Akila Kannan’s Thaagam 14

 

தாகம் – 14

 

    கும்மென்ற இருட்டு சூழ்ந்திருந்தது….

மணி பத்து என்பதால், டிராபிக் குறைந்திருந்தது.. 

 

ரமேஷ் விக்ரமிற்கு மொபைலில் அழைத்தான்

 

” விக்ரம் , திவ்யா இன்னும் வீட்டிற்கு வரலை. நேரமாகும்னா  வழக்கமா, எனக்கு கால் பண்ணிருவா…  இன்னக்கி எனக்கும் கால்  பண்ணலை . மொபைல் சுவிட்ச் ஆப்னு வருது.. ” , என்று ரமேஷ் பதட்டமாக கூறினான்.

 

“திவ்யாவின் மேல் இருந்த கோபமெல்லாம் மறைந்து விக்ரமிற்கு அவள் எங்கு  சென்றிருப்பாள்”, என்ற சிந்தனை மேலோங்கியது.

 

காரை ஓட்டிய படியே விக்ரம் ப்ளூடூத் வழியாக  பேசினான்.

 

“ரமேஷ் இப்ப எங்க இருக்க..? ” , என்று விக்ரம் கேட்க , ” திவ்யா ஆபீஸ்ல இருக்கேன்…” , என்று பதட்டமாக பதில் அளித்தான்.

 

“எவ்வளவு நேரமா திவ்யாவை தேடிகிட்டு இருக்க ? ” , என்று ஸ்டியரிங்கை திருப்பியபடியே வினவினான் விக்ரம்.

 

” எட்டு மணிக்கு , வீட்ல இருந்து போன் பண்ணாங்க..  அவ மொபைல் சுவிட்ச் ஆப்னு வருது… நான் திவ்யா என்கூட தா இருக்கானு பொய் சொல்லிட்டேன்.. இல்லைனா வீட்ல எல்லாரும் பயந்திருவாங்க..  ” , என்று குரலில்  கரகரப்போடு   கூறினான் ரமேஷ்.

 

” நீ நம்ம ஆபீஸ்ல வண்டியை நிறுத்திட்டு எதிர்பக்கம் இருக்கிற டீக்கடைக்கு வா..  நான் அங்க வெயிட் பண்றேன் “, என்று கூறி மொபைல் பேச்சை முடித்தான் விக்ரம்..

 

      ரமேஷின் வண்டி வேகமாக பறந்தது.

விக்ரம் அந்த டீக்கடைக்கு முன் காத்திருந்தான் . டிராபிக் குறைந்திருந்ததால் ரமேஷ் விரைவாக வந்தடைந்தான்.

 

ரமேஷ் பைக்கை நிறுத்தி விட்டு  சாலையை அதிவேகமாக கடந்து வந்தான்.

 

ரமேஷின் நெற்றியில் வியர்வை துளிகள்..  அவன் கை சில்லிட்டிருந்தது.  ரமேஷின் முகத்தில் உள்ள  பதட்டத்தை நம்மால் உணர முடிகிறது

 

” ரமேஷ், அவங்க டீம் மெம்பெர்ஸ் கிட்ட பேசினியா? ” , என்று விக்ரம் அக்கறையோடு வினவினான்.

 

“பேசிட்டேன்..  இன்னக்கி இன்டெர்வியூ  பிளான் பண்ணோம் … அப்புறம் cancel பண்ணிட்டோம் .. வீட்டுக்கு போறேன்னு திவ்யா சொன்னதா சொல்றாங்க..”  , என்று கம்மலான குரலில் கூறினான் ரமேஷ்.

 

“இங்க எதுக்கு வர சொன்ன விக்ரம்..?” , என்று ரமேஷ் வினவினான்.

 

” இன்னக்கி மீட்டிங் போகும் பொழுது, திவ்யா கூவம் நதிக்கரை பகுதிக்குள்ள போறத நான் பார்த்தேன்.. ” , என்று விக்ரம் கூற  திவ்யாவின் வண்டி அங்கு நிற்கிறதா என்று ரமேஷ் நோட்டமிட்டான்..

 

” திவ்யா வண்டி இல்லியே, வேறு எங்கயாவது நிறுத்திருப்பாளோ ? இல்லை  இங்க இருந்து கிளம்பிட்டாளா?  இல்லை வேறு எங்கயாவது போயிருப்பாளோ?….” , என்று ரமேஷ் பதட்டமடைந்தான்.

 

“உள்ள  போய் பாப்போம்… ” , என்று கூறிக்கொண்டே  இருவரும் உள்ளே நுழைய,  யாரும் நம்பும் படியாக இல்லை அந்த பகுதி..

