akila Kannan’s Thaagam 20
akila Kannan’s Thaagam 20
தாகம் – 20
மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தண்ணீரில் நடக்க முடியாமல் அலமேலு பாட்டி, குளிரில் நடுங்கி கொண்டிருந்தார்.
“பாண்டி அம்மாவை, கொஞ்சம் கஞ்சி வச்சி குடுக்க முடியுமான்னு கேளு.. எனக்கு உடம்பு முடியல.. ரொம்ப குளுருது.. “, என்று நடுக்கத்தோடு பாண்டியிடம் கேட்டார்.
அலமேலு பாட்டியின் குரல் கேட்டு ஓடிவந்த பாக்கியம், “இந்த உதவி கூட செய்யலைன்னா பக்கத்து வீடு எதுக்கு..? கொஞ்ச நேரம் இருங்க, கஞ்சி காய்ச்சி தரேன்.. ” , என்று உள்ளே சென்றாள் பாக்கியம்.
மழை தண்ணீர் பட்டு தீக்குச்சிகள் வேலை செய்ய மறுத்தது.
உள்ளிருந்து புது தீப்பெட்டி எடுத்து அடுப்பை பற்ற வைத்தாள் பாக்கியம். மழை நீர் பட்டு அடுப்பு அணைந்தது. மழை நீரோடு பல போராட்டத்திற்கு பின் கஞ்சி தயார் ஆனது.
வீட்டின் ஓரத்தில் மழை நீர் ஒழுகவில்லை. அலமேலு பாட்டிக்கு கொஞ்சம் கஞ்சி குடுத்து விட்டு அனைவரும் குடித்தனர். அந்த குளிரில், சூடான கஞ்சி தொண்டைக்கு இதமாக இருந்தது.
அங்கு பிளாஸ்டிக் ஷீட் விரித்து கொண்டு, அதில் ராமசாமியும் பாக்கியமும் அமர பாண்டி ராமசாமியின் மடியிலும், தீபா தாயின் மடியிலும் தலை வைத்து படுத்தனர்.
படுக்கவும் இடம் இல்லாமல் அவர்களுக்கு அமைந்த இந்த இரவு நமக்கு வருத்தத்தை அளித்தாலும் உதவி செய்யும் வாய்ப்பு நம்மிடம் இல்லை..
மழை நிற்குமா என்று வாசலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பாக்கியம்.
நாமும் மழை நிற்க காத்திருக்கலாம் .. ஆனால் வானம் மிகவும் இருட்டிக் கொண்டிருந்தது. மேகம் சூழ்ந்து கருமையாக காட்சி அளித்தது.
ஆகையால் மழை நிற்பதற்காக காத்திருக்காமல், விக்ரம் தாயின் அதிர்ச்சிக்கு என்ன காரணம் என்றறிய அங்கு செல்வோம்.
இன்று நாம் பயணிப்பதற்கு , விக்ரமின் கார் அல்லது ரமேஷ், திவ்யா அவர்களது வண்டி வர வாய்ப்பில்லை. அனைவரும் அவுட்டிங் முடிந்து, வீட்டில் இருப்பார்கள்.
இன்று பேருந்தில் செல்வோம்.
ஒரு பேருந்து வருகிறது. இந்த பேருந்து விக்ரம் வீட்டிற்கு அருகே செல்லும்.. நாம் அங்கு இறங்கி விக்ரம் வீட்டிற்கு நடந்து சென்று விடலாம்.. பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வழக்கம் போல கொஞ்சம் தூரம் தள்ளி சென்று நிற்கிறது.. அனைவரும் பேருந்தை நோக்கி ஓட நாமும் ஓடி சென்று ஏற வேண்டிய சூழ்நிலை. பேருந்தில் கூட்டம் அலை மோதியது.
மக்களை போல, குடைகளுக்கும் இடம் தேவைப்பட்டது.
நாம் உள்ளே செல்லாமல் படியில் நின்றே பயணிப்போம்.
