ஆனந்த பைரவி 26
ஆனந்தன் குடும்பத்தோடு கிளம்பிப் போய் இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும், பைரவி அவனோடு செல்ல மறுத்து விட்டாள்.
அவனைத் தனியாக அழைத்துச் சென்ற பாட்டி,
“ஆனந்தா, இன்னைக்குன்னு பாத்து எங்கேயோ இடிச்சிக்கிட்டு வந்து நிக்கிறயேப்பா!”
“என்னாச்சு பாட்டி?”
“இன்னைக்கு முழுக்க பைரவி முகம் நல்லாவே இல்லை. அதனால்தான் நானும், உங்கம்மாவும் அவளை கோவிலுக்கு கூட்டிட்டுப் போனோம்.”
“அது எனக்குத் தெரியும்தானே பாட்டி.”
“ஆமா, எங்கிட்ட நல்லா வியாக்கியானம் பேசு. காரை மட்டும் எங்கேயாவது முட்டு.”
“பாட்டி, அது ஆக்சிடென்ட் பாட்டி. நான் என்னவோ வேணுமின்னு முட்டின மாதிரி சொல்லுறீங்க.”
“அது எனக்குப் புரியுது, உன் பொண்டாட்டிக்கு புரியலையே.”
“இப்போ என்ன சொல்ல வர்றீங்க பாட்டி.”
“அதான்பா, அந்த ஆர்த்தியோட அம்மா நேத்து என்னென்னவோ சொன்னா இல்லையா?”
“ம்…”
“அதனால உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பைரவி பயப்படுறா.”
“இது என்ன முட்டாள்த்தனம் பாட்டி. பைரவி படிச்ச பொண்ணு தானே. இதையெல்லாமா நம்புவா?”
“என்னதான் படிச்சாலும், லண்டன்ல வளந்தாலும், தாலி, புருஷன்னு வந்துட்டா பொண்ணுங்க எல்லாருமே பட்டிக்காடுதான். அதுக்கு பைரவியும் விதி விலக்கில்லை.”
“இதுக்குதான் வர முடியாதுன்னு அடம் பிடிக்கிறாளா?”
“தன்னாலே உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு அவளே பயந்து போய் நிக்குறா. இதுல நேரங் காலம் தெரியாம நீ வேற முட்டிக்கிட்டு வந்து நிக்குறே.”
“இப்போ என்ன பண்ணலாங்கிறீங்க?
“அவளை கட்டாயப் படுத்தாத ஆனந்தா. அவளுக்கு தோணும் போது கிளம்பி வரட்டும்.”
“என்ன பாட்டி சொல்லுறீங்க, அவளை விட்டுட்டு நான் எப்பிடி அங்கே இருக்கிறது?”
“அடேய்! அவளோட ஒரு மாசமாத்தான்டா இருக்கிறே. அதுக்கு முன்னாடி எங்ககூட தான்டா இருந்தே.” பாட்டி ஆச்சரியப்பட சிரித்தவன்,
“இதை அடிக்கடி சொல்லுங்க பாட்டி, நீங்க சொல்லும் போதுதான் இந்தப் பொண்ணோட ஒரு மாசமாத்தான் நான் வாழுறேங்கிறது ஞாபகத்துக்கே வருது.” பாட்டியின் இரண்டு கன்னங்களையும் அவன் பிடித்துக் கிள்ள,
“ஆனந்தா… வலிக்குதுடா.”
“நல்லா வலிக்கட்டும், பைரவியை விட்டுட்டு போகலாம்னு சொன்னதுக்கு நான் இது கூட பண்ணலைன்னா எப்படி?”
“ஆனந்தா, அவளால உன்னை விட்டுட்டு ரொம்ப நாளைக்கு இருக்க முடியாது. நீ போய் ரெண்டு நாளையால ஓடி வந்துடுவா பாரு.”
“அப்படீங்கிறீங்க!”
“அடப்போடா பொடிப்பயலே! என் வயசுக்கு எத்தனை புருஷன், பொண்டாட்டியை பார்த்திருப்பேன். எனக்குத் தெரியாதா?”
பாட்டியும், பேரனும் சிரித்தபடி வீட்டிற்குள் நுழைய, ஆனந்தன் தங்கள் ரூமிற்கு போனான். கட்டிலில் சாய்ந்தமர்ந்து, கண்மூடியபடி இருந்தாள் பைரவி. அவளைப் பார்த்தவுடன் சிரிப்புத்தான் வந்தது ஆனந்தனுக்கு.
அப்படியே அவள் கைகள் இரண்டையும் பிடித்து அவளைத் தூக்கி நிறுத்தினான். ஆச்சரியமாகப் பார்த்தவளை இறுக்கி அணைக்க, திமிறி தன்னை விடுவிக்க முயன்றவளை இன்னும் தன்னோடு சேர்த்தணைத்தான்.
