Naan Aval illai 36
Naan Aval illai 36
விபத்து
ஆடம்பரத்திற்கும் கம்பீரத்திற்கும் சற்றும் குறைவில்லாத அந்ந அதிநவீன மகிழுந்து ‘வாம்மா மின்னல்’ என்றளவுக்கு சாலையில் பறந்து சென்றுக் கொண்டிருந்தது.
எல்லோரின் பார்வையையும் அந்த சில விநாடிகளிலிலயே அதன் வசம் ஈர்க்கப்பட்டது.
அந்த காரில்தான் ஜென்னித்தா ராகவோடு சென்று கொண்டிருந்தாள்.
ராகவிடம் உள்ள பல்வேறு வகையான கார்களில் அது அவன் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமான ஒன்று.
அதன் மீது சிறு கீறல் பட்டாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.
ரொம்பவும் முக்கியமான தருணத்தில் மட்டுமே அந்த காரை அவன் உபயோகப்படுத்துவான். அதுவும் அவனை தவிர்த்து வேறு யாரும் அந்த காரை ஓட்டுவதற்கு கூட அனுமதிக்க மாட்டான்.
இன்று ஜென்னியை முதல்முறையாய் வெளியே அழைத்து செல்லப் போகிறோம் என்றதும் அவன் மனம் அந்த காரில் அவளை அழைத்து செல்ல வேண்டுமென்றே விழைந்தது.
இருவருமே அந்த காரில்தான் சையத் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
சையத்தை காண போவதை எண்ணும் போதே, ராகவிற்கு உள்ளுக்குள் பதட்டம் ஏறி கொண்டிருந்தது.
எங்கே சையத் அன்று நடந்த நிகழ்வை அவளிடம் சொல்லி வைத்துவிடுவானோ என்று!
எப்படி அந்த சூழ்நிலையை சமாளிப்பது என்று ஆழமாய் சிந்தித்திருந்தவனை, ஜென்னி அவ்வப்போது ஏதாவது கேட்டு திசை திருப்பிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் ஜென்னி அவன் தவறான பாதையில் போய் கொண்டிருப்பதை பார்த்து “ராகவ்… என்ன இந்தப்பக்கமா போறீங்க… சையத் வேற வீடு ஷிஃப்ட்டாகிட்டேன்னு போஃன்ல சொன்னாரே… உங்களுக்கு தெரியாதா?!” என்று ஆச்சர்யமாய் கேட்டாள்.
‘ஆமா இல்ல’
என்று மனதிற்குள் எண்ணியவன்,
“ஸாரி… மறந்துட்டேன்… ஏதோ ஞாபகத்தில” என்றவன் “புது அட்ரெஸ் என்ன?” என்று கேட்க அவனை யோசனைகுறியோடு பார்த்தாள்.
அவள் பார்வையின் பொருள் புரிந்து “இல்ல ஜென்னி… ரீஸன்ட்டா போய் சையத்தொ பார்க்கல… அதான்” என்று சமாளிக்க அவனை நம்பாமல் பார்த்தவள், அவனிடம் அது குறித்து கேள்வி ஏதும் கேட்காமல் தன் கைப்பேசியில் இருந்த சையத்தின் முகவரியை அவனிடம் படித்துக் காண்பித்தாள்.
ராகவ் இயல்பாக இருக்க முயன்றாலும், அவன் முகம் அவன் படபடப்பை பிரதிபலிக்க, அவளோ அவனின் உணர்வுகளை ஆழ்ந்து ஆராய்ந்து கொண்டு வந்தாள்.
முதல்முறையாய் ஒரு பெண்ணிற்காக தான் பயம் கொள்கிறோம் என்று அவன் மனநிலையை எண்ணி அவனே வியப்படைந்தான்.
அவள் உறவை வாழ்நாள் முழுக்க தக்க வைத்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு அவனுக்கு!
காதல் பாரபட்சமின்றி எல்லோரையும் பாடாய் படுத்தியே தீரும்.
அதில் ராகவ் மட்டும் விதிவிலக்கா என்ன?
ராகவின் கார் அந்த உயரமான குடியிருப்புக்குள் சென்று நின்றது.
