Alaikadal 11

Alaikadal 11

அலைகடல் – 11

அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கே பூங்குழலியின் வீட்டினை ஒருவன் கண்காணிக்க, காலை பொழுது சென்று மதியம் ஆகவும் கதவைத்திறக்காமல் இருப்பதைக் கண்டு முதல் வேலையாக ஆரவிற்கு தகவல் கொடுத்து அதன்பிறகே விசாரித்துப் பூங்குழலி மாயமாய் மறைந்ததைக் கண்டுபிடித்தனர்.

ஆரவ் அப்போதும் பெரிதாக பதறிடவில்லை, “விடுங்க தப்பான முடிவு எடுக்கனும்னா வீட்டுக்குள்ளேயே எடுத்திருக்கலாம். அப்படி இல்லாதப்போ என்னைக்காவது ஒருநாள் இங்க வந்துதானே ஆகணும்? அவ சம்பந்தப்பட்ட இடத்தில் எல்லாம் ஒரு கண் வச்சிக்கோங்க” என்றதோடு அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

அவனிற்கே பிரச்சாரம் செய்யவேண்டியது, தேர்தல் வேலைகள் என வரிசைக் கட்டி நிற்க அர்ஜுனை தேர்தல் முடியும் வரைக்கும் நடமாட முடியாதபடி ஊமைக்காயமாக அடித்து சாலையோரத்தில் காரை நிறுத்தி அதற்குள் போட்டிருந்தனர்.

பூங்குழலியும் இப்போது பிரச்சனை செய்ய வழியில்லை என்பதால் அவன் நிம்மதியாக தன் வெற்றிக் கனியை ருசிக்கக் காத்திருந்தான்.

இரு நாள்களாக ரயிலிலும் பேருந்திலும் மாறி மாறி பயணம் செய்த பூங்குழலிக்கோ கொல்கத்தாவில் இறங்கியதும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டார்போலத்தான் இருந்தது.

இன்னமும் மருத்துவ பரிசோதனைக்கு நான்கு நாட்கள் இருக்க எங்கே தங்குவது எந்த லாட்ஜ் நல்லாருக்கும் என்றெண்ணி அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கையில் அங்கே பேசிக்கொண்டிருந்த பெங்காலி, ஹிந்திக்கு மத்தியில் ஆங்கிலத்தில் பேசிய வெளிநாட்டு தம்பதியின் பேச்சு காதில் விழுந்தது.

(இங்கே பெரும்பாலானோர் பெங்காலி அல்லது ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்பதால் நம் வசதிக்காக தமிழிலேயே தொடரப்படுகிறது)

அவர்கள் அங்கு ஒரு மாதம் தங்கப்போவதாகவும் அதற்கு லாட்ஐைவிட நல்ல இயற்கை எழில் சூழ்ந்த **** யோகா மற்றும் ஆயுர்வேத ஆசிரமத்தில் இடம் கிடைத்தால் தங்க நன்றாக இருக்கும் என்றும் கூற ஏனோ பூங்குழலியின் மனதிற்கு அங்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.

உடனடியாக மனதின் சொல் கேட்டு அவர்களுக்கு முன் ஒரு ஆட்டோ பிடித்துச் செல்ல ஆரம்பித்தாள். அதற்கு வேறொரு முக்கியக் காரணம் தான் செல்ல வேண்டிய மருத்துவ பரிசோதனைக்கு அருகிலேயே ஆசிரமமும் இருந்ததால்தான். அங்கிருந்து வேலைக்குச் செல்ல அழைப்பு வரும் வரை ஆசிரமத்தில் தங்கிக்கொள்ளலாம் அல்லவா?

அதற்கு மேல் அவளைச் சோதிக்காமல் அங்குத் தங்குவதற்கு இடம் இருக்க, “எதற்காக இங்க தங்குகிறீர்கள்? ட்ரீட்மென்ட் தேவைப்படுகிறதா? உடல்நலக்குறைவா? அல்லது யோகாவா?” என்ற வரவேற்பாளரின் கேள்விக்கு மனஅமைதிக்காக யோகா பயில வந்ததாகவும் வெளிவேலைகள் சில இருப்பதால் அதை முடித்து அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குவதாகக் கூறி வேண்டியப் பணத்தைக்கட்டி தனக்கு என்று ஒதுக்கிய அறைக்குச் சாவியை வாங்கிச் சென்றாள்.

