Aanandha Bhairavi 12
Aanandha Bhairavi 12
ஆனந்த பைரவி 12
ஆனந்தனின் ரூம் கதவு திறக்க எல்லோரின் பார்வையும் அங்கே திரும்பியது.
பட்டு வேஷ்டி சட்டையில் ஆனந்தன், முழங்கை வரை கையை மடித்து விட்டிருக்க… பின்னால் பைரவி. அந்த மஞ்சள் நிறப் புடவையில்… ஒரு ரோஜா போல் இருந்தாள். பாட்டிக்கு கண்கள் கலங்க, வாசுகி அழுதே விட்டார்.
“ஷ்..! வாசுகி, என்ன இது? நல்ல நேரத்துல போயி கண் கலங்கிக் கிட்டு!” பாட்டி அதட்ட…
கண்களைத் துடைத்தவர், சிரித்துக் கொண்டே…
“ஆரம்பிக்கலாமா அத்தை” என, ஐயரை உள்ளே அழைத்து வந்தார்கள்.
கண்ணம்மாவும், கதிர்வேலும் ஜோடியாக உட்கார, அடுத்ததாக வாசுகியும், ராஜகோபாலும் உட்கார்ந்தார்கள். கடைசியாக ஆனந்தன் அமர… விழித்தபடி நின்ற பைரவியை இழுத்து ஆனந்தன் பக்கத்தில் இருத்திய சாதனா தானும் மறு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
மூன்று தலைமுறையும் அங்கு ஒன்றாக அமர்ந்திருக்க, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது அது.
**–**–**–**–**–**
கணபதி ஹோமம் சிறப்பாக முடிந்திருந்தது. ஐயரும் விட பெற்றிருக்க வீட்டு அங்கத்தினர்கள் அனைவரும் உட்கார்ந்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மகனும் வந்திருக்கவே கண்ணம்மா பாட்டி விருந்தை தட புடலாகப் பண்ணி இருந்தார். எல்லோரும் உண்டு விட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று சாதனா எல்லோரையும் ஒரு வழி பண்ணிக் கொண்டு இருந்தாள். ஆனந்தன் பக்கத்தில் பைரவியை அமர வைத்து அவளை ‘அங்கே பார், இங்கே பார், அண்ணாவைப் பார்‘ என்று படுத்தி எடுத்து விட்டாள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பாட்டி,
“போதும் சாதனா, பைரவி முகத்துல களைப்பு தெரியுது. நீ உங்க அம்மாவையும் அப்பாவையும் எடு. இல்லை உங்க தாத்தாவும் நானும் புது ஜோடி தானே, எங்களை எடு” என்று கலாய்க்க, சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்தாள் பைரவி.
“ஆமா, உங்க பாட்டி எதுக்கு இப்ப என்னை வம்புக்கு இழுக்கிறாங்களாம்?” இது தாத்தா.
“அதுவா தாத்தா, அண்ணா இன்னைக்கு அண்ணிக்கு புடவை, நகையெல்லாம் வாங்கிக் குடுத்தாரில்லை. அதுமாதிரி நீங்க பாட்டிக்கு ஒன்னும் வாங்கி குடுக்கலை இல்லை. அந்தக் கோபம் பாட்டிக்கு” சாதனா கோர்த்து விட…
“ஆமா, பெரிசா வாங்கிட்டான் உங்கண்ணன். வீட்டுக்கு வரப்போற மருமகளுக்கு புடவை, நகைன்னு வாங்கும்போது சும்மா தக தகன்னு வாங்க வேணாம். சரியான கஞ்சப்பய சாதனா உங்கண்ணன், சின்னதா ஒரு அட்டியலை வாங்கிட்டு இதுதான் இப்ப ஃபேஷன் எங்கிறான்.” பாட்டி ஆனந்தனை கேலி பண்ண எல்லோரும் சிரித்தார்கள்.
புன்னகையோடு ஆனந்தன் பார்த்திருக்க, இப்போது ராஜகோபால் ஆரம்பித்தார்.
