Naan aval illai 18

Naan aval illai 18

விஸ்வரூபம்
வேந்தன் தன் வருங்கால மனைவி லாவண்யாவிடம் ரகசியம் பேசியபடியே, அவள் வீட்டின் வாயிலுக்கு வெளியே நடந்துவந்து கொண்டிருந்தான்.
பின்னோடு அவன் வருங்கால மாமியார் கூர்மையாக அவர்களையே பார்த்து கொண்டிருந்தார். 
திருமணத்தை நெருக்கத்தில் வைத்து கொண்டு அவர்கள் இப்படி தனியாக வெளியே செல்வதில் அவருக்கு துளியும் விருப்பம் இல்லையென்பது அவர்கள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
ஆனால் என்ன செய்ய முடியும். வேந்தன் பிடிவாதமாய் நிற்க, அவன் வீட்டிலும் அனுப்பி வைக்க சொல்லி போஃன் !
பெரியவர்களால் நிச்சியக்கப்பட்டாலும் சரி. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி. மாப்பிள்ளை வீட்டாரின் கை ஓங்கியிருப்பதுதானே வழக்கம்.
ஆதலால் ஒரு எல்லைக்கு மேல் அவரால் மறுக்க முடியவில்லை. 
மனதில் பதட்டத்தை தேக்கிக் கொண்டு  சிரமப்பட்டு புன்னகையித்து வழியனுப்பினார். 
இது இன்றைய காலகட்டத்தில் இயல்புதான் என்றாலும் பல குடும்பங்கள் இன்னும் அத்தகைய எல்லை கோடுகளை தாண்ட யோசித்து கொண்டிருந்தனர்.
கிட்டதட்ட வேந்தன் வீட்டிலும் அப்படிதான். 
முழுதாக அவன் கேட்டதை நிறைவேற்றாமல் கூடவே பாதுகாவலனாய் எழிலின் பெரிய மகன் புகழை துணைக்கு அனுப்பிவிட்டிருந்தனர். 
ஆதலால் வேந்தனுக்கு உள்ளுக்குள் குமைந்தது. எரிச்சலோடு வந்தவன் அதை லாவண்யாவிடம் காட்டினான். 
“உன்னை ஒரு ஷாப்பிங் கூட்டிட்டு போக நான் எல்லார் காலில் விழனுமா?” என்று அலுத்துக் கொண்டு கேட்டான். 
அவனின் அதிகாரமான வார்த்தைகள் அவளை காயப்படுத்தினாலும் அதனை காட்டிக்  கொள்ளாமல் “கல்யாண நெருக்கத்தில ஷாப்பிங் போனோன்னு சொன்னா யார்தான் அனுப்புவாங்க… அதுவும் இல்லாம… உங்களுக்கு டிரஸ் எடுக்க போறதுக்கு நான் எதுக்கு?” என்று அமர்த்தலாகவே கேட்டாள்.
வேந்தன் அவளை கூர்மையாய் பார்த்தபடி “மேடம்தானே உங்க லெகங்கா கலர்லயே நான் குர்தா போடனும்னு ஆர்டர் போட்டீங்க? அப்ப நீங்கதானே செலக்ட் பண்ணனும்…” என்று பழியை அவள் புறமே திருப்பிவிட்டான். அவன் சொன்னதை கேட்டு அவள் புன்னகையிக்க,
அவனும் சிரித்தபடியே காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
அப்போது பக்கத்து இருக்கையில் அவனின் தங்கை மகன் புகழ் ஏற வரவும் 
“டே புகழ்… .மாமி முன்னாடி உட்கார்ந்துக்கட்டுன் டா… நீ பின்னாடி உட்கார்ந்துக்கோ”  என்று வேந்தன் உரைக்க
“உம்ஹும்.. நான் முன்னாடிதான் உட்காருவேன்… வேண்ணா மாமி பின்னாடி உட்கார்ந்துக்கட்டும்” என்றதும் வேந்தனுக்கு கோபம் பொங்கி கொண்டு வர மனதிற்குள் ‘பிள்ளையை வளர்த்து வைச்சிருக்கா பாரு ‘ என்று தங்கையை கடிந்து கொண்டான். 
