aanandha Bhairavi 18
aanandha Bhairavi 18
ஆனந்த பைரவி 18
லிவர்பூல் ஸ்டேஷன் காலை நேர பரபரப்பில் இருந்தது. பைரவி சொன்ன தகவலின் படி காலை ஆறு மணிக்கெல்லாம் ஸ்டேஷன் வந்துவிட்டான் ஆனந்தன். 6:24 க்கு ட்ரெயின். காலை நேரக் குளிர் உடலை சற்றுத் தாக்கியது ஆனந்தனுக்கு.
அன்று ஷாப்பிங் செய்தபோது பைரவி அவனுக்காக வாங்கி இருந்த அந்த ப்ரௌன் கலர் லெதர் ஜாக்கெட்டை அணிந்திருந்தான். அதையும் தாண்டி குளிர் உடலைத் தாக்கியது. ஒரு ஒற்றை சிகரெட்டிற்காக மனம் ஏங்கியது.
நண்பர்கள் சேர்ந்து அரட்டை அடிக்கும் போது பழகிய பழக்கம். எப்போதாவது அரிதாக மனம் தேடும். அன்று அந்தக் குளிருக்கு ஏனோ அப்படியொரு எண்ணம் தோன்றியது. இந்தப் பெண் வேறு கூட இருக்கிறாள். கோபித்துக் கொள்வாளோ? சிந்தனை எங்கோ ஓட, அதன் நாயகியை கண்கள் தேடியது. தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. முழு நீளக் கோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தாள். இவனை நெருங்கியதும்,
“குட் மார்னிங் ஆனந்த், வந்து ரொம்ப நேரமாச்சா?”
“குட் மார்னிங், இல்லைடா ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருக்கும். யாரோட வந்தே?”
“அப்பா கூட வந்தாங்க.”
“அப்பாக்கு நான் இங்க வெயிட் பண்ணுறது தெரியும் தானே பைரவி?”
“அப்பாக்குத் தெரியும், ஆனா அம்மாக்குத் தெரியாது” ஏதோ பெரிய ஹாஷ்யம் போல அவள் சிரிக்க…
“பொறு பொறு, உனக்கும் நாளைக்கு ஒரு பொண்ணு பொறக்குமில்லை, அப்ப இருக்கு விளையாட்டு” லேசாக வெட்கப்பட்டவள்,
“அப்படியா, நீங்க உங்க பொண்ணோட கூட்டணி போட்டா நான் என் பையனோட கூட்டு சேந்துக்குவேனே.”
“இந்த வாய்தான்டி உன்னை வாழ வைக்குது” அவன் சொல்லி முடிக்க, சிரித்தவள்…
“லேட் ஆகுது ஆனந்த், சீட்டைக் கண்டு பிடிக்கலாம் வாங்க“
“பைரவி, நீ உள்ளே போடா, நான் இதோ வந்தர்ரேன்” அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்,
“ஏன்? இங்க என்ன பண்ணப் போறீங்க? இப்போதைக்கு சைட் அடிக்கிற மாதிரி இங்க ஒரு ஃபிகரையும் காணலையே” சுற்று முற்றும் பார்த்தபடி அவள் சொல்ல, சிரித்தவன்…
“ரொம்பக் குளிருது பைரவி” என்றான்.
“ஓ… காஃபி வாங்கலாமா ஆனந்த்?”
“ம்… அதுவும் வாங்கலாம் பைரவி…” அவன் இழுக்க…
“அதுவும்னா… வேற என்ன வாங்கப்…” முழுதாக முடிக்காதவள் ஏதோ புரிந்தது போல வாய் விட்டு சிரித்தாள்.
“பண்ணையாருக்கு திருட்டு தம் கேக்குதா? நடத்துங்க, நடத்துங்க” அவள் சிரிக்க, அசடு வழிந்தவன்,
“நீ இன்னைக்கு செமையா எங்கிட்ட வாங்கப் போற பைரவி” என்க, மீண்டும் பொங்கிச் சிரித்தவள் அவனுக்கு அழகு காட்டிவிட்டு ட்ரெயினுக்குள் சென்று விட்டாள்.
வேர்ஜின் ட்ரெயின்(virgin), ஃபர்ஸ்ட் க்ளாசில் புக் பண்ணி இருந்தாள். தங்கள் சீட்டுக்கு முன்னால் ஒரு வயதான தம்பதி உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு அவசரமாக ஒரு ‘குட் மார்னிங்‘ வைத்தவள் சீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டாள்.
