதிற்குள் நொந்து கொண்டான்  மதுசூதனன்.

               அனைவரும் அலுவலகம் செல்ல, நாமும் அவர்களை பின் தொடர்வோம்.

முகிலன் அவன் காரில் செல்ல, நித்யா மதுசூதனனோடு அவன் காரில் அலுவலகத்தை நோக்கி பயணித்தாள்.

      அலுவலகத்தில், நித்யா  தன் லேப்டாப்பில் மூழ்கி இருக்க, “அண்ணி.., proposal ரெடியா? அண்ணா Resource details கேட்டாங்க..” , என்று முகிலன் தயங்கியபடியே கூற, “வாவ்.. அண்ணன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா..? நைஸ்..” , என்று சிரித்தமுகமாக கூறினாள்.

“அப்ப.. அப்ப..”, என்று சிரித்த படியே கூறினான் முகிலன்.

        ” ஒரு 7+ experience ,  ஒரு 3+ experience, 2 freshers… Proposal க்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன் ரெண்டு நாள்ல finalize பண்ணிருவேன்.. Technical Requirements mail பண்றேன்..”, என்று நித்யா நிதானமாக கூறினாள்.

     ” கண்டிப்பா arrange பண்ணிரலாம் அண்ணி… “, என்று முகிலன் நித்யாவிடம் கூறிவிட்டு மதுசூதனன் அறையை நோக்கி சென்றான்.

சுழற் நாற்காலியில் சாய்ந்தபடி, தன்   விரல்களால் பேனாவை சுழற்றியபடி அலுவலகத்தை  நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் நித்யா. மிக பிரமாண்டமான அலுவலகம். பல ஆயிரம்  மனிதர்கள் அவர்கள் வேலையில் மும்முரமாக மூழ்கி  இருந்தனர். இத்தனை பேருக்கு  வேலை கொடுக்கும் மதுசூதனனை  நினைத்தாள்.

                    ” அவனின் கோபம் நியமானது தான். அவன் ஸ்டேட்டஸிற்கு ஏற்றார் போல் ஒரு பெண்ணை பார்த்திருக்கலாம். அந்த ஏமாற்றம் தான் என் மேல் கோபமாக மாறுகிறது. நான் விலகிவிட்டால் இவன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்”, என்று எண்ணினாள் நித்யா.

    மதுசூதனனிடம் இருந்து அழைப்பு வர, அவன் அறைக்குள் சென்றாள்  நித்யா.

     “Experienced resources கஷ்டம்.., ஒரு 3+ experience, 3 freshers arrange பண்றேன்.., You have to plan accordingly…”,  என்று லேப்டாப்பை  பார்த்த படி கூறினான் மதுசூதனன். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த முகிலனுக்கும் இது  புதிய செய்தி. முகிலன் அதிர்ச்சியாக பார்க்க, “நைஸ்.. Experienced team members handle பண்றதை விட இது எனக்கு comfortable தான். I hope team handling will be more easy”, என்று கூறிவிட்டு தன் இடத்திற்கு வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.

“கோபப்படுவாள்.. சண்டையிடுவாள் “, என்று எதிர்பார்த்த மதுசூதனனுக்கு ஏமாற்றமே.. அவள் செல்லும் திசையை பார்த்து கொண்டிருந்தான்.  முகிலன், “என்ன நடக்கிறது?” , என்று சிந்தித்தவரே தன் பணியை தொடர சென்றான்.

          இவன் கூறியதை கேட்டு அவள் அழகான புன்னகை மறைந்திருந்தது.  தீவிரமான முகம் அவன் கண் முன் தோன்றியது.  “Its just a beginning”, என்று ஏளன புன்னகையோடு கூறிக் கொண்டு தன் வேலையில் மூழ்கினான் மதுசூதனன்.

       “அவனிடம் ஏமாற்றத்தை ஒத்துக்கொள்ளாமல் வீராப்பாக கூறிவிட்டேன்.. ஆனால்  freshers and 3+ exp வைத்து எப்படி சமாளிப்பேன்..?” , என்று யோசித்த நித்யாவிற்கு கண்ணை கட்டியது.

         “பழிவாங்குகிறான்..”, என்ற எண்ணம் தோன்ற நித்யாவின் கோபம் பன் மடங்காக உயர்ந்தது. தன் கைப்பையை திறந்து, தன் டைரியை எடுத்து, “இதற்கெல்லாம் ஒரு நாள் இவன் பதில் கூறுவான்..”, என்று முணுமுணுத்தாள் கொண்டே, அடுத்த கட்டத்தின் நிறத்தை மாற்ற ஆரம்பித்தாள் நித்யா. “

3362

                                     கட்டங்கள் நீளும்….