Akila Kannan’s Thaagam – 4

Akila Kannan’s Thaagam – 4

தாகம் பகுதி – 4

பரபரப்பாக சுற்றும்  விக்ரம் ரமேஷ் இருவரையும் விடுத்து நாம் திவ்யாவை பின் தொடர்வோம். இந்த ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி நம்மை போல் திவ்யாவிற்கும் புது இடம் தான்.

        பிரமாண்டமான கட்டிடம் அதிலுள்ள தொழில் நுட்பங்கள் இயந்திரங்கள் அனைத்தும் திவ்யா கற்பனை செய்ததை விட பன்மடங்கு உயர்வாக இருந்தது.

“பெரிய செல்வந்தன் தான் போலும்”, என்று நினைத்துக்கொண்டாள்.

        அவள் கண்கள் அங்கு இருப்பவர்களையும்.., அங்குள்ள அனைத்தையும்  நோட்டமிட.., கால்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தது.

திவ்யாவை அங்கும் இங்கும் சுற்றாமல் ஒரு இடத்தில் அமருமாறு தன் கைகளால் செய்கை காட்டினான் ரமேஷ்.

 தன் தலையை அங்கும் இங்கும் அசைத்து, “முடியாது”, என்று மறுப்பு தெரிவித்துவிட்டாள் திவ்யா.

“ஏதோ ஆசைப்பட்டாள், என்று இவளை நாம் அழைத்து வந்தது மிக  பெரிய தவறு “, என்று தன்னைத்தானே நொந்துக் கொண்டான் ரமேஷ்.

“ஏதோ விழா அன்று தான்,  இண்டஸ்ட்ரியை பார்க்க முடியும் என்று கெஞ்சி கொஞ்சி காரியத்தை சாதித்து விட்டாள். ஆனால் இங்கு வந்தால், சொன்னதை கேட்பதில்லை “, என்று திவ்யாவை மனதுக்குள் திட்டி கொண்டிருந்தான் ரமேஷ்.

எங்கோ தொலைதூரத்தில் ஒரு மணி அடிப்பது போல் சத்தம் கேட்டது.

அந்த மணி சத்தம் திவ்யாவின் உடலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.

“சார்”, என்று அங்கு நின்று கொண்டிருந்த வாட்சமனை அழைத்தாள் திவ்யா.

 சார் என்று திவ்யா  மரியாதையாக அழைத்ததில், முகத்தில் புன்னகையோடு திரும்பி “என்னம்மா ?” , என்று அன்பாக கேட்டார் விக்ரம் இண்டஸ்ட்ரியின் வாட்ச்மன்.

“பக்கத்தில் ஸ்கூல் இருக்கா?”, என்று கேட்டாள் திவ்யா.

“பின்பக்கம் தான் கவர்மெண்ட் ஸ்கூல் ஒன்னு இருக்குமா. எதிர்ப்பக்கம் இருக்கிற கூவ நதிக்கரையோர புள்ளைங்கள்ளாம் இங்க தா படிக்குதும்மா.. “, என்று கூறினார் வாட்ச்மன்.

தலை அசைத்து கேட்டு கொண்டாள் திவ்யா.

 

“ஐயா இருக்குற இந்த கம்பெனியால இவுகளுக்கு நல்ல  லாபம். நிறைய மக்கள் கூலி வேலைக்கு இங்க தான் வருவாக “, என்று பேச்சுவாக்கில்  கூடுதல் தகவல் குடுத்து விட்டு வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்று விட்டார்.

 

அங்கிருந்த படிகளில் ஏறி , பள்ளிக்கூடம் தெரிகிறதா ?, என்று பார்த்தாள் திவ்யா.

அவள் கண்களுக்கு பல குழந்தைகள் பள்ளிக்குள் அவசரமாக ஓடுவது தெரிந்தது.

