konjam vanjam kondenadi – 24

konjam vanjam kondenadi – 24

பதட்டமும் பயமும்

எல்லோரும் வீட்டில் வந்திறங்க, குருவுக்கும் ஷிவானிக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்தார் தங்கம்.

ஷிவானி  உள்ளே நுழையும் போ கவனியாமல் நிலப்படியில் வந்து இடித்து கொள்ள போக, குரு சட்டென அவன் கரத்தை வைத்து அவள் இடிபடாமல் பார்த்து கொண்டான்.

அதோடு விடாமல்,

“ஆகாசத்தை பார்த்துக்கிட்டே நடக்கிறது என்ன பழக்கமில்ல… எத்தனை தடவை சொல்லுதேன்… குனிஞ்சி வான்னு… உம்ம காதிலயே ஏறாதோ?!” என்றவன் கடிந்து கொள்ள,

“சாரி மாம்ஸ்… நெக்ஸ்ட் டைம் கரெக்டா குனிஞ்சி வந்திடுறேன்” என்று சொல்லி அவள் சமாளிக்கவும்,

“பார்க்கலாம்… பார்க்கலாம்” என்றவன் இறுக்கமான பார்வையோடு சொல்லி அவள் கரத்தை பிடித்தபடி   உள்ளே அழைத்து சென்றான்.

இந்த காட்சியை பின்னிருந்து பார்த்த சபரியின் முகமோ சீற்றமாய் மாறியது. அருகில் வந்த தன் மனைவியிடம்,

“என்ன உன் தம்பி? ரொம்பத்தான்  வாணிம்மாவை… மிரட்டிறான்… திட்டிறான்… வாசப்படி இவ்வளவு உயரம் கம்மியா இருந்தா அவ என்ன பண்ணுவா… அவளுக்கு இதெல்லாம் பழக்கமா என்ன?” என்றவர் தன் மனக்குமறலை கொட்டி தீர்க்க வேதாவிற்கு கடுப்பானது.

“அவன் திட்டல ங்க… அக்கறையாதான் சொன்னா” பொறுமையாக அவர் எடுத்துரைக்க,

“நான்தான் பார்த்தேனே… அவன் திட்டினதை” தான் பிடித்த பிடியில் அவர்  நிற்க,

‘இந்த மனுஷன் கிட்ட வாயை கொடுக்க கூடாது சாமி’ என்று வேதா மேலே பேசாமல் அமைதியானார்.

அவரோ நிறுத்தாமல் புலம்பி கொண்டே போய் உள்ளே இருந்த நிலப்படியில் மோதி கொண்டு வலியில் நெற்றியை பிடிக்க

வேதா பதறி கொண்டு, “என்னங்க ஆச்சு?!” என்று கேட்டாலும் உதட்டில் வந்த சிரிப்பை பல்லை கடித்து கொண்டு மறைத்தார்.

சபரியின் நெற்றியை வேதா தேய்த்துவிட, “பரவாயில்ல விடு” என்றவர் சொல்ல,

“அவன் ஏன் சொன்னான்னு இப்பவாச்சும் உங்களுக்கும் புரிஞ்சிதா?!” என்று வேதா தட்டுத்தடுமாறி கேட்க அவர் இறுகிய பார்வையோடு,

“இருந்தாலும் அவன் பொறுமையா சொல்லிருக்கலாம்” என்று சொல்லிவிட்டு முன்னேறி சென்றார்.

ஷிவானியும் குருவும் அவர்கள் வந்த திருமண கோலத்தோடு படுக்கையில் துவண்டபடி கிடந்த வள்ளியம்மையின் பாதத்தை தொட்டு வணங்க,

அவர் நெகிழ்ந்தபடி அவர்கள் இருவரையும் மனதார ஆசிர்வதித்தார்.

அவரின் எதிர்பார்ப்பும் ஆசையும் ஒருவழியாய் நடந்தேறிவேட்டது.

பேத்தியை அருகில் அழைத்து திருஷ்டி கழித்தவர், “என் கண்ணே பட்டுடும் போல…” என்று முகவாயை பிடித்து முத்தமிட்டார்.

