aanandha Bhairavi 17

aanandha Bhairavi 17

ஆனந்த பைரவி 17

அந்த black Audi லிவர்பூலை நோக்கி போய்க் கொண்டிருந்தது. ஆனந்தனும், பைரவியும் மாறி மாறி ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவள் கைகளில் கார் லாவகமாக ஓடுவதை ரசித்துப் பார்த்திருந்தான் ஆனந்தன்.

ம்கார் சமத்தா உன் பேச்சை கேக்குது பைரவி.” புன்னகையோடு அவன் கூற, சிரித்தவள்

மோட்டர்வே (motorway) நல்ல கண்டிஷன்ல இருக்கு ஆனந்த்

நேற்று இரவு அந்த நதிக்கரை ஓரத்தில் நீண்ட நேரம் இருவரும் பேச்சுக்களற்ற மௌனத்தில் திளைத்திருந்தார்கள். அவள் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு இருப்பது ஆனந்தனுக்கு நன்றாகவே புரிந்தாலும், இன்னும் காலம் தாழ்த்த அவனால் முடியாது. தன் கை அணைப்பில் இருந்தவளை தன்னை நோக்கித் திருப்பியவன்,

பைரவி! அப்பாகிட்ட பேசட்டுமா?” என்றான். அவனையே இமைக்க மறந்து அவள் பார்த்திருக்க

நம்ம வாழ்க்கையில முக்கியமான ஒரு விஷயம் பண்ணப்போறேன். அதுக்கு உன்னோட முழு சம்மதம் எனக்கு வேணும் பைரவி.” அப்போதும் அவள் அவனையே பார்த்திருக்கஅவளை தன்னருகே இன்னும் நெருக்கியவன்,

சொல்லு பைரவி, உங்க அப்பாக்கிட்ட நான் பேசட்டுமா?”

ம்…” அவள் சம்மதமாகத் தலை ஆட்ட, அவளை அப்படியே அணைத்து அவள் உச்சியில் இதழ் பதித்தான். தன் ரூம் வந்து சேரும் வரை அந்த கை வளைவை விட்டு பைரவி நகரவேயில்லை. தான் எடுத்திருக்கும் இந்த முடிவு சரியா?, தவறா? எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஆனந்தனை தன்னால் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பது மட்டுமே மனம் முழுவதும் வியாபித்து இருக்க, தன்னையும் அறியாமல் தலை ஆட்டி இருந்தாள்.

காலையிலேயே கிளம்பி இருந்தார்கள். நான்கு மணி நேரப் பயணம். கிளம்பும் போதே பைரவி சந்திரனுக்கு தகவல் தெரிவித்து இருந்தாள். அவரும் நகரத்தின் மையப் பகுதியில் இருந்தஸ்டே ஸிட்டியில்ஒரு கொட்டேஜை ஆனந்தனுக்காக புக் பண்ணி இருந்தார். அப்பா இத்தனை அனுசரணையாக இருப்பது தெம்பாக இருந்தாலும், அம்மாவை நினைக்கும் போது ஒரு பயப் பந்து வயிற்றுக்குள் உருண்டது பைரவிக்கு.

வழியில் ஓய்விற்காக சேர்விஸ் ஸ்டேஷன் ஒன்றில் காரை நிறுத்தி இருந்தார்கள். வீடு நெருங்க நெருங்க பைரவிக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. அவளின் மேல் ஒரு கண் வைத்திருந்த ஆனந்தன்,

என்னாச்சு பைரவி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

கொஞ்சம் பயமா இருக்கு ஆனந்த்

எதுக்குடா?”

இல்லைஅம்மா என் விருப்பத்துக்கு குறுக்கே எப்பவுமே வரமாட்டாங்க. ஆனா அவங்க மனப்பூர்வமா சம்மதிச்சாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.”

அதான் நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன் இல்லை. நீ எதுக்கு வீணா டென்ஷன் ஆகுற.” அவனைப் பார்த்து அவள் சிரிக்க

நைட் நல்லா தூக்கம் போனதா பைரவி?”

ம்நல்லா தூங்கினேன். ஏன் கேக்குறீங்க?”

குடுத்து வெச்சவ, என்ன பண்ண நமக்கு அந்த குடுப்பினை இல்லையே

என்னாச்சு ஆனந்த்?”