அது பல உயர்மட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் குடியிருப்பு.
எல்லாவிதமான ஆடம்பரங்களையும் வசதிகளையும் அந்த குடியிருப்பு தனக்குள்ளேயே தேக்கி வைத்திருந்தது.
ராகவ் காரைவிட்டு இறங்க தயங்கினான். இதை போன்ற இடத்திற்கு வந்தால் கூட்டம் கூடி விடுமே.
இன்று பார்த்து அவன் தன்னுடைய செகரட்டிரி மற்றும் காவலாளிகள் யாரையும் அழைத்து வரவில்லை.
அவன் தயக்கத்தை பார்த்தவள் “வாங்க ராகவ்” என்றழைக்க, “இல்ல ஜென்னி… நான் வந்தேன்னா தேவையில்லாம கூட்டம் கூடும்” என்றவன் தயங்க,
“அதுக்கெல்லாம் என்ன பண்ண முடியும்… வாங்க சமாளிப்போம் ?” என்றாள்.
“சமாளிப்போமா ?! நீ நினைக்கிற மாதிரி அது அவ்வளவு ஈஸி இல்ல”
“படத்தில எல்லாம் பத்து இருபது பேர் அஸால்ட்டா சமாளிக்கிறீங்க… இவங்கெல்லாம் உங்க பேஃன்ஸ்… உங்களை உயிராய் நேசிக்கிற அபிமானிகள்… இவங்க போய் உங்களை என்ன பண்ணிட போறீங்க…?” என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“என்னை பத்தா உனக்கு காமெடியா தெரியுதா ?!” என்று முறைத்தான்.
“உங்களை போய் அப்படி நினைப்பேனா ராகவ் ? நீங்க எவ்வளவு பெரிய ஹீரோ… ” என்று சொல்லி எகத்தாளமாய் மீண்டும் அவள் சிரிக்க !
“நீ என்னை வைச்சி எதோ பெரிசா ப்ளேன் பன்றடி… ஹ்ம்ம்… என்னவோ நடக்கட்டும்” என்று
புலம்பியபடி அவன் காரை விட்டு இறங்க, சில நொடிகள்தான் தாமதம்.
அவன் சொன்னதற்கு ஏற்றாற் போல் ஒரு கூட்டம் அவனை சூழ்ந்து கொண்டு மொய்க்க ஆரம்பிக்க தொடங்கியது.
எல்லோரும் காணாததை கண்டது போல் அவன் மீது விழ, பெண் ஆணென்ற பாரபட்சமே இல்லை.
“ராகவ் சார் ஒரு செல்ஃபி” என்று அவனுடனான ஒரு போட்டோவுக்காக முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.
அவன் அவர்களை விலக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்க, ஜென்னி ஒரமாய் நின்று அவன் பரிதாபகரமான நிலையை பார்த்து புன்னகையித்துக் கொண்டிருந்தாள்.
அவ்வப்போது அவளையும் சிலர் அடையாளம் கண்டு கொண்டு செல்ஃபி எடுத்து கொள்ள விழைந்தனர்.
ஆனால் பலரின் குறியும் அவன்தான். ராகவ் சிக்கி சின்னாபின்னமானான். இதை போன்ற கூட்டத்தில் சிக்கி அவனுக்கு வழக்கமில்லை. இதுவே முதல்முறை.
பொது இடத்திற்கு வர நேரிட்டால் குறைந்தது நான்கு பாதுகாவலராவது அவனுடன் வருவர்.
இன்று ஜென்னியோடு வரும் ஆவலில் தனிமையில் வந்து ஏடாகூடமாய் சிக்கிக் கொண்டான்.
அவன் அவர்களிடம் இருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
ஜென்னி ஒருவழியாய் அவன் நிலைமை புரிந்து சையத்திற்கு அழைத்து விவரத்தை உறைக்க, அவன் உடனே அந்த குடியிருப்பின் செக்யூரிட்டிகளை அழைத்து அவனை மீட்டெடுக்க வேண்டியதாய் போயிற்று.
சையத்தின் வீட்டிற்குள் நுழைந்த பிறகுதான் ராகவிற்கு மூச்சே வந்தது.