“என்ற தங்கத்தை கண்கலங்காம பார்த்துக்கடா… ” என்றவர் கண்ணீர் தளும்ப சொல்லும் போது

ஷிவானி உணர்ச்சிவசத்தால் அவர் கரத்தை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.

“இந்த அழமூஞ்சியை எல்லாம் கண்கலங்காம பார்த்துக்க முடியாது” என்றவன் ஷிவானியை பார்த்து கேலியாய் சொல்லி சிரிக்க,

“பாருங்க அம்மாட்சி” அவள் சட்டென்று தன் அழுகையை நிறுத்திவிட்டு அவனை கை காண்பித்தாள்.

“புள்ளய கிண்டல் பண்ணிங்க கம்பெடுத்து விலாசிடுவனாக்கும்…” என்று குருவை முறைத்தபடி சொல்ல,

“அதானே அப்பத்தா எனக்கும் வேணும்… எழுந்திரீங்க… உங்க கம்பெடுத்து என்னைய அடிங்க… எம்புட்டு தடவை இந்த வீட்டை சுத்தி துரத்தி துரத்தி என்னை அடிச்சிருக்கீக… அந்த அப்பத்தாவை நான் பார்க்கனும்… உங்களுக்கு ஒண்ணுமில்ல… சும்மா இந்த சீனெல்லாம் என்கிட்ட ஓட்டாதீங்க சொல்லிப்புட்டேன்” என்றவன் கோபமான பார்வையோடு சொல்ல,

வள்ளியம்மை இன்முகத்தோடு அவனை மௌனமாய் ஏறிட்டார்.

குரு விடாமல்,

“இத பாரு வள்ளியம்மை… என் கோபத்தை கிளப்பாம ஒழுங்கா எழுந்து வந்திருங்க… அதென்ன… உங்க பேத்திங்க எல்லோருக்கும் குழந்தை பிறந்து அவகளை எல்லாம் ஆளாக்கி வுட்டுபுட்டு எனக்கு மட்டும் பாரபட்சம் காட்டுதீக… அதெல்லாம் செல்லாது… எனக்கும் சிவானிக்கும் பிறக்க போற நாலு பிள்ளைங்களை எல்லாம் அப்புறம் யார் நல்லது பொல்லது சொல்லி வளர்ப்பாக” என்று மடமடவென அவன் பேச,

ஷிவானி அதிர்ந்து, “நாலா” என்று உதட்டுக்குள்ளேயே சொல்லி எச்சிலை விழுங்கி கொண்டான். அவளுக்கு அவள் கவலை.

தன் பேரனை அருகில் அழைத்து அவன் கேசத்தை வருடி “ஆகட்டும்ல… உம்ம ஆசைப்படியே நடக்கட்டும்” என்றவர் புன்னகை அரும்ப

அவன் கண்களிலும் நீர் உதிர்த்து விழுந்தது.

அவர்கள் இருவரையும் மீண்டும் அசீர்வதித்தவர்

தங்கத்திடம், “பிள்ளைங்கல கூட்டிட்டு போய் பாலும் பழமும் கொடுங்க” என்றார்.

ஷிவானி அறையை விட்டு வெளியேறும் போது குருவின் முகத்தை உற்று பார்த்தவள், “என்னை மட்டும் அழுமூஞ்சின்னு சொன்னிங்க… நீங்களும்தான் அழுமூஞ்சி… உங்க கண்ணில கூடதான் தண்ணி வந்திருக்கு” என்க,

முகத்தை துடைத்தவன், “அது வியர்வைல…” என்றான் நமுட்டுச் சிரிப்போடு!

“கண்ணுல கூட வியர்க்குமா?” அவனை விழிஇடுங்க பார்த்து அவள் கேட்க,

“உங்களுக்கு விவரமே பத்தல… கண்ணுல கூட வியர்க்கும்… இங்கன பாருங்க” என்றவன் சொல்லி தன் முகத்தை அவள் முகத்தோடு நெருங்க,

“அய்யோ மாம்ஸ்” என்று அவனை நெருங்கவிடாமல் அவன் முகத்தை தள்ளிவிட்டாள். 