 

அவர்கள் பார்த்த டீக்கடையை ஒட்டிய ஒரு சந்து.. உள்ளே நுழைந்தால் இருட்டு…  சின்ன பாதை..  ஆங்காங்கே சந்து…  சிலர் குடித்து விட்டு ரோட்டில் படுத்து இருந்தனர்..   பக்கத்தில் நாய்களும் படுத்திருந்தது.. இருட்டில் அந்த நாய்களின் கண்கள் மட்டும் பளபளத்தது. 

 

உள்ளே செல்ல செல்ல “ஊவா …” , என்று இருவருக்கும் குமட்டியது..

 

அத்தனை துர்நாற்றம் …

 

“விக்ரம்.. இப்ப இங்க என்னனு தேடறது… ரொம்ப கஷ்டம் போல தெரியுதே.. ” , என்று ரமேஷ் கூற… அங்கு ஒரு சின்ன கடை தெரிந்தது.

 

 அங்கிருந்த வெளிச்சத்தில் , இருவரும் நின்றனர்.. “இங்கேயிருந்து யாரவது வேலைக்கு வந்தா அவங்க கிட்ட பேசலாம்.. ஆனா அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது…….” , என்று சத்தமாக யோசித்தான் விக்ரம்.

 

“அந்த அம்மா பாக்கியம் இங்கேயிருந்து  வராங்க… ” , என்று புது நம்பிக்கையுடன் கூறினான் ரமேஷ்.

 

“அவங்க வீடு..?” , என்று விக்ரம் வினவ…, “நம்ம கம்பனிக்கு வாட்டர் சப்ளை பண்ற வாட்டர் மணிக்கு அந்த அம்மாவை நல்லா தெரியும்… அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதை நான் பார்த்திருக்கேன்..” , என்று கூறிக்கொண்டு வாட்டர் மணிக்கு போன் செய்தான்.

 

போன் ரிங் ஒலித்தது.

 

“யாருடா இது..  இப்ப தான் வேலையெல்லாம் முடிச்சிட்டு  ….  குடிக்கலாமுன்னு பாட்டில் எடுத்தா எவன் இந்த நேரத்துல… “, என்று புலம்பிக் கொண்டே  மொபைலை எடுத்து  பார்த்தான்.

 

“இவர் எதுக்கு இந்த நேரத்துல எனக்கு போன் பண்றாரு…..” , என்று நினைத்து கொண்டே , “சொல்லுங்க சார்” , என்றான் வாட்டர் மணி.

 

“மணி.. நம்ம கம்பனில வேலை பாக்கிற பாக்கியம் வீடு தெரியுமா..? நான் அவங்க இருக்கிற ஏரியால இப்ப இருக்கேன்….   அங்க ஒரு சின்ன கடை இருக்கு… பக்கத்துல  எதுவும் அடையாளம் இருக்குமா ?” , என்று ரமேஷ் தேட..

 

“சார் , நீங்கல்லாம் ஏன் அங்க போனீங்க….? அங்கேயே இருங்க நான் அஞ்சு நிமிசத்துல வரேன்.. ” , என்று கூறியபடியே  சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான் வாட்டர் மணி.

 

இருவரும் தங்கள் கை குட்டையால் ,மூக்கை மூடிக் கொண்டு தான் நின்று கொண்டிருந்தனர். மற்றொரு கையால் கொசுவை அடித்தனர்.

சொன்ன படி ஐந்து நிமிடத்தில்  வந்தான் வாட்டர் மணி.

 

“ஏதும் பிரச்னையா சார்?” , என்று கேட்டுக் கொண்டே பாக்கியம் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

“அக்கா.. அக்கா.. “, என்று வாட்டர் மணி அழைக்க…, இந்த நேரத்தில் யாரென்று பாண்டியை தவிர மற்ற மூவரும் கண் முழித்து வெளியே வந்தனர்.

 

அங்கு தீபாவை பார்த்த விக்ரம், “இந்த பொண்ணு தான்… “, என்று தீபாவை கை காட்டினான் .

 

தூக்க கலக்கத்தில், தீபா திரு திருவென்று முழிக்க.. ” இன்னக்கி உன்கூட ஒரு அக்கா வந்தாங்களே .. அவங்க எப்ப இங்கிருந்து போனாங்க ? ” , என்று விக்ரம் கேட்டான்.

 

 

“திவ்யா அக்காவா? , அவங்க 7:30 மணிக் கெல்லாம் போய்ட்டாங்களே..” , என்று கூறினாள் தீபா.

