Akila Kannan’s Thaagam 11

தாகம் – 11

 

பதட்டத்துடன் திரும்பிய இருவரும் வருவது  யாரென்று பார்க்க, கதவை திறந்து கொண்டு ஒரு நடுத்தர வயது பெண்மணி காபி கோப்பைகளுடன் உள்ளே நுழைந்தார்.

 

“கதவை தட்டி கொண்டு வந்திருக்கலாமே..?” , என்று கேட்டான் விக்ரம்.

 

அந்த குரல், அதிலிருந்த தொனி திவ்யாவை மெய் சிலிர்க்க வைத்தது.

அந்த குரலில்  வேண்டுகோள் இல்லை… அதிகாரமும் இல்லை..  மரியாதையின்மையும் இல்லை… ஆனால் இப்படித் தான் நடந்திருக்க வேண்டும் என்ற ஆணை இருந்தது..

“நான் இவனிடம் , ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்…”, தனக்கு தானே சொல்லிக் கொண்டாள் திவ்யா.

 

“ரொம்ப நேரம் தட்டினேன்..  காபி ஆறிடுமேனு கொண்டு வந்தேன்..” , என்று கூறினாள் அந்த பெண்மணி.

அப்பொழுது, “ஹலோ சார்” , என்று கூறிக் கொண்டே உள்ளே வந்தான் ரமேஷ். விக்ரமிற்கு எதிராக இருந்த நாற்காலியில் , திவ்யாவின் பக்கத்தில் அமர்ந்தான் ரமேஷ்.

“இவனுக்கு  எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது போலும்..!!!” , என்று நினைத்துக் கொண்டாள்  திவ்யா.

“எனக்கு காபி வேண்டாம் .” , என்று கூறினாள் திவ்யா.

“ஒரு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வாங்க…”, என்று தன்மையாக அந்த பெண்மணியிடம் கூறிக் கொண்டே “அவங்க பேரு பாக்கியம் , புதுசா வேலைல சேர்ந்திருக்காங்க …  கம்பனிக்கு  எதிர் பக்கம் தான் குடியிருக்காங்க” ,  என்று விக்ரமிடம் கூறினான்.

 

ரமேஷ் பேசியதை , அக்கறையாக கேட்டுக் கொண்டான் விக்ரம்.

 

“எனக்கு ஆப்பிள் ஜூஸ்லாம்  வேண்டாம் ” , என்று தன் போக்கில்           முணுமுணுத்தாள் திவ்யா.

 

“நம்ம வீட்டுக்கு போக கொஞ்சம் நேரம் ஆகும் ..  அது வரைக்கும் எப்படி தாங்கும்? ” , என்று கூறினான் ரமேஷ்.

திவ்யா சரியென்று தலை அசைக்க ,  இப்பொழுது யோசிப்பது விக்ரமின் முறையாகிற்று.

ரமேஷின் குரலில் இருப்பது அக்கறையா ? அன்பா..? ஆணையா?.

 

விக்ரம் தலையை அசைத்து அந்த எண்ண ஓட்டத்தில் இருந்து வெளி வந்தான்.

 

ரமேஷும் , விக்ரமும் அலுவலக பணியை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது , திவ்யாவிற்கு ஆப்பிள் ஜூஸை  பாக்கியம் கொடுத்தாள்.

 

விக்ரமின் கம்பிரம், ரமேஷின் பேசும் விதம் இவை அனைத்தையும் ஆராய்ந்தபடி ஜூஸ்  குடித்தாள்  திவ்யா.

 

இடத்தை  சுத்தம் செய்ய மீண்டும் வந்த பாக்கியத்திடம் , “ஜூஸ்  நல்லா இருந்தது.. தேங்க்ஸ்.. “, என்று சிரித்த முகமாக கூறிய திவ்யாவை விக்ரம் கண்ணால் மனதுள் படம் பிடித்துக் கொண்டான்.

 

இருவரும் பேசி முடிக்கும் வரை , திவ்யா அமைதியாக காத்திருந்தாள்.