அடுத்தடுத்து எல்லாச் சூழ்நிலையும் பூங்குழலிக்கு சாதகமாகவே அமைந்தது. மருத்துவ சோதனை ஐந்து நாள் வெற்றிகரமாக முடிய கூடிய விரைவில் கப்பற்படைச் சேர ட்ரைனிங் அழைப்பதாகக் கூறி அனுப்பினர்.

சூழ்நிலை சாதகமாக அமைந்தது பூங்குழலிக்கு மட்டுமல்ல ஆரவிற்கும்தான். அனைத்து மாநிலத்திலும் தேர்தல் நல்லபடியாக முடிவுற தமிழ்நாட்டில் எப்போதும் சட்டமன்ற தேர்தலில் அறுபது முதல் எழுபது சதவீத வாக்கே பதிவாகும்.

ஆனால் இம்முறை என்றும் இல்லாதபடி தொண்ணூற்று ஒன்பது சதவீத வாக்குபதிவுப் பதிவாகி இந்தியாவில் அதிகபட்ச மக்கள் வாக்களித்த மாநிலமாக அடையாளம் காட்டப்பட அதற்கு காரணம் ஆரவ் என்ற மனிதனின் அரசியல் பிரவேசம் என்பதை சொல்லவும் வேண்டுமா?

பூங்குழலிக்கு இனி அனைத்தும் இ – மெயில் மூலமாகவே தகவல் தரப்படும் என்பதால் கடிதம் வீட்டிற்கு சென்று அக்கம்பக்கம் மற்றும் யாரேனும் தன்னைத்தேடிக் கொண்டிருந்தாலும் காட்டிக்கொடுக்க வாய்ப்பில்லை என்றெண்ணி நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.

ஏனெனில் பொது உபயோகத்திற்காகதான் தன் பெயரில் உள்ள மெயில் ஐடியை பயன்படுத்தியது. அதுவே அனைவரும் அறிந்தது கூட. ஆனால் தந்தை பெயரில் ஓபன் செய்த ஐடியைதான் ஆபிசியலாக பயன்படுத்துவது.

அடிக்கடி செக் செய்ய வேண்டியிருந்ததால் தனக்கென ஒரு போனையும் குறைந்த விலையில் வாங்கிக்கொண்டாள். பணம் லட்சக்கணக்கில் இருக்கிறதுதான் அதற்காக கண்டபடிச் செலவு செய்ய மனது வரவில்லை.

அந்த அமைதியான இடம் மனதிற்கு சிறிது ஆசுவாசம் அளித்தாலும் இங்கே இப்போது அம்மாவும் குட்டாவும் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை.

இத்தனையும் ஒரு மாதம் சென்று வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் கொச்சியில் ஒரு வருட ட்ரைனிங் என்றும் மெயில் வரும் வரைக்கும்தான்.

பின் அதில் சேர்வதற்காக என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதில் கல்லூரி இறுதி மதிப்பெண் சான்றிதழ் தவிர அனைத்தும் கைவசம் இருக்க கல்லூரி சென்றுதான் சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும் என்பதால் ஆசிரமத்தைக் காலி செய்து மீண்டும் சென்னை நோக்கி பயணித்தாள்.

பேசாமல் பிளைட்டில் செல்வோமா சீக்கிரம் போய் விடலாம் என்று தோன்றியதுதான். ஆனால் சென்னை சென்று பார்த்த பின் தன்னை யாரும் தேடவில்லை என்றால் இப்படி பதுங்கி செல்லாமல் நேரிடையாக செல்வோம் அதுவரை இப்படி கண்டுபிடிக்க முடியாதபடியே சுத்துவோம் என்று தோன்ற மாற்றி மாற்றி முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்தாள்.

மூன்றாம் நாள் காலையில் ரயில்வே ஸ்டேசனில் இருக்கும் வாஷ்ரூமிலேயே காலைகடன்களை முடித்தவள் சென்னையில் இறங்கியதும் வீட்டிற்குச் செல்ல நினைத்த நினைப்பை விரட்டி எதற்கும் இருக்கட்டும் என்று துப்பட்டாவால் முகத்தை மறைத்து வெளியேறினாள்.

