Kadhal 27

நடந்து முடிந்த விடயங்களை எல்லாம் நம்மால் மாற்ற முடியாது நடக்கப்போகும் விடயங்களை வேண்டுமானால் நம்மால் திட்டமிட்டு கொள்ள முடியும் என்ற ஒரு எண்ணம் சித்தார்த்தின் மனதிற்குள் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது.

அத்தனை தூரம் எல்லோரும் மேக்னா தான் குற்றவாளி என்று முடிவெடுத்து தீர்ப்பு வழங்கி இருக்க அந்த வழக்கை மீண்டும் வாதாட வைத்து முற்றாக அதன் தீர்ப்பை மாற்றி அமைக்க முடிந்த தன்னால் இனி நடக்கப்போகும் விடயங்களை மாற்றி அமைக்க முடியாதா என்ற கேள்வி எழவே அந்த கேள்விக்கான பதில் அவனுக்கு பன்மடங்கு உத்வேகம் கொடுத்தது.

சித்தார்த் தன் காதலை மனதார உணர்ந்து கொண்ட பின்னர் அதை அதற்கு உரியவளிடமே சொல்லி விடலாம் என்று முடிவெடுத்து கொண்டு அதற்கு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு மேக்னாவின் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தான்.

அவனிடம் கூறியதுபோல ஜெஸ்ஸி ஏற்கனவே மேக்னாவின் வீட்டில் முன்னாள் காத்திருக்க அவளைப் பார்த்து தன் கையை அசைத்தவாறே தன் வண்டியிலிருந்து இறங்கி அவளை நோக்கிச் சென்றவன்
“என்ன ஜெஸ்ஸி இங்கேயே நிற்குற? உள்ள போகலையா?” கேள்வியாக அவளை நோக்க

அவனைப் பார்த்து புன்னகைத்த கொண்டவள்
“நீ வந்ததும் சேர்ந்து போகலாமேன்னு காத்திருந்தேன் என்ன தான் இருந்தாலும் வீட்டு மாப்பிள்ளை இல்லையா?” கேலியாக அவனைப் பார்த்து புருவம் உயர்த்த அவனோ முகம் சிவக்க தன் தலையக் கோதிக் கொண்டான்.

“விட்டால் நீயே இழுத்துக்கொண்டு போய் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துடுவ போல இருக்கு! இன்னும் நானே லவ் பண்ணுறதாக கன்பார்ம் பண்ணல அதுக்குள்ள மாப்பிள்ளைன்னு எல்லாம் உறுதியாக சொல்லுற! இதெல்லாம் ரொம்ப ஓவரு ஜெஸ்ஸி ம்மா!” தன் மனதுக்குள் இருக்கும் விடயம் முதலில் தனக்கு உறுதியாக வேண்டும் என்ற நினைப்பில் இப்போதைக்கு அதைப் பற்றி பேசாமல் இருந்தால் நல்லது என்று எண்ணி இருந்தவன் ஜெஸ்ஸியின் கூற்றுக்கு மறுப்பாக கருத்து கூறியிருந்தான்.

“அப்படியா சார்? நான் நம்பிட்டேன் எங்க பாட்டி கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க ‘முயல் பிடிக்கிற நாயை அதோட முகத்தைப் பார்த்தால் தெரியுமாம்’ இந்த முகத்தைப் பார்த்தாலே தெரியுதே! என்ன இருக்குதுன்னு” அவன் முகத்தை சுட்டிக் காட்டியவாறே அவள் கூறவும்

“நிஜமாவா சொல்லுற? அவ்வளவு அப்பட்டமாகவா விளங்குது?” தன் தொலைபேசியில் முன்பக்க கேமரா வழியாக பார்த்துக் கொண்டே அவன் தன் முகத்தை இடம் வலம் திரும்பிப்பார்க்க

அவனது தலையில் தட்டியவள்
“நீ அவளுக்காக தான் இவ்வளவு பண்ணறேன்னு இந்த ஊருக்கே தெரியும் ஆனால் அந்த மேக்னா பொண்ணு கண்ணுக்கு மட்டும் தெரியல! இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ தெரியல! முதல்ல போய் அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பாக்கலாம் வா!” என்று விட்டுச்செல்ல அவனும் புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

வீட்டின் கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றவர்கள் பார்த்தது வீட்டின் கதவில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த மேக்னாவையும் அவளிடமிருந்து சற்றுத்தள்ளி அழுதவாறே நின்றுகொண்டிருந்த நர்மதாவையும் தான்.

“நர்மதா என்னம்மா ஆச்சு?” நர்மதா அழுவதைப் பார்த்து ஏதோ பிரச்சினை என்று எண்ணிக்கொண்டு அவள் அருகில் பதட்டத்துடன் வந்து நின்றவாறே ஜெஸ்ஸி கேட்கவும்

அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டவள்
“மேடம்! அக்கா கிட்ட சொல்லுங்க மேடம்! இந்த வீட்டில் இருக்கவேண்டாம் வேறு எங்காவது என்னைக் கூட்டிட்டு போக சொல்லுங்க மேடம்! எனக்கு இங்க இருக்கவே பயமாயிருக்கு அம்மாவையும், அப்பாவையும் இந்த வீட்டில் தானே கொலை பண்ணுனாங்க? எனக்கு இந்த வீட்டுக்குள்ள போகவே பயமாக இருக்கு மேடம் அக்காவை வரச்சொல்லுங்க மேடம்” என்றவாறே மீண்டும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

“உஸ்ஸ்ஸ்ஸ்! அழக்கூடாது நர்மதா நாங்க எல்லோரும் இருக்கோம் இல்லையா? நான் பேசி பாக்குறேன்” அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ஜெஸ்ஸி சித்தார்த்தை திரும்பிப் பார்க்க அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டது போல அவளைப் பார்த்து தலையசைத்தவன் மேக்னாவின் முன்னால் சென்று நின்றான்.

“மேக்னா!”

“இன்ஸ்பெக்டர் சார்! நர்மதா சின்ன பொண்ணு தானே! அவ சொன்னா புரிஞ்சுக்குவா ஸார் நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க சார்! இந்த இடத்தை விட்டால் வேறு எங்கே நாங்க போக முடியும்? எங்களுக்கு இந்த ஊரில் வேறு யாரை தெரியும்? சொந்தம்னு சொல்லிக்கொள்ள இருந்த ரெண்டு பேரும் விட்டுட்டு போய்ட்டாங்க இனி எங்கே போறது?

அவளுக்கு பயமாக இருந்தால் நான் அவளை இங்கேயே நிற்கத்தான் சொன்னேன் வீட்டை கிளீன் பண்ணிட்டு நான் சொல்லுறேன் அதற்கு அப்புறமாக உள்ளே வான்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா என்னையும் உள்ளே போக விட மாட்டேங்குறா காலையிலிருந்து இங்கேயே இப்படியே வெளியிலேயே தான் இருக்கிறோம் பாருங்க சாவியை கூட வாங்கி வைத்துட்டு தர மாட்டேன்னு சொல்லுறா! கொஞ்சம் எடுத்து சொல்லுங்க சார்!

அவ இன்னும் இங்கே 2 நாள் தானே இருக்கப் போறா அந்த இரண்டு நாளும் இங்கே இருந்துவிட்டு போகலாம் தானே! என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கிறா இல்ல”

“நான் இனி எங்கேயும் போகமாட்டேன் இனிமேல் நான் உங்களுடன் தான் இருப்பேன்” மேக்னாவின் கூற்றுக்கு நர்மதா அவசரமாக மறுப்பு தெரிவிக்க அவளை மேக்னா முறைத்துப் பார்க்க அவளோ ஜெஸ்ஸியின் பின்னால் அச்சத்துடன் ஓடுங்கிப் போய் நின்றாள்.

“மேக்னா முதலில் நீங்க கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்க” அவளின் கை பிடித்து அங்கிருந்த திட்டில் அமரச் செய்த சித்தார்த் நர்மதாவின் புறம் திரும்பி அவளை தன் அருகில் வருமாறு கைகாட்டி அழைத்தான்.

தயக்கத்துடன் அவனையும், ஜெஸ்ஸியையும், மேக்னாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நடந்து வந்த நர்மதா அவனருகில் வந்ததுமே தன் கையில் இருந்த சாவியை இறுகப் பற்றிக்கொள்ள அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டவன் அவளையும் மேக்னாவின் அருகில் அமரச் செய்தான்.

“இப்போ என்ன? நர்மதாக்கு இந்த வீட்டில் இருக்கப் பயம் அவ்வளவு தானே?”

“ஆமா ஸார்!” மேக்னாவை தயக்கத்துடன் பார்த்தபடியே நர்மதா ஆமோதிப்பாக தலையசைக்க

அவளைப் பார்த்து புன்னகைத்தபடிபடியே மேக்னாவின் புறம் திரும்பியவன்
“மேக்னா இப்போ உங்களுக்கு துணையாக இருந்தவங்களும் இல்ல நர்மதாவுக்கு பாதுகாப்பாக இருக்கவும் யாரும் இல்ல இனிமே நீங்க இரண்டு பேரும் தான் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாக இருக்கணும் அந்த தனபாலனுக்கு பயந்து தானே நர்மதாவை வெளியூரில் தங்க வைத்து இருந்தீங்க? இப்பதான் அந்த தனபாலனுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தாச்சே! இதற்கு மேலே என்ன பயம்? வேறு எங்காவது ஒரு இடம் எடுத்து நீங்க சந்தோஷமாக இருக்கலாமே! ஏன்னா எனக்கும், ஜெஸ்ஸிக்கும் கூட இந்த இடம் அவ்வளவு பாதுகாப்பாய் இருக்கும்னு தோணல” அவளுக்கு புரிய வைக்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு அவன் ஒவ்வொரு விடயமாக எடுத்துக்கூற கூற

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்
“எங்களால் வேறு எங்கும் போக முடியாது ஸார்! எங்களுக்கு இருக்கிறது இந்த ஒரு இடம் தான் இதை விட்டு வேற எங்கேயும் போக முடியாது அதோடு இதற்கு மேலும் வேறு யாரையும் நம்பி என்னால் போக முடியாது ஏன்னா இதுவரைக்கும் நான் பார்த்த விடயங்கள் அப்படி!” தன் கண்களையும், கைகளையும் இறுக மூடி கொண்டபடியே கூறினாள்.

‘தனபாலன் சிறைக்குச் சென்று விட்டான் தான் ஆனால் அவனுக்கும் எனக்குமான கணக்கு இன்னும் முடியவில்லையே! அவனன என் கையால் பழிதீர்க்கும் வரை இந்த கணக்கு ஓயப்போவதில்லை அதற்கு நான் மட்டும் தனியாக இருந்தால் தான் ஏதாவது செய்ய முடியும் நர்மதா என்னுடன் இருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது இதை எப்படி நான் இவர்களுக்கு சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லையே?’ தன் மனதிற்குள் மன்றாடியபடியே மேக்னா சிலை போல அமர்ந்திருக்க

அத்தனை நேரமாக அவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த ஜெஸ்ஸி அவர்கள் முன்னால் வந்து நின்றவாறே
“இப்படியே இரண்டு பேரும் பிடிவாதமாக இருந்தால் என்னதான் செய்ய முடியும்? யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தானே ஆகணும்?” கேள்வியாக நோக்க அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

மேக்னாவையும், நர்மதாவையும் சிறிது நேரம் சிந்தனையோடு பார்த்துக் கொண்டிருந்தவன் பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக
“மேக்னா! நான் சொல்றதை நீங்க கேட்பீங்க தானே?”அவர்களை கேள்வியாக நோக்கவும்

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள்
“இப்போதைக்கு நான் முழுமையாக நம்புகிற ரெண்டு பேரு நீங்களும், மேடமும் தான் இன்ஸ்பெக்டர் சார்!” என்று கூற ஜெஸ்ஸி அவளை வியப்பாக நோக்கினாள்.

“சரி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாதுகாப்பான இடத்தை நான் ஏற்பாடு பண்ணித் தர்றேன் ஆனா அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்துல தனியா இருக்க வேண்டாம் என்னோட வீட்டில் வந்து தங்கி இருங்க” என்று கூற அவனை சுற்றி நின்ற மூன்று பெண்களும் “என்ன?” ஒரே நேரத்தில் சத்தமிட்டவாறே அதிர்ச்சியாக அவனை நோக்கினர்.

“அய்யோ! என் வீடுன்னா நான் இப்போ இருக்கும் வீடு இல்லை எங்க வீட்டிற்கு பக்கத்தில் நாங்க ஆரம்பத்தில் இருந்த ஒரு பழைய வீடு இருக்கு அங்கே அப்பப்போ நானும், என் தம்பிகளும் தங்குவதுண்டு இப்ப கொஞ்ச நாளா அது பூட்டியே தான் கிடக்கு அம்மாவும் அந்த வீட்டை யாருக்காவது வாடகைக்கு கொடுக்க முடியுமான்னு பாத்துட்டு இருந்தாங்க நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன் நீங்க அங்கேயே வந்து தங்கிக்கோங்க

இவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை இந்த வழக்கில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டுட்டு உங்களை இப்படி பாதுகாப்பு இல்லாத இடத்தில் விட எனக்கு மனசு இல்லை என்வீடு இருக்கும் ஏரியான்னா உங்களுக்கும் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் அதோடு இதை நான் என்னோட அத்தை பொண்ணுக்காக பண்ணுறதா நினைக்கிறேன் நீங்க என் அம்மாவுக்கு பக்கத்தில் இருந்தால் தான் அவங்களுக்கு உங்களை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் சுலபமாக இருக்கும் அதனால தான் சொல்லுறேன் ப்ளீஸ் மேக்னா!

என் அம்மா கிட்ட மறுபடியும் சுந்தரி அத்தையை எங்க குடும்பத்தோடு சேர்த்து வைப்பதாக வாக்குக் கொடுத்தேன் அதை என்னால பண்ண முடியல அட்லீஸ்ட் அவங்க பொண்ணையாவது எங்க அம்மாவோட சேர்த்து வைக்கணும்னு ஆசைப்படுறேன் அதற்காகத் தான் இவ்வளவு தூரம் நான் பேசிட்டு இருக்கிறேன் நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன் மேக்னா” சித்தார்த் கெஞ்சலாக அவளை நோக்க அவளோ தன் கையை பிரிப்பதும், கோர்ப்பதுமாக அமர்ந்திருந்தாள்.

“சித்! ஆனால் அம்மா அப்பா?” ஜெஸ்ஸி தயக்கமாக அவனை நோக்க

பெருமூச்சை விட்டுக்கொண்டே எழுந்து நின்றவன்
“அவங்களுக்கு இந்த நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் நேரம் தேவை ஜெஸ்ஸி! அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது மேக்னா ஒரு இடத்திலும் அவங்க ஓரிடத்திலும் இருந்தால் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ளவே முடியாது அதோடு இந்த முடிவு மேக்னாவிற்கும், நர்மதாவிற்கும் பாதுகாப்புக்கு பாதுகாப்பும் கிடைத்த மாதிரியும் ஆச்சு எனக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றிய மாதிரி ஆகிவிடும் அதனால் தான் நான் இந்த முடிவிற்கு வந்தேன் நான் ஒரு தடவைக்கு பல முறை யோசித்துப் பார்த்துவிட்டேன் ஜெஸ்ஸி இது தான் சரியாக இருக்கும்னு தோணுது” என்று கூற

மேக்னாவோ
‘இன்ஸ்பெக்டர் சார் சொல்லுற மாதிரி இந்த இடம் அவ்வளவு பாதுகாப்பு இல்லை தான் ஆனால் அவருடைய வீட்டிற்கு பக்கத்தில் போய் இருந்தால் என்னால் தனபாலனைப் பழி தீர்க்க திட்டம் போட முடியுமா?’ தன் மனதிற்குள் கேட்டு பார்த்துக் கொண்டே நர்மதாவின் புறம் திரும்பிப் பார்க்க அவளோ வெகு ஆவலுடன் அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ஒருவேளை நீ தனபாலனைக் கொலை செய்துவிட்டு மறுபடியும் ஜெயிலுக்கு போனாலும் இன்ஸ்பெக்டர் சார் நர்மதாவை நன்றாக பார்த்துக் கொள்ளுவார் யாரென்றே தெரியாத உனக்காக ஆரம்பத்தில் இத்தனை தூரம் பாடுபட்டவர் இப்போது நீ அவரது சொந்தம் என்று தெரிந்த பின்பு அவளைக் கைவிட மாட்டார் மறுபடியும் நீ ஜெயிலுக்கு போனாலும் உனக்கும் நர்மதா பற்றிய கவலை இருக்காது’ அவளது மனச்சாட்சி அவளுக்கு தைரியம் ஊட்ட

அந்த தைரியத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டவள் அவன் முன்னால் எழுந்து நின்று
“சரி இன்ஸ்பெக்டர் சார் நாங்க வருகிறோம்!” என்று கூற அவனோ சந்தோஷம் தாளாமல் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

சித்தார்த்தின் செயலில் மேக்னா தன்னை மறந்து ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போக அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியாகி நின்ற ஜெஸ்ஸி உடனே தன்னை சுதாகரித்துக் கொண்டு
“டேய்! சித்தார்த் என்னடா பண்ணுற?” அவனின் கையை பிடித்து இழுக்க அவள் தொடுகையில் தன் சுயநினைவுக்கு வந்தவன் அவசரமாக அவளை விட்டு விலகி நின்றான்.

“ஐ யம் ஸாரி மேக்னா! ரியலி ஸாரி! ஏதோ ஒரு எக்சைட்மென்டில் இப்படி! ரியலி ஸாரி!” வெகுவாக மனம் வருந்தியவாறே சித்தார்த் அவளை நோக்க

முகம் சிவக்க தலைகுனிந்து நின்றவள்
“ப… பரவாயில்லை.. ஸார்” அவனைப் பாராமலேயே தயக்கத்துடன் கூற அவளது அந்த முக சிவப்பு கோபத்தினால் என்று நினைத்துக் கொண்டவன் தன் அவசரமான செயலை நினைத்து தன்னைத்தானே கடிந்து கொண்டான்.

“டேய்! சித்! உன்னை நம்பி மேக்னாவை அனுப்பலாமா கண்ணா? நான் பக்கத்தில் இருக்கும் போதே இப்படின்னா உன் வீட்டுக்கு பக்கத்தில் வந்தால்?” ஜெஸ்ஸி தன் முகத்தை வெகு தீவிரமாக வைத்த படியே அவனுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கேட்கவும்

அவளை முறைத்துப் பார்த்தவன்
“ஏதோ சின்ன பையன் ஒரு ஆர்வத்தில் தெரியாம பண்ணிட்டேன் அதுக்காக நீஷஎன்னை இப்படி தப்பாகவே நினைத்துட்டியா? என் மேல் உனக்கு அவ்வளவு தானா நம்பிக்கை?” என்று மெல்லிய குரலில் கடுகடுத்தவாறே கேட்க

அவனைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவாறே சிரித்தவள்
“இந்த விடயத்தில் மட்டும் உன்னை நான் கடைசி வரைக்கும் நம்பவே மாட்டேன்” என்று கூறினாள்.

“என்ன ஸார் ஏதாவது பிரச்சனையா?” ஜெஸ்ஸி மற்றும் சித்தார்த் வெகு நேரமாக தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்க அவர்களை பார்த்து குழப்பத்துடன் மேக்னா வினவவும்

அவளைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவன்
“இல்லை மேக்னா அப்படி எல்லாம் எதுவும் இல்லை நீங்க உங்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வாங்க நாம கிளம்பலாம்” என்று கூறவும் அவளும் சரியென்று விட்டு நர்மதாவிடமிருந்து சாவியை வாங்கி கொண்டு வீட்டினுள் சென்று தனது உடைமைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு வந்தாள்.

மேக்னா வந்ததுமே நர்மதாவையும், அவளையும் அழைத்துக் கொண்டு சித்தார்த் தன் வீட்டை நோக்கி புறப்பட மறுபுறம் காலையில் சித்தார்த்திடம் கோபமாக பேசி விட்டோமே என்று கவலை கொண்ட யசோதா மனம் வருந்தி அவனிடம் சமாதானமாகப் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனுக்கு பிடித்தமான உணவுகளை எல்லாம் செய்து வைத்து விட்டு அவனது வருகைக்காக வாசலிலேயே காத்து நின்றார்.

அவரது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சித்தார்த் தன் வண்டியில் இருந்து இறங்க
“சித்தார்த் கண்ணா!” என்றவாறே அவனை நோக்கி வந்தவர் அவன் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து முகம் மாற அந்த இடத்திலேயே வாயடைத்துப் போய் நின்றார்……