manam6

manam6

மகிழம்பூ மனம்

மனம்-6

அம்பிகா மற்றும் முருகானந்தம் இருவரையும் வண்டியேற்றி விட்டவன், தனது பணிக்கு எப்பொழுதும்போலக் கிளம்பியிருந்தான், யுகேந்திரன்.

யுகேந்திரன் BRT (Block Resource Teacher Educator) ஆக பணிபுரிந்து வருகிறான்.

ஏறக்குறைய இருபத்தைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வீதம் ஒரு நபருக்கு தரப்படும். அப்பள்ளிகளில் தரஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்தும் பொருட்டு அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் பயிற்றுநராக யுகேந்திரனும் பணி புரிந்து வருகிறான்.

யுகேந்திரனுக்கு என ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சென்று நேரடியாக பார்வையிட்டு, அங்கிருக்கும் குறைகளை முதலில் குறித்து, அதனைக் களையும் முறைகளை, முறையாக கோப்புகளாகத் தயாரித்துக்  கொடுத்தல், அதன்பின் உண்டாகும் ஐயங்களை நீக்கும் வகையில் ஐயம் தெளிய வேண்டி கூட்டங்கள் நடத்துவது, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாணவர்களுடனான வகுப்புகள் சுமுகமாகக் கொண்டு செல்ல வழிமுறை கூறல், கலந்துரையாடல், ஆசிரியர்களின் சந்தேகங்களை தீர்த்தல், அனைத்து மாணாக்கர்களையும் தேர்ச்சி பெறச் செய்தல் போன்றவற்றிற்கான அணுகுமுறை வகுப்புகளை எடுத்தல், ஆசிரியர் மாணவர் இருவருக்கிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தல், மாணவர் தேர்ச்சி விகிதத்தில் குறைகள் ஏதேனும் இருப்பின் அதனை முறையாகக் களைய மேற்கொள்ளவேண்டிய உத்திகளை பயன்படுத்தும் முறைகளைக் கற்கச் செய்தல் போன்ற பணிகளை ஆசிரியர்களைக் கொண்டு முறையாகச் செய்விப்பது என பணிகள் ஒவ்வொரு நாளும் மாறுபட்ட நிலையில் இருக்கும்.

மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு தேர்வு வைத்து, முந்தைய தேர்விற்கும், தற்போதைய தேர்விற்குமான முன்னேற்றம், பின்னேற்றம் பற்றிய தகவலை, தலைமை அலுவலகத்திற்கு இணையவழியில் உடனடியாக அனுப்புதல் போன்ற பணிகளையும் இவர்களே மேற்கொள்ளுவார்கள்.

///////////

திருமணத்திற்குப் பிறகு, தேவா தங்கியிருந்த அறையினை தாங்கள் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறி, மற்றொரு அறையில் யுகேந்திரன், யாழினியை தங்கிக் கொள்ளுமாறும் கூறியிருந்தார், அம்பிகா.

யுகேந்திரனுடனான யாழினியின் வாழ்வில், எக்கணத்திலும், தேவாவைப் பற்றிய எண்ணம் எழாது இருக்க வேண்டி அம்பிகா இத்தகைய முடிவினை எடுத்திருந்தார்.

தேவேந்திரனுக்கு முற்றிலும் எதிரான குணம் கொண்டிருந்தான், யுகேந்திரன்.

நடவடிக்கை, புறத்தோற்றம், பழக்கவழக்கம், இலகுத்தன்மை எதிலும் தேவாவை நினைவுபடுத்தாதவனாக, எளிதில் பழகும் குணத்தோடும் இருந்தான், யுகேந்திரன்.

மூத்தது மோழை, இளையது காளை என்ற சொல்லிற்கு ஏற்றாற்போல யுகேந்திரன் சுறுசுறுப்பில் காளையாக இருந்தான்.

யுகேந்திரன் வீட்டில் இருக்கும்போது தனது தாய் அம்பிகாவுடன் எதையாவது பேசி வீட்டைக் கலகலப்பாக வைத்திருப்பது வழக்கம்.

நீண்ட நாட்களுக்குப்பின்பு, அன்று அனைவரும் வெளியே சென்றிருக்க, வீட்டின் நெடுநாளைக்குப் பிறகான அமைதி… ஏனோ யாழினியை சற்றே மிரளச் செய்தது.

பழையதை நினைக்காதபோதும், புதிய வாழ்க்கை பற்றிய பயம் இன்னும் இதயத்தின் ஓரத்தில் பிள்ளைப்பூச்சிபோல இருக்கவே செய்தது.

திருமணமான அன்றே, யுகேந்திரனுடன் யாழினியையும் ஒரே அறையில் தங்கச் செய்திருந்தனர், பெரியவர்கள்.  அவர்களை மறுத்துப்பேச முயன்றும் இருவரும் தோல்வியையே தழுவியிருந்தனர்.