ஜென்னியுடன் ராகவ் வந்திருப்பதை பார்த்து சையத்திற்கு அதிர்ச்சிகரமாகவும் கோபமாகவும் இருந்தது.
சையத் அவன் வருகையை வேண்டா வெறுப்பாகவே எதிர்கொண்டான்.
அவன் பார்வையில் அத்தனை வெறுப்பு.
ஜென்னி உள்ளே நுழைந்ததும் ராகவின் விலையுயர்ந்த ஷர்ட் கசங்கியிருப்பதை பார்த்து, “ரொம்ப கஷ்டப்பட்டிட்டீங்களோ ?! ச்சோச்சோ… ஷர்ட்டெல்லாம் கசங்கி போச்சே” என்று கேட்டவள் உதட்டில் எள்ளலாய் ஓர் புன்னகை.
அவளை கோபமாய் பார்த்தவன், “என்னடி கிண்டலா ?” என்று கேட்க,
“உம்ஹும் நக்கல்” என்றாள்.
அவள் பார்வையில் தெரிந்த ஏளனத்தை பார்த்து எரிச்சலானவன்,
“இருடி… உன்னை இப்படி ஒரு நாள் கசக்கிறேன்” என்று அவள் காதோரம் கிசுகிசுக்க,
“ஆஹான்” என்று சொல்லிவிட்டு அசராமல் சிரித்தாள்.
வேறெந்த பெண்ணிடமும் காணாத அந்த திமிரான நடவடிக்கைதான் அவனை அவளிடம் கட்டி இழுத்திருந்தது.
இம்முறையும் அவளின் அந்த அசராத நடத்தையை ராகவ் சற்று ரசனையாகவே பார்க்க, சையத்தால்தான் அவர்களின் ரகசிய சம்பாஷணைகளையும் சிரிப்புகளையும் பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பொறாமை என்பதை தாண்டி ஜென்னி எப்படி ராகவ் போன்ற ஒருவனை காதலித்தால் என்று அவளின் அறியாமையை எண்ணி வருத்தம் கொள்ளவே தோன்றியது.
அதோடு தான் அவனை பற்றிய உண்மையை அவளுக்கு தெரிவிக்காமல் விட்டதனால் வந்த வினை என்று தன் அஜாக்கிரதையை எண்ணியும் கோபம் மூண்டது.
இந்த சிந்தனையில் மூழ்கியவன் வந்தவர்களை வரவேற்க்காமல் சிலையாய் நிற்க,
சாஜி அதற்குள் ஜென்னி ராகவை பார்த்து “வாம்மா… வாங்க தம்பி” என்று அழைத்து முகப்பு அறையில் அமர வைத்தாள்.
ராகவ் அந்த வீட்டையே சுற்றி பார்த்தான். அந்த வீட்டிற்கு பத்தில் ஒரு மடங்கு கூட இந்த வீடு இருக்காது என்று எண்ணியவன்
‘என்னை எதிர்த்துகிட்ட இல்ல… இது உனக்கு தேவைதான் சையத்’ என்று முனகியபடி சையத்தை துவேஷமாய் பார்த்து கொண்டிருந்தான்.
அஃபசானா ஜென்னியை பார்த்த நொடி அவளை கட்டிக்கொண்டு “எப்படி இருக்க ஜென்னி க்கா ?எங்களை எல்லாம் மறந்திட்டீங்களா ?” என்று விசாரிக்கும் போது அவள் கண்களில் நீர் தேங்கியது.
“எப்படி உங்களை போய் நான் மறப்பேன்… எனக்கு உன்னை பத்தியும் சாஜிம்மா பத்தியும்தான் எப்பவும் நினைப்பு” என்று சொல்லும் போதே,
அவர்கள் சம்பாஷணையில் இடைபுகுந்த ஆஷிக் “என்னை பத்தி நினைக்க மாட்டீங்களா க்கா?” என்று கேட்க,
ஜென்னி அவன் தோளை தட்டி “உன்னை போய் நான் மறப்பேனா ?” என்றாள்.
சாஜிம்மா அதற்குள் ராகவிற்கும் ஜென்னிக்கும் பருக கூல்டிரிங்ஸ் எடுத்து வந்து கொடுத்தாள்.