இரு மாதங்களுக்கும் மேலாக சென்று சென்னையைப் பார்த்ததும் தோன்றிய முதல் எண்ணம் நேரே ஆரவ்விடம் சென்று, ‘ஏன் இப்படி செய்த?’ என்று சட்டையைப் பிடித்து உலுக்குவோமா என்றுதான்.

அதற்கு காரணம் ஆங்காங்கே தென்பட்ட ஆரவ்வின் முழு உருவ கட் அவுட் என்றால் மிகையில்லை. கூடவே அதில் “மக்களின் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஆரவமுதன், தமிழகத்தை ஆளப்போகும் அரசனே நீ வாழ்க” போன்ற வாசகங்கள் வெவ்வேறு கட்அவுட்களில், போஸ்டர்களில் சென்னை முழுவதும் எங்கு திரும்பினாலும் கண்ணில்பட்டு பார்வையை நிறைக்க எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றியதைப் போல் நெஞ்சம் கொதித்துதான் போனது பெண்ணவளுக்கு.

‘இவன்கிட்ட எல்லாம் நாட்டை குடுத்து என்னைக்கு நாடு உருப்பட போகுது’ என்ற எண்ணம் மனதில் எழ உதடோ இகழ்ச்சிப் புன்னகையைச் சிந்தியது.

ஒருமனம் ஆவேசமாய் சண்டை போடக் கிளம்பியதென்றால் மற்றொரு மனமோ, ‘அப்படியே உன்னையும் உன் அம்மா தம்பி மாதிரியே இருக்குற இடம் தெரியாம பண்ணிருவான் பரவால்லையா? அவங்களுக்கு நியாயம் கேட்க நீ இருக்க, நீயும் போயிட்டா யாரிருக்கா?’ என அடக்கி வாதாடியது.

அந்த குழப்பத்திலேயே கல்லூரிக்குச் சென்று சர்டிபிகேட் மற்றும் மார்க்சீட் வாங்கவேண்டிய இடத்தின் முன்பு நிற்கும் வரிசையில் நின்று தன் முறை வந்ததும் கல்லூரி அடையாள அட்டையைக் கொடுக்க அதை வாங்கிய அலுவலர், “உங்க பிரான்ச் சர்டிபிகேட் உள்ளே இருக்கு. ஒருநிமிசம்” என்று அங்கிருந்து அகன்றதும் பூங்குழலி துணுக்குற்றாள்.

ஏனெனில் சற்றுமுன்பே அவளது பிரான்சில் படித்த ஒருவன் சர்டிபிகேட் மற்றும் மார்க் சீட் வாங்கிச் சென்றிருக்க அது கண்டிப்பாக மேசையில் இருக்கும் என்று அவள் அறிந்ததே. ‘அப்படியானால் இன்னமும் தன்னைத் தேடுகிறார்களா? மாட்டிக்கக்கூடாதே’ மூளை வேகவேகமாகக் கணக்குப் போட,

தனக்குப் பின்னே யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தவள் யாரும் இல்லை என்றதும் அலுவலக அறையை நோக்க அதுவும் மூடியிருந்தது.

அருகில் இருந்த நாற்காலியை சத்தமின்றி மேசை அருகே வைத்தவள் அதன் மீதேறி மறுபுறம் சென்று தன் பிரான்சின் சர்டிபிகேட் வைத்திருக்கும் மூன்று கோப்புகளையும் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டாள்.

அதில் தன்னுடையதை தேடி எடுப்பதற்கு நேரமாகும் என்பதால் அதனைத்தூக்கி கொண்டு மீண்டும் நாற்காலியில் இறங்கி குதித்தவள் சிசிடிவி கேமரா பார்த்து ஆட்கள் வரும்முன் இடத்தை விட்டு வெளியேறினாள்.

அவளின் கல்லூரிதானே எங்கெங்கு கேமரா இருக்கும் என்று தெரியாதா என்ன? வசதியாக ஓரிடத்தில் மறைந்திருந்துத் தன்னுடையதைத் தேடி எடுத்தவள் மற்றவர்களின் மார்க் சீட் மற்றும் சர்டிபிகேட் அதில் உள்ளதென்பதால் வழியில் சென்ற ஒரு பெண்ணின் கையில் கொடுத்து ஆபிஸ் ரூமில் கொடுக்கச் சொல்லி வேகமாக கல்லூரியில் வாசலுக்கு வர கோயம்புத்தூர் செல்லும் பேருந்து வாயிலில் இருக்கும் சிக்னலில் நிற்பதைக் கண்டவள் கண்ணிமைக்கும் நேரத்தில் சிக்னலுக்குள் புகுந்து பேருந்தில் ஏறிவிட்டாள்.

