VNE 45

VNE 45

45
சுஷ்ருதாவின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த அவனது பர்சனல் அறையிலிருந்து மாநகரத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ஷ்யாம். அது ஒரு சிறிய அறைதான். ஆனால் அத்தனை வசதிகளையும் கொண்டது. அவன் மட்டுமே உபயோகிப்பான். குட்டி பிரிஜ், ஓய்வெடுக்க சிறு கட்டில், எல்ஈடி என அவசரத்தேவைக்கான அறை.
வெளிச்சப் புள்ளிகளாய் வாகனங்கள். இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. ஏசியின் சில்லிப்பை மீறிய வெம்மை மனமெங்கும்!
ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு ஒய்ந்து நின்று கொண்டிருந்தான். அவனது கோபம் அதிகபட்சம் தான். ஆனால் அதை அவனால் தவறென்று கருத முடியவில்லை. இன்னமும் அவனது தனிப்பட்ட படங்கள் மற்றும் வீடியோவை காட்டி மஹா கேள்வி கேட்ட அவமானத்திலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. அதை நினைக்கும் போது விஜியின் மேல் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
விஜியை ஓட ஓட விரட்டி அடித்தாயிற்று. ஆனால் அந்த கோபம் போய்விட்டதா? அந்த அவமானம் களையப்பட்டு விட்டதா? அவனது கரும்புள்ளி அழிக்கப்பட்டு விட்டதா? கோணலான பாதை நேராக்கப்பட்டு விட்டதா?
முதல் முறையாக வாழ்க்கை குறித்தான சிந்தனை அவனுக்குள்…
மனதுக்குள் இருந்த கசப்பை தூக்கி ஏறிய முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் முடியவில்லை. எத்தனை முயற்சி செய்தாலும் அது முடியாது என தெரிந்தது.
ஃப்ரிஜ்ஜிலிருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து ஷாட் க்ளாசில் ஊற்றினான். அவனுக்கு அப்போது அது மிகவுமே தேவைப்பட்டது. ஏதேனும் ஒரு போதை, தன்னை மறந்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கொஞ்சமான அவமானமில்லை. கூடவே இருந்தவன் குழிப் பறித்ததோடு இல்லாமல், இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் செய்து விட்ட ஆத்திரம் அடங்க இல்லை.
கையிலிருந்த க்ளாசை உறுத்துப் பார்த்தான். தூக்கி அடிக்க வேண்டும் போல இருந்தது.
மகாவிடம் பேசலாம்… ஆறுதல் தேடலாம்… வேறு விஷயமாக இருந்தால்! அவள் குத்திக் காட்டிய பிறகு, அவளிடம் பேச தயக்கமாக இருந்தது. மிகவும் சங்கடமான சூழ்நிலை… எதிர்கொண்டு தானாக வேண்டும்… ஆனால் எப்படி எனதான் தெரியவில்லை அவனுக்கு.
கார்த்திக்கிடம் கூட இயல்பாக பேச முடியவில்லை. மௌனமாகவே கூட இருந்து விட்டு மௌனமாகவே சென்று விட்டான். அவனது சங்கடமும் புரிந்தது. ஆனால் யாரிடமாவது மனம் விட்டு பேச முடியாதா என்று தோன்றியது.
ஆனால் யாரிடம் பேச?
அப்போது இருந்த மனநிலையில் யாரையும் நம்பவும் முடியவில்லை. அத்தனை பேரும் துரோகிகளாகவும் ஏமாற்று பேர்வழிகளாகவும் தோன்ற ஆரம்பித்து இருந்தது.
அவனுக்கும் புரிந்தது. அத்தனை பேரும் அப்படியல்ல என்று! ஆனால் அவனையும் அறியாமல், மனம் அந்த பாதையில் பயணிப்பதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒன்று… இரண்டு… மூன்று… வரிசையாக ஷாட்கள் உள்ளே போக ஆரம்பிக்க, சற்று கண்கள் சொருகியது. மிதமான போதை… தள்ளாடவெல்லாம் இல்லை. தன்னையுமறியாமல் மனம் லேசாக இருப்பதை போல உணர்ந்தான் ஷ்யாம். சிகரெட்டை தேடினான். அங்கிருந்த டீபாய் மேல் தான் வைத்த நினைவு.
