AKT8

AKT8

அத்தியாயம் – 8
ஐநூறு வருடங்களுக்கு முன்பு :
                 காவிரிபூம்பட்டினத்தில் வணிகன் பாசில், அடுத்த சதி திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான். அன்று இளவரசி மதியழகியை சந்தித்ததில் இருந்து, அவனுக்குள் மோகத்தீ பற்றிக் கொண்டு இருந்தது. இப்படி ஒரு அழகியை, அவன் இது நாள் வரை கண்டதில்லை.
                 “அந்த கண்கள் பேசும் மொழியில், தான் எத்தனை அழகு. அவளின் செவ்விதழில், என் உதடு பதித்து அவளுள் மூழ்கி போக என் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுக்களும், துடித்துக் கொண்டு இருக்கிறது”.
                “அது மட்டுமா! அவளின் புத்தி கூர்மையை கண்டு வியக்கிறேன். என் துணையாக அவளை தவிர வேறு யாராலும், வர முடியாது மாமா ” என்று தன் மாமன் அலிகானிடம் கூறிக் கொண்டு இருந்தான் சப்பாஹ் பாசில்.
             “ஹா ஹா ! நீ அதற்க்கு மட்டுமா, அவளை மணம் புரிய எண்ணுகிறாய்? உன் திட்டம் அந்த அரண்மனையும், அதனோடு சேர்ந்த ராஜ்யத்தையும் அல்லவா கை பற்ற நீ அவளை உன் துணையாக வர வேண்டும் என்று எண்ணுகிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் அவனின் மாமா.
            “என்னை வளர்த்தவர் நீங்கள், தங்களுக்கு என்னை பற்றி தெரியாமல் இருக்குமா? நீங்கள் ஊகித்தது சரி தான் மாமா, அதற்காகவும் தான் அவளை அடைய நான் எண்ணி இருக்கிறேன்”.
               “அது மட்டுமில்லாமல், சோழ நாட்டு ராஜ்யம் முழுவதையும் கை பற்றிக் கொண்டு உலகையே என் காலடிக்கு கீழ் கொண்டு வர போகிறேன். முதற்படியாக வேந்தன் மன்னனை அங்கு அனுப்பி இருக்கிறேன், பெண் கேட்க” என்று கூறிய பாசிலை பார்த்து சிரித்தார் அவனின் மாமா.
               “பலே சப்பாஹ்! அவனை பொருத்தவரை, அவன் மன்னர் இளங்கோவனிடம் பெண் கேட்பது அவனுக்கு. ஆனால், உண்மையில் அவன் பெண் கேட்பதோ உனக்கு. ஆஹா! என்ன ஒரு தந்திரம் உனது”.
              “நிச்சயம் நீ சாதிப்பாய்! ஆனால் இந்த முதற்படியில் அல்ல. அவளை நீ அடைய வேண்டும் என்றால், நிறைய படிகள் நீ கடக்க  நேரிடும். மன்னர் இளங்கோவனும் சரி, இளவரசி மதியழகியும் சரி இருவருக்கும் உன் உண்மை முகம் பாதியளவு தெரிந்து இருக்கிறது”.
            “ஆகையால், இனி தான் நீ சர்வ ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும். உன் முயற்சியை மட்டும் கை விட்டு விடாதே! வெற்றியோடு திரும்பு சப்பாஹ்” என்று அவனை ஆசீர்வதித்து அங்கு இருந்து சென்றார் அவனின் மாமா அலிகான்.
             அவன் சிந்தனை வயப்பட்டான், அவன் மாமா சொல்வது முற்றிலும் சரி தான். அவளையும், ராஜ்யத்தையும் அடைய வேண்டும் என்றால் நிச்சயமாக நிறைய படிகளை கடக்க வேண்டும். இப்படி நிறைய படிகளை கடக்க, இப்பொழுது அவனுக்கு பொறுமையே இல்லை.  
              அவன் நினைவு முழுவதும், மதியழகியின் அழகு மீதே இருந்தது. அவளை உடனே தன்னுடையவளாக மாற்றிக் கொள்ள, துடித்துக் கொண்டு இருந்தான். அதற்க்கு அவன் தேர்ந்தெடுத்த வழி தான், அவனையே உயிர் வாங்கிக் கொள்ள போகிறது என்பதை அவன் அறியவில்லை.