புகழ் பிடிவாதமாய் ஏற வர வேந்தன் உடனே “சரி… நீ மாமா போஃனை வைச்சுக்கோ… ஆனா பின்னாடிதான் உட்கார்ந்துட்டு வரனும்” என்றான்.
அவன் குதுகலமாய் அவன் பேசியை தாவி வாங்கிக் கொண்டவன் “ஒகே” என்று சம்மதித்துவிட்டு லாவண்யாவுக்கு வழிவிட்டு பின்னாடி போக அவள் உள்ளே வந்து அமர்ந்தாள்.
புகழ் பின்கதவை திறக்க பிராய்த்தனப்பட,
அந்த சந்தர்ப்பத்தில் லாவண்யாவை தன் அருகில் இழுத்து அவள் உதட்டில் அவசரம் முத்தம் ஒன்றை வழங்க, அதனை எதிர்பாராதவள் முகம் வெட்கத்தில் சிவிந்தது.
அவனை ஏறிட்டு பார்க்காமல் அவள் திரும்பிக் கொள்ள, அவளை பார்த்து கள்ளத்தனமாய் புன்னகையித்தவன் “ஏறிட்டியா புகழ் ? போலாமா” என்று கேட்க “ஹ்ம்ம்… ஒகே மாமா” என்று கைப்பேசியில் விளையாடியபடியே உரைத்தான். 
கார் புறப்பட வேந்தன் லாவண்யாவை பார்வையாலயே சீண்டி நாணப்படச் செய்து கொண்டு வந்தான்.
அதோடு அவள் கரத்தை வேறு இறுக்கமாய் பற்றி கொள்ள
லாவண்யா அவஸ்த்தையோடு “விடுங்க? புகழ் இருக்கான் பின்னாட” என்று மெல்லிய குரலில் எச்சரித்தாள்.
“அவன் இருக்கிறதினாலதான் நான் இந்தளவுக்கு கன்டிரோலா வந்துட்டிருக்கேன்” என்று சொல்லி அவன் பார்த்த பார்வையில் அவள் உடலெல்லாம் அவளை அறியாமல் சிலிர்த்து கொண்டது.
கார் தியாகராய நகருக்குள் நுழைய, இயல்பாகவே கூட்ட நெரிசலுடைய சாலை. ஆனால் இன்று கட்டுக்கடங்காத நெரிசலுக்குள் சிக்கித் தவித்து கொண்டிருந்தது. 
வண்டிகள் நகராமல் அப்படியே தேங்கி நின்றுக் கொண்டிருந்தது.
அதோடு வாகனத்தில் செல்பவர்களை விட நடந்து செல்பவர்களின் கூட்டம்  அதீதமாய் இருந்தது.
முன்னாடி நின்றிருந்த வாகனம் எதுவும் ஒரு இஞ்ச் கூட நகராமல் நின்றுக் கொண்டிருக்க வேந்தன் இதை எதிர்பார்க்கவில்லை.
லாவண்யாவுக்கும் அந்த வாகன நெரிசல்களை பார்த்து கலக்கம் தொற்றிக் கொண்டது.
  முன்னுக்கும் செல்ல முடியாமல் பின்னுக்கும் செல்ல முடியாமல் அவர்கள் மாட்டிக் கொண்டிருக்க,.எத்தனை நேரம் ஒரே இடத்தில் நகராமல் நின்றிருப்பது.
வேந்தனுக்கு எரிச்சல் மூண்டது.
“சே… இன்னைக்கு ஏன் இவ்வளவு டிராஃபிக் ?” என்று அலுத்தான்.
அதன் பிறகு சில நிமடங்கள் கழிய, மெல்ல மெல்ல வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.
அப்போதுதான் லாவண்யா எதையோ கவனித்தவள் வேந்தனிடம் “இன்னைக்கு ஆக்டர் ராகவ் ஏதோ ஜ்வலிரி ஷாப் திறக்க வர்றாருன்னு விளம்பரம் போட்டாங்களே… நான் மறந்தே போயிட்டேன்… அதான் இவ்வளவு டிராஃபிக் போல” என்றாள்.