மிகுந்த தயக்கத்தோடு, மிகவும் எளிமையான அலங்காரம் எதுவுமின்றி அறைக்குள் நுழைந்தவளை, நேராக ஏறிட்டுப் பார்த்தவன், எதர்க்கும் சஞ்சலப்படாமல், தயங்காமல்,

“வாங்க… உங்களுக்காகத்தான் வயிட் பண்ணிட்டு இருந்தேன்”, என்ற யுகேந்திரனின் எதிர்பாரா சட்டென்ற பேச்சில் தன்னை நிதானம் கொள்ளச் செய்து, பேசுபவனை கவனிக்க முயன்றாள் யாழினி.

“பெரியவங்களோட இந்த ஏற்பாடு எதையும் என்னால மறுத்துப் பேச முடியல…! எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க…!

உங்களுக்கும் இந்தமாதிரி விசயத்தை ஏத்துக்க கஷ்டமாத்தான் இருக்கும்.  யாருமே எதிர்பாக்கலை…! இப்டியெல்லாம் நடக்கும்னு…!

சீக்கிரமா எல்லாம் சரியாகும்னு… எனக்கு நம்பிக்கை இருக்கு…!

ஆனா சரியாக… எவ்வளவு நாளாகும்னு, எனக்கு சரியா சொல்லத் தெரியலை! 

அம்மாவுக்கு ரொம்ப வருத்தம். உங்க நிலைய நினைச்சு ரொம்ப பயப்படறாங்க…!

அந்தப் பயத்தைப் போக்கி, நாமளும் எல்லார் முன்னையும் நல்லா வாழ்ந்து காட்டனும்!  அதுக்கு..  உங்க ஒத்துழைப்பு எனக்கு வேணும்! 

உங்க கன்வீனியன்ட்கு உங்களால முடிஞ்சத செய்யுங்க…! பெரியவங்க நம்ம நல்லதுக்குத்தான் சொல்லுவாங்க…!

இப்ப எனக்கு ரொம்ப அசதியா இருக்கு! நான் தூங்கப் போறேன்!”, என்று படபடவென மடை திறந்த வெள்ளம்போல பேசியவனை அதிர்ச்சியாகப் பார்த்திருந்தாள், யாழினி.

‘ஒருத்தன் என்னன்னா பேசாமையே கொன்னான்.  இவன் என்னன்னா பேசறதை கேக்க வைச்சே கொல்லுவாம் போலயே!’, என்று அவளால் ஒரு நொடி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தேவாவின் செயலுக்குப்பின் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்து, வளைய வந்தவளுக்கு, வாய்ப்பூட்டு போட்டிருந்தது போல, அப்போது வார்த்தைகள் வெளிவரவில்லை.

“ம்.ஹூம்…”, என்று தனது தலையை ஆட்டி யுகேந்திரனின் வார்த்தைகளைக் கேட்டு ஆமோதித்திருந்தாள் யாழினி.

தங்களுக்கென புதியதாக போடப்பட்டிருந்த டபுள்காட் படுக்கையைப் பார்த்தவன், “பெரிய பெட்டுதான்… உங்களுக்கு சிரமம்னா… நான் கீழே படுத்துக்கறேன்”, என்றுவிட்டு, யாழினியின் பதிலை எதிர்பாராமல், யுகேந்திரன் படுக்கையில் இருந்த தலையணையோடு, படுக்கை விரிப்பையும் எடுத்துக் கொண்டு, கீழே படுக்கச் செல்லவே, “இல்லை… நீங்க மேலே படுங்க… நான் கீழே படுத்துக்குவேன்”, என்று யாழினி அவசரமாகக் கூறினாள்.

அதற்குள் படுக்கையை விரித்தவன், “அட… ’டாஸ்’ போட்டுப் பாக்க… எங்கிட்ட இப்ப காயினெல்லாம் இல்லைங்க…!”, என்று அவனது சட்டைப் பாக்கெட்டினுள் கைவிட்டு, இல்லை என கைவிரித்தபடியே, “உங்களுக்கு எப்டித் தோணுதோ அப்டி செய்யிங்க! நான் இங்கேயே படுத்துக்கறேன்”, என்றுவிட்டு யாழினியின் பதிலுக்கு காத்து நிற்காமல், தரையில் படுத்திருந்தான், யுகேந்திரன்.

அவசியமானவற்றிற்கு தன்முனைப்பில்லாமல் வந்து பேசினான்.  தேவையில்லாத பேச்சுகள் அவனிடம் பெரும்பாலும் இருக்காது.  தன்தாயிடம் மட்டும் சற்று விளையாட்டுத்தனமாக எதாவது பேசுவான். வம்பு வளர்ப்பான்.

அம்பிகா ஊருக்குச் சென்றதில் யுகேந்திரனுக்கு அதிக வருத்தம் இருந்தபோதிலும், எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க நினைத்து, அன்று காலையில் பணிக்கு கிளம்பியிருந்தான்.