கண்ணை மூடினா ஒரு பொண்ணு வந்து ரொம்பத் தொல்லை பண்ணுறா. தூக்கத்தை தொலைச்சு ரொம்ப நாளாச்சுஅவன் அங்கலாய்க்க

எனக்கு நேத்து ராத்திரி பூரா ஒரு குரல் காதிலேயே ஒலிச்சிக்கிட்டு இருந்தது. அந்தக் குரல் தந்த மயக்கத்திலேயே நான் அப்படியே தூங்கிட்டேன் ஆனந்த்.” இப்போது அவள் குரலில் மயக்கம் இருந்தது. சிரித்தபடி அவளையே அவன் பார்த்திருக்க

என்னமா பாடுறீங்க. நான் அப்படியே ஸ்தம்பிச்சு போனேன். எனக்கு நீங்க பாடுவீங்கன்னு தெரியாது. தீடீர்னு நீங்க பாடின உடனேஎனக்கு சொல்லத் தெரியலை ஆனந்த். நான் எப்படி ஃபீல் பண்ணினேன்னு எனக்கு சொல்லத் தெரியலை.”

படிக்கிற காலத்துல பசங்க எல்லாம் சைட் அடிப்பாங்க, பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்க பைரவி. நான் சைட் அடிச்சு மார்க் போடுறதோட சரி.” அவள் சிரிக்கவும், தானும் சிரித்தவன்

வீட்டுல ரெண்டு பொண்ணுங்க இருந்ததாலேயோ என்னமோ பொண்ணுங்க பின்னாடி சுத்துறது ஏதோ தப்புன்ற எண்ணம் மனசுல வந்திடுச்சு. ஒரு வேளை என்னைக் கவர்ற மாதிரி பொண்ணைப் பாத்திருந்தா சுத்தியிருப்பனோ என்னவோ? அதுக்கு பின்னாடி என் லட்சியம் என்னை முழுசா உள்வாங்கிடுச்சு. என் கவனம் எங்கேயும் போகலை. என் பிசினஸ் தான் என்னோட காதலி. நான் ஆசைப்பட்டு பண்ணினதாலே எனக்கு எல்லாமே சக்ஸஸ் தான். அந்த வெற்றி ஒரு போதை பைரவி. அந்த போதையை அனுபவிச்சவங்களுக்கு தெரியும், அதோட சுகம். மேலே மேலேன்னு பண்ணத்தான் தோணும். நான் அப்படியே இருந்திட்டேன். சாதனா சிலநேரம் கேலி பண்ணுவா, நீ சரியான சாமியார் அண்ணான்னு.” அவன் நிறுத்த

ஆமா, சரியாத்தான் சொல்லி இருக்கா. சாமியார் தான் நீங்க.”

அப்படியில்லை பைரவி, தாத்தா பாட்டி ரொம்ப அனுபவிச்சு வாழுறவங்க. அம்மாவும் அப்பாவும் அதே மாதிரி அன்பா வாழுறாங்க. இதைப் பார்த்து வளரந்ததாலேயோ என்னமோ மனசுல ஒரு பொறுப்புணர்வு. நம்மளால குடும்பத்துல எந்த சலசலப்பும் வந்திடக் கூடாது அப்படீங்கிற பொறுப்பு. என்னோட வாழ்க்கையும் தாத்தா பாட்டி மாதிரி, அம்மா அப்பா மாதிரி அற்புதமா அமையனும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். எனக்கு வரப்போறவ என்னை அனுசரிக்கிறதை விட என் குடும்பத்தை அனுசரிச்சு நடக்கனும் அப்படீங்கிறதுதான் மேலோங்கி இருந்தது. அதனால்தான் பொறுப்பை அவங்ககிட்டயே குடுத்துட்டேன். அதுக்கப்புறம் எல்லாம் தலைகீழா மாறிப் போச்சு.” அவள் அமைதியாக கேட்டிருக்க

ஆனா இப்போ என்னோட நிலமையை பாத்தியா? ரோமியோ மாதிரி லண்டன் வரைக்கும் வந்து ஒரு பொண்ணு பின்னாடி சுத்தித் திரியுறேன். இதுல அவ வேற என்னை சாமியார்னு சொல்லுறா. விதி வலியது பைரவிஅவன் அங்கலாய்க்கவாய் விட்டுச் சிரித்தவள்,

கிளம்பலாம் ஆனந்த்என்றாள். பயணம் தொடர்ந்தது.