பாலும் பழத்தையும் எடுத்து வந்த மரகதம் குருவிடம் கொடுத்து, “நீ குடிச்சிட்டு சிவானி கிட்ட பாதியை கொடுங்க” என்க,

அவள் முகம் சுணங்கி, “ஓரே டம்ளர்லயா எனக்கு வேற டம்ளர் எடுத்துட்டு வாங்க சித்தி” என்றாள்.

“அதேல்லாம் ஒரே டம்ளர்லதான் குடிக்கனும்” என்று வேதா மிரட்டலாய் சொல்ல,

“நோ வே” என்றாள் சிவானி தீர்க்கமாக!

“அடம் பிடிக்காதீங்க… இதெல்லாம் சம்பிரதாயம்… சொல்றதை கேளு” என்று வேதா பல்லை கடிக்க, சபரி ஓரமாய் நின்று கொண்டு இந்த காட்சியை பார்த்து சிரித்து கொண்டார். சிறு வயதிலிருந்தே அவள் அப்படிதானே.

இன்று தீடீரென்று அவள் மாறுவிடுவாளா என்ன? என்றவர் மனதில் எண்ணி கொண்டிருக்க, அவர் எண்ணப்படிதான் அந்த காட்சியும் அரங்கேறி கொண்டிருந்தது.

அங்கே ஷிவானி யார் வார்த்தைக்கும் அசைந்து கொடுக்காமல் பிடித்த பிடியில் நிற்க குரு இடையிட்டு,

“அய்யோ விடுங்களேன்… அவதான் வேண்டாம்ங்கிறா ல்ல” என்று சொல்ல,

“இருந்தாலும் இவ்வளவு பிடிவாதம் ஆகாது… பெரியவங்க சொல்றதை கேட்காம” குத்தலாய் வேதாவை பார்த்து சொன்னார் கனகம்.

தங்கம் விடாமல், “இதெல்லாம் சம்பிரதாயம்… அப்படியெல்லாம் விட முடியாது” என்க,

“சரி… அப்படின்னா ஒண்ணு பண்ணுவோம்” என்று சொல்லி குரு பால் டம்ளரை ஷிவானியிடம் நீட்டி,

“நீ முதல்ல குடி… அப்புறம் நான் குடிக்குதேன்” என்றான்.

“அதெப்படி?!’ என்று மரகதம் குழப்பமாய் பார்க்க,

“அவ குடிச்சி நான் குடிச்சா என்ன… இல்ல நான் குடிச்சி அவ குடிச்சா என்ன? இரண்டும் ஒண்ணுதாம்ல” என்று சொல்ல

ஷிவானி யோசனைகுறியோடு டம்ளரை வாங்கியவள், “இல்ல மாம்ஸ்” என்று தயங்க அவன் மிரட்டலாய் பார்க்க அவள் மறுவார்த்தை பேசாமல் பாதியை அருந்திவிட்டு அவனிடம் தந்தாள்.

இந்த காட்சியை பார்த்திருந்த சபரியும் ஆச்சர்யப்பட்டு போனார். மற்ற எல்லோரும் கூட.

மரகதமோ அவள் கணவன் தயாவை கரத்தால் இடித்து, “பார்த்தீங்களா… என் தம்பியோட பெருந்தன்மையை” என்று கர்வமாய் உரைக்க,

“இதெல்லாம் பெரிய விஷயமா? நீயும் சிவானி மாறி நம்ம கல்யாணத்தன்னைக்கு அடம் பிடிச்சிருந்தன்னா… நானும் பெருந்தன்மையா நடந்திருப்பேன்ல” என்க,

“ஆமா ஆமா கிழிச்சிருப்பீக” என்று முகத்தை சுளித்தாள்.

“ப்ச்… இப்ப மட்டும் என்னடி கெட்டு போச்சு… இன்னைக்கு இராத்திரிக்கு பால் கொண்டு வாங்க… மாமன் நீங்க குடிச்ச மிச்ச பாலை குடிக்கேன்”

அவனை படுகேவளமாய் பார்த்தவள், “கொடுக்கேன் கொடுக்கேன்… பால் இல்ல… பால்டாயில் கொடுக்கேன்… ஆள பாரு” என்க,

“அதுக்கென்ன? அதையும் பாதி நீ குடிச்சிட்டு குடுத்தா நான் குடிக்குதேன்டி” என்று சொல்லி கல்மிஷமாய் சிரித்தான் தயா.