வெளியே ஆனந்தன் நிற்பது தெரிந்தது. இவள் பார்ப்பதை அறியாதவன, ஒரு கையை பாக்கட்டில் விட்டு, மறு கையில் சிகரெட்டோடு நின்றிருந்தான். அந்தக் குளிருக்கு இதமாக ஆழ்ந்து இழுத்து அனுபவித்துக் கொண்டிருந்தான். சட்டென்று ஃபோனை எடுத்தவள், அந்தத் தருணத்தை படமாக்கிக் கொண்டாள். ‘பய புள்ளை, சிகரெட்டையும் ஸ்டைலாத்தான் குடிக்கிறான்பா‘ மனதுக்குள் சிரித்துக் கொண்டவள் சமத்தாக அமர்ந்து கொண்டாள். ஆனந்தன் வந்து அமரவும், ட்ரெயின் புறப்படவும் சரியாக இருந்தது. அமர்ந்தவனிடம் ஃபோனைக் காட்டியவள் ‘எப்படி‘ என புருவத்தை ஏற்றி இறக்க,
“ஏய் பைரவி! என்ன வேலை பண்ணி இருக்க?” அவன் ஃபோனை பறிக்க முயல, அதை தன் பக்கமாக இழுத்துக் கொண்டவள்,
“இதை அப்படியே முதல்ல உங்க அம்மாக்கிட்டயும், பாட்டிக்கிட்டயும் காட்டணும், அதுக்கு அப்புறமா பத்திரமா வைச்சு, உங்க பையன் கிட்ட நீங்க ‘சிகரெட் குடிக்கிறதெல்லாம் தப்புப்பா‘ அப்படீன்னு லெக்சர் அடிக்கும் போது காட்டணும்.” அவள் சீரியசாக சொல்ல, சிரித்தவன்… அவள் காதருகில் குனிந்து,
“முதல்ல பையனுக்கு வழியப் பண்ணுடி பொண்டாட்டி, அப்புறம் ஃபோட்டோ காமிக்கலாம்.” என்க, முறைத்துப் பார்த்தவள் வாயை மூடிக் கொண்டாள்.
“இப்போ பேச மாட்டீங்களே” அவன் மேலும் சீண்ட… அவன் கை வளைவிற்குள் தன் கையை நுழைத்து சுகமாக அவன் தோள் சாய்ந்து கொண்டாள் பைரவி.
**–**–**–**–**–**–**
சந்திரன் தன் நெருங்கிய நண்பர் தாமோதரனை அழைத்து, ஆனந்தன் பற்றிய விபரம் கூற அடுத்த நாளே முழு விபரமும் வந்திருந்தது. அருந்ததியின் திருப்திக்காக தாமோதரனுடன் அருந்ததியை பேச வைத்தார் சந்திரன். அவருக்கும் திருப்தியாக இருக்கவே, பாட்டியை அழைத்து ஜாதகம் கேட்டிருந்தார் அருந்ததி. ஏற்கனவே பொருத்தம் பார்த்து, அதிலும் எட்டுப் பொருத்தம் இருக்வே பாட்டியும் தைரியமாக அன்றே ஜாதகத்தை சாதனா மூலம் மெயில் பண்ணி இருந்தார்.
அத்தனை விஷயங்களும் ஓர் நாளில் விரைவாக நடந்து முடிந்திருந்தது. அருந்ததி தனக்குத் தெரிந்த இன்னும் சில சொந்தங்களிடமும் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருந்தார். அம்மாவிற்கு பிடித்திருக்கிறது என்பதே பைரவிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
ஆர்த்தி பற்றி யாரும் அருந்ததியிடம் மூச்சும் விடவில்லை. சந்திரன் ஆனந்தனை அழைத்து நிலவரத்தை கூறவே அவனும் சந்தோஷமாக கிளம்பி விட்டான். அருந்ததி இன்னொரு முறை ஆனந்தனை வீட்டிற்கு அழைக்க விருப்பம் தெரிவித்த போதும் அவன் அதை மறுத்துவிட்டான். அதிக சந்திப்புக்கள் ஒரு வேளை பைரவியை வம்பில் மாட்டி விட வாய்ப்புகள் அதிகம் என்பதால் சந்திரனும் அவனையே சார்ந்து பேசினார்.
முக்கால் கிணறு தாண்டிய சந்தோஷம் ஆனந்தனுக்கும், பைரவிக்கும். அதே சந்தோஷத்தோடு லண்டன் வந்து சேர்ந்தார்கள். பைரவி எவ்வளவு கெஞ்சியும் ஆனந்தன் இன்னும் சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் தங்க மறுத்து விட்டான்.