நாமும் கூர்மையாக பார்த்தோமென்றால் , “தீபாவும் , பாண்டியனும் அவர்கள் வகுப்பறையில் இருப்பதை பார்க்க முடிகிறது.”

 

பள்ளிக்கூடத்தில் மூன்று முறை மணி அடிக்க , திவ்யாவின் உடல் நடுங்கியது.

மணி ஓசை ரமேஷ் காதுகளிலும் விழ , ரமேஷ் திவ்யாவை தேடி  வந்தான்.

 

திவ்யாவை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவளிடம் ஒரு  பாட்டிலில் தண்ணீர் கொடுத்தான், ரமேஷ். அதில் பாதியை குடித்து விட்டு, அந்த பாட்டிலை பக்கத்தில் வைத்தாள் திவ்யா.

“R U Okay..?”, என்று வினவினான் ரமேஷ்.

“எஸ்”, என்று ஒற்றை வார்த்தையாக பதில் கூறினாள் திவ்யா. அவள் பதில் கூறியவிதத்திலிருந்து அவள் மனநிலையை புரிந்து கொண்டான் ரமேஷ்.

அவளை விட்டு செல்ல மனம் இல்லாமல், தன் வேலையையும் மனதில் நினைத்துக்கொண்டு குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தான் ரமேஷ்.

அவன் நிலைமையை புரிந்தவளாக, ” ரமேஷ், நீ போ.. ஐ அம் ஒகே.., நீ போய் உன் வேலையைப்பாரு..” என்று கூறினாள் திவ்யா.

  தலை அசைத்து, அவளுக்கு தனிமை கொடுத்து தன் வேலையை பார்க்க சென்றான் ரமேஷ்.

மணியோசை அவளை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றாலும் , அவளுடைய  கசப்பான நினைவுகளுக்கு இடம் தர திவ்யா விரும்பவில்லை.

அவளும் அவள் தாயும் ரமேஷ் வீட்டிற்கு வந்த நாள் அவள் கண்முன் ஓடியது.

ரமேஷ் அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அன்று முதல் ரமேஷ் திவ்யாக்கு அனைத்தும் அனைத்துமாகிப்போனான்.

ரமேஷின் தந்தை ஷண்முகம், தன் மகனான ரமேஷையும்  தங்கை மகளான திவ்யாவையும் ஒன்றாக தான் நடத்தினார்.

ரமேஷின் தாய் முன்னுக்கு பின் முரணாக பேசினாலும் செயலால் அன்பை மட்டுமே காட்டுவார்.

“இன்று தான் செய்யும் செயலால் என்னவாகும்?”,  என்று தன் சிந்தனையை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தாள் திவ்யா.

” ஷண்முகம் மாமாவைப் பற்றி கவலை இல்லை. நான் என்ன செய்தாலும் சரி என்று கூறுவார்”,  என்று  நினைத்துக் கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டாள் திவ்யா.

“அத்தையையும் , அம்மாவையும் சமாளிப்பது தான் கஷ்டம். ரமேஷ் தான் பேசி அவர்களை சமாளிக்க வேண்டும். அவன் என்ன சொல்லுவானோ..?”, என்று திவ்யா யோசித்து கொண்டிருக்கும் பொழுது அங்கு சிலர் பேசும் குரல்  அவளை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது.

  அவள் குடித்துவிட்டு வைத்திருந்த பாட்டிலைத்தண்ணீரோடு குப்பை தொட்டியில் வீசினாள்.

அதைப்பார்த்து கொண்டிருந்த ஒருபணிப்பெண், ” நமக்கு குடிக்கவே தண்ணி இல்லை.. இதுங்க தண்ணிய குப்பைல போடுது…” , என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

தன் பணிகளுக்கு இடையிலும் ரமேஷின் கண்கள் திவ்யாவை தொடர்ந்தது.

அத்தனை நேரம் திவ்யாவின்  முகத்தில் இருந்த புன்னகை மறைந்திருந்தது.