மரகதம் ஒழுங்கெடுத்துவிட்டு வெடுக்கென முகத்தை திருப்பிவிட்டு செல்ல குரு புரிந்தும் புரியாமலும் அந்த காட்சியை பார்த்தவன்,

“என்ன மாமோய்? எங்க அக்காகிட்ட என்ன வம்பு வளர்க்கீக” என்று குரு கேட்க,

“அவ என் பெண்ஜாதில… நான் அவகிட்ட வம்பு வளர்ப்பேன்… நீ எதுக்குல கேட்க” என்று தயா முறைப்பாய் சொல்ல,

“எனக்கு அவக அக்கா… பிறவுதாம்ல உங்களுக்கு பெண்ஜாதி” என்று குரு விட்டு கொடுக்காமல் பேச அந்த மாமன் மச்சான்களை பார்த்து எல்லோரும் சிரித்தனர்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ராகினிக்கு தாங்க முடியாத கோபம். அப்போது தங்கம் அவள் மனநிலை புரியாமல் பழம் பூவெல்லாம் இருந்த தட்டை கொடுத்து,

“இந்த தட்டை பூஜையறையில வைச்சிட்டு வா” என்க,

வேண்டா வெறுப்பாய் அதனை வாங்கி கொண்டு போனவள் எதிரே கைப்பேசியில் அளவளாவி கொண்டு வந்த மோகனின் மீது மோதி தட்டை தவறவிட்டாள். அவனும் அவன் போஃனை தவறவிட்டான்.

அவளுக்கிருந்த கடுப்பிற்கு அவனை அவள் ஏறுஏறு என ஏறுவிட அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“ஹெலோ ஹெலோ நிறுத்திறியா… யாரு யாரு மேல மோதினது… கண்ண முன்னாடி வைச்சிட்டு வந்தியான்னு என்னை கேட்கிற… நீ எங்க வைச்சிட்டு வந்த” என்று கேட்டு அவனும் விடாமல் வசை மாறி பொழிய

அவள் அவனை ஏறஇறங்க பார்த்துவிட்டு கீழே சிதறிய பொருட்களை எடுத்து தட்டில் வைத்தவள் மறந்து அவன் போஃனையும் ஏதோ நினைவில் தட்டில் வைத்துவிட்டாள்.

மோகன் அப்போதுதான் போஃனை எடுக்கலாம் என்று குனிய அங்கே அவன் பேசி இல்லை. பகீர் என்றது அவனுக்கு.

மீண்டும் ராகினியை பின்தொடர்ந்து வழிமறிக்க அவள் கோபமாக,

“ஏ பக்கி… திரும்பியும் வந்து முட்டி எல்லாதிலயும் கீழ தள்ளிவிடலாம்னு பார்க்கிறியா?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தட்டில் போஃனை பார்த்தவன்,

“நீ எதுக்கு பக்கி என் போஃனை எடுத்துட்டுவந்த?!” இப்போது கோபம் கொள்வது அவன் முறையாக

ராகினி அசடு வழிந்தாள்.

“தெரியாம எடுத்து வைச்சியா இல்ல தெரிஞ்சே எடுத்து வைச்சியா?” என்றவன் சந்தேகமாய் புருவத்தை ஏற்ற,

“ஓவரா பண்ணாதீங்க… நான் தெரியாமதான் எடுத்து வைச்சிட்டேன்… அன் என்கிட்டயும் லேட்டஸ்ட் காஸ்ட்லி மொபைல் இருக்கு” என்று உரைக்க,

“என்ன பெரிய காஸ்ட்லி… என் போஃனை விடவா… இது ஐபோஃன்… என்ன ரேட் தெரியுமா?!” என்றவன் கர்வத்தோடு தன் கைப்பேசியை காண்பிக்க,

“அப்படி என்னம்ல ரேட்?” இந்த கேள்வியை கேட்டது ராகினி இல்லை. குரு

மோகனின் ஆணிவேரே ஆட்டம் கொண்டது. சற்று நடுக்கத்தோடு அவன் திரும்ப,

“சொல்லு மோகன்… அப்படி என்னம்ல விலை… நான் தெரிஞ்சிக்கிடுதேன்” என்றான்.

