Kattangal -7
Kattangal -7
கட்டங்கள் – 7
கையில் தாலியோடு அவன் கண்கள் அலை பாய.., “ப்ரோ.. சதாசிவமும் அவர் பெண்ணும் வர மாட்டாங்க… இன்று சதாசிவம் பெண்ணுக்கு கல்யாணம்…. ” என்று மதுசூதனின் காதுகளில் கிசுகிசுத்தான் முகிலன்.
“என்னடா யோசிக்கிற… கட்டுடா தாலியை ” என்று கோவிந்தனின் குரல் ஓங்கி ஒலிக்க,” வேறு பெண்ணை கை காட்டாமல் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது…”, என்ற நிதர்சனம் உரைக்க நித்யாவின் கழுத்தில் தாலி ஏறியது. தன் தந்தையின் உடல் நிலை மதுசூதனனை நிதர்சனத்திற்கு தள்ளியது.
அவனின் கோபம் அருகில் அமர்ந்து கொண்டிருந்த நித்யாவின் மீது திரும்பியது.
“வருகிறேன்.. என்று கூறியவர் மகளோடு வரவில்லை. வேண்டாம் என்று கூறியவள் வந்துவிட்டாள்.. முதல் முறையாக வாழ்வில் தோல்வி.. அனைத்திற்கும் காரணம் இவள்..”, மதுசூதனின் எண்ண ஓட்டம் அவளை கொன்றுவிடும் ஆவேசத்தை அவனுள் கிளப்பியது.
” நீ நினைத்ததை நடத்திட்ட… பணம், பொருள், வசதி எல்லாம் இருக்கும்… ஆனால் உன் சந்தோசம் மட்டும் இருக்காது… ” , என்று நித்யாவின் காதில் மதுசூதனன் முணுமுணுத்து அவளை வார்த்தையால் கொன்றான்.
அந்த வார்த்தைகள் அவளுக்கு பயத்தை அளிக்கவில்லை. மாறாக கோபத்தை உண்டாக்கியது. கோபத்தில் நித்யாவின் முகம் சிவக்க.., “நித்யா ரொம்ப வெட்கப்படாத…. ” , என்று அவளை கிண்டல் செய்தாள் அருகில் நின்று கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தி. அவளை நித்யா முறைத்து பார்த்தாள்.
“பொண்ணு பார்க்க மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கா.. அது தான் உங்க அளவுக்கு பணம் இல்லைனாலும் முடிச்சிடீங்க போல…?”, என்று சத்தமாக ரகசியம் பேசினாள் வயதில் பெரியவள் ஒருத்தி. ஆனந்தமாக மதுசூதனின் தாய் தலை அசைக்க, ” இந்த கிழவி மஹாலக்ஷ்மியை முன்ன பின்ன பார்த்திருக்கா…? இந்த அம்மா.. அப்பாவுக்கு இதெல்லாம் தேவையா…? நாம் என்ன ஒண்ணுமே இல்லாதவங்களா…? இல்லை இல்லைனு சொல்லி காட்டறதுக்கு… ” , நித்யாவின் கோபம் பல மடங்கு உயர்ந்தது.
அவள் தாய் அன்று சொன்ன வார்த்தைகள் இப்பொழுது அவள் காதில் எதிரொலித்தது. ” நாமளா தேடி போகலை.. உன்னை ஒரு விஷேஷ வீட்டுல பார்த்து புடிச்சி.., அவங்களா தேடி வராங்க.. வீடு தேடி வரவங்கள ஒதுக்க கூடாது நித்யா.. “.
“தப்பு பண்ணிட்ட அம்மா… ஒதுக்கிருக்கணும்.. நம்ம தகுதிக்கு ஒத்து வராதுன்னு ஒதுக்கிருக்கணும்.. என் வார்த்தையையாவது மதிச்சிருக்கணும்..”, என்று மனதிற்குள் புலம்பினாள் நித்யா.
அனைவரும் உணவை நோக்கி செல்ல, நித்யா மணமகன் அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.
அவர்களின் உற்றாரும், உறவினரும் அவர்களை சூழ்ந்து நின்றதால், நம்மால் அங்கு நடப்பதை பார்க்க முடியவில்லை.
இடைப்பட்ட இந்நேரத்தில் சதாசிவம் எங்கே…? அவர் மகள் எங்கே? நாம் அவர்களை நோக்கி பயணிப்போம்.