“விடுங்க ஆனந்த், என்ன பண்ணுறீங்க?”
“ம்… எம் பொண்டாட்டியை கட்டிப் பிடிக்கிறேன்.”
“ஐயோ! என்ன பேச்சு இது?”
“ஏன்? என்னோட பேச்சுக்கு என்ன குறை? புதுசா கல்யாணம் பண்ணினவங்க இப்படித்தான் பேசுவாங்க, அதை விட்டுட்டு நான் அம்மா வீட்டுல இருக்கிறேன், நீங்க போங்கன்னு பேச மாட்டாங்க.”
“நான் இங்கேயே இருக்கப் போறேன்னா சொன்னேன்? கொஞ்ச நாளைக்குத் தானே.”
“அந்தக் கொஞ்ச நாளும் உன்னால இருக்க முடியுமா பட்டு?” அவன் பார்வையைத் தவிர்த்தவள், தடுமாற…
“உன்னால முடியாது பட்டு” அவள் முகத்தை தன்புறமாகத் திருப்பியவன், அந்தப் பட்டிதழ்களை சரணடைந்தான். உயிர்வரை தீண்டிய அந்த முத்தத்தில் பைரவி உறைந்து போனாள். சாவகாசமாக அவளை விடுவித்தவன்,
“எதுக்கு வீணா பிடிவாதம் பிடிக்கிறே? நீயும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தப் போறே. ஏன்டா? ” அவன் வார்த்தைகளில் கரைந்து போக இருந்த மனதுக்குக் கடிவாளமிட்டவள், பிடிவாதமாக நிற்க…
“சரி, நீ முடிவெடுத்துட்டே” சலித்துக் கொண்டவன், தனக்குத் தானே பேசுவது போல்,
‘வீட்டுக்கு வெளியே தான் நம்ம பந்தா எல்லாம், வீட்டுக்குள்ள வந்தா பொண்டாட்டி பேச்சுக்கு தலை ஆட்டுறதே பொழைப்பாப் போச்சு‘ என்றபடி இரண்டெட்டு நடந்தவன், மீண்டும் திரும்பி வந்து அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.
இந்த இரண்டு நாட்களும் பைரவி தவித்துப் போனதென்னவோ உண்மை. எதையோ இழந்து விட்டாற் போல மனது கிடந்து தவித்தது. ஆனந்தனும் ஊருக்குப் போனவன் அழைக்கவே இல்லை. வாசுகி தான் அழைத்தவர், வந்து சேர்ந்து விட்டோம் என்று தகவல் சொன்னார்.
மனதின் ஏக்கமோ என்னவோ, லேசாக காய்ச்சல் அடித்தது பைரவிக்கு. அருந்ததியும் இவள் நிலைமையை பார்த்துவிட்டு,
“டாக்டர் ஆன்ட்டிக்கிட்ட போகலாமா பைரவி?” என்றார். டாக்டர் வேணி அருந்ததியின் நண்பர். திருச்சியில் இருந்த வரை அவர் வைத்தியம் தான் இவர்களுக்கு.
“ஈவ்னிங் போகலாம்மா.” சோர்வாக வந்தது பைரவியின் பதில். டெலிஃபோன் அலறவே அங்கே போன அருந்ததி,
“ஹலோ” என்றார்.
“அத்தை, நான் சாதனா பேசுறேன்.”
“சாதனா, சொல்லுடா எப்படி இருக்கே? நீ மட்டுந்தான் இந்தத் தடவை வரலை. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணினோம் தெரியுமா?”
“முக்கியமான கான்ஃபரென்ஸ் அத்தை. பெரிய பெரிய டாக்டர்ஸ் எல்லாம் வந்திருந்தாங்க. அதான் மிஸ் பண்ண முடியலை.”
“ஐயோ! அதையெல்லாம் மிஸ் பண்ணிடாதே. நம்ம வீடு எங்க போகப்போகுது? என் பொண்ணோட நாத்தனார் டாக்டர்னு நான் எல்லார்கிட்டயும் பீத்திக்கிறேன் தெரியுமா?” அருந்ததி வாய் விட்டுச் சிரிக்க,
“அத்தை, நீங்களும் என்னை கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா?”
“இல்லைடா, உண்மையாத்தான் சொல்லுறேன். நீ டாக்டர்ன்னு சொல்லிக்கிறதுல எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமை தெரியுமா? மென்மையாய் சிரித்தவள்,
“அண்ணி எங்க அத்தை? அவங்க ஃபோன் ஏன் வேலை செய்ய மாட்டேங்குது“
“என்னமோ தெரியலையே! கூப்பிடட்டுமா?”
