varaaganathikaraiyoram 3

 

கோவை மாவட்டம்

 

“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே” ரேடியோவில் சுப்ரபாதம் ஒலிக்க, அது அந்த பங்களாவின் மூலை முடுக்கிலெல்லாம் பரவ, தலையணையை எடுத்து காதோடு அமுக்கி தனது தூக்கத்தை தொடர்ந்தான், மாடியில் துயில் கொண்டிருந்த கார்த்திகேயன்.

 

சிறிது நேரம் தூங்கியிருப்பான், கதவு தட்டப்படும் ஒலியில் மீண்டும் அவன் உறக்கம் களைய, கண்ணை திறக்காமல் குத்துமதிப்பாய் நடந்து சென்று கதவை திறந்த கையோடு, படுக்கைக்கு சென்று தன் தூக்கத்தை தொடர…

 

உள்ளே வந்த அவனின் தாய் அபிராமி,

 

“டேய் கார்த்தி… மணி ஆறே முக்கால் டா, உன் அண்ணா கூட இன்னக்கி ஜாக்கிங் போறேன் னு நேற்று சொன்னல்ல கிளம்பு..! கிளம்பு..!

அவன் இன்னும் பத்து நிமிசத்துல ஆரம்பித்திருவான்”

 

என்றவாறு அவனை கிளப்ப முயற்சி செய்ய…

 

அவனோ அதை காதில் வாங்காமல், தாயை தன் அருகில் அமரவைத்து, மடியில் தலைசாய்ந்து இன்னும் சுகமாய் உறங்கிகொண்டிருந்தான்.

 

பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றிலும் தோட்டத்தோடு கூடிய குளிர்ச்சியான பங்களாவில் வாழ்பவர்கள் மாணிக்கவேல் – அபிராமி தம்பதியினர். அவர்களது செல்வங்கள் தான் கார்முகிலன், கார்த்திகேயன் மற்றும் கார்த்திகாயினி.

 

தந்தை கார்மேகவண்ணன் நினைவாக மாணிக்கவேல் தனது பிள்ளைகளுக்கு அவரது பெயரையே சூட்டியுள்ளார்.

 

கார்முகிலன் பெயரில் மற்றும் தான் குளிர்ச்சி உடையவன். நிஜத்தில் அதற்கு நேர்மாறானவன். தனிமை விரும்பி. குடும்பத்தின் மீது பாசம் உண்டென்றாலும், அதனை வெளியே காமிக்க தெரியாதவன். சிறுவயதிலிருந்தே அதிகம் பேசமாட்டான். அவன் செயல்கள் மட்டுமே அதிகம் பேசும்.

 

பரம்பரை தொழிலான இவர்களது ராம் ஜவுளிகடையையும், இவன் புதிதாக தனது தாயின் பெயரில் தொடங்கியுள்ள அபி கன்ஸ்ட்ரக்ஷனையும் சேர்த்து நிர்வாகிக்கும் இளம் தொழிலதிபன்.

 

கார்த்திகேயன் நாம் வாழ்வதே சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தான் என்ற வகை. அதற்காக வெட்டி ஆபிசர் இல்லை, சமீபத்தில் தன் சொந்த முயற்சியில், இயற்கையான முறையில் காஸ்மெடிக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்து, அதனை வெற்றிகரமாக நடத்தி பிரபலமாகிக்கொண்டிருகும் நேச்சர் பிராண்ட்ஸின் முதலாளி.

 

கார்த்திகாயினி, சிறுவயதிலேயே தனது தந்தையுடன் ஜவுளிகடைக்கு சென்றதால் அங்குள்ள வித விதமான ஆடையை பார்த்து குஷியாகி, இப்போதும் கார்மன்ட் டிசைனிங் படித்து உடைகளோடு மல்லுகட்டும் நம்மை போல் ஒருத்தி. வீட்டில் உள்ள அனைவரும் அணிவது இவள் தேர்ந்தெடுத்த ஆடையையே. மூன்றாம் வருடம் தான் படித்துக்கொண்டிருக்கிறாள் என்றாலும், அவளது ஆடை ரசனை அபரிதமானது.

 

மேலும் இப்பொது கார்த்திகாயினிக்கு கல்லூரி மதியமே முடிவதால், இவர்களது கடைக்கு சென்று, டிசைன் செய்யும் விதத்தை நேரிடையாக முகிலனிடமே கற்று கொள்கிறாள். தனது அண்ணாவின் திறமையை கண்கூடாக கண்டு வருவதால், எப்போதும் இருக்கும் பிரமிப்பு கூடுதல் ஆகி, இப்பொழுதெல்லாம் வீட்டில் அண்ணன் புராணம் தான்.