“ரைட்… ரைட் .. போலாம் “, என்று விசில் சத்தம் கேட்க பேருந்து கிளம்பியது.
மழை சற்று குறைந்து, சாரல் அடித்துக் கொண்டிருந்தது.
பேருந்து விக்ரம் வீட்டின் அருகில் உள்ள நிறுத்தத்தில் நிற்கிறது.
நாம் இறங்கி நடந்து, இதோ விக்ரமின் வீட்டுக்குள் நுழைகிறோம்.
அங்கு விக்ரம், விக்ரமின் தாய் இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சூடான இட்லி , தேங்காய் சட்னி, பாசிப்பருப்பு சாம்பார் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இருவரும் எதுவும் பேசவில்லை. யார் முதலில் மௌனத்தை கலைப்பது என்று பந்தயம் போல் இருவரும் அமைதியாக இருந்தனர்.
அப்பொழுது மொபைலில் விக்ரமை அழைத்தான் ரமேஷ்.
ரமேஷ் பேச்சு நம் காதில் விழ வாய்ப்பில்லை. விக்ரமின் தாய் போல், நாமும் பார்வையாளர் தான்.
“சொல்லு ரமேஷ்…” , என்ற விக்ரமின் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை.
“……” , ரமேஷ் ஏதோ கூற,
” சூப்பர்…” , என்று கூறினான் விக்ரம்.
“………………..” , ரமேஷ் ஏதோ கூற, ” இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நாம திங்கட்கிழமை கிளம்பறோம்…” , என்று ஆர்வமாக கூறினான் விக்ரம்.
“…….” , ரமேஷ் ஏதோ கூற, ” ஏர்போர்ட்ல பார்க்கலாம் ” , என்று கூறி மொபைல் பேச்சை முடித்தான் விக்ரம்.
“அம்மா திங்கட்கிழமை “United States” கிளம்பறேன். ஒரு வாரம் ட்ரிப் தான். ஒரு பிசினெஸ் மீட்டிங் முடிச்சிட்டு வந்திறேன்.” , என்று இட்லியை
சட்னியில் தொட்டுக் கொண்டே கூறினான் விக்ரம்.
“டிக்கெட்ஸ் போட்டாச்சா..? ” , என்று வினவினார் விக்ரமின் தாயார்.
“இப்ப தான் “approval mail” வந்துச்சு அம்மா.. உடனே டிக்கெட் போட்டாச்சு .. நானும் ரமேஷும் போறோம்….. ” , என்று உற்சாகத்தோடு கூறினான் விக்ரம்.
“ USல எந்த இடம்? எங்க தங்குற..?”, என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டார் விக்ரமின் தாயார்.
“Virginia Richmond…. ஹோட்டல்ல தான் ஸ்டே பண்ற மாதிரி தான் பிளான் பண்ணிருக்கோம்…. , ஆனா நண்பன் ஒருத்தன் ரிச்மண்ட்ல இருக்கான்.. அவங்க வீட்ல தான் ஸ்டே பண்ணனும்னு சொல்லிருக்கான்..
இன்னும் அதை முடிவு பண்ணல அம்மா…..”, என்று பணிவாக பதில் கூறினான் விக்ரம்.
“”US” போயிட்டு வந்த உடனே உனக்கு பொண்ணு பாக்கிறோம்.. ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம்… எனக்கும் வயசாகுது.. உனக்கும் வயசாகுது…” , என்று தீவிரமாக கூறினார் விக்ரமின் தாயார்.
திவ்யாவின் நினைவில் விக்ரமின் முகத்தில் புன்னகை பூத்தது.
“அம்மா.. ” , என்று தயக்கமாக இழுத்தான் விக்ரம்.
“அந்த பொண்ணை மறந்திரு … “, என்று அழுத்தமாக கூறினார் விக்ரமின் தாயார்.
“எந்த பொண்ணு ?” , என்று அதிர்ச்சியாக கேட்டான் விக்ரம்.