“வேணாம் அத்தை, நான் இப்போ திருச்சியிலதான் இருக்கேன்“
“அப்படியா! வீட்டுக்கு வராம என்ன பண்ணுற?”
“ஒரு ப்ரொஃபசரை மீட் பண்ணுறதுக்காக நாங்க ஒரு குரூப்பா வந்திருக்கோம் அத்தை. அவரை மீட் பண்ணிட்டு, லன்ச்சுக்கு நான் வீட்டுக்கு வந்திடுவேன் அத்தை.”
“வா வா. உனக்குப் பிடிச்ச எண்ணைக் கத்தரிக்கா பண்ணுறேன்.”
“ஓ… தாங்ஸ் அத்தை, வச்சிடட்டுமா?”
“சரிடா கண்ணா” அருந்ததி சமையலில் இறங்கிவிட்டார்.
ஒரு இரண்டு மணிவாக்கில் சாதனாவும் வர, வீடு கொஞ்சம் கலகலப்பாகியது. பைரவியை பார்த்த சாதனாவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“என்னாச்சு அண்ணி? ஏன் இப்படி இருக்கீங்க? என்ன பண்ணுது உடம்புக்கு?” அவள் கேள்விகளை அடுக்க, சோர்வாகச் சிரித்தவள்,
“ஒன்றுமில்லை சாதனா, கொஞ்சம் டையர்டா இருக்கு, ஃபீவரால இருக்கலாம்.”
“அப்படியெல்லாம் அசால்ட்டா விடக் கூடாது அண்ணி. ஈவ்னிங் டாக்டர் கிட்ட போகலாம்.”
“அப்போ நீங்க யாரு?”
“நீங்க என்னதான் சிரிச்சு மழுப்பினாலும், நாம ஈவ்னிங் போறோம் அண்ணி.”
“நல்லா உங்கண்ணிக்கு சொல்லு சாதனா, நான் சொல்லிச் சொல்லி களைச்சுப் போனேன்.” அருந்ததி அங்கலாய்க்க,
“அதெல்லாம் வருவாங்க அத்தை, நீங்க டாக்டர் கிட்ட பேசிடுங்க”
சந்திரனும் வந்துவிட எல்லோரும் சாப்பிட அமர்ந்தார்கள். கொஞ்ச நேரம் பேச்சும், சிரிப்புமாக அந்த இடமே அமர்க்களப்பட்டது. கமலாக்காவும் சேர்ந்து கொள்ள, இன்னும் களைகட்டியது.
சாப்பிட்டு முடித்ததும் பைரவி களைத்துப் போனவளாய் சோஃபாவில் சாய, சாதனா ஃபோனை எடுத்தவள்,
“ஒரு ஃபோன் பண்ணிட்டு வந்திடுறேன் அண்ணி.” என்று கொஞ்சம் தள்ளிப் போனாள். நம்பரை அழுத்தி விட்டுக் காத்திருக்க…
“சொல்லு சாதனா, என்ன இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்கே.” என்றது ஆனந்தனின் குரல்.
“அண்ணா, நான் இப்போ திருச்சியில அண்ணி வீட்டுல இருக்கேன்.”
“ம்… அம்மா சொன்னாங்க. ஈவ்னிங் தான் பைரவி வீட்டுக்கு போவேன்னு சொன்னாங்க?”
“வந்த வேலை சீக்கிரம் முடிஞ்சுது. அதால லன்ச்சுக்கே இங்க வந்துட்டேன்.”
“ஓ… அப்படியா, பைரவி எப்படி இருக்கா?”
“எதுக்குண்ணா அவங்களை விட்டுட்டு போனீங்க? நம்ம அண்ணியா அப்படீன்னு இருக்கு.”
“என்னாச்சுடா?” கொஞ்சம் பதட்டமாக அவன் கேட்க,
“ஆளே பாதியாப் போய்ட்டாங்க. முகத்துல சிரிப்பே இல்லை. லைட்டா ஃபீவர் அடிக்குது.”
“என்ன சொல்லுற நீ? டாக்டர் கிட்ட போனாளாமா?” பதட்டம் அவனைத் தொற்றிக் கொண்டது.
“இன்னும் இல்லை. ஈவ்னிங் போகப் போறோம். அண்ணா… நான் ஒன்னு சொல்றேன், கேப்பீங்களா?”
“சொல்லுடா.”
“அந்த ரிசோர்ட்டையே கட்டிக்கிட்டு அழாம, நீங்க இப்போவே கிளம்பி வாங்கண்ணா. அண்ணியைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு.”
“ஏய், நான் என்னமோ உங்கண்ணியை வர வேணாம்னு சொன்ன மாதிரி நீ ஸீனைப் போடுறே. அவதான் வராம அங்க உக்காந்துட்டு இருக்கா.”
