Akila Kannan’s Kattangal 1 updated

Akila Kannan’s Kattangal 1 updated

கட்டங்கள் – 1

நடுத்தர  வர்க்கத்தினர்  வாழும்  பகுதி.

  ஞாயிறு காலை 10 மணி. 

                         சூர்ய   பகவான்  அவர்  வேலையை  அழகாக  செய்து கொண்டிருந்தார்.   சுள்ளென்று  வெயில்….  வெயில் பெரியவர்களுக்கு மட்டும்  தான்  போலும்….

                 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த  சில குழந்தைகள்,  சைக்கிள் ஓட்டிக்  கொண்டிருந்த  குழந்தைகள் என ஆரவாரமாக இருந்தது அந்த மிகப் பெரிய  குடியிருப்பு. 

          பல வீடுகள்… பல குடும்பங்கள்….  நிறைய குழந்தைகள்…..

              அந்த குடியிருப்பின் ஒரு பகுதியில் பல இளம் பெண்கள் டென்னிஸ்  விளையாடி  கொண்டிருந்தனர்.

                     “எந்த பெண்ணைப்  பார்த்தாலும்  அழகு  தான். இறைவனின் படைப்பின்  அழகே தனி தான். ” , என்று தங்களுக்குள் முணுமுணுத்தக் கொண்டு அங்கிருந்த  திண்டில்  அமர்ந்திருந்த  கல்லூரி  காளைகள்.   

           பெரியவர்கள்  யாரும்  அங்கு  இல்லை. மத்திய உணவு தயார் செய்து கொண்டிருப்பதின் அறிகுறியாக , ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு வாசனை.

     சாம்பார், அவியல், மோர்க்குழம்பு  என பல வித மனமும், சிலர் வீட்டிலிருந்து பிரியாணி மனமும் வருகிறது.

     ட்ராக்ஸ் , பிங்க் டீ ஷர்ட் அணிந்து கொண்டு டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் , “நித்யா நோக்கு கல்யாணமாமே?” , என்று வினவினார் மடிசார் அணிந்திருந்த   மாமி.

” ஆமாம் மாமி..  அம்மாவும் அப்பாவும்  அப்படி தான் சொல்றாங்க… ” , என்று  விளையாட்டில் கவனமாக  நித்யா பதில் கூற  அவள்  அடர்த்தியான நீளமான கூந்தல் அங்கும்  இங்கும் அசைந்தது.

“இப்படியா கல்யாணப் பொண்ணு பொறுப்பில்லாம பதில் சொல்றது..? ” , என்று அந்த மாமி பக்கத்தில் இருந்த ஒரு  பாட்டி வினவ, ” அக்கா வசமா சிக்கிட்ட… “,  என்று நித்யாவின் காதில் கிசுகிசுத்தாள் நித்யாவின் தங்கை காயத்திரி. 

அவள் அருகில் நின்று  கொண்டு  . “ஆமாம் காயத்ரி.. நானும் அதையே  தான் யோசிக்கிறேன்… ” , என்று நித்யா கண்ணடித்து கூறினாள்.

       ” அக்கா வீட்டுக்கு போலாமா..? ” , என்று காயத்ரி வினவ,  ” ஆமாம்  நாம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு….  ” , என்று கூறினாள் நித்யா..

             ” ஓகே …  நாங்க கிளம்பறோம்.. சாயங்காலம் பார்க்கலாம் ” , என்று கூறிக் கொண்டே, அவர்களது டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினர் நித்யாவும்,  காயத்ரியும் .

             இருவரும் படியேறி , முதல் மாடியில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு செல்ல, ” ஹாய்  நித்தி  அக்கா..  ஏன் இன்னக்கி எங்களோட சைக்கிள் ஓட்ட வரலை? ” , என்று கோபித்துக் கொண்டனர் இளம் பட்டாளங்கள்.

             ” சாயங்காலம் வரேன் டா.. ” , என்று நித்யா பதில் உரைக்க, ” அக்கா உனக்கு கல்யாணமாமே? அம்மா சொன்னாங்க … ” , என்று கேட்டாள் ஐந்து வயது சுட்டி பெண்.

    “என்ன  பதில் சொல்வது?” , என்று நித்யா யோசிக்க , “இனி எங்களோட விளையாட வர மாட்டியா?” , என்று வினவினான் மற்றோரு குட்டி பையன்.