 

” கரெக்டா தெரியுமா..? “, என்று ரமேஷ் வினவ, ” அதுக்கு அப்பறம் தானே டீக்கடைல சன் டிவி  நாயகி ஓடுச்சு .. எனக்கு சரியா தெரியும் ” என்று தீபா கூறினாள்.

 

“அவங்க எந்த வழியா போனாங்கன்னு காட்ட முடியுமா..? ” , என்று விக்ரம் வினவ , தீபா பாக்கியத்தை பார்த்தாள்.

 

” தீபா கிளம்பு.. நானும் வரேன் ” , என்று பாக்கியம் கூறிக் கொண்டே தீபாவோடு கிளம்பினார்.

 

தீபா முன்னே செல்ல, விக்ரம் , ரமேஷ், வாட்டர் மணி பாக்கியம் அனைவரும் தீபாவை பின் தொடர்ந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில், இரு இளைஞர்கள் போதையில் உளறிக் கொண்டிருந்தனர்.

 

” இன்னக்கி அந்த பிகரு டக்கருல? ”  , என்று ஒருவன் கூற,

” எந்த பிகர் சொல்ற..?” , என்று மற்றொருவன் கேட்டான்.

“அது தான் பேட்டி எடுத்துச்சே அந்த பொண்ணு தான்.. “, என்று கூறினான்..

 

இந்த பேச்சு விக்ரம் காதில் விழ, அவன் ரமேஷின் கைகளை பிடித்து நிறுத்தினான்.

 

அவர்களுக்கு போதையிலும், இருட்டிலும் வேறு எதுவும் தெரியவில்லை.

 

“நீ பொண்ண மட்டும் தா பார்த்தியா? இதோ பாரு.. அவ கைலயிருந்த பைல பிளேடு போட்டேன்ல …   இதோ பாரு காசு அவ மொபைல் …. எப்புடி…..? வித்தா எவ்வளவு தேரும்… ?” , என்று பெருமை பேச.., அவன் கன்னத்தில் பளார் என அறைந்து மொபைலை பிடுங்கினான் விக்ரம்.

 

இருவரும் போதையில் தள்ளாடியபடி சண்டைக்கு வர.., வாட்டர் மணி உள்ளே புகுந்து அவர்களை அடக்கினான்..

 

வெளியே வந்த தீபா , ” இந்த வழியாக வந்து வண்டியை எடுத்துக்கிட்டு போனாங்க” , என்று கூறினாள்.

 

அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு இருவரும் அம்மன் கோவில் பக்கத்தில் நிறுத்தி இருந்த கார் அருகே வந்தனர்..

 

“திவ்யா இங்க இருந்து பத்திரமா தான் கிளம்பிருக்கா.. ” , என்று விக்ரம் கூறினான்.

 

“இப்ப எங்க போயிருப்பா?  போனில் எதாவது விஷயம் கிடைக்குமா? ” , என்று மொபைலை ஆன் செய்தனர்.

 

மொபைல் ஆன் ஆகும் நேரத்தில் , விக்ரம் ரமேஷிடம், “நீ முன்னாடியே எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாம்ல ?” , என்று கோபமாக கேட்டான்.

 

“வீட்டுக்கு தான் போயிருப்பா.. அவ போற வழில போய் நானே கண்டுபிடிச்சிரலாமுன்னு நெனைச்சேன்…. முடியல என்ன பண்ணலாமுன்னு தான் உனக்கு போன் பண்ணேன்.. அவளை நீ இன்னக்கி பாத்திருப்பனு எனக்கு ஜோசியமா தெரியும் ” , என்று பரிதாபமாக கூறினான் ரமேஷ்.

 

மொபைல் ஆன் ஆனதும் , வீட்டில் இருந்து கால் வந்தது..

 

” உன் கூட தான் இருக்கா ஆபீஸ்ல வேலையா இருக்கேன்.. நானே கூட்டிட்டு வந்திறேன்னு சொல்லு” , என்று விக்ரம் கூற அதை அப்படியே ரமேஷ் கூறினான்.

 

 

“மொபைல் தான்  கிடைச்சிருக்கு. திவ்யா எங்கன்னு தெரியலியே.. ” , என்று ரமேஷ் புலம்ப.., “ரமேஷ், திவ்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை…   இருக்காதுனு  தான் தோணுது..  இங்க இருந்து திவ்யா ஏன்  வீட்டுக்கு போகல..? ” , என்று விக்ரம் பலமாக யோசித்தான்.