“அவங்க வர முடியாதுன்னு சொன்னா, நீங்க விட்டிடுவீங்களா? கையைக் காலைக் கட்டி கார்ல தூக்கிப் போடவேண்டியது தானே.”
“ஹா… ஹா…! சாதனா, ஹீரோவா இருக்கிற அண்ணனை வில்லன் ஆக்காதம்மா.”
“போதும் உங்க கேலி, இப்பவே கிளம்பி வாங்க. வரும்போது பாட்டியையும், அம்மாவையும் கூட்டிக்கிட்டு வாங்க.”
“எதுக்குடா அவங்கெல்லாம்?”
“சொன்னா செய்யுங்க. அப்புறம் காரை சரி பண்ணிட்டீங்களா? அதைப் பாத்தா அண்ணி இன்னும் அப்ஸெட் ஆகிடுவாங்க.”
“என்னங்கடா நடக்குது இங்கே! ஆளாளுக்கு பைரவி, பைரவின்னு என் உயிரை எடுக்குறீங்க. இங்க ரெண்டு பேர் என்னடான்னா, நான் பைரவியைக் கொடுமைப் படுத்தி அவங்க அம்மா வீட்டுக்கு துரத்தியுட்ட மாதிரி ஸீனைப் போடுறாங்க. அம்மணி என்னன்னா அண்ணிக்காக உருகுறீங்க. என்னைப் பாத்தா எப்படித் தெரியுது உங்களுக்கெல்லாம்?” சிரித்தவள்,
“சரி சரி, சீக்கிரமா கிளம்பி வாங்கண்ணா, நான் அண்ணியை டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகணும், பை“
“பத்திரம் சாதனா, நான் உடனேயே கிளம்புறேன், பை டா.”
**–**–**–**–**–**–**
பைரவி ரொம்பவே களைப்பாக உணர்ந்தாள். டாக்டர் வேணியின் ‘நேர்சிங் ஹோமிற்கு‘ வந்திருந்தார்கள். இவர்கள் முறை வந்தவுடன் மூன்று பெண்களும் உள்ளே நுழைய, ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் டாக்டர்.
“அடடே! அருந்ததி வா வா, எப்படி இருக்கே? பைரவி கல்யாணத்துக்கு என்னால வர முடியலை. சாரிப்பா, ரொம்ப பிஸியாப் போச்சு.”
“அதுக்கென்ன வேணி, எனக்குத் தெரியாதா நீ பிஸின்னு. உன்னால முடிஞ்சிருந்தா கண்டிப்பா வந்திருப்பே. வேணி, இது சாதனா, பைரவியோட நாத்தனார்.” டாக்டர் ஒரு புன்னகை சிந்திவிட்டு தன் வேலையை ஆரம்பிக்க,
“டாக்டர், ஒரு ‘HCG’ டெஸ்ட் எடுத்துப் பாக்கலாமா?” சாதனா கேட்க, புன்னகைத்த டாக்டர்,
“என்ன பைரவி? நாத்தனார் என்னமோ சொல்லுறா? சான்ஸஸ் இருக்கா?”
பைரவியின் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. ‘இருக்குமோ?’ என்ற எண்ணம் தோன்ற, சாதனாவைப் பார்த்தாள். அவளுமே உறுதியாகப் பார்க்க, கணக்கு வழக்கில் இறங்கினாள்.
நேர்சை அழைத்து அவர் கூட பைரவியை அனுப்பிய டாக்டர், அருந்ததியைப் பார்த்துப் புன்னகைக்க,
“என்னாச்சு வேணி?” என்றார் அருந்ததி.
“பொறு பொறு, நீ இனிமே அம்மா மட்டும்தானா, இல்லை பாட்டியுமான்னு தெரிஞ்சுக்கலாம்“
“என்ன சொல்லுற வேணி?” அருந்ததிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
“பொறுமையா இரு அருந்ததி, ஒரு வேளை இல்லாமலும் இருக்கலாம், பாக்கலாம்.”
அவர்கள் சந்தேகம் உறுதியாக, அருந்ததிக்கு வாய் கொள்ளாச் சிரிப்பு. உடனேயே சந்திரனுக்கு ஃபோனைப் போட்டு தகவல் சொல்லி விட்டார். வாசுகிக்கு அழைக்கப் போக, அதைத் தடுத்த சாதனா,
“வீட்டுக்கு போய் சொல்லிக்கலாம் அத்தை” என்றாள். அதுவும் சரிதான் என்று அருந்ததிக்குத் தோன்ற, பெண்கள் மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
சந்திரனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. மகளின் தலையை வாஞ்சையாகத் தடவிக்கொடுத்தார்.
“போய் ரெஸ்ட் எடும்மா, ரொம்பக் களைப்பாத் தெரியுற. அருந்ததி, பைரவிக்கு ஜூஸ் போட்டுக் குடு” அதட்டலாக வந்தது சந்திரனின் குரல்.
“சும்மாவே அப்பாவையும், மகளையும் பிடிக்க முடியாது, இனி என் பாடு திண்டாட்டம் தான் சாதனா.” அருந்ததி சாதனாவின் காதைக் கடிக்க, வாய் பொத்திச் சிரித்தாள் சாதனா. கிச்சனில் இருந்து வந்த இனிப்பும், நெய்யும் கலந்த வாசனை சொன்னது, கமலாக்கா ஏதோ ஸ்வீட் பண்ணுகிறார் என்று.
ரூமிற்குள் சென்ற பைரவி ஆனந்தனுக்கு தொடர்பு கொள்ள, அது முடியவில்லை. இரண்டு, மூன்று முறை முயற்சித்து விட்டு, அசதியாக இருக்கவே கண்களை மூடிக் கொண்டாள். ஆனந்தனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பேரலையாக தனக்குள் எழுவதை அவளால் கட்டுப் படுத்த முடியவில்லை. அவனை இப்போதே பார்க்க வேண்டும் போல மனது துடித்தது. யாரோ செய்யும் முட்டாள்த் தனங்களுக்கு தான் ஏன் தண்டனை அனுபவிக்கிறேன் என்று இப்போது தோன்றியது.
ஆனந்தனை விட்டு எப்போதும் தன்னால் வாழ முடியாது என்று தெள்ளத் தெளிவாக மனம் எடுத்துச் சொன்னது. முன்னர் எப்படியோ? அவனோடான இந்த ஒரு மாத வாழ்க்கை, இனி அவனில்லாமல் அவளில்லை என்பதைக் கட்டியங்கூற, சோர்வு மிகுதியில் தன்னை அறியாமல் கண்ணயர்ந்தாள் பைரவி.
**–**–**–**–**–**–**
ஒரு ஆறு மணி வாக்கில் அந்த black Audi பைரவியின் வீட்டிற்குள் நுழைந்து. தகவல் கிடைத்தவுடனேயே சந்திரன் ஆனந்தனை அழைக்க,
“திருச்சிக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கேன் மாமா. பாட்டியும், அம்மாவும் கூட வர்றாங்க.”
“அப்படியா மாப்பிள்ளை, நல்லது, சீக்கிரமா வந்து சேருங்க.”
“பைரவி வந்துட்டாளா மாமா? டாக்டர் கிட்ட போறதா சாதனா சொன்னா?”
“இன்னும் இல்லை மாப்பிள்ளை. இப்போ வந்திடுவாங்க.” ட்ரைவ் பண்ணுபவனை இந்த சந்தோஷம் பாதிக்கும் என்பதால் சந்திரன் எதுவும் சொல்லாமல் விட்டு விட்டார்.
வீட்டுக்குள் நுழைந்தவர்களை அருந்ததி ஸ்வீட்டோடு வரவேற்க,
“என்ன அருந்ததி‘ வந்ததும் வராததுமா ஸ்வீட்டை நீட்டுற?” வாசுகி நீட்டி முழக்க, ஆனந்தனின் கண்கள் பைரவியைத் தேடியது.
இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப் போட பாட்டிக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
“வாசுகி, என் பையனுக்கு ஃபோனைப் போட்டு அவன் தாத்தா ஆகப் போறான்னு சொல்லு.” பாட்டியின் குரலில் வீடே அதிர்ந்தது.
“என்ன அத்தை சொல்லுறீங்க?” வாசுகியும், ஆனந்தனும் ஆனந்த அதிர்ச்சியில் அப்படியே நிற்க,
“ம்… சுரக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன், அடப் போவியா.” பாட்டி கலகலத்துச் சிரிக்க, அந்த இடமே களைகட்டியது.
மெதுவாக ரூமிற்குள் ஆனந்தன் எட்டிப்பார்க்க, தன்னை மறந்த உறக்கத்தில் இருந்தாள் பைரவி. கதவைப் பூட்டிவிட்டு உள்ளே நுழைந்தவன், சற்றுத் தொலைவில் நின்று அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்த இரண்டு நாட்களுக்குள் அவளில் நிறைய மாற்றம் தெரிந்தது. கண்களைச் சுற்றி கருவளையம் இருக்க, சற்றே மெலிந்தாற் போல் இருந்தாள். தன் பிரிவு அவளை இத்தனை தூரம் பாதிக்கிறது என்று நினைத்த போது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும், அவளுக்காக மனம் வருந்தியது. எத்தனை அன்பு இருந்தால் என் நன்மைக்காக என்னையே விட்டுப் பிரிந்திருக்க நினைத்திருப்பாள். இருந்தாலும், அவள் இல்லாத வாழ்க்கை தனக்கு ஒன்றுமே இல்லை என்று ஏன் அவளுக்குப் புரியவில்லை.
மெதுவாக அருகில் சென்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்து, புடவையை மெதுவாக விலக்கினான். அவளிடம் அசைவு தெரிந்தது. குனிந்து அந்த வயிற்றில் முத்தம் வைத்தவன், தன் கன்னத்தை அங்கேயே வைத்துக் கொண்டான்.
சட்டென்று விழித்த பைரவி உணர்ந்ததெல்லாம் தன் வயிற்றின் ஈரத்தைத்தான். ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தவள், ஆனந்தனின் தலையை நிமிர்தினாள். கலங்கிச் சிவந்திருந்த கண்கள் இரண்டும் குளமாக இருந்தது. அவனைத் தன்னருகே இழுத்தவள், அந்தக் கண்களில் முத்தமிட்டாள்.
“சொல்லைவே இல்லையே பட்டு.” அவன் ஆதங்கத்தில் சிரித்தவள்,
“எனக்கே தெரியாதே ஆனந்த்.” என்றாள். கண்களில் கண்ணீர் வழிய, அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.
“எதுக்கு இந்த அழுகை வந்தது இப்போ?” அவள் ஆச்சரியமாகக் கேட்க,
“தெரியலை பட்டு, உடம்பெல்லாம் என்னமோ பண்ணுது, ஓன்னு அழனும் போல தோணுது.” அவள் அவன் முகம் வருடிச் சிரிக்க,
“ரெண்டு நாள் தான் உன்னைப் பாக்கலை. என்னமோ ரெண்டு யுகம் தாண்டின மாதிரி இருக்கு. கிளம்பு பட்டு, நம்ம வீட்டுக்கு போகலாம். நீ இல்லாம எனக்கு ஒன்னுமே ஓடமாட்டேங்குதுடி.”
“ம்… போகலாம் ஆனந்த். கொஞ்சம் டையர்டா இருக்கு. நாளைக்கு காலைல போகலாம்.”
“என்னடா பண்ணுது?”
“சொல்லத் தெரியலை ஆனந்த்.” அவள் சோர்வாக சிரிக்கவும், சிரித்த அந்த இதழ்களில் மிக மிக மென்மையாக முத்தம் வைத்தவன்,
“வாடா பட்டு, அம்மா, பாட்டி எல்லாம் வந்திருக்காங்க.” அவளை எழுப்பி, கைபிடித்து அழைத்துச் சென்றான். இவர்கள் ரூம் கதவு திறந்தது தான் தாமதம், வாசுகி ஓடி வந்து பைரவியை கட்டி அணைத்துக் கொண்டார். பேச வார்த்தைகள் வராமல் அவர் திக்கித் திணறவும், அருகில் வந்த பாட்டி,
“வாசுகி, கொஞ்சம் நகரு, என்னாச்சுன்னு இப்போ இப்படி உணர்ச்சி வசப்படுறே? கல்யாணம்னு ஆனா புள்ளை, குட்டி பெத்துக்கிறது சகஜம் தானே. இதுக்கு போய் இவ்வளவு ஸீனைப் போடுறே.” பாட்டி வேண்டுமென்றே வம்பிழுக்க, அங்கிருந்த அனைவருமே சிரித்தார்கள்.
“உங்களுக்கு பொறாமை பாட்டி. இத்தனை நாளா நான் தான் பாட்டி, வீட்டுக்கு பெரிய மனுஷின்னு குரலை உயத்துவீங்க. இனி அதெல்லாம் பலிக்காது. எங்கம்மாவும் பாட்டி ஆகிட்டாங்க. இனி நீங்க அடக்கி வாசிக்கனும், புரிஞ்சுதா?” சாதனா கலாய்க்க,
“அடப் போடி இவளே! உங்கம்மாக்கு பாட்டியா ப்ரொமோஷன்னா, நான் இனி கொள்ளுப்பாட்டி. எங்கிட்ட உங்கம்மா நெருங்க முடியாது.” பாட்டி மாறிக் கொடுக்க என அந்த இடமே கலகலப்பானது.
திடீரென்று அழைப்பு மணி ஒலிக்கவும், அனைவரது பார்வையும் வாசற் கதவை நோக்கித் திரும்பியது.
‘ஆர்த்தி!’
சட்டென்று அங்கே கனமான ஒரு மௌனம் நிலவியது. களைப்பில் சாய்ந்து அமர்ந்திருந்த பைரவி எழுந்தவள், ஆர்த்தியை நோக்கிப் போனாள்.
“பைரவி!” ஆனந்தனின் குரல் கொஞ்சம் கடுமையாக வந்தது.
இந்தப் பெண்ணிற்கு எப்படி நம் குடும்பத்தில் ஒரு சந்தோஷம் என்றால் மூக்கில் வேர்த்து விடுகின்றது என்ற ரகசியம் இன்னும் பாட்டிக்கு பிடிபடவில்லை. தலையில் கை வைத்துக் கொண்டார்.
“எப்படி இருக்கே ஆர்த்தி? உள்ளே வா, வந்து உக்காரு ஆர்த்தி. உன்னைப் பாக்க ஹாஸ்பிடல் வந்திருந்தேன். ஆனா சந்தர்ப்பம் அமையலை.” பைரவி புன்னகைக்க, சுற்றி வர எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவள்,
“எல்லாரும் ஏதோ சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தீங்க, நான் வந்து தொல்லை பண்ணிட்டனா?”
“இவ எப்போதான் நம்மை தொல்லை பண்ணலை?” சாதனா வாய்க்குள் முணுமுணுக்க, ஆனந்தன் அவளைக் கோபமாகப் பார்த்தான்.
“உள்ளே வந்து உக்காரு ஆர்த்தி, எதுக்கு வாசல்லையே நிக்குறே?” பைரவி அவள் கைபிடித்து அழைக்கவும்,
“இல்லை பைரவி, நான் உங்ககிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்டிட்டு போகலாம்னு வந்தேன்.” ஆர்த்தி சொல்ல, ஆனந்தன் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
“ஆனந்தன் என் மேல ரொம்ப கோபமா இருக்காங்க போல. அதுவும் நியாயம்தான். ஏதோ கொஞ்சம் சுயநலமா இருந்திட்டேன். அதனால உங்களுக்கு எல்லாம் என் மேல வருத்தம் இருக்கும். எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.” அவள் கைகூப்பி மன்னிப்பு வேண்ட,
“அதெல்லாம் முடிஞ்சு போனது, விடும்மா. நீயும் எனக்கு பொண்ணு மாதிரித்தான். வா, வந்து உக்காரு.” சந்திரன் சூழ்நிலையை இலகுவாக்கினார். அவரைப் பார்த்து நன்றியாகச் சிரித்தவள், நேரே அருந்ததியிடம் போனாள். அவர் கையைப் பிடித்து,
“எங்கம்மா அன்னைக்கு பண்ணினது ரொம்ப அநியாயம். அவங்க சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” கண்ணீர் துளிர்க்க, அவள் பேசியபோது அருந்ததிக்கு இளகிவிட்டது.
“அட பரவாயில்லை விடும்மா, ஏதோ ஆத்திரத்தில பேசிட்டாங்க.” டைனிங் டேபிளில் இருந்த ஸ்வீட்டை எடுத்து அவளிடம் நீட்டியவர்,
“நல்ல நேரத்துல தான் வந்திருக்கே. இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ. எங்க பைரவி உண்டாகி இருக்கா. அதான் எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம்.” ஒரு நொடி ஆர்த்தியின் கண்களில் வலி போல ஏதோ ஒன்று வந்து போனது. சட்டென்று சுதாரித்தவள்,
“அப்படியா! ரொம்ப சந்தோஷம். அவளோட நல்ல மனசுக்கு எந்தக் குறையும் வராது.” சற்று நேரம் அளவளாவி விட்டு ஆர்த்தி செல்ல, பாரம் இறங்கியது போல் இருந்தது பைரவிக்கு. பழையபடி அந்த இடம் மீண்டும் கலகலக்க, ரூமிற்குள் போனாள் பைரவி. ஜன்னலை இறுக்கிப் பிடித்தபடி வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன். அவன் பின்னிருந்து இடைவளைத்துக் கட்டிக் கொண்டாள் பைரவி.
“என்ன கோபம் ஆனந்துக்கு?” எந்தப் பதிலும் இல்லை. அவன் முன்னால் வந்து அவன் முகம் பார்த்தவள்,
“பேச மாட்டீங்களா ஆனந்த்?” என்றாள்.
“எதுக்கு இப்போ இங்க வந்தாளாம்? நம்மை நிம்மதியா இருக்க விட மாட்டாளா? அடிச்சு நொறுக்கணும் போல ஆத்திரம் வருது.” ஓங்கி சுவரில் கையால் குத்தியவன்,
“இனிமே அவகிட்ட பேசாதே பைரவி, எனக்குப் பிடிக்கலை.” அவன் முறுக்கிக் கொள்ள, அவனை இன்னும் நெருங்கி உடலுரச நின்றவள்,
“சரி, இனிப் பேசலை. ஆனா மனசுல ஏதோ பாரம் இறங்கின மாதிரி இருக்கு ஆனந்த். ரொம்ப சந்தோஷமா இருக்கு.” அவள் இடை வளைத்து அணைத்தவன்,
“இப்போ சொல்லு பட்டு, நான் சாமியா? ஆசாமியா?” அதே கேள்வியை மீண்டும் அவன் கிறக்கமாகக் கேட்க, அவன் மார்பில் குத்தியவள்,
“உங்களை சாமியார்னு பச்சைக் குழந்தை கூட சொல்லாது.”
“அப்போ என்ன சொல்லும் பட்டு?” அவன் சரசமாகக் கேட்க, அவன் மார்பிற்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.
“ஏய் பட்டு, இந்த சந்தோஷத்தை நாம கொண்டாட வேணாமா?”
“கொண்டாடலாமே!”
“சரி, அப்போ நீ எனக்கு என்ன குடுப்பே?” யோசனையாக அவனைப் பார்த்தவள்,
“உங்களுக்கு என்ன குடுக்கலாம… ம்ம்… உங்ககிட்ட என்ன இல்லை…” அவள் யோசனை செய்ய, சிரித்தவன் அவளையே பாத்திருந்தான். அவன் மனதில் ஏதோ இருப்பது புரிய,
“உங்க மனசுல ஏதோ இருக்கு, சொல்லுங்க ஆனந்த்?” அவள் சரியாகக் கணிக்க, சிரித்தவன்…
“இப்போ என்ன சொன்னே?”
“நான் என்ன சொன்னேன்? உங்களைத்தான் சொல்லச் சொன்னேன் ஆனந்த்.”
“அது… அதுதான். கடைசியில என்ன சொன்ன?”
“என்ன சொன்னேன்… ஆனந்த்… சொன்னேன்.”
“அதான், நம்ம ஊருல இப்படிக் கூப்பிட மாட்டாங்க.” அவன் அவளையே ஆவலாக பார்க்க…
“வேற எப்பிடிக் கூப்பிடுவாங்க?” அவள் இழுக்க…
“நீ கேட்டதே இல்லையா பைரவி?”
“அத்தான்னு சொல்லுவாங்க இல்லையா ஆனந்த், நான் கேட்டிருக்கேன்.”
“அப்படிக் கூப்பிடு பைரவி” அவன் ஆசையாகச் சொல்ல, அவள் முகம் வெட்கத்தில் கொஞ்சம் சிவந்தது.
“கூப்பிடு பைரவி!”
“ஐயோ ஆனந்த், எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என்னால முடியாது“
“இப்போ கூப்பிடப் போறியா இல்லையா?” அவன் மிரட்டவும் சிரித்தவள்,
“கூப்பிட முடியாது அத்தான்” என்றாள். வாய் விட்டு சிரித்தவன்,
“இப்படி ரோபோ மாதிரி கூப்பிடுவாங்களா? ரொமாண்டிக்கா கூப்பிடுடி” அவன் கண்களுக்குள் பார்த்தவள்,
‘அத்தான்…
என்னத்தான்…
அவர் என்னைத்தான்…
எப்படி சொல்வேனடி‘ என்று பாடி முடித்தாள். ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன்,
“உன்னை என்னை பண்ணினேன் பட்டு?”
அவன் கண்களில் காதல் போதை ஏறியிருந்தது. இத்தனை நாளும் ஆர்த்தி என்ற முள் தொண்டைக் குழியில் சிக்கியது போல் வேதனைப் பட்டவள், இன்று அந்த வலி நீங்க, அவனுக்குக் குறையாத போதையுடன் அவன் கண்களோடு கலந்து நின்றாள்.
முதன் முறையாக சற்று எம்பி நின்று அவன் இதழ்களில் இதழ் பதித்தவள், இத்தனை நாளும் அவன் படித்த பாடத்தை இன்று அவனுக்கே திரும்பப் படித்தாள். ஆனந்தன் ஆச்சரியத்தின் உச்சத்தில் நிற்க, அவன் முகம் முழுவதும் முத்தம் பதித்தாள்.
‘ஆனந்த்… ஆனந்த்…’ என்ற பிதற்றல் மட்டும் அந்த அறை முழுவதும் நிரம்பி இருந்தது.
அவள் முகத்தைப் பற்றி நிறுத்தியவன், அவள் கண்களுக்குள் பார்க்க, சற்றே வெட்கப் பட்டவள்,
“அத்தான்” என்றாள். அதற்குப் பிறகு அங்கு சத்தமே இல்லை.
ஆனந்தனுக்குள் பைரவி தொலைய, பைரவிக்குள் ஆனந்தன் தொலைய, அங்கே ஆனந்த பைரவி நிலைத்து நின்றது.
முற்றும்.