கோவிலின் கோபுரம் உயர்ந்து காட்சி அளித்தது. கோவிலுக்கு அருகே சென்றால், அம்மன் கோவில் என்பது நமக்கு தெரிகிறது. கோவிலில் ஒரு சிலரே இருந்தனர். பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அப்பொழுது இள வயது கும்பல் கோவிலுக்குள் நுழைந்தது.
இரண்டு இளைஞர்கள் கோவில் பூசாரியிடம் சென்று பேசினர். அனைவரும் பரபரப்போடு செயல் பட்டனர். “என்ன நடக்கிறது?”, என்று நமக்கு புரிவதற்குள் பட்டு வேஷ்டி அணிந்திருந்த இளைஞன் , எளிமையான பட்டு சேலையில் வந்தமர்ந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டினான். இருவர் முகத்திலும் மகிழ்ச்சியை தாண்டிய பதட்டம் தெரிந்தது.
மணமகனும், மணமகளும், சில நண்பர்களும் ஒரு காரில் ஏற, மற்றவர்கள் ஆட்டோவில் ஏறினர். நாமும் அவர்களை பின் தொடர்வோம்.
அவர்கள் சென்றது Registrar அலுவலகம்.
அங்கு அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்தனர்.
முதலில் மணமகன் முரளி என்று கையெழுத்திட, மணமகள் வெண்பா என்று கையெழுத்திட்டாள்.
“வெண்பா… வெண்பா..” , என்று சத்தமாக அழைத்து கொண்டே Registrar அலுவலகத்திற்குள் நுழைந்தார் சதாசிவம்.
அங்கு மாலையும் கழுத்துமாய் தன் மகள் அருகே நின்று கொண்டிருந்த முரளியின் சட்டையை கொத்தாக அவர் பிடிக்க, முரளியை மறைத்துக் கொண்டு தன் தந்தையின் முன் நின்றாள் வெண்பா.
“அவர் என் கணவர்.. அவரை அடிக்கிற உரிமை உங்களுக்கு இல்லை.. ” , என்று சதாசிவத்திடம் நிமிர்ந்து நின்று குரலை உயர்த்தி பேசிய வெண்பாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சதாசிவம்.
மீண்டும் அவளை அடிக்க சதாசிவம் கை ஓங்க., வேண்டாமென்று அவரை தடுத்த வெண்பாவின் தாய் … “நமக்கு ஒரு பொண்ணு இருந்தா அவ இப்ப இல்லை… வாங்க போலாம் ” , என்று கண்ணீர் மல்க கூறினார்.
“உனக்காக நான் எப்படி பட்ட மாப்பிள்ளை பார்த்திருந்தேன் தெரியுமா ?” , என்று சதாசிவம் உடைந்த குரலில் கேட்டார்.
“தெரியும் அப்பா… நான் இவரை விரும்பறேன்னு தெரிஞ்சி.., ஒரு அப்பாவி பொண்ணு கல்யாணத்தை நிறுத்தி எனக்கே தெரியாம எனக்கு திடீர் கல்யாணம் பண்ணி வைக்கலாமுன்னு நினைச்சீங்க… ” , என்று வெண்பா வார்த்தையால் சாட்டையாக அடிக்க, இதை அறியாத வெண்பாவின் தாய் அவள் கணவரை அதிர்ச்சியாக பார்த்தார்.
“நீங்க செய்ய நினைத்த பாவம்.., உங்க தலையிலேயே விடிஞ்சிருச்சு “, என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
“அம்மா … ” , என்று அழைத்துக் கொண்டு வெண்பா தன் தாய் அருகே செல்ல, ” என்னை அப்படி கூப்பிடாத, உங்க அப்பா செய்ய நினைத்த தப்பான காரியத்தால நீ செய்தது சரின்னு ஆகாது… பெத்தவங்க மனசை காயப்படுத்தி நீ ஆரம்பிக்க போற இந்த வாழ்க்கை எப்படி இருக்குதுன்னு நானும் பாக்கறேன்… ” , என்று கூறி அழுதார் வெண்பாவின் தாய்.
” எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க.. குடும்ப சண்டையை வீட்டில் வைத்து கொள்ளுங்கள்.. ” , என்று காகிதத்தில் கையெழுத்திட்டபடியே கூறினார் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நபர்
“மதுசூதனின் முகத்தில் எப்படி முழிப்பது, தன் பிசினெஸ் என்ன ஆகும்”, என்று சிந்தனையில் சதாசிவம் வீட்டை நோக்கி செல்ல, ” அந்த பையனை பார்த்தால் அவ்வளவு வசதியாக தெரியவில்லை.., நம் பெண் அங்கு எப்படி சமாளிப்பாள்” , என்று மனதிற்குள் நொந்து கொண்டே தன் கணவருடன் சென்றார் வெண்பாவின் தாய்.
