aathiye anthamai – 5

கலவரம்

மலேசியா விமானத்தில் இருந்து கோலாலம்பூர் சென்றடைந்த செல்லம்மாவிற்கு விமான நிலையத்திலேயே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருபது வருடங்களாய் வெற்றிகரமாக நூறு நாவல்கள் மேல் எழுதிய செல்லம்மாவின் எழுத்து திறமையை கௌருவிக்கும் விதமாய் அந்தப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, எழுத்தாளர்கள் வாசகர்கள் எனப் பலரும் பங்கேற்று அந்த விழாவைச் சிறப்பித்தனர்.

ஆனால் செல்லம்மாவின் மனமோ அவற்றில் எல்லாம் துளி கூட லயிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு எப்போதும் தன்னை ஒரு எழுத்தாளர் என அங்கீகரித்துக் கொள்வதில் கொஞ்சமும் விருப்பம் இருந்ததேயில்லை.

தன் மனவேதனைகளை போக்கிக் கொள்ளும் ஆயுதமாகவே எழுதுகோலைக் கையிலெடுத்தவருக்கு,

வெற்றியும் புகழும் அவரே அறியா வண்ணம் குவிய தொடங்கியதுதான் பெரும் ஆச்சர்யத்துக்குரிய விஷயம்.

அவளின் புகழ் இன்று உச்சத்தை எட்டியிருக்க, அந்தச் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தன் ஆருயிர் கணவன் உடனில்லை என்ற வலிதான் பெரிதாய் 
இருந்தது அவருக்கு.

பாராட்டு விழா முடிவுற்று செல்லம்மாவிற்கு அன்று இரவு  ஓய்வெடுக்க ஆடம்பரமான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தனை புகழும் பேரும் இருந்தென்ன?

மனதிற்குத் தேவையான நிம்மதியும் கிடைக்கப்பெறவில்லை. உறக்கமும் வரவில்லை.

தனிமையைத் துணையாய் கொண்டிருந்தாளுக்கு அப்போதைக்கான மனஅமைதி எழுதுவது மட்டும்தான்.

அவர் தன் கதையினை எழுதத் தொடங்கினார் என்று சொல்வதைவிட அதற்குள்ளேயே அவர் லயித்து வாழ ஆரம்பித்தார்.

*******

பகலவன் அந்த சில மணி நேரப் பிரிவினை கூட தாங்கிக் கொள்ள முடியாமல்  தன் பல்லாயிரம் கரங்களால் பூமிக் காதலியை அணைத்து இன்புறச் செய்ய,

அந்த அழகான விடியலை ரசிக்கும் நிலையில் சிவசங்கரன் இல்லை.

செல்வி அவனிடம் இரவு நடந்து கொண்ட விதத்தை அவனால் இன்னமும் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

அவன் மனம் அதையே எண்ணி வேதனையில் உழன்று கொண்டிருக்க,  மற்றவர்கள் பார்வைக்கு தன் வேதனையை காட்டிக் கொள்ள விழையாமல் தன் மனதிற்குள்ளேயே அவற்றை எல்லாம்  புதைத்துக் கொண்டு இயல்பாக இருக்க முயன்று கொண்டிருந்தான்.

காலையிலேயே தலைமுழுகியவன் துண்டால் கேசத்தைத் துவட்டியபடி தன் அறையின் வாயிலுக்குள் நுழைய, எதிரே செல்வியின் வருகை அறியாமல் அவள் மீது மோதிவிட்டான்.

அவள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட
துண்டை விலக்கிப் பார்த்தவனுக்கு அவள் கீழே வீழ்ந்த கிடப்பது புலப்பட்டது.

அவளின் நிலையைப் பார்த்து அவனுக்கு இரக்கம் வராமல் கோபமே தலைதூக்க,

“பார்த்து வரமாட்டியா ?! எப்ப பாரு கீழே விழறதே உனக்கு வேலையா ?” என்றவன் எரிச்சலான பார்வையோடு உரைக்க,

அவள் அவனைப் பொருட்படுத்தாமல் எழுந்து செல்ல பார்த்தாள்.

“ஏ நில்லு” என்றவன் அவளை அதட்ட,
அவள் மேலே செல்லாமல் தவிப்போடு நிற்கவும் அவள் முன்னே வந்து நின்றவன் நேற்று அவன் பார்த்த அந்த டாலர் இப்போது எங்கே என்று அவள் கழுத்தில் தேடலாய் பார்க்க, அவன்  பார்க்கும் திசையைக் கவனித்தவளுக்கு கோபமேறியது.

“சே” என்றவள் சொல்லிவிட்டு,

அவனை ஆசூயை பார்க்க அந்தப் பார்வை அவனை எரிகுழம்பில் தள்ளியது போல் எரிந்தது.