“திவ்யா ” , என்று ஒற்றை வார்த்தையாக கூறினார் விக்ரமின் தாய்.
“அதெல்லாம் இல்லை அம்மா… அது வந்து.. …. “, என்று விக்ரம் தடுமாற, “உன்னால என்கிட்டே மறைக்க முடியாது விக்ரம்… உன்னுடைய ஒரு பார்வை போதும், நீ நினைக்கிறதை நான் கண்டு பிடிக்கறதுக்கு..”, என்று நிதானமாக கூறினார் விக்ரமின் தாய்.
நேராக விஷயத்திற்கு வந்தான் விக்ரம்.
“திவ்யாவை பிடிக்கலையா அம்மா ? திவ்யா மிடில் கிளாஸ்னு யோசிக்கிறீங்களா..? ” , என்று விக்ரம் பரிதாபமாக கேட்டான்.
அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், “நீ எவ்வளவு ஆசை பட்டாலும் இது நடக்காது.. நீ இன்னும் திவ்யா கிட்ட பேசவே இல்லைங்கிறது உங்க ரெண்டு பேரை பார்த்தாலே தெரியுது… நீ அவ கிட்ட பேசி, அவ மனசுல ஆசையை வளர்க்க வேண்டாமுன்னு தான் இப்பவே சொல்றேன்.. இது நடக்கப் போறதில்லை.. அதுக்கு தான் அவளை மறந்திருனு சொல்றேன் … “, என்று விக்ரமின் அம்மா மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூறினார்.
“அம்மா… “, என்று மீண்டும் விக்ரம் ஏதோ பேச தொடங்க, ” இதுக்கு மேல பேச வேண்டாம் விக்ரம் “, என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டார் விக்ரமின் அம்மா.
“இனி அம்மாவிடம் பேசி எந்த பயனும் இல்லை”, என்று புரிந்தவனாக மீன் தொட்டி அருகில் சென்றான் விக்ரம். எந்த குழப்பத்திலும் அமைதி தரும் மீன்கள் இன்று அவனுக்கு அமைதியை தர வில்லை.
காதல் மனிதனின் அமைதியை கெடுத்து விடுமா என்ன..?
“அம்மா ஏன் அப்படி சொல்றாங்க..? நம்ம கிட்ட எதையோ மறைக்கிறாங்க..? என்னவா இருக்கும்..? இவ்வளவு நாள் நம்மள வில்லன் மாதிரி பார்த்துட்டு இருந்த திவ்யா, இப்ப தான் எதோ கொஞ்சம் நல்லா பேசுறா….” , என்று நினைத்துக் கொண்டே அழகாய் நீந்தி கொண்டிருந்த மீன்களை பார்த்தான். மீன் தொட்டியில் ஜோடியாக நீந்தி கொண்டிருந்த மீன்களை பார்த்து, விக்ரமிற்கு பொறாமையாக இருந்தது.
“அம்மா சொல்வதில் எதாவது நியாயம் இருக்கும்.. இனி திவ்யாவை சந்திப்பதை நான் தவிர்க்க வேண்டும்.. திவ்யாவைப் பற்றிய என் எண்ணம் இது வரைக்கும் யாருக்கும் தெரியாது.. இனியும் தெரிய வேண்டாம். ” , என்று முடிவெடுத்தான் விக்ரம்.
அறிவு எளிதாக முடிவு எடுத்து விடும். ஆனால் மனம் ஒரு குரங்காயிற்றே….?
ஜன்னல் வழியாக வானத்தை பார்த்து கொண்டிருந்தான் விக்ரம். மழைச் சாரல் அவன் முகத்தை தொட்டுச் சென்றது…
” நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா ” , என்ற பாடல் அவன் மியூசிக் சிஸ்டத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.
விக்ரமிற்கு உறக்கம் வர வில்லை. அந்த பாடல் அவனுக்காகவே எழுதியது போன்ற எண்ணம் விக்ரமின் மனதில் தோன்றியது.
