Aathiye Anthamaai – 2

Aathiye Anthamaai – 2

4. சாமி இல்ல சயின்ஸ்

செல்லம்மா கதவு தட்டும் ஓசை கேட்டதும் அவள் அறையிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்து தன் கண்களில் கசிந்திருந்த நீரை துடைத்து கொண்டாள்.

அந்த முகத்தில் ஓர் முதிர்ச்சியான அழகு.

தலையினை வாரி நேர்த்தியை முடித்து கொண்டையிட்டிருந்த விதம் அவரின் தோற்றத்திற்கு தனி மரியாதையைக் கொடுத்திருக்க விழிகளில் அவள் மாட்டியிருந்த கண்ணாடி அவரின் வயதை கூட்டிச் சொன்னது.

செல்வியின் இளம் வயது தோற்றத்தில் சிற்சில மாற்றங்களோடு இன்னும் அப்படியேதான் இருந்தார் செல்லம்மா.

கதவு தட்டும் ஓசை மெல்ல ஓய்ந்து போக, செல்லம்மா சென்று கதவைத் திறந்தார்.

அறைவாயிலில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஆண்களின் பாணியில் பேண்ட் ஷர்ட் அணிந்து கொண்டு ஓர் இளம் பெண் அப்படியே செல்லம்மாவின்  தோற்றத்தை அச்சுஅசலாய் பிரதிபலித்தபடி நின்றிருந்தாள்.

அதே மாநிறம். ஆனால் அவரை விடக் கொஞ்சம் உயரம்.

வகிடின்றி வாரிய முடியில் தூக்கி கட்டியிருந்த குதிரை வால் அவளின் பின்னங்கழுத்தை தொட்டுக் கொண்டிருந்தது.

சாயமில்லாத உதடும், வரையாத புருவமாய் இருந்தாலும் முகம் அத்தனை பொலிவாய் திகழ்ந்தது.

அவள் யார் என்று அவளின் தோற்றமே உணர்த்தியது.

அவளே செல்லம்மாவின் ஒரே மகள் ஆதி.

ஆணின் பெயராய் இருக்கிறதே என்று உங்களின் எண்ணம் எனக்குப் புரிகிறது.

அவள் ஆதி என்கிற ஆதிபரமேஸ்வரி.

எல்லோருமே அவளை ஆதி என்ற அழைப்பதால் நாமும் அப்படியே அறிமுகம் செய்தோம்.

அந்தப் பெயர் ஆண்மை போன்ற அவள் நடவடிக்கைக்குக் கொஞ்சம் பொருந்தியும் போனது.

ஆதி நெற்றியைத் தேய்த்தபடி,

“சாரிமா… எழுதிட்டிருந்தீங்களா ?! டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ ?!” என்று  கேட்க,

“அது பரவாயில்ல… என்ன விஷயம் சொல்லு ?” என்றார் செல்லம்மா சற்று இறுக்கத்தோடு!

“பிஃளைட் டிக்கெட்… நாளைக்கு மார்னிங் டென்னோ கிளாக் ப்ளைட்” என்று அவள் கரத்திலிருந்த டிக்கெட்டை செல்லம்மாவிடம்  நீட்ட,

அவர் அதனை பெற்றுக் கொள்ளாமல் யோசனையோடு நின்றார்.

“என்னம்மா ? என்ன யோசிக்கிறீங்க ?!” என்று ஆதி வினவ, செல்லம்மாவின் சிந்தனைகள் தடைப் பட்டது.

அவர் தெளிவற்ற நிலையில் ,

“கண்டிப்பா போயே ஆகனுமா ஆதி?” என்று அவர் மகளிடம் வினவ,

“மலேசிய தமிழர்கள் உங்களோட எழுத்துக்களை பாராட்டி நடத்திற விழா ம்மா… யூ ஹேவ் டு கோ” என்று ஆதி அழுத்தமாக சொல்ல,

சில நொடிகள் சிந்தித்தவர் அவளை ஏறிட்டு நோக்கி,

“சரி போறேன்” என்று  சம்மதித்தார்.

ஆதி முகமலர்ச்சியோடு,
“தட்ஸ் கிரேட் ம்மா” என்று சொல்லி  டிக்கெட்டை அவரிடம் கொடுத்து,

“மறந்திராதீங்க… நாளைக்கு மார்னிங் டெனொ க்ளார்க் ஷார்ப்” என்றாள்.