               மிடார நாட்டிற்கு தன் குடும்பத்துடன் திரும்பிய மன்னர் இளங்கோவன், துறவியிடம் இருந்து ஏதும் நல்ல செய்தி வருமா என்று காத்துக் கொண்டு இருந்தார். ஏற்கனவே சோழ அரசர் வகுத்து கொடுத்த திட்டத்தை, எல்லாம் சரி பார்த்து செய்து முடித்து தான் வந்து இருந்தார்.
                  இருந்தாலும் மனதிற்குள், மகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்று ஒரு தந்தையாக எண்ணி கவலை கொண்டார். அவரின் அறைக்குள் அப்பொழுது, வெளியே இருந்த ஒரு பணி பெண் இளவரசி மதியழகி தங்களை காண வந்து இருப்பதாக கூறவும், அவர் அவளை உள்ளே வரும் படி கூறினார்.  
                 மதியழகி, உள்ளே வந்தவள் தந்தை அறையின் முற்றத்தில் நின்று கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதை அறிந்து அங்கே சென்றாள். அங்கே அவரின் அருகே சென்றவள், அவர் ஏதோ சிந்தனையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.
              “தந்தையே! தாங்கள் என்ன சிந்தித்து கொண்டு இருக்கிறீர்கள்? என்னை பற்றியா? இல்லை நாட்டு மக்களை பற்றியா ?” என்று கேட்டாள்.
                 அந்த கேள்விக்கான விடை தெரிந்தும் கேட்டாள், அதை அவரிடம். தஞ்சையில் இருக்கும் பொழுதே, அவளுக்கு உருத்திக் கொண்டு இருந்தது ஒரு விஷயம் மனதில். தன்னை சுற்றி ஏதோ தவறாக நடப்பது போல், அதனால் தான் தந்தை அன்று தன் கனாவில் கண்ட தன்னவனை தேடி உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினாரா என்று அறிய வேண்டி இருந்தது.
                        ஒரு மகளாக எவ்வளவு பெருமை சேர்த்து இருந்தாலும், இப்பொழுது மணம் கவர்ந்தவனை தவிர வேறு யாரையும் மணப்பதற்கு இல்லை என்று கூறி அவரை மிகவும் நோக செய்கிறோமா என்று இப்பொழுது எல்லாம் கவலை அவளுள் அரிக்கிறது.
                       அதற்க்கு தகுந்தது போல், தந்தையும் எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தையில் இருப்பதை அறிந்து தான், இன்று இதை பற்றி பேச அவள் இங்கு வந்ததே. அவள் நினைத்தது போல், அவளை பற்றி தான் சிந்தித்துக் கொண்டு இருப்பதாக அவர் கூறவும் அவள் கவலை கொண்டாள்.
                    “தந்தையே! தங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும், எதையும் என்னிடம் மறைக்காமல் உண்மையை கூறுங்கள் தந்தையே. சமீபமாக, என் மனதில் அரித்துக் கொண்டு இருக்கும் விஷயம் இது” என்று கூறிவிட்டு அவரின் முகத்தை பார்த்தாள்.
                    அவரின் முகத்தில், எதையும் இப்பொழுது கண்டு கொள்ள முடியவில்லை அவளால். இருந்தாலும், இதைப் பற்றி தான் பேசியாக வேண்டும் என்ற முடிவுடன் அவள் கேட்க தொடங்கினாள்.
                  “என்னை சுற்றி என்ன நடக்கிறது தந்தையே! நான் ஏதும், ஆபத்தில் மாட்டிக் கொண்டு இருக்கின்றேனா? அதைப் பற்றி தான் தாங்கள், எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்களா?” என்று கேட்டாள் மதியழகி.
                  மகளிடம் உண்மைய கூற வேண்டாம் என்று நினைத்து இருந்தாலும், மகளின் புத்தி கூர்மையிலும், ஆபத்து நேரத்தில் அவள் தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கமும் அவருக்கு இருப்பதால் அவளிடம் எல்லா விபரமும் கூறினார்.
