பூஜை எப்படி நடக்கும், யார் வருவார்கள் என்றெல்லாம் கௌரி கவலைப்படவில்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இருக்கவில்லை. ஒரே நாளில் எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடைப் போட போகும் இடத்தை அழைத்துச் சென்று காண்பிக்குமாறு செந்திலிடம் ஒன்றிரண்டு முறைக் கேட்டுப் பார்த்தாள். அவனுக்கு நேரம் இல்லாமல் போனது. முதல் நாள் மாலை சேகருடன் சேர்ந்து தள்ளுவண்டியை எடுத்து வந்து வீட்டின் முன் நிறுத்தியிருந்தான்.
அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் விழித்துவிட்டாள். முதல் நாள் வீட்டிலேயே சமைத்து எடுத்துச் செல்ல முடிவு செய்திருந்தாள். செந்திலின் ஆலோசனை.
குளித்தவுடன் விளக்கேற்றித் துவங்கலாம் என்றால் சாமி படங்கள் எல்லாம் செந்திலின் வீட்டில் இருந்தன. இன்னுமும் அவன் வீட்டிலிருந்து அவற்றை எடுக்கவில்லை. புதிதாகப் படங்களும் விளக்கும் வாங்கித் தர சொல்ல மனம் வரவில்லை. அது அவன் அவளுக்காகச் செய்யும் செலவு. கடன். தேவையில்லையென்று நினைத்தாள்.
அப்படியே சமையலைத் துவங்கலாம் என்றால் மனம் முரண்டியது. தலையில் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்துத் துவட்டினாள். கதவு தட்டப்பட்டது. திறந்தாள்.
“என்னய்யா? அதுக்குள்ள எழுந்துட்டியா?”
“ஆமா. எப்படியும் சாமி கும்பிட நீ அங்க தான் வரணும். கொழந்த இருக்க வீட்டுல இவ்வளோ சாமான் வெச்சா வீடு அடசலாயிடும்னு க்ரைண்டர்லேந்து முக்கியமான சாமான் எல்லாத்தையும் அங்க வெக்க சொல்லிட்டேன். நீ வேலைய ஆரம்பிக்க வேணாமா? அதா சீக்கிரமா எந்திரிச்சுக் குளிச்சுட்டேன். வா”
அவன் சொல்வதெல்லாம் சரியாகப்பட்டது. மறுக்கத் தோன்றவில்லை. அவனுடன் சென்றாள். அடுக்களைக்குள் சென்று ஈரத் துணியில் சுற்றி வைத்திருந்த பூவை எடுத்து வந்து நீட்டினான்.
“இதெல்லாம் எப்போயா வாங்குன?”
“காருக்கு பூஜப் போட்டோம்ல… சேகர் அண்ணன் இப்படி நெறைய வாங்க சொன்னாரு. அன்னைக்கு வாங்குன எல்லாத்தையும் இன்னைக்கு வாங்கிட்டேன். சாமிப் படத்துக்குப் போட்டு மீதிய எடுத்து வெச்சுக்கோ. சாமிப் படமும் எடுத்துக்கோ. அங்க போய் பூஜப் போட வேணும்”
குளியறைக்குள் தூக்கிச் சென்றான். கௌரியின் புடவை கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தன. அங்கு நிற்க சிறிது தயக்கமாக இருந்தது. கையில் அழும் குழந்தையைப் பார்த்தான். வேகமாகக் குழந்தையின் சட்டையைக் கழட்டினான்.
வாங்கி வைத்திருந்த சிறிய அடுப்பில் இரவே மண்ணெண்ணெய் ஊற்றி வைத்திருந்தாள் கௌரி. அதை பத்திரமாக எடுத்துச் சென்று வாசலருகில் வைத்தாள். இட்லி ஊற்றினாள். மீதி மாவை பெரிய தூக்கில் ஊற்றி வைத்தாள். சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. கருவேப்பில்லையைக் கழுவி அதில் போட்டாள். கிரைண்டரில் சட்னி அரைபட்டுக் கொண்டிருந்தது. அதற்குத் தாளிக்க வாணலில் எண்ணெய் காய்ந்து கொண்டிருந்தது.
சேகர் அழைத்து “என்னப்பா எங்கிருக்கீங்க?” என்று கேட்டபோது தான் மணியைப் பார்த்தான் செந்தில். ஷெல்பில் மடித்து வைக்கப்பட்டிருந்த உடையை ராஜாவிற்கு அணிவித்துக் கொண்டிருந்தான்.