“அதாவது பரவாயில்லை அம்மா. டிசைனர் சாரிதான் இப்போ ஸ்டைல் அப்படீன்னு ஒரு புடவையைக் காட்டினானே. வாசுகிக்கு மயக்கமே வந்திருச்சு, பட்டுப் புடவைதான் எடுக்கனும்னு அவ ஸ்ட்ரிக்டா சொன்னதால இதை செலக்ட் பண்ணினான்” அவர் பங்கிற்கு அவரும் வார, பைரவி நெளிந்தாள்.
மெதுவாக பைரவி பக்கம் நகர்ந்த சாதனா அவள் காதில்,
“அண்ணா செலக்ட் பண்ணின டிசைனர் சாரி சூப்பரா இருந்துது. இந்த ஓல்ட் பீப்பிளுக்கு அது பிடிக்கலை. ஆனாலும் அண்ணா அதை வாங்கி வச்சிருக்காங்க. உங்களுக்கு அப்புறமா குடுக்கலாம் சொன்னாங்க” ரகசியம் பேசினாள்.
சட்டென்று ஆனந்தை பைரவி திரும்பிப் பார்க்க…
இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை புரிந்தவன் போல அவன் புன்னகை விரிந்தது.
எந்த ஒரு பேதமும் இல்லாமல், முகம் சுளிக்காமல் ஒட்டுமொத்த குடும்பமும் தன்னை ஏற்றுக் கொண்டதே என பைரவி நெகிழ்ந்து போனாள். வேலை இருப்பதாகச் சொல்லி ஆனந்தன் உடை மாற்றிக் கிளம்ப, பைரவியை வீட்டில் விட பாட்டி ஆயத்தமானார்.
“இல்லை பாட்டி, நான் பைரவியை கொஞ்சம் குற்றாலம் வரைக்கும் கூட்டிட்டு போறேன். வேலை இருக்கு. அப்புறமா ட்ரைவர் கூட அனுப்பிடுறேன்.”
“ஓ…! அப்படியாப்பா, ரொம்ப லேட் பண்ணிட வேணாம். கமலா பயந்திடுவா“
எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டாள் பைரவி. அவள் பக்க கதவை திறந்து விட்டவன் அவள் ஏறி அமர்ந்ததும் காரை ஸ்டார்ட் செய்தான். தன்னை ஓர் ராணி போல உணர்ந்தாள் பைரவி.
**–**–**–**–**–**–**–**
கார் ரிசோட்டை அடைந்ததும் பார்க் பண்ணிவிட்டு நேராக பைரவியை தன் அறைக்கு அழைத்துச் சென்றான் ஆனந்தன். பி ஓ பி இன்னும் இருந்ததால் அத்தனை வேகமாக பைரவியால் நடக்க முடியவில்லை.
மெதுவாக அவள் நடந்துவர அவள் வேகத்திற்கு ஏற்ப தானும் மெதுவாகவே நடந்து வந்தான்.
அக்கம் பக்கத்தில் இருக்கும் அத்தனை கண்களும் தன்னையே பார்ப்பதைப் போல ஒரு சங்கடம் அவளுக்குள்.
தன் ரூமை அடைந்ததும் அங்கிருந்த சோஃபாவில் அவளை அமரச் சொன்னவன், ஒரு பெரிய பேப்பரை கொஃபி டேபிளில் பரத்தினான். ஒரு கட்டிடத்தின் ப்ளூ பிரின்ட். கேள்வியாக அவனைப் பார்த்தாள் பைரவி.
“டுவரிஸ்ட் இப்பெல்லாம் ரொம்ப ஜாஸ்தியா குற்றாலத்துக்கு வாறாங்க பைரவி. சீசன் டைம்ல கொட்டேஜஸ் பத்தலை. அதான் இன்னும் கொஞ்சம் எக்ஸ்டென்ட் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன். இந்த வாரம் தான் அப்ரூவல் கிடைச்சுது.” என்று சொல்லி அதை அவளுக்கு நிதானமாக விளக்கினான்.