அதை அவள் வாங்கி பருகும் போதே அப்ஃசானாவும் ஆஷிக்கும் ஜென்னியை விடாமல் உள்ளே அழைக்க “இதோ வந்திடுறேன்” என்று ராகவ் சையத்திடம் பொதுப்படையாக சொல்லிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டே அவள் சென்றுவிட,
அந்த நொடி ராகவ் சையத்தின் விழிகள் நேரடியாய் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
போதாக் குறைக்கு கூட்ட நெரிசலில் சிக்கிய எரிச்சலில் ராகவ் சையத்தை நோக்கி, “உனக்கு இருக்க வேற வீடே கிடைக்கலயா ?!” என்று துச்சமாக கேட்டான்.
சையத்தின் சினத்தை அவன் வார்த்தை தூண்டிவிட்டது.
“நான் எந்த மாதிரி வீட்டில இருக்கனுங்கிறதை நீ தீர்மானிக்க கூடாது ராகவ்” என்றதும்
ராகவ் எளக்காரமான புன்னகையை உதிர்த்து,
“நான் தீர்மானிக்க கூடாதா ?! ஹ்ம்ம்… இன்னைக்கு நீ இருக்கிற இடமும் உன் வாழ்க்கையையும் நான் தீர்மானிச்சததுதான்டா?” என்று கர்வமாய் உரைத்தான்.
“அந்த ஒரு காரணத்துக்காகதான் நீ இன்னமும் என் முன்னாடி நின்னு பேசிட்டிருக்க ராகவ்… இல்லைன்னு வைச்சுக்கோ… அன்னைக்கு நீ ஜென்னியை பத்தி பேசின பேச்சுக்கு உன்னை கொன்னு புதைச்சிருப்பேன்” என்றான்.
அவன் வார்த்தையை கேட்ட ராகவ் பதறிக் கொண்டு “அவ காதில விழுந்து தொலைக்க போகுதுடா… கொஞ்சம் பொறுமையா பேசு” என்றவனை
சையத் குழப்பமாய் பார்த்து,
“ஏன்? விழுந்தா என்ன ? உன் இலட்சணம் அவளுக்கு தெரிஞ்சிருமோன்னு பயப்படிறியா ?!” என்று கேட்டு அலட்சியமாய் புன்னகையித்தான்.
ராகவோ ஜென்னி வந்துவிட போகிறாளோ என்று எட்டிப் பார்த்தபடி “வேணா சையத்… தேவையில்லாததெல்லாம் பேசாதே” என்றான்.
“தேவையில்லாம பேசா கூடாதா ?… முடியாது ராகவ்… நீ ஜென்னி வாழ்க்கையில விளையாடிறதை என்னால ஏத்துக்கவே முடியாது… நான் அவகிட்ட உன்னை பத்தி சொல்லதான் போறேன்” என்று தீர்க்கமாய் சொல்லவிட்டு அவன் பார்வையாலயே வெறுப்பை உமிழ்ந்தான்.
ராகவ் அமர்த்தலாக “நீ நினைக்கிற மாதிரி இல்ல சையத்… நான் ஜென்னியை இப்போ லவ் பன்றேன்” என்க,
சையத் வியப்பானான். அடுத்த கணமே அவனை பார்த்து சத்தமாய் சிரித்தவன்,
“நீ சினிமாலதான் பயங்கரமான நடிகன்னா… நீ நிஜ வாழ்க்கையிலயும் நடிகன்டா” என்றான்.
ராகவ் அவனை எப்படி நம்ப வைப்பது என்று யோசித்தவன், உடனே அவன் கைகளை பற்றிக் கொண்டு,
“சையத் ப்ளீஸ்… அன்னைக்கு நடந்தது எதையும் ஜென்னிகிட்ட சொல்லிடாதே… நான் அதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்ற போது சையத் அப்படியே அதிசயத்து போனான்.
ராகவ் மேலும் அவன் கரத்தை விடாமல் “நான் உனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கேன்… அதுக்கு பிரதிஉபகாரமாய் இதை மட்டும் செய்” என்று கெஞ்சினான்.
