Aathiye anthamai – 32

Aathiye anthamai – 32

ஜென்மாந்திர பந்தம்

அன்னம்மா ஒரளவுக்கு தெளிவான நிலையில் மரத்தின் மீது சாய்ந்தபடி
ஆதியை அருகில் அழைத்து மீண்டும் மீண்டும் அவள் முகத்தை தடவி பார்த்தார்.

தன் கை அசைவாலும் குரல் வராமலும் அவர் ஆதியோடு பேச அவளும் அவரிடம் தெளிவோடும் புரிதலோடும் பதிலுரைத்தாள்.

சங்கரிக்குதான் ஆச்சர்யம் தாளவில்லை. இந்த ஊரிலுள்ளவர்களே பாட்டி சொல்வதை புரிந்து கொள்ளாத போது எங்கிருந்தோ வந்த ஆதியால் எப்படி சாத்தியமானது.

அதுவும் பாட்டியை ஊருக்குள் உள்ள எல்லோரும், ‘கிறுக்கு கிழவி’ என்றும் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லி கொண்டிருக்கும் நிலையில் பாட்டி ஆதியிடம் அன்பை வெளிபடுத்தும் விதமும் ரொம்பவும் தெளிவாக தன் எண்ணத்தை ஒலியில்லாத குரலாலும் செய்கையாலும் புரிய வைக்கும் விதமும் விந்தையாய் தோன்றியது.

ஆதி ஏதோ பெயருக்கென்று பேசவில்லை. இருவருக்கும் இடையில் இருந்த புரிதல் அவர்களின் முகப்பாவனையிலேயே நன்றாய் விளங்கியது.

அன்னம்மா அழுவதும் ஆதி அவரை தேற்றி மீண்டும் பேச வைப்பதும் என அவர்களின் உரையாடல் மேலும் மேலும் சங்கரியை பிரமிப்பில் ஆழ்த்தியது.

மனரீதியான உணர்வுகளை வெளிப்படுத்த ஒலி அவசியமில்லை என்பதை அவர்கள் இருவரின் சம்பாஷனையும் அழகாய் எடுத்துரைத்தது.

இப்படியாக நீண்டு கொண்டிருந்த இவர்களின் உரையாடலில் அன்னம்மா தன் தள்ளாமையிலும் ஆதியை கோவிலுக்குள் அழைத்து சென்று ஏதோ ஒரு ரகசியத்தை தனிமையில் உரைத்தார்.

அன்னம்மா இத்தனை நாளாய் தனக்குள்ளேயே புதைந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்த ரகசியத்தை ஆதியிடம் சொல்லி பெருமூச்செறிய சங்கரிக்கு அந்த ரகசியம் எதை குறித்து என்பதை  யூகிக்க கூட முடியவில்லை. 

இவர்களின் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் அன்னம்மாவை ஆதி தங்க வைக்க வேறு ஏற்பாடுகள் செய்வதாக சொல்லி பாட்டியை தன்னோடு அழைக்க,

அவர் வரவே மாட்டேன் என்று கண்டிப்போடு மறுத்துவிட்டார். அதற்கு அவர் ஆதியிடம் ஏதோ ஒரு அழுத்தமான காரணத்தை தெரிவிக்க ஆதியும் அவரை அதற்கு மேல் தொந்தரவு செய்யவில்லை.

அவள் பின்னர் சங்கரியோடு கோவிலை விட்டு புறப்பட்டவள் ஓர் இறுக்கமான மௌனத்தை சுமந்து கொண்டு நடக்க

சங்கரி அப்போது,

“உண்மையிலேயே உனக்கும் இந்த ஊருக்கும் ஏதோ ஒரு ஜென்மாந்திர பந்தம் இருக்குதான். இல்லாட்டி போன நீ அந்த முரட்டு காளையன் ஈஸ்வரனை சமாளிக்கிற விதமும் சரி.. இப்போ அன்னம்மா உன் கிட்ட பழகின விதமும்…ஏதோ இன்னைக்கு அறிமுகமான பழக்கம் மாதிரி தெரியல” என்றாள்.

ஆதி சிறு புன்னகையோடு அவளின் மௌனத்தை தொடர சங்கரியே மேலும்,

“ஏன் ஆதி ? ஊரே அன்னம்மாவை கிறுக்கு கிழவி, பைத்தியம்னு சொல்லிட்டிருக்கு.. ஆனா இன்னைக்கு அன்னம்மா பாட்டி உன் கிட்ட பேசின விதம்…. அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்கன்னு தோணுது”

“சில உண்மைகளை சொன்னால் பைத்தியக்காரி பட்டம் கட்டிடுவாங்க… ஏன் இப்போ அந்த உண்மையை நான் சொன்னாலும் எனக்கும் பைத்தியக்காரி பட்டம்தான்” என்று ஆதி தீவிரமான முகபாவனையோடு சொல்ல,

“அப்போ அன்னம்மா பாட்டி பேசினதெல்லாம் உனக்கு புரிஞ்சிதா?” என்று வியப்போடு கேட்டாள் சங்கரி.