ரமேஷ் தன்  கண்களால் அவளை நலன் விசாரித்தான் . திவ்யா தன் கட்டை விரல்களை உயர்த்தி ” தான் நலம் ” , என்று அவனிடம் மீண்டும்  உறுதிப்படுத்தினாள்.

 

         விழா நேரம் நெருங்க நெருங்க கூட்டம் அலை மோதியது. வி.ஐ.பி. எல்லோரும் வர அங்கு ஒரு பரபரப்பு சூழ்ந்தது. அவர்களது முன்னேற்பாடால் எந்த வித குழப்பமின்றி இனிதாக தொடங்கியது .

         விக்ரம் இந்த இண்டஸ்ட்ரி மூலம் அமையும் வேலை வாய்ப்பு பற்றி பேசினான். தங்கள் இன்னோவேஷன் டீம்  (புதுமையான கண்டுபிடிப்புக்களை ) பற்றியும், தங்கள் பொருள்களின் தரத்தை பற்றியும் எடுத்துரைத்தான்.

 

அவனுடைய தொலை நோக்கு பார்வையுடனான பேச்சில் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அனைவரும் விக்ரமை பாராட்டினார்கள்.

 

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். ” ,

என்ற திருக்குறளுக்கு  ஏற்ப விக்ரமின் தாயின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

விக்ரமின் தாய் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ். அப்படியே  தன்  தலையை  சற்று திருப்பி பார்த்த பொழுது அவன் கண்ட காட்சி ரமேஷை அச்சம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு திவ்யாவிடம் வந்தான் ரமேஷ்.

“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?”, என்று கோபமாக வினவினான் ரமேஷ்.

அவன் கோபத்தை பொருட் படுத்தாமல் , அவனை பார்த்து கண் அடித்தாள் திவ்யா,

” கண் இருக்குல்ல.? பார்த்தா தெரியல..? ” , என்று ஸ்டைலாக கேட்டாள்  திவ்யா.

திவ்யா , பத்திரிக்கையாளர்களுக்காக ஒதுக்கி இருந்த இடத்தில் அமர்ந்திருந்தாள்.

 

” எப்ப ஜாப்ல சேர்ந்த ?” , என்று கேட்டான் ரமேஷ்.

“ரெண்டு நாள் ஆச்சு .. இன்னக்கி தா முதல் இன்டெர்வியூ என்று பெருமையாக கூறினாள் திவ்யா.

ரமேஷிற்கு தலை சுற்றுவது போல் தோன்றியது.

“வீட்ல அப்பாக்கு , அத்தைக்கு தெரியுமா..?, ” என்று கேட்டான் ரமேஷ்.

” உன்கிட்டயே சொல்லல உன்னக்கு முன்னாடி நான் வேறு யார் கிட்டயாவது சொல்வேனா..?”, என்று எதிர் கேள்வி கேட்டாள் திவ்யா.

” என்கிட்ட ஏன் சொல்லல்ல ?”, என்று கர்ஜித்தான் ரமேஷ்.

” சும்மா சஸ்பென்ஸா  இருக்கும்னு, தோணிச்சு… உன்ன ஆச்சர்யப்படுத்தலாம்னு தா…”, என்று அழகாக சிரித்தாள் திவ்யா.

“எருமை.. எது சஸ்பென்ஸு.. எது சப்ரைஸுனு விளையாடனுமுனு.… அறிவில்லை?”,  என்று திட்டினான் ரமேஷ்.

“வீட்ல தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா…?”, என்று வினவினான் ரமேஷ்.

“அது தான் சமாளிச்சிக்க நீ இருக்கியே.. ” , என்று திவ்யா கூறும் பொழுதே  “திவ்யா ” என்று யாரோ அழைக்க ” ரமேஷ்.., எனக்கு வேலை வந்திருச்சு என்று கூறிக்கொண்டே சென்று விட்டாள் திவ்யா.