தன் முன்னே நிற்பது ராகவ்தானா? என்பதை சையத்தால் நம்பவே முடியவில்லை.
எந்த காரணத்துக்காகவும் தன் கர்வத்தையும் ஈகோவையும் விட்டு இறங்கி வராதவனா இன்று ஜென்னிக்காக இந்தளவுக்கு தன்னிலையை தாழ்த்தி பேசுகிறான்.
அப்படியெனில் அவனுக்கு ஜென்னியின் மீது உண்மையிலயே காதலோ என்று எண்ண தோன்றியது.
அவன் அவ்விதம் யோசிக்கும் போதே சாஜி உணவு பண்டங்களை எடுத்துவர, அப்போது ஜென்னி அப்சானாவோடும் ஆஷிக்கோடும் வெளியே வந்தாள்.
ஆனால் எதையோ கைகளில் ஏந்தியபடி !
ஜென்னி அதனை சையத்திடம் காண்பித்து, “என்ன சையத் இதெல்லாம் ?!” என்று அவளின் ஓவியத்தை அவன் முன்னே காட்டினாள்.
அவள் முகம் கேள்விகுறியாய் மாறியிருக்க, சையத் அதிர்ச்சியோடு பேச வார்த்தைகளின்றி ஒருவித படபடப்போடு அவளை நோக்கினான்.
அவன் நிலையை பார்த்த ராகவ் தானே முன்வந்து அந்த ஓவியம் வரையப்பட்ட முழு கதையை எடுத்துரைத்தான்.
ஜென்னி அடந்காத வியப்போடு “இட்ஸ் அன்பிலிவீபள் !!!” என்றாள்.
அவள் தன்னை தவறாக எண்ணிக் கொள்ளவில்லை என்று பெருமூச்செறிய,
ஜென்னி “எப்படி சையத் ???” என்று விழிகள் அகல விரிந்திட கேட்டாள்.
“எனக்குமே தெரியல ஜென்னி” என்றான் சையத்.
ராகவ் சிரித்தபடி “நான் கேட்டாலும் இப்படிதான் சொல்வான்” என்க,
“என்னால உண்மையிலயே நம்ப முடியல… நீங்க என்னை படத்தில ஹீரோயினா நடிக்க கேட்ட போது கூட… இதுக்கு பின்னாடி நீங்க இவ்வளவு ஸ்ரீயஸா இறங்கி இருப்பீங்கன்னு நான் நினைச்சி கூட பார்க்கல” என்றாள்.
சையத் யோசனையோடு அவளை பார்க்க, ஜென்னி புன்னகை ததும்ப “முதல்ல கை கொடுங்க சையத்” என்று அவள் கரத்தை நீட்டினாள்.
அவன் புரியாமல் “ஏன் ?” என்று கேட்க,
அவள் உடனே அவன் கைப்பற்றி குலுக்கியவள் “ஸ்கிர்ப்ட்தான் கிரேட்னு பார்த்தா… இந்த படத்துக்கான உங்க தாட் டெடிகேஷன் எல்லாம்… வாவ் !!! ஐம் ரியலி ரியலி இம்பிரஸ்ட்… ” என்றாள்.
சையத் ராகவ் இருவரும் ஆச்சர்யத்தில் மூழ்க,
ஜென்னி “என்ன நடந்தாலும் நாம கண்டிப்பா நாம இந்த மூவியை பண்ணனும்… நான் இந்த படத்தில நடிக்கிறேன்” என்று அவள் உறுதியாக சொல்ல,
சையத் அந்த சமயம் ராகவ் முகத்தை பார்த்து எள்ளலாக சிரித்தான்.
ராகவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் இந்த படத்தில் நடிப்பதில் அவனுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.
சையத்துக்கு அவள் மீது விருப்பம் என்று அவனுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது அவன் இயக்கும் படத்தில் ஜென்னி நடிப்பதா என்று யோசித்தவன், அவளின் எண்ணத்திற்கு தடை விதிக்க முடியாமல் மௌனமாயிருந்தான்.