“ஏன் ஆனந்த் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீங்க. ஜஸ்ட் ஒரு டூ டேய்ஸ் எங்கூட ஸ்பென்ட் பண்ணக் கூடாதா?”
“ஏய் பட்டு! புரிஞ்சுக்கோடா, எத்தனை வேலையை அப்படியே போட்டுட்டு வந்திருக்கேன் தெரியுமா? இங்கே டைமை வேஸ்ட் பண்ணினா கல்யாணம் தான் இழுத்துக்கிட்டு போகும் பைரவி. எனக்கு அதுல அவ்வளவு உடன்பாடு இல்லைடா. சட்டு புட்டுன்னு சீக்கிரமா கல்யாணத்தை முடிக்கலாம்டா. அதுக்கப்புறம் அம்மணி எங்கூடத்தானே இருக்கப்போறீங்க.”
வெளியே ரிசோர்ட் வேலையைக் காரணம் காட்டி பைரவியை சமாதானப் படுத்தினாலும், அவன் உள்மனதில் இன்னும் ஆர்த்தி ஏதாவது குழப்பம் பண்ண இந்தப் பெண் மீண்டும் முறுக்கிக் கொள்ளக்கூடாதே என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. வெளியே அதைச் சொல்லாமல் வேலையை காரணம் காட்டிக் கொண்டான்.
அருந்ததி வேறு தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிப்பதாக சந்திரனும் எச்சரித்திருக்கவே, கடந்து போயிருந்த கசப்பான அனுபவம் அவர் காதுகளை எட்ட வாய்ப்புகள் இருந்ததால் எதையும் தாமதப் படுத்த ஆனந்தன் விரும்பவில்லை. அவளை விட்டுப் பிரிவது அவனுக்குமே கஷ்டமான ஒன்றாக இருந்த போதும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கண்ணீரோடே விடை கொடுத்தாள் பைரவி.
இந்தப் பெண்ணை ஒரு சில மாதங்களாகத்தான் தனக்குத் தெரியும் என்பதை ஆனந்தனால் நம்ப முடியவில்லை. ஏதேதோ சமாதானம் சொல்லி கெஞ்சிக், கொஞ்சி ஃப்ளைட்டைப் பிடித்தான் ஆனந்தன்.
பைரவி பித்துப் பிடித்தது போல ஆகிப்போனாள். எங்கு பார்த்தாலும் அவன் நினைவுகள். ரிசப்ஷனை் கடக்கும் போது அந்த ஒற்றை சோஃபாவில் தன்னையே வெறித்துப் பார்த்திருந்த ஆனந்த் தான் ஞாபகத்திற்கு வந்தான். நல்ல வேளை கார் கைவசம் இல்லை. இருந்திருந்தால் அதுகூட அவனைத் தான் ஞாபகப்படுத்தி இருக்கும்.
அடிக்கடி அவனை ஃபோனிலும் பிடிக்க முடியவில்லை. தவித்துப் போனாள் பைரவி. அவனை வருடக்கணக்கில் மனதில் சுமந்து கொண்டு இருக்கிறாள். ஆனால் பழகியது என்னவோ விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்கள்தான்.
பூஞ்சோலையில் இருந்தவரை, அவன் காதல் சொல்லாவிட்டாலும் அவன் இருக்கும் ஊரில் இருப்பதே பெரிய சுகமாக இருந்தது பைரவிக்கு. அவன் காதல் கை கூடிய போது பூரித்துப் போனாள். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சி. ஆனால் அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. ஆர்த்தி எல்லாவற்றையும் நாசம் செய்தாள். அத்தோடு தன் வாழ்க்கையில் வசந்தம் தீர்ந்து போனது என்று தான் நினைத்திருந்தாள் பைரவி.
ஆனால் ஆனந்தன் திடீரென தன் முன் நின்றபோது வாழ்க்கை மீண்டும் தனக்கு வசப்பட்ட மகிழ்ச்சி. திக்குமுக்காடிப் போனாள். அதுவும் இப்போது அவன் காட்டிய நெருக்கம் தித்தித்தது. அந்த இதழ் முத்தமும், இடை நெருக்கிய அணைப்பும் மீண்டும் மீண்டும் வேண்டும் என மனம் சண்டித்தனம் பண்ணியது. அவன் இல்லாத தன் வாழ்க்கை சூனியம் என தெள்ளத் தெளிவாக தெரிந்தது பைரவிக்கு. ஆனால் இதெயெல்லாம் யாரிடம் சொல்ல முடியும். புரிந்து கொள்ள வேண்டியவனே புரிந்து கொள்ளாமல் ஓடும்போது அவளால் என்னதான் செய்ய முடியும். வாடிப் போனாள் பைரவி.