விக்ரமின் மொபைல் ஒலித்தது. விக்ரம் மொபைலை ஒரு முறை திரும்பி பார்த்தான். ஆனால் பேசவில்லை.
விக்ரம் தனிமை விரும்புகிறான் போல் தெரிகிறது. நாம் விக்ரமிற்கு தனிமை கொடுத்து வெளியே செல்வோம்.
மழைச் சாரலில் மெதுவாக நடந்து ரமேஷின் வீட்டிற்கு செல்வோம்.
மழையால் இவர்கள் ஏரியாவில் பவர் கட் போல் தெரிகிறது. ஷண்முகத்தின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
” எப்ப கரண்ட் வரும்னு தெர்ல.. இன்வெர்ட்டர்ல தான் எல்லாம் ஒர்க் ஆகுது.. பார்த்து சிக்கனமா பயன் படுத்துங்க.. ” , என்று கூறினார்.
அந்த நேரத்திலும், திவ்யாவின் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்தது.
” திவ்யா… என்ன பண்ற..? ” , என்று கேட்டான் ரமேஷ்.
“கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ் ஒர்க் இருக்கு.. இன்னக்கி முழு நாளும் வெளிய போயாச்சு.. அதை தான் பார்த்துட்டு இருக்கேன்.” , என்று வேலை பார்த்தபடியே கூறினாள் திவ்யா.
“நான் திங்கட் கிழமை பிஸினெஸ் ட்ரிப் கிளம்பறேன்.. ஒரு வாரம் தான்..”, என்று கூறினான் ரமேஷ்..
“ஹே.. சூப்பர்… உன் ” U S ” ட்ரிப் confirm ஆகிடுச்சா…?” , என்று குதித்து எழுந்த திவ்யா ரமேஷிற்கு கை குலுக்கினாள்.
தலை அசைத்துக் கொண்டு, “உனக்கும், விக்ரமிற்கும் இடைல என்ன நடக்குது..?” , என்று நேரடியாக வினவினான் ரமேஷ்.
திடீரென்று வந்த இந்த கேள்வியில் நிலை தடுமாறிய திவ்யா,
” ஒன்றுமில்லையே….. ” , என்று முகத்தை திருப்பி கொண்டாள் திவ்யா.
“ஆகா… என் முகத்தைப் பார்த்து பதில் சொல்ல முடியாதபடி ஏதோ இருக்கு ?” , என்று கேட்டான் ரமேஷ்.
அவனை மிரண்ட பார்வையுடன் பார்த்தாள் திவ்யா. ரமேஷ் சிறிதும் இரக்கம் காட்டவில்லை.
டேபிளில் சாய்ந்த படி, கையை கட்டிக் கொண்டு அவளை தீர்க்கமாக பார்த்தான்.
அதிகமாக பேசும் திவ்யாவிற்கு இன்று வார்த்தைகள் வரவில்லை..
ரமேஷ் பொறுமையாக காத்திருந்தான். திவ்யா பேச ஆர்மபித்தாள்.
” முதல்ல விக்ரமை பார்க்கும் பொழுது எனக்கு அவர் மேல நிறைய சந்தேகம் தான்… ஆனால் அதுக்கு அப்புறம் இல்லை…நான் எல்லா விஷயத்தையும் கண்டுபிடிச்சிட்டேன்.. அவர் மேல எந்த தப்பும் இல்லைனு தெரியும்.. இருந்தாலும் அவர் என் விஷயத்துல தலையிடறது எனக்கு பிடிக்கலை. அது தான் வேணும்னே அவர் கிட்ட சண்டை இழுத்தேன்.. அவரை கடுப்பேத்தினேன்.. அவர் கிட்ட வம்பிழுக்கும் பொழுது கொஞ்சம் சந்தோஷமா இருந்தது… நான் போன இடத்துக்கு விக்ரம் வந்தாரா இல்லை விக்ரம் போற இடத்துல நான் இருந்தேனானு எனக்கு உண்மையா தெரியாது.. “, என்று பாவமாக கூறினாள் திவ்யா
“இதை தாண்டி நாங்க எதுவும் பேசிக்கல… ” , என்று தலை அசைத்து கூறினாள்.