பேருந்து மெதுவே நகர கடைசியாக கண்ணில் அகப்பட்ட ஆரவ்வின் கட்அவுட்டைப் பார்த்தவளோ ‘என்றைக்கா இருந்தாலும் உன் சாவு என் கையில்தான். பார்ப்போம் நீயா நானான்னு’ என்று சபதமெடுத்து கொச்சியை நோக்கிப் பயணமானாள் பூங்குழலி.

இன்று…

மேலோட்டமாக என்ன நடந்தது என்பதைத் தம்பியிடம் கூறிகொண்டிருந்த ரித்தேஷ் பூங்குழலி இரவோடு இரவாக கிளம்பியது வரை கூறிமுடித்து, “காணாமப் போன அடுத்தநாளே என்கிட்ட இந்த கேஸ் வந்திருந்தா எப்பாடுபட்டாவது கண்டுபிடிச்சிருப்பேன். கேஸ் அவங்ககிட்ட இருந்து ரெண்டு வருஷம் கழித்து வந்ததுல அவங்க குடுத்த ஆதாரத்தை வச்சி எங்கிருந்துத் தேட என்றே தெரியலை” என்றதுதான் தாமதம் பொங்கிவிட்டான் இளையவன்.

“வாட் தி ஹெல்… அப்படிமட்டும் பண்ணிருந்தா உன்னை அண்ணன்னு கூட பார்க்கமாட்டேன். தொலைச்சிக் கட்டிருப்பேன்” என கத்தினான் ரியாஸ்.

“டேய் புரியாம பேசாத அந்த பொண்ணு திரும்ப சென்னைக்கு வந்து காலேஜ் சர்ட்டிபிகேட்லாம் வாங்கிட்டு போயிருக்கு. சிசிடிவி பார்த்துக்கூட அவளை மிஸ் பண்ணிட்டாங்க. வாசல்ல இருந்து வலதுபக்கம் போறது தெரியுது ஆனா அதுக்கு அப்புறம்தான் ஆள் எந்தப்பக்கம் போனானே இப்போவரை தெரியலை” என

“இனியும் தெரியாது” என்றவாறு எழுந்துக்கொள்ள,

“ரியா விளையாடதே…” அண்ணனின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியவன்,

“ஹையோ ஹையோ உன்னாலயே கண்டுபிடிக்க முடியலன்னா நான் எப்படி பார்த்திருப்பேன்? சும்மா தெரிஞ்ச மாதிரி பீலா விட்டேன் நம்பீட்டியா ரித்து” என சிரித்தே சமாளிக்க கூடப் பிறந்தவனுக்குத் தெரியாதா தம்பியின் குணம்?

“சோ நீ சொல்ல மாட்ட?” அண்ணனின் குரலுக்கு பதிலின்றி அமைதியாக இருந்தான் ரியாஸ்.

பின் எதையோ யோசித்து, “ஒரு காலத்துல இவரு நடிச்ச நடிப்புல மயங்கி இவருக்குப் போய் ஓட்டு போட்டேனே என்னை சொல்லணும்” என்று தலையில் அடிக்க,

“ஹாஹா உன் ஒரு ஒட்டை நம்பிதான் ஆரவ் இருக்காரா? நேத்துவரை அவரு செய்றதெல்லாம் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து இன்னைக்கு கரிச்சிக் கொட்டுற” என

“அவராம் அவர் மொட்ட சுவர். அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை உன் கூட வெளிநாட்டுல படிச்சவன்தானே” ரித்தேஷிடம் கடுப்படித்தான் ரியாஸ்.

“ஹ்ம்ம் இந்த மரியாதை வயசுக்கு இல்லை செய்ற செயலுக்கு வகிக்குற பதவிக்கு” என்றவனிடம்

“செய்யுறது கொலை, கடத்தல் இன்னும் எத்தனையோ? பதவி மட்டும் பெத்த பதவி சீப் மினிஸ்டரா? அவனுக்கு இதெல்லாம் அதிகம்தான். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் எங்க மேடம் கைல சிக்குனான் அன்னைக்குதான் அவனுக்கு கடைசி நாளா இருக்கும் தெரிஞ்சிக்கோ” என்று வாயை விட்டான்.