               அதை கேட்க கேட்க, அவளுக்கு அவர்களை கொலை செய்தால் தான் என்ன என்று தான் தோன்றியது. ஆனால் தன் பாட்டனார், தந்தையிடம் சற்று பொறுமை காக்கும் படி கூறி இருப்பதால் தான் தந்தையும் அதை செய்யாமல் இருக்கிறார் என்று தோன்றியது.
                “இதைப் பற்றி, இனி நீ அதிகம் சிந்திக்க வேண்டாம் மகளே! உன்னை என் உயிரை கொடுத்தேனும், நான் காப்பேன். உன் மனம் கவர்ந்தவனிடம் சேர்ப்பது, என் பொறுப்பு”.
                 “இந்த முறை இன்னும் அதிக தீவீரத்துடன், தேட சொல்லி இருக்கிறேன் நம் படை வீரர்களிடம். உன் மனம் போல், எல்லாம் நல்லதாகவே முடியும்” என்று கூறி அவளை அணைத்து ஆறுதல் கூறினார்.
                என்ன தான் தந்தை தனக்கு ஆறுதல் கூறினாலும், பாட்டனார் அமைதியாக இருக்க கூறினாலும் அவளால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை.  அன்று இரவே, அவள் யாரும் அறியாமல் அந்த துறவியை தேடி சென்றாள் மதியழகி.
இன்று:
                     அங்கே ஆதியின் ஆபிசில், விஷ்வா, ரகு, கிருஷ்ணா என்று மூவரும் ஆதியை முறைத்துக் கொண்டு இருந்தனர். சோழ கால வரலாறு எடுக்க போகிறேன் என்று கூறி, அதற்க்கு ஆடிஷன் எல்லாம் செய்து ஆட்களை தேர்ந்தெடுத்து அதை ஆரம்பிக்க நினைக்கையில், இப்பொழுது கமர்ஷியல் படம் எடுக்க வேண்டும் என்று சொல்பவனை பார்த்து தான் முறைத்துக் கொண்டு இருந்தனர் மூவரும்.
                   “டேய் ஆதி! உன் மனசுல என்ன டா நினைச்சிகிட்டு இருக்க?. இப்படி எல்லோரையும் செலக்ட் பண்ணிட்டு, ஆரம்ப கட்ட வேலை எல்லாம் ஸ்டார்ட் பண்ண போற நேரத்துல, இப்படி குண்டை தூக்கி போடுற” என்று எகிறினான் விஷ்வா.
                  “ஆர் யூ கிரேசி ஆதி? உனக்கு இந்த பீல்ட் பத்தி, என்னை விட நல்லாவே உனக்கு தெரியும். ஏன் டா இப்படி திடிர்னு, இதை ஸ்டாப் பண்ண சொன்ன?” என்று கேட்டான் ரகு.
                     “அண்ணா! நீ ஏதோ டிஸ்டர்பா இருக்கன்னு புரியுது, ஆனா இப்படி ரீசன் சொல்லாம சும்மா ஸ்டாப் பண்ணு சொன்னா என்ன அர்த்தம் அண்ணா” என்று கேட்டான் கிருஷ்ணா.
                    எல்லோரையும் ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் பேச தொடங்கினான்.
                   “பிராணநாதா! தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு ஒன்றுமில்லையே?” என்று ஒரு பெண் பேசுவது போல் பேசிக் காட்டி, அவன் அடுத்து கூறிய செய்தியில் விழுந்து விழுந்து சிரித்தனர் எல்லோரும்.
               “டேய்! எருமைகளா! என்னை பார்த்தா எப்படி டா தெரியுது உங்களுக்கு? அங்க அவ இப்படி பேசி, பேசியே உயிரை வாங்குறான்னு தான் இங்க வரேன். இங்கேயும், இப்படியே பேசுறதை கேட்டா எனக்கு அப்படியே பத்திகிட்டு வருது” என்று பல்லை கடித்தான் ஆதி.