ராகினி இருந்த தடம் தெரியாமல் அந்த இடத்தை விட்டு நழுவிவிட மோகன்தான் வகையாக சிக்கி கொண்டான்.

“சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டிருந்த ண்ணா” என்றவன் அச்சத்தோடு உரைக்க,

“என்ன விளையாட்டு?… பொம்பள புள்ளக்கிட்ட உம்ம போஃனை காட்டி சீனை போட்டிட்டிருக்கீகளா?” என்றதும் அவன் பதட்டமாகி,

“அய்யோ சத்தியமா இல்ல ண்ணா” என்றவன் சொல்ல,

“சரி சரி போங்க” என்று குரு அவனை அனுப்ப மோகன் தப்பி பிழைத்தோம் என விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான்.

ஷிவானியை ரொம்பவும் அன்பாய் நலம் விசாரித்து கொண்டிருந்தாள் சங்கீதா. ரஞ்சனின் மனைவி.

ஷிவானியோ சங்கீதாவின் வயிற்றில் கரம் வைத்து,

“என் குட்டி டார்லீங்… என்ன சொல்றான் க்கா?” என்று கேட்க,

“அவனுக்கு விளையாட இன்னொரு குட்டி டார்லீங் வேணுமாம்… ஷிவானி சித்திக்கிட்ட சொல்ல சொன்னான்” என்று சங்கீதா சிரித்தபடி சொல்ல,

“அக்கா ப்ளீஸ்” என்று முகத்தை சுருக்கினாள் ஷிவானி.

அப்போது அவர்களோடு அங்கேதான் நளினியும் அமர்ந்திருந்தார்.

அவர் ஆசூயான பார்வையோடு, “ஏன் ஷிவானி… அங்க மலேசியால இருக்க உங்க வீடு புஃலா சென்டிரலைஸ்ட் ஏசி…  ராணி கணக்கா உன்னைய வைச்சிருந்தான் என் தம்பி… ஆனா இங்க ஒரு ஏசி இல்ல… அட்டேச்சர் டாயலட் இல்ல… ரூம் கூட சின்னதாதான் இருக்கு… இந்த வீட்டில நீ எப்படிதான் இருக்க போறியோ… எல்லாம் விதி” என்று புலம்ப ஷிவானியின் முகம் அப்படியே சுணங்கி போனது.

சங்கீதா அவள் தோளை தட்டி சமிஞ்சையால் அவர் சொல்வதை பெரிதாய் எடுத்து கொள்ள வேண்டாமென சொல்ல

ஷிவானியால் ஏனோ அவர் சொன்னதை அப்படியே விட முடியவில்லை. 

அவள் மனதை ஏதொவொரு குழப்பம் ஆட்கொண்டது. எல்லா வசதி ஆடம்பரங்களையும் தன் சிறு வயதிலேயே கண்டுவிட்டவள் ஷிவானி.

பார்ன் வித் ஸில்வர் ஸ்பூன். என்று சொல்வார்களே.

அப்படிதான் அவளும். அவள் பிறக்கும் போது சபரிக்கு அத்தனை வசதி இல்லையென்றாலும் அவள் வளர வளர அவரின் வசதியும் அபரிமிதமாய் கூடியது.

ஆடம்பரத்தின் உச்சத்தில் இருந்து பழகிவிட்டு சட்டென்று அடி ஆழத்திற்கு செல்வதெல்லாம் யாருக்காயிருந்தாலும் சிரமம்தான். ஷிவானி மட்டும் அதில் விதிவிலக்ககா என்ன?

நளினி முடிந்தளவு தன் கலகத்தை சிறப்பாய் நிகழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட தயாராக,

அப்போது மோகனின் விழிகள் யாரையோ தீவீரமாய் தேடியது.

ரஞ்சன் அவன் தோளை தொட்டு, “யாரடா தேடிற?” என்று கேட்க,

“அது ஒரு பொண்ணு” என்று இழுத்தான்.