“என்னசொன்ன மேடம்மா யாரு அந்த பொண்ணு பூங்குழலியா?” டிடக்டிவ் மூளை வேகமாய் ஊகித்துவிட நாக்கைக் கடித்து முழித்து நின்றான் ரியாஸ்.

“டேய் சீப் மினிஸ்டர் ஆகி ஏழு வருஷம் ஆகியும் இன்னும் ஆரவ் பூங்குழலியை தேடிட்டு இருந்தா என்ன காரணம்னு யோசிக்க மாட்டியா நீ?”

“பெருசா என்ன இருக்கப்போகுது தனக்கு எதிரா ஒருத்தரும் இருக்க கூடாதுங்கற சீப்பான எண்ணம்”

“இப்போ அவருக்கு எத்தனை எதிரிகள்னு தெரியுமா உனக்கு? பெரிய பெரிய ஆட்கள் எல்லாரையும் பகைசிட்டு கெத்தா இருக்கார். சரி சரி இதுக்கு மேல நீ சொல்ல மாட்ட ஓரளவு நானே ஊகிச்சிட்டேன். இனி உன்கிட்ட இருந்து விஷயம் வாங்குறது கஷ்டம். பட் என்கூட வரியா நான் ஆரவ்வை பார்க்கப் போறேன்” என்றவாறு அமர்ந்திருந்தவனை எழுப்ப,

“எதுக்கு அந்தாள நான் பார்க்க வரணும்? டேய் நான் உன் தம்பிடா. மாட்டிவிட்டு கும்ம சொல்ல போறியா மனுசனாடா நீயெல்லாம்?” என அலற,

“அதெல்லாம் ஒன்னுமில்லைடா. உனக்கு ஒரு சப்ரைஸ். அங்க போனா நீயே சொல்லுவ. உன் மேல ஒரு துரும்பு கூட விழாது அதுக்கு நான் பொறுப்பு. சீக்கிரம் சீக்கிரம் மணி எட்டரை ஆச்சா பத்துமணிக்கு ஆரவ் ஆபிஸ் கிளம்பிருவாறு அதுக்கு முன்ன பிடிக்கணும் வா” என்றவாறு வெளியே வர வெகுநேரமாய் உணவுண்ண அழைத்த தாயிடம், “வந்து சாப்பிடறோம்மா” என்று இருவருக்கும் சேர்த்து பதில் கூறி வெகு நாட்கள் கழித்து வீடு வந்த தம்பியை உண்ணக்கூடவிடாமல் இழுத்துச் சென்றான்.

ஆரவமுதன் இல்லம்.

குளியலறையிலிருந்து தலையை துவட்டியபடி வந்த ஆரவ் உடையை தேர்ந்தெடுக்க அலமாரியை திறக்கையில் இன்டர்காம் அலற அதை எடுத்தவனிடம் ரித்தேஷ் அவனின் தம்பியுடன் வந்திருப்பதை அவனின் பாதுகாவலர் தெரிவித்தார்.

ஒரு மணிநேரம் முன்பு சென்ற ரித்தேஷ் மீண்டும் வந்ததும் முக்கிய விஷயமாகதான் இருக்கும் என்றறிந்து அலுவலக அறையில் அமர வைக்குமாறு கூறி யோசனையுடன் தயாரானான்.

வெள்ளைநிற சட்டையும் அதற்கு பாந்தமாக கருப்பு நிற ஜீன்சும் அணிந்து அவனிற்கே உண்டான இயல்புபோல் பொருந்திய கம்பீரத்தில் அலுவலக அறைக்குள் வர திரையில் மட்டுமே கண்டு ரசித்த, காலேஜை கட் அடித்து ஆரவ்வின் படத்திற்க்கு சென்று தான் ரணகளம் செய்ததெல்லாம் ரியாஸிக்கு நினைவு வந்தது.

அமர்ந்த கையோடு, “சொல்லு ரித்தேஷ்… எனிதிங் இம்போர்டன்ட்” என நேராக விஷயத்திற்கு வர அதுவரை மலரும் நினைவுகளில் ஆழ்ந்திருந்த ரியாஸ் நிஜத்திற்கு வந்தான்.