“ஓ” என்று வேந்தன் அவள் சொன்னதை கேட்டு சிந்தனையில் ஆழ்ந்து வேறுபுறமாக போய்விடலாமா என யோசித்தான்.
அத்தனை நேரம் கைப்பேசிக்குள் மூழ்கியிருந்த புகழ் இதனை கேட்டு 
“ஹய்… ராகவ்? சூப்பர்… போலாம் மாமா… அவரை போய் பார்க்கலாமா மாமா ?!” என்று ஆர்வமானான்.
வேந்தன் எரிச்சலோடு  “இங்க அவன் அவனுக்கு டிராஃபிக்ல கண்ணுமுழி பிதுங்குது… வந்த வேலையே நடக்குமான்னு தெரியல… இதுல ராகவை வேற பார்க்கனுமா… வாயை மூடிட்டு வாடா” என்றான்.
“உம்ஹும்… அதெல்லாம் முடியாது… எனக்கு ராகவை பார்க்கனும்” என்க,
வேந்தன் கடுப்பாகி “டே அவன் என்ன நமக்கு மாமனா மச்சனா… நீ பார்க்கனும்னதும் கூட்டிட்டு போய் காட்ட” என்று சொல்லியபடி அந்த நகைகடை வழியே போகாமல் இருக்க வேறு வழிகள்  இருக்கிறதா என ஆராய்ந்தான்.
ஆனால் அதற்கான சாத்தியகூறுகளே இல்லை. அந்த வழியாகவே போக வேண்டும். 
புகழ் ஏக்கமாய் ஜன்னல்கண்ணாடியில் பார்த்தபடி “ப்ளீஸ் மாமா.. .ஒரே ஓரு நிமிஷம் பார்த்துட்டு போயிடலாம்… அவரு எவ்வளவு சூப்பரா டான்ஸாடுவாரு தெரியுமா ?!” என்று கெஞ்சலாய் கேட்க
“டேய் நானும் சூப்பரா டேன்ஸாடுவேன்… வீட்டுக்கு போய் ஆடி காண்பிக்கிறேன்” என்றதும் லாவண்யா குபீரென்று சிரிக்க, புகழ் எரிச்சலானான். 
இப்படியே வேந்தன் வாகனங்களுக்கு இடையில் ஊர்ந்து செல்ல தன்யா ஜுவல்லர்ஸ் அருகாமையில் வந்தது. 
திறப்பு விழாவிற்கு அலங்காரத்தோடு தயார் நிலையில் இருந்த அதிகம்பீரமான நகை மாளிகை. 
அதன் வாசலில் அலங்காரத்தோடு  ராட்சத உயரத்தில் இருந்த ஜென்னிதாவின் படம். 
வேந்தன் அந்த படத்தை பார்த்து வெலவெலத்து போனே அதே சமயம் புகழ் சத்தமாக “மாமா..  சாக்ஷி அக்கா” என்றான்.
அவன் முகமெல்லாம் அந்த நொடியே வியர்த்துவிட, லாவண்யா புரியாமல் “யாரு புகழ்… சாக்ஷி” என்று  அவனிடம் கேட்க
“அவங்க” என்று அவன் ஆரம்பிக்க வேந்தன் கொந்தளிப்போடு “வாய மூடு புகழ்… அது ஒண்ணும் சாக்ஷி இல்ல” என்றான்.
“உம்ஹும் அது சாக்ஷி அக்காதான்… எனக்கு தெரியும்… காலையில அம்மா பாட்டியும் கூட டீவியை பார்த்து சாக்ஷி அக்கான்னு பேசிட்டிருந்தாங்களே ?” என்க, வேந்தனுக்கு பற்றி எரிந்தது. 
கோபமாக “அதெல்லாம் இல்ல புகழ்… அவ வேற யாரோ?!” என்று அழுத்தமாக உரைக்க லாவண்யாவிற்கு அவர்களின் வாக்குவாதம் ஒன்றும் விளங்கவில்லை.