“ரொம்ப நல்லா இருக்கு ஆனந்த். நீங்களே டிசைன் பண்ணினீங்களா?”
“இல்லைடா. ஐடியா என்னோடது. இப்படி இப்படித்தான் இருக்கணும்னு நான் ஓல்ரெடி டிசைட் பண்ணிட்டேன்.என் ஃப்ரெண்ட் ஒருத்தன் என்ஜினியர். அவன்தான் டிசைன் பண்ணினான். பிடிச்சிருக்கா?”
“ம்… ரொம்ப பிடிச்சிருக்கு. ஒவ்வொரு தேவையையும், அது சின்னதா இருந்தாக் கூட அதையும் யோசிச்சு பண்ணி இருக்கீங்க.” அவள் லேசாய்ப் புன்னகைத்தபடி பாராட்ட,
“அது இந்தத் தொழில் எனக்கு கத்துக் குடுத்த அனுபவம் பைரவி. சின்ன வயசில இருந்தே ரொம்ப ஆசை. இப்படி ஒரு தொழில் ஆரம்பிக்கணும்னு. வீட்ல எல்லாருக்கும் நான் மெடிக்கல் ஃபீல்ட்ல போகணும்னு விருப்பம் இருந்தது. ஆனா என்னோட ஆசையை புரிஞ்சுக்கிட்டு என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணினாங்க.” அவள் லேசாக சிரிக்க, கேள்வியாக அவளைப் பார்த்தான்.
“இல்லை, ராஜகுமாரன் எதைச் சொன்னாலும் தான் அங்க மறு பேச்சே இல்லையே.”
லேசாக தலை ஆட்டியபடி சிரித்து அதை ஆமோதித்தவன்,
“ம்… ரொம்பவே சப்போர்ட் பண்ணினாங்க. ஹொட்டேல் அட்மினிஸ்ட்ரேஷன் செலக்ட் பண்ணினேன். சென்னையில கூட பண்ணி இருக்கலாம். ஆனா எனக்கு பெஸ்ட் இன்ஸ்டிட்யூட் தான் வேணும்னு கர்நாடகா போனேன். அம்மா ரொம்ப யோசிச்சாங்க, புது இடம்னு. நான் எதைப் பத்தியும் யோசிக்கலை. நாலு வருஷம் மனிப்பால்ல (Manipal) இருந்தேன்.”
அந்தப் பிடிவாதம் இப்போதும் அவன் கண்களில் தெரிந்தது.
“புதிய ஃபீல்ட். குடும்பத்துல யாருக்குமே அனுபவம் இல்லை. இருந்தாலும் எதைப் பத்தியும் யோசிக்காம பேங் லோன் போட்டு எல்லாம் எனக்கு பண்ணி குடுத்தாங்க. ஒவ்வொன்னுக்கும் என் கூடவே நின்னாங்க. நெகடிவ் தோட்ஸ் என் மனசுல எந்த இடத்திலையும் வர விடாம பாத்துக்கிட்டாங்க.” உணர்ச்சிக் குவியலாக அவன் பேசிக் கொண்டிருக்க மௌனமாக கேட்டிருந்தாள் பைரவி. மென்மையாக அவளைப் பார்த்து சிரித்தவன்,
“இப்போ இங்க இருக்கிற என்னோட சாம்ராஜ்யம் என்னோட பத்து வருஷக் கனவு, விடா முயற்சி எப்படி வேணா வெச்சுக்கலாம். வேலைன்னு வந்துட்டா எனக்கு எல்லாமே ரெண்டாம் பட்சம்தான்.” அவன் அர்த்தமுடன் சிரிக்க, அவளும் சிரித்துக் கொண்டாள்.
“இதை யாரு புரிஞ்சுக்கிறாங்களோ இல்லையோ அம்மணி புரிஞ்சுக்கனும்.” அவன் சொல்ல சிரித்தபடி தலை குனிந்தாள் பைரவி.
