Akila Kannan’s Thaagam 9
Akila Kannan’s Thaagam 9
தாகம் – 9
மணி ஏழு…
சூரியன் மறைந்து விட்டான்.
இருள் சூழ ஆரம்பித்து விட்டது. சூரியன் மறைந்து விட்டதால், வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் வெக்கை இன்னும் குறைந்தபாடில்லை.
நாம் சுறுசுறுப்பான சென்னை சாலையில் பல வாகனங்களுக்கு இடையில் நின்று கொண்டிருக்கிறோம். காற்று வீசிக்கொண்டிருந்தது. ஆனால் அனலாய் கொதித்தது.
எங்கு செல்லலாம்..?
ஒரு பக்கம் தீபா, பாண்டி வாழும் பகுதி.. மற்றோரு பக்கம் விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி. விக்ரமின் இண்டஸ்ட்ரி இங்கிருந்து பார்த்தாலே பிரமாண்டமாக தெரிகிறது. புது கலையோடு அழகாக காட்சி அளிக்கிறது. நாம் உள்ளே சென்றால், எ.சி யில் குளிர் காயலாம்.
இந்த பக்கமோ , தீபாவின் வீடு கண்ணுக்கு தெரியவில்லை.
சற்று தூரம் நடந்து உள்ளே செல்ல வேண்டும்.
அங்கிருக்கும் அம்மன் கோவில் பிரகாசமாக காட்சி அளித்தது.
அம்மன் கோவில் பக்கத்தில் உள்ள டீக்கடையில் சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
சாலை ஓரமாக குழந்தைகள் விளையாடும் சத்தம் நம் காதில் விழுகிறது. அப்பொழுது “டொம்” என்று சத்தம் கேட்டது.”அம்மா “, என்று
அலறினான் பாண்டி.
‘ஏண்டா.? ரோடு பக்கமா வந்து விளையாடாதனு , எத்தனா தபா சொல்லிருக்கேன்”, என்று பாண்டியின் கையை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றாள் பாக்கியம்.
“ஏய் தீபா..! உனக்கு என்ன ஆச்சு? பாண்டி ரோட்டு பக்கமா விளையாண்டுட்டு இருக்கான். நீ அவன பாக்காம என்ன பண்ற..?”, என்று கோபமாக கேட்டாள் பாக்கியம்.
தீபா எதையும் கவனிக்கவில்லை. அவள் அந்த சிவப்பு பையில் இருக்கும் ரூபாயை மீண்டும் மீண்டும் எண்ணினாள்.
“எத்தன தபா பாத்தாலும் புதுசா ஒன்னும் வராது..”, என்று தலையில் அடித்து கொண்டே ” உனக்கு என்ன வேணும்? “, என்று கேட்டாள் பாக்கியம்.
“அம்மா .. அந்த டீக்கடைல பாட்டில் வாட்டர் இருக்குல்ல? “, என்று தன் பேச்சை நிறுத்தி தாயைப் பார்த்தாள் தீபா.
“எது? பணக்காரங்க குடிப்பாங்களே.. அந்த தண்ணியா? “, என்று வாயைப் பிளந்தாள் பாக்கியம்..
“ஆம்..”, என்று தலை அசைத்தாள் தீபா.
“அதுக்கென்ன?”, என்று முகத்தை சுளித்துக் கொண்டே கேட்டாள் பாக்கியம்.
“அது அழகா இருக்குல்ல…” , என்று கேட்டாள் தீபா.
“பாக்க நல்லா தான் இருக்கும்.. நமக்கெல்லாம் ஒத்துக்காது “, என்று கூறினாள் பாக்கியம்.
“எது ஒத்து வராது?” , என்று கேட்டு கொண்டே வந்தார் ராமசாமி.
“பணக்காரங்க சாப்பிடறது ஒத்து வராதுனு சொன்னேன் ” , என்று கூறிக் கொண்டே கஞ்சி காய்ச்சினாள்.
“எல்லாரும் கஞ்சி குடிங்க “, என்று கூறினாள் பாக்கியம்.