மாலையில் வீடு திரும்பும் யுகேந்திரன், அம்பிகா இருக்கும்வரை, அவனது தேவைகளுக்காக தாயிடமே வந்து நிற்பதை, அதுநாள்வரை கூர்ந்து கவனித்திராதவள், கணவன் பற்றிய சிந்தனை ஏதுமின்றி, மாலை வேளைக்கான வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தியிருந்தாள் யாழினி.

பணி முடிந்து திரும்பியவனுக்கு, அன்றைய அதீத அலைச்சலில் பசியெடுத்திருந்தது.  தாயிருந்தால் வந்தவுடன் சாப்பாடு கேட்டிருப்பான்.

யுகேந்திரனின் வருகைக்குப் பிறகு, தயாரித்த தேநீரோடு வந்த யாழினி, “இந்தாங்க டீ”, என்று கொடுத்துச் செல்ல, டம்ளரை வாங்கி எட்டிப் பார்த்தவன், மிகவும் சோகமாக, ‘யானைப் பசி பசிக்குது.  இந்தம்மா என்னன்ன சோளப்பொறி கணக்கா… இத்தனூண்டு  டீயைக் கொடுத்து ஏமாத்த பாக்குது…!’, என்று எண்ணியபடியே அமைதியாக தேநீரை அருந்தி முடித்தான்.

அரைமணித் தியாலத்திற்குப் பின், அடுக்களையினுள் ஏதோ வேலையாக நின்றவளை நோக்கி, அடுக்களை வாயிலில் சென்று நின்றபடியே, “ஏங்க…”, என்ற யுகேந்திரன் கேள்விக்கு உடனே திரும்பாதவளை, “ஏங்க… உங்களைத்தான்… சாப்பிட வேற எதாவது கிடைக்குமா?”, என்று கூச்சமில்லாமல் வினவியிருந்தான்.

ஏனெனில் வயிறு செய்த இரைச்சலில், அதற்குமேல் அசிங்கம் பார்க்காமல் துணிந்து யாழினியிடம் கேட்டிருந்தான்.

யுகேந்திரனின் உடல்மொழியில் அவனது நிலையினை உணர்ந்தவள், “ஸ்னேக்ஸ்னா எடுத்துட்டு வரவா?”, என்று வேகமாக, செய்து கொண்டிருந்த வேலையை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றளை, “ஏங்க… இன்னிக்கு கொஞ்சம் அலைச்சல் எனக்கு.  வெளிச்சாப்பாடு பெரும்பாலும் எனக்கு சாப்பிட்டு பழக்கமில்லை.  அதனால சாப்பாடு இருந்தா தாங்க…! இல்லைனா நீங்க எடுத்துட்டு வரேன்னு சொன்னதைத் தாங்க!”, என்று பாவம்போல கூறிவிட்டு, யாழினியின் பதிலுக்கு காத்திராமல், சோஃபாவில் அமர்ந்து டிவி பார்க்கத் துவங்கியிருந்தான்.

யுகேந்திரனுக்கு லன்ச் கொடுத்துவிட வேண்டி காலையில் சமைக்கும்போதே, யாழினிக்கும் சேர்த்து சமைத்திருந்தாள்.  ஆகையால் சாப்பாடு எதுவும் தற்போது மிச்சமில்லாமல் போகவே, யுகேந்திரனின் பேச்சைக் கேட்டவள், இரவு உணவிற்கான வேலையை அப்போதே துரிதமாகத் துவங்கியிருந்தாள்.

சாப்பாடு இல்லைனாலும், ஸ்னாக்ஸ் வரும் என்று காத்திருந்தவனுக்கு, அரைமணித் தியாலத்திற்குப் பின், சூடான உணவைத் தயாரித்து எடுத்து வந்திருந்தாள் யாழினி.

“கை அலம்பிட்டு வாங்க… சாப்பிட”, என்ற யாழினியின் பேச்சைக் கேட்கும்போது, பசியில் காது அடைத்தாற்போல இருந்தது யுகேந்திரனுக்கு.

இத்தனை நாளும், பெரியவர்களுக்காக மதிய சமையல் தனியாகச் செய்வாள்.  இன்று அவர்கள் காலையில் கிளம்பியிருக்கவே மதிய சமையலை, காலையிலேயே முடித்திருந்தாள்.

ஆகையினால், பசி என்று வந்து நின்றவனுக்கு அவசரச் சமையலாக சாதத்தை குக்கரில் வைத்து, காலையில் வைத்திருந்த சாம்பார், அப்பளம், துகையல், ஊறுகாய் என்று வேலையை துரிதமாக முடித்துவிட்டு, உண்ண அழைத்தாள்.

சாப்பிட்டு முடிக்கும்வரை அருகிலேயே நின்று பரிமாறினாள்.  உண்டு முடிக்கும்வரை எதுவும் பேசாமல் இருந்தவன், “நல்ல பசியில இருந்ததால சாப்பிட நீங்க என்ன குடுத்தீங்கனே தெரியலங்க!”, என்று கூறிவிட்டு, “நீங்க கொடுத்த வெண்பொங்கல் நல்லா இருந்துதுங்க”, என்று எழுந்தவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.