அனைவரும் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தனர். நண்பர்கள் அவர்கள் வீட்டுக்கு செல்ல, முரளி வெண்பாவை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்.
திருமணத்தை நண்பர்கள் எளிதாக நடத்தி விடலாம். தினமும் வாழ வேண்டியது இவர்கள் தானே..!!!!
வெண்பாவை ஆட்டோவில் அழைத்து கொண்டு முரளி, அவன் வீட்டிற்கு சென்றான். வெண்பாவிற்கு இது முதல் ஆட்டோ பயணம். ஆட்டோ ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு முன் நின்றது. நித்யா , காயத்ரி குடும்பத்தினர் வசிக்கும் அதே குடியிருப்பு.
கதவை தட்டி சிறிது நேரத்தில் கதவை திறந்தார் முரளியின் தாய்.
மாலையும், கூட ஒரு பெண்ணோடும் நின்ற மகனை பார்த்து அங்கே மயங்கி சரிந்து விழுந்தார் முரளியின் தாய். அவரை தாங்கி பிடித்தான் அசோக். அசோக்கின் சகோதரன் முரளியை தான் வெண்பா கரம் பிடித்து வீட்டிற்குள் நுழைந்திருக்கிறாள்.
அவர்களை பார்த்த அதிர்ச்சியில் முரளியின் தந்தை முதலில் அதிர்ந்து நின்றார்.
சில நொடிகளில் தன்னை சுதாரித்து கொண்டு, ” உன் தம்பிக்கு பொறுப்பில்லை… அவன் இன்னும் ஒரு வேலைக்கு கூட போகலை… உன் தங்கைக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. நீ தான் இந்த குடும்பத்தை பொறுப்பா பார்த்துப்பன்னு நினச்சேன்.. ஆனால் நீ இப்படி மொத்த மானத்தையும் வாங்கிட்டு வந்து நிக்கறியே..” , என்று கூறிக் கொண்டே முரளியின் கன்னத்தில் பளார் என்று அடித்தார் முரளியின் தந்தை..
எதுவும் செய்ய முடியாமல் இந்த காட்சியை அமைதியாக பார்த்தாள் வெண்பா. தனக்குள் இருக்கும் நிமிர்வு , யாரையும் எதிர்க்கும் தைரியம் எங்கே.., என்று தெரியாமல் , தன்னையும் அறியாமல் தன் குணத்திற்கு நேர் எதிராக , அமைதியாக நின்றாள் வெண்பா.
தன் தாய் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை நிதானப்படுத்தி விட்டு, ” அப்பா .. அண்ணனை அடிக்காதீங்க.. இப்ப அடிச்சி என்ன ஆகப் போகுது..?” , என்று தன் சகோதரனுக்காக வக்காலத்து வாங்கினாள் சித்ரா.
எதுவும் பேசாமல் நின்றான் முரளி. ” மூத்த மகன்.., உன்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பிச்சா எங்களுக்கு தான் அவமானம்” , என்று முரளியின் தாய் கோபமாக கூற, “இப்படியெல்லாம் கூட நடக்குமோ… நான் இதை எல்லாம் சிந்திக்கவில்லையே ” , என்று வெண்பாவின் மனம் பதட்டம் அடைந்தது.
வீட்டை நோட்டமிட்டாள் வெண்பா. அது ட்ரிபிள் பெட் ரூம் பிளாட்.. வெண்பாவின் எண்ண ஓட்டம் நமக்கு தெரியவில்லை.
முரளியின் தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றார். முரளியின் தாய் கிட்சேனுக்குள் நுழைந்து கொள்ள, அசோக்கிடம் பேச முரளி தங்கள் அறைக்குள் செல்ல ஹாலில் தனித்து விடப்பட்டாள் வெண்பா. என்ன செய்வது என்றறியாமல் சித்ரா அங்கும் இங்கும் நடை பயில.., அவர்களின் உடையை பார்த்து விட்டு , ” எங்கயாவது வெளிய போயிட்டு இப்ப தான் வந்தீங்களா..?” , என்று சித்ராவிடம் பேச்சு கொடுத்தாள் வெண்பா. யாரும் தன்னை கவனிக்கிறார்களா… என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு , “பக்கத்து வீடு நித்யா அக்காவிற்கு கல்யாணம்… இப்ப தான் கல்யாண வீட்டிற்கு போய்ட்டு வரோம்… ” , என்று பதில் அளித்தாள் சித்ரா.
எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்று மீண்டும் பார்த்து விட்டு , “உங்க பெயர் வெண்பா தானே ?” , என்று சித்ரா கேட்க , “ஆம் ” , என்று தலை அசைத்து கொண்டே , இவளிடமாது நம்மை பற்றி சொல்லி இருக்கிறானே என்று சந்தோஷப்பட்டாள் வெண்பா.
அந்த சந்தோஷத்திற்கு முற்று புள்ளி வைப்பது போல, ” அண்ணா, மொபைல்ல உங்க பெயரை பாத்திருக்கிறேன் .. ” , என்று ரகசியம் பேசினாள் சித்ரா. அவள் சந்தோஷத்திற்கு முற்று புள்ளி வைத்தாலும், அந்த சித்ராவை வெண்பாவிற்கு பிடித்திருந்தது. பேசும் நபர் அவள் ஒருத்தி தானே.
“நேரம் செல்ல செல்ல திருமணம் செய்தாகி விட்டது நம் நிலை என்ன?” , என்ற அச்சம் வெண்பாவின் மனதில் மேலோங்கியது.
மகன் செய்த செயல் பிடிக்க வில்லையென்றாலும் , அவனை அவர்கள் வெளியே அனுப்பவில்லை. பாசமா ? இல்லை குடும்ப சூழ்நிலையா? இந்த கேள்விக்கு பதில் இல்லை..
அசோக் தன் பொருட்களை இடம் மாற்ற, முரளி, வெண்பா அவர்களுக்கென்று ஒரு அறை ஒதுக்கப் பட்டது.
யாரிடம் பேசுவது என்றறியாமல் வெண்பா தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் அமர்ந்து கொண்டாள்.
வெளியே அனைவரும் பேசுவது கேட்டது. சித்ரா அண்ணனுக்காக பரிந்து பேசுவது தெரிந்தது. அசோக் அமைதியாக இருந்தான். முரளியின் தாய் அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
“முரளி நம் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லவே இல்லை… ” , என்ற எண்ணம் வெண்பாவிற்கு வருத்தத்தை அளித்தது.
நம் குடும்ப சூழ்நிலையை எப்படி வெண்பாவிடம் சொல்வது, என்று முரளி சிந்தித்து கொண்டிருந்தான்.
திருமண மண்டபத்தில், வரவேற்பு சிறப்பாக முடிந்திருந்தது.
சதாசிவம் மகளை பற்றிய செய்தி அவன் நண்பர்கள் மூலம் மதுசூதனனை வந்தடைந்திருந்தது. தன் திட்டம் தோற்று விட்டாலும், இப்பொழுது மதுசூதனனுக்கு அதில் வருத்தம் இல்லை. வேறு ஒருவனை காதலிக்கும் பெண்ணை திருமணம் என்னும் இக்கட்டில் ஆழ்த்தி தானும் மாட்டிக் கொள்ளவில்லை என்ற நிம்மதி மதுசூதனின் முகத்தில் தெரிந்தது.
அவன் நித்யாவை பார்த்தான். அவள் முகம் எந்த வித உணர்வுகளின் பிரதிபலிப்பின்றி இருந்தது.
“என்ன ஒரு அழுத்தம்…. நினைத்ததை முடித்து விடுவாள் போலும்…. நம்மிடம் தனியா சிக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் ” , என்று மதுசூதனன் எண்ணிக் கொண்டிருக்க , ” மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் பணத்தை பெரிதாக நினைப்பவனை என்ன செய்தால் தகும்.. நம்மிடம் தனியா சிக்கட்டும் நறுக்கென்று நான்கு கேள்வியாவது கேட்க வேண்டும்.. பணத்திமிர் பிடித்தவன்” , என்று நித்யா மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.
வரவேற்பு முடிந்து அனைவரும் மதுசூதனன் வீட்டிற்கு செல்ல , மதுசூதனன் அவன் அறையில், “என் வாழ்க்கை இப்படி ஒரு மிடில் கிளாஸ் பெண்ணோடா அமைய வேண்டும்..?” என்று எண்ணியவாறே , நித்யாவின் வருகைக்காக காத்திருக்க, வெண்பா முரளியின் அறையில் தன் காதல் கணவனுக்காக காத்திருந்தாள்.
இவர்கள் வாழ்க்கை எதை நோக்கி செல்லும்?
கட்டங்கள் நீளும்….