 

இந்த அமைதி விக்ரமிற்கு ஆச்சர்யத்தையும், ரமேஷிற்கு படபடப்பையும் தந்தது.

 

விக்ரமிடம் பேசிக் கொண்டிருந்தாலும் , திவ்யாவின் எண்ண ஓட்டத்தை கண்டுபிடித்திருந்தான் ரமேஷ்.

 

“நம்மிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் வைத்திருப்பாள் ” , என்று நினைத்தான் ரமேஷ்.

 

இருவரும் பேசி முடித்த பின் , ” தேங்க்ஸ் விக்ரம் “, என்று கூறிக் கொண்டு கிளம்ப

 

“எதுக்கு தேங்க்ஸ் ? ” , என்று விக்ரம் வினவினான்.

 

“எல்லாத்துக்கும் … ”  , என்று சிரித்த முகமாக கூறிக் கொண்டு திவ்யாவை  அழைத்துச் சென்றான்.

 

திவ்யாவின் முகத்தில் எள்ளளவும் சிரிப்பில்லை.

 

இந்த சந்திப்பு , இப்படி மனக்  கசப்போடு முடிந்ததில் விக்ரமிற்கு வருத்தம் இருந்தாலும்.., இந்த சந்திப்பு அவனுக்கு ஆனந்தத்தை தான் கொடுத்திருந்தது.

 

ரமேஷ் , திவ்யா இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

 

திவ்யா எதுவும் பேச வில்லை.  ரமேஷ் அவளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

 

” நான் நேத்து  ஹோட்டல் போலாமுன்னு சொன்னேன்..    நேத்து கூட்டிட்டு  போகாம,  இன்னக்கி ஏன் கூட்டிட்டு போற.. ? வண்டில இருந்து கீழ தள்ளி விட்டுட்டோமுன்னு இரக்கப்பட்டா..? ” , என்று வினவினாள்.

 

பதில் ஏதும் கூறாமல் சிரித்தான் ரமேஷ்.

 

“சப்பாத்தி சொல்லவா..? ” , என்று ரமேஷ் வினவ சரி என்று தலை அசைத்தாள் திவ்யா.

 

காலையிலிருந்து நடந்த களேபரத்தில் இருவருக்கும் பசி வந்திருந்தது.

 

“உனக்கும்  விக்ரம் சார்க்கும் எதாவது  பிரச்சனையா..?” , என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ரமேஷ்.

 

“நான் ஏன் விக்ரம் கிட்ட  பிரச்சனை பண்ணனும்….” , என்று எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டாள் திவ்யா.

 

அவள் பார்வை தன்னை தவிர்ப்பதை வைத்து,  திவ்யா தன்னிடம் எதோ மறைப்பதை உணர்ந்து கொண்டான் ரமேஷ்.

 

“இவளிடம் , இனி கேட்டு எந்த பயனும் இல்லையென்று உணர்ந்து ” , அமைதியாக உண்ண  ஆரம்பித்தான் ரமேஷ்.

 

திவ்யாவும் அமைதியாக உண்ண, இந்த அமைதி நல்லதில்லை என்று யோசித்தவனாக ” ரொம்ப வலிக்குதா?  எப்படி இருக்கு ?” , என்று வினவினான் ரமேஷ்…

 

“நாட் பேட்” , என்று திவ்யா கூறும் பொழுதே..,  விக்ரமிடம் ” நாட் பேட் ” , என்று கூறியது நினைவு வந்தது.

 

அந்த நினைவை தொடர்ந்து.., “ஆள் நல்லா தான் இருக்கான் செயல் தான் சரி  இல்லை ” , என்று யோசித்தாள் திவ்யா.

 

அவள் முகத்தின் முன் சொடக்கு போட்டு அழைத்தான் ரமேஷ்.

 

நொடியில் அதிர்ந்து, ரமேஷை நோக்கினாள் திவ்யா..

 

“என்ன ஆச்சு?” என்று ரமேஷ் வினவ, “வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கணும் ..”  , என்று கூறினாள் திவ்யா.