 

இப்போது கார்த்திகேயனிற்கு வருவோம்.

 

அவனது தாய் மீண்டும் அவனை தூங்கவிடாமல் எழுப்ப,

 

“அம்மா நாளையில் இருந்து போறேன் மா…”

 

என்ற வழக்கமான வசனம் அவன் வாயில் இருந்து வந்தது.

 

பட்டென்று வாயில் ஒரு அடி போட்ட அபிராமி

 

“இதையே எத்தனை வருஷம் டா சொல்லுவ ?.. அதான் சொந்தமா தொழில் பண்ணிட்டு பண்ணுறேன் னு சொன்னல்ல… இப்போ என்னடா”

 

என்று சிறிது கோபமாக கேட்க, அவனோ

 

“சரிம்மா… ஆனா நேற்று நான் லேட்டா தான வந்தேன் ? ஒரு நாளைக்கி மனுஷன் எட்டு மணி நேரம் தூங்கணுமாம். இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு மா, எட்டு மணிநேரம் ஆக. நான் தூங்கிட்டு அப்புறம் போறேன் மா…”

 

என்று கூறியவாறே தாயின் மடியில் உறங்கிவிட்டான்.

 

அவனது தூக்கத்திற்கு அன்று ஆயுள் கம்மியோ என்னவோ , எங்கிருந்தோ வந்த அவன் தங்கை கார்த்திகாயினி,

( வீட்டிலேயே ஒரு கார்த்திக் இருப்பதால் செல்லமாக இவளை காயு என்று அழைப்பர்… கார்த்திக்கிற்கு மட்டும் குட்டிப்பிசாசு )

 

“என் அம்மா மடி, எனக்கும் இடம்குடு டா அண்ணா…”

 

என்றவாறு அவனது மண்டையை முட்டிக்கொண்டு இன்னொரு மடியில் படுக்க…

 

தூக்க கலக்கத்தில் தலையில் இடி விழுந்தாற்போல இவனது குட்டிப்பிசாசு இடிக்கவும், அவளது தலையில் நங்கென்று கொட்டியவன், தனது தாயிடம் அம்மா ப்ளீஸ் மா இவளை இங்க இருந்து கூட்டிட்டு போம்மா… நான் பாக்டரி போயிட்டு வர லேட் ஆகும் இன்னக்கும் என்று கெஞ்ச…”

 

அவ்வளவுதான்… தாயின் மனது உருகிவிட்டது.

 

“சரி கார்த்தி நீ தூங்கு”

 

என்று தட்டிகொடுத்து போர்வை போர்த்தியவர், காயுவை இழுத்து சென்றுவிட்டார்.

 

அவர் இவ்வளவு தூரம் ஜாக்கிங் போ என கெஞ்ச காரணம், கார்முகிலன் தன்னை பேணி பாதுகாத்து சிக்ஸ் பேக் வைக்கும் ஆள் என்றால், கார்த்திகேயனோ உடம்பு வலிக்க வேலை செய்யாமல், மூளையை வைத்தே முன்னேருபவன்.

 

அதனால் சிறிது சதை போட்டு, கொஞ்சம் குண்டாக நம்ம சின்னத்தம்பி பிரபு மாதிரி இருப்பான்னு வச்சிகோங்க…

 

கூடவே ஓவரா மூளைய யூஸ் பண்ணி படித்ததால் இப்போ கண்ணாடி வேறு அணிந்திருப்பான். ஆனால் அதுவும் அவனுக்கு பொருந்தியது தான் அதிசயம்.

 

பெரியவனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருப்பதால், இளையவன் இப்படி இருந்தால் பொண்ணு கிடைப்பது கடினமோ என்ற எண்ணமே அவரை கார்த்திக்கை ஜாக்கிங் போக சொல்லி தூண்டியது.

 

ஆனால் அவர் ஒன்றை அறியவில்லை. கார்முகிலன் கம்பீரமானவன் என்றால் கார்த்திகேயனோ மனதுக்கு குளிர்ச்சியானவன். அவனது முகம் சிரித்தால், பார்ப்பவரையும் என்னுடன் சிரியேன் என்று அழைக்கும் கவர்ச்சிமிக்கது.

 

கார்த்திக்கின் சிரிப்பிற்கு முன் முகிலனின் கம்பீரம் தோற்றுவிடும்.

 

தனது மகளை இழுத்து சென்ற அபிராமி, அவள் குளித்து கல்லூரி செல்ல ரெடியாக இருப்பதை பார்த்து, அவளை டைனிங் டேபிளில் அமரவைத்து காலை உணவை பரிமாறினார். உண்டு முடித்தவள் மணி பார்க்க அது ஏழு முப்பதை காட்டியது.