“பொண்ணா?” என்று ரஞ்சன் அதிர்ச்சியாகிவிட்டு, “யாருடா?” என்று கேட்க,

“அந்த குருவோட அக்கா பொண்ணு”

“ஏன்டா? சிங்கத்தோட குகையில   வாலன்டியரா தலை விடற”

“என் மாமன் பொண்ணை அவன் கரெக்ட் பண்ணலாம்… நான் அவன் அக்கா பொண்ணை கரெக்ட் பண்ண கூடாதா?!” என்று மோகன் சொல்ல மீண்டும் அதிர்ச்சியானான் ரஞ்சன்.

“டே… நேத்து வரைக்கும் ஷிவானியை நெனச்சி உருகிட்டிருந்த”

“அது நேத்து… இது இன்னைக்கு”  என்று மோகன் சொல்ல ரஞ்சன் வாயடைத்து நின்றான்.

அவர்கள் காரில் ஏறும் வரை ராகினியை பார்வையாலேயே மோகன் தேட அவளும் ஒரு ஓரமாய் அவர்கள் செல்வதை பார்க்க வந்தாள்.

மோகன் வெகுஆர்வமாய் அவளுக்கு கை அசைத்தான்.

ராகினியின் தங்கை விஷாலினி அவன் கையசைத்ததை பார்த்து,

“என்னய்யா நடக்கது இங்க… யாரு க்கா அவன்… என்கிட்ட சொல்லவே இல்லையே” என்று கேட்க,

“சே… அந்த பக்கியை எனக்கு யாருன்னே தெரியாது… மனுஷன் இருக்கிற கடுப்பில இவன் வேற” என்று சொல்லிவிட்டு திரும்பி வேகமாய் வீட்டிற்குள் நடந்தாள்.

அவள் கண்ணீரை அடக்கி அடக்கி வைத்திருந்து இப்பொழுது சுத்தமாய் முடியவில்லை. வேகமாய் வீட்டிற்குள் சென்றவள் யார் பார்வையும் படாத வண்ணம் மச்சில் ஏறும் ஏணியில் அமர்ந்து கொண்டாள்.

அவள் அங்கே அமர்ந்திருப்பது யார் பார்வைக்கும் அத்தனை சீக்கிரத்தில் தென்படாது. வெகுநேரம் அப்படியே அவள் சிலையென சமைந்திருக்க குரு அவளை அங்கே பார்த்த அதிர்ச்சியோடு,

“ஏ ராகினி… இறங்கி வா… கீழே விழ போறவ…” என்றவன் குரல் கொடுக்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கோபம் பொங்கி கொண்டு வந்தது.

“நான் விழுந்து சாகிறேன்… உங்களுக்கு என்ன அதை பத்தி” என்றவள்
கோபமாக சொல்ல,

“என்ன பேச்சு இதெல்லாம் ? இறங்கி வா புள்ள” என்றவன் அதட்ட,

“மாட்டேன்… நான் அப்படியே மாடியேறி போய் மேல இருந்து குதிக்க போறேன்” என்றதும் சற்று நிதானித்து அவளை பார்த்தவன்,

“சரி… ஏறுக… ஏறி போய் குதீக… ஆனா குதிக்கும் போது தலைகுப்புற குதிக்கனும்… அப்பதான் கபாலம் இரண்டா பிளந்து பட்டுன்னு உயிர் போகும்… அப்படி இல்லாம நேரா குதிச்சீகன்னா கைகால் முடமாகும்… அப்புறம் வாழ்க்கை பூரா உன்னைய பார்த்துக்கிட எங்க க்காதான் கஷ்டபடனும்” என்றான் குரு அலட்டி கொள்ளாமல்,

ராகினிக்கு அவன் சொன்னதை கேட்ட ஒரு நொடி வெலவெலத்து போனது.

“அப்போ… நான் குதிச்சா உங்களுக்கு வருத்தமா இருக்காதா?” என்றவள் கேட்க,

“நீ உன்னை பெத்தவங்களை…  கூட பிறந்தவைங்கள பத்தி எல்லாம் கவலை படாம குதிக்கிறன்னும் போது… எனக்கு மட்டும் என்னல வெளிப்பு… உன்னைய பத்தி கவலை பட… குதிக்கிறதும் குதிக்காததும் உம்ம விருப்பம்… சொல்லிப்புட்டேன்” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான்.