**–**–**–**–**

காலிங் பெல் அடிக்க கதவைத் திறந்தார் அருந்ததி

வணக்கம், நான் ஆனந்தன்.” இரு கரம் கூப்பி வணக்கம் வைத்த அந்த தாய் மண்ணின் மைந்தனைப் பார்த்த போது உற்சாகம் பொங்கி வழிந்தது அருந்ததிக்கு.

அடடே, தமிழா நீங்க உள்ளே வாங்க தம்பியார் எவர் என்று கூட விசாரிக்காமல் தமிழ் அங்கு வரவேற்கப்பட்டது.

உட்காருங்க தம்பி. இந்தியாவில எந்த இடம் நீங்க? என் வீட்டுக்காரரை பார்க்க வந்தீங்களா? கொஞ்சம் இருங்க, இதோ கூப்பிடுறேன்நொடிப்பொழுதில் கணவருடன் வந்தார் அருந்ததி. சோஃபாவில் அமர்ந்து இருந்தவன் எழுந்து அவருக்கும் வணக்கம் வைத்து

நான் ஆனந்தன்என்க, சந்திரன் முகத்தில் ஒரு சொந்தம் தெரிந்தது.

வணக்கம் தம்பிஎன்றார் வாய் நிறைய புன்னகையோடு.

என்னோட பூர்வீகம் தென்காசிக்கு பக்கத்தில இருக்கிற பூஞ்சோலை கிராமம். குற்றாலத்தில தொழில் பண்றேன்.”

பூஞ்சோலை கிராமம் என்றதும் அருந்ததிக்கு லேசாக மூளையில் மின்னல் வெட்டியது.

அப்போ கண்ணம்மா பாட்டி…” என்று அவர் இழுக்க

அவங்க என் பாட்டிதான்அருந்ததியைப் பார்த்து பதில் சொன்ன ஆனந்தனுக்கு இனியும் காலதாமதம் தேவையில்லை என்று புரிந்தது. சந்திரனைப் பார்த்தவன்,

நான் நேரா விஷயத்துக்கு வந்திடுறேன், பைரவி வேலை செய்த ஸ்கூலை தலைமுறை தலைமுறையாக எங்க குடும்பம் தான் நடத்திக்கிட்டு வருது. உங்க பொண்ணை ஸ்கூல்ல ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன். எங்க வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஃபோன்ல பேசுறது அவ்வளவு முறையில்லைன்னு தாத்தா பாட்டி ஃபீல் பண்ணினதால நேரே கிளம்பி வந்துட்டேன். மன்னிக்கனும், தாத்தா பாட்டிக்கு வீசா கிடைக்கலை. அதனால நான் மட்டும் வர்ர மாதிரி ஆகிடுச்சு.” புதுக்கதையை அவன் கச்சிதமாகப் புனைய சந்திரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். அருந்ததி சந்திரனை திரும்பிப் பார்க்க அந்தப் பார்வையில் வார்த்தையை விட்டு விடாதே என்ற எச்சரிக்கை இருந்தது

திடீர்னு இப்படி கேட்டாநாங்க கொஞ்சம் யோசிக்க நீங்க அவகாசம் கொடுக்கனும்சந்திரன் இழுக்க

இல்லையில்லை, நீங்க தாராளமா யோசிச்சு முடிவெடுங்க. இது என்னோட விசிட்டிங் கார்ட். என்னால ரொம்ப நாளைக்கு இங்க தங்க முடியாது. அப்பாக்கிட்ட பிசினஸை…” பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் ஃபோன் சிணுங்க

எக்ஸ்கியூஸ் மிஎன்றவன் எடுத்துப் பார்க்க, ‘பாட்டிஎன்றது.