               “நேரமாச்சு..  உங்க எல்லார் கேள்விக்கும் சாயங்காலம் பதில் சொல்றேன்… ” , என்று கூறிக்கொண்டே படி ஏறினாள் நித்யா..

 

           “நண்டு, நசுக்கெல்லாம் கூட கூட்டிட்டு சுத்தினா..  இப்படி தான் கேள்வி கேட்கும்..” , என்று தலையில் அடித்துக் கொண்டாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் காயத்திரி.

    அவளை திரும்பி , ஒரு   பார்வை  பார்த்தாள்  நித்யா.                    

           “ஸ்கிர்ட் டாப்ஸ் அணிந்து கொண்டு  சின்ன  போனிடைலொடு இருக்கும் நீயே ஒரு நண்டு”, என்ற நித்யாவின் பார்வை கூறிய செய்தி  காயத்ரிக்கு புரிந்தாலும்   புரியாதது போல், வீட்டுக்குள் நுழைந்தாள்.

           “ஏண்டி!!!   அவ தான் சின்ன பொண்ணு இவ்வளவு நேரம் வெயில்ல நின்னு விளையாடிட்டு வரா…. நீ கல்யாணப் பொண்ணு இப்படி  தான் வெயில்ல நின்னு விளையாடுவியா..? ” , என்று கோபமாக கேட்டார்  பத்மா நித்யா, காயத்ரியின் தாயார்.

          சற்று பூசினார் போல் உடல் தோற்றம். மாநிறத்தில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்த முகம். சேலையை தூக்கி சொருகியபடி சமயலறையில் வேலை செய்து  கொண்டிருந்தார்.  

            “விடு பத்மா..  எதோ கல்யாணம்  வரைக்கும் விளையாடுவா..? அப்பறம் இப்படி விளையாட முடியுமா..? ” , என்று பத்மாவை சமாதானம் செய்தார் ரங்கநாதன்.

“என்னவோ நிச்சயம் பண்ண மாதிரி.., கல்யாணம் கல்யாணம்னு  ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க…?” , என்று கோபமாக கேட்டாள்  நித்யா.

     “முதல் நாள்  நிச்சயம்.. மறு நாள் கல்யாணம்… ” , என்று  கூறினார் பத்மா. 

            “மாப்பிள்ளை என்னை பார்க்கலை.  நானும் மாப்பிள்ளையை பார்க்கலை…. ” , என்று நித்யா  கடுப்பாக கூற, “அதெல்லாம் அவசியம் இல்லைனு  மாப்பிள்ளை சொல்லிட்டாராம்.. அம்மா  பார்த்தா போதுமுன்னு  சொல்லிட்டாராம்… ” , என்று பத்மா  கூற, “நான் அப்படி எதுவுமே  சொல்லலியே ” , என்று கூறினாள் நித்யா.

                      நித்யா  அருகில்  கரண்டியோடு  வந்த  பத்மா, “நல்ல கவனிச்சிக்கோ… அவர் தான் மாப்பிள்ளை..  பெரிய  பணக்கார  இடம்.. நீ  மாப்பிள்ளை  என்ன  சொன்னாலும், நாங்க என்ன சொன்னாலும்  சரினு சொல்லிட்டு.. எந்த பிரச்னையும் பண்ணாம கல்யாணத்துக்கு ஒத்துக்கற… புரியுதா..? ” , என்று கோபமாக கேட்க,

              “அம்மா  நாம மிடில் கிளாஸ்.. அவுங்க பணக்காரங்க…  எதுக்கு இங்க பொண்ணு எடுக்கணும்… ? மாப்பிள்ளைக்கு  எதாவது  குறை  இருக்கானு  கேட்டிங்களா..? ” , என்று நித்யா  வினவ.., “அதெல்லாம்  நாங்க  பார்த்தாச்சு… மாப்பிள்ளை  ஜோரா  ராஜா  கணக்கா இருக்காரு.. ” , என்று கூறினார்  ரங்கநாதன்.

 

                “அம்மா , அப்பா  கூட்டணி  பலமா  இருக்குதே…   எப்படி பந்து  போட்டாலும் கேட்ச்  பிடிக்கிறாங்களே.”, என்று  நித்யா  யோசிக்க, ” வேலையை  ரிசைன்  பன்னிரு … ” , என்று  பத்மா  கூற, “ஹா… பாயிண்ட்  கிடைச்சுது … ” , என்று  ஆனந்தம்  அடைந்த  நித்யா, ”  நான்  கஷ்டப்பட்டு  வாங்கின  வேலை… எப்படி  விட  முடியும்…?” , என்று சிடுசிடுத்தாள். 