அவன் சொன்ன வார்த்தைகளை கேட்ட பின் அவள் எங்கே மச்சில் மேல் ஏறி செல்ல. அவள் பொறுமையாய் அடியெடுத்து வைத்து கீழிறங்கி வந்துவிட்டாள். அவள் இறங்கி வருவதை கண்ணுக்கு மறைவாய் நின்று குரு பார்த்துவிட்ட பின்னே அங்கிருந்து சென்றான்.

திருமணம் என்பது சொந்தபந்தங்கள் குழுமும் ஓர் இனிய விழா. அங்கே பல எண்ணம் கொண்டவர்கள் ஒரே இடத்தில் கூடியிருக்க நல்லது கெட்டது என்று எல்லாமே அந்த விழாவில் சங்கமித்திருக்கும். அப்படி ஷிவானி குருவின் திருமண விழாவில் பல வாழ்த்தொலிகளும் பொறாமைகள் பூசல்கள் என எல்லாம் அரங்கேறி ஓருவாறு முடிவடைந்திருந்தது.

ஷிவானியை முதலிரவுக்கு தயார் செய்து கொண்டிருந்தார் வேதா.

ஆனால் ஷிவானி, “மீ இதெல்லாம் இப்ப வேண்டாமே” என்று கெஞ்சி கொண்டிருக்க,

“இதெல்லாம் இப்போதான் நடக்கனும்” என்று மகளிடம் தீர்க்கமாக உரைத்தார் வேதா.

“ஏன் இப்பவே நடக்கனும்… ஒரு டென் டேஸ் கழிச்சி வைச்சுக்கலாமே… அதுக்கு மேல நான் டைம் கேட்க மாட்டேன்… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ” என்க, வேதா தலையிலடித்து கொண்டார்.

“ஏன்டி இப்படி குழந்தை மாதிரி பேசிற… உன் வயசில எல்லாம் எனக்கு  கல்யாணமாகி நீ பிறந்துட்ட… தெரியுமா?”

“ஸோ வாட் ? நானும் அப்படியே இருக்கனுமா என்ன?”

“வாணிம்மா… புரிஞ்சிக்கோ… கல்யாண முடிஞ்சிதும் இந்த மாதிரி சடங்கெல்லாம் நடக்கனும்”

“உம்ஹும் நான் ஒத்துக்க மாட்டேன்… எனக்கு மாம்ஸை பார்த்தா பயமா இருக்கு”

“என்னடி உளற?” அவள் முகத்தை நிமிர்த்தி பிடித்து அதிர்ச்சியாய் வினவியவர்,

“அவரை பிடிச்சிருக்கு… எனக்கு அவரை கட்டிக்க விருப்பம்னு நீதானே எல்லோர் முன்னாடியும் சொன்ன” என்று அடுத்த கேள்வியும் கேட்டார்.

“அதெல்லாம் நான் சொன்னதான்… பட் அப்போ நான் இதை பத்தி எல்லாம் யோசிக்கல மீ” என்றவள் சொல்ல ஒருபக்கம் மகளை பார்த்து பரிதபமாய் இருந்தது வேதாவிற்கு. 

அவர் மௌனமாய் நிற்க அப்போது உள்ளே நுழைந்த மரகதம் ஷிவானியை பார்த்து, “எம்புட்டு அழகா இருக்க ஷிவானி நீ” என்று சொல்லி தன் கண்மையால் திருஷ்டி பொட்டு வைத்தவர்,

“இன்னும் பூ வைக்கலயா க்கா” என்று சொல்லி வேதாவை பார்க்க அவர் தவிப்போடு தன் தங்கையை பார்த்தார்.

“என்னாச்சு க்கா?” என்றவள் கேட்க,

“பயமா இருக்கு… வேண்டாம்னு சொல்றா மரகதம்” என்றார்.

“அய்யோ அப்புறம் தம்பியோட நிலைமை” என்றவள் சொல்லி சிரிக்க,

“விளையாடதடி… நீயே அவகிட்ட பேசி புரிய வை” என்று சொல்லி அவளை சிக்க வைத்துவிட்டு வேதா வெளியேறிவிட்டார்.