 

“சரிம்மா… டைம் ஆச்சு நான் போயிட்டு வரேன்”

 

என்றவாறு காரின் பின்சீட்டில் அமர்ந்து டிரைவர் காரை கிளப்பவும், தாயிற்கு கைகாமித்து விடைபெற்றாள்.

 

சிறிது தூரத்தில் வீட்டை சுற்றி ஓடிகொண்டிருக்கும் கார்முகிலன், இந்த காட்சியை சிறிது ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதும் காண்பது தான், சிறிதும் சலிக்கவே செய்யாத காட்சி…

 

“தான் இது போல் யாருக்கேனும் கைகாட்டி விடைபெற்றிருக்கிறோமா ?”

 

என்று ஒரு அர்த்தமில்லாத யோசனை தானாகவே ஓடியது அவனுக்குள்.

 

தலையை உலுக்கியவன் அந்த யோசனையில் இருந்து வெளிவந்து தனது அலுவலகத்தை நோக்கி கவனத்தை திசை திருப்பி ஓடினான்.

 

உள்ளே நுழைந்த அபிராமி, தனது கணவன் மாணிக்கவேல் சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருப்பதை பார்த்தாள். அவரிடம் சென்று

 

“என்னங்க”

 

என்று அழைக்க அவர் பேப்பரை விட்டு தலையை அசைக்காமல்

 

“என்னமா ?..” என்றார்.

 

ஆனால் அபிராமியோ, அவர் தன்னை முகம் கொடுத்து பார்க்காத கடுப்பில் மீண்டும்

 

“என்னங்க”

என்று அழுத்தி அழைக்க அவர் பேப்பரை மடக்கி டீபாவில் வைத்தவர்

“சொல்லடி…. அபிராமி…!!!”

என்று அபிராமி பட்டர் பாடிய ராகத்தில் விளையாட்டாக கலாய்க்க…

 

“உங்களுக்கு வீட்டிலேயே இருந்து வாய் ஓவர் ஆகிடுச்சி…”

என்று கடிந்துகொண்டவர், முறைத்துக்கொண்டே அருகில் அமர்ந்து,

 

“எதுக்கு இவ்வளவு சீக்கிரமா எழுந்தீங்க ? டாக்டர் உங்களை ஒருமாசம் நல்ல ரெஸ்ட் எடுக்க சொன்னாரு…”

 

என்று ஆதங்கத்துடன் கூற

 

“ஏய் அவரு வேலைக்கு தான் போகக்கூடாதுனு சொன்னாரு.. காலையில் நேரத்துல எழுந்துக்க வேண்டாம்னு சொல்லல… ஒரு சாதாரண பிளட் பிரசருக்கு நீ பண்ணுற அலப்பறை இருக்கே… இதய நோயாளி மாதிரி கவனிக்குற”

 

என்று சிரித்துகொண்டே சொன்னார் மாணிக்கவேல்.

பதறிய அபிராமி,

“என்னங்க காலையிலேயே அபசகுனமா பேசுறிங்க… ? உங்களுக்கு ஆஸ்துமாவும் கூடவே இருக்கு மறந்துராதீங்க”

என்றாள்.

 

மாணிக்கவேல் உடனே,

 

“சரி பேசல…”

என்றவர் பின்பு,

 

“எதற்கு கூப்பிட்ட அத சொல்லு முதல”

என்றவாறு அவளது மனதை திசைதிருப்ப,

 

“நாம நம்ம குலதெய்வம் கோயிலுக்கு போய் ரொம்ப வருஷம் ஆச்சுங்க… அதுவும் நம்ம குலதெய்வம் முருகன கும்பிட்டா எந்த நோயும் வராதுனு தோணுது… ஒரே ஒருதரம் போயிட்டு வரலாங்க..”

 

எங்கே அவர் மறுத்து விடுவாரோ என்று கெஞ்சிக்கொண்டே கேட்க,

 

அதை புரிந்து கொண்டவர்…

 

“சரி போகலாம்… ஆனா குடும்பத்தோட தான் போகணும்.. இரு உன் பெரிய மகன் கிட்ட கேட்டு சொல்றேன்”

 

என்று கூறிகொண்டிருக்கும் பொழுதே, தோட்டத்தை சுற்றிமுடித்து கார்முகிலன் உள்ளே வந்தான். மாடியேறி தனது அறைக்கு செல்லுகையில்

 

“முகிலா..! கொஞ்சம் இங்க வாப்பா…” என்று அழைத்தார் மாணிக்கவேல்.

 

திரும்பி எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தவன்..