 

இருவரும் வீட்டுக்கு பைக்கில்  சென்றனர். இப்பொழுது மழை நின்று சூரிய பகவான் வேலையை  காட்ட தொடங்கி இருந்தார்.  ரமேஷ் மிகவும் நிதானமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்

திவ்யா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

இவர்களின் திடீர் வருகை , அனைவருக்கும் கேள்வியை எழுப்ப , திவ்யாவின் தலையில் உள்ள கட்டு அவர்களுக்கு பதில் அளித்தது.

 

அனைவரும் கேள்வி மேல் கேள்வி எழுப்ப, இருவரும் ஒருவாறு பதில் சொல்லி சமாளித்தனர்.

 

திவ்யாவின் தாயோ.., ” ஏற்கனவே உன் தலையில் ஓர் பெரிய தழும்பு இருக்கும் .. இது ரெண்டாவதா? “, என்று புலம்பினார்.

 

அம்மா , ‘இப்ப அடி பட்டது உனக்கு கவலை இல்லை.. என் தலையில் உள்ள தழும்பு தான் உன் பிரச்சனையா..? ” , என்று தாயிடம் சண்டைக்கு போனாள் திவ்யா.

 

“அத்தை, அவளுக்கு தான் அவ தழும்பை பத்தி பேசுனா  பிடிக்காதுன்னு தெரியும்ல? ஏன் அத்தை அவளை கோபப்படுத்தறீங்க..? “, என்று அவர்கள் சண்டைக்கு முற்று புள்ளி வைத்தான் ரமேஷ்.

 

“திவ்யா ரெஸ்ட் எடு.. அப்புறம் சண்டை போட்டுக்கலாம் “, என்று கூறிவிட்டு அலுவலகத்திற்கு செல்ல தயாரானான் ரமேஷ்.

 

“ரமேஷ், எதாவது சாப்பிடறியா? “, என்று அவன் தாய் கேட்க.. “இல்ல அம்மா , இப்ப தா சாப்பிட்டுட்டு வந்தோம்’, என்று கூறிவிட்டு கிளம்பினான் ரமேஷ்.

 

அவன் பின்னோடு ஓடி வந்த திவ்யா,  “லேட்டா போன விக்ரம் சார் திட்டுவாரோ? ” என்று போலி பவ்யத்துடன் கேட்டாள்.

 

அவளை திரும்பி நிதானமாக பார்த்தான் ரமேஷ்.

 

இந்த கேள்விக்கு என்ன பதில் வேண்டும் என்பது போல் இருந்தது அவன் பார்வை.

 

அவன் பதில் ஏதும் பேசவில்லை.

 

திவ்யா மேலும் தொடர்ந்தாள். “சார்னு கூப்பிடறது வாய் வார்த்தை மாதிரி தான் தெரியுது.. செயல் அப்படி தெரியலியே.. இஷ்டபடி நடந்துக்கற?.. ஆஃபீசிலே All in All அழகுராஜா நீ மாதிரி தான் தெரியுது.. அவர் செய்ற எல்லா வேலைலயும் உனக்கும் பங்கு  இருக்குமோ..? ” , என்று இத்தனை நேரம் கட்டி காத்த அமைதியை உடைத்தாள்  திவ்யா.

 

“அப்படி இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோசம் ..”, என்று கூறினான் ரமேஷ்.

 

அவனை முறைத்துப் பார்த்தாள் திவ்யா.

 

“பை.. “, என்று கூறிக் கொண்டு கிளம்பினான் ரமேஷ்.

 

திவ்யாவின் எண்ணங்கள் வேகமாக ஓடியது. அவளுக்கு தெரிந்தாக வேண்டும். “ஏன் அந்த வயதான பெண்மணி விக்ரமை திட்டினாள்..? , விக்ரம் அன்று அதற்காக வருத்தப்பட்டது நிஜம். ஆனால், இன்று சற்று தடுமாறினான்.., கொஞ்சம் கோபப்பட்டான்.., ஆனாலும் நிதானமாக பேசினான்..”

“என்ன செய்வது..? என்ன செய்வது..? “, இந்த கேள்வி அவள் மண்டையை குடைந்தது… தலை விண் விண் னென்று வலித்தது.