சில நாட்கள், தனது மாமியாரிடம் யுகேந்திரன் இப்படிச் சொல்வதைக் கேட்டிருக்கிறாள். அம்பிகாவும் மகனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசுவார்.

யாழினி பதில் எதுவும் சொல்லாமல், ஒரு பார்வையோடு அங்கிருந்து போகவே, யுகேந்திரனும் அதற்குமேல் பேச்சை வளர்க்கவில்லை.

வேளைகள் முடித்து, என்ன செய்வதெனத் தெரியாமல், அறைக்குள் சென்று… அன்று சலவை செய்யப்பட்டு உலரவைத்து, மடிக்காமல் கிடந்த துணிகளை எடுத்து மடிக்கத் துவங்கினாள்.

ஊருக்குச் சென்ற அம்பிகா.. இரவு ஏழு மணிக்குமேல் யுகேந்திரனுக்கு அழைத்துப் பேசத் துவங்கினார். “சொல்லும்மா…”, என்று ஆரம்பித்த மகனிடம், “எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்த?”, என்ற கேள்வியோடு உரையைத் துவங்கினார்.

மகன் சொன்னதை ஒரளவு கேட்டறிந்தவர், “யாழினிகிட்ட போனைக் கொடு”, என்கவே நீண்ட நேரம் யாழினியை ஹாலின்பக்கம் காணாமல் இருக்கவே, அடுக்களையில் சென்று பார்த்துவிட்டு, “அம்மா அவங்களைக் காணோம்மா!”, என்று கூறியவனிடம், “என்னடா அவங்க… இவங்கனு… உன்னைய விட அது சின்னப்புள்ளைதானே… பேரைச் சொல்லிக்கூப்பிடுனு எத்தனை தடவை உங்கிட்ட சொல்றது”, என்று கடிந்து கொண்டவர், “ரூம்ல எதாவது வேலையா இருப்பா, போயி பாரு!”, என்று தாய் கூறவே, அறையை வந்து நோட்டமிட்டான், யுகேந்திரன்.

அறைவாயிலில் வந்த அரவத்தை உணர்ந்து நிமிர்ந்தவள் கையில் போனுடன் நின்றவனிடம், “என்ன வேணும்?”, என்று யாழினி கேட்க, “அம்மா பேசுறாங்க”, என்று அவனது போனை அவளிடம் நீட்ட, வாங்கியவள் மாமியாருடன் பேசத் துவங்கினாள்.

மகன் சொன்னதை நம்பினாலும், மருமகளிடமும் மகன் வந்த நேரம் முதல் தற்போதுவரை நடந்தது வரை மருமகள் வாயிலாகவும் கேட்டறிந்தார் அம்பிகா.

இருவரிடமும் ஒருவழியாகப் பேசி அலைபேசியை வைத்திருந்தார், அம்பிகா.

“எதுக்கு அத்தைகிட்ட அப்டிச் சொன்னீங்க…?”, என்ற யாழினியின் கேள்விக்கு, “என்ன சொன்னேன்”, என்று திருதிருவென விழித்தவாறு கேட்டவனிடம், “என்னைக் காணோம்னு சொன்னீங்களாம்”, என்று கோபம்போல முகத்தை வைத்துக் கொண்டு, கண்களில் சிரிப்போடு கூறினாள்.

யாழினியின் கோப முகத்தைப் பாத்திருந்தவன், அவளின் பதிலில் பதறியபடி, “இல்லை… ரொம்ப நேரமா ஆளைக் காணலைனு… கிச்சன்ல போயி பாத்தேன். அங்க இல்லைனால… அப்டிச் சொன்னேன்”, என்றவனிடம், “சரி, இப்ப நைட்டுக்கு வேற எதுனா உங்களுக்கு சாப்பிட செய்யவா?”, என்ற கேள்வியை முன்வைத்தாள்.

“எனக்கு ஒன்னும் வேணாம்”, என்று முகம்வாடக் கூறியவனை, ‘ஐயோடா இப்ப நான் என்ன கேட்டுட்டேனு, துரை இப்டி முகத்தை தூக்கி வச்சிட்டார்’, என்று எண்ணியபடியே, யாழினி பழைய வேலையைத் தொடர, யுகேந்திரன் மீண்டும் தொலைக்காட்சியோடு ஐக்கியமாகியிருந்தான்.

துணி வேலைகள் முடித்து ஹாலுக்கு வந்தவள், “நாளைக்கு காயெல்லாம் கொஞ்சம் வாங்கனும்.  நீங்க வரும்வழியில வாங்கிட்டு வரீங்களா?” , என்று யாழினி கேட்க

“எனக்கு சாப்பிட மட்டுந்தாங்க தெரியும்.  காயெல்லாம் அம்மாதான் வாங்கும்.  வேணா சாயுங்காலம் கிளம்பியிருங்க, நான் வந்தவுடனே கூட்டிட்டுப் போறேன்”, என்று யுகேந்திரன் சாதாரணமாகக் கூறியிருந்தான்.