அதற்கு பிறகு சையத்தும் ஜென்னியும் அந்த படத்தை குறித்து மும்முரமாய் விவாதம் நடத்திக் கொண்டிருக்க, ராகவ் அவர்கள் உரையாடலை வேறுவழியின்றி சகித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நிலைக்கு மேல் பொறுமையிழந்தவனாய் “ஜென்னி டைம் ஆகுது… புறப்படலாமா ?!” என்று சொல்ல,
சாஜி அவர்களை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்த அவர்களோ வேண்டாமென்று மறுத்துவிட்டனர்.
ஜென்னி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள்ள, அப்சானாவிற்கோ தன் தமையனின் காதலை தெரிவிக்க வார்த்தை தொண்டை வரை வந்தாலும் சொல்ல முடியாமல் அழுகை மட்டுமே வந்தது.
சையத் தன் தங்கையின் மனநிலையை அறிந்து அவளுக்கு பார்வையாலயே சமாதானம் உரைத்தாலும், அவன் மனமும் எல்லையற்ற வேதனையோடு உள்ளுக்குள் புழுங்கி கொண்டுதான் இருந்தது.
அதோடு ராகவ் மீது அவன் மனதிலிருந்த நன்றியுணர்வு வேறு எதையும் அவளிடம் சொல்ல முடியாமல் அவனை இடைபுகுந்து தடுத்தது.
ராகவும் ஜென்னியும் வெளியேற யத்தனிக்க, இறுதியாய் சையத்தின் அருகாமையில் வந்த ராகவ், “எனக்கு சொந்தமான வீட்டை நீ திருப்பி கொடுத்திட்ட… அதே போல எனக்கு சொந்தமான ஒண்ணு உன்கிட்ட இருக்கு… அதையும் தந்திடு” என்க, சையத் குழப்பமாய் பார்த்தான்.
அவன் ரகசியமாய் “என் ஜென்னியோட ஓவியம் சையத்… ஐ நீட் தட்… அது எனக்கு மட்டும்தான் சொந்தம்” என்றவன்
“அப்புறமா என் செகரட்டியை அனுப்பிறேன் கொடுத்த அனுப்பு” என்றான்.
சையத்திற்கு தன் உடலின் ஒரு பாகத்தை வெட்டியெறிந்தது போல் இருந்தது.
அவள் காதலை பெற முடியாத தனக்கு அதுதான் பெரிய ஆறுதல். அந்த ஓவியம் அவன் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது. அந்த ஓவியத்தை பார்க்காமல் அவனுக்கு பொழுது புலர்வதும் சாய்வதும் கூட கிடையாது.
அவஸ்த்தையோடு நின்றவனின் முகப்பாவனைகள் எதையும் கவனிக்காதவளாய் “போயிட்டு வர்றேன் சையத்” என்று அவள் சொல்ல,
ராகவும் குரூரரமாய் சையத்தை பார்த்த பார்வையில் அவன் கேட்டதை தர வேண்டுமென்ற ஆணையிருந்தது.
ராகவ் வாசலை அடைந்ததும் ஒரு நொடி தயங்கி நின்றான்.
சையத் மீண்டும் அந்த குடியிருப்பின் செக்யூரிட்டியை அழைத்து பாதுகாப்பாய் அவனை அனுப்பி வைத்தான்.
அவன் அங்கே வந்த செய்தி பலருக்கும் பரவியதால் பத்திரிக்கைகள் வேறு அங்கு குவிந்திருந்தன.
ராகவ் எப்படியோ எல்லோரையும் சமாளித்து தப்பி வந்து காரில் ஏறி புறப்பட்டான்.
அப்போதுதான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது.
எப்படியோ சையத்தை பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று எண்ணி ஒருவாறு மனஅமைதியடைந்தான். .
உள்ளூர களிப்பும் பெருக ஜென்னியின் புறம் திரும்பி “நெக்ஸ்ட் எங்க போலாம்” என்று கேட்டான்.
“என்னை டிராப் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க” என்று சொன்னவளை கோபமாய் பார்த்தவன்,
“அதுக்காகவா இன்னைக்கு என் வேலையெல்லாம் ஒதுக்கிட்டு உன் கூட வந்திருக்கேன்” என்று ஏக்கமான பார்வையோடு கேட்டான்.