சொல்லுங்க பாட்டிஎன்றவன் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை அருந்ததியிடம் நீட்ட, அவர் சந்திரனைப் பார்த்தார். அவர் சம்மதமாகத் தலையாட்ட, ஃபோனை வாங்கியவர் பேசியபடி உள்ளே சென்று விட்டார். மனைவி தலை மறைந்ததை ஊர்ஜிதம் பண்ணிக் கொண்ட சந்திரன்,

அப்புறம் ஆனந்தன், எல்லா இடமும் சுத்திப் பாத்தீங்களா?” என

இல்லை அங்கிள், வெள்ளிக்கிழமை தான் லான்ட் ஆனேன். நேத்து ஒரு நாள் லண்டன்ல இருந்துட்டு இன்னைக்கு கிளம்பிட்டோம். ஒரு வாரத்துக்குள்ள எப்படியும் கிளம்பிரனும். ரிசோரட்ல வேலை எல்லாம் முடிஞ்சுது. ஒரு சின்ன ஃபங்ஷன் ரெடி பண்ணி ஓபன் பண்ணனும். எல்லாம் இனித்தான் பார்க்கனும். தலைக்கு மேலே வேலை இருக்கு.” அவன் நட்புடன் சிரிக்க, தானும் சிரித்தவர்

எம் பொண்ணு ரொம்ப கஷ்டப் படுத்துறாளா?” என்றார்.

இல்லையில்லை. அவ என்னை கஷ்டப்படுத்தாம வேற யாரு கஷ்டப்படுத்தப்போறா? என்ன? கொஞ்சம் சப்போர்ட் பண்ண வேண்டிய நேரத்துல அவ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டா. என்னாலையும் அசைய முடியலைஅவன் சிரிக்க, தலையாட்டி அவரும் ஆமோதித்தார்

பைரவி வீட்டுல இல்லையா அங்கிள்?”

நல்ல தூக்கம். நீங்க லேட்டாத்தான் வருவீங்கன்னு சொன்னா.”

அப்படித்தான் ப்ளான் பண்ணினோம். ஆனா இன்னைக்கு ஃபுல்லா ஒரே டென்ஷனா இருந்தா. சீக்கிரம் பேசிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னுதான் வந்துட்டேன்.” தன் மகளிற்காக அவன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வது அந்தத் தந்தைக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தத் திருமணம் எந்தத் தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் ஆண்டவா என்று அவர் மனம் வேண்டிக் கொண்டது.

அருந்ததி பேசி முடித்து வெளியே வந்தவர், ஃபோனை ஆனந்தன் கையில் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவன்,

அப்போ நான் கிளம்புறேன் அங்கிள்என்று எழும்ப

வீட்டுக்கு வந்துட்டு ஒன்னுமே சாப்பிடாம போனா எப்பிடி?” அருந்ததி கேட்க, புன்னகைத்தவன்

நீங்க இன்னும் உங்க பதிலை சொல்லலையே ஆன்ட்டி, அதுக்கப்புறம் கை நனைக்கிறததுதான் முறையாம், பாட்டி சொன்னாங்க.” அவன் பாத்திரத்தை கச்சிதமாக நடித்து முடித்து விட்டு கிளம்பினான் ஆனந்தன்.

பைரவியின் வீட்டிற்கு கிளம்பும் முன்னமே பாட்டியுடன் பேசி இருந்தான் ஆனந்தன். எந்த இடத்திலும் பைரவியைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல பாட்டியும் ஃபோன் பண்ண, அருந்ததியுடன் பேசும் பிரச்சினை தீர்ந்தது ஆனந்தனுக்கு. பாட்டிக்கா தெரியாது எப்படிப் பேசவேண்டும் என்பது. வெளுத்து வாங்கி இருந்தார். நடந்தது எதுவும் தெரியாமல் சுகமான தூக்கத்தில் இருந்தாள் பைரவி.

**–**–**–**–**–**

என்னங்க, இப்படி திடீர்னு வந்து பொண்ணு கேக்குறாங்க?”

ஏன் அருந்ததி, வீட்டுல கல்யாண வயசுல பொண்ணு இருந்தா நாலு பேர் கேக்கத்தானே செய்வாங்க. இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?”

அதக்கில்லைங்க, பொண்ணு கேக்கிறதுக்காக யாராவது மெனக்கெட்டு லண்டனுக்கு வருவாங்களா? எங்கயோ உதைக்குதே.” அருந்ததி பாயின்ட்டை சரியாகப் பிடிக்க சந்திரன் திணறிப் போனார்.