 

” அவ ஆஃபீஸ்க்கும் போகல…. ” , என்று கூறினான் ரமேஷ் அமைதியாக..

 

“சம்திங் இஸ் ராங் .. அவ மொபைலை பாரு ரமேஷ்… “, என்று விக்ரம் கூற அவளுடைய மொபைலை ரமேஷ் பார்க்கும் பொழுது அதில் சில விடியோக்கள் இருந்தன.

 

ஒரு வயது முதிர்ந்த பெண்மணி, தண்ணீர் கஷ்டத்தை பற்றி கூறி இருந்தார்.  ஒரு குடம் மூன்று ரூபாய் முதல்  குளிக்கும் தண்ணீர் இருபது ரூபாய் என்பது வரை. 

                           தண்ணீர் , கழிவு நீர் ,  துர்நாற்றம் , கொசு,, கழிப்பறை இப்படி பல பிரச்சனைகளை பற்றி பேச ,  அந்த விடீயோக்களை பார்க்கும் பொறுமை ரமேஷ், விக்ரம் இருவருக்கும் இல்லை.

 

“கேமரா கூட இல்லாம இப்படி மொபைல தான் ரெகார்ட் பண்ணுவாங்களா?

 

பதில் தெரியாமல் ரமேஷ் யோசிக்க, அப்பொழுது தான் அந்த மூதாட்டியின் முகம் வீடியோவில் தெரிந்தது.

 

விக்ரமின் கவனம் வீடியோவின் மீது திரும்பியது.

 

திவ்யாவின் குரல் மட்டும் தான் கேட்டது. பாட்டியின் முகம் இவர்களுக்கு வீடியோவில் தெரிந்தது.

 

 திவ்யா வீடியோவை  ரெகார்ட் செய்த படியே கேள்விகளை கேட்டிருப்பாள் போலும்..!!!

 

அவர்கள் கேட்ட உரையாடலும் பார்த்த முக பாவனைகளும்  இதோ:

 

திவ்யா:  பாட்டி… அன்னைக்கி ரோட்ல நின்னு யாரையோ திட்டினீங்களே..? அவரை ஏன் திட்டுனீங்க ?  ( ஆர்வமாக கேட்டாள்)

 

 

மூதாட்டி : ஏன் ? இதெல்லாம் தெரிஞ்சி நீ என்ன பண்ண போற…?  (கோபமாக கேட்டார்.

 

திவ்யா : நாங்க உங்களுக்கு எதாவது உதவி பண்ணுவோம். (தன்மையாக பேசினாள்)

 

மூதாட்டி :  என்னமா? பத்திரிகை நிருபரா?.. நீ எந்த கேள்வியும் கேட்க வேண்டாம்.. நாங்களும் எதுவும் சொல்லல.. என்ன பிரச்சனை ? என்ன ஏதுன்னு கேட்ப..!!!    எங்க போட்டோவும் பத்திரிக்கைல வரும்.. நாங்களும் எதாவது நல்லது நடக்குமுன்னு காத்திருப்போம்.  பதினஞ்சு வருஷம் மேல காத்திருக்கோம் .. திரும்ப வரேன்னு சொன்ன பத்திரிக்கை நிருபர் இன்னக்கி  வரைக்கும் வரவேயில்லை..  ( சலிப்பாக கூறினார்)

 

திவ்யா : யாருமா அவரு..? அவர் பேரு….. எதாவது தெரியுமா..? ( ஆர்வமாக கேட்டாள்)

 

மூதாட்டி :  அதெல்லாம் தெரியாது .. ஒரேயொரு போட்டோ இருக்கு.

 

 சிறிது நேரம் கழித்து ஒரு பழைய பெட்டியோடு வந்தார்… அதில் இருந்த புகைப்படத்தை காட்டினார்..  அது ஒரு செய்திதாள்.

 

 இது  தான் அந்த புகைப்படம். நாங்க  அதுக்கு முன்னாடி போட்டோல்லாம் எடுத்துகிட்டதே இல்லை.. அப்புறமும் எடுக்கல..

 

எங்களோட போட்டோ இருக்குனு பத்திரமா வச்சிருக்கேன்.

 

திவ்யாவின் முகபாவனை வீடியோவில் தெரியவில்லை. ஆனால் ரமேஷின் முகம் மாறியது.

 

“ரமேஷ் என்ன ஆச்சு?” , என்று விக்ரம் வினவ, “அந்த போட்டோ இருக்கிற செய்தித்தாளை ஸ்கேன் பண்ணிருக்காளானு பாக்கறேன்”,  என்று கூறிக் கொண்டே மொபைலை நோண்டினான்.