“நல்லாவே புரிஞ்சிது”

“எப்படி ஆதி ? எனக்கு அவங்க என்ன சொல்லவர்றாங்கன்னு இதுவரைக்கும் புரிஞ்சதில்ல”

“அதுக்கு ஒரு காரணம் இருக்கு.. ஐ நோ லிப் ரீடிங் வெரி வெல்.. ஒருத்தரோட முகப்பாவனை வாயசைப்பு வைச்சு அவங்க என்ன சொல்றாங்கன்னு புரிஞ்சிக்கிற மௌனமான மொழி…
எனக்கு ரிலேஷன்ஸ்னு யாரும் இல்லாததாலா நான் அடிக்கடி நிறைய ஆர்ஃபனேஜஸ் விசிட் பண்ணுவேன்… அதுல எனக்கொரு அலாதியான சந்தோஷம்… அப்போ வாய் பேச முடியாத காது கேளாத குழந்தைகளோடு எண்ணங்களை புரிஞ்சிக்கிறதுக்காக நான்  சாதாரணமா கத்துக்கிட்ட லிப் ரீடீங்  இன்னைக்கு என் வாழ்கையை புரட்டி போடற இந்த ஊரையே ஆச்சர்யப்படுத்த போற ஒரு ரகசியத்தை தெரிய வைச்சிருக்கு” என்று சொல்லியவளின் முகத்தில் அத்தனை பிரகாசம்.

“அப்படி என்ன ரகசியம்?” என்று சங்கரி ஆர்வத்தோடு கேட்க,

“நிச்சயம் உன்கிட்ட சொல்லத்தான் போறேன்… ஆனா உண்மையை முழுசா தெரிஞ்சிக்கிட்ட பிறகு… ஸோ அதுவரைக்கும் இந்த ரகசியம் என்னோடவே இருக்கட்டும்… டோன்ட் மிஸ்கேட் மீ” என்று சங்கரியிடம் கெஞ்சலான பார்வையோடு சொல்ல,

“ஒண்ணும் பிரச்சனை இல்ல… என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது” என்றாள் சங்கரி.

*******

செல்லம்மா தன் வீட்டில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார். தனிமையும் கவலையும் அவருக்கு புதிதல்ல.

ஆனால் அதை தாண்டி அவரின் நிம்மதியை குலைத்திருந்தது ஒருவித அச்சம். ஆதிக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற அச்சம். 

அவர் தன் கரத்தில் ஆதிபரமேஸ்வரி டாலரை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தார்.

ஏதோ தவறாய் நடக்க போகிறதோ என்ற ஓரு பதட்டம் அவர் மனத்தை ஆட்கொள்ள இத்தனை நாளாய் இத்தகைய உணர்விலிருந்து எப்படியோ மீண்டிருந்தார். ஆனால் அது மீண்டும் தலைதூக்கியிருப்பது அவருக்குள் பெருத்த பயத்தை உண்டாக்கியிருந்தது.

செல்லம்மாவின் மனநிலை இப்படியிருக்க, ஆதியோ அன்னம்மாவிடம் பேசிய நொடியிலிருந்து மௌனமே ரூபமாய் ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்கியிருந்தாள்.

அன்னம்மா சொன்ன ரகசியம் அவளை பெரியளவில் குழப்பி கொண்டிருந்த அதே நேரம் விஷ்வாவின் நினைவும் அவ்வப்போது அவள் மனதை ஆழதுளையிட்டு வேதனைப்படுத்தி கொண்டிருந்தது.

அவளின் சிந்தனையை கலைக்கும் விதமாய் சரவணன் அனுமதியின்றி அவள் அறைக்குள் நுழைய,

புரியாமல் அவனை குழப்பமாய் பார்த்தாள் ஆதி.

அவன் உச்சபட்ச  கோபத்தோடு அவளை சுட்டெரிப்பது போல பார்த்தவன்,

“உன் ப்ஃரண்டு ஊருக்கு போயிட்டானா… அவன் அண்ணனை அடிச்சானாமே.. அவனுக்கு எவ்வளவு தெனவாட்டும் தைரியமும் இருக்கனும்… நான் மட்டும் அங்க இருந்திருக்கனும்.. அவனை தோலுரிச்சு தொங்க விட்டிருப்பேன்” என்று ஆக்ரோஷமாய் பேசினான்.