“இல்லம்மா , எனக்கு பசி இல்லை ” , என்று கூறிக் கொண்டே தாவணியை இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள் தீபா.
மாலை அதிகமாக சாப்பிட்டதாலோ இல்லை மனதில் ஆசை வளர்ந்ததாலோ தீபாவுக்கு பசி இல்லை.
“அம்மா நாளைல இருந்து நான் பூ கட்டிக்குடுக்கிறேன் , எனக்கு ஒரு ரூபாய் தா.. மிச்சத்தை நீ எடுத்துக்கோ..”, என்று படுத்த படியே கேட்டாள் தீபா.
“ஏய் உனக்கு எதுக்கு காசு… ? நீ படிக்கற வேலைய மட்டும் பாரு.. “, என்று சிடுசிடுத்தாள் பாக்கியம்.
“தீபாவை பத்தி தா நமக்கு தெரியும்ல.. சேர்த்து வச்சி நம்ம கிட்ட தா குடுப்பா…”, என்று பாக்கியத்திடம் கூறிக் கொண்டே “தீபா .., நீ பூவெல்லாம் கட்ட வேண்டாம் .. நான் உனக்கு ஒவ்வொரு வாரமும் ரெண்டு ரூபா தரேன்.நீ நல்லா படிச்சி பெரிய ஆளாகணும்.” , என்று கூறினார் ராமசாமி.
“வாரம் ரெண்டு ரூபாய்.. எப்படியும் ரெண்டு மாசத்தில் வாட்டர் பாட்டில் வாங்கிவிடலாம் ” , என்ற எண்ணம் தீபாவுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.
தீபா நிம்மதியாக கண்ணுறங்கிவிட்டாள்.
வீட்டில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் , நாம் சற்று வெளியில் நடப்போம்.
அட!!! சாலையில் ரமேஷ் வேலையை முடித்து விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறான்.
ரமேஷின் தொலைபேசி ஒலித்தது.
“ஹலோ திவ்யா சொல்லு..” , என்று பேச ஆரம்பித்தான் ரமேஷ் வண்டியை நிறுத்தியபடியே….
“ரமேஷ், இப்ப தான் வேலை முடியுது வீட்டுக்கு கூட்டிட்டு போயேன்…”, என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள்.. .
ரமேஷின் வண்டி திவ்யாவின் அலுவலகத்திற்கு சென்றது.
அலுவலகத்தின் வாயிலில் , அனைவரும் வீட்டுக்கு செல்லும் பரபரப்போடு வெளியே வந்து கொண்டிருந்தனர். ஆண்களும் , பெண்களும் வேகமாக செயல் படுவதை பார்த்து கொண்டிருந்தான் ரமேஷ்.
திவ்யா இன்னும் வரவில்லை.
ரமேஷ் அவன் மொபைலில் மணி பார்த்தான்.
எப்படியும் திவ்யா பத்து நிமிடம் கழித்து தான் வருவாள் என்று ரமேஷிற்கு நன்றாக தெரியுமென்பதால் அவன் அங்கும் இங்கும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
திவ்யா பலரோடு சிரித்தபடியே பேசிக் கொண்டு நடந்து வந்தாள்.
“அதற்குள் இத்தனை நண்பர்களா…? ” , என்று நம்மை போல் ரமேஷுக்கும் தோன்றியது. ரமேஷ் அருகே வந்த திவ்யா பளிச்சென்று இருந்தாள்.
“ஏய் … திவ்யா எப்படி இவ்வளவு பிரெஷா இருக்க?” என்று கேட்டான் ரமேஷ்..
‘ஜஸ்ட் வாட்டர் வாஷ்…நோ கிரீம் .. சிம்ப்ளிஸிட்டி தா பியூட்டி…. ” , என்று ஸ்டைலாக கூறியபடி வண்டியில் ஏறினாள் திவ்யா.
சிரித்து கொண்டான் ரமேஷ்.