                    “சம்பாதிக்க  தான்  வேலைக்கு  போற..,  மாப்பிளை பணக்கார இடம்… நீ சம்பாதிக்க வேண்டிய  அவசியமே  இல்லை… ” , என்று  பத்மா  கூற, ” அம்மா  நான்  பணத்துக்காக வேலைக்கு  போகலை… ” , என்று  நித்யா  கூற, ” ஓஹ்…. சும்மா  தான்  வேலை பார்த்தியா..?” , என்று பத்மா  நக்கலாக வினவ , ” அம்மா… நான்  பாக்கிற  வேலை., எனக்கு தன்னம்பிக்கை.. நான்  படிச்ச  படிப்பு .. என்  அடையாளம்.. ” , என்று அழுத்தமாக நித்யா கூறினாள்.

                 ” சரி  வேலையை  விடறது  விடாதது  உன்  பாடு  மாப்பிள்ளை  பாடு … கல்யாணம் கண்டிப்பா  நடக்கும் ” , என்று பத்மா  கூற, ” என்றாவது ஒரு நாள் யாரையாவது கல்யாணம் செய்து தானே  ஆக வேண்டும். “, என்ற எண்ணத்தில் நித்யா  திருமணத்திற்கு  சம்மதித்தாள் .

“எப்படியும்  சம்மதிப்பாள் ” , என்பது பத்மாவின் நம்பிக்கை .

         “பிரச்சனை  தீர்ந்தது” ,  என்று எண்ணிக் கொண்டு, சமயலறையில்  காய்  நறுக்க ஆரம்பித்தார்  பத்மா.

 

ட்ரிங்…  ட்ரிங்…

           அறையின்  ஓரத்தில்  இருந்த  தொலைபேசி  அழைத்தது.   தொலைபேசியின் அழைப்பு  காய்  நறுக்கி  கொண்டிருந்த  பத்மா  காதிலும்  விழுந்தது.  தொலைபேசியின் அழைப்பு   வரவேற்பரையில்  இருந்த  ரங்கநாதன்  காதிலும்  விழாமல்  இல்லை.    “அதை யாரவது எடுங்களேன்…” , என்று பத்மா கூற, ” எல்லார் கிட்டயும் மொபைல் இருக்கு .. இந்த டெலிபோன் எதுக்கு?” , என்று காயத்ரி நியாயம் பேச, ” நான் வேலையா இருக்கேன்.. யாரவது எடுத்து பேசுங்களேன்.. ” , என்று கூறிய பத்மாவின் குரலில் , “சில நேரங்களில் அல்ல பல நேரங்களில் இந்த தொலைபேசி இம்சை தான்” , என்ற வெறுப்பு அவர் குரலில் தெரிந்தது.

 

” ஹலோ… ” , என்று நித்யா  கம்பீரமாக பேச ஆரம்பித்தாள்.

எதிர்முனையில் எந்த பதிலும் இல்லாததால், “ஹலோ… ஹலோ .. ஹலோ.. ” , என்று மூன்று முறை நித்யா  பொறுமை இழந்து கூற, ” மதுசூதனன்  ஸ்பீக்கிங் ” , என்றது ஒரு கம்பீரமான ஆண் குரல்.

இதற்கு  பல கேள்விகளை கேட்க நினைத்தாலும் , சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தாள் நித்யா.

         நித்யாவிற்கு   திருமணம் மீது வெறுப்பு  என்றெல்லாம் இல்லை..  இன்னும் கொஞ்சம் நாட்கள் சுதந்திரமாக  இருக்கலாம் என்ற எண்ணம் தான்.  வேலை பார்க்கலாம் .. ஜாலியா ஊர் சுற்றலாம் ..இது போன்ற எண்ணங்கள்.. அவள் தோழிகள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகா வில்லை என்பது அதை விட மிக முக்கியமான விஷயம்.