அவளோ விரைவாய் அங்கிருந்து அகல, அவள் தன்னை இந்தளவுக்கு இழிவாய் நினைத்துவிட்டாலே என அவன் உள்ளம் அவமானத்தில் குமுறியது.

உடனடியாக அவளை வீடு முழுக்கவும் தேடியவன் இறுதியாக அவள் பின்புறத்தில் மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து,

“ஏ செல்வி” என்று ரௌத்திரமாய் அழைக்க,

அவன் குரல் காதில் விழுந்தாலும் அவனின் அழைப்பிற்குப் பதில் பேசாமல் அவள் பாட்டுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அந்தச் செய்கையே அவனை அவமானப்படுத்த, அவளைக் கோபமாய் நெருங்கினான்.

அதை உணர்ந்து அவள் விலகிச் செல்லவும் அவன் அவள் கரத்தை பற்றி,

“என்னை பார்த்தா எப்படிறி தெரியுது உனக்கு ?” என்றவன் கேட்க அவள் மிரள மிரள விழித்தாள்.

அவள் பார்வையில் இருந்த தவிப்பை உற்று நோக்கியவன், மீண்டும் அவள் கழுத்தை பார்த்து,

“ஆமா… உன் கழுத்தில எங்க குடும்ப சாமி டாலர் இருந்ததில்ல ?!” என்றவன் யோசனைகுறியோடு கேட்கவும் அவள் பதறி போனாள்.

இந்தக் கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதே நேரம் அவன் பார்த்த பார்வைக்கான அர்த்தம் இப்போது விளங்க, அவள் தன் கழுத்தை அவசரமாய் தொட்டு பார்த்துவிட்டு

“இல்லையே… என் கழுத்தில அந்த மாதிரி எதுவும் இல்லையே” என்று மழுப்பினாள். 

அவளை நம்பாமல் உற்றுப் பார்த்தவன், “இல்ல… நீ பொய் சொல்ற… உன் கழுத்தில ஆதிபரமேஸ்வேரி டாலர் இருந்தது… நான் பார்த்தேன்” என்று அழுத்தம் திருத்தமாய் அவன் உரைக்க,

அவளுக்கு அச்சம் தொற்றி கொண்டது.

மனதைத் திடப்படுத்தி கொண்டு,

“நான் பொய்யெல்லாம் சொல்லல… நீங்கதான் ஏதோ தப்பா பார்த்திருப்பீங்க” என்றவள் சமாளிக்க,

அவளை ஆழ்ந்த பார்த்தவனுக்கு எதுவும் செய்ய முடியாத கையறுநிலை.

அதே நேரம் தான் ஏதாவது கனவு கண்டு தொலைத்தோமா என்றும் அவன் குழம்ப,

அந்தச் சமயம் பார்த்து அவன் தமக்கை மனோரஞ்சிதம், “சங்கரா” என்று அழைத்துக் கொண்டு வந்தாள்.

உடனே அவள் கரத்தை விட, அவளும் தப்பித்தால் போதும் என அவசரமாய் அங்கிருந்து அகன்றாள்.

ரஞ்சிதம் அவனைக் காலை உணவு உண்ண அழைக்க, சிவசங்கரனும் அவளோடு சென்று உணவருந்த விட்டு  தன் தந்தையோடு வயலுக்குப் புறப்பட்டவன் செல்வியிடம் சொல்லிக் கொள்ளவும் இல்லை.

புதுமணதம்பதிகளுக்கு உண்டான எந்தவித அறிகுறிகளும் அவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் இல்லையென்பதைக் கூர்மையாய் கனகவள்ளி கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவர்களுக்கு இடையில் பலமான உறவு எதுவும் ஏற்படவில்லையோ என்ற சந்தேகம் உதிக்க,

எப்படியாவது செல்வியை சிவசங்கரனிடம் இருந்து பிரிக்க திட்டம் தீட்டியது அவள் மனம். 

அன்று மாலை செல்வி அடுப்பங்கரையில் வேலை செய்து கொண்டிருக்க கண்ணம்மாவும் கனகவள்ளியும் அவர்களுக்குள்ளேயே ஏதோ கிசுகிசுத்துவிட்டு , அவள் காதுப்பட அவர்கள் கொண்டு வந்த சீர்வரிசைகள் பற்றியும் நகை நட்டையும் பற்றிப் பேசி  கொண்டிருந்தனர்.

செல்வி அவர்கள் பேசியவற்றை கேட்டும் கேட்காதவளாய் இருந்தாலும் அவர்களின் குத்தலான பேச்சு அவளைப் பெரிதுமாய் வேதனையுறச் செய்தது.

அங்கே நடந்த சம்பாஷணை சிவசங்கரனின் தந்தை சண்முகவேலன் காதிலும் விழ அவர் அந்தக் கணமே செல்வியை அழைத்தார்.