“ரமேஷ்.. ரொம்ப பசிக்குது. ஹோட்டல் போவோமா..?’, என்று கேட்டாள் திவ்யா.
“வீட்ல சாப்பாடு ரெடியா இருக்கும்… வீட்ல போய் சாப்பிடுவோம்”, என்று கூறிக் கொண்டே வண்டியை வேகமாக செலுத்தினான் ரமேஷ்.
“உன்னைய கட்டிக்கரவ ரொம்ப பாவம் “, என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் திவ்யா.
“எதுக்கு தேவை இல்லாம செலவழிக்கணும்? வீட்ல செஞ்சி வச்சிருக்க சாப்பாடு வேஸ்ட்டா தானே போகும் “, என்று தீவிரமாக பேசினான் ரமேஷ்.
“கஷ்ட காலம் “, என்று முனங்கி கொண்டே வந்தாள் திவ்யா.
இரவாகிவிட்டதால் டிராபிக் சற்று குறைவாக இருந்தது. வண்டி வேகமாக பறந்தது. சிறிது நேரத்தில் ரமேஷின் வண்டி அவர்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட்க்குள் நுழைந்தது.
“வண்டி சத்தம் கேக்குது, ரமேஷ் திவ்யா வந்திருப்பாங்க.. “, என்று கூறிக் கொண்டே கதவை திறந்தார் ஷண்முகம்.
“ரெண்டு பெரும் முகத்தை கழுவிட்டு வாங்க.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”, என்று கூறிக் கொண்டே
சாப்பாடு பரிமாறினாள் ரமேஷின் தாய்.
“திவ்யா, இந்த வேலைய எப்ப விட போற..?”, என்று வினவினாள் திவ்யாவின் தாய் .
“அத்தை.. அவ சாப்பிடட்டும்.. ” , என்று கூறினான் ரமேஷ்.
திவ்யா சப்பாத்தி துண்டை எடுத்து வாயில் வைத்தாள்.
“எனக்கு நீ திரும்பி வீட்டுக்கு வர வரைக்கும் வருவியா மாட்டியானு பயமா இருக்கு.. உங்க அப்பா இந்த வேலையால தான் நம்மள விட்டுட்டு போய்ட்டாரு….”, என்று கண்ணை கசக்கினார் திவ்யாவின் தாய்.
சாப்பிடும் இடத்தை விட்டு எழுந்து சென்றாள் திவ்யா.
“திவ்யா. கொஞ்சம் கூட சாப்பிடல…, சாப்பிட்டுட்டு போ…”, என்று கூறினான் ரமேஷ்.
“இந்த வீட்ல நிம்மதியா சாப்பிட கூட முடியாது” , என்று கூறிக் கொண்டே தன் அறைக்கு சென்று கதவை அடைத்து விட்டாள் திவ்யா.
“சாப்பிடும் பொது தான் அவளை திட்டுவியா..?” , என்று தன் தங்கையை கடிந்தார் ஷண்முகம்.
ரமேஷும் சரியாக சாப்பிடவில்லை.
“பாவம், இன்னக்கி ரெண்டு பெரும் சரியாய் சாப்பிடல “, என்று கூறி கொண்டே இடத்தை சுத்தம் செய்தார் ரமேஷின் தாய்.
ரமேஷ், திவ்யாவின் அறைக்கு சென்றான்.
“உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம், அத்தை சொல்றதுல ஒரு நியாயம் இருக்குல்ல..? “, என்று பொறுமையாக கேட்டான் ரமேஷ்.
“எது நியாயம்? எங்க அப்பா தூங்கும் பொழுது இப்படி நடந்திருந்தா…, எங்க அம்மா என்னை தூங்கவே கூடாதுனு சொல்லிருப்பாங்களா..?”, என்று இடக்காக கேட்டாள் திவ்யா.
பதில் ஏதும் பேசாமல் , அவளை உற்று பார்த்தான் ரமேஷ்.
“ஏன் அப்படி பாக்கற?” , என்று கேட்டாள் திவ்யா.