“கெளம்பிட்டோம்ணா. வந்துட்டே இருக்கோம்”
“சரிப்பா”
போனை பாக்கெட்டில் போட்டு குழந்தையைத் தூக்கி வீட்டை விட்டு வெளியே வந்து பூட்டினான். கௌரி பைகளை வீட்டு வாசலில் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“ச்ச்… மறந்துட்டேன். சாமான காருல ஏத்திட்டு நா முன்னாடி… இல்ல… ஒனக்கு எடம் தெரியாதுல்ல. ஒன்ன கொண்டு போயி விட்டுட்டு… ம்ம்ச்ச்… சரி வா எல்லாத்தையும் இந்த வண்டிலயே வெச்சுத் தள்ளிட்டுப் போயிடலாம். சீக்கிரம் சீக்கிரம்னு சொன்னா காதுல வாங்குனாதான? இப்போ பாரு…”
“என்னைய எதுக்குய்யா வையுற? எத்தன வேல பாத்தேன் தெரியுமா? ஆளக் காணும்னதும் புள்ளையக் குளிப்பாட்டப் போயிட்டேன்னு நெனச்சேன். வந்து ஏதாவது ஒதவிப் பண்ணுவன்னுப் பாத்தா… அம்புட்டு நேரம் என்ன பண்ண?”
“குளிப்பாட்ட வேணாமா?”
“அது சரி…”
“புள்ளையப் புடி. இந்த வேகத்துலப் போனா விடிஞ்சுடும்”
மகனை வாங்கிக் கொண்டாள். சிறிது தூரம் சென்றதும் ‘காரு ஓட்டப் போறியா? இல்ல நீயும் ரோட்டுல நிக்கப் போறியா?’ என்று பரசுராமன் கேட்டது நினைவு வர செந்தில் சிரித்தான்.
“என்னத்துக்கு சிரிக்குற?”
“சில நேரங்கள்ல சில பேரு சொல்லுறதக் கேக்கும்போது கோவம் பொத்துக்கிட்டு வரும். ஆனா அதுவே நெஜமா நடக்கும்போது சிரிப்பு தா வருது”
“வர வர நீ பேசுறதும் புரிய மாட்டேங்குது”
போகும் வழியைக் குறித்துக் கொண்டாள். திரும்பி வீடு வந்து சேர வேண்டுமே… கடை போட செந்தில் பார்த்து வைத்திருந்த இடத்தை அவளால் சுலபமாகக் கண்டறிய முடிந்தது.
சேகர் நின்றிருந்தார். பரசுராமன் வந்திருந்தது ஆச்சரியம் தான். அவர்களுடன் இன்னொரு பெண்மணி இருந்தார். யாராக இருக்குமென்று அவள் யோசிக்கும்போதே பைக்கில் பாஸ்கர் வந்திறங்கினான். பின்னால் கண்மணி அமர்ந்திருந்தாள். சேகர் முதலில் பேசினார்.
“நீங்க முன்னாடி வந்து எங்கள வரவேற்கணும். நாங்க உங்கள வரவேற்க வேண்டிருக்கு”
“எல்லாம் எடுத்து…”
“சும்மா இருங்க. அவங்களே டென்ஷன்ல வந்திருப்பாங்க. பாவம் அந்த பொண்ணு பயப்படுது”
“எங்க வீட்டுக்காரம்மா. அதிகாரம் தூள் பறக்குதா?”
“வணக்கம்”
“நீ வாம்மா. போயி பூஜைக்கு வேண்டியத எடுத்து வைங்க”
பாஸ்கர் வண்டியை நிறுத்திவிட்டு வந்து செந்திலுடன் சேர்ந்து பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து சேகரிடம் கொடுத்தான். பரசுராமன் வேடிக்கைப் பார்த்தார். ரத்தினம் ராஜாவை வாங்கிக் கொள்ள கண்மணி கௌரியிடம் பேச ஆரம்பித்தாள். கௌரியின் செவிகளில் புகுந்த வார்த்தைகள் எவையும் மனதில் பதியவில்லை.
ரத்தினம் குழந்தையை வாங்கியதிலிருந்து கௌரியை எடைப்போட்டார். கண்மணி பேசும்போது தலைகுனிந்து ஏதோ யோசனையில் இருந்தவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. கணவர் பேசியதெல்லாம் நினைவிற்கு வந்தது.