செல்லம்மா அந்தப் பயணச்சீட்டை வாங்கிப் பார்த்து கொண்டிருந்த சமயம் ஆதி தன் அறைக்குச் செல்ல முற்பட,

“ஒரு நிமிஷம் ஆதி” என்று அழைத்து அவளை நிறுத்தினார். 

திரும்பி நின்றவள் “சொல்லுங்கம்மா” என்க,

செல்லம்மா அந்த நொடி தன் அறைக்குள் சென்று தான் எழுதிய பக்கங்களை சரி பார்த்து அடுக்கி மகளிடம் கொடுத்து,

“இந்தா ஆதி… புது கதையோட முதல் அத்தியாயம்” என்றார்.

ஆதி புன்னகை ததும்ப, “வாவ் !!… எழுதிட்டீங்ளா ?!… அப்போ அடுத்த வார இதழிலயே பிரசுரம் பண்ணிடலாமா ?!” என்று கேட்கவும்,

“ஹ்ம்ம் பண்ணிடு” என்றார்.

“நான் கரெக்ஷன்ஸ் ஏதாவது இருக்கான்னு செக் பண்ணிடவா ?”

“தேவையில்ல… நீ பப்ளிஷ் பண்ண கொடுத்துடு”

“ஏன் ?… நான் படிக்க கூடாதா?!”  ஆவல் ததும்ப அவள் கேட்க,

“ஆமாம் இந்தக் கதையை நீ படிக்க கூடாது” என்று  செல்லம்மா அதிகார தொனியில் உரைத்தார்.

“ஏன்  ?” என்றவள் கேள்வி எழுப்ப,

“கேள்வி கேட்காதே ஆதி… சொல்றதை கேளு” என்றவர் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அகன்றுவிட, ஆதி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

படிக்கக் கூடாதென்று என்று சொல்லமளவுக்கு அப்படி என்ன இந்த கதையில் என்று அந்த பக்கங்களை வெறித்துப் பார்த்தவளின் விழி கதையின் தலைப்பை கவனித்தது.

‘ஆதியே அந்தமாய்’

எதைக் குறித்தது இந்தக் கதை என்று சிந்தித்தவளுக்கு படிக்க உள்ளூர ஆர்வம் பொங்கினாலும், தன் தாயின் வார்த்தைகளை மீற மனம்வரவில்லை.

எல்லாவற்றையும் கேள்வி கேட்க பழகியவள் அவள் தாயின் வார்த்தைக்கு   எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.

அதற்குக் காரணம் அவளுக்கு தன் தாய் செல்லம்மாவை தவிர்த்து வேறு உறவுகளே இல்லை என்பதால்தான்.

ஆதலால் செல்லம்மா எது சொன்னாலும் தட்டாமல் கேட்பது ஆதியின் வழக்கம்.

யோசித்தபடியே ஆதி அந்தத் தாள்களை அவளின் பையில் லாவகமாய் நுழைத்தாள்.

*******

சூரியனின் கதிர் வீச்சு பட்டு விழித்துக் கொண்ட செல்லம்மாவிற்கு, எல்லா விடியலும் ஒருவிதமான சோகத்தோடே தொடங்கியது.

யாரிடமும் தன் தவிப்பையும் வேதனையையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் செல்லம்மா உள்ளூர புழுங்க, அது அவருக்குப் பழகி போன விஷயம்தான்.

தன் அறையை விட்டு வெளிவந்தவர் வீட்டு வேலைகளை மும்மரமாய் கவனித்து கொண்டிருந்த பணிப்பெண் தீபாவை பார்த்து,

“ஆதி எங்கே ?” என்று கேட்க,

“அக்கா காலையிலேயே எழுந்து ஆபிஸ் போயிட்டாங்களே ம்மா ?!”  என்று பதிலுரைத்தாள்.

இதுவும் பழகிய விஷயம்தான். 

அம்மா மகள் உறவென்றாலும் கூட ஆதிக்கும் செல்லம்மாவுக்கும் இடையில் ஓர் அழுத்தமான இடைவெளி நின்றிருந்தது.

நெருக்கமாகவோ அன்பாகவோ இருவரும் பேசி கொண்ட தருணங்கள் கூட ரொம்பவும் குறைவு.