**–**–**–**–**–**
ஆனந்தன் எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்தான். பைரவி தன்னை விட்டு பெற்றோரிடம் சென்ற போது அவன் நிலை குலைந்தது என்னமோ உண்மைதான். ஆனால் அதன்பிறகு எல்லாவற்றையும் திட்டமிட்டுக் கொண்டான்.
இரண்டொரு ஃபோன் கால்களில் பைரவியின் நிலைப்பாட்டை உறுதிப் படுத்திக் கொண்டவன் அடுத்ததாக அழைத்தது அரவிந்தனை. ஆர்த்தி தன் வாழ்க்கையில் எத்தனை பெரிய பிரச்சினையை உண்டு பண்ணி வைத்திருக்கிறாள் என்று ஆனந்தன் விளக்கிய போது அரவிந்தன் மலைத்துப் போனான். இது எத்தனை நாகரிகம் இல்லாத செயல் என்று அரவிந்தனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“என்னைத் தயவுசெய்து தப்பா நினைக்காதே அரவிந்தா. ஆர்த்தி திரும்பத் திரும்ப என் வாழ்க்கையில விளையாடுறா. இனி பைரவி தான் என் வாழ்க்கைடா. அவளோட இடத்துல இனி என்னால யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியாது.”
“புரியுது ஆனந்தா“
“ப்ளீஸ்டா புரிஞ்சுக்கோ. ஆர்த்தி குழப்பம் பண்ணப் பண்ண பைரவி என்னை விட்டு தள்ளிப் போறா. ஏதோ தான் ஆர்த்திக்கு துரோகம் பண்ணுற மாதிரி ஃபீல் பண்ணுறா. இந்த நிலமையிலே நான் எப்படி கல்யாணப் பேச்சை ஆரம்பிப்பேன் சொல்லு?”
அரவிந்தனுக்கு தலை வேதனையாக இருந்தது. ஏன் இந்தப் பெண் இப்படியெல்லாம் பண்ணுகிறாள்? அப்படி ஒன்றும் ஆனந்தன் மேல் அமரக் காதல் எல்லாம் வைக்கவில்லையே இவள். அப்படிப்பட்ட குணாதிசயங்கள் எல்லாம் கொண்டவள் இல்லையே தன் தங்கை. சற்று யோசித்தவன்…
“நீ கவலைப்படாதே ஆனந்தா. என் பெரியப்பா ஒருத்தர் அமெரிக்காவுல இருக்காங்க. அருக்கு ரெண்டும் பசங்க தான், ஆர்த்தி மேல ரொம்ப பாசம். அடிக்கடி கூப்பிடுவாங்க. சரியான சமயம் அமையலை. அப்பாக்கிட்ட சொல்லி அதுக்குரிய ஏற்பாட்டை பண்ணுறேன். கொஞ்சம் டைம் குடுடா“
அரவிந்தன் சொன்னது போலவே வீசா ஏற்பாடுகளில் இறங்கி விட்டான். ஆனந்தனும் அந்த இடைப்பட்ட காலத்தில் முழு நேரமாக ஈடுபட்டு ரிசோர்ட் வேலையை முடிக்கப் பார்த்தான்.
எக்காரணம் கொண்டும் பைரவியைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. அவளுக்கும், தனக்குமான இந்தப் பிரிவு அவளுக்கு நிறைய விஷயங்களைப் புரிய வைக்கும் என்று நிச்சயமாக நினைத்தான். இதற்கிடையில் தானும் யு கே செல்வதற்கு வீசா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டான்.
ரிசோர்ட் வேலைகள் தொண்ணூறு சதவீதம் நிறைவு பெற்றிருந்த போது அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆர்த்திக்கு வீசா கிடைத்து விட்டதாகவும், அவள் அடுத்த வாரமே அமெரிக்கா கிளம்ப இருப்பதாகவும் அவன் சொல்லவே, அதற்கு மேலும் தாமதிக்காமல் அப்பாவிடம் ஒரு வாரம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்பிவிட்டான்.
உடம்பின் ஒவ்வொரு அணுவும் அந்த முட்டாள்ப் பெண்ணுக்காக ஏங்கியது. தன்னைப் பித்துப் பிடிக்க வைத்து விட்டு அம்போ என விட்டுப் போனதை நினைத்த போது அவள் மேல் கொலை வெறி வந்தது.