அவள் தலையில் பூவை மரகதம் வைக்க, “தலை வலிக்குது சித்தி… இவ்வளவு பூ வேண்டாம்” என்க,

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது” என்று கட்டாயப்படுத்தி சரம் சரமாய் மல்லியை அவள் தலையில் சூடிவிட்டார். அதோடு மரகதம் சூசகமாய் சிவானியிடம் சில விஷயங்களை சொல்ல அவளுக்கு புரிந்ததோ தெரியாது. ஆனால் அதையெல்லாம் கேட்டு அவளுக்கு மயக்கம் வராத குறை.

பதட்டம் பயம் தவிப்பு என இதர உணர்வுகள் எல்லாம் அவளை ஆட்கொள்ள,

“சித்தி… எனக்கு வயிறெல்லாம் இழுத்து பிடிச்சிட்டு என்னவோ பண்ணுது” என்றதும் மரகதத்துக்கும் கிலி பற்றி கொண்டது.

“என்னடி இப்படி சொல்ற? சரி… இரு நான் அக்காவை கூட்டிட்டு வர்றேன்” என்று அவள் வெளியே ஓட வேதா பதறி கொண்டு உள்ளே நுழைந்தார். அவரோடு சபரியும் நுழைந்தவர் மகள் மீதிருந்த கோபத்தை எல்லாம் மறந்து,

“என்னாச்சு வாணிம்மா?” என்றவர் பதற,

“ஐம் நாட் பீஃலிங் வெல் டேட்… வயிறெல்லாம் வலிக்குது” என்று தன் கரத்தால் வயிரை பிடித்து கொண்டாள்.

“சரி எழுந்திரு… வா நம்ம டாக்டரை பார்க்கலாம்” என்றவர் அழைக்க,

“அவளுக்கு அதெல்லாம் ஒண்ணுமில்லங்க… அவ சும்மா பயத்தில இப்படி சொல்லிட்டிருக்கா” என்று வேதா அவருக்கு புரிய வைக்க அப்படியே யோசனையாய் நின்றவர்,

“அவதான் பயப்படிறா இல்ல… இதெல்லாம் இரண்டு நாள் கழிச்சி வைச்சுக்க கூடாதா” என்று மகள் சார்பாய் பேசினார் சபரி.

“என்ன பேசிறீங்க நீங்க? இரண்டு நாள் கழிச்சி மட்டும் உங்க பொண்ணை பயப்படிறதை நிறுத்திடுவாலாக்கும்” என்று பதில் கேள்வி கேட்டவர்,

“நீங்க முதல்ல இந்த விஷயத்தில எல்லாம் தலையிடாதீங்க… நான் பார்த்துக்கிறேன்” என்று வேதா சொல்ல மனைவியை கோபமாய் முறைத்துவிட்டு மகளை பரிதாபமாய் ஓரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார் சபரி.

ஷிவானி சுயவிரக்கத்தோடு தன் அம்மாவை பார்த்து, “மீ உண்மையிலேயே வயிறு வலிக்குது” என்க,

“மூடிறி வாயை… எனக்கு உன்னை பத்தி தெரியாது…  ஸ்கூலுக்கு போக எக்ஸேம் போக சாக்கு சொல்ற மாறி சொல்லிட்டிருக்க… பாலும் பழமும் சாப்பிடிறதுக்கு பிடிவாதம் பிடிச்சி என் மானத்தை வாங்கினது பத்தாதுன்னு… இப்ப திரும்பியும்” என்றவர் தன் பொறுமையிழந்து படபடவென பொறிய

“அய்யோ போதும்… நான் போறேன்… போதுமா?!” என்று வீராப்பாய் எழுந்து நின்றாலும் அவள் கண்கள் நீரை உகுத்தது.

“வாணிம்மா” என்று வேதா எதையோ சொல்ல யத்தனிக்க அதனை காதில் வாங்காமல் முன்னே நடந்தவள் மீண்டும் பின்னோடு திரும்பிவந்தாள்.

வேதா மீண்டும் இவள் என்ன காரணத்தை சொல்ல போகிறாள் என்று அதிர்ச்சியாய் பார்க்க,

“ஏன் மீ ? புடவை கழண்டுக்காதுல… நல்லா பின் பண்ணியா?” என்று கேட்க அவருக்கு இப்போது மகளை விடவும் குருவின் நிலைமையை எண்ணியே ரொம்பவும் பரிதாபமாக இருந்தது.

error: Content is protected !!