ஆனால் புகழ் பிடிவாதமாக “உம்ஹும்… நீங்க பொய் சொல்றீங்க… அது சாக்ஷி அக்காதான்… சாக்ஷி அக்காதான்… சாக்ஷி அக்காதான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேந்தன் மனதில் கனன்று கொண்டிருந்த கோபத்தையும் எரிச்சலையும் புகழின் புறம் திருப்பினான்.
பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தான்.
லாவண்யா அதிர்ந்து “என்ன இப்படி சின்ன பிள்ளையை போய் அடிச்சிட்டீங்க.. அப்படி என்ன உங்களுக்கு கோபம் ?” என்று அவள் சினத்தோடு கேட்க
“ஆமான்டி கோபம்தான்… இப்ப என்னங்கிற” என்றபடி வெறுப்பை உமிழ்ந்தான். 
லாவண்யா அவனை அதிர்ந்து பார்க்க, வேந்தன் முகம் எரிமலை குழம்பாக கொதிப்படைந்திருந்தது.
அதனை பார்த்தவளுக்கு அச்சம் தொற்றிக் கொண்டது. ஆதலால் மூச்சுவிடும் சத்தம் கூட வெளிவராமல் அமர்ந்திருந்தாள். ஆனால் பின்னோடு புகழின் விசும்பல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
லாவண்யா அவனை சமாதானப்படுத்த முயன்றிருக்க,
நெரிசலில் எல்லா வாகனமும் பொறுமையாய் முன்னேற, எரிச்சலின் உச்சிக்கட்டத்தை தொட்டதிருந்தான் அவன்.  
வேந்தனின் விழிகள் அலங்காரங்களோடு பேரழகியின் ரூபமாய் நின்றிருந்த ஜென்னித்தாவை பார்த்து கொண்டிருந்தது.
எல்லோரின் பார்வையையும் வசீகரிக்கும் அவள் முகம், அவனை மிரட்சியடைய  வைத்திருந்தது.
யாரை அவன் எந்த காரணத்தை  கொண்டும் இப்பிறவியில் தப்பித்தவறி கூட பார்க்கவே விரும்பவில்லையோ,   அவள் விஸ்வரூபம் எடுத்து அவன் கண்முன்னே வந்து நின்றாள்.
அந்த படத்தில் உள்ளவள் அவன் கண்ணுக்கு ஜென்னித்தாவாக காட்சியளிக்கவில்லை. சாக்ஷியாகவே காட்சியளித்தாள். 
இவன் இப்படி அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க பின்னாடி இருந்த கார் ஓட்டுநர் காரை நகர்த்த சொல்லி ஹாரன் அடித்து காதை செவிடாக்க “ஏங்க…ஹாரன் அடிக்கிறாங்க…. வண்டியை எடுங்க… ” என்றபடி அவன் தோளை தொட்டு உலுக்கினாள்.
அவன் க்ளச்சிலிருந்து காலை எடுக்க கார் முன்னோக்கி சென்றது.
அப்போது தன்யா நகை மாளிகைக்குள் ஒரு பெரிய கருப்பு நிற ரோல்ஸ் ராயஸ் கோஸ்ட் கார்  அந்த வாகன நெரிசலிலும் சுமூகமாய்  நுழைந்தது.
ராகவின் வரவேற்பிற்காக மேளச் சத்தங்கள் பட்டாசு சத்தங்கள் எல்லாம் எழும்ப, காரில் அமர்ந்திருந்த புகழ் அழுகையை நிறத்தி எட்டிப்பார்த்தான்.
அவன் கார் ஜன்னல் கண்ணாடியின் வழியே ராகவை பார்த்துவிட முடியாத என ஏக்கத்தில் இருந்தான்.
வேந்தனுக்கோ அந்த இடத்தை கடந்தால் போதுமென்றிருந்தது. 
அவன் தன் அவசரத்தாலும் பொறுமையின்மையாலும் ஹாரனை ஓயாமல் அழுத்த, லாவண்யாவிற்கு அவனின் அந்த செயல் கடுப்பாய் இருந்தது.