தன்னிடம் அவள் பேச கூட இல்லை. இங்கு இன்னும் எத்தனை நேரம் நிற்பதென்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு கௌரி பூஜை செய்ய சொன்னதும் சந்தோஷம் தாளவில்லை. இருந்தாலும் அவள் எதற்காக சொல்கிறாளென்று புரிந்ததால் நெஞ்சில் பாரம் கூடியது.
சேகர் சொன்னவற்றையெல்லாம் செய்தவர் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அனைவரிடமும் சூட தட்டை நீட்டியவர் கடைசியாக கௌரியிடம் வந்து “அமோகமா வருவம்மா” என்று கூறித் தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைக்க முனைந்தார்.
சிரித்த முகமாகக் கூறினாள் கௌரி. ரத்தினத்தின் முகம் சுருங்கிவிட்டது. குங்குமம் வைத்துக் கொள்ள மறுக்கிறாள். அவளுக்கு என்ன வயதிருக்கும் என்று கணிக்க முயன்றார். ‘என்னவா இருந்தா என்ன? கடவுளுக்கும்தா ஈரமில்லையா? இப்டி ஒரு பொண்ண நாதியத்து நிக்க வெக்கணுமா? இனிமே இந்தப் புள்ளைக்கு எந்தக் கஷ்டமும் வராமப் பாத்துக்கோ சாமி’
“கௌரி புள்ளையக் குடுத்துட்டு இப்டி வா. சாமிக்கு படச்சத எடுத்து நீ சாப்பிடு. எல்லாருக்கும் தட்டுல இட்லி வெச்சுக் குடு. மொத போனி யாருக்கு பண்ணப் போற?”
சேகர் அழைக்க ராஜாவை கண்மணியின் கையில் கொடுத்துவிட்டு வண்டியில் வைத்திருந்த தட்டை எடுத்தாள்.
தட்டுக் கழுவ தண்ணீர் வேண்டுமென நினைவு வர எடுத்து வந்திருந்த சிறிய அண்டாவைத் தூக்கிச் சென்றான் செந்தில். சற்றுத் தள்ளியிருந்த குழாயடியில் அண்டாவை வைத்து தண்ணீர் திறந்துவிட்டான். அவனுக்கு உதவுவதற்காக உடன் சென்றான் பாஸ்கர்.
“அந்தப் பொண்ண கடைசி வரைக்கும் கூடவே வெச்சுப் பாத்துக்கப் போறியா?”
“ஒதவி பண்ணாக் கூடவே வெச்சுக்கணுமா?”
“சரி ஏன் இவ்வளோவும் பண்ணுற?”
“பாக்கப் பாவமா இருந்துது கூ…”
“புடிச்சிருந்துதுன்னு சொல்லுவன்னு நெனச்சேன்”
“என்ன ஒளறுற?”
“சில நேரங்கள்ல உண்மையக் கேட்டா கோவம் வருமாம்”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு கை பிடி.. தூக்கிட்டுப் போவோம்”
செந்தில் வந்ததும் தட்டை அவனிடம் நீட்டினாள் கௌரி.
“சாமிக்கு படச்சது… மொத போனி… ரெண்டும் இதா”
“நீ சாப்டு. மத்தவங்களுக்குக் குடு. எனக்கெதுக்கு?”
“வாங்கிக்கயா”
தட்டை வாங்க கை நீட்டியவன் அவசரமாக சட்டை பையை தடவி அதிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.
“மொத போனின்னு சொல்லுற. ஓசில குடுக்க வேணாம்”
கௌரி மறுக்கவில்லை. காசை வாங்கிக் கொண்டாள்.
“என்னம்மா எல்லாத்தையும் தம்பிக்கே குடுத்துட்ட? சாமிக்கு படச்சது… நீ ஒரு வாயாவது சாப்பிடணும்ல?”
ரத்தினம் கூறத் தட்டிலிருந்து இட்லியைப் பிட்டு வாயில் போட்டாள். அண்டாவிலிருந்த தண்ணீரை இடது கையால் அள்ளி கை கழுவினாள். இன்னும் சில தட்டுக்களை எடுத்து அனைவருக்கும் பரிமாறத் துவங்கினாள்.
பரசுராமனின் முகம் மாறினாலும் சட்டென்று வேறுபுறம் திரும்பிக் கொண்டார். சேகர் கௌரிக்கு உதவச் சென்றார். ரத்தினமும் கண்மணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இட்லி செந்திலின் தொண்டையில் அடைத்து நின்றது. பாஸ்கரின் பார்வையை மிக ஜாக்கிரதையாகத் தவிர்த்தான்.