“நீ பேசுறது உனக்கே நியாயமா இருக்கா?” , என்று தன் புருவங்களை உயர்த்தினான் ரமேஷ்.
“நான் பேசறது எனக்கு நியாயமாத்தான் இருக்கு… நீ தான் என் சாப்பாட்டுக்கு உல வச்சிட்ட… ஹோட்டல்ல ஒரு சாப்பாடு வாங்கி குடுத்திருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது… நானும் நல்ல சாப்பிட்டுருப்பேன் “, என்று கூறிக் கொண்டே படுத்தாள் திவ்யா.
அவள் பக்கத்தில பல காகிதங்கள் இருக்க..
“என்ன டாக்குமெண்ட்ஸ்.? ” , என்று கேட்டான் ரமேஷ்.
“என் ப்ராஜெக்ட் இண்டஸ்டிரியல் வேஸ்டேஜ் பற்றி தான் ….” , என்று கூறினாள் திவ்யா.
“ஓஹ்..!!!” , என்று கூறினான் ரமேஷ்.
“உங்க கம்பெனி வேஸ்டேஜ், எப்படி டிஸ்போஸ் பண்றீங்க?” , என்று கேட்டாள் திவ்யா.
“எல்லாமே கூவத்துல தான் கலக்கும்னு நினைக்கிறேன்”, என்று யோசித்த படியே கூறினான் ரமேஷ்.
“அன்னக்கி விக்ரம், எல்லாத்துக்கும் பிளான் இருக்குனு சொன்னாரு…?”, என்று வினவினாள் திவ்யா..
“உனக்கு என்ன வேணும்?”, என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் ரமேஷ்.
“ஒண்ணுமில்லை…”, என்று தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் திவ்யா.
“பசிக்குதுனு சொன்ன…, ஒண்ணுமே சப்பாடலியே … நான் உன்னைய ஹோட்டலுக்காவது கூட்டிட்டு போயிருக்கணும்…”, என்று இப்பொழுது வருத்தப்பட்டான் ரமேஷ்..
“தட்ஸ் ஓகே’… ரொம்ப பீல் பண்ணாத…. நீ போய் தூங்கு… நாளைக்கி என் வண்டி வந்திரும்.. நானே வேலைக்கு போய்டுவேன்… நீ டிராப் பண்ண வேண்டாம்.”, என்று கண்களை மூடியபடியே கூறினாள் திவ்யா..
“ஓகே.. குட் நைட்….”, என்று தன் அறைக்கு சென்றான் ரமேஷ்..
திவ்யாவின் கண்கள் மூடி இருந்தாலும்.., அவள் சிந்தனை விழித்துக்கொண்டு தான் இருந்தது..
“விக்ரமை சந்திக்க வேண்டும்.. கேட்க நினைப்பதை கேட்டு விட வேண்டும்… அதுவும் ரமேஷிற்கு தெரியாமல்.. தெரிந்தால் இவன் கேட்க விட மாட்டான்.. எப்படி விக்ரமை சந்திக்கலாம்? எப்படி அவனை கேள்வி கேட்பது..? “, என்று அவள் சிந்தித்து கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிட்டாள்.
திவ்யாவின் அறைக்கு எதிரில் தான் ரமேஷின் அறை. தேவைக்கேற்ப அனைத்து வசதிகளும் நிறைந்த வீடு. ரமேஷ் அவனுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.
ரமேஷின் சிந்தனை விக்ரமை சுற்றி வந்தது..
“விக்ரம் நல்லவர் தான்.. ஆனால் , அவருக்கு இடையூறு விளைவித்தால், விக்ரமின் குணம் எப்படி மாறும்?? இதனால் , திவ்யாவிற்கு எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ..??
இப்பொழுது ரமேஷின் சிந்தனை விக்ரமிடமிருந்து திவ்யாவுக்கு இடம் பெயர்ந்தது..