ஒரு சில விநாடிகள் தன்யா ஜுவலர்ஸ் வாசலுக்கு நேராய் கார் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட, லாவண்யாவும் வேந்தனும் கவனிக்காத தருணத்தில் புகழ் கார் கதவை திறந்து இறங்கிஓடினான்.
இருவருமே அரண்டு போய்
“புகழ்ழ்ழ்ழ்ழ்” என்று சத்தமிட்டனர்.
ஆனால் அவன் சாலைகளை கடந்து தன்யா ஜுவல்லர்ஸ் நோக்கி ஓட்டம் எடுக்க, பின்னோடு வாகனங்கள் நிற்பதால் வேந்தனால் வண்டியை நிறுத்த முடியாத சூழ்நிலையில்,.அவன் நிலை புரிந்தவளாய் லாவண்யா அவசமாய் கார் கதவை திறந்து இறங்கியபடி 
“நான் புகழை கூட்டிட்டு வர்றேன்… நீங்க வண்டியை நிறுத்திட்டு வாங்க”என்க, அவன் கார் நிறுத்துவதற்கு இடம் தேடினான். 
தன்யா ஜுவலர்ஸ் திறப்பு விழா வெகு கோலகோலமாய் நடந்து கொண்டிருந்தது. அதுவும் ராகவ் வருவதென்றால் சொல்ல வேண்டுமா?
அவன்தான் இன்று டாப் மோஸ்ட் ஹீரோ. அவனுக்காகவே மக்கள் திரள் திரளாய் கூட,.அந்த கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையோடு காவலாளிகளும் திணறிக் கொண்டிருந்தனர். 
ஜென்னி  நேரத்தோடு வந்து சேர்ந்துவிட்டாள். ஆனால் ராகவ் தாமதித்த காரணத்தால் கூட்டம் பெருகி தியாகராய நகரே ஸ்தம்பித்து போனது.
அவன் தன் ஆடம்பரமான காரில் இறங்கியதுமே எல்லோரும் அவனின் கம்பீர தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டனர். 
பலரும் தங்கள் அலைப்பேசியில் அவனை படம் பிடித்து கொண்டிருந்தனர். எப்படியாவது அவனோடு ஓரே ஒரு செல்ஃபி அல்லது கையெழுத்து வாங்கிவிட மாட்டோமா என தவித்திருக்க ராகவின் பாதுகாப்பிற்காக வந்தவர்கள் அந்த கூட்டத்தில் உள்ள யாரையும் அவனிடம் நெருங்க கூட விடவில்லை.
பிளேக் பேண்ட் ப்ளூ ஷர்ட்டில் தன் கருப்பு நிற கூலர்ஸோடு ராகவ் அந்த கட்டிடத்தின் வாசலை நெருங்க அந்த நகை மாளிகை முதலாளி கரம் கூப்பி அவனை ஹிந்தியில் வரவேற்றார்.
அவன் பார்வை அவர் மீது விழாமல் ஜென்னித்தாவிடம் அடைக்கலம் புகுந்தது.
கண்களை பறிக்கும் தங்க நிற பட்டு சேலையில், பாரம்பரியான பாணியில் பின்னி கூந்தலில் மல்லிகை பூவெல்லாம் சூடி  முந்தானையை முன்புறம் இழுத்துபிடித்து கொண்டு நின்றிருந்தாள்.
அவள் செவிகளோடு நடனமிட்ட கூடை ஜிமிக்கியும், ஒற்றை கம்பீரமான டாலர் அவள் கழுத்தை நிறைத்தது போல்  அவள் மார்பக பகுதியை தொட்டு நீட்டமாய் தொங்கிக் கொண்டிருக்க, அவனோ கிறங்கி போய் அவளிடமே லயித்தான். 
அவன் கூலர்ஸ் அணிந்திருந்ததினால் அவளை விழுங்குவது போல் அவன் பார்த்த பார்வையை யாரும் கவனிக்க சாத்தியமில்லை.
ஆனால் அவன் செகரட்டிரி மனோ அவனை உணர்ந்து “பாஸ்” என்று குரல் கொடுத்தான். 