இல்லை அருந்ததி, பையன் ஏதோ பிசினஸ் விஷயமா வந்திருப்பார் போல. நான் விலாவாரியா விசாரிக்கலை. அதை விடு. பையன் எப்படி? குடும்பம் எப்படி?”

உங்களுக்கு என்னங்க தோணுது?”

எனக்கு பையன் கே ம்மா. ஆனா குடும்பத்தை பத்தி உனக்குத்தானே தெரியும். அதான் கேட்டேன்.”

நான் போனப்போ பையனோட பாட்டியைத் தான் பாத்தேன். ரொம்ப நல்ல மாதிரிங்க. ஊருக்குள்ளே நல்ல செல்வாக்கான குடும்பம். கமலா வேற அவங்களைப் பத்தி நிறைய சொன்னா.

ஆனா பையனைப் பத்தி ஒன்னுமே தெரியாதேங்க

அதைப் பத்தி நீ ஏன் அருந்ததி கவலைப்படுற. நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி விசாரிக்குறேன்.” இவர்கள் பேச்சை இடை நிறுத்துவது போல பைரவியின் ரூம் கதவு திறந்தது.

அம்மா ஒரு டீ குடுங்களேன்.”

டீ அப்புறமா குடிக்கலாம், கண்ணம்மா பாட்டியோட பேரனை உனக்குத் தெரியுமா பைரவி?” அருந்ததி போட்டு உடைக்க, பைரவி ஆந்தையைப் போல் விழித்தாள்.

யாருயாரும்மா? அவள் திக்கித் திணற,

பேரு ஆனந்தனாம். உன்னைக் கூட ஸ்கூல்ல பாத்திருக்காங்களாம்.” பைரவி கொஞ்சம் சுதாரித்துக் கொண்டாள்.

ம்ஆமாம். லேப் சம்பந்தமா ரெண்டு வாட்டி பேசி இருக்கேன். இப்போ அதுக்கு என்னம்மா?”

அந்தப் பையன் இப்போ நம்ம வீட்டுக்கு வந்திருந்தார் பைரவி.”

என்என்ன? இது எப்போ?” அவன் இனிமேல் தான் வருவான் என்று அவள் பாத்திருக்க, அவன் வந்து போய்விட்டானா? இது என்ன கூத்து. அவள் சந்திரனைப் பார்க்க, அவர் கண்களில் எச்சரிக்கை இருந்தது.

அது ஒன்னுமில்லைம்மா. அந்தப் பையனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு போல. ஏதோ பிசினஸ் விஷயமா லண்டன் வந்தப்போ நம்மையும் பாத்துட்டு போகலாமேன்னு வந்திருக்கார்.”

…” கதையை ஆனந்த் இப்படி மாற்றி விட்டாரா? பைரவி மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

ஏன் பைரவி, அந்தப் பாட்டி வீட்டுக்கு நீ போயிருக்கயா? அங்கெல்லாம் எப்பிடி? உங்கூட நல்லா பழகுவாங்களா?” இது அருந்ததி.

ம்போயிருக்கேன்மா. ஒரு தரம் ஏதோ பூஜை இருக்குன்னு பாட்டி கூப்பிட்டாங்க. அப்போ போனப்போ எல்லாரையும் பாத்தேன்.”

இந்தப் பையனோட அம்மா, அப்பா எல்லாரையும் பாத்தியா?”

ம்ஒரு தங்கையும் உண்டு, மெடிசின் பண்ணுறா.”

இந்தப் பையன் என்ன பண்ணுதாம்?”

சரியா தெரியலைம்மா. ஏதோ குற்றாலத்துல ரிசோர்ட் இருக்கிறதா பாட்டி ஒரு முறை சொன்னாங்க.”

என்ன அருந்ததி நீ, இதையெல்லாம் போய் அவகிட்ட கேட்டுக் கிட்டு. நான் இன்னைக்கே தகவல் அனுப்பி உனக்கு ஃபுல் டீடெயில்ஸ் நாளைக்கு சொல்லுறேன். இப்போதாவது டீ குடுப்பியா?”