“உன்கிட்ட கூட ஒரு நாள் சொல்ல ஆரம்பிச்சேன்…. விடுகதை சொன்னேன்னு .. நீ தான் காது குடுத்து கேட்கல …. “, என்று ரமேஷை குற்றம் சாட்டினாள் திவ்யா.
ரமேஷ் அவளை ஆழமாகப் பார்த்தான்.
“என்னை மட்டும் கேட்கற.. விக்ரம் கிட்ட கேட்க வேண்டியது தானே..?” , என்று விக்ரமை போட்டுக் கொடுத்தாள் திவ்யா.
“விக்ரம் எப்படி இருந்தாலும் பிரச்சனை அவருக்கு கிடையாது… விக்ரம் பெரிய பணக்காரர்…. அவங்க அம்மா இதுக்கு சம்மதிக்கணும்.. எவ்வளவு பிரச்சனை வரும்னு தெரியுமா?” , என்று அக்கறையாக கேட்டான் ரமேஷ்.
“அவர் என்னை விரும்பறேன்னு சொல்லவும் இல்லை… நானும் அவரை விரும்பறேன்னு சொல்லலை… அதனால ஒரு பிரச்சனையும் வராது.. ” , என்று கடுப்பாக கூறினாள் திவ்யா.
“கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பைல நெய் வடியும்னு சொல்லுவாங்க. அப்படி எதாவது ஒரு கேனயன் கிட்ட போய் சொல்லு இந்த கதையை…. காலைல நீ வரும் பொழுதே எனக்கு ஒரு சந்தேகம்… நீங்க ரெண்டு பேரும் சொல்ல வேண்டாம்.. உங்க பார்வை சொல்லுது ” , என்று சிடுசிடுத்தான் ரமேஷ்.
திவ்யா தடுமாறினாள். அவள் எதுவும் பேசவில்லை.
“ரமேஷ்.. ” , என்று அழைத்தாள் திவ்யா.
“சொல்லு…” , என்று கூறினான் ரமேஷ்…
” ரமேஷ்.. உனக்கு பிடிக்கலைன்னா.. பிரச்சனை வரும்னா இனி நான் விக்ரம் விஷயத்துல தலையிடமாட்டேன்…” , என்று கம்மலான குரலில் கூறினாள் திவ்யா.
ரமேஷ் பதில் பேசாமல் அவன் அறைக்கு சென்று விட்டான்.
அவன் சென்ற உடன், “நான் விக்ரமை விரும்புகிறேனா ?” , என்ற சுய ஆராய்ச்சியில் இறங்கினாள் திவ்யா.
சிறிது நேரத்தில், கரண்ட் வர ஷண்முகம் டிவி ஆன் செய்தார். அனைவரும் சத்தம் கேட்டு ஹாலுக்கு வர,
” காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை, ” , என்ற பாடல் டிவியில் ஒலிக்க, ரமேஷ் திவ்யாவை முறைத்துப் பார்த்தான்.
திவ்யா ரமேஷை கவனிக்கவில்லை. அவளோ புன்னகையோடு அடுத்ததாக வந்த பாடல் வரிகளை ரசித்து பாடிக் கொண்டிருந்தாள்.
“ நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,… “
இவள் முகத்தில் என்றும் சந்தோசம் நிலைத்திருக்க வேண்டும் என்றெண்ணினான் ரமேஷ்.
பல்வேறு விதமாக அமைந்த இந்த இரவு, எல்லோரையும் எதை நோக்கி அழைத்துச் செல்ல போகிறது.
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா..?
ஒருவரின் தோல்வியில் தான் மற்றொருவரின் வெற்றி என்பது விதி….
தோல்விகளும் வெற்றிகளும் தொடரும்….
தாகம் தொடரும்……