                “நீ தான டா, சுத்த தமிழில் சோழர் காலத்து படம் எடுக்கணும் சொன்ன. இப்போ நீயே, இப்படி இந்த பாஷை கேட்டு காண்டானா என்ன டா அர்த்தம்?” என்று கேட்டான் விஷ்வா.
               “அதான! கரெக்ட் பாயிண்ட் விஷ்வா அண்ணா, கையை கொடுங்க” என்று கூறி கை நீட்டிய கிருஷ்ணாவை, பார்த்து முறைத்தான் ஆதி.
                “சும்மா என்னை முறைக்க கூடாது அண்ணா, நீங்க முறைக்குறதா இருந்தா அண்ணி கிட்ட தான் முறைக்கணும்” என்று கூறியவனை பார்த்து அடிக்க எண்ணி, அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து அடிக்க அவன் எழவும், விஷ்வா அவனை பிடித்து உட்கார வைத்தான்.
              “சும்மா இரு டா கிருஷ்ணா” என்று அவனை அடக்கிவிட்டு, ஆதியிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.
              அவனோ இப்பொழுது எடுத்து இருக்கும் ஆட்களை வைத்தே, ஒரு கமர்ஷியல் படம் எடுக்க வேண்டும் என்று கூறி கதையை கூற தொடங்கினான். அதில் எப்பொழுதும் போல் குடும்பம், காதல், சண்டை, காமெடி என்று எல்லா வகையும் இருந்தாலும், கதை சற்று வித்தியாசமாக இருந்தது.
              கதையை கேட்ட கிருஷ்ணா, இதில் தான் தான் ஹீரோ என்று கூறி அப்பொழுதே அதற்க்கான கான்ட்ராக்ட் ஒன்றில் படித்து பார்த்து கையெழுத்திட்டான். அவன் வேகத்தை பார்த்து, எல்லோரும் சிரித்தனர்.
               “இன்னாத்துக்கு, இப்போ இப்படி சிரிச்சிகிட்டு இருக்கீங்கோ? எம்புட்டு நல்லா இருந்தது கதை, அதேன் முந்திகிட்டேன். அண்ணாத்தை இந்த படத்துக்கு ஜோடி எனக்கு நல்ல பொண்ணா பார்த்து கொடு, வரட்டா” என்று சென்னை பாஷையில் பேசி, அங்கு இருந்த இறுக்கமான சூழ்நிலையை தளர்த்தி சென்றான்.
               “உன் தம்பி மாதிரி, இருக்க வேண்டியது தான டா. பாரு கொஞ்ச நேரத்துல, எல்லோரையும் சிரிக்க வச்சிட்டு போயிட்டான். அவனை மாதிரி, டேக் இட் ஈஸி பாலிசியோட இரு டா” என்று கூறிய ரகுவை பார்த்து சிரித்தான் விஷ்வா.
               “போன வாரம் தான், கிருஷ்ணா கிட்ட உங்க அண்ணா மாதிரி தான் இரேண்டான்னு யாரோ சொன்னாங்க பா” என்று கூறி கலாய்த்தான் விஷ்வா.
              “போடா! நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கும் தெரியும், அவனுக்கும் தெரியும் நீ மூடு. சரி டா, அப்போ நாளைக்கு ஹீரோயின் யார்ன்னு யோசிச்சிட்டு சொல்லு, அடுத்த மாசம் ஆரம்பிக்கலாம் நாம ஷூட்டிங்கை” என்று கூறிவிட்டு கிளம்பினான் ரகு.
                    இருவரும் சென்ற பின், வெளியே இருந்த செக்யூரிட்டியிடம் சென்று யாரையும் இனி உள்ளே விட வேண்டாம் என்று கூறிவிட்டு உள்ளே வந்தான் விஷ்வா.
               “ஆதி! எனக்கு ஒரு உண்மையை சொல்லு, நீ ஸ்டாப் பண்ணதுக்கு அது மட்டும் தான் ரீசனா?” என்று இப்பொழுது அழுத்தமாக கேட்டான் விஷ்வா.
                  “இல்லை, என்னால அந்த இடத்தில மதியை தவிர்த்து வேற யாரையும் யோசிக்க முடியல அதான்” என்று கூறிவிட்டு அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று, கதவை சாற்றிக் கொண்டான்.