 

ஆனால் …  “மதுசூதனன்  ஸ்பீக்கிங் ” , என்ற  குரல்  அவளை  ஈர்க்கத்  தான்  செய்தது.   இவன்  பெயரை  சொன்னால் ,  என்ன  என்று  நான்  கேட்க  வேண்டுமா? இவன் என்ன   பிரதமரா ? பிராதன மந்திரியா..? என்று  பழைய நகைச்சுவை எல்லாம் இவள் மனதில் தோன்ற , “ஹலோ .. நித்யா  இருக்காங்களா..?” , என்று  எதிர் முனையில் இருந்து வெளிவந்த குரலில் எரிச்சல் இருந்தது.                

        “ம்ம்ம்.. நான் தான் பேசுறேன்… ” , என்று நித்யா  கூற, ” யாரு ? “, என்று கண்  உயர்த்தி கேட்டார் பத்மா.

“மாப்பிளை.. ” , என்று  தன்  உதடுகளை  அசைத்தாள்  நித்யா.

      தன்  கைகளால்  வாயைப் பொத்தி சிரித்தாள் காயத்திரி.

“…… ” , எதிர் முனையில் என்ன பேசிருப்பார்கள் என்று நமக்கு கேட்க வாய்ப்பில்லை.

      நித்யாவின்  முகத்தில்  சிந்த்னை  ரேகைகள்.  நித்யா  ஏதோ  பேச எத்தனித்தாள்.

 ” ……. ” , எதிர் முனையில்  ஏதோ  கூற, மீண்டும் அமைதியானாள் நித்யா.

          அவன் பேசி முடிக்க, நித்யா “ஹலோ …. ” , என்று  நித்யா பேச ஆரம்பிக்க,  தொலைபேசி பேச்சை முடித்து விட்டான் மதுசூதனன்.

 

தோளை  குலுக்கிக்  கொண்டு   டெலிபோன்   பேச்சை  முடித்து   அருகில்  இருந்த சோபாவில்   அமர்ந்தாள்  நித்யா.

“அக்கா .., நீ  இவ்வளவு  அமைதியா  கூட பேசுவியா? ” , என்று காயத்ரி வினவ, “மாப்பிள்ளை  கிட்ட  ஒழுங்கா  பேசினியா? ” , என்று  பத்மா  கேட்க,  ” அவன்  என்னை எங்கே  பேச  விட்டான்.. ” , என்று  நித்யா  மனதிற்குள்  நினைத்தாள். 

பணக்கார  இடம்.. இந்த  இடம்  எப்படியாவது  முடிந்து  விட  வேண்டும்  என்ற  எண்ணம்  பத்மாவுக்கு.

“மாப்பிள்ளை என்ன சொன்னார்…?” , என்று பத்மா வினவ,  ” நீங்க  போடுற நகையோட ஒரு வைர அட்டிகை .. ECR ல ஒரு பங்களா.., BMW கார் ..  கேட்டார் ” , என்று நித்யா கூற, “அதுக்கு  நீ என்ன சொன்ன ?” , என்று காயத்ரி தீவிரமாக  கேட்டாள்.

” அம்மா  தான்  மாப்பிள்ளை  கிட்ட சமாதானமா போகணும்.. என்ன சொன்னாலும் சரினு சொல்லனுமுனு  சொன்னாங்க.. அது  தான்  எல்லாம் ஓகே…..  அப்பா  வாங்கி தந்திருவாங்கனு   சொல்லிட்டேன்… ” , என்று நித்யா கண் விரித்து கூற,   “க்ளுக்” என்று சிரித்தாள் காயத்ரி.

         ஒரு  நிமிடம்  குழப்பம்  அடைந்த  பத்மா..,  ” என்ன கொழுப்பா?  எதாவது  குழப்பம்  பண்ணி கல்யாணத்தை  நிறத்தணுமுன்னு  நினைக்காத“,  என்று கறாராக கூறினார்.

நித்யா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாக “சரி” என்று தலை அசைத்தாள்.

“அவங்க  ரெண்டு  பேரும் ஏதாவது பெர்சனலா பேசிருப்பாங்க… நீங்க அதெல்லாம் கேட்டுகிட்டு… ” , என்று காயத்ரி முணுமுணுக்க, ” இப்படி  ஒன்று இருக்கிறதோ…? ” , என்று பத்மா சிந்திக்க, நடப்பதை  அமைதியாக   பார்த்துக்  கொண்டிருந்தார்  ரங்கநாதன்.

                 பணக்கார  சம்பந்தம்  நித்யாவின்  வாழ்விலும் இவர்கள் குடும்பத்திலும் என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்.?

        கட்டங்கள் நீளும்………………..

                   ——— அகிலா கண்ணன்      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!