செல்லம்மா ஓர் இயந்திரம் போல விமான நிலையத்திற்கு  புறப்பட தயாராகிவிட்டு

தீபாவிடம் வந்து,

“நீ வேலையை முடிச்சிட்டு சாவியை கையோட எடுத்துட்டு போயிடு… ஆபிஸ்ல இருந்து ஆதி வந்ததும் வாங்கிப்பா… நான் ஏர்போர்ட் கிளம்பிறேன்” என்று சொல்ல,

தீபாவும் தலையசைத்து, “சரிங்கம்மா” என்றாள்.

********

பாரதி பத்திரிக்கை அலுவலகம்

அந்தப் பிரமாண்டமான சாலையின் ஓரத்தில் பளிச்சென்று தெரிந்தது அந்தக் கட்டிடத்தின் போர்ட்.

அதன் வாசலில் ஒரு நவநாகரீக பைக் சீறிக் கொண்டு வந்து நிற்க, ஹெல்மட்டை கழட்டி வைத்து விட்டு ஆதி அலுவகத்தில் நுழைந்தாள்.

அவள் தனக்கே உரியப் பாணியில் பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு உள்ளே வரவும், அவள் ஆணா பெண்ணா என்று அங்கே வேலை செய்பவர்களுக்கே கூடச் சந்தேகம் எழும்.

அவள் நேராக தன் அறைக்குள் சென்று பேக்கை வைத்து விட்டு,

தன் அலுவலக தோழி அமுதா அமர்ந்திருந்த டேபிளின் முன் வந்து நின்றாள்.

“சார் வந்துட்டாரா ?!” என்று கேள்வியோடு !

“உம்ஹும்… இல்ல பா” என்றாள்.

” சரி.. அந்த ஹரீஷ் எங்க போய் தொலைஞ்சான் ?”

“தெரியலியே … போன் பண்ணாலும் எடுக்க மாட்டிறான்”

“ப்ச்… என்ன அமுது ? இப்போ என் கூட வர ஒரு போட்டோகிராஃபர் வேணுமே” என்று தவிப்போடு ஆதி நிற்க,

“டென்ஷன் ஆகாதே… எங்க போகப் போறான்… வந்துருவான்” என்றாள் அமுதா.

ஆதி யோசனை குறியோடு அமுதாவின் முன்னே இருந்த இருக்கையில் அமர,
அந்தச் சமயம் அமுதா தன் மேஜைக்குள் இருந்த நிறையக் கடிதங்களை அவள் முன் அள்ளி எடுத்து வைத்தாள்.

ஆதி திகைப்போடு, “என்ன லெட்டர்ஸ் இதெல்லாம் ?” என்று கேட்டு கொண்டே அவற்றில் ஒன்றை எடுத்துப் பிரிக்க,

“எல்லாமே உனக்கு வந்த லவ் லெட்டர்ஸ் ஆதி” என்று அமுதா சொல்லி புன்னகையிக்க,

“என்ன அமுது உளற ?” என்று கேட்டு ஆதி அதிர்ந்து போனாள்.

“பின்ன… ஆதிங்கிற பெயரில் எழுதாதேன்னு எத்தனை தடவை சொல்றது ?… அதுவும் பெண் சுதந்திரத்தை பத்தி நீ எழுதின கவர் ஸ்டோரி… பெரிய ரீச்… உன் முற்போக்கான சிந்தனையை பார்த்து பொண்ணுங்களாம் ப்ஃளாட்… அதான் எல்லோரும் மிஸ்டர். ஆதிக்கி உருகி உருகி எழுதி இருக்காங்க… படிக்கிறியா ?! வெரி இன்டிரஸ்டிங்” என்று அழுதா கேலியாய் சிரித்தபடி ஒரு லெட்டரை எடுத்து நீட்டவும்,

ஆதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“விளையாடாத அமுது… ஏதாவது முக்கியமான லெட்டரா இருந்தா மட்டும் கொடு” என்று கண்டிப்போடு சொல்லிவிட்டு,

அவள் எழுந்திருக்கும் சமயத்தில் ஹரிஷ் அலுவலகத்தில் நுழைந்தான்.

அவன் வருகையைப் பார்த்த ஆதிக்கு உள்ளூர கோபம் ஊற்றெடுக்க,

அதனைக் காட்டி கொள்ளாமல்,
“கம்மான் ஹரீஷ்… என்ன ஆளே பார்க்க முடியல…ரொம்ப பிஸியா ?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்… கொஞ்சம் பிஸிதான்” என்றான் அவனும்.