உடனே இயல்பு நிலைக்கு திரும்பியவன் கூலர்ஸை கழட்டிவிட்டு அங்கிருந்த நகைக்கடையின் நிர்வாகி மற்றும் முக்கிய  பணியாளர்களிடம் கைகுலுக்கினான்.
அந்த நகைக்கடை நிர்வாகி ஜென்னித்தாவை கைக்காண்பித்து “ஷீ இஸ் மிஸ்.ஜென்னித்தா விக்டர்… அவர் பிரேண்ட் அம்பேஸிடர்… ” என்றார்.
ஏற்கனவே அறிமுகமான போதும் புதிதாய் அறிமுகமாவது போல இருவரும் புன்னகையித்து கைகுலுக்க, அவள் மெல்லிய கரத்தை பிரிய மனதில்லாமல் தவிப்போடு விடுவித்தான். 
ராகவ் ஜென்னியிடம் தன் பெருமைகளையும் புகழையும் பிராஸ்தாபிக்கவே இந்த விழாவிற்கு வர சம்மதித்தான். 
அதுவும் இல்லாமல் தான் வந்தால் அவளுக்கு இரண்டாபட்ச மரியாதைதான் கிட்டும். கிட்டத்தட்ட அப்படிதான் நிகழ்ந்தது. 
அதுவும் இல்லாமல் யோசனையின்றி அவள் தன்னிடம் அவமதிக்கும் விதமாய் பேசிவிட, அவள் தவறை அவளுக்கு புரிய வைக்கவும் எண்ணினான்.
ஆனால் அவனின் எந்த எண்ணமும் பலிக்கவில்லை. 
முந்தைய நாள் நடந்த நிகழ்விற்கான எந்தவித தாக்கமும் அவளின் செயலிலும் முகப்பாவனையிலும் கூட இல்லை. 
அவளோ சிறு சஞ்சலம் கூட இல்லாமல் அவனிடம் ரொம்பவும் இயல்பாக சிரித்து பேசினாள். தெளிந்த ஓடை நீராய் இருந்த அவள் முகம் அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதோடு ரிப்பனை வெட்டச் சொல்லி அவளே அவனிடம் தெரிவிக்க, 
திறப்புவிழா சிறப்பாக நடந்தேறியது.
ராகவ் உள்ளே நுழைந்ததும் அந்த கடை நிர்வாகி ஜென்னியிடமும் அவனிடமும் அங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த வித்தியாசமான நகைகளை சுட்டிகாட்டி அதன் சிறப்பையும் மதிப்பையும் எடுத்துரைக்க,
ஜென்னி அவ்வப்போது அவனிடம் அவற்றை எல்லாம் பற்றி பேச்சு கொடுத்து கொண்டு வந்தாள். 
அன்று தன் முகத்திற்கு நேராக எடுத்தெறிந்து பேசிவிட்டு, இன்று எப்படி அவளால் அதன் சுவடுக்கூட காட்டிக் கொள்ளாமல் இருக்க முடிகிறது. அவளின் செயல்களை கண்டு நொடிக்குநொடி வியந்துதான் போனான்.
அதேநேரம் அவனால் அவளை போல் அத்தனை இயல்பாய் இருக்க முடியவில்லை. 
அவ்வப்போது அவளிடம் ஈர்க்கப்படும் அவன் விழிகளை கட்டுக்குள் கொண்டு வர அவன் பெரும் பாடுப்பட்டுக் கொண்டிருந்தான். 
அதே நேரம் அவளிடம் தனியாய் பேசும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டும் இருந்தான். 
மனோ அவனை நெருங்கி “பாஸ் டைமாச்சு” என்று அறிவிக்க,
ராகவ் அங்கிருந்தவர்களிடம் புறப்படுவதாக உரைத்தான்.
அவர்களும் அமோதித்து அவன் புறப்படும் ஏற்பாடுகள் செய்ய வெளிபுறம் சென்றனர். 
ஜென்னி புன்னகையோடு “ஒகே மிஸ்டர் ராகவ்… சீ யூ” என்று கரத்தை நீட்ட அவனோ அவள் கரத்தை கொஞ்சம் இறுக்கமாய் பற்றிக் கொண்டு
“காசு கொடுக்காமலே இப்படி நடிக்கிற… கொடுத்தா எப்படி நடிப்ப ?” என்று கேட்டுவிட்டு அவளை ஆழ பார்த்தான்.