“இவளுக்கு இந்த வேலை தேவையா..? எப்படியும் சொன்னால், கேட்க மாட்டாள் …. இவளுக்கு திருமண ஏற்பாடு செய்து விட வேண்டியது தான்.. கல்யாணம் , குழந்தை என்றாகிவிட்டால் இவளுக்கு வேலையின் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து விடும்”
இப்படி திவ்யாவுக்கு நல்லது செய்வதாக எண்ணி ரமேஷ் எடுத்த முடிவு யார் வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்றறியாமல் நிம்மதியாக உறங்கப் போனான் ரமேஷ்.
இவர்கள் இவ்வாறு நினைக்க, விக்ரம் சாப்பிடாமல் தட்டில் உள்ள உணவை அங்கும் இங்குமாக ஒதுக்கி வைத்து கொண்டிருந்தான்.
“ஏன்டா..? சாப்பிடாம என்னடா பண்ற..?? ” , என்று அழுத்தமாகவே கேட்டார் விக்ரமின் தாயார்.
“ஒன்னும் இல்ல அம்மா. பசி இல்லை “, என்று கூறி விட்டு தன் அறைக்கு செல்ல தயார் ஆனான்.
“ஏன்டா… கல்யாணம் பண்ணிக்கோ … “, என்று பேச்சை தொடங்கினார் விக்ரமின் தாயார்.
” ரெண்டு மாசத்துல பிசினெஸ் விஷயமா அமெரிக்கா போறேன் .. போயிட்டு வந்து முடிவு பண்ணிக்கலாம் ” , என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான் விக்ரம்.
“இவனுக்கு என்ன ஆயிற்று “, என்று சிந்தித்த விக்ரமின் தாயார் “விட்டுப் பிடிப்போம் ” என்று முடிவு செய்தார்.
அவன் அறைக்கு செல்லும் வழியில் உள்ள மீன்கள் , இவனுக்காக காத்திருக்க விக்ரம் மீன் தொட்டியை கடந்து சென்றான்.
விக்ரம் தங்களை பார்க்காத வருத்தத்தில் மீன்கள் சோகமாய் நீந்தியது.
விக்ரமின் அறையில் பாடல் ஒலித்து கொண்டு தான் இருந்தது. ஆனால்
அந்த பாடல் விக்ரமின் காதுக்குள் செல்லவில்லை.
விக்ரமின் காதில் அந்த சொற்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“எல்லாம் இந்த படு பாவி பசங்களாலத் தான். …. நாசமா போவாங்க….. இவங்க ஆரம்பிச்ச கம்பெனி விளங்கவா போகுது…. பணக்கார திமிர்…?”
விக்ரமிற்கு ஏனோ இப்பொழுதும் காதுகளை மூடி கொள்ள வேண்டும் போல இருந்தது..
” இவர்கள் ஒரு பக்கம் என்றால் அவள் வேறு.. “, என்று நினைத்தான் விக்ரம்..
“ஆனால் அழகாய் தான் இருந்தாள்… எந்த வித ஒப்பனையுமின்றி…” , என்று அவன் சிந்தனைக்கு இடையில் தோன்றியது.
அவள் சிந்தனையை உதறி தள்ளிவிட்டு , “யார் என்ன சொன்னால் என்ன? நான் என் மனசாட்சிக்கு உட்பட்டு தான் நடக்கிறேன் “, என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு உறங்க ஆரம்பித்தான் விக்ரம்.
பணமும் வசதியும் வாழ்க்கை முறையை வேண்டுமானால் மாற்றலாம் பிரச்சனைகளை அல்ல..
பசியும்..மனமும் ..
மனமும்.. ஆசையையும்…
ஆசையும்.. ஏமாற்றங்களும் …
ஏமாற்றங்களும்.. வலிகளும்…
வலிகளும்.. போராட்டங்களும்.. அனைவருக்கும் சமமே..
இந்த இரவு அனைவருக்கும் மனப் போராட்டங்கள் நிறைந்த இரவாய் அமைந்தது.
மறுநாள்,
அழகான காலைப் பொழுது சூரியன் உதித்து விட்டான். விக்ரம் தன் அறையிலிருந்து ஜன்னல் திரையை விலக்கி பார்த்தான்.. மழை துளி..