அவளை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்ற முடிவோடு தான் ஃப்ளைட்டைப் பிடித்தான். ஆனால் அவள் கதறி அழுத போது உருகிப் போனான் ஆனந்தன். அவள் கண்ணீரைப் பார்க்கும் தைரியம் இல்லை ஆனந்தனுக்கு. வீழ்ந்து போனான்.
இத்தனை நாள் பிரிவு, மனதில் வேரோடி இருந்த அவள் ஏக்கம் எதுவென்று தெரியவில்லை, அத்தனை அண்மையில் அவளைப் பார்த்த போது கொஞ்சம் தடுமாறிப் போனான். அந்த இதழ்களைத் தீண்டிய போது உலகத்தின் ஒட்டுமொத்த அமைதியும் அவனுள் உட்கார்ந்து கொண்டது. நிறைந்து போனான். சில நொடிகளே நீடித்த இந்தத் தீண்டலுக்குள் இத்தனை மாயாஜாலமா? இப்போது நினைக்கும் போதும் உடல் சூடேறியது ஆனந்தனுக்கு.
ரிவோல்விங் செயாரில் தலையை பின்னோக்கி சாய்ந்தபடி இடம் வலமாக ஆடிக் கொண்டு அத்தனையையும் அசை போட்டுக் கொண்டிருந்தான் ஆனந்தன். உதட்டில் புன்னகை உறைந்திருந்தது. லியம் பைரவிக்கு நல்ல நண்பனோ இல்லையோ, ஆனந்தனுக்கு நல்ல நண்பனாகிப் போனான். இவன் மனநிலையை புரிந்தோ என்னவோ, அந்த ரெஸ்டோரன்ட் ஐடியாவைக் கொடுத்தது அவன்தான்.
“ரொமாண்டிக் ப்ளேஸ் ஆனந்தன். பைரவி நிச்சயம் என்ஜோய் பண்ணுவா. கூட்டிட்டுப் போங்க.” லியம் சொல்லவும் தான், சரி பைரவியோடு வெளியே போய் வரலாம் என்ற எண்ணம் தோன்றியது ஆனந்தனுக்கு. ஆனால் அந்தப் புடவையை உடுத்திக் கொண்டு அவள் வந்த போது, நிலைகுலைந்து போனான். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. அத்தனை அழகாக இருந்தாள்.
ஆனால் அந்த நதிக்கரையோரத்தில் நாணல் போல நின்ற அவள் கோலம் அவனை ஒட்டு மொத்தமாக வசீகரித்தது. கல்லூரிக் காலத்தில் நன்றாகப் பாடுவான் ஆனந்தன். அவன் குரலுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. நண்பர்கள் சேர்ந்து விட்டால் கூத்தும், கும்மாளமும், பாட்டுக் கச்சேரியும் என களைகட்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று ஏனோ ஆனந்தனுக்குப் பாடத் தோன்றியது. அந்தப் பெண்ணுக்குள் புதைந்து போனான்.
பைரவி பயந்ததைப் போல அவள் பெற்றோர் குறித்து ஆனந்தனுக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை. இயல்பாகப் போய் பெண் கேட்டுவிட்டான். அவர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் அத்தனை விரைவாக அவளை விட்டுப் பிரிந்தபோது அவனுமே கஷ்டப்பட்டுப் போனான். ஏர்போர்ட்டில் அவள் கண்ணீர் விழிகளைப் பார்த்த போது, அப்படியே அவளையும் அழைத்துக் கொண்டு போகலாமா எனத்தான் தோன்றியது. லியமும் கூட வந்திருந்தான். அவனிடம் அவளை அழைத்துக் கொண்டு போகுமாறு ஜாடை காட்டவே, தாமதிக்க விடாமல் அழைத்துக் கொண்டு போய்விட்டான். தான் எப்படி உணர்ந்தேன் என்று புரியவில்லை ஆனந்தனுக்கு. அந்தப் பெண் எத்தனை தூரம் தன்னுள் நீக்கமற நிறைந்திருந்தால் தன் உடம்பிலும், மனதிலும் இப்படி ஒரு வலி வியாபித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான். காதலின் வலி புரிந்தது ஆனந்தனுக்கு. தன் மேஜே மேல் இருந்த அந்த ஃபோட்டோ ஃப்ரேமை கையில் எடுத்துப் பார்த்தான். தன்னை வெட்கப் பார்வை பார்த்த அந்த மஞ்சள் புடவை மங்கைக்கு வன்மையாக ஒரு முத்தம் வைத்தான் ஆனந்தன்.
பைரவியின் ஆனந்த்!