அவரின் அழைப்பு அவளை மிரட்சியடைய செய்தது.

அவரின் ஆஜானுபாகுவான தோற்றத்தைப் பார்த்தாலே அவளுக்குப் பயம்.

அவர் ஏன் தன்னை அழைக்கிறார் என்ற தவிப்போடு அவள் முன்னே வந்து நின்றவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

“என்னங்க மாமா ?” என்ற நடுக்கமுற அவள் கேட்க,

சண்முகவேலன் தன் கனிர் குரலோடு பேசத் தொடங்கினார்.

“இத பார் செல்வி… நீ என்னதான் என் தங்கச்சி புள்ளயா இருந்தாலும் இந்த வீட்டுக்குன்னு நிறைய கெளரவமும் மரியாதையும் இருக்கு… அதுவும் இல்லாம மத்த மருமகளுங்க முன்னாடி நீயும் ஒண்ணும் இல்லாதவளா நிக்க கூடாது பாரு… அதனாலதான் சொல்றேன்… நம்ம கோவில் பக்கத்துல இருக்கிற உங்க அம்மா பேர்ல இருக்கிற கொஞ்சம் நிலத்தை சிவங்கரன் பேர்ல மாத்தி கொடுக்க சொல்லு” என்க,

அவள் அப்படியே அதிர்ந்து போனாள்.

அந்த நிலம்தான் யாருடைய உதவியும் இல்லாமல் அவள் அம்மாவின் ஓரே வாழ்வாதாரம்.

அப்படி இருக்க இந்த உறவுக்கான விலையாய் அவர் அதைக் கேட்பதை அவளால் ஏற்க முடியவில்லை.

உள்ளம் கலங்கி கண்ணீரோடு அவள் தலைகவிழ்ந்து மௌனமாய் நிற்க,

சிவசங்கரனின் அண்ணன் வேல்முருகன் அவளை வெறுப்போடு நோக்கி,

“என் தம்பி மட்டும் ஆசைபடல்லன்னா… நீ எல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்க முடியுமா ?… ஏன் ?

கனவில கூட இப்படி ஒரு வாழ்கையை நீ நினைச்சி  பார்த்திருக்க முடியுமா ?  போயும் போயும் அந்த துண்டு நிலத்துக்கா இப்படி யோசிக்கிறவ” என்று சொல்ல அவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு கண்ணீர் தாரை தாரையாய் பெருகி ஊற்றியது.

புடவை முந்தானையில் முகத்தை துடைத்துக் கொண்டு அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் உள்ளே ஓடிவிட,

வேல்முருகன் சீற்றத்தோடு “பார்த்தீங்களா ப்பா அவ திமிரை… நாம கேட்கிறதுக்கு பதில் சொல்லாம அவ பாட்டுக்கு போறா” என்றவன் சொல்ல சண்முகவேலனுக்கும் உள்ளூர அவள் மீது கோபம் கனலாய் ஏறியது.

சிவசங்கரனின் விருப்பத்திற்கிணங்க செல்வியை மணமுடித்து வைத்தாலும் அந்த வீட்டில் உள்ள யாருக்குமே அவளைப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அந்த வீடு அவளுக்கு வீடாக இல்லை.

கொடிய மிருகங்கள் வாழும் காடாகவே தோன்றியது.

திருமணம் ஆகி வந்த இரண்டாம் நாளே இத்தனை மோசமான அனுபவத்தை எதிர்கொண்டது அவள் மனதை ரொம்பவும் பாதித்திருந்தது.

தனிப்பட்ட முறையில் இவர்கள் ஒவ்வொருவர் மீதும் வெறுப்பும் கோபமும் அவளுக்கு இருந்த போதும் சிவசங்கரனால்தான் இந்த வீட்டில் தான் சிக்கிக் கொண்டோம் என்ற எண்ணம் அவன் மீதான வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தியிருந்தது.

கண்ணீர் பெருக எழுத்துக்கள் மங்கிப் போன நிலையில் செல்லம்மா எழுதுவதை நிறுத்தினாள்.

அவள் கடந்து வந்த துயரங்களும் இழப்புகளும் வெறும் வார்த்தைகளால் மட்டும் வடித்துவிட முடியாது.

அத்தனை ஆழமான வலி அது.

இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டிருந்தாலும் அந்த நாளும் அதனால் அவருக்குள் உண்டான காயமும் இன்னும் அதே வலியோடு அவள் மனதில் இன்னமும் கனத்துக் கொண்டிருந்தது.

*******-

அந்த வார பாரதி இதழ் வெளியாகியிருந்தது.

அதில் ஆதித்தபுரத்தை பற்றி வெளியாகியிருந்த செய்தி மாநகர மக்களுக்கிடையில் பரவலாய் பேசப்பட்டு, அது மெல்ல விவாதமாகவும் கோபமாகவும் மாறத் தொடங்கியிருந்தது.