யுகேந்திரனின் பதிலைக் கேட்டவளுக்கு, நெஞ்சை அடைத்தது.  அது சந்தோசத்தாலா? இல்லை எழுந்த சங்கடத்தாலா? என்று புரியாமல், “சரிங்க… அப்போ நாளைக்கு சாயுங்காலமே போயி வாங்கிப்போம்,  நைட்டுக்கு… பால்னா குடிக்க கொண்டு வரவா?”, என்று குறைந்த குரலில் கேட்டாள்.

நினைக்கக் கூடாது என எண்ணினாலும், தேவேந்திரனின் செயல் ஏனோ மனத்திரையில் வந்துபோனது, யாழினிக்கு.

யுகேந்திரனின் பேச்சைக் கேட்டு மனம் உண்மையில் நிறைந்ததாகவே உணர்ந்தாள் பெண்.

“அவ்வளவுதான்.  இனியெனக்கு ஒன்னும் வேணாம்”, என்றவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள்.

அவனோ டிவியில் கண்ணைப் பதித்திருந்தான்.

பெரும்பாலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்த்தவனை, ‘இன்னும் விளையாட்டுப் பிள்ளைனு நினைப்பு’, என நினைத்தவாறே அன்றைய தினத்தைக் கடந்திருந்தாள்.

ஊருக்குச் சென்றவுடனே, அன்று மதியமே அம்பிகா யாழினிக்கு அழைத்துப் பேசியிருந்தார். 

“கலகலனு இருக்கணும்.  என்ன வேணுனாலும் கூச்சப்படாம அவங்கிட்டக் கேளு. நல்லா சந்தோசமா ரெண்டு பேரும் இருக்கனும்”, என்று ஓட்டை ரெக்கார்ட் போல மீண்டும் மீண்டும் அவர் கூறுவதை, தங்களது எதிர்கால நலனுக்கு என எண்ணிக்கொண்டு, அனைத்திற்கும் சரி… சரி… என்றிருந்தாள், யாழினி.

////////

அடுத்த நாள், மாலையில் பணி முடித்து வீட்டிற்கு வந்தவன், யாழினியை வெளியில் அழைத்துச் சென்றான்.

சென்னை வந்ததில் இருந்து, பொருட்கள் வாங்க பெரும்பாலும், தனியே சென்று வந்தவள், முதன்முறையாக யுகேந்திரனுடன் செல்வது புதிய அனுபவமாக உணர்ந்தாள்.

வேண்டிய காய்கறிகளை வாங்கிக் கொண்டு, திரும்பும் வழியில், வழக்கமாக பூ வாங்கும் பெண்ணிடம், “இரண்டு முழம் பூ கொடுங்க”, என்று யாழினி கேட்க,

இதுவரை தனித்து வந்து பூ வாங்குபவள், இன்று கணவனுடன் வாங்குவதைக் கண்டு,

“இதுதான் வூன் ஊட்டுக்காரரா? பொருத்தம்னா பச்சக்குனு பத்து பொருத்தமும் பாத்தாலே எங்கண்ணுக்கு தெரியுது. சோடின்னா அப்டி ஒரு சோடி. எங்கண்ணே பட்டுருச்சு போ…”, என்று யாழினியிடம் பேசியவள், யுகேந்திரன் பக்கமாகத் திரும்பி, “இன்னிக்குத்தான் இந்தப்புள்ளகூட வர உனக்கு நேரம் கெச்சுச்சா? ஏங்கேக்குறேன்னா… லட்டு கணக்கா பொண்ணை… தனியா வுடலாமா? இனி தனியா அனுப்பாத ராசா…”, என்று கேள்வியைத் தொடர்ந்து வந்த பூக்காரியின் அறிவுரையைக் கேட்ட இருவரும் பதில் எதுவும் சொல்லாமல், அந்தப் பெண் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, யுகேந்திரன் தலையை ஆட்டி ஆமோதிக்க, யாழினி சிரித்தபடியே வீடு திரும்பியிருந்தனர்.

யாழினிக்கு மனமெங்கும் ஒரே குதூகலம்.  யுகேந்திரன் என்கிற ஆண் யாழினியின் மனமென்னும் சிம்மாசனத்தில் அன்றே அமர்ந்திருந்தான்.

வேறு எதையும் அவள் மேற்கோண்டு யோசிக்க விரும்பவில்லை. பழையதோடு, நடப்பை தொடர்புபடுத்திக் காண அவளுக்குப் பிரியமில்லை.

ஆனாலும் அவளறியாமல் வந்து போன எண்ணத்தை, அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

யுகேந்திரனுக்கு, வருத்தம் மட்டுமே மேலிட்டிருந்தது. இன்று பூக்காரியின் பேச்சிற்குப் பிறகுதான், யாழினியை ஓரக் கண்ணில் கவனிக்கத் துவங்கியிருந்தான்.