“சொல்லுங்கப்பா…”

 

என்றவாறு அவர் முகத்தையும் தன் தாயின் முகத்தையும் பார்க்க,

 

“உங்க அம்மா குலதெய்வம் கோவிலுக்கு போகணும்னு விரும்புறாப்பா… அதான் எப்போ போகலாமென்று கேட்க கூப்பிட்டேன்… எல்லாரும் ஒன்றாக தான் கிளம்பனும், உனக்கு எப்போ சவுகரியமோ அப்போ சொல்லு… எல்லாரும் போயிட்டு வரலாம்….”

 

என்று கூறினார்.

 

இவர் வீட்டில் ஓய்வெடுக்க, அதனால் அவனுக்கு கூடுதல் வேலை என்று தெரியும், அதனாலேயே அவனிற்கு சவுகரியமான நாளை கேட்டார்.

 

அவன் சிறிதுயோசித்து

 

“நாளைக்கே போயிட்டு வரலாம்..பா”

 

என்று கூறினான்.

 

பின்பு மாடியேறி, தான் நாளை செல்வதால், இன்று செய்ய வேண்டிய அனைத்து வேலையையும், மனதிலேயே ஒழுங்குபடுத்தி கொண்டே கிளம்ப தொடங்கினான்.

 

கீழே, நாளை செல்ல வேண்டும் என்பதால், அபிராமி தனது பெண்ணை கல்லூரியில் விட்டு வந்த டிரைவரிடம், வாங்கி வர வேண்டியதை பட்டியலிட, அவர் அதனை குறித்துக்கொண்டு வாங்க சென்றார்.

 

பின்பே கார்த்திகேயனிடம் கூற வேண்டும் என்று நியாபகம் வர, அவனை தேடி செல்லும்முன் அவனே கீழிறங்கி

 

“அம்மா சாப்ட என்ன”

 

என்றவாறே வர,

 

“இட்லியும் பொங்கலும் டா.. வா சாப்பிடு.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்”

 

என்றார்.

 

“ம்ம்… சொல்லும்மா”

 

என்றவாறே, அவனே அனைத்தையும் தட்டில் வைத்து அமர,

 

“நாம நாளை தேனிக்கு போறோம்டா.. அதனால என்ன வேலையா இருந்தாலும், கொஞ்சம் தள்ளி வச்சிட்டு வா..”

 

என்றார்.

 

“என்னமா திடிரென்னு எதாவது விசேசமா ?.. அண்ணாவிற்கு பொண்ணு கிடைச்சிருச்சா ?..”

 

என்று அடுக்கடுக்காய் சந்தோஷத்தில் கேட்க.. அவனது புஜத்தில் தட்டிய அன்னை,

 

“டேய் சும்மாதான் டா.. போகணும்னு தோனிச்சு… அங்க போயிட்டு வந்த பிறகாவது, உங்க அண்ணன் சம்மதம் சொல்றானானு பாக்கலாம்..”

 

என்று வருத்ததோடு கூற,

 

“அதெல்லாம் அண்ணா சம்மதிச்சிருப்பாங்க… நீங்க அழகான பொண்ணுங்களா காமிக்கணும்… அதவிட்டுட்டு சும்மா வத்தலும் தோத்தலும் காமிச்சா… அப்படிதான்”

என்று கிண்டலடித்தான்.

 

“ஆமா…ஆமா… இவன் பார்த்தான்.. அடப்போடா உன்வேலைய பார்த்துட்டு”

 

என்றார் அபிராமி.

 

“என்வேலைய நான் பார்க்க போய் தான்மா ஆகணும்… போயிட்டு வரேன்…”

 

என்றவாறு எழவும், கார்முகிலன் வரவும் சரியாக இருந்தது.

 

அண்ணனிடமும் சொல்லி சென்று, ஹாலில் இருந்த தந்தையிடமும் சிறிதுநேரம் பேசிவிட்டே, பாக்டரி சென்றான் கார்த்திகேயன்.

 

பின்பு கார்முகிலனும் உண்டு கிளம்ப, மாணிக்கவேல் மற்றும் அபிராமி தம்பதியர் கடைசியாக உண்டனர்.

 

உண்டு முடித்ததும் மாணிக்கவேல்,

 

“காயுகுட்டி கிட்ட நான் பேசிக்குறேன், இல்லைனா நான் காலேஜ் போகணும், ஆபிஸ் போகணும் னு அடம்பிடிப்பா… அப்படியே உன்னை மாதிரி”

 

என்று தனது மனைவியை வம்பிழுக்க, அவரும்,

 

“என் பொண்ணு தான… அதான் என்ன மாதிரி இருக்குறா..”

 

என்று சடைத்துக்கொண்டார்.

 

ஒருவாறு இவர்கள் குடும்பம் நாளை தேனி செல்வதை உறுதிபடுத்தினர்.

 

error: Content is protected !!