 

“திவ்யா, என்ன யோசனை..? “, என்று வினவினார் ஷண்முகம் .

 

“திவ்யா, தேவை இல்லாத பிரச்னையை யோசிச்சி  தல வலியை  இழுத்துக்காத ” , என்று அறிவுரை கூறினார் திவ்யாவின் தாய்.

 

திவ்யாவுக்கோ தாய் சொல்வது சரி என்று தோன்றியது.

சரியென்று தலை அசைத்து தன் அறைக்கு சென்று படுத்தாள்.

“என் கேள்விக்கு ரமேஷும் பதில் சொல்லப் போவதில்லை. விக்ரமும் பதில் சொல்லப் போவதில்லை…  இனி இந்த பிரச்சனையில் நான் நுழைய கூடாது…” , என்று திவ்யாவின் அறிவோ முடிவு எடுக்க , மனமோ இதை எப்படி கண்டுபிடிக்கிறேன் பார் என்று ஓலமிட்டது.

” யோசனையைத்  திருப்பும் விதமாக பாவம் இன்று அந்த சின்ன பையனுக்கும் அடி பட்டதே ”  ,  என்று யோசித்தாள் திவ்யா.

திவ்யாவால்  பாண்டியை பார்க்க முடியாது.. எங்கு சென்று தேடுவாள்.?

நம்மால் பாண்டியை பார்க்க முடியுமே…

 

பாண்டி மத்திய உணவு வேளையில் இருந்தான்.

 

“ஏண்டா பாண்டி  , இன்னும் வலிக்கா…. “, என்று வினவினாள் தீபா..

 

“இல்லை” என்று  தலை அசைத்தவாறே சாப்பிட்டு கொண்டிருந்தான்.

 

மழை பெய்த காரணத்தினால், பல இடங்கள் சேறாக இருந்தது.  அவர்கள் ஒரு படி கட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

 

“அக்கா, நேத்து நீ எதுக்கு காசு கேட்ட?”, என்று வினவினான் பாண்டி.

 

“அந்த டீக்கடையில் , ஒரு வாட்டர் பாட்டில் வாங்கத்தான்” , என்று தன்னுடைய சாப்பாடு பாத்திரத்தை மூடிய படியே கூறினாள் தீபா.

 

சிரித்தான் பாண்டி.

 

‘ஏன்டா சிரிக்குற..?” , என்று கோபமாக கேட்டாள் தீபா.

 

“நடக்கிற காரியமானு சிரித்தேன் “, என்று  சாப்பிட்ட விரல்களை வாயில் வைத்த படியே கூறினான் பாண்டி.

 

“நீ மட்டும் நினச்சபடி கார்ல போவ.. என் ஆசைக்கு ஒரு வாட்டர் பாட்டில் கிடைக்காதா?” , என்று தன் கழுத்தை நொடித்துக் கொண்டாள் தீபா.

 

“கார் கூட கிடைச்சிருச்சு அக்கா .. உனக்கு வாட்டர் பாட்டில் கிடைக்குமான்னு பாப்போம்.. “, என்று நக்கலாக கூறிய பாண்டி அவனறியாமல் தீபாவின் எண்ணங்களுக்கு சவால் விட்டுக்  கொண்டிருந்தான்.

 

“நேரமாச்சு , வா கிளாஸ்ஸிக்கு போலாம் “, என்று கூறிக் கொண்டு கிளம்பினாள் தீபா. அவள் பின்னே நடந்து சென்றான் பாண்டி.

 

இனி நமக்கு அங்கு வேலை இல்லை.

 

நாம் பள்ளியிலிருந்து வெளியே வந்தால், அங்கு சிலர் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுகிறது.

“இந்த சின்ன மழைக்கே ரோடு இப்படி ஆகிருச்சு.. இன்னும் பெரிய மழை வரும்னு சொல்றாங்க… எப்படி தான் சென்னை தாங்குமோ..?” , என்று சிலர் புலம்புவது நம் காதில் விழுகிறது.

 

அங்கு வாட்டர் மணி  யாரோடோ பேசிக் கொண்டு செல்கிறான்.