நேரில் காண… ஏனோ? எதோ… தயக்கம் மனதில் வந்திருந்தது.

நிச்சயமாகப் பேரழகிதான்.  இவளை வேண்டாமென்று எந்தப் பேரழகியைக் காண தேவா சென்றான்? என்று ஒரு கனம் தேவாவின் மீது கோபம் வந்தது. 

‘எப்டி, நம்ம அம்மா வளத்த வளர்ப்பு… இப்டி பொய்யா போச்சு இவன் விசயத்துல?’, என்று வருத்தமும் வந்து போனது.

நாட்கள் செல்லவே, நாளொரு முன்னேற்றமும் இருவருக்கிடையேயான உறவில் வந்தது.

அம்பிகா எத்துணை பணிகள் இருந்தாலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை அழைத்துப் பேசிவிடுவார்.  அம்பிகாவின் வாயிக்கு பயந்தே இருவரும், ஒருவரையொருவர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றியவை, பின்பு அது ஒரு விசயமே அல்ல என்பதுபோல மாறியிருந்தது.

யுகேந்திரனின் திருமணச் செய்தியறிந்த அவனோடு பணிபுரியும் தோழர்கள், ‘திருமண விருந்துதான் தரல, ட்ரீட்டாவது தா’, என்று கேட்டு நச்சரிக்க, வாரயிறுதியில் தருவதாக ஒப்புக்கொண்டான்.

யாழினியிடம் அதுபற்றிக் கூறியிருந்தான்.  வாழ்க்கை தன்னை வஞ்சித்து விட்டதோ என வாடியவளுக்கு, அப்டியில்லை என்று ஒவ்வொன்றாக யுகேந்திரன் செய்து, அவளை மகிழ்ச்சிக் கடலில் கொண்டு சென்றான்.

இருபால தோழமைகளும் கலந்து கொண்டு வாரயிறுதி நாளை அமர்க்களம் செய்தார்கள்.  யாழினியைப் பார்த்து ஆண்கள் அனைவரும், யுகேந்திரன் மீது பொறாமை கொண்டனர்.  அதை பேச்சுவாக்கில் கூறவும் செய்தனர்.

“யுகி… உனக்கு உடம்பு முழுக்க மச்சமா இருந்திருக்கும்போலடா…”, என்றும்

“சிஸ்டர் நல்ல மாதிரி தெரியறாங்கடா”, என்றும்

“நல்ல மேட்ச்டா”, என்றும்

“மச்சக்காரன்டா”, என்றும்

“உனக்கு மட்டும் எல்லாம் நல்லாவே அமையுது.  எப்டிடா?”, என்றும்,  இன்னும் பலவாறாக

தங்களின் மனதின் கருத்துகளை கூறி வாழ்த்தியிருந்தனர்.

அதுவரை தனது திருமணம், மணமகள் பற்றிய எந்த ஈடுபாடில்லாமல், பெற்றோருக்காக என்றிருந்தவனுக்கு, நடக்கும் ஒவ்வொரு செயல்களும், பிறரின் பேச்சும், யாழினியை கவனிக்க, கண்காணிக்கத் தூண்டியது.

படிப்ஸ்ஸாக முதலில் இருந்தவனுக்கு பணி பற்றிய தேடல் மட்டுமே இருந்தது.  அதன்பின் அரசாங்க உத்தியோகம் கிடைக்கப்பட்ட பின்பு, தொலைதூரக்கல்வி வாயிலாக எம்.ஃபில் படிக்க முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்தியிருந்தான்.

திருமணம் என்பது அவன் எதிர்பாரா தருணத்தில் நடந்த, எதிர்பாரா எரிமலையினால் உண்டான தாக்க நிகழ்வாகவே ஆரம்பத்தில் உணர்ந்தான்.

நாட்கள் செல்லச் செல்ல, வாலிப வயதின் மாற்றங்களை, வசந்தங்களை, சுற்றியிருந்தவர்கள், விளையாட்டாகவும், வெகுளித்தனமாகவும், பொறாமை கொள்ளும் நிலையிலும் வெளிப்படுத்தி, யுகேந்திரன் மனதை எதிர்பாராத தங்களது செயல்களின் மூலம் திசைதிருப்பியிருந்தனர்.

வெட்டியாக வெளியில் நண்பர்களோடு சுத்தும் பழக்கம் எப்போதும் இல்லாதவன்.  ஆனால், அவனது மனமாற்றம், பணி முடிந்தால் உடனே வீடு, வீடு விட்டால் பணி என்று வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்தவன் மனதில், புதியதாக யாழினி என்னும் யட்சனி குடியேறியிருந்தாள்.

அதற்கு யாழினியின் அதீத கவனிப்பு, கலகலப்பு, இயல்பான பேச்சு, அழகு எல்லாமே காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

யுகேந்திரனுக்கு சரிக்கு சரியாக வாயடிக்கும் அளவிற்கு யாழினியும் மாறியிருந்தாள்.