ஆனால் அவன் எதிர்பார்த்த எந்தவித உணர்வுகளையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்முறுவலோடு நின்றாள் .
அவனோ அவள் கையை விடாமல் அழுந்த பிடித்திருக்க
மனோ பின்னோடு “பாஸ் மீடியா எல்லாம் இருக்காங்க” என்று அறிவுறுத்தினான்.
உடனேஅவள் கரத்தை விடுவித்தவன் சற்று அழுத்தமாக “திரும்பியும் எப்போ மீட் பண்ணலாம் ஜென்னி ?” மெலிதான குரலில் அவன் கேட்க, அவள் கூர்ந்து அவனை புரியாமல் பார்த்தாள்.
அவள் மௌனத்தை உள்வாங்கியவன் கிசுகிசுத்த குரலில் “நெக்ஸ்ட் மீட்டிங் நீயும் நானும் மட்டும்… தனியா… திஸ் டைம் ப்ளேஸ் அன் டைம் இஸ் யுவர் சாய்ஸ்… ” என்றவன் கூலர்ஸை மாட்டியபடி கண்ணடித்து “கால் மீ பேபி” என்று ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
ரூபா அவன் பேச்சையும் சீண்டலான பாவனைகளையும் கவனித்து  “என்ன ஜென்னி இது? ராகவ் சார் இப்படியெல்லாம்” என்று அதிர்ந்து வினவ,
ஜென்னி தன் இயல்பு நிலையிலிருந்து மாறுபடாமல் “ப்ச்… விடு ரூப்ஸ்… இதெல்லாம் ஒரு மேட்டரா ?” என்று தோள்களை குலுக்கிவிட்டு
“ஒகே நாமலும் கிளம்பலாமா?” என்று கேட்டாள்.
“இல்ல ஜென்னி… ஏதோ இத்தனை சவரன் மேல நகை வாங்கினா கிஃப்ட்ஸ்னு அனௌன்ஸ் பண்ணி இருக்காங்களாம்… அதை நீங்கதான் தரனுமாம்” என்றாள்.
“ஒ அப்படியா?” என்றவள் களைப்பாய் மூச்சை இழுத்துவிட
“நீங்க வாங்க ஜென்னி.. அதுவரைக்கும் நம்ம உள்ள போய் ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுவோம்” என்று சொல்ல அவர்கள் இருவரும் அலுவலக அறைக்குள் சென்றனர்.
அவர்கள் அங்கே காத்திருக்கும் போது  ஒரு சிறுவனை அங்கே பணிபுரிபவன் அழைத்துவந்தான்.
அந்த சிறுவனோ நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தான்.
அந்த பணியாள் ஜென்னியை கண்டதும் “சாரி மேடம், டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்க,
“இட்ஸ் ஒகே” என்றவள் அழுது கொண்டிருக்கும் சிறவனை பார்த்து “யார் இந்த பையன்” என்று கேட்டாள்.
“தெரியல மேடம்… உள்ள ஷாப்ல சுத்தி சுத்தி வந்தான்… கூட வேற யாரும் இல்ல…  அழுதிட்டே இருக்கான்… பேரும் சொல்ல மாட்டிறான்… டீடைல்ஸும் சொல்ல மாட்டிறான்” என்றான்.
ஜென்னி தன் இருக்கையில் இருந்து எழுந்தபடி அவன் அருகாமையில் சென்று குனிந்தவள் “எதுக்கு அழறீங்க? …  உங்க அப்பா அம்மாவோடபோஃன் நம்பர் சொல்லுங்க… நான் கால் பண்ணி அவங்களை வர வைக்கிறேன்” என்றதும் 
அவன் அழுகையின் ஓலி குறைய அவளை ஏறிட்டான்.
அப்போது அவள் முகத்தை பார்த்தவன் அடுத்த கணமே “சாக்ஷி அக்கா” என்று சொல்லி அவள் கழுத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டான்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!