 

“விக்ரம் இதை தேடி தான் அவ போயிருக்கணும். நாமும் அங்கே போவோம்” , என்று அந்த போட்டோவை பார்த்துக் கொண்டே பேசினான்.

 

அந்த புகைப்படத்தை வாங்கி விக்ரமும் பார்த்தான். ”  இதில் இவர்களுக்கு என்ன தெரிகிறது ” , என்று யோசித்தான்.

 

“அந்த போட்டோல அப்படி என்ன இருக்கு ? எனக்கு ஒண்ணுமே புரியலையே..? ” , என்று கார் ஓட்டிய படியே விக்ரம் கேட்க., “அந்த போட்டோல  நிருபர் “புஷ்பா ” கிற பெயர் போட்டிருக்கு.

 

 திவ்யாவோட அம்மா பெயர் புஷ்பா. அவங்க அப்பா புஷ்பாங்கிற பேருல தான் பத்திரிக்கைல எழுதிக்கிட்டு இருந்தாங்க. மாமா ஒரு விபத்துல இறந்துட்டாங்க … 

இன்னக்கி அந்த பாட்டி இப்படி சொல்லவும் நேர அங்க எதாவது விஷயம் கிடைக்குதான்னு பார்க்க போயிருப்பா….” , என்று மூச்சு விடாமல் பேசினான் ரமேஷ்.

 

” சமூக சேவை பண்ணனும், எதாவது கண்டுபிடிக்கனுமுனு தான்  ரிப்போர்ட்டர் வேலையில் ஜாயின் பண்ணாங்களோ?” , என்று விக்ரம் வினவ,

” அவளுக்கு  மனசுல  மதர் தெரசா , ஜேம்ஸ் பாண்டுனு நினைப்பு” , என்று தன் பற்களை கடித்தான் ரமேஷ் .

 

அவர்கள் இருவரும் செய்தித்தாளில் குறிப்பிட்டிருந்த  பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்றனர்.

 

அங்கு வாசலில் அந்த  நிறுவனத்தின் வாட்ச்மேனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்  திவ்யா.

 

“திவ்யா இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” , என்ற குரல் கேட்டு திவ்யா திரும்பினாள்.

அங்கு ரமேஷ் நின்று கொண்டிருக்க ,” நீ ஏன் இங்க வந்த ? எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியாதா? ” , என்று வினவினாள்.

 

“மணி என்ன தெரியுமா ? ” , என்று ரமேஷ் வினவ , தன் பையில் மொபைலை தேடினாள் திவ்யா.

 

” எங்க தேடுற.. ? எங்கயாவது தொலைச்சிட்டு உன் பைல தேடினா கிடைக்குமா? “, என்று கோபமாக கேட்டான் ரமேஷ்.

 

அவன் கையிலிருந்து மொபைலை வாங்கினாள் திவ்யா.

 

“வீட்ல எல்லாரும் தேடிக்கிட்டு இருக்காங்க வா போகலாம்…” , என்று ரமேஷ் கூற..

 

அந்த நைட் டூட்டி வாட்ச்மேனோ , “ ஓரமாய் நின்னு பேசுங்க” , என்று கூறினான்..

 

ரமேஷ் திவ்யாவை விக்ரமின் கார் அருகே அழைத்து வர..,

 

கார் அருகே நின்ற விக்ரமை பார்த்த திவ்யா, ” சார் இங்க என்ன பண்ராங்க?”.

 

“நீ  போற இடம்  யாரவது சொல்லி தான் எனக்கு தெரியுது “, என்று கடுப்பாக கூறினான் ரமேஷ்.

 

“ஓ…. சார் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமா?” , என்று வினவினாள் திவ்யா.

 

விக்ரம் , ரமேஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“சார் செய்ற வேலையெல்லாம் கண்டுபுடிச்சிருவேன்னு அவருக்கு பயம்.  அவர் செய்ற எல்லா வேலையிலயும் நீயும் கூட்டா? ” , என்று திவ்யா கேட்க ,  தன் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக பேசினான் ரமேஷ் “நேரமாச்சு வீட்டுக்கு போகலாம் ” .

 

“ரமேஷ் , உனக்கு அவரை பத்தி தெரியல..  ஹி இஸ் எ கிரிமினல் “, என்று அவள் கூற, அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் ரமேஷ்.

 

விக்ரம் ரமேஷை ஸ்தம்பித்து பார்க்க, திவ்யா விக்ரமை கோபமாக பார்த்தாள்.

 

                               தாகம் தொடரும்…….