எழுந்து வந்து மெதுவாக அவள் கை பற்றி அவளையும் எழுப்பியவன்,
“பைரவி, கணபதி ஹோமம் முடிஞ்ச கையோட இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கிறதுன்னு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. இனி ஒரு ஆறு மாசத்துக்கு என்னால எங்கேயும் அசைய முடியாது. வீட்டுக்கு கூட அதிகம் போக முடியாது. பாட்டி கிட்ட இப்பவே சொல்லிட்டேன். எனக்காக காத்திருக்காம நேரத்துக்கு சாப்பிடனும்னு.”
ஒரு கை அவள் கரத்தைப் பிடித்திருக்க.. மறு கையால் அவள் இடை வளைத்து தனதருகே இழுத்தவன்,
“பைரவி… நீ இங்க அடிக்கடி வந்து போவியா? உன்னைப் பாக்காம எனக்கு… கஷ்டமா…” அவன் தடுமாற, அவள் விழி விரித்து அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்னால உன்னை வந்து பாக்க முடியாது. ஆனா பாக்காமலும் இருக்க முடியாது. வருவியா?” அவள் அவனை இன்னுமே ஆச்சரியமாக பார்க்க…
“எதுக்கு இப்போ இந்த முழி முழிக்கிற?” மௌனம் கலைந்தவள்,
“யாரோ தனக்கு இத்தனை வயசுக்கு மேலே காதலெல்லாம் வராதுன்னு சொன்னாங்க!”
“ஓ… அப்ப இதுக்கு பேரு தான் காதலா?”
“ஆஹா, நீங்க ரொம்ப பேபிதான், நான் நம்பிட்டேன்” வாய் விட்டு சிரித்தவன்…
“லியம் இன்னைக்கு பேசினார்.”
“என்னவாம்?”
“அப்ரூவல் கிடைச்சுட்டுதுன்னு டெக்ஸ்ட் பண்ணினேன். அதான் கூப்பிட்டு விஷ் பண்ணினார்“
“ம்…”
“பைரவி… இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா, ரொம்ப நேரத்துக்கு என்னால நல்லவன் மாதிரி எல்லாம் நடிக்க முடியலை.” குரல் குழைந்திருக்க, அவள் இதழ் நெருங்கினான் ஆனந்தன். அந்த ஆழ்ந்த குரலில் தன்னை மறந்த பைரவி, தன் இடை வளைத்திருந்த கை சொன்ன புதுக் கதைகளில் மெல்ல விழித்தவள் தன் ஒற்றை விரலை அவன் உதடுகளில் வைத்து தடுத்து…
“என்ன பூஞ்சோலை பண்ணையாரே! எல்லை தாண்டுறீங்க?” எனக் கேட்க, அதே ஆழ்ந்த குரலில் சிரித்தவன்…
“யாருகிட்ட தாண்டிட்டேன்? பண்ணையார் அம்மாகிட்ட தானே?” என்றான்.
“நான் ஒன்னும் பண்ணையார் அம்மா கிடையாது” அவள் சிலுப்பிக் கொள்ள,
“அப்போ நீங்க யாராம்?”
“பைரவி… ஆனந்தனின் பைரவி… ஆனந்த பைரவி!” நின்று நிதானித்து சொல்லி முடித்தவள், தன் இதழ் கடித்து சிரிக்க,
அந்த இதழ்களை தன் விரல்களால் விடுவித்து வருடியவன்…
“கொல்லுறடி நீ இன்னைக்கு! சீக்கிரம் கிளம்பு பைரவி. நான் ட்ரைவரை ட்ராப் பண்ண சொல்லுறேன்.” அவன் கை வளைவில் இருந்தபடியே,
“ஏன் நீங்க வரல்லையா ஆனந்த்?” என்றாள்.