இந்த உறவு, புரிதல் யுகேந்திரனுக்கு புதிது.  பருவ வயதில்கூட காதல் என எந்தப் பெண் பின்னும் பிதற்றித் திரியாதவன், சுற்றியிராதவன், தற்போது யாழினியுடனான தன்னுடைய உறவில் ஏதோ புதிய உணர்வினை உணரத் துவங்கியிருந்தான்.

‘ஏங்க, ஏங்க’, என்று எப்பொழுதும் யாழினியை அழைப்பவனை… நிமிர்ந்து பார்த்தவள்,

‘எதுக்கு ஏங்கனும். துரை… ஒழுங்கா பேரு சொல்லி யாழினினு கூப்பிட வேண்டியதுதான’, என்று யாழினி கூறியதைக் கேட்டு புரியாமல்,

‘நான் எப்ப ஏங்கினேன்’, என்று யுகேந்திரன் கேட்க

‘அதானே… நீங்க ஏன் ஏங்கப் போறீங்க…’, என்று ஒருமாதிரிக் குரலில் பதிலளித்தவள், அதற்குமேல் எதுவும் பேசாமல், தனது கண்களால் சிரித்தே கணவனை கபளீகரம் செய்தாள்.

அந்த நாளை, அவளின் கண்கள் தன்னோடு பேசிய அழகை அவனால் மறக்க இயலவில்லை.

பருவமெய்தியும் அன்றுவரை பாலபாடத்தோடு வாழ்ந்து இருந்தவன், அந்தக் கண்களின் பாவனையில், யாரும் கற்பிக்காமலே மாரனின் பாடத்தை அறிந்து கொண்டான்.

இரண்டு நாட்களுக்குப்பின், ‘ஏங்க…’ என்று யாழினி தன்னை அழைத்துப் பேச எத்தனிக்க,

“நீங்க மட்டும் என்னைப் பாத்து ஏங்கினா தப்பில்லையாக்கும்”, என்று யுகேந்திரன் பேச,

“லேடீஸ் எல்லாருமே அவங்க ஹப்பிய… பெரும்பாலும் கல்யாணம் ஆன புதிசில இப்டித்தானே கூப்பிடுவாங்க.

குழந்தைங்க வர்றவரை இப்டித்தான் ஏங்குவாங்க…! அப்புறம் அந்தக் குழந்தை வந்தபின்ன அதுபேரோட அப்பானு சேத்துப்பாங்க.  ஆனா எந்த ஹப்பியாது தன்னோட வயிஃப்பை… ஏங்க… ஏங்கனு… கூப்பிட்டு எங்கையாவது பாத்துருக்கீங்களா?”, என்று கேட்டுச் சிரித்தவளிடம், என்ன பதில் பேச என்று தெரியாமல், தான் விழித்ததை, இப்போது எண்ணினாலும், யுகேந்திரனுக்கு புன்முறுவல் வந்து போனது.

“துரை ரொம்ப பல்ப் வாங்காதீங்க… உங்கள விட நான் சின்னவதான… அதனால இனி எம்பேரைச் சொல்லியே கூப்பிடுங்க”, என்று அன்று அகன்றிருந்தாள்  யாழினி.

வீட்டில் பழையபடி மகிழ்ச்சி, இனிமை படிப்படியாக… திரும்பியிருந்தது.

தயக்கம் இருவருக்கும் தாராளமாகவே இருக்க, யுகேந்திரனும் தயங்க, யாழினியும் ஒதுங்கியே இருந்தாள்.

யாழினி, ஒரு மனைவியாக, இல்லறத்தைத் தவிர மற்ற அனைத்தையும் எந்தக் குறைவுமின்றி யுகேந்திரனுக்குச் செய்திருந்தாள்.

தேவாவின் இழப்பை காலத்தால் ஓரளவு குடும்பமே மறந்திருந்தனர்.

அவளின் இனிமையும், மகிழ்ச்சியும் யுகேந்திரனையும் நாளடைவில் தொற்றிக் கொள்ளத் துவங்கியது.

அந்தரங்கம் புனிதமானது!

குளியலின் முதல் சுகமே அதன் சுதந்திரம்தான்.

தனக்கான சுதந்திரம் பேணுதல், அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். 

தனிமனித சுதந்திரத்திற்குள், துணிச்சலாக உலாவி, அந்தரங்கத்தை அறிய விழையும் ஆராய்ச்சிக்கும், ஆய்வுக் கூடமாக, தன்னையே விரும்பித் தருவது, திருமணமே.

வாழ்க்கைத் துணைக்கு மட்டுமே, தனக்கு நிகரான சுதந்திரத்தை… தம்பதியர் இருபாலரும் தாம்பத்தியத்தில் ஒருவர் மற்றவருக்கு தாரை வார்த்திருப்பர்.

ஆனால் இருவரும் அச்சுதந்திர நாளை அனுபவிக்க உரிய காலம் பார்த்து, காத்திருந்தனர்.

யாழினிக்கான தன் மன இடத்தை அவனது தற்போதைய மாற்றங்கள் அவனுக்குப் பறைசாற்றியிருந்தது.