அவன் பதிலை கேட்டு எரிச்சலடைந்தவள்,

அமுதாவை பார்த்து, ” ஒரு பேப்பர் கொடு அமுது” என்றாள்.

அமுதா எதுவும் புரியாமல் ஒரு வெள்ளை தாளை எடுத்து அவளிடம் கொடுக்க,

அதனை ஆதி பெற்று ஹரீஷிடம் கொடுத்தாள்.

அவன் குழப்பமுற அதனைப் பார்க்கும் போதே ஆதி ஏளனமான பார்வையோடு, “இந்தாங்க ஹரீஷ்… இதுல உங்க ரெஸிக்னேஷனை எழுதி கொடுத்திட்டு… கிளம்புங்க…

உங்க பிஸி ஷெட்யூலுக்கிடையில… நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் இங்க வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்றவள் சொல்ல,

“அய்யோ சிஸ்டர்” என்று ஹரீஷ் பதறினான்.

அவள் அவன் பதட்டத்தை பொருட்படுத்தாமல்,

“எழுதுங்க ஹரீஷ்… வேணும்னா நான் எழுதிக் கொடுக்கவா ?” என்று அலட்சியமாய் கேட்கவும்,

ஹரீஷ் பவ்வியமாக, “ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு சிஸ்டர்” என்றான்.

அவள் சற்றும் இறங்கி வராமல் அழுத்தமான பார்வையோடு,

“நோ ஹரீஷ்… ஐ டோன்ட் நீட் யுவர் ரீஸன்ஸ்… பெட்டர் ரைட்” என்று தாளை அவனிடத்தில் மீண்டும் கொடுத்தாள்.

அவன் கெஞ்சியபடி,

“சாரி சிஸ்டர்… இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்… ப்ளீஸ் இந்த ஓரே ஒரு தடவை” என்று அவன் மன்னிப்பு கோர, ஆதி கிஞ்சிற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

அமுதா அப்போது பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சந்தியாவை அழைத்து காதோரமாய்,

“பாத்தியா சந்தியா… இந்த ஹரீஷை ?!… வயசு வித்தியாசம் பார்க்காம எல்லோருக்கும் ரூட் போடுவான்… ஆனா ஆதியை பார்த்தா மட்டும் அப்படியே சிஸ்டர் சிஸ்டர்னு பம்முறான்”
என்று கிசுகிசுக்க,

இருவரும் சத்தம் வராமல் அவர்களின் சம்பாஷணைகள் கிண்டலடித்துச் சிரித்து மகிழ்ந்தனர்.

அதற்குள் ஹரீஷ் ஆதியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி மன்னிப்பு பெற்றுவிட,

“போகட்டும்… இனிமே இப்படி பண்ணாதீங்க” என்றாள் ஆதி இறுக்கமான பார்வையோடு!

அவன் நிம்மதி பெருமூச்சுவிட,

ஆதி மீண்டும் அவனை நோக்கி,

“கெட் ரெடி ஹரீஷ்… அடுத்த கவர் ஸ்டோரிக்காக சில கோவில்களுக்கு போகனும்” என்று உரைக்க,

சுற்றி இருந்த எல்லோரும் வியப்படைந்தனர் ஹரீஷ் உட்பட.

ஆதி அவர்களின் முகப்பாவனையை பார்த்து,

“வாட் ?” என்று கேட்டு தோள்களை குலுக்க அமுதா அவளிடம்,

” நம்ம பத்திரிகையில ராசி பலனே வராது… இது என்ன புதுசா சாமி கோவில் பத்தி எல்லாம்” என்று இழுத்தாள்.

ஆதி சிரித்தபடி அவர்களை நோக்கியவள் தன் செல்போனில் இருந்த புகைபடத்தை  காண்பித்து,

“இது என்னன்னு தெரியுதா ?!” என்று கேட்க,

“தெரியுதே நடராஜர் சிலை”
என்றான் ஹரீஷ்.

“யூ ஆர் ரைட்… ஆனா இந்த சிலை எங்க இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றவள் கேட்டு எல்லோரையும் பார்க்க,

அவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

அப்போது அமுதா ஆதியை பார்த்து,

“போட்டோல இருக்கிற இடத்தை பார்த்தா கோவில் மாறி தோணல” என்றாள்.