“நான் வந்தா சில பல சேதாரங்கள் இருக்கும், பரவாயில்லையா?” குறும்பாக சிரித்தவனை லேசாக முறைத்தவள்,
“இன்னைக்கு ரொம்ப வம்பு பேசுறீங்க”
“நீ என்னை மாற்றி விட்டாய் பெண்ணே!” வேண்டுமென்றே அவன் நாடக பாணியில் உரைக்க, சிரித்தவள்,
“இதெல்லாம் அம்மாவுக்கு தெரிஞ்சுது, கொன்னுடுவாங்க.”
“ஐயோ பைரவி! இதையெல்லாம் போய் யாராவது அம்மாகிட்ட சொல்லுவாங்களா?”
“ஷ்… கேலி பண்ணாதீங்க ஆனந்த். அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். லியம் ஒரு தரம் சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு வந்துட்டான். அன்னைக்கு என்னைப் பாத்தாங்களே ஒரு பார்வை…! யப்பா, லைஃப்ல மறக்க முடியாது“
“ம்…”
“அப்புறம் அவன் என்னோட ஃப்ரெண்டுன்னு சொல்லி இன்ரடியூஸ் பண்ணினேன். அவனோட கொஞ்ச நேரம் பேசினதுக்கு அப்புறம்தான் சமாதானம் ஆனாங்க.”
“ம்…”
“நான் என்ன கதையா சொல்றேன்? ம்… கொட்றீங்க?”
“உங்கம்மா கிட்ட என்னை என்னண்ணு இன்ரடியூஸ் பண்ணுவே பைரவி? ஃப்ரெண்டுன்னா?”
தவித்துப் போய் அவனைப் பார்த்தவள் இடம் வலமாக தலை ஆட்டினாள்.
“அப்படி சொல்ல என்னால முடியாது.”
“அப்போ எப்படி சொல்லுவே?” அவன் கண்களை தீர்க்கமாக பார்த்தவள்…
“என்னோட எல்லாமுமே இந்த ஆனந்த் தான்னு சொல்லுவேன்” அவளை ஆழ்ந்து பார்த்தவன்…
“சொல்லுற தைரியம் இருக்கா?” என்றான். ஒரு கணம் அந்தக் கண்களில் வந்து போன பயத்தைக் கண்டவன்…
“ஹேய் பைரவி” என அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“எதுக்கு பயப்படுறே இப்போ? நான் எதுக்கு இருக்கேன்? உன்னை தனியா விட்டுட்டு வேடிக்கை பாப்பேன்னு நினைச்சியா? நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்” அவன் அணைப்பில் பாதுகாப்பாய் உணர்ந்தவள்,
“அப்படி இல்லை ஆனந்த். இந்த விஷயத்துல அம்மா கொஞ்சம் கன்சர்வேடிவ்.”
“பொண்ணுங்களைப் பெத்த எல்லா அம்மாமாரும் அப்படித்தான் இருப்பாங்க. இப்போ நம்ம வீட்டையே எடுத்துக்கோ. சாதனா யாரையாவது கை காட்டினா எங்கம்மாவும்தான் பின்னிடுவாங்க.”
“ம்…! ஆமா. ஆனந்த் நீங்க அம்மாவை தப்பா புரிஞ்சுக்கலை இல்லை?” அவள் தவிப்புடன் கேட்க…
“இல்லைடா, இப்போ அம்மணிக்கு என்ன பிரச்சினை. என் மாமியாரை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னா?”
அவள் அண்ணார்ந்து அவன் முகம் பார்த்து அப்பாவியாக சிரித்தாள்.
அவள் நெற்றியை தன் நெற்றியால் மோதியவன் குறும்பாய் சிரிக்க… அத்தனை அண்மையில் தெரிந்த அந்தக் கண்களில் பைரவி பார்த்தது அவன் அழைப்பையா?, இல்லை அவளிடம் வேண்டி நின்ற அனுமதியையா?
எதையும் புரிந்து கொள்ள பிடிவாதமாய் மறுத்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் பைரவி.
ஆனந்தின் பைரவி!