“எங்க வெளியே போனாலும் உங்களுக்குதானே பிராப்ளம்”
“பப்ளிக் ப்ளேஸ் போனதா பிராப்ளம்… என் கெஸ்ட் ஹவுஸ் போனா ?!” என்றவனை அவள் கூர்மையாய் முறைத்து பார்க்க,
அவள் எண்ணத்தொ உணர்ந்து”என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ?… நான்தான் உனக்கு பிராமிஸ் பண்ணி இருக்கேன் இல்ல… உன் பெர்ஃமிஷன் இல்லாம உன் கிட்ட கூட நெருங்க மாட்டேன்னு… அப்புறம் என்ன?” என்று கேட்க, அவள் பதில் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள்.
அவன் அவளை சம்மதிக்க வைக்கும் எண்ணத்தோடு “உனக்காக டிரிங்ஸ் ஸ்மோக்கிங் எல்லாத்தையும் கூட விட்டுவிட்டேன்… ஆனா நீ இன்னும் என்னை நம்ப மாட்டிற ல” என்று சுயபச்சாதாபத்தோடு அவன் வாட்டமுற கேட்க,
அவள் மூச்சை இழுத்துவிட்டு “டன் ராகவ்… போலாம்” என்றாள்.
அவன் அளவுகடந்த சந்தோஷத்தில் மூழ்கி திளைக்க, ஜென்னி மீண்டும் “போலாம்…பட் ஒன் கன்டிஷன்” என்றாள.
அவளை அவன் ஆழமாய் பார்க்க “நான் டிரைவ் பன்றேன்” என்றாள்.
அவன் முகம் சுருங்கிப் போனது. அந்த காரை பிறர் ஓட்ட அவன் அனுமதித்தே இல்லை என்று தயங்கியபடி அவளை பார்க்க,
“என்ன யோசிக்கிறீங்க?… அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா ?!!” என்று அவன் கேள்வியை அவனிடமே திருப்பி கேட்டவளிடம்,
“சே… அப்படி எல்லாம் இல்ல… ” என்றவன் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு சாவியை அவளிடம் நீட்டினான்.
அவள் வெகுஆர்வமாய் அந்த காரை ஓட்ட, அவளுடனான அந்த பயணத்தை அவன் இன்பகரமாக அனுபவித்துக் கொண்டிருந்தான்.
அவன் மனநிலைக்கு ஏற்றவாறு
‘அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னிப் பெண்கள் ஆடை கழற்ற கண்கள் கண்டனே…
அம்மா அம்மா அம்மஅம்ம அம்மா…’
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,
ராகவின் விரல்கள் அதன் தாளத்திற்கு ஏற்ப வாசிக்க, அவன் உதடுகள் அந்த பாடலுக்கு ஏற்ப முணுமுணுத்தன.
அவன் விழியோ காதலை விஞ்சிய காமரசத்தோடு அவளை அங்கம் அங்கமாய் தழுவி அவளை அளவெடுத்து கொண்டிருக்க, அவளின் புஃல் ஸ்லீவ் டாப்பும் லாங் மிடியும் அவள் தேகத்தின் வடிவமைப்பை அழுத்தமாய் பறைசாற்றியது.
அவள் உடை எந்த விதத்திலும் விரசமாக இல்லாத போதும் அவன் பார்வை அத்தனை விரசமாய் அவளை ஊடுரூவிக் கொண்டிருந்தது.
அவள் உரிமையற்றவளாய் இருக்கும் போதே அவன் பார்வைக்கு எல்லை கோடுகள் இல்லை. இப்போது அவளோ உரிமைக்குரியவளாய் மாறியபின் அவன் பார்வை தன் வறம்பை மீறிக் கொண்டிருக்க,
அவன் எண்ணத்தை கணித்தவளாய் “ராகவ் போதும்… யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்ஸ்” என்றாள்.
“கண்டுபிடிச்சிட்ட… பெரிய ஆளுதான்… ஆனா எப்படி ? என்னை திரும்பி கூட பார்க்காம” என்று கேட்டவனிடம்,
“ஏன் பார்க்கனும் ? நீங்க பேசாம அமைதியா வரும் போதே எனக்கு உங்க தாட்… புரிஞ்சி போச்சு… இதை கண்டுபிடிக்க பார்வையெல்லாம் அவசியமில்லை” என்றாள்.