ரமேஷிற்கு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரம்தேவைப்பட்டது.  திவ்யா சிறு வயது முதல் செய்த குறும்பு கண் முன் தோன்றியது.

ரமேஷ் அவளை திட்டியதற்காக  எக்ஸாம் ஹால் டிக்கெட்டை ஒளித்து வைத்தது, அத்தை அவளை அடித்து விட்டார்கள் என்று கோபத்தில் அவர்கள் அரைத்த தோசை மாவில் யாருக்கும் தெரியாமல் உப்பு கலந்து வைத்து  மீண்டும் அதற்காக  திவ்யா அடி வாங்கியது… இது போல் பல..”

இந்த இரண்டு வருடத்தில் பல வேலை மாறிவிட்டாள் திவ்யா. எந்த வேலையிலும் உருப்பிடியாக  இருப்பதில்லை…

“ ஊர் வம்பு வேண்டாம்” என்று அனைவரும் சொல்ல , இவளோ இந்த வேலைக்கு தான் செல்வேன் என்று யாருக்கும் தெரியாமல் இங்கு வந்திருக்கிறாள்..

ஆனால் இன்றைய நிலைமை… 

இப்பொழுது தான்  நான் நல்ல வேலை கிடைத்து  முன்னேறி கொண்டிருக்கிறேன்..

 இவள்  ஒரு பக்கம் என்றால்…  விக்ரம் ஒரு பக்கம், ”விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்லி இருக்கிறார் “..  திவ்யாவுக்கு வேறு அரை குறையாக விஷயம் தெரியும் ..  இவள் எதுவும் கேட்டு விடுவாளோ..? விக்ரமிற்கு தெரிந்து விட்டால்  தன் நிலைமை என்ன ஆகும்..?

ரமேஷின் நெற்றியில்  அந்த எ சி குளிரிலும் வியர்வைத்துளி வடிந்தது.

“ரமேஷ் எதாவது  பிரச்சனையா..? ” , என்றது ஒரு குரல்.

அங்கு விக்ரம் நின்று கொண்டிருந்தான்.

“இத்தனை நேரம் திவ்யா என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் ஒரு

பத்திரிகையாளர் என்று விஷயம் தெரிந்து.., எதாவது பிரச்சனையானால்  என்ன ஆகும்..? “, என்ற எண்ணம் மேல் ஓங்க ரமேஷின் வார்த்தை தொண்டைக்குள் நின்றது.

 

அவன்  தடுமாறுவதை பார்த்த  விக்ரம்.. ” உனக்கு தான் நிறைய வேலை.. அது தான் இவ்வளவு டயர்டா  இருக்க ….   எல்லாம் சிறப்பா முடிந்தது.. லஞ்ச் முடிச்சிட்டு ரிப்போர்ட்டர்ஸ் கூட ஒரு சின்ன மீட்டிங்.. அதோட முடிச்சிப்போம்..  அப்புறம் நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு… “, என்று கூறி ரமேஷின் தோள்களை தட்டிக்கொடுத்து சென்றான்..

 

மீண்டும் மணியோசை கேட்க .., திவ்யா உண்பதற்காக செல்லும் பொழுது மணி ஓசை கேட்பதால் குழந்தைகளுக்கும் உணவருந்தும் நேரம் என்று நினைத்துக் கொண்டாள். மணி ஓசை  பள்ளிக்கூடத்திலிருந்து வரும் என்று எதிர் பார்த்ததாலோ அல்லது தனக்கான வேலை நெருங்கி விட்டது என்ற எண்ணத்தினாலோ திவ்யாவை இந்த முறை மணி ஓசை மிகவும் பாதிக்கவில்லை.

 

அங்கு  பஃபே முறை லஞ்ச் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

“கேரட் சூப் , வெஜ் சாலட், கோபி 65,  ஆலூ பராத்தா , நான் , பன்னீர் பட்டர் மசாலா, வெஜ் குருமா , நூடுல்ஸ், புலாவ் , தயிர் சாதம், ஐஸ் கிரீம்  இன்னும் பல உணவுகளை பார்த்ததிலேயே திவ்யாவிற்கு பசி பாதி குறைந்தது போல தோன்றியது..”