அவன் பேச பேச ஆதியால் தன் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

“போதும் நிறுத்து சரவணா… இதான் லிமிட்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின ஐ வில் ஸ்லேப் யூ” என்றவள் பதிலடி கொடுக்க,

“ஓ… அப்படி போகுதா கதை.. .அவன பத்தி சொன்னா நீ என்னை அடிப்பியா.. உன்னை பத்தி சொன்னா அவன் எங்கண்ணனை அடிப்பானா… உங்க இரண்டு பேருக்குள்ள அப்படி என்னடி உறவு ?” அவன் வார்த்தைகளும் கோபமும் தறிகெட்டு பயணிக்க அவள் கைகளைகட்டி கொண்டு அவனை அமைதியாய் ஏறிட்டாள்.

“எனக்கும் விஷ்வாவுக்கும் இடையில என்ன உறவிருந்தா உனக்கென்ன?” என்று கேட்டு எகத்தாளமாய் பார்க்க அவன் பதில்பேச முடியாமல் வாயடைத்து நின்றான்.

ஆதி மேலும்,

“நான் தெரியாமதான் கேட்கிறேன்… ஏதோ ஒரு உறவு இருந்தாதான் கோபம் வரனுமா என்ன? நல்ல நட்பு இருந்தா கூட கோபம் வரும்… அதெல்லாம் நான் சொன்னாலும் உனக்கு புரியாது” என்றவள் எள்ளலாய் புன்னகையிக்க,

“ஆமா ஆமா பெரிய நட்பு… நீ ஏதோ கோபத்தில ஒரு வார்த்தை சொன்னதும்.. ஊரை விட்டு போயிட்டான்… அதான் உங்க நட்போ?!” என்று கேட்டு எளக்காரமாய் பார்த்தான்.

“நட்பு முக்கியம்தான்… ஆனா அதை விட முக்கியம் அவனோட சுயமரியாதை… அது இல்லாத போது அவனால் எப்படி இங்க இருக்க முடியும்…

இதெல்லாம் போய் உன்கிட்ட சொல்லிட்டிருக்கேன் பாரு… உனக்கும் உங்க அண்ணனுக்கும்தான் சுயமரியாதைனா என்னன்னு தெரியுதே” என்றவள் கேவளமாய் ஒரு பார்வை பார்க்க அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ரொம்ப அதிகமா பேசிற… ஏதோ பொம்பள புள்ளயாச்சேன்னு பாக்கிறேன்”

“உண்மைய சொன்னா… அதிகமா பேசிறதா… இரண்டு பேரும் உங்க மாமனுக்கு அடிமை மாதிரி வேலை செஞ்சிட்டிருககீங்க… உங்க இரண்டு பேருக்கும் சொந்த அடையாளம்னு ஏதாவது இருக்கா… எது சொன்னாலும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு… அவர் செய்ற அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் துணை போயிட்டிருக்கீங்க… அதுவும் அந்த பேஃக்டிரியை கட்ட உன் மாமன்தான் பணம் வருதேன்னு ஒத்துக்கிட்டாருன்னா.. நீ படிச்சிருக்கல்ல உனக்கு மூளையில்ல?” உக்கிரமாய் கேட்டாள்.

“அந்த பேஃக்டிரி இங்க வந்தா உனக்கென்ன?” அலட்சியமாய் அவன் கேட்க,

“சத்தியமா உனக்கு தெரியாதா… இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா… இந்த ஊருக்குள்ள அந்த பேஃக்டிரி வந்தா நீங்க இந்த ஊருக்குள்ள விவசாயமே பண்ண முடியாது… அஞ்சு வருஷத்துல இந்த ஊர் மக்கள் எல்லோரும் அந்த பேஃக்டிரியை சார்ந்துதான் வாழனும்… நாளடைவில சுத்தி இருக்கிற அடிப்படை ஆதாரமான்ன தண்ணீர் மாசுப்படும்… காத்து மாசுப்படும்… கொஞ்ச நாளில இந்த ஊர் மக்கள் எல்லோரும் அநாதரவா வேற இடத்தை தேடி போக வேண்டியதுதான்… இன்னைக்கு அந்த பேஃக்டிரி ஊருக்குள்ள வந்துச்சன்னா… அப்புறம் இந்த இடமும் இந்த ஊரும் உங்க வாழ்விடமா இருக்காது” என்றவள் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

சரவணன் பதிலின்றி மௌனமாய் நின்றான்.

“இத பார் சரவணன்… ஏற்கனவே நம்ம குடும்பம் செஞ்ச பாவத்துக்கு நிறைய அனுபவிச்சிடுச்சு… ஆனா இப்ப செய்ய போற பாவம் இருக்கு இல்ல.. அது நம்மல சந்ததிகளே இல்லாம வாழ்ந்த தடம் தெரியாம அழிச்சிடும்” என்று ஆதி ஆக்ரோஷமான பார்வையோடு சொன்னாலும் அதில் ஓர் தெளிவும் தீர்க்கமும் இருந்தது. 