“எக்ஸேக்ட்லீ… அது கோவில் இல்ல… ஐரோப்பாவில் இருக்கிறதிலேயே பெரிய அணு ஆராய்ச்சி மையம்… தட் இஸ் செர்ன் பிஸ்ஸிக்ஸ் லேப்” என்று அவள் உரைக்க,

எல்லோருமே ஆச்சர்யம் பொங்க அவளைப் பார்த்தனர்.

ஆதி மேலும்,

“அந்த நடராஜர் சிலை ஆறரை அடி உயரமான பெரிய பிரான்ஸ் (Bronze) சிலை… ரொம்ப முக்கியமான விஷயம் அதோட வடிவம், அதாவது ஷேப், அது பிரபஞ்சத்தோட வடிவத்தை அப்படியே பிரதிபலிக்குதாம்” என்றவள் சொல்லி முடிக்க,

அமுதா வியப்போடு,  “பிரபஞ்சம்னா யூனிவர்ஸ் தானே ஆதி” என்றாள்.

“எஸ்… யூனிவர்ஸ்தான்… அதோட இல்ல… நடராஜர் நடனம் ஆடுகிற போஸ்… அதாவது வலது காலில் இருந்து இடது கால் வரை பால் வழி (Milky way) மண்டலமாகவும்… இதயம் அமைந்திருக்கும் இடத்தில நாம வாழ்கிற சோலர் சிஸ்டமும் இருக்கிறதா பெரிய அறிவியல் வல்லுநர்கள் வரையறுச்சிருக்காங்க… 

அன் மோரோவர் தொடர்ச்சியா நடனம் ஆடுகிற மாதிரி இருக்கிற நடராஜர்…  ரெப்பிரசன்ட்ஸ் சைக்கிள் ஆஃப் பர்த் அன் டெத்… இடைவிடாமல் நடக்கிற பிறப்பையும் இறப்பையும் உணர்த்துகிறதாம்… அவர் இடுப்பில இருக்கிற பாம்பு நிற்காமல் ஓடும் காலத்தையும் நேரத்தையும் குறிக்குதாம்…

அப்புறம் அந்த அவுட்டர் சர்க்கில்… பிரபஞ்சத்தோட ஷேப்… இது என்னோட கருத்து இல்ல… பல அறவியல் ஆராய்ச்சியாளர்ளின் கருத்து” என்றாள்.

அவள் சொன்னவற்றை கேட்டு எல்லோரும் அதிசயிக்க,

ஹரீஷ் தன் உடலை சிலிர்த்து கொண்டு,

“கேட்கவே புல்லரிக்குது சிஸ்டர்” என்றான்.

ஆதி நிமிர்வான பார்வையோடு,

“ராசி பலன் என்பது தன்னம்பிக்கை இல்லாதவன் படிக்கிற விஷயம்… இது அப்படி இல்ல… தமிழனின் அறிவியல் அறிவு பற்றியது…இன்னும் நம்ம தேட வேண்டியதும் தெரிஞ்சிக்க வேண்டியதும் நிறைய இருக்கு… முதல்ல தமிழன் படைப்பில் பல விஷயம் சாமி இல்ல சயின்ஸ்ன்னு புரிஞ்சிக்கனும் … அப்பதான் அதெல்லாம் அழியாம பாதுகாக்க முடியும்” என்றாள்.

எல்லோர் முகத்திலும் ஒரு வியப்பு குறி தெரிய,

ஆதி, ” போலாமா ஹரீஷ் ” என்றவனை அழைக்க, அவனும் பதிலேதும் பேசாமல் அவள் பின்னாடி நடந்தான்.

************************************
நான் பகிர்ந்து கொள்ளும் கருத்து யாருடைய நம்பிக்கையும் உடைக்கும் நோக்கம் இல்லை. நாம் பள்ளிகளில் படித்த அறிவியல் புத்தகங்களில் பல வெளிநாட்டவர்களின் பெயர்களை பல கண்டுபிடிப்புக்கு காரணமானவர்கள் என படித்திருப்போம். ஏன் புரியாமலும் வாயில் நுழையாமலும் பல பெயர்களை நாம் மனப்பாடம் செய்திருப்போம். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய் இருந்த தமிழனின் எந்தக் கண்டுபிடிப்புகளும் மட்டும் அங்கீகரிக்கப் பட்டதில்லை . ஏனெனில் பல விஷயங்களின் பின்னணியை நாம் ஆராயாமல் விட்டதும், ஏன் … கேள்வியே கேட்காமல் விட்டதும்தான் நண்பார்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!