அதாவது ஆதித்தபுர கிராமத்தில் பெரிய ரசாயன தொழிற்சாலை வரப்போவதாகவும் அவர்கள் அந்த ஊர் மக்களுக்கு வேலைத் தருவதாக சொல்லி அவர்கள் வாழ்வாதாரத்தை குலைக்கப் போவதாகவும் ஆதி எழுதி இருந்தாள்.

அவள் எழுத்து வெறும் வார்த்தைகளாக இல்லை. தீப்பொறியாய் பரவி அது பெரும் தீ பிழம்பாக உருவெடுத்தது.

சென்னை மாநகரமே ஆதித்தபுரத்தை பற்றி பரபரப்பாய் பேசிக் கொண்டிருக்க,  ஆதி அன்று எப்போதும் போல் அலுவலகத்திற்குப் புறப்பட்டு சென்றாள்.

அங்கேயோ பெரும் கலவரமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

சில முகம் தெரியாத நபர்கள் பத்திரிக்கை அலுவலக வாசலில் பெரும் கூச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்க,

அலுவலகத்தின் உள்ளே ஓர் இளைஞன் எல்லோரையும் தரக்குறைவாய் பேசிக் கொண்டிருந்தான்.

அவனுடைய கேள்வி ஒன்றாக மட்டுமே இருந்தது.

“யாருடா அவன் ஆதி ?… என்ன தைரியமும் திமிரும் இருந்தா எங்க ஊர் விஷயத்தை பத்தி எழுதுவான்… அவனை கூப்பிடங்க… அவன் கை காலை உடைச்சி உப்பு கண்டம் போட்டிறேன்”

அவன் பேச்சு அவன் கிராமத்திலேயே வளர்ந்து வாழ்ந்து ஊறிப் போன இளைஞன் என்பதை அப்பட்டமாய் தெரிவிக்க,

வரைமுறை இல்லாமல் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனிடம் அமுதா சமாதானம் பேசி அமைதியடைய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

“சார்… நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க… ஆதி வந்ததும் நீங்க அவங்ககிட்ட பேசலாம்”

“நான் பேச வரல… நான் அவன் கை காலை உடைக்க வந்திருக்கேன்… அவனை கூப்பிடுன்னு சொல்லிட்டிருக்கேன்… என்னவோ கதை பேசிட்டிருக்க ?!” என்றவன் தன் வேட்டியை மடித்து எகிற,

அதற்குள் ஹரீஷ் இடையில் வந்து,

“ஹெலோ… இது பத்திரிக்கை ஆபிஸ்… நீங்க இப்படி எல்லாம் கலட்டா பண்ண கூடாது… முதல்ல வெளியே போங்க… இல்லாட்டி போலீஸுக்கு கால் பண்ண வேண்டியிருக்கும்” என்றவன் மிரட்டி அந்த இளைஞன் மீது கை வைத்துத் தள்ளிவிட்டான். 

அவன் உச்சபட்ச கோபத்தோடு ஹரீஷை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வர,

சரியாய் அந்தச் சமயத்தில் 
அலுவலத்தில் நுழைந்த ஆதி ஹரீஷை அடிக்கவிடாமல் அந்த இளைஞனின் ஓங்கிய கரத்தை பின்புறமாகப் பிடித்து கொண்டாள்.

அவன் அதிர்ச்சியுற்று நிற்க அவளோ அவன் முன்னாடி வந்து நின்று,

“யார் நீங்க மிஸ்டர் ?… எங்க ஸ்டாஃப்ஸ் மேல ஏன் கை ஓங்கிட்டு வரீங்க ?” என்றவள் கேட்க,

அவன் ஆதியை பார்த்த நொடி ஆச்சர்யத்தில் சிலையாய் மாறிப் போனான்.

அவள் மீண்டும்,

“ஹெலொ மிஸ்டர்… யார் நீங்க ? உங்களுக்கு என்ன வேணும் ?” என்று கேட்க அவன் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை.

அவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நிற்க,

அப்போது ஆதியின் காதோரம் அமுதா,

“இவ்வளவு நேரமா அவன் ஆதி எங்கன்னு கேட்டுதான் கலட்டா பண்ணிட்டிருக்கான்” என்று உரைத்தாள்.

ஆதி தன் கரங்களை கட்டிக் கொண்டு அவனைக் நிமிர்ந்து பார்த்தவள்,

“நான்தான் ஆதி… என்ன வேணும் உங்களுக்கு ?” என்று புருவத்தை ஏற்றினாள்.

ஏற்கனவே அவன் திகைத்து போயிருக்க அவள் தான்தான் ஆதி என்று சொன்னது அவனை இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அத்தனை நேரம் புலியாய் சீறிக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பூனையாய் மாறிப் போயிருந்தான்.