“போதும் நிறுத்திறியா… நேத்து வந்துட்டு என்னவோ நம்ம குடும்பத்தை பத்தி எல்லாம் தெரிஞ்ச மாறி பேசிற”

“தெரிஞ்சிதான் பேசிறேன்… அதுவும் உன் மாமனை பத்தி… அவர் சுயநலத்த பத்தி” என்றவள் சொல்ல அவன் இடைமறித்தான்.

” மாமாவை பத்தி தப்பு தப்பா பேசிற வேலை வைச்சுக்காதே… அவரு இந்த ஊருக்காக நல்லது மட்டுமே செஞ்சிருக்காரு… நீ நினைக்கிற மாறி எல்லாம் இல்ல” என்று சரவணன் சொல்ல

ஆதி இதுவரை இவனிடம் தான் பேசியதெல்லாம் வீண் என்பது போல ஆழ்ந்து பெருமூச்சொன்றை வெளிவிட்டவள்,

“நீயும் உன் மாமாவும் ரொம்ப நல்லவங்க… அதனாலதான் ஈஸ்வரனை என் மேல ஏவி விட்டு சாகடிக்க பாத்தீங்களா?!” என்று கேட்வும் சரவணம் அதிர்ந்து நின்றான்.

“என்ன சரவணா ? ஷாக்காயிட்ட… அந்த பேஃக்டிரி விஷயமா நான் இடைஞ்சலா இருப்பேன்னுதானே என்னை கொலை பண்ண பாத்தீங்க… ஊரோட நல்லதுக்காக கொலையும் செய்வார் உங்க மாமா… இல்லையா… அதுக்கு நீ உடந்தை” என்றவள் கேட்டு புருவத்தை ஏற்ற

சரவணின் முகம் கலவரமானது.

“ஆமா… இந்த விஷயம் அத்தைக்கு தெரியுமா?” என்று கேட்ட நொடி அவன் முகம் பதட்டத்தை நிரப்ப அவளே தொடர்ந்தாள்.

“அத்தைக்கு நீ இதுவரைக்கும் மகனா எந்த பெருமையையும் கொடுக்கல… அட்லீஸ்ட் நல்ல மனிஷனா இருந்தீங்கங்கிற நிம்மதியாச்சும் கொடு… இதுவரைக்கும் நீ எப்படி இருந்தியோ… ஆனா இனிமேயாச்சும் திருந்த பாரு… நீ வளர்ந்த ஊருக்கு நன்மை செய்ய முடியலன்னாலும் பரவாயில்ல… நாசம் பண்ணிடாதே” என்று ஆதி அமர்த்தலாகவே சொல்ல சரவணன் அவள் சொல்வதை அமைதியாய் கேட்டபடி நின்று கொண்டிருந்தான்.

ஆதியும் பேசி முடித்து மௌனமாகிட அப்போது சரவணன் பின்புறம் இருந்து விஷ்வா வெளிப்பட அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

அவள் முகம் பிரகாசமாய் மாறியது.

“நீ போயிட்டிருப்பேன்னு நினைச்சேன்” என்று நெகிழ்ச்சியோடு அவள் கேட்க விஷ்வாவோ கடுங்கோபத்தில் இருந்தான்.

சரவணனோ விஷ்வாவின் நுழைவை பார்த்து எரிச்சலாக,

விஷ்வாவின் பார்வையோ சரவணனை மட்டும் அத்தனை கூர்மையாய் பார்த்திருந்தது.

அதே நேரம் விஷ்வா ஆதியிடம்,

“நீ இவ்வளவு நேரம் பேசினதெல்லாம் உண்மையா?”  என்றவன் இறுகிய முகத்தோடு வினவ,

அப்போதுதான் ஆதி தான் சரவணனிடம் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் விஷ்வா கேட்டிருப்பானோ என்று யூகம்  செய்து கொண்டாள்.

அதுவும் சரவணன் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக சொன்னதை கேட்டு விட்டுதான் விஷ்வா இப்படி கேட்கிறானோ? என்ற கேள்வி எழ

உடனே ஆதி சரவணன் புறம் திரும்பி,

“சரவணன் இங்கிருந்து போங்க” என்று  அனுப்பிவிட யத்தனிக்க விஷ்வா வழிமறித்து நின்று கொண்டு

“சார் இருக்கட்டும்… நீ முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு” என்றான் விஷ்வா.

ஏற்கனவே பிரச்சனைகள் தலைக்கு மேல் இருக்க சரவணனும் விஷ்வாவும் இப்படி சண்டை கோழி போல் முறைத்து கொண்டு நிற்பது ஆதியை கலவரப்படுத்தியது.

error: Content is protected !!