அதில் சிலவற்றை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தை பார்க்கும் விதமாக  அமர்ந்து கொண்டாள் திவ்யா.

“ரமேஷிற்கு  வேலையா.. இல்லை  கோபமாக இருக்கிறானோ..? “, என்று  யோசித்துக்கொண்டே   புது இடத்தில்  இன்னும் நண்பர்கள் அமையாத  காரணத்தினால் தனியாக  சாப்பிட ஆரம்பித்தாள் திவ்யா.

திவ்யா காணும் இடத்தில் எல்லாம் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.  ஆனால் அங்கு ஒரு  இடத்தில் மட்டும் தனியாக இருவர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

   அட!!!  அது நம் தீபாவும் , பாண்டியும்… தான் நாம் அங்கு செல்வோம்..

“அக்கா..!! எப்ப பாத்தாலும் பழைய  சோறு தானா.” , எனக்கு பிடிக்கல ..”, என்று முகம் சுழித்தான். பாண்டி .

தீபா பதில் ஏதும் பேசவில்லை..

“பதில் சொல்ல மாட்டியா நீ..?” , என்று கேட்டான் பாண்டி.

“இன்னக்கி அந்த அக்கா தண்ணி குடுக்கலானா இது கூட கிடைச்சிருக்காது.. அதோ பாரு அந்த பைப் தண்ணிய குடிச்சிட்டு தான் உக்காந்திருப்போம்”, என்று மரத்த குரலில் கூறினாள் தீபா.

“அதுவும் அழுக்கு தண்ணி மாதிரி தான் வரும் “, என்று கூறி விட்டு, மேலும்  எதுவும் பேசாமல் உண்ண ஆரம்பித்தான் பாண்டி.

திடீரென்று சந்தேகம் வந்தவன் போல்” ஏன் யாரும் நம்ம கூட  சாப்பிட மாட்டேங்கிராங்க”, என்று கேட்டான் பாண்டி.

“நாம் தினமும் குளிக்க மாட்டேங்கிறோம். அதுனால தான் …” , என்று தனக்கு தெரிந்த பதிலை கூறினாள் திவ்யா.

“நீ என் பிரெண்டு கூட சாப்பிட வரலாம்ல ? “, என்று கேட்டான் பாண்டி.

” அம்மா அவனோட சேர கூடாதுனு  சொல்லிருக்கு “, என்று பேச்சை முடித்தாள் தீபா.

“அம்மா இன்னக்கி எனக்கு பர்கர் வாங்கி  தரேன்னு சொல்லிருக்கு ” , என்று முகத்தில் ஆசையோடு கூறினான் பாண்டி..

 “உனக்கு பர்கர் , பிஸ்சா கூட தெரியுமா?”, என்று வினவினாள்  தீபா..

” அன்னக்கி நீயும் நானும் தானே அந்த டீக்கடை டிவி ல பார்த்தோம் … ” , என்று கூறினான் பாண்டி .

“அம்மாக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டாள் தீபா.

“அன்னக்கி யார் வீட்டுக்கோ வேலைக்கு போனப்ப வாங்கிட்டு வர சொன்னாங்க போல.. அம்மாக்கும் தெரியும் “, என்று கூறினான் பாண்டி..

அமைதியாக கேட்டுக்கொண்டாள் தீபா.

“பாண்டி சீக்கிரம் சாப்பிடு.. நேரம் ஆகிருச்சு ..”, என்று தீபா கூறவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

இருவரும் வகுப்பறைக்குள் செல்ல, நமக்கு அங்கு என்ன வேலை….?

 

 நாம் செல்வோம் விக்ரம்  ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிஸுக்கு….