“யெஸ்… பூங்குழலி எங்கன்னு தெரிஞ்சிருச்சி” என்றான் தம்பியின் சுடுபார்வையை உணர்ந்துக்கொண்டே. கிடைத்த செய்தியை புருவம் சுருக்கி கிரகித்த ஆரவ் பின் ஒரு பெருமூச்சுடன், “சொல்லு எங்க இருக்கா அவ?” என

தம்பியைக் கைக்காட்டியவன், “ரியாஸ்க்கு தெரியும் பட் நாம எதுக்கு தேடுறோம் அப்படிங்கற உண்மை தெரியாம சொல்ல மாட்டிக்குறான்” என இப்போது ஆரவ்வும் ரித்தேஷை முறைத்தான்.

“சாரி… தம்பி இப்போதான் லீவ்ல வந்தான். இங்கிருந்து போன டென்ஷன்ல அவன் பூங்குழலியை தெரியும்ன்னு சொன்னதும் யார்கிட்டையும் சொல்லக்கூடாது அப்படிங்கற உங்க வார்த்தையை மீறிட்டேன் ஆனா முழுசா சொல்லலை நம்புவானான்னு தெரியல அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என

முன்பு கொடுத்த ஆள் மூலம் வெளியே கசிந்ததால்தான் ரித்தேஷிடம் கேஸ் வந்தது. அதனால்தான் இந்த வாக்குமூலம்.

ஆரவ்வோ, “ஒரு விஷயம் செய்றோம் என்றால் முழுசா செய்யணும் இல்லையா அதை செய்யவே கூடாது. இப்படி அரைகுறையா செய்றவங்களை பார்த்தாலே…” என்று முடிக்காமல் கடித்துத் துப்ப

“சார் நீங்கதானே எக்காரணம் கொண்டும்…” என்கையில் கதவுதட்டப்பட்டது.

“எஸ் கம் இன்” என்றவன் ரித்தேஷிடம், “அது வெளி ஆளுங்களுக்கு சொன்னேன். இவன் உன் தம்பிதானே பிரச்சனை இல்லை” என்றான்.

உள்ளே வந்தவனோ சிறுவனும் அல்லாத இளைஞனும் அல்லாத இடைப்பட்ட வயதில் அரும்பு மீசையுடன் பள்ளி சீருடையில் காட்சியளித்தான். ஆரவ்வின் அருகே நெருங்கி குனிந்தவன், “அண்ணா ஸ்கூல்க்கு கிளம்புறேன். வர லேட் ஆகும். இன்னக்கி டான்ஸ் கிளாஸ் போறேன் அங்கிருந்து” என அது அருகில் இருந்த இருவருக்கும் நன்றாகவே கேட்டது.

“ஓகே. இவங்க நமக்கு வேண்டியவங்கதான் இன்ட்ரோ குடுத்துட்டு போ மேன்” என்று ஆரவ் ரியாஸை சுட்டிக்காட்டிக் கூறியதும்

“ஹாய் அண்ணா… ஐ அம் பூவேந்தன் ஸ்டடியிங் இன் டென்த் ஸ்டாண்டர்ட்” என்றவாறு கைநீட்ட அவனின் பெயரில் திடுக்கிட்டு அண்ணனையும் ஆரவ்வையும் பார்த்தான் ரியாஸ். பின் இன்னமும் தன் முன் நீட்டிக்கொண்டிருந்த பூவேந்தனின் கரத்தைப் பற்றிக் குலுக்க அவன் ரித்தேஷிடமும் கைகுலுக்கி விடைபெற்றுக் கிளம்பினான்.

பூவேந்தன் அகன்றதும் அதுவரை இருந்த அமைதியை கிழித்துக்கொண்டு நாற்காலியில் முன்னே நகர்ந்து அமர்ந்த ஆரவ், “சோ இப்போ புரிஞ்சிருக்குமே ஏன் தேடுறேன்னு… இப்போ சொல்லு எங்க இருக்கா அவ?” என என்னவென்றே ஊகிக்க முடியாத குரலில் கேட்க

அவன் மீது முன்பை விட ஏக கடுப்பில் இருந்தவனோ ஆரவ் பூங்குழலியை மரியாதை குறைவாக பேசுவதை சிறிதும் விரும்பாமல், “அவ இல்ல அவங்க” என்று திருத்தினான்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

error: Content is protected !!