மழை காலம் என்று இப்பொழுது தான் விக்ரமிற்கு நினைவுக்கு வந்தது..
” நேற்று வரை வெயில் , இன்று திடீர் மழை ” , என நினைத்துக் கொண்டான் விக்ரம்.
குளித்து விட்டு வேகமாக கிளம்பினான்.
“தூக்கம் மனிதனுக்கு பல நிம்மதியை கொடுக்கும் என்பது உண்மை தான் போலும்… விக்ரமின் முகம் தெளிவாய் இருக்கிறது. ” , என்று நினைத்து கொண்டார் விக்ரமின் தாயார்.
“என்னடா ? , சீக்கிரம் கிளம்பிட்ட…” , என்று வினவினார் விக்ரமின் தாய்.
“மழை அம்மா… டிராபிக் அதிகமா இருக்கும்… கொஞ்சம் வெளி வேலைகள் முடிச்சிட்டு ஆபீஸ் போகணும்..”, என்று கூறினான் விக்ரம்.
“எதாவது சாப்டுட்டு போடா…”, என்று அக்கறையுடன் கூறினார் விக்ரமின் தாயார்.
“போற வழில சாப்ட்டுக்குறேன் “, என்று கூறிக் கொண்டே தாயின் கன்னங்களை பிடித்து கொஞ்சினான் விக்ரம்.
“சாப்பிடாம எனக்கு ஐஸ் வைக்காத “, என்று முகத்தை திருப்பினார் விக்ரமின் தாய்.
“சரி சரி கோச்சிக்காதீங்க… லைட்டா எதாவது சாப்பிடுறேன் “, என்று கூறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தான்.
அப்பொழுது தான் நேற்று சரியாக சாப்பிடாதது நினைவுக்கு வர, நேற்றைய பிரச்சனைகளும் நினைவுக்கு வந்தது.
“இன்று திவ்யாவை எப்படியாவது சந்திக்க வேண்டும். கேட்க நினைத்ததை கேட்டு விட வேண்டும்….” , என்று மனதில் குறித்துக் கொண்டான் விக்ரம்.
அந்த பெரிய அறையின் ஓரமாக மீன்கள் சோகமாக நீந்தி கொண்டிருந்தன..
வெளியில் சென்ற விக்ரம் ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி வீட்டுக்குள் வந்து அந்த அழகான மீன்களை பார்த்தான்.
விக்ரம் அவர்களை பார்த்துவிட்ட சந்தோஷத்தில், மீன்கள் வேகமாக நீந்தியது. அவன் அதற்கு தேவையான உணவை மீன் தொட்டியில் போட்டுவிட்டு ” பை மா….” , என்று கூறிக்கொண்டே வேகமாக காரை நோக்கி நடந்தான்…
விக்ரமின் கார் சென்னை ட்ராபிக்கில் நுழைந்தது.. அவன் பல முறை மணி பார்த்து விட்டான் … மணி ஓடியதே ஒழிய , கார் நகர்ந்த பாடில்லை..
அந்த நிமிட வாழ்க்கையை ரசிப்போம் என்று முடிவுக்கு வந்தவனாக காரில் ஒலித்து கொண்டினிருந்த பாடலை கேட்க ஆரம்பித்தான்.
ஒரு மாற்றத்திற்கு ரேடியோ வில் பாட்டு கேட்கலாம் என்று முடிவுக்கு வந்தவனாக ரேடியோவை ஆன் செய்தான்.
“ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ “
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
திவ்யாவும் இதே பாடலாய் தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள் ..
திவ்யா மொட்டை மாடியில் நின்று கொண்டு மழையில் நனைந்த படியே பாடி கொண்டிருந்தாள் ..