“பார்க்காமலே என் மனசை உன்னால புரிஞ்சிக்க முடிஞ்சும்… என்னை இப்படி டார்ச்சர் பன்றியே நியாயமா ?” என்று கேட்டு குறும்புத்தனமாய் அவன் சிரிக்க,
“உங்க மனசில அப்படி என்னதான் ராகவ் இருக்க” என்று அவள் கேட்கவும்
அவளை பார்த்தபடியே பாட்டை மாற்றினான்.
‘நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம்… உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா ?!’
எரிச்சலடைந்தவள் “ராகவ்…சேஞ்ச் தி ஸாங்” என்றாள்.
“என்னோட பேவஃரட்.. ஜென்னி”
“எனக்கு… பிடிக்கல”
“எவ்வளவு கருத்தான பாடல் தெரியுமா ? இதை போய் பிடிக்கலங்கிற” என்று அவன் சொல்ல,
அவன் புறம் திரும்பியவள் கூர்மையாய் பார்த்தபடி “புரிஞ்சிக்கோங்க ராகவ்… காதலை உயிரோட்டமா உணரனும்… அது மனசிலிருந்து உருவாகிற உணர்வு… உடலில் இருந்து இல்ல… முக்கியமா லவ்ங்கிறது செக்ஷுவல் பீஃல் இல்ல” என்று சற்று கண்டிப்போடு அவள் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தவன்,
“செக்ஸ் இல்லாத லவ்வா… நோ வே” என்று எகத்தாளமாய் சிரித்து, அவள் சொன்னதை மறுத்தான்.
அவள் மனம் அந்த நொடியே மகிழை எண்ணிக் கொண்டது.
தான் இல்லாத போதும் கூட தன்னை அவனால் நேசிக்க முடியுமெனில், அங்கே காமம் என்ற வார்த்தை உண்மையிலயே பொருளற்றுதான் போனது.
அது காமம் இல்லாத காதல் இல்லையா ? என்று உள்ளூர கேட்டு கொண்டவளின் உதடுகள் மௌனமாய் இருக்க, ராகவ் அப்படி அவள் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஜென்னியின் கைப்பேசி ஒலிக்க, அவள் தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு தன் ப்ளூடூத்தை செவியில் மாட்டிக் கொண்டு அணைப்பை ஏற்றாள்.
அவள் “ஹெலோ” என்று சொல்ல,
“சாக்ஷி” என்று எதிர்புறத்தில் மகிழின் அழைப்பு.
அவள் அதிர்ந்து போய் பிரேக்கின் மீது கால் வைத்து அந்த காரின் இயக்கத்தை நிறுத்த, பின்னாடி அதே வேகத்தில் வந்த இன்னொரு கார் தன் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் அவர்களின் காரின் மீது மோதி விபத்துக்குள்ளாக, இடிமுழங்கியது போன்ற ஓர் சத்தம் எழுந்தது.
ராகவ் மிரட்சியடைய, ஜென்னி ஸ்டியரிங்கில்
மோதிக் கொள்ள பார்த்து சுதாரித்து கொண்டாள்.
சாக்ஷி என்ற அவனின் ஒற்றை அழைப்பிற்கு இத்தனை ஆழமான சக்தியா ?
வருடங்கள் கடந்து போனது அவளுக்கு.
அவன் அவள் பெயரை உச்சரிப்பதை கேட்டு.
நேரடியாக அவன்தான் தன்னிடம் பேசினானா… எதற்காக ? அவள் தேகம் முழுக்க குளிர் பரவி அவள் கரமெல்லாம் வியர்வை பூத்து சில்லிட்டது.
ராகவ் அவள் நிலை புரியாமல் தோளை தொட்டு உலுக்கி “என்னாச்சு ஜென்னி ?” என்று அதிர்வோடு கேட்க,
அதே நொடி அவள் செவியில் “சாக்ஷி என்னாச்சு? ” என்று மகிழும் கேட்டான்.
யாருக்கு பதில் சொல்வதென்று புரியாமல் அவள் சற்று நேரம் திகைத்து போனாள்.