அருந்ததி எழுந்து செல்ல, பைரவி அப்பாவைப் பார்த்தாள். மென்மையாய் சிரித்தவர்,

கவலைப் படாதேம்மா. அப்பா எல்லாத்தையும் பாத்துக்கிறேன்என்றார். டீயைக் குடித்து முடித்தவள்,

அம்மா, பக்கத்து பார்க் வரைக்கும் ஒரு வாக் போயிட்டு வந்துடுறேன்.” இது வழமை என்பதால் அருந்ததி ஒன்றும் சொல்லவில்லை. ஃபோனை எடுத்துக் கொண்டு மெதுவாக நழுவினாள் பைரவி. வீட்டை விட்டு வெளியேறியதுதான் தாமதம், அவள் கைகள் ஆனந்தனின் எண்ணை தொடர்பு கொண்டது.

பைரவி! நல்லா தூங்கி எழுந்தாச்சா?”

ஆனந்த், என்ன கூத்து இது?”

என்னாச்சுடா?”

நீங்க என்ன சொன்னீங்க? நல்லா தூங்கி எழும்பு, நான் வர லேட் ஆகும்னு சொன்னீங்க. இப்ப என்னடான்னா எனக்குத் தெரியாமலேயே வந்து போயிருக்கீங்க?” அவள் சிணுங்க, வாய் விட்டு சிரித்தவன்,

அதுவா பைரவி, என் மாமனாரையும், மாமியாரையும் பாக்கணும் போல இருந்தது, அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். அதை விடு, அங்க இப்போ ரியாக்ஷன் எப்படி இருக்கு?”

அம்மா துருவித் துருவி கேள்வி கேக்குறாங்க, அப்பாதான் சமாளிக்குறாங்க. நான் மெதுவா எஸ்கேப் ஆகி பார்க்குக்கு வந்துட்டேன்.”

ஏய் பைரவி! நான் இப்போ அங்கே வரட்டுமா?” அவன் குரலில் அத்தனை ஏக்கம் இருந்தது.

அய்யய்யோ! அம்மாக்கு தெரிஞ்சது, அவ்வளவுதான்.”

இங்க இருக்கப் போறதே இன்னும் ரெண்டு, மூணு நாள் தான். அப்பவும் பாக்க முடியலைன்னா எப்படி பைரவி?”

என்னை என்ன பண்ணச் சொல்றீங்க ஆனந்த்?”

அதுவும் சரிதான். இங்கப்பாரு பைரவி. நாளைக்கு ஒரு நாள் தான் உங்க அம்மாவுக்கு டைம். அதுக்குள்ள அவங்க எனக்கு சம்மதம் சொல்லி ஆகணும். அடுத்த நாள் நம்ம ரெண்டு பேரும் கிளம்புறோம் சரியா? இந்தத் தடவை கார் வேணாம். ட்ரெயின் டிக்கட் புக் பண்ணிடு என்ன?”

ம்சரி

கார் இல்லாம சமாளிச்சிடுவ இல்லை?”

ம்அதான் நீங்க இருக்கீங்களே.” ஒரு சில நொடிகள் மௌனித்தவன்,

அப்படி எங்கிட்ட என்ன இருக்கு பொண்ணே, நீ இப்படி மயங்குறதுக்கு!” அவன் ஆழமான குரலில் கேட்க, சிரித்தவள்

என்ன இல்லை ஆனந்த் உங்ககிட்ட?” அந்தக் கேள்வியில் லயித்தவன்,

இந்தக் காதலை, உயிர் வரைக்கும் தீண்டுற இந்த அன்பை, நான் என் கடைசி மூச்சு வரை அனுபவிக்கனும் பைரவி.”

என்ன பேசுறீங்க ஆனந்த்?” அவள் பதற, இடைமறித்தவன்

என்னப் பேசவிடு பைரவி. இப்படி ஒரு காதலை நான் உணரனும், அனுபவிக்கனும், அப்படீன்னு எனக்கு விதிச்சிருக்கு பைரவி. எனக்கு காதலிக்க கத்துக் கொடுத்தது நீதான் பைரவி. எனக்கு உன்னளவுக்கு பாசம் வைக்கத் தெரியலை பைரவி.” அவன் உணர்ச்சிக் குவியலாக காதல் மொழி பேச, சிறு புன்னகையோடு கேட்டிருந்தாள் பைரவி.

ஆனந்தனின் பைரவி.

ஆனந்த பைரவி!

 

error: Content is protected !!