மாற்றங்கள் ஒன்றே நம் வாழ்வில் மாறாதது.

மாற்றங்கள், மாற்றானின் மனைவியை மணமுடித்து… முதலில் எட்டி நிற்கச் சொன்னது…!

பின் காவலனாக்கியது…!

பார்வையாளனாக்கியது…!

பார்த்து ரசிக்கச் சொன்னது…!

காதலோடு கசிந்துருகச் சொன்னது…!

மோகம் கொள்ளத் தூண்டியது!

காமபாடம் கற்றுக்கொள்ள உடலும் உள்ளமும் ஏங்கியது!

மாதங்கள் இரண்டு கடந்திருக்க, யாழினியின் சித்தி மகளுக்கு திருமணம் என்று பத்து நாட்களுக்கு முன்பே, யாழினியை யுகேந்திரன் அழைத்துச் சென்று ஊரில் விட்டிருந்தான்.

திருமணத்திற்குப் பிறகு, அதுவரை யாழினியை விட்டு பிரிந்திராதவனுக்கு, அவளின் பிரிவு… ஏக்கத்தைக் கொடுத்து, தூக்கத்தை விரட்டி, துக்கத்தைக் கொடுத்திருந்தது.

யுகேந்திரனின், இனிமையும், மகிழ்ச்சியும் தொலைந்து யாழினியோடு போனதாகவே முதன் முறையாக உணர்ந்தான்.

எப்போதுடா யாழினியின் தங்கை திருமணம் முடியும்! எனக் காத்திருந்தவன், திருமணத்திற்குச் சென்ற கையோடு, யாழினியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பியிருந்தான்.

யுகேந்திரனின் செயல் எதுவும் புரியாதவளாய், இயல்பாக… யுகேந்திரன் அழைக்க உடன் கிளம்பியிருந்தாள், யாழினி.

சரிதா, ராஜேஸ் இருவருமே மகளையும், மருமகனையும் இரண்டு நாள் தங்கிச் செல்லுமாறு எவ்வளவோ எடுத்துக் கூறியும், விடுப்பு இல்லாத காரணத்தைக் கூறி கிளம்பியிருந்தான் யுகேந்திரன்.

மகள், மருமகன் இருவரின் முகத்தை வைத்தே, அவர்களை ஓரளவு யூகித்திருந்த சரிதா, ‘இன்னும் எதுவும் சரியாகலையா?’, என்று வருத்தத்தோடு மகளிடம் வினவியிருந்தார்.

மகளும் மறையாது, யுகேந்திரனின் பெருமைகளை அவ்வப்போது எடுத்துக் கூறி, “சீக்கிரம் எல்லாம் சரியாகிரும்மா”, என்று உறுதிகூறி தாயின் வாயை அடைத்திருந்தாள்.

பேருந்தில் பயணம் செய்யும் போது இயல்பாக, பேசிச் சிரித்து வந்தான், யுகேந்திரன்.

“எப்படி அங்கே பொழுது போனது?”, என்று இயல்பாக மனைவியை கேட்கவே

“நேத்துதான் நீங்க இங்க… கொண்டு வந்து ஊருல விட்டுட்டுப் போனமாதிரி இருந்தது. கல்யாண வேளையில அதுக்குள்ள பத்து நாளு போனதே தெரியல…, அவ்ளோ ஃபாஸ்டா நேரம் போயிருச்சு!”, என்ற மனைவியின் பேச்சில் மனம் சற்று ஊமையாக அழுதிருந்தது.

பிரிவின் துயர் தனக்கு மட்டும்தானா?, தன்னை அவள் பாதித்த அளவிற்கு, என் பிரிவு அவளைப் பாதிக்கவில்லையா? என்று மனதிற்குள் அவளுக்காக உருகி, மறுகினான்.

ஏனெனில், யாழினி இல்லாத வீட்டிற்கு வரவே விருப்பம் இல்லாமல், இரவு படுக்க மட்டுமே என்றளவில், பத்து நாட்களைக் கடத்தியிருந்தான் யுகேந்திரன்.

 

மனம் மனைவியில் பேச்சில் வருந்தினாலும், உடலும்,  உள்ளமும் மனைவியின் அருகாமையைக் கேட்க, மனைவியின் பேச்சினால் தன்னைக் கட்டுப்படுத்தி, மனைவியின் மனமாறுதலுக்காக காத்திருந்தான்.

வரும்போது இயல்பாக இருந்தவன், கள்ளத்தனம் உள்ளத்தில் குடிவந்திருக்க, வீடு வந்ததும், யாழினியைத் தவிர்த்திருந்தான்.

முரண்பாடான கணவனின் செயலை, முதன்முறையாகக் கண்டவள், தவித்திருந்தாள்

—————————————————

யாழினியை தவிர்த்தவன், அவளின் தவிப்பை உணருவானா?

அடுத்த அத்தியாயத்தில்…

error: Content is protected !!