 

திவ்யா இன்னும் பஃபே ஹாலில் தான் இருந்தாள்..,  சூடான கேரட் ஹல்வாவோடு சேர்த்து ஜில்லென்று  வெண்ணிலா  ஐஸ் கிரீமையும்  ருசித்துக் கொண்டிருந்தாள்.   

 

அவர்கள் டீம் அனைவரும் கிளம்ப.., அவளும்  கீழே ஓடினாள்.

 

ரிப்போட்டர்ஸ் அனைவரும் தயாராக விக்ரமிற்காக காத்திருந்தனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் விக்ரமுடன் ரமேஷ் இருந்ததை பார்த்தாள் திவ்யா..

“சாப்பிட்டாச்சா..?” , என்று கேட்டாள் திவ்யா..

அவனுள் இருந்த கோபத்தையும், பதட்டத்தையும்  அடக்கி கொண்டு , “ம்ம்ம்ம்.. ” ,  என்று   பதில் கூறினான் ரமேஷ்.

“நிறைய சாப்பிட்டா இப்படி தான் பேச்சு வராது.. ம்ம்ம்னு  ராகம் மட்டும் தான் வரும் ” , என்று உதட்டை பிதுக்கி கூறி  விட்டு அங்கிருந்து சென்று தன் டீமுடன் ஐக்யமாகிவிட்டாள் திவ்யா.

இந்த பேச்சு ரமேஷிற்கு கோபத்தயும் , விக்ரமின் முகத்தில் ஓர் புன்னகையையும் உண்டாக்கியது.

“திவ்யாவிற்கு  விஷயம் தெரியும் என்று விக்ரமிடம் சொல்லிவிடுவோமா.?”, என்று ரமேஷ்  யோசிக்க , “இந்த பெண் யாரென்று ரமேஷிடம்  கேட்போமா..?” , என்று விக்ரம் யோசித்தான்.

“விஷயத்தை சொன்னால் நம் மதிப்பு என்ன ஆகுமோ?” என்று எண்ணி ரமேஷ் அமைதி காக்க ,” ஒரு பெண்ணை பற்றி எப்படி விசாரிப்பது?” என்று விக்ரமும் அமைதியாக இருந்தான் .

 

“நல்லா சாப்டீங்களா?” , என்று விக்ரமுடைய தாயின் குரல் அவர்களது   சிந்தனையை கலைத்தது.

ரிப்போர்ட்டர்ஸ் கேள்வி கேட்க்கும் நேரமும் நெருங்கியது.

ரிப்போர்ட்டர்ஸ் விக்ரமிடம் சரமாரியாக கேள்வியை தொடுத்தனர்.

வேலை வாய்ப்பு , மற்ற கம்பெனியிலிருந்து இவர்களுது கம்பெனி எப்படி வேறு பட்டு நிற்கும் என்பது போல் பல கேள்விகளை  கேட்டனர். இவர்களுடைய  அந்நிய  முதலீடு பற்றி கேட்டனர் .

திவ்யா இடக்குமடக்காக  கேள்வி கேட்டு தன் வேலைக்கு  உலை வைத்து விடுவாளோ ?    என்று ரமேஷ் பதட்டத்துடன் காத்திருக்க,  அனைத்து கேள்விகளுக்கும் சிரித்த முகத்தோடு , தெளிவாகவும்  பொறுமையாகவும் பதில் கூறினான் விக்ரம்.

அடுத்ததாக திவ்யா தன் கேள்வியை  கேட்க தொடங்கினாள்.

ரமேஷ், தன் நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களை துடைத்தான்.

 

திவ்யா என்ன கேட்பாள்..? விக்ரமிடம் நியாயம்  இருக்குமா..?

ரமேஷின் பதட்டத்தில் அர்த்தம் இருக்குமா..?

பாண்டியனுக்கு பர்கர் கிடைக்குமா..?

காத்திருப்போம்…….

tell your comments

One thought on “Akila Kannan’s Thaagam – 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!