 

அவனை தொடர்வோம்.., ஆஹா வாட்டர் மணி விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிக்குள் செல்கிறான்.

 

அங்கு ரமேஷ் மொபைலில் பேசிக் கொண்டிருக்க, வாட்டர் மணி ரமேஷுக்கு வணக்கம் கூறிவிட்டு உள்ளே செல்கிறான்.

விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி தண்ணி பொறுப்பும் வாட்டர் மணி தான் போலும்!!!

 

” பாக்கியம் அக்கா.. இங்க என்னா பண்ற?” , என்று அவளை இங்கு பார்த்த ஆச்சர்யத்தில் கேட்டான் வாட்டர் மணி.

 

“வேலைக்கு வந்தேன்.. வுட்டுக்கும் பக்கம்.. கை செலவுக்கும் ஆச்சு..” , என்று புன்னகைத்த படியே கூறினாள் பாக்கியம்.

 

“சரி சரி… பொழப்ப பாரு.. ” , என்று கூறிக் கொண்டு சென்றான் வாட்டர் மணி.

 

அவர்களை கடந்து உள்ளே சென்றான் ரமேஷ். அவன்  வேகமாக நடந்து , நேராக விக்ரமின் அறைக்குள் சென்றான் .

 

“சார்”, என்று அவன் அழைக்க அவனைப் பார்த்த விக்ரம், “எதுவும் பேசணுமா?”, என்று வினவினான்.

 

“ஆம் ” , என்ற தல அசைப்போடு அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

 

“பிஸினா அப்பறம் வரேன் ” , என்று கூறினான் ரமேஷ்.

 

தன்  லேப்டாப்பை  மூடி வைத்த படியே, “இல்லை ரமேஷ்.. யூ புரோஸிட் …”, என்று கூறினான் விக்ரம்.

 

“திவ்யா எதாவது தப்பா பேசிருந்தா , சாரி “, என்று தன் பேச்சுக்கு இடைவெளி கொடுத்தான் ரமேஷ்.

 

“நோ போர்மாலிட்டில்ஸ் …  என்னை சார்னு கூப்பிடாதனு சொல்லிருக்கேன்.. நீ எதாவது கேக்கிறியா..?” , என்று சற்று அழுத்தமாகவே கேட்டான் விக்ரம்.

 

ரமேஷிடம் இருந்து ஒரு புன்னகையை தவிர வேறு பதிலில்லை..

 

எந்த பதிலும் வராது என்றறிந்த விக்ரம், “திவ்யா எதுவும் சொன்னாங்களா?” , என்று கேட்டான்.

 

“இல்லை ” , என்று ரமேஷ் தலை அசைக்க.

 

“அப்புறம் என்ன திடீருனு ? ” , என்று வினவினான் விக்ரம்.

 

ரமேஷ் அமைதியாக இருக்க, “ஒரு சின்ன வாக்குவாதம்.. சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் … அவங்க நம்மள தப்பா  நினைக்கிறாங்க.. ரிப்போர்ட்டர் இல்லையா.. அது தான் எல்லா கோணங்களிலும் யோசிக்கிறாங்க..” , என்று புன்னகையோடு கூறினான் விக்ரம்.

 

“நான் நடந்ததை சொல்லி புரிய வைக்கட்டுமா? ” , என்று வினவினான் ரமேஷ்.

 

“வேண்டாம் “, என்று தலை அசைத்து மறுத்து விட்டான் விக்ரம்.

 

ரமேஷ் எதோ பேசத்  தொடங்க.. “ரிப்போர்ட்டர் மேடம் அவங்களாகவே தெரிஞ்சிக்கட்டும் ” , என்று கூறினான் விக்ரம்.

 

“ஒகே” , என்ற தலை அசைப்போடு ரமேஷ் தன் பணியை தொடர

சென்றான்.

விக்ரமும் , ரமேஷும் விளையாட்டாக   சொல்லாமல் விட்ட செயலால் திவ்யா மாட்டிக் கொள்ளப் போகும் சூழல் என்ன?

 

தொடரும் …….

 

Comments Here


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!