தேடினான். கிடைக்கவில்லை.
முகத்துக்கு நேராக தேடிய சிகரெட் நீட்டப்பட, நிமிர்ந்து பார்த்தான்.
மஹா நின்றிருந்தாள்.
புன்னகைக்க முயன்று தோற்றான்.
முடியவில்லை. ஏதோவொரு உணர்ச்சி மனதை அழுத்தியது. அவளிடம் முன்பு போல நெருக்கத்தை காட்ட முடியவில்லை. இதுவே முன்னர் என்றால் அவளை பார்த்தவுடனே மனம் ஜிவ்வென்று பறக்கும். அணைக்க துடிக்கும். முத்தமிட தவிக்கும். ஆனாலும் வெகுவாக தன் மனதை அடக்கிக் கொண்டு புன்னகைப்பான்.
ஆனால் இப்போது அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழவில்லை. முதலில் தோன்றவில்லை. ஆனால் நேரம் போக போக குற்ற உணர்ச்சி மனதை அழுத்தியது.
இந்த உணர்ச்சியோடு அவளை வாழ்நாள் முழுவதும் எதிர்நோக்க முடியுமா என்று தான் தோன்றியது.
இடது கையை திருப்பி வாட்சை பார்த்தான். மணி ஒன்பதை கடந்து இருந்தது. இந்த நேரத்தில் இவள் எப்படி இங்கே என்று யோசித்தான்.
“வா மஹா…” என்றவன், லைட்டரை மீண்டும் தேட, அதையும் அவளே எடுத்து ஆன் செய்தாள்.
எப்போதும் மஹா இருக்கும் போது புகைக்க விரும்ப மாட்டான். அது அவளுக்கான உரிமை. புகைப்பது வேண்டுமானால் தன்னுடைய உரிமையாக இருக்கலாம். ஆனால் அவளையும் அந்த சூழ்நிலையில் இருந்துக் கொள் என்று கட்டாயப்படுத்துவது அவளுடைய உரிமையை தான் மீறும் செயல் என்பது அவனது கருத்து.
ஆனால் இப்போது அதையும் கைவிட்டான்.
அவளிடமிருந்து வாங்கியவன், தானே சிகரெட்டை பற்ற வைக்க, அவள் ஷ்யாமை ஆழ்ந்து நோக்கினாள்.
“என்ன மஹா… இந்த நேரத்துல? பத்து மணிக்கு மேல சண்டை போட கூடாதுன்னு சொல்வியே…” என்று கூறிவிட்டு சிரிக்க முயன்றான்.
அவள் சிரிக்கவில்லை. அவனையே ஆழ்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள்.
சிகரெட் புகையை ஆழ்ந்து இழுத்து வெளியே விட்டவன், ஏசி ரிமோட்டை எடுத்து ஆப் செய்து விட்டு ஜன்னலை திறந்து விட்டான்.
வெளிக்காற்று ஆவேசமாக அறையினுள் வந்தது.
சற்று நேரம் மௌனமாகவே சிகரெட்டை பிடித்துக் கொண்டிருந்தவனுக்கு பதற்றமெல்லாம் தணிவது போன்ற ஒரு உணர்வு… ஆனால் பதற்றம் உண்மையிலேயே தணிந்ததா என்று கேட்டால் இல்லையென்பான். அதுதான் ஐந்தே காலடியில் தனக்கு முன் நின்று கொண்டிருக்கின்றதே என்று தோன்றியது.
“சாப்ட்டியா?” அத்தனை உணர்வுகளையும் தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு கேட்டாள் மஹா.
ஜன்னலிலிருந்து பார்வையை திருப்பியவன், அவளை பார்த்தான். ஆம் வெறுமனே பார்த்தான். வெறுமையாக… வெற்றிடத்தில் இருப்பவனாக… அவனது பார்வையை தாங்கிக் கொண்டு நின்றாள் மஹா.
“பசியில்ல…” மீண்டுமொருமுறை புகையை இழுத்து விட்டவன் திரும்பவும் ஜன்னலின் புறம் திரும்பிக் கொண்டான்.
“மத்தியானம்?”