திவ்யாவின் குரலை கேட்டு , ரமேஷ் அங்கு வந்தான்.. “காலையிலேயே ஏண்டி கத்துற..? எனக்கு நேரம் ஆச்சு .. உன்னைய நானே டிராப் பண்ணிட்டு ஆபீஸ் போறேன்.. ரெய்ன் கோட் எடுத்து வச்சிக்கோ .. பாடினதெல்லாம் போதும்.. சீக்கிரம் கிளம்பு “, என்று அவளிடம் கூறிவிட்டு தானும் அலுவலகத்திற்கு கிளம்பினான்.
மழையில் நனைந்து விட்டு ஆனந்தமாய் ஒரு குளியலை முடித்தாள்
திவ்யா.
அவள் தலையிலிருந்த்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
“என்ன டிரஸ் போடலாம்..??” , என்று சிந்தித்து தன் அலமாரியில் உள்ள அனைத்து உடைகளையும் எடுத்து பார்த்தாள்..
சுடிதார் .. ஸ்கிர்ட் .. லெக்கிங் .. என அனைத்தையும் பார்த்து விட்டு ஜீன்ஸ் , ரெட் ஷர்ட் அணிந்து கொண்டு கிளம்பினாள் திவ்யா..
“ஏண்டி போட போறது ஒரு பண்ட் சட்டை.. அதுக்கு எதுக்கு எல்லாத்தையும் கீழ போடுற?” , என்று திட்டிக் கொண்டே துணிகளை மடித்து வைத்தார் திவ்யாவின் தாயார்.
“இன்றாவது சாப்பிடும் பொழுது குழந்தையை திட்ட வேண்டாமென்று ஷண்முகமும் , ரமேஷின் தாயாரும் அறிவுறுத்த “சரி ” , என்று தலை அசைத்தார் திவ்யாவின் தாயார்.
“இந்த வீட்டில் குழந்தை எங்க இருக்கிறது.. ? ” , என்று ரமேஷ் சிந்தித்தான் .
திவ்யா வந்து அமர.., திவ்யாவின் தாய் அமைதியாக சாப்பாடு பரிமாறினார்.
திவ்யா சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “கல்யாணம் ஏற்பாடு பண்ணலாமுன்னு நினைக்கிறேன்…” , என்று தன் பேச்சை ஆரம்பித்தார் ஷண்முகம்.
“வாவ் !! கங்கிராட்ஸ் ரமேஷ் …. ” , என்று கூறினாள் திவ்யா..
” திவ்யா நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.. “, என்று கூறினார் ஷண்முகம் திவ்யாவின் மாமாவாக…..
அனைவரும் தீவிரமாக பேசி கொண்டிருக்க ,
திவ்யா தன் போக்கில் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
ஓ கண்ணாலன் வந்து பூமாலை போடவா
ஏ அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே
என்று தன் கைகளால் தாளமிட்டு கொண்டிருந்தாள்…
“எவ்வளவு முக்கியமா பேசிட்டு இருக்கோம்… என்ன பாட்டு வேண்டி கிடக்கு.. “, என்று அவள் தலையில் “நங்” கேன கொட்டினார் திவ்யாயின் தாயார்.
அவள் பாடிய பாடலின் பொருளும்.., திவ்யா வாங்கிய குட்டும் ரமேஷிற்கு சிரிப்பை வர வளைத்தது.
இந்த சிரிப்பை திவ்யா பார்த்து விட்டால், நாம் தொலைந்தோம் என்றெண்ணிய ரமேஷ் ” சீக்கிரம் கிளம்பு நேரம் ஆச்சு…” , என்று கூறிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
ரமேஷ் ரெயின் கோட் அணிந்து வண்டியை ஓட்ட.. ஒரு ஜெர்கின் போட்டுக் கொண்டு பாதி நனைந்தும், நனையாமலும் அவன் பின் அமர்ந்து மழையில் சென்று கொண்டிருந்தாள் திவ்யா.
“திவ்யா ஒழுங்கா தலையும் மூடிக்கோ.. இல்லனா உனக்கு காய்ச்சல் தா வரும்…” , என்று திட்டி கொண்டே வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தான் ரமேஷ்.
ரமேஷ் தான் திட்டிக் கொண்டிருந்தான் . திவ்யாவின் காதில் எதுவம் விழுந்த பாடில்லை. அவள் மழைச் சாரலை ரசித்து கொண்டிருந்தாள்.
திவ்யா மழைச் சாரலை ரசிக்க தீபா என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்…
பாக்கியம் சோறு வடித்து கொண்டிருக்க , தீபா பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.
சட், சட் டென்ற சத்தம் அவள் காதில் விழுந்தது.
“என்ன சத்தம் ?”, என்று எட்டிப் பார்த்த தீபாவிற்கு அத்தனை ஆனந்தம்.
“பாண்டி சீக்கிரம் கிளம்பு டா…. மழை பெய்து டா… “, என்று கத்தினாள் தீபா.
“என்னது மழையா? ” , என்று ஆனந்தமாக துள்ளி குதித்தான் பாண்டியன்.
“அக்கா .. இன்னும் கொஞ்சம் நாளைக்கி தண்ணி பிரச்சனை இல்லை… ” , என்று பெருமூச்சு விட்டான் பாண்டி.
“தீபா, பாண்டி காலையில என்ன கதை பேசிட்டு இருக்கீங்க.? கஞ்சிய குடிச்சிட்டு.. சோறு கொண்டு போங்க.. ” , என்று கஞ்சியை குவளையில் குடுத்தார் பாக்கியம்..
“கஞ்சியை குடித்து விட்டு , பையை தோளிலும் சோறை கையிலும் எடுத்துக் கொண்டு “, சந்தோஷமாய் பள்ளிக்கு கிளம்பினார்கள்.
“ஏய் பாண்டி ஓடாத நில்லு டா….”, என்று கத்திக் கொண்டே அவன் பின்னாள் ஓடி வந்தாள் தீபா.
“அக்கா.. மழை சூப்பரு.. வாயை திறந்தா தண்ணி கிடைக்குது பாரு .. ” , என்று கூறியபடியே வாயை திறப்பதும் மூடுவதுமாக தண்ணீர் குடிப்பதுமாக சாலையில் ஓடினான் பாண்டி..
ட்ராபிக்கில் தன் பொறுமையை இழந்து , கிடைத்த இடத்தில காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் விக்ரம்.
அவன் காரை முந்திக் கொண்டு கிடைத்த சிறு இடைவெளியில நுழைந்து சென்றது ரமேஷின் வண்டி..
ரமேஷ் விக்ரமை கவனிக்கவில்லை. ஆனால் விக்ரம், ரமேஷ் , திவ்யா இருவரையும் கவனிக்க தவறவில்லை
வண்டிகளுக்கு இடையில் இருந்த சந்து பொந்துகளுக்குள் பாண்டி வேகமாய் ஓடினான்..
“வண்டி இருக்கு ஓடாத டா ” , என்று மீண்டும் கத்தினாள் தீபா.
“டிராபிக்ல வண்டி ஓடாது.. நாம தான் ஓட முடியும்.. ” , என்று தீபாவைத்
திரும்பிப் பார்த்துக் கொண்டே கிடைத்த இடத்தில் ஓடினான் பாண்டி.
கிடைத்த இடத்தில் விக்ரம் காரை வேகமாக செலுத்த , ரமேஷ் வண்டியை நுழைக்க , பாண்டி உள்ளே நுழைய ஐயோ என்று அலறிய தீபாவின் சத்தம் அம்மாவென்று திவ்யாவின் சத்தத்தில் முடிந்தது.
பதறிய படியே விக்ரம் காரிலிருந்து இறங்கினான்.
என்ன நடந்தது என்று விக்ரமிற்கு புரியவில்லை. அங்கு கூட்டம் கூடியது.
யாருக்கு என்ன நேர்ந்தது…?
நடந்த சம்பவத்தால் யாரின் வாழ்க்கை திசை மாறப்போகிறது….
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள்..
அவர்களின் ஆசைகள் நிறைவேறுமா இல்லை நிராசைகளாக முடிந்து விடுமா..?
தாகம் தொடரும்……