                 இதைக் கேட்டதும், விஷ்வா மகிழ்ச்சியாக குதித்தான். ஹீரோவாக அதில் ஆதி நடிப்பதாக முதலிலே எடுத்த முடிவு என்பதால், ராணி வேட்டை தேடும் பொழுது தான் மதி அவர்கள் கண்ணில் பட்டாள்.
                    ராஜாவுக்கு ஏற்ற ராணியாக, அவளை தவிர வேறு யாரும் ஜோடி சேர முடியாது என்று உறுதியாக ஆதி எண்ணினான். அன்று மதியை ராஜா காலத்து உடையில் பார்த்ததில் இருந்தே, ஆதிக்கு மனதிற்குள் ஹார்மோன் எல்லாம் தாறுமாறாக வேலை செய்து கொண்டு தான் இருந்தது.
                ஆனால், அதை ஒத்துக் கொள்ள தான் அவனுக்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டது. அவள் நிஜத்தில் ஐநூறு வருடங்கள் கடந்து வந்து இருக்கிறாளா, இல்லை பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து நிற்கும் இந்த கால குமரியா என்று தெரியாமல் குழம்பி தவித்தான்.
                        ரமணன், அவனிடம் சொல்லி இருந்தான் அந்த பெண்ணின் பின் புலம் இன்னும் தெரியவில்லை. அப்பொழுது சரியாக எப்படி அவள் மேல் இருந்து குதித்தாள், என்று எல்லாம் அவளே சொன்னால் தான் அடுத்து என்னவென்று யோசிக்க முடியும் என்று.
               இதைப் பற்றி எப்படி எல்லாம் மாற்றி கேட்டாலும், அவள் கூறும் ஒரே பதில் ஐநூறு வருடங்களுக்கு முன் இருந்து தான் வந்து இருக்கிறதாக கூறிக் கொண்டு இருந்தாள்.
                “கடவுளே! எனக்கு பைத்தியம் பிடிக்கிறதுக்கு முன்னாடி, எப்படியாவது அவ யார்ன்னு எனக்கு காட்டிடு ஆண்டவா!” என்று இறுதியில் அந்த கடவுளை சரணடைந்தான்.
                          இங்கே மதியழகி, அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தினத்தை நினைத்து பார்க்க தொடங்கினாள். ஆதிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை விட, ஏதோ ஒரு வகையான கோபம் தன் மீது இருப்பதை உணர்ந்து, அவனுக்கு பாரமாக இருக்க பிடிக்காமல் தான் வெளியேறி சென்றாள்.
                  ஆனால் எங்கே செல்வது, எங்கே தங்குவது என்று ஏதும் தெரியாத நிலை. அவளால் முதலில் இங்கே இருக்கும் சூழ்நிலையோடு, ஒன்ற முடியவில்லை. பேசும் பாஷையில் இருந்து, எல்லாமே சற்று வித்தியாசமாக தான் இருந்தது.
                     அவள் நின்ற இடத்தில், பஸ், ஆட்டோ, கார் என்று வரிசையாக எல்லா வாகனமும் வந்து சென்றாலும், எதில் செல்வது என்று புரியவில்லை. அதை விட, இப்பொழுது எங்கு போவதும் தெரியவில்லை.
                        அப்பொழுது அங்கே ஒரு கார் பின் பக்கத்தில், தஞ்சை பெரிய கோவிலின் புகைப்படம் ஒட்டி இருக்கவும், விழிகள் விரிய ஆச்சரியாமாக பார்த்தாள். கடவுளே தனக்கு வழிகாட்டுகிறார், என்று எண்ணிக் கொண்டு தன் உடமைகளுடன் அந்த கார் பின்னால் ஓடினாள்.
                       அது சற்று தள்ளி இருந்த ஒரு கடையின் முன்பு நிற்கவும், இவளும் அங்கே விரைந்தாள். அதில் இருந்து இறங்கிய டிரைவர், அங்கே இருந்த டீ கடை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
                       ஒரே ஓட்டமாக ஓடி, அவள் அந்த டிரைவர் முன் சென்று நின்று மூச்சு வாங்கினாள். தன் முன்னால் ஒரு பெண், இப்படி வழி மறித்து நின்று கொண்டு இருக்கவும் அவன் அதிர்ந்தான்.
                  “யார் மா நீ? இன்னாத்துக்கு என் வழியை மறிச்சிகிட்டு நிக்குற?” என்று தன்னை சுதாரித்துக் கொண்டு கேட்டான்.
                     அவன் பேசிய பாஷையில், அவள் திரு திருவென்று முழித்தாள் முதலில். பின்னர் தன்னை யார் என்று முதலில் கேட்டது புரியவும், பேச தொடங்கினள்.
                   “நான் மிடார நாட்டு இளவரசி மதியழகி, என்னை அந்த தஞ்சை கோவிலுக்கு தாங்கள் அழைத்து செல்ல முடியுமா” என்று கேட்டாள் மதியழகி.
               இப்பொழுது அவள் பேசிய பாஷையை கண்டு, அவன் முழித்துக் கொண்டு இருந்தான்.
                “கீழ்பாக்கத்தில் இருந்து வந்து, காலங்காத்தால உயிரை வாங்குது. போ மா அங்கிட்டு, அண்ணாத்தை ஒரு டீ ஸ்ட்ராங்கா போட்டு கொடு. பைத்தியம் எல்லாம், இப்போ இப்படி டிப் டாப்பா சுத்துதுங்க போல” என்று அவள் காது படவே அவன் பேசவும், அவளுக்கு அழுகை வந்தது.
                 அவன் பேசியது முழுதாக புரியவில்லை என்றாலும், அவன் கூறிய பைத்தியம் தன்னை குறித்து என்று புரிந்த உடன், அவளுக்கு ஆதி கூறிய பைத்தியகாரி தான் நினைவில் வந்தது. அப்பொழுது ஒரு பெண் அங்கே ஆடை கிழிந்த நிலையில், பைத்தியம் போல் சுற்றிக் கொண்டு இருந்ததை, சில பேர் அவளுக்கு பரிதாபப்பட்டனர், சில ஆண்கள் காம கண்ணோடு அவளை பார்த்தனர்.
                     யாரும் அவளுக்கு, துணி கொண்டு போர்த்தி விட நினைக்கவில்லை. இதை எல்லாம் அப்பொழுது கவனத்தில் கொண்டு வந்த மதியழகி, தன் உடமையில் இருந்து ஒன்றை எடுத்து, அந்த பெண்ணிற்கு போர்த்தி விட்டாள்.
                  அத்தோடு, அங்கே காம பார்வையோடு பார்த்த அந்த ஆண்களை கை நீட்டி அடித்தது மட்டுமில்லாமல், திட்டி தீர்த்து விட்டாள். அப்பொழுது அங்கே வந்த ஆதி, அங்கே இருந்த சூழலை பார்த்து என்ன நடந்து இருக்கும் என்று ஊகித்து விட்டான்.
                   உடனே அவளையும், அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு நேராக ஒரு ஆஷ்ரமம் சென்றான். அங்கே அந்த பெண்ணை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு, மதியை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
                 அவனோடு செல்ல முதலில் ஒத்துக்கொள்ளவில்லை, அவனோ சூழ்நிலையை எடுத்து விளக்கி இனி அவளை ஒரு போதும் புண்படுத்த மாட்டேன் என்று கூறிய பின் தான் அவனோடு கிளம்பி வந்தாள்.
                  இதை எல்லாம் நினைத்து பார்த்தவள், ஒரு பெருமூச்சு விட்டாள்.
              “வர்மா! தாங்கள் என்னை எப்பொழுது முழுதாக நம்புவீர்கள்? நான் ஐநூறு வருடம் கடந்து வந்து இருப்பதை, ஏன் நம்ப மறுக்குறீர்கள்?” என்று மனதோடு கேட்டுக் கொண்டு இருந்தாள்.
                அவன் நம்பும் காலமும் விரைவில் வந்தது, ஆனால் அப்பொழுது எல்லாம் அவன் கை மீறி போய் விட்டது. அவளை அடைய அவன், நிறைய சிரமம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
தொடரும் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!