“பசியில்ல…”
“காலைல…” என்றதும், திரும்பி அவளை பார்த்தவன்,
“லீவ் மீ அலோன் மஹா… ப்ளீஸ்…” என்று கூறியவனின் கண்களை ஆழமாக பார்த்தாள்.
அந்த பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. திரும்பிக் கொண்டான்.
“எத்தனை பேக்கட்?” என்று அவள் சிகரெட்டை காட்டி கேட்க, அவன் பதில் கூறவில்லை.
“கண்டிப்பா அதிகமாத்தான் இருக்கும்…” என்றவள், டீப்பாயை பார்த்தாள். விஸ்கி இன்னும் மிச்சமிருந்தது.
“தனியா குடிச்சிட்டு இருக்க போல? நான் வேண்ணா கம்பெனி குடுக்கட்டா?” என்று கேட்க, அவனுடைய முகத்தில் இறுக்கம் குறைந்து லேசான புன்னகை எட்டிப் பார்த்தது.
“ஒரு ஷாட் எனக்கு கொடுத்துட்டு நீயும் எடுத்துக்கோ… ஐ ஹேவ் நோ அப்ஜக்ஷன்…” என்று தோளை குலுக்கியவனை பார்த்து இப்போது முறைக்கத்தான் முடிந்தது.
“உன்னையெல்லாம் மனுஷன்னு எவன் டா சொன்னான்?” என்று கடுப்படித்தவள், ரிசப்ஷனுக்கு இன்டர்காமில் அழைத்து, “எம்டி ரூம்ல இருந்து பேசறேன்மா… சாப்பிட என்ன இருக்கு?” என்று கேட்க,
“கேண்டீன்ல கேட்டுட்டு உடனே இன்பார்ம் பண்றேன் மேடம்…” உடனடியாக பதில் வந்தது.
“ஓகே…” என்று வைத்துவிட, அடுத்த இரண்டாவது நிமிடத்தில், இன்டர்காம் அலறியது.
“மேடம்… தோசை, சாம்பார் மட்டும் இருக்காம்… வேற ஏதாவது வேணும்னா உடனே செஞ்சு தந்துடறதா சொல்றாங்க…” எனவும், இன்டர்காமின் காதை மூடியபடி,
“உனக்கு தோசை ஓகே வா?” என்று ஷ்யாமை பார்த்து கேட்க,
“எனக்கெதுவும் வேண்டாம்…” என்று மறுத்தான்.
“உனக்கு வேணுமா வேண்டாமான்னு கேட்டேனா?” என்று பதிலுக்கு கடித்து வைத்ததில் அமைதியானான். மௌனம் சம்மதம் அல்லவா!
“ஓகே ம்மா… இளந்தோசையா திருப்பி போடாம நெய் விட்டு, மூணு தோசை… அனுப்பிடுங்க…” என்று திரும்பினாள். அவனுக்கு அப்படித்தான் பிடிக்கும். ரொம்பவும் முறுகலாக இல்லாமல் லேசான முறுகலோடு எதிர்பார்ப்பான். அதை அவள் அறிவாள்.
அவன் திரும்புவது போலவே தெரியவில்லை. பார்வை அனைத்தும் மாநகரத்தின் இருளில் மூழ்கி கிடந்தது.
இந்த இருளுக்கு ஏதோவொரு வசீகரம் இருக்கிறது. மனம் எத்தனை கனமாக இருந்தாலும், சற்று நேரம் இந்த இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தால் ஏதோவொரு நிம்மதி.
மஹா வந்தது முதல் அந்த படங்களை பற்றியோ விஜியை பற்றியோ கூட பேசவில்லை. ஆனால் அவனுக்கு உள்ளுக்குள் உறுத்திக் கொண்டு இருந்தது. அதனால் தான் அவளது முகத்தை பார்க்காமலேயே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான்.
தோசை வந்து சேர, அவனை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தவள், சோபாவில் அமர வைத்து,
“சாப்பிடு…” என்று கூற, அவனுக்கு சாப்பிடும் எண்ணம் வரவே இல்லை. அவனது உலகமனைத்தும் அவள் அந்த வீடியோவையும் படங்களையும் காட்டி கேட்டதிலேயே நின்று விட்டிருந்தது.
“என்ன ஷ்யாம்? அப்படியே பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டவள், தோசையை பியைத்து காலையில் அவன் ஊட்டி விட்டதை போல, அவனுக்கு இப்போது ஊட்டி விட, வாய் பேசாமல் வாங்கிக் கொண்டான், அவளை பார்த்தபடி!
அவன் உண்ண ஆரம்பித்த பிறகுதான் அவனது பசியின் அளவு தெரிந்தது. வேகமாக உண்டான்!
இத்தனை பசியை வைத்துக் கொண்டு சிகரெட்டை மட்டும் ஊதி தள்ளுகிறானே என்ற கவலை உள்ளே அரித்தது.
“இன்னும் ரெண்டு சொல்லி இருக்கலாம் போல…” என்று அவள் கூறும் போது மூன்று தோசை காணாமல் போயிருந்தது.
“இல்லடி போதும்…” என்றவன், “கேக்க வந்ததை கேளு…” என்று தயாராகிக் கொண்டான்.
அவன் கூறினாலும் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். கைகளை கழுவி விட்டு வந்து அவன் முன்பு அமர்ந்தவள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
“நீ நிஜமா மனுஷனா ஷ்யாம்?” அவனை பார்த்தபடி கேட்க, அவன் யோசித்தான். மனிதன் செய்யக் கூடிய காரியமா அவன் விஜிக்கு செய்தது? அவனது மனதை கேட்டுப் பார்த்தான். தவறே இல்லை என்றது.
“விஜி செய்த காரியத்துக்கு அவனுக்கான தண்டனை…” என்று அவன் முடிக்க பார்க்க,
“நீ யார் அவனுக்கு தண்டனை கொடுக்க?”
“நான் கொடுக்காம வேற யார் கொடுப்பாங்க?”
“அதை பார்த்துக்க சட்டமும், போலீசும் இருக்கு… நீ இப்படி பண்ணலாமா?
“என்ன அப்படி பண்ணிட்டேன்?” என்று ஒன்றுமே இல்லாதது போல கேட்டு வைக்க,
“நீ பண்ணது ஒண்ணுமே இல்லையா ஷ்யாம்?” அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இல்லை… அவன் பண்ண காரியத்துக்கு முன்னாடி நான் பண்ணினது ஒண்ணுமே இல்லை…” என்று அழுத்தமாக கூறினான்.
“இவ்வளவு மிருகத்தனம் ஊறிப் போய் இருக்க மனுஷனையா நான் காதலிச்சேன்?” என்றவள், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.  
“வேற வழி இல்ல… நீ இந்த மிருகத்தை சகிச்சு தான் ஆகணும்…” என்றவனின் குரலில் கடுமை ஏறியிருந்தது. மனதுக்குள் அதிர்வு.
ஷ்யாமை பார்த்தேயாக வேண்டும் என்று அடம் பிடித்து கிளம்பிய போது, கார்த்திக் தடுத்து, “இப்ப வேண்டாம் மஹா… ஷ்யாம் ரொம்ப அவுட் ஆப் கண்ட்ரோல்ல இருக்கார்… என்னாலையே அவரோட கோபத்தை தாங்க முடியாது…” என்று தடுக்க, “எனக்கு ஷ்யாமை எப்படி ஹேண்டில் பண்ணனும்ன்னு தெரியும் ண்ணா…” என்று பிடிவாதமாக கூறியவளை, சற்று பயத்தோடுதான் பார்த்தான்.
“நிறைய விஷயத்தை பார்த்ததுக்கு அப்புறம் இந்த கல்யாணம் தேவையான்னு இருக்கு மஹா…” கார்த்திக் கூறியதை கேட்டவள்,
“நான் அதிகப் பிரசங்கித்தனமா பேசறதா நினைக்காத ண்ணா… நான் மிசஸ் ஷ்யாம்… அவ்வளவுதான்…” என்று முடித்துவிட, அதற்கும் மேல் அவன் தடுக்கவில்லை.
அந்தளவு வீட்டில் வாதம் புரிந்து விட்டுத்தான் இங்கு வந்தது. அவனை கேள்வி கேட்டேயாக வேண்டும் அவளுக்கு. அத்தனை கோபத்தில் இருந்தாள். இவனோ இப்படியொரு பதிலை எவ்வளவு சுலபமாக கூறிவிடுகிறான்.
“என்னோட ஷ்யாமுக்கு இந்த மிருகத்தனம் கிடையாதே… தான் செய்றது தப்புன்னாலும் நெஞ்சை நிமிர்த்திட்டு போறவனாச்சே… இப்படி செய்றது கோழைத்தனம்… அவனை நியுடா ரோட்டுல அடிச்சு இருக்காங்க… எப்படி ஷ்யாம் இப்படி பண்ண?”
அவள் கேட்டாலும் அவன் ஏதும் பதில் கூறவில்லை. மௌனமாகவே அமர்ந்திருந்தான்.
“சொல்லுடா…”
“அவன் என்னை அசிங்கப்படுத்தினது உனக்கு தப்பா தெரியல… அவனை அடிச்சது தப்பா தெரியுது?” என்று கேட்க,
“நாம அசிங்கப்பட்டுடோம்ன்னு நாமளா நினைச்சா தான் அது அசிங்கம்… மார்பிங்ன்னு சொல்லிட்டு தூக்கி போட்டுட்டு போயிட்டே இரு… அவனை வீட்ல வெச்சுக் கூட அடிச்சு இருக்கலாம்… ஆனா இப்படி பண்ணி, அவனுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்?” என்று கேட்க,
“வித்தியாசமே இல்ல… சொல்லப் போனா அவனை விட நான் இன்னும் ரொம்ப மோசம் தான்… அந்த பயம் அவனுக்கு இல்லாம போச்சு… காரணம் நீ…” என்று கோபமாக கூற,
“நானா? என்ன சொல்ற நீ?” என்று கேட்டாள்.
“உன்னை தான் அவன் ட்ரம்ப் கார்டா யூஸ் பண்றான்… எனக்கு மஹாவ விட்டுக் கொடுத்து இருந்தா இப்படி பண்ணிருக்க மாட்டேன்னு சொல்றான்… அவனுக்கு உன்னை தூக்கி கொடுக்க சொல்றியா?” என்று கேட்க,
“என்ன ஷ்யாம்? லூசாடா நீ?”
“நீங்க விட்டுக் கொடுத்து இருந்தா அவங்க இன்னைக்கு மகாவேங்கட லக்ஷ்மி விஜய் யாம்… எனக்கு அப்படியே கொன்னு போட்றனும் போல இருந்துது…” என்று பல்லைக் கடிக்க, அவளுக்கு ஷாக்கடித்தது போலிருந்தது.
“கூடவே அவன் எனக்குக் கொடுத்த அவமானம், என்னால வெளியவே வர முடியல… அசிங்கமா இருக்குடி… யாரை வேண்ணா நான் பேஸ் பண்ணிடுவேன்… ஆனா உன்னை தான் என்னால பேஸ் பண்ணவே முடியல… அவ்வளவு அசிங்கமா இருக்கு… இப்படி நிலைல வெச்சுட்டானேன்னு கோபமா இருக்கு… காலைல நீ குத்தி பேசற அளவு என்னை தரம் தாழ்த்தி காட்டிட்டானேன்னு கோபமா இருக்கு…” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.
ஆக அடிப்படை அவள் தானா?
அவன் ஏதோ உளறுகிறான் என்று நினைத்துக் கொண்டு பெரிதாக அதை எடுக்கவில்லை. அதோடு ஷ்யாமின் கோபத்திற்கும் காரணம் அவள்! ஆக அத்தனைக்கும் அடிப்படை அவள்!
“கடவுளே…” தன்னையும் அறியாமல் கூறிவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
அதோடு தான் குத்திப் பேசவே நினைக்கவில்லையே… அவளையும் அறியாமல் கூறிய ஒன்று… அதற்கு இத்தனை பெரிய விளைவா?
“என்னோட பீலிங்க்ஸ யார் கிட்டவும் ஷேர் பண்ணக்கூட முடியல… அவ்வளவு அவமானமா இருக்கு மஹா…” என்றவனும் தலையைப் பிடித்து கொண்டு கவிழ, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அருகில் அமர்ந்து கொண்டு, அவனது கையை பற்றிக் கொண்டாள். உணர்ச்சி வேகத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான் அவன். அவன் தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொள்ள முயல்கிறான் என்பது தெரிந்தது. கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
“அந்த பிக்சர்ஸ் வீடியோ பார்த்து எவ்வளவு பீல் பண்ணி இருப்ப? இவனையெல்லாம் லவ் பண்ணிட்டோமேன்னு ஒரு செக்கன்ட் கூடவா நினைச்சு இருக்க மாட்ட?” அவளது கையை இறுக்கமாக பற்றியவன், குரல் நடுங்க கேட்க, அவளும் அவனது இறுக்கத்துக்கு ஈடு கொடுத்தவள்,
“வலிக்குது… ரொம்ப… கஷ்டமா இருக்கு… ஆனா உன்னை என்னால விட்டுத்தர முடியுமா ஷ்யாம்?” என்று கேட்க, அவன் முற்றிலுமாக உடைந்து போனான். அவள் புறம் திரும்பியவன், அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு,
“என்னை வெறுத்துடாத மகா… செத்து போற மாதிரி இருக்குடி…” என்றவனின் குரலில் அத்தனை வேதனை. நடுக்கமாக, தழுதழுத்தபடி வெளிவந்தன வார்த்தைகள்!
அவனது உணர்ச்சி வெடிப்பை தாங்கிக் கொண்டு அவனது முதுகை நீவிக் கொடுத்தாள்.
“உன்னை வெறுத்துட்டு நான் எங்கடா போவேன்?”
சிறிய குரலில் அவள் கேட்க, அவனது அணைப்பு இன்னமும் இறுகியது. முதுகு குலுங்கியது.
மஹா அதிர்ந்தாள். அழுகிறானா?
எதுவும் கூறாமல் அவனை இறுக்கிக் கொண்டவள், கன்னத்தில் இதழ்களை வைத்து அழுத்தியவள், பிடரியில் கைவிட்டு முடியை கோதிக் கொடுக்க, அவனது மனதுக்குள் மெல்ல அமைதி வந்து அமர்ந்தது.
அவனுக்கே அது ஆச்சரியம் தான். மகாவின் தொடுகைக்கு இத்தனை சக்தி இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தான். ஆனால் அந்த மேஜிக் மகாவிடம் இல்லை… இருவரின் காதலில் இருக்கிறது என்று யார் சொல்வது?
பக்கி அது தெரியாம அலையட்டும்… கஸ்தூரி மான் தன்னை சுற்றி எதனால் வாசனை வருகிறது என்பது தெரியாமல் காடு முழுக்க தேடியதாம்… அது போலத்தான்…
அவளை விடுவித்து விட்டு கண்களை துடைத்துக் கொண்டவனை ஆழமாக பார்த்தாள்.
“ஷ்யாம்… நான் ஒன்னு கேட்கட்டா?” என்ற மகாவை கேள்வியாக பார்த்தான்.
“ம்ம்ம்… கேளு…”
“அவனுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சு தான் நீயும் என்கிட்டே ப்ரொபோஸ் பண்ண… நான் இப்ப உன்னோட ஃபியான்சேன்னு தெரிஞ்சே தான் அவன் விட்டுத் தர சொன்னான்… உங்க ரெண்டு பேருக்குமே நான் ஒருத்தி ரத்தமும் சதையுமான மனுஷிங்கறது நினைப்புக்கு வராதா? நானென்ன கடைல வாங்கற பொருளா? தூக்கி கொடுக்க?”
நிதானமாக கேட்டவளை உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் பார்த்தான்.
“எதுவா இருந்தாலும் நான் தானே டிஸைட் பண்ணனும்? ஆனா அதை விட்டுட்டு… ப்ச்… விடு…” என்றவளுக்கு சலிப்பாக இருந்தது. கோபத்தை எப்படி வெளிக்காட்டுவது என்பதும் கூட தெரியாத நிலை.
“உன்னை எனக்கு பிடிச்சுருக்கு… லவ் பண்றேன்… கல்யாணம் பண்ணிக்க போறோம்… சரி… ஆனா இதெல்லாம் நடக்காம இருந்து இருந்தா?” அவளது கேள்வியும் சரிதானே?
“விதி வலியது… இதெல்லாம் நடக்காம இருந்து இருந்தா நான் தப்பிச்சு இருப்பேன்… உன்ட்ட மாட்டிட்டு நீயே சரணம்ன்னு புலம்பிட்டு இருந்திருக்க மாட்டேன்… ஜாலியா லைஃப்பை ஸ்பென்ட் பண்ணிட்டு இருந்திருப்பேன்…” சிரிக்காமல் சொல்லிக் கொண்டே சென்றவன், ஒரு கட்டத்தில் சிரித்து விட, நங்கென்று மண்டையில் கொட்டினாள் மஹா.
“உன்னை பெத்தாங்களா செஞ்சாங்களான்னே தெரியல…”
“ஆர்டர் கொடுத்து வாங்கின ஸ்பெஷல் பீஸ்…” என்று புன்னகைத்தவன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.
“அதான் தெரியுதே… மனுஷனே இல்லைன்னு…” என்றவளை பார்த்தவன்,
“எஸ்… யூ வார் ரைட்…” என்று சிரித்தான்.
“அந்த விஜி எங்க?” என்று ஏதேச்சையாகத்தான் கேட்டாள்.
“இங்க தான் அட்மிட் பண்ணிருக்காங்க…” என்றவுடன் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“என்ன சொல்ற? நியுஸ்ல அதை சொல்லலையே…” எனவும்,
“ஓஓ அதை கேட்டுட்டு தான் மேடம்ஜி வந்தீங்களா? ச்சே நான் கூட எனக்காக தான் வந்தீங்கன்னு நினைச்சுட்டேன்… அதானே பார்த்தேன்…” என்று சிரித்தாலும், தனக்காக இவள் வரவில்லையென்ற உண்மை அவனுக்கு சற்று வருத்தமாக இருந்தது.
“ம்ம்ம்…” என்று முறைத்தவள், “என்னாச்சு? என்ன பண்ணி வெச்ச?” என்று சற்று கோபமாக கேட்டாள்.
“ம்ம்ம்… நம்ம ஆளுங்க அடிச்சாங்க… நம்ம ஆம்புலன்ஸ்லையே அள்ளியும் போட்டுட்டு வந்துட்டாங்க… இப்போதைக்கு மெண்டலி ஸ்டேபிள் கிடையாது… பைத்தியம்ன்னு நம்ம டாக்டர்ஸ் சர்டிபை பண்ணிட்டாங்க… அதனால போலீஸ் கேஸ் ஆகலை…” என்று நிறுத்தியவனை நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அதிர்ந்து பார்த்தாள்.
“ஷ்யாம்ம்ம்ம்…” அவளது அதிர்வு எவ்வளவு என்றெல்லாம் கூறவே முடியாது.
“இப்ப ஐசியு ல இருக்கான்… அடி கொஞ்சம் அதிகம்… அவனை அப்படியே வெஜிடபிள் ஆக்கிடலாமா… இல்லைன்னா பைத்தியம் ஆக்கிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றவனை கைகள் நடுங்க உச்சபட்ச அதிர்ச்சியில் பார்த்தாள்.
“இது தப்பு ஷ்யாம்…” அவளது குரல் பிசிறடித்தது.
“தப்பை தப்பா செய்யாம சரியா செஞ்சா அது தப்பே கிடையாது ஸ்வீட் ஹார்ட்…” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.
“இது கோழைத்தனம்… மனுஷத் தன்மையே இல்லாத ஒரு வேலை… பேசாம கொன்னுட்டு போயிடலாமே…” என்று கொதிக்க,
“கொன்னுட்டா ஒரு நிமிஷ வேதனை மட்டும் தான்…”
“வேண்டாம் ஷ்யாம்… இது ரொம்ப தப்பு… தயவு செஞ்சு வேண்டாம்… நம்ம சந்ததி இந்த பாவத்தை சுமக்க வேண்டாம்…” என்றவளை,
“பாவம் பரிதாபம்ன்னு பார்க்கற மூட்ல நான் இல்லடி… சர்வைவல் ஆப் தி ஃபிட்டஸ்ட்…” என்றவனை